தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking

Wednesday, December 29, 2010

தமிழச்சி தங்கபாண்டியனின் நூல்கள் வெளியீட்டு விழா

1. காற்று கொணர்ந்த கடிதங்கள்
2. காலமும் கவிதையும்
3. பாம்படம்
4. சொல் தொடும் தூரம்
ஆகிய நூல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற உள்ளது

தலைமை : சிற்பி பாலசுப்ரமணியன்

வெளியிடுபவர் : டாக்டர் ஹெச்.எஸ்.சிவப்ரகாஷ்

பெற்றுக்கொள்பவர்கள் :

இமையம்
நிர்மலா கணேசன்
இமையா தங்கம் தென்னரசு
நித்திலா சந்திரசேகர்
இதயா தங்கம் தென்னரசு

சிறப்புரை:

வெ.இறையன்பு
இயக்குனர் அமீர்
நக்கீரன் கோபால்
ரா.பார்த்திபன்
மரபின் மைந்தன் முத்தையா
எஸ்.ராமகிருஷ்ணன்

ஏற்புரை : தமிழச்சி தங்கபாண்டியன்

தொகுப்பு : பர்வீன் சுல்தானா.

நாள் : 02/01/2011 - ஞாயிறு மாலை 5.30 மணி
இடம் : குமார ராஜா முத்தையா அரங்கம்
ராஜா அண்ணாமலைபுரம், சென்னை.

குறிப்பு : "எட்டு ரூபா செப்புக்குடம் " நிகழ்த்துக்கலை நிகழ்ச்சி நடைபெறும்

அனைவரும் வருக.



Friday, November 19, 2010

விளிம்பு நிலை படைப்பாளிகள் – 7

விளிம்பு நிலை படைப்பாளிகள் – 7







முனைவர் மு.இளங்கோவன்

தமிழகத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க கங்கைகொண்ட சோழபுரத்தை அடுத்துள்ள இடைக்கட்டு என்னும் சிற்றூரில் 20-06-1967 இல் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் முனைவர் மு.இளங்கோவன். முருகேசனார், அசோதை அம்மாள் இணையரின் மகனான இவர், தொடக்கக் கல்வியையும் உயர்நிலைக் கல்வியையும் உள்கோட்டை பள்ளிகளில் முடித்தவர் (1972-1982). மேல்நிலைக் கல்வியை மீன்சுருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் முடித்தவர் (1982-1984). மூன்றாண்டுகள் உழவுத் தொழிலில் ஈடுபட்டிருந்து, புலவர் சுந்தரேசனார் எனும் தமிழாசிரியரின் நெறிப்படுத்தலில் திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் இளங்கலை, முதுகலைப் பட்டங்களை முதல் வகுப்பில், முதல் மாணவராகத் தேறிப் பெற்றவர் (1987-1992).

பின்பு புதுவைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் க.ப. அறவாணன் தலைமையில் இயங்கிய தமிழியல்துறையில் "மராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்' எனும் தலைப்பில் ஆய்வு செய்து ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றவர்(1992-1993). பின்பு திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக நிதியுதவியுடன் முனைவர்பட்ட ஆய்வினை (1993 - 1996) நிறைவு செய்தார். "பாரதிதாசன் பரம்பரை' என்ற தலைப்பில் ஆய்வு செய்து தமிழ்க்கவிதை வரலாற்றில் பல கவிஞர்களின் வாழ்வியலையும் பணிகளையும் பதிவு செய்த பெருமைக்கு சொந்தக்காரர்.

மு. இளங்கோவன் படிக்கும் காலத்தில் தமிழக அளவில் கல்லூரி, பல்கலைக்கழக அளவில் பல கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் கலந்து கொண்டு தங்கப் பதக்கங்கள், சான்றிதழ்கள் பெற்றுள்ளார். இதில் செயங்கொண்டம் தமிழோசை நற்பணிமன்றம் நடத்திய "தாய்மொழிவழிக் கல்வி' எனும் தலைப்பிலான ஆய்வுக்கட்டுரைப் போட்டியில் முதல்பரிசாகத் தங்கப்பதக்கம் பெற்றுப் பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் பொற்கையினால் தங்கப்பதக்கம் சூட்டப்பெற்றவர். நெல்லைத் தனித்தமிழ் இலக்கியக் கழகம் நடத்திய கட்டுரைப்போட்டியில் "மூதறிஞர் வ.சுப. மாணிக்கனாரின் தமிழ்ப்பணிகள்' எனும் தலைப்பிலும், "பாவலர் முடியரசனாரின் தமிழ்த்தொண்டு' எனும் தலைப்பிலும் இருமுறை ஆய்வுக்கட்டுரை எழுதி இரண்டு தங்கப்பதக்கங்கள் பெற்றுள்ளார்.

மாணவப் பருவத்தில் மாணவராற்றுப்படை (1990), பனசைக்குயில் கூவுகிறது (1991), அச்சக ஆற்றுப்படை (1993), மராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும், விடுதலைப்போராட்ட வீரர் வெ. துரையனார் அடிகள் முதலான நூல்களை வெளியிட்டார். இந்நிலையில் 1997-இல் சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் "தமிழியல் ஆவணம்' எனும் திட்டப்பணியில் ஆய்வு உதவியாளராகப் பணிபுரிந்தார். பின்பு 1998-இல் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இசைமேதை வீ.ப.கா. சுந்தரம் அவர்களின் தமிழிசைக் கலைக்களஞ்சியம் எனும் நூலெழுத அவரின் உதவியாளராக ஓராண்டு பணிபுரிந்து களஞ்சியத்தின் நான்காம் தொகுதி வெளிவர உதவினார். இது இசைத்தமிழுக்கு இவர் ஆற்றிய தொண்டு. பின்பு கலவை ஆதிபராசக்தி கலை அறிவியல் கல்லூரியில் 1999 முதல் 2005 வரை தமிழ் விரிவுரையாளராகப் பணிபுரிந்துள்ளார்.

இந்திய அரசின் நடுவண்தேர்வாணையத்தால் தேர்ந்தெடுக்கப்பெற்று 18.08.2005 முதல் புதுவையின் புகழ்பெற்ற கல்லூரியான பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்.

மு. இளங்கோவனின் நூல்களுள் மணல்மேட்டு மழலைகள், இலக்கியம் அன்றும் இன்றும், வாய்மொழிப்பாடல்கள், பழையன புகுதலும், அரங்கேறும் சிலம்புகள், பாரதிதாசன் பரம்பரை, பொன்னி பாரதிதாசன் பரம்பரை, பொன்னி ஆசிரியவுரைகள் (ப.ஆ.), நாட்டுப்புறவியல், அயலகத் தமிழறிஞர்கள், இணையம் கற்போம் முதலியவை குறிப்பிடத்தக்கனவாம்.

கவிதைத்துறையில் ஆர்வம் கொண்ட இவர் தமிழகத்தில் வழங்கும் நாட்டுப்புறப்பாடல்களைப் பாடவும், ஆய்வுசெய்யவும் திறன்பெற்றவர். மேலும் கேரள, ஈழத்து நாட்டுப்புறப்பாடல்கள் பற்றியும் ஆய்வு செய்துள்ளார். திருச்சிராப்பள்ளி வானொலி நிலையத்தின் வழியாக இவர்தம் நாட்டுப்புறப்பாடல்கள் சிறப்பு இலக்கியப் பேருரைகளாக ஒலிபரப்பப்பட்டுள்ளன. தமிழறிஞர்களின் வாழ்வியலை இணையத்தில் பதிவு செய்யும் முயற்சியில் நூற்றுக்கணக்கான அறிஞர்களின் வாழ்வியல் இவரால் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்துக் கல்லூரி மாணவர்கள் தமிழ் இணையம் பற்றிய விழிப்புணர்ச்சி பெறத் தமிழகத்தின் பல கல்லூரிகளில் தமிழ் இணையப் பயிலரங்குகளை நடத்தி வருகிறார். இவர் உத்தமம் என்ற இயக்கத்தின் பொதுக்குழு உறுப்பினராகவும் உள்ளார். இவர்தம் இணையத் தமிழ்ப் பணியைப் பாராட்டித் தருமபுரித் தமிழ்ச்சங்கம் இணையத் தமிழறிஞர் என்னும் விருதை 2008 ஆம் ஆண்டு வழங்கிச் சிறப்பித்துள்ளது தமிழ்ஸ்டுடியோ.காம் சிறந்த வலைபதிவருக்கான விருதினை வழங்கிச் சிறப்பித்துள்ளது.இவர் இளம் வயதிலேயே தமிழுக்கு தொண்டாற்றியமைக்காக இந்திய அரசின் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் செம்மொழி இளம் அறிஞர் விருதினை (2006-2007) இவருக்கு வழங்கியுள்ளது.
சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளுக்கு கருத்தரங்கில் பங்கேற்பதற்காகவும் தமிழ் இணையப் பயிற்சி வழங்குவதற்காகவும் இரு முறை சென்றுள்ளார். பல்வேறு அயல் நாட்டுத் தமிழறிஞர்களோடு தொடர்பு கொண்டு அவர்களைப்பற்றி உலகத்தமிழர்களுக்கு இணையம் வாயிலாகத்தெறிவித்து வருகிறார்.
தமிழகத்தில் எந்த பல்கலைக் கழகத்தில் கருத்தரங்கு நடந்தாலும் அங்கு செல்லும் நபர்களில் நம் இளங்கோவனும் ஒருவர்.

இவரின் பிறந்த ஊரில் வயல்வெளிப் பதிப்பகமும், பாரதிதாசன் உயராய்வு மையமும், புலவர் ந. சுந்தரேசனார் ஆய்வு நூலகமும் இவர் மேற்பார்வையில் இயங்குகின்றன. தனித்தமிழ் ஆர்வம் நிறைந்த இவர் பேராசிரியர் க.ப. அறவாணன், பேராசிரியர் தமிழண்ணல், பேராசிரியர் பொற்கோ, பேராசிரியர் இரா. இளவரசு, பேராசிரியர் பா. வளன்அரசு ஆகியோரின் நம்பிக்கைக்குரியவர். இவரின் எதிர்காலத்திட்டம் தமிழிசைத்துறையிலும் சங்க இலக்கிய ஆய்வுகளிலும் தமிழ் இணையத்துறையிலும் ஆய்வுகளை வளர்த்தெடுப்பது.
செயலாற்றலும் தனித்தமிழ் ஆர்வமும் மிக்க இவர்; மனைவி பொன்மொழி, மகள்கள் கானல்வரி, கண்ணகி, மகன் தமிழ்க்குடிமகன் ஆகியோரோடு புதுவையில் வசித்து வருகிறார். இவர் பெயெரில் வலைப்பூ ஒன்றை உருவாக்கி வாரந்தோறும் புதுப்பித்து வருகிறார். தமிழ் அறிஞர்களைப்பற்றி இணையத்தில் தேடினால் நமக்குக் கிடைக்கின்ற பக்கங்களில் இளங்கோவன் பக்கம் நிச்சயம் இடம்பெறும்.
இணையத்தில் தமிழை எப்படிப் பயன்படுத்துவது என்பதில் சந்தேகம் ஏதேனும் இருந்தால் தயங்காமல் இளங்கோவனைத்தொடர்பு கொள்ளலாம்.
முகவரி : மு.இளங்கோவன், உதவிப்பேரசிரியர், பாரதிதாசன் மகளிர் கல்லூரி, புதுச்சேரி -605 003.
மின்னஞ்சல் : muelangovan@gmail.com
வலைப்பூ : http://muelangovan.blogspot.com
பேசி : +91 9442029053

மு.இளங்கோவன் நூல்கள்
மாணவராற்றுப்படை
பனசைக்குயில் கூவுகிறது
அச்சக ஆற்றுப்படை
மராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்
விடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்
பாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு
மணல்மேட்டு மழலைகள்
இலக்கியம் அன்றும் இன்றும்
பாரதிதாசன் பரம்பரை
பொன்னி - பாரதிதாசன் பரம்பரை
பொன்னி ஆசிரியவுரைகள்
அரங்கேறும் சிலம்புகள்
பழையன புகுதலும்
வாய்மொழிப்பாடல்கள்
நாட்டுப்புறவியல்
அயலகத் தமிழறிஞர்கள்
இணையம் கற்போம்
நன்றி : அச்சமில்லை

Friday, September 17, 2010

தமிழகத்தின் மரபுக்கலைகள் நூல் வெளியீட்டு விழா

தமிழகத்தின் மரபுக்கலைகள் நூல் வெளியீட்டு விழா

முனைவர் எழிலவன் எழுதிய தமிழகத்தின் மரபுக்கலைகள் நூல் வெளியீட்டு விழா திருவாரூர் வடக்கு வீதி ஐஸ்வர்யா மகாலில் நடைபெற உள்ளது.

தலைமை : புலவர் மு. வடுகநாதன்.

வெளியிடுபவர் : கு. தென்னன்.

பெற்றுக்கொள்பவர் : மோகன்தாசு

திறனாய்வு : கவிஞர் பட்டி சு. செங்குட்டுவன், முனைவர் இரத்தின புகழேந்தி.

வாழ்த்துரை நடிகர் அமரசிகாமணி

சிறப்புரை : பேராசிரியர் முனைவர் ஆறு. இராமநாதன்.

ஏற்புரை : முனைவர் எழிலவன்.

நாள் : 21.09.2010.

நூல் வெளியீட்டாளர் : பிளாக் ஹோல் மீடியா பப்ளிகேசன்,

Sunday, August 1, 2010

மஞ்சணத்தி நூல் திறனாய்வு

கரிசலில் மஞ்சணத்தியான மருதத்து நுணா






தமிழகத்தின் ஐந்து வகை நிலப்பகுதிகளில் ஒவ்வொனறுக்கும் ஒரு தனித்தன்மை உண்டு. அந்தத் தனித் தன்மைதான் நமது நிலவியல் கோட்பாட்டின் சிறப்பு. வேறுபாடுகளுக்கிடையிலும் மெல்லிய நூலிழைகளாய் சில ஒற்றுமைக் கோடுகள் நம் வாழ்முறையை நெய்து பண்படுத்துகின்றன. தமிழர்களுக்கும் தாவரங்களுக்குமான தொடர்பு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தொன்மையுடையது. இயற்கைக்கும் நமக்குமான தொடர்பை நமது சங்க புலவர்கள் தொடங்கி இன்றைய இளம் படைப்பாளிகள் வரை தங்கள் படைப்புகளில் வெளிப்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக மரங்களுக்கும் மனிதர்களுக்குமான உறவைப் பேசும் பாடல்கள் குறிப்பிடத்தகுந்தவை. மரத்தைத் தாயாக சகோதரியாக தெய்வமாகக் கொண்டாடுகிற மரபைத் தமிழ் இலக்கியத்தில் தொடர்ச்சியாகக் காணலாம்.

"நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகும் என்று
அன்னை கூறினாள் புன்னையது நலனே"

என்னும் நற்றிணைப் பாடலில் இளம் பெண்ணொருத்தி புன்னை மரத்தைத் தங்கையாகப் பார்க்கிறாள். மேலும் புன்னை மரத்திற்கும் மனிதர்களுக்குமான உறவைப் படம்பிடித்துக்காட்டும் பாடல்கள் கலித்தொகையிலும் குறுந்தொகையிலும் இடம்பெற்றுள்ளன. இவற்றின் தொடர்ச்சியாகத்தான் தமிழச்சிக்கும் மஞ்சணத்தி மரத்திற்குமான உறவு இங்கே நவீன கவிதையாகியிருக்கிறது. சிற்றூரில் பிறந்து சிறார் பருவத்தில் அங்கேயே வாழ்ந்தவர்களுக்கு மட்டுமே தெரிந்திருக்கக் கூடிய ஒரு மரம்தான் மஞ்சணத்தி மரம். எங்கள் மருத நிலத்திலும் இந்த மரம் இருக்கிறது. அதனை நாங்கள் நுணா மரம் என்று குறிப்பிடுவோம். நுணாப்பழத்து ருசிக்கு அடிமையாகாத சிறுவர்கள் இருக்க முடியாது. பள்ளிக்கூடம் செல்லும்போது பையை அந்த மரக்கிளையில் மாட்டிவிட்டு அந்த பழங்களைப் பறித்துத் தின்ற பிறகுதான் பள்ளிக்குச் செல்வோம். நுணாப்பழ ருசிக்காக தன் கல்வியையே பறிகொடுத்த கூத்துக்கலைஞர் நடராசன் இன்றும் எங்கள் ஊரில் வாழ்ந்து வருகிறார். நாங்கள் ஏறி விளையாடிய எங்கள் அம்மன்கோயில் மேட்டு நுணா மரம் எங்கள் பெரியப்பாவின் வீட்டில் இன்றும் நின்றுகொண்டிருக்கிறது நிலைப்பேழையாக. ஊருக்குச்செல்லும் போதெல்லாம் அதனைத் தொட்டு முகர்ந்து என் இளமையை மீட்டெடுப்பேன்.
இதற்கும் தமிழச்சியின் கவிதைக்கும் என்ன தொடர்பு இருக்கிறது. ஒரு நல்ல கவிதை முடிந்த பின்னே தொடங்குகிறது என்று தமிழச்சி தனது முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். அப்படிப்பட்ட ஒரு கவிதைதான் மஞ்சணத்தி மரம் குறித்த கவிதை அது ஒரு போதும் முடியாத கவிதையாக எனக்குத் தோன்றுகிறது. வாசித்தாலும் வாசித்தாலும் தீராத புத்தகம் என்றொரு புத்தகத்தை நான் படித்திருக்கிறேன். மலையாளத்தில் ஒரு லட்சம் பிரதிகள் விற்பனையான அந்த புத்தகம் இயற்கையைப் பற்றி குழந்தைகளுக்குக் கூறுவதாக அமைந்துள்ளது. வாசித்தாலும் வாசித்தாலும் தீராத கவிதையாக இந்த கவிதை என்னிடத்தில் அந்த மரம் குறித்த சிந்தனைகளை வளர்த்துக்கொண்டே செல்கிறது.

"என் துரோகத்தின் வலி சுமக்கும்
உன் முனை உடைந்த முட்கள்
என் ரகசியங்களின் போதை தரும்
கள் ததும்பும் உன் பூக்கள்
என் ஆசைகளின் ருசி அறியும்
தேன் உதிர்க்கும் உன் பழங்கள்"

நுணாப் பூ வாசனை மல்லிகைக்கு நிகரானது, அந்தப்பழத்தின் சுவைக்கு நிகராக ஒரு சுவையை எழுத்தில் தர இயலாது. அதை சுவைத்து பார்த்துதான் நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். மருத நிலத்து நுணாவில் முள்ளிருப்பதில்லை. கரிசல் நில நுணாவில் முள்ளிருப்பதாகக் கவிஞர் குறிப்பிடுகிறார். மரத்தின் ஒவ்வொரு பாகமும் கவிஞரின் உணர்வுகளோடு ஒன்று கலந்திருப்பதை மேற்கண்ட அடிகள் நமக்கு உணர்த்துகின்றன. இந்த தொகுப்பின் மிகச்சிறந்த கவிதையாக இந்த கவிதையைத்தான் நான் குறிப்பிட விரும்புகிறேன்.
செயங்கொண்டார் பாடிய கலிங்கத்துப்பரணி போல் தமிழச்சி பாடிய பெரு நகர்ப்பரணியும் ஒரு முக்கியமான கவிதையாக இலக்கிய வரலாற்றில் நாளை நிச்சயம் பதிவாகும். இக்கவிதையில் நாயகியான வனப்பேச்சிதான் தமிழச்சி கண்டுபிடித்த பெரும் படிமம் என்று முன்னுரையில் தமிழவன் குறிப்பிடுகிறார். நகரமயமாதல் இன்று பெரும் பிரச்சினையாகி வருகிறது. நகரங்களின் அபார வளர்ச்சி கிராமங்களை விழுங்கி ஏப்பம் விடுவதாக இருக்கிறது. அதனால்தான் நகரங்களின் வளர்ச்சி இனி, மேல்நோக்கித்தான் அமையவேண்டுமே தவிற பக்கவாட்டில் அல்ல என்று மக்கள் நலனில் அக்கரையுடைய தலைவர்கள் எச்சரிக்கின்றனர். பல பன்னாட்டு நிறுவனங்களுக்கு நமது உழவர்களின் உயிர் ஆதாரமான விளை நிலங்கள் தாரைவார்க்கப்பட்டு வணிகம் கொடி கட்டிப்பறக்கிறது. அவர்களிடம் வணிக அறம் துளியும் இல்லை. சங்க காலத்தில் வணிகர்கள் எப்படி அறத்துடன் வாழ்ந்தனர் என்பதைப் பட்டினப் பாலை கீழ்க்கண்டவாறு கூறுகிறது.

"நெடு நுகத்துப் பகல்போல
நடுவு நின்ற நல் நெஞ்சினோர்
வடு அஞ்சி வாய் மொழிந்து
தமவும் பிறவும் ஒப்ப நாடி
கொள்வதூஉம் மிகை கொளாது
கொடுப்பதூஉம் குறை கொடாது"

நுகத்தடியின் நடுவில் தைக்கப்பட்டுள்ள பகலாணி போல நடுவு நிலை தவறாத நல்ல உள்ளம் படைத்தவர்களாக வாடிக்கையாளர்களைச் சுரண்டாதவர்களாக ரேசன் கடைக்காரரைப்போல் எடையைக் குறைத்து ஏமாற்றாமல் வாழ்ந்திருக்கின்றனர். இன்றைய வணிகர்களிடம் இதில் ஏதேனும் ஒரு குணத்தை நாம் பார்க்க முடியுமா. குளிரூட்டப்பட்ட வணிக வளாகத்தில் வெற்று பாதங்களோடு நுழையும் வனப்பேச்சி வணிகம் குறித்த சிந்தனையைத் தூண்டுகிறாள். மேலும் அவளுக்கு, அங்கு இருந்தும் இல்லாத மனிதர்கள் அன்னியமாகப் படுகின்றனர்.
அண்மையில் சென்னைக்கு சென்றிருந்த போது என்னதான் நடக்கிறது என்று தெரிந்து கொள்வதற்காக நண்பருடன் குளிரூட்டப்பட்ட ஒரு வானுயர்ந்த வணிக வளாகத்தின் உள்ளே சென்றேன் பல தளங்களுக்கும் மின்சார படிக்கட்டுகளில் பயணித்தோம். எங்களால் ஒரு ஐஸ்கிரீம் கூட வாங்க இயலவில்லை . எத்தனை ரூபாயாக இருந்தாலும் வாங்குவதற்குத் தயாராக இருந்தும் நம் ரூபாய் நோட்டுகள் அங்கு செல்லுபடியாகவில்லை. இது என்ன அநியாயம் சிங்கப்பூர் மலேசியாவில் கூட நமது நாட்டு ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து பொருள்கள் வாங்கமுடிகிறது. ஆனால் நமது தலை நகரில் நம் நோட்டுகளைக் கொடுத்து ஒரு ஐஸ்கிரீம் கூட வாங்க இயலவில்லை. அந்த வணிக வளாகத்தில் நுழைந்த உடன் நூறு ரூபாய்க்கு ஒரு அட்டை வாங்கிக்கொள்ள வேண்டும் அந்த அட்டைதான் அங்கு செல்லுபடியாகும். அதற்கு என்ன பொருள், நீங்கள் அந்த நூறு ரூபாயையும் அங்கேயே செலவு செய்து விட்டுதான் வரவேண்டும். நூற்றுக்குக் குறைந்து அட்டைகள் கிடையாது. எங்கள் ஊரில் எங்கள் நிலத்தில் விளைந்த எந்த பொருளையும் கடையில் கொடுத்து எங்களுக்குத் தேவையானதை வாங்கி வருவோம் . அப்படி ஒரு பண்டமாற்று கலாச்சாரம் விளங்கிய நம் மண்ணின் இன்றைய வணிக அறம் இதுதான். வணிகம் குறித்த இத்தகைய சிந்தனைகளைத் தூண்டுகின்றன பாலைக்கலி, பெருநகர்ப் பரணி ஆகிய கவிதைகள்.
மழை குறித்த கவிதைகளில் சில கவிதைகள் மட்டுமே குறிப்பிடும் படியாக அமைந்துள்ளன. மழை குழந்தைகளுக்கும் கவிஞர்களுக்கும்தான் ரசிக்கும்படியாக உள்ளது. உழவர்களுக்கு வாழ்வாதாரமாக இருப்பினும் மழையில் நனைந்தபடி ஏர் உழுபவனால் மழையை ரசிக்க முடியாது. அது போலத்தான் இருக்கிறது 'இடுகாட்டு மழையை இரசிக்கமுடியமா என்ன' என்கிற கவிதை வரிகள்.
நம்மால் செய்யமுடியாததை நம் குழந்தைகள் செய்யவேண்டும் என்கிற எதிர்பார்ப்பு நம் எல்லோரிடமும் இருக்கிறது. நமது எதிர்பார்ப்புகளை நம் குழந்தைகள் மீது திணிக்க நினைக்கின்ற நமது மனப்போக்கினை பகடி செய்வதாக அமைந்திருக்கிறது 'பூச்சாண்டி' கவிதை.
பாடுபொருள்களடிப்படையில் சங்க இலக்கிய தொடர்ச்சியினை தமிழச்சியின் பல கவிதைகளில் காண முடிகிறது. ஒரு சிற்றூரில் பிறந்து வளர்ந்த மனுசி நகரத்தில் சந்திக்கும் அத்தனை நெருக்கடிகளையும் இந்த கவிதைகள் படம் பிடிக்கின்றன .ஒரு சில சாதாரண கவிதைகளைத் தவிர்த்திருக்கலாம்.
மூன்று தொகுதிகளை வெளியிட்டிருக்கும் தமிழச்சியின் கவிதை மொழி ஒவ்வொரு தொகுப்பிலும் செழுமையடைந்து வருகிறது. மேலும் செழுமை மிக்கக் கவிதைகளை அவர் தொடர்ந்து எழுதவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

Thursday, July 15, 2010

கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் எழுதிய மஞ்சணத்தி நூல் திறனாய்வு

கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் எழுதிய மஞ்சணத்தி நூல் திறனாய்வு












திரனாய்வாளர்கள்

பாகியராஜ்
மனுஷ்யபுத்திரன்
கலாப்ரியா
ரவிக்குமார்
பிரபஞ்சன்

வரவேற்பு :இரத்தினபுகழேந்தி

தலைமை : இமையம்

நன்றியுரை: ராமு

அமைப்பு : திருமுதுகுன்றம் இலக்கிய வட்டம்
18.07.2010
ஞாயிறு மாலை 5.30
மக்கள் மன்றம்

குறிப்பு: மணற்கேணி இரு மாத இதழ் வெளியிடப்படுகிறது.

அண்ணன் ராசு அவர்களின் 10 ஆம் ஆண்டு நினைவு நிகழ்ச்சி

சிந்தனைச்சிற்பி அண்ணன் ராசு அவர்களின் 10 ஆம் ஆண்டு நினைவு நிகழ்ச்சி
வழ்க்கறிஞர் அருள்மொழி சிறப்புரை
வானொலித்திடல்
17.7.2010 மாலை 6.00 மணி
அனைவரும் வருக








Saturday, July 3, 2010

உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு







உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டை உற்றுநோக்கியதில் எனக்குத்தோன்றிய நிறை குறைகளை கீழே பட்டியலிட்டுள்ளேன்

மாநாட்டின் நிறைகள்
இதுவரை நடைபெற்ற மாநாடுகளைக் காட்டிலும் மக்கள் திரள் மிகவும் அதிகம். நீண்ட வரிசையில் காத்திருந்து கண்காட்சியைக் கண்டுகளித்தனர். இனியவை நாற்பது சங்க இலக்கியக் காட்சிகளைக் கண்முன் நிறுத்தியது. குறிஞ்சிப்பாட்டில் குறிப்பிட்டுள்ள 99 வகை மலர்கள் படங்களுடன் காட்சிபடுத்தப்பட்டிருந்தன. சிந்துவெளி கண்காட்சியை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தினர் காட்சிப்படுத்திய பாங்கு. பேராளர்களுக்கு தங்குமிடம், உணவு ஆகியவை மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பாதுகாப்பு ஏற்பாடுகளும் பாராட்டும்படி அமைந்தது. அரங்குகள் அனைத்தும் அதி நவீன வசதிகளுடன் அமைந்திருந்தன சங்ககாலப் புலவர்களின் பெயரில் நவீன ஓவியங்களுடன் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது.

மாநாட்டின் குறைகள்
ஆய்வுக் கட்டுரைகள் சரியாக தேர்வு செய்யப்படவில்லை. மாநாட்டு மலரில் இளம் படைப்பாளர்களுக்கு பேதிய இடமளிக்கவில்லை. நவீன இலக்கியவாதிகள் அழைக்கப்படவில்லை. தமிழ் மொழி வளர்ச்சிக்கான உறுப்படியான அறிவிப்புகள் இல்லை. முக்கியமான அயல்நாட்டு அறிஞர்களின் (ஜார்ஜ்ஹார்ட், அஸ்கோபர்போலா) கட்டுரைகளை தமிழில் மொழி பெயர்த்து வழங்கவில்லை. நுட்பமான ஆய்வுகள் மிகவும் குறைவான அளவில் இடம்பெற்றுள்ளன. தமிழ்மொழியின் பழம்பெருமை பேசுவதற்கு அளித்த முக்கியத்துவம் எதிர்கால வளர்ச்சி குறித்து பேசுவதற்கு அளிக்கப்படவில்லை.

மலேசிய சுற்றுப்பயணம்







மலேசியாவில் சிங்கப்பூர் அளவுக்கு கட்டுப்பாடுகள் இல்லை திருடர்கள் பயம் அதிகம் இரவில் பெண்கள் நகை அணிந்து செல்வது பாதுகாப்பற்றது என எச்சரித்தனர். மோட்டார் சைக்கிளில் வந்து சங்கிலியைப் பறித்துவிடுவார்களாம். டைநாஸ்டி விடுதியில் 27 ஆவது மாடியில் எங்களுக்கு அறை ஒதுக்கப்பட்டிருந்தது. அங்கு செல்லவே அச்சமாக இருந்தது. முதல் நாள் நகரச்சுற்றுலாவில் பத்துமலை முருகன் கோயில் சென்றோம் குறிப்பிட்ட நேரத்தில் திரும்பாததனால் நான் சென்ற பேருந்தை தவற விட்டு மற்றொரு பேருந்தில் செல்ல நேர்ந்ததை மறக்க இயலாது. மலேசிய விடுதலைக்குப் போரிட்டு உயிர்நீத்த ஈகியர் சிலைகளைப்பார்த்தோம். இரட்டை கோபுரம், சாக்லேட் தொழிற்சாலை போன்ற இடங்களைப்பார்த்தோம். மறு நாள் ஜெண்டிங் கற்பனைப் பூங்கா சென்றோம் மலை உச்சியில் அமைந்திருக்கிறது. ஒரு மலையிலிருந்து மற்றொரு மலைக்கு கம்பி வடத்தில் சென்றோம் கீழே பார்க்கக் குலை நடுங்கியது. உலகின் மிகப்பெரிய கம்பிவடப் போக்குவரத்து இது என்றும் கின்னஸில் இடம்பெற்றுள்ளது என்றும் எங்கள் வழிகாட்டி திருமதி சாரா கூறினார். இங்கு சாராவைப்பற்றி சொல்லியாக வேண்டும் சீன இனத்தில் பிறந்து மலாயில் வாழும் குடும்பத்தைச் சார்ந்தவர் இந்தியரை மணத்துகொண்டவர் (அவரும் எங்கள் குழுவினருக்கு வழிகாட்டியாக வந்தவர்) பேருந்து நிற்குமிடத்திலெல்லாம் இறங்கியதும் சிகரெட்டைப் பற்றவைத்துவிடுவார் சாரா. பெண்கள் சிகரெட் பிடிப்பதை இப்போதுதான் நேரில் பார்க்கிறேன். எனக்கு சாரா என்ற பெயரைக் கேட்டதும் பணியிடைப் பயிற்சியில் பாடிய 'சாரா.. சாரா மை டார்லிங் டோண்ட் யு க்ரை...' என்ற பாடல்தான் நினைவுக்கு வர அவரிடம் பாடிக்காட்டினேன் புன்னகையுடன் ரசித்துக் கேட்டார்.
ஜெண்டிங்கில் அனைத்து வித பொழுதுபோக்குகளும் அமைந்திருந்தது. அவ்வளவாக அதில் நாட்டமின்மையால் நண்பர்களோடு சுற்றித்திரிந்தோம். மாலை வேளைகளில் மலேசியாவில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க இயலவில்லை. இத்தனைக்கும் உலங்கு வானூர்தியில் போக்குவரத்தைக் கண்காணித்துக் கட்டுப்படுத்துகிறார்களாம். ஒரு நாள் இரவு வீட்டுக்கு தொலைபேசுவதற்காக ஈப்போ சாலையில் ( மலாய் மொழியில் சாலையை ஜலாங் என்கிறார்கள்) இரவு ஒன்பது மணிக்குச் சென்றோம் நானும் நண்பர் செல்வினும் அங்கு ஒரு உணவு விடுதியின் முன்புறம் வீதி ஓரத்தில் அமர்ந்து இரண்டு நடுத்தர வயது பெண்கள் (குட்டைப்பாவாடை அணிந்திருத்தனர்) மது அருந்திக்கொண்டு சிகரெட் பிடித்தபடி உரையாடிக்கொண்டிருந்தனர் இது போன்ற காட்சிகள் எதையும் சிங்கப்பூரில் பார்க்க முடியவில்லை. தூய்மையைப் பேணுவதிலும் சிங்கப்பூர் அளவுக்கு மலேசியா இல்லை. நம் தமிழர்கள் பலர் மலேசியாவில் அதுவும் கோலாலம்பூரில் கடை வைத்திருப்பதைப் பார்க்க முடிந்தது.
ஒரு வழியாக மலேசிய சுற்றுப்பயணத்தை இனிதே முடித்துக்கொண்டு 23.5.2010 அன்று தாயகம் திரும்பினோம்.

Sunday, June 13, 2010

சிங்கப்பூர் கருத்தரங்கு படங்கள்

படங்கள் சிலவற்றை இங்கே பதிவு செய்கிறேன்






படங்கள் சிலவற்றை இங்கே பதிவு செய்கிறேன்
சிங்கப்பூர் படங்கள்

சிங்கப்பூர் சில குறிப்புகள்

சிங்கப்பூர் விமான நிலையம் அழகும் பிரமிப்பும் நிறைந்ததாகக் காட்சியளித்தது. விமான நிலையத்திலிருந்து குளிரூட்டப்பட்ட பேருந்தில் ஒரு விடுதிகுகுச்சென்றோம் செல்லும் வழியெங்கும் மரங்களும் புல் வெளிகளுமாக பச்சைப்பசேலென்ற காட்சி கண்ணுக்குக் குளிரூட்டியது. இரவு பெய்த மழையில் நகரமே குளித்து முடித்து புத்தம் புதிதாய் பளிச்சென காட்சியளித்தது. இயர்கையை அழகு செய் என்ற அறிவுமதி அண்ணனின் கவிதை வரிகளுக்கு செயல்வடிவம் கொடுத்தது போலிருந்தது. நண்பர் தியாக ரமேசு கூறியதுபோல் வாரம் மும்மாறி பொழியும் ஊராக சிங்கப்பூர் இருக்கிறது. வழியில் பார்த்த வானுயர்ந்த கட்டடங்களில் கூட தாவரங்களை வளர்த்துள்ளனர்.









விடுதிக்குச்சென்று காலைக்கடன்களை முடித்துக்கொண்டு கருத்தரங்கு நிகழுமிடத்திற்குச் சென்றோம். கருத்தரங்கில் தினமணி ஆசிரியர் வைத்தியநாதன், கலைஞன் பதிப்பகம் மாசிலாமணி, சிங்கப்பூர் பேராசிரியர்கள் முனைவர் தியாகராசன், முனைவர் வேல்முருகன், முனைவர் அரங்க.பாரி ஆகியோர் கலந்துகொண்டனர் பேராசிரியர் அபிதாசபாபதி தொடக்கவிழா நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். மதிய உணவுக்குப்பிறகு நிகழ்ந்த முதல் அமர்வில் 'திருமுதுகுன்றம் கவிதைகள்' என்ற கட்டுரையை நான் வழங்கினேன்.
இரவு நண்பர்களுடன் முஸ்தபா சென்று அங்கு எந்த தளத்தில் என்னென்ன பொருள்கள் கிடைக்கும் என்பதைப் பார்த்து வந்தோம் ஒரு சிலர் சில பொருள்களை வாங்கினர். முஸ்தபா கடையின் உரிமையாளர் ஒரு தமிழர் என்பதை அறிந்து மகிழ்ந்தோம். முதல் முறை நுழைபவர்களுக்கு சற்று குழப்பமாகத்தானிருக்கிறது பழகிய பிறகு இயல்பாகிவிடுகிறது. இரவு 11 மணிக்கு வில்லேஜ் விடுதிக்குத்திரும்பினோம். 24 மணி நேரமும் முஸ்தபா இயங்குகிறது. என் அறை தோழர் ஜெயசெல்வின் அறையில் இருந்தார் அவரை யாரென அறிந்துகொள்ள இயலாமல் மற்றொரு சாவி அட்டையையும் நானே எடுத்துச் சென்றுவிட்டேன் அதற்காக அவரிடம் வருத்தத்தைத் தெரிவித்தேன். வாங்கிக்கொள்ளாதது என் தவறுதான் என்று அவர் வருத்தம் தெரிவித்தது அவரின் பெருந்தன்மையைக் காட்டியது. மறு நாள் காலை (குளிரூட்டப்பட்ட அறைக்குள்ளிருந்ததனால்) நான் எடுத்துச்சென்ற தேங்காய் எண்ணெய் உறைந்து விட்டது. செல்வின் கிரீம் கொடுத்தார், வீட்டுக்குப் பேச கைபேசி கொடுத்து உதவினார். சில்லரை கிடைக்காமையால் பொது தொலைபேசியைப் பயன்படுத்து முடியாமல் அல்லல்பட்டேன். நண்பரின் உதவி பனைத்துணையாய் பயன்பட்டது.


நண்பர் தியாகரமேசுக்கும் தங்கவேல்முருகனுக்கும் நான் வந்த செய்தியைத் தெரிவித்தேன் மறுநாள் காலை என்னைச் சந்திப்பதாகக்கூறினர்.
இரண்டாம் நாள் நண்பர்கள் இருவரும் மிகுந்த அலைச்சலுக்குப் பிறகு கல்லூரியை வந்தடைந்தனர் பேராசிரியர் தியாகராஜன்தான் அவர்களுக்கு வழி கூறி உதவினார். மதிய உணவு விடுதியில் உண்டு முஸ்தபா சென்றோம் ஒரு வாடகைக் காரில். சில பொருள்களை வாங்கினோம் நண்பர்களும் சில பொரு:ள்களை அன்பளிப்பாக வாங்கிக்கொடுத்தனர். என்னை காரில் ஏற்றிவிட்டனர் இடம் தெரியாமல் அலைய வேண்டுமோ என அஞ்சிய படியே வந்தேன் நல்ல வேளை அப்படி நிகழவில்லை.
மூன்றாம் நாள் சிங்கப்பூர் சுற்றுலா. சந்தோசா தீவிற்கு சென்று அங்குள்ள கண்காட்சி, தண்ணீருக்கு உள்ளே உள்ள உலகத்தினை செயற்கையாக வடிவமைத்து வைத்துள்ளனர் பிரமிப்பாகத் தான் உள்ளது. டால்பின் விளையாட்டு மகிழ்ச்சியாக இருந்தது. தண்ணீரில் ஒளிக்காட்சிகள் (கடலின் பாடல்) ஆகியனவற்றைப் பார்த்தோம் சீனர்களின் சோயிலுக்குச் சென்றோம்.
மூன்றாம் நாள் இரவு மீண்டும் முஸ்தபா சென்று நள்ளிரவு மலேசியா புறப்பட்டோம்.

Tuesday, May 25, 2010

முதல் விமானப் பயணம்





சிறு வயதில் எங்கள் சிற்றூரின் மீது அவ்வப்போது விமானங்கள் பறந்து செல்வதுண்டு. அதைப்பார்ப்பதற்காக வீடுகளைவிட்டு சிறுவர் கூட்டம் வெளியில் வந்து ஆரவாரிக்கும். ஏரோப்பிளான் ஒக்.....ழி என்று கத்திக்கொண்டு கண்களை விட்டு மறையும் வரை துள்ளிக் குதிப்போம். பெரியவனான பிறகு சென்னை செல்லும் போதெல்லாம் விமான நிலையத்தில் நிற்கும் விமானங்களைப் பேருந்திலிருந்தபடி வேடிக்கைப் பார்த்துக்கொண்டு செல்வேன். வானத்தில் பறக்கும் போது பார்த்ததை விட தரையில் பார்ப்பது துல்லியமாகத் தெரிவதால் வியப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும். ஒருமுறை பிர்லா கோளரங்கம் சென்றபோது அங்கிருந்த விமான மாதிரியை தொட்டுப்பார்த்து சுற்றிப்பார்த்து மகிழந்தோம். விமானப்பயணம் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள வேண்டும் என்பது பல நாள் ஆசை. விமானத்தில் பயணம் செய்த யாரையும் சந்திக்கிற வாய்ப்பு கிடைக்கவே இல்லை. எங்கள் அக்காள் மகன் சிங்கத்தமிழன் மருத்துவம் படிப்பதற்காக ரசியா சென்று வந்தபோது முதலில் கேட்டது விமானப்பயணம் எப்படி இருந்தது? என்றுதான். அதன்பிறகு சபாநாயகம் சார் சற்று விரிவாக தன் விமானப் பயணம் பற்றி கூறியிருக்கிறார்.
விமானத்தை விளையாட்டாக வேடிக்கைபார்த்த நான் அதே விமானத்தில் சற்று நேரத்தில் பறக்கப் போகிறேன் என நினக்கும் போது கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. அனைத்து சோதனைகளும் முடிந்து பயணிகள் அமருமிடத்தில் உட்கார்ந்துகொண்டு அறிவிப்புகளைக் கேட்டபடி அமர்ந்திருந்தேன் துபாய் செல்லும் விமானத்திறகான அறிவிப்பு வந்தபோது பயணிகள் வரிசையில் நிற்கத் தொடங்கினர். படிப்பறிவில்லாத ஒரு நடுத்தரவயது பெண் வரிசையில் நின்றாள் வீட்டு வேலைக்கு செல்பவளாக இருக்குமோ! சற்று நேரத்தில் நாங்கள் செல்லவேண்டிய விமானத்திற்கான அறிவிப்பு மின்னணுத்திரையில் ஒளிர்ந்தது அறிவிப்பாளரும் அறிவிக்கத்தொடங்கினார். நெஞ்சு படபடக்க வரிசையில் சென்று நிறகத்தொடங்கினேன். எனது கடவுச்சீட்டையும் போடிங் பாசையும் ஒப்பிட்டுப் பார்த்து சீட்டைத் துண்டித்து எனக்கான பகுதியைக் கொடுக்க பெற்றுக்கொண்டு விமானத்தின் வாயிலை நெருங்கினேன் நம் நாட்டு அரசியல் தலைவர்களின் விமானப் பயணத்தை தொலைக்காட்சியில் பார்ப்போமே அது போல் படியேறி செல்லவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன் அந்தசிரமமில்லாமல் நேரடியாக வாயிலுக்கே வந்தாயிற்று. வாயிலின் இருபுறமும் இரண்டு பணிப்பெண்கள் ஒருவர் வரவேற்க மற்றொருவர் நமது சீட்டை வாங்கி நம் இருக்கைக்கு எப்படி செல்வது என வழிகாட்டினார். சன்னலோரத்து இருக்கையாக இருந்தால் நல்லது என நினைத்துக் கொண்டிருந்த எனக்கு அப்படியே அமைந்து. கொஞ்ச நேரத்தில் ஒருவர் வந்து இருக்கையை மாற்றிக் கொள்வோமா என்று கேட்டார் எப்படி விட முடியும் நாசுக்காக மறுத்துவிட்டேன் அவரும் அசடு வழிய சென்றுவிட்டார் அவரிடமிருந்து மெல்லிய மது வாடை வீசியது. குடித்து விட்டு கூடவா விமானத்திற்குள் வருவார்கள். போதை தலைக்கேற எங்கள் ஊர் நகரப்பேருந்தில் ஏறிய ஒருவரை நடத்துனர் கீழே இறக்கிவிட்ட காட்சி அப்போது கண்முன் வந்து போனது. என் இருக்கை விமானச்சிறகின் அருகில் இருந்தது. சிறகின் நீளத்தை பார்த்த போது இவ்வளவு நீளமா என்ற வியப்பு. ஒரு பேருந்தின் நீளத்தைவிட அதிகம். கேப்டன் பெயரைக்கூறி பெயரைக்கூறி அனைவரையும் வரவேற்ற பணிப்பெண் சற்றுநேரத்தில் விமானம் பறக்கவிருப்பதைக் கூறி அனைவரையும் இடுப்புப் பட்டியை அணிந்துகொள்ளும்படி கேட்டுக்கொண்டார் செல்போன்,லேப்டாப்,சி.டி.பிளேயர் வைத்திருப்பவர்கள் அவற்றை அணைத்து வைக்கும்படியும் கேட்டுக் கொண்டார்.உள்ளை ஒளிர்ந்த விளக்குகள் அணைந்தன.விமானம் ஓடுதளத்தில் மெல்ல உருளத் தொடங்கியது. எனக்கு இதயம் திக்..திக்.. என்றது. விமானத்தின் சிறகு மேலும் கீழும் ஆடியது என் இதயம் மேலும் படபடத்தது. மேலே செல்லும்போதே சிறகு உடைந்து விடுவது போல ஆட்டம் காட்டியது. டேக் ஆஃப் என்ற குரல் வந்தவுடன் விர்ரென்று மேல்நோக்கி விளம்பியது அடி வயிற்றில் சிலீரென்றது. காது அடைப்பது போலிருந்தது மேலே செல்லச் செல்ல பயம் அதிகமானது. ஒரு நிலைக்கு வந்தபோது 31000 அடி உயரத்தில் பரந்து கொண்டிருப்பதாக என் இருக்கைக்கு முன்னிருந்த திரையில் தோன்றிய எழுத்துகள் என்னை மேலும் நடுங்கவைத்தது. விளக்குகள் மீண்டும் ஒளிர்ந்தன. பணிப்பெண்கள் சுருசுருப்பாயினர். ஒரு பணிப்பெண் ஒரு பொட்டலத்தைக் கையில் திணித்தார். அதில் என்ன இருக்கிறது என்று அறிந்துகொள்வதற்காக படித்துப்பார்த்தேன் Towlet என்று ஒரு புறமும் விமான நிறுவனத்தின் பெயர் மற்றொரு புறமும் எழுதப்பட்டிருந்தது. அழுத்திப்பார்க்க பஞ்சு போலிருந்து. என்னவாக இருக்கும் சாக்லேட்டாக இருக்குமோ. மெல்ல பக்கத்திலிருப்பவரைத் திரும்பிப்பார்த்தேன் அவரும் என்னைப்பார்த்தார் அவருக்கும் முதல் பயணமாகத் தானிருக்க வேண்டும். அக்கம் பக்கம் திரும்பிப்பார்க்கக் கூச்சமாக இருந்ததனால் பேசாமல் சட்டைப் பைக்குள் வைத்துக்கொண்டேன். அடுத்த நிலையத்தில் இறங்கி மீண்டும் ஏறும்போது அதேபோல் கொடுக்க பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த சீனாக்காரி அதனைப் பிரித்து அதனுள்ளிருந்த மெல்லிய ஈரமான தாளை எடுத்து கைகளைத் துடைத்துக் கொண்டபோது அது கைதுடைப்பதற்கு என்றெண்ணி நானும் கைகளைத் துடைத்துக் கொண்டேன். முகத்தைத் துடைக்கலாம் என்று நினைத்தேன் பக்கத்திலிருப்பவள் துடைத்தால் தானே. நாம் துடைக்க அதைப்பார்த்து அவள் நகைத்துவிட்டால் அய்யய்யோ வேண்டாம் வேண்டாம் என முடிவை மாற்றிக்கொண்டேன். மீண்டும் அந்தத் தாளை மடித்து பைக்குள் வைத்துக் கொண்டேன். சற்று நேரத்தில் ஒரு தட்டில் பிரட், சாக்லேட், கேக் எல்லாம் கொடுத்தனர். சாப்பிட்ட பிறகு டீ கொடுத்தனர் டீ என்றால் நம் கடையில் சாப்பிடுவோமே அதுபோன்ற டீ அல்ல வெறும் டீ சாயம் மட்டும் தான். சர்க்கரை பாக்கெட்டில் இருந்தது. அதைப்பிரித்துக் கொட்டினேன். பால் எங்கே தேடிய போது கண்ணுக்கே தெரியாத ஒரு சின்ன்..ன குப்பியில் ஏதோ இருந்தது பிரித்தால் வெள்ளை நிறத்தில் ஒரு திரவம் இதுதான் பாலோ ஒரு கப் சாயத்திற்கு இந்த ஒருதுளிதான் பாலா சரி என்று ஊற்றிக்குடித்துப் பார்த்தால் தண்ணி டீ குடிப்பது போலிருந்தது. அதனைத்தொடர்ந்து ஜூசும் கொடுத்தார்கள். பிறகு சிறு சிறு டின்களில் டம்ளர்களைக் கவிழ்த்து தேவைப்பட்டவர்களுக்கு கொடுத்துக் கொண்டிருந்தனர். அடுத்த பயணத்தில்தான் தெரிந்தது அது பியர் என்று. அவ்வப்போது நாம் எவ்வளவு உயரத்தில் பறக்கிறோம், எவ்வளவு வேகம், அடையவேண்டிய தொலைவு, சென்றடையும் நேரம் அனைத்தையும் திரை காண்பித்துக் கொண்டிருந்தது. அந்த நள்ளிரவிலும் தூக்கம் மட்டும் வரவே இல்லை. இறங்க வேண்டிய இடம் வந்ததும் மீண்டும் இடுப்புப் பட்டியை அணிந்து கொள்ள அறிவுறுத்தியதோடு அணிந்திருக்கிறோமா என்று பணிப்பெண்கள் அனைவரையும் சோதித்து அணியாதவர்களுக்கு அணிந்துகொள்ள உதவினார்கள். ஏறும்போது ஏற்பட்ட அதே பயம் இறங்கும் போதும். விமானம் தரையைத் தொட்டபிறகு ஓடக்கூடிய ஓட்டம்தான் பயத்திற்குக் காரணம். விமானம் காட்டிய நேரத்தைவிட இரண்டரை மணி பின்தங்கியிருந்த என் கடிகாரத்தைத் திருத்திக்கொண்டு இறங்கத்தொடங்கினேன்.

Thursday, May 13, 2010

சிங்கப்பூரில் இலக்கிய கருத்தரங்கம்.




சிங்கப்பூர் டிண்டேல் கல்லூரியும் சென்னை கலைஞன் பதிப்பகமும் இணைந்து நடத்தும் 7 ஆவது பன்னாட்டுக் கருத்தரங்கம் 'இன்றைய வாழ்க்கையில் இலக்கியம்' என்ற தலைப்பில் 15.05.2010, 16.05.2010 ஆகிய இரண்டு நாட்கள் சிங்கப்பூரில் நடைபெற உள்ளது.
திருமுதுகுன்றம் கவிதைகள் என்ற தலைப்பில் நான் கட்டுரை வழங்க உள்ளேன்.

Friday, April 23, 2010

உலகப் புத்தக நாள்


உலகப் புத்தக நாள் என்பது யுனெஸ்கோ நிறுவனத்தின் தீர்மானத்தின்படி ஆண்டுதோறும் ஏப்ரல் 23 அன்று புத்தகம் தொடர்பான விழிப்புணர்வுகளுக்காகக் கடைப்பிடிக்கப்படும் சிறப்பு நாளாகும்.


பாரிஸ் நகரில் 1995 ஆகஸ்ட் 25 முதல் நவம்பர் 16 வரை நடந்த யுனெஸ்கோவின் 28வது மாநாட்டில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்படது. அத்தீர்மானம் வருமாறு,

"அறிவைப் பரப்புவதற்கும், உலகெங்கிலும் உள்ள பல்வேறு கலாசாரங்கள் பற்றிய விழிப்புணர்வினைப் பெறுவதற்கும், புரிதல், சகிப்புத்தன்மை போன்றவற்றின் மூலம் மனிதர்களின் ஒழுக்கத்தினை மேம்படுத்தவும், புத்தகம் ஒரு சிறந்த கருவியாக உள்ளதால் ஏப்ரல் 23 உலக புத்தக தினமாக கொண்டாடப்படும்"

ஷேக்ஸ்பியரின் பிறந்ததினமான ஏப்ரல் 23 அன்று உலகப்புத்தக தினம் கடைப்பிடிக்கப்படுவதை பொருத்தமானதாகக் யுனெஸ்கோ மாநாடு கருதியது. ஷேக்ஸ்பியர் மறைந்த தினமும், செர்வான்டிஸ், இன்கா போன்ற இலக்கியவாதிகள் மறைந்த தினமும் இதுதான்.

விருத்தாசலம் கிளை நூலகத்தில் வாசகர்களும் நூலக அலுவலர்களும் படைப்பளிகளும் இணைந்து புத்தக நாள் விழாவை நிகழ்த்தினோம்.
நன்றி:http://ta.wikipedia.org/

Saturday, April 17, 2010

காட்சி வடிவில் நெடு நல் வாடை






பகை முடிப்பதற்காக போர் மேற் சென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் பிரிந்து வருந்தும் தலைவிக்கு ஒரு பொழுது ஓர் ஊழிக்காலமாகத் தோன்றுவதால் வாடைக்காலம் தலைவியைப் பொறுத்த வரை நெடிய வாடையாய் உள்ளது. இன்பத்தில் ஈடுபடாமல் வேற்று நாட்டிற்குச் சென்று, பாசறைக்கண் தங்கி, வினைபுரியும் தலைவனுக்கு, வாடை, நல்ல வாடையாய் உள்ளது. இவ்விரு நிலைகளையும் உணர்த்துவதால் இப்பாடல் நெடு நல் வாடை எனப்பட்டது.
188 அடிகளைக்கொண்ட இந்நூலை மதுரைக் கணக்காயனார் மகன் நக்கீரன் இயற்றினார். இன்று இதனைப்படிப்பவர்களுக்கு பொருள் விளங்குவது கடினம்.
இந்நூலில் மனை வகுத்த முறை, கோபுர வாயில், முற்றம் முன் வாயில், அந்தப்புறத்தின் அமைப்பு, கட்டில், கட்டில் மேலமைந்த படுக்கை எனத் தொழிலியல் சார்ந்த பல நுட்பமான செய்திகள் மிகுதியாக இடம்பெற்றுள்ளன.
இவற்றை மனதிற்கொண்டு நெடு நல் வாடையை 96 படங்களாகக் காட்சிப் படுத்தியிருக்கிறார் பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன். இராதாகிருட்ணன் என்ற பெயரைத் தமிழில் மாற்றிக்கொண்டதோடு தன் மகனுக்கும் மெய்ம்மன் தெந்நா எனப்பெயர் சூட்டியுள்ளார்.
சென்னை கவின்கலைக் கல்லூரியில் மரபுக் கட்டடக்கலை படித்த இவர் தமிழர்களின் மரபுப்படி கட்டடங்களை அமைத்துத் தருவதில் ஆர்வமாக ஈடுபட்டு வருபவர். அது குறித்து நூலும் வெளியிட்டுள்ளார். நெடு நல் வாடையை முதலில் காட்சிப் படுத்தியதற்குக் காரணமும் அதிலுள்ள தொழில் சார் செய்திகள்தான் என்கிறார்.
சங்க இலக்கியங்கள் முழுவதையும் ஓவியங்களாக வரையத் திட்டமிட்டுள்ள இவர் தனித் தமிழில் பேசும் இயல்புடையவர். தன் மகனை சிறு வயதிலேயே சங்க இலங்கியங்களைப் படிக்க வைத்து வருகிறார் அவருக்காகத்தான் இந்த ஓவிய முயற்சி என்று மகிழவோடு தெரிவித்தார்.
பருவம் பொய்க்காமல் உரிய காலத்தில் மழையைத் தரும் மேகங்கள், தாங்கள் கிடந்த மலைப்பகுதியை வலமாக சூழ்ந்து மேலெழுந்தன என்ற பொருளிலமைந்த
வையகம் பனிப்ப வலனேர்பு வளைஇப்
பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தென

என்னும் முதல் பாடல் தொடங்கி இறுதிக் காட்சிகளை விளக்கும் அனைவரும் உறங்கும் யாமப் பொழுதிலும், துயில் கொள்ளச் செல்லாமல், பாசறையில் சிலரொடு உலவியவாறு அரசன் கடமையுணர்வினனாய் விளங்கியமையால், வாடை, அவனுக்குத் துயரைத் தராமல் நன்மையைத் தருவதாயிற்று என்னும் ஈற்றுப் பாடலான
நள்ளென் யாமத்து பள்ளி கொள்ளான்
சிலரொடு திரிதரும் வேந்தன்
பலரொடு முரணிய பாசறைத் தொழிலே

என்ற பாடல் முடிய 96 ஓவியங்களும் நம்மை சங்க காலத்திற்கே அழைத்துச் செல்வதாக அமைந்துள்ளன.
இவரின் இம்முயற்சி தமிழுக்கு முற்றிலும் புதிது. குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் இது பயன்படும். நீங்களும் நெடு நல் வாடையைக் காண விரும்புகிறீர்களா 9282348253 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள் பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மனை.
வாழ்த்துகள் தோழர் தொடர்க உங்கள் தமிழ்ப் பணி.



Wednesday, April 14, 2010

மாற்றுத்திறனாளிகளின் சாதனைப் படைப்பு 'மா'





முற்றிலும் மாற்றுத் திறனாளிகளால் உருவாக்கப் பட்டிருக்கும் திரைக் காவியம் 'மா' விரைவில் வெளிவர உள்ளது.கதை,திரைக்கதை,உரையாடல்,திரைவடிவம் என அனைத்துப் பணிகளையும் மதன் கேப்ரியெல் சிறப்பாகச் செய்துள்ளார். ஒலி,ஒளி,இசை,பாடல் என அனைத்துப் பணிகளையும் தமிழ்த் திரைக்குப் புதியவர்களான இவர்கள் எப்படி இவ்வளவு சிறப்பாகச் செய்துள்ளனர் என்கிற வியப்பு எழுகிறது.இசைக் குருந்தகடையும் 'மா' உருவான விதத்தினை விளக்கும் குருந்தகடையும் இப்படத்தில் நடித்து ஒரு பாடலையும் எழுதியிருக்கும் தோழர் தமிழியலன் அனுப்பியிருந்தார். படத்தில் பணியாற்றும் மாற்றுத்திறனாளிகளைப் பார்த்து நமக்கு பரிதாபம் ஏற்படவில்லை. மகிழ்ச்சியும் நமக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்க வில்லையே என்கிற பொறாமையும்தான் தோன்றுகின்றன.
கிடியோன் கார்த்திக்கின் இசையில் அமைந்த பத்து பாடல்களும் கேட்க கேட்க புத்துணர்வை ஏற்படுத்துகின்றன.பாரதியாரின் நான்கு பாடல்களோடு ஜி.சிதம்பரநாதன், பவானி கண்ணன், தமிழ்இயலன், மு.வள்ளி, லிடியோன் கார்த்திக், வேதை த.இளங்கோ ஆகியோர் எழுதிய பாடல்களும் இடம்பெற்றுள்ளன. தமிழ்இயலன் எழுதிய புயலாக நீ மாறு பாடல் துள்ளல் இசையில் அமைந்து கேட்போரை உற்சாகம் கொள்ளச்செய்கிறது.
இசைக் குருந்தகடு வேண்டுவோர் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி- இன்லேண்ட் பிலிம்ஸ், 4/528, பரசுராம் பட்டி, கே.புதூர், மதுரை-625 007. பேசி: 9345999990.

Monday, April 12, 2010

திராவிட பல்கலைக்கழகத்தில் நாட்டுப்புறவியல் கருத்தரங்கம்








ஆந்திர மாநிலம் குப்பத்திலுள்ள திராவிட பல்கலைக்கழகத்தில் தென்னிந்திய நாட்டுப்புறவியல் கழகம் நடத்திய (8-10,ஏப்ரல் 2010) மூன்று நாள் கருத்தரங்கில் கலந்துகொண்டு 'சாமி குடை உருவாக்கத்தில் மரபுவழித் தொழில்நுட்பம்' என்ற தலைப்பில் கட்டுரை வழங்கினேன். தமிழ் அமர்வு நண்பர் முனைவர் எழிலவன் தலைமையில் நடைபெற்றது.27 கட்டுரைகள் தமிழில் வழங்கப்பட்டன.இலங்கை நண்பர்கள் கலந்து கொண்டனர் பேராசிரியர் ஜெயசங்கர் அவர்களின் அறிமுகம் கிடைத்தது. அவரின் மூன்றாவது கண் அமைப்பு நம் பழங்கலைகளை மீட்டுருவாக்கம் செய்வதில் சிறப்பாக பணியாற்றுகிறது.
பல்கலைக்கழகம் இயற்கை எழில் சூழ்ந்த வளாகத்தில் அமைந்துள்ளது. மலையின் மீது அமைந்திருப்பதால் இதமான தட்பவெப்பம். கொசுக்களே இல்லை என்பதுதான் வியப்பு.

வரும்போது ஒகேனகல் சென்று வந்தோம். இத்தகைய இயற்கை எழிலை இவ்வளவு நாட்களாக சென்று பார்க்காமலிருந்து விட்டோமே என்கிற ஏக்கம் மனதுக்குள் எழுந்தது.அவசியம் ஒரு முறை சென்று வாருங்கள் நண்பர்களே.
கட்டுரைச் சுருக்கத்தினையும் அது தொடர்பான படங்களையும் ஒகேனக்கல் படத்தையும் பார்வைக்கு வழங்குகிறேன். கருத்தரங்கப் படம் அழிந்துவிட்டது. நண்பர் எழிலவனிடம் பெற்று பிறகு இணைப்பேன்.

சாமி குடை உருவாக்கத்தில் மரபுவழித் தொழில்நுட்பம்(கட்டுரைச் சுருக்கம்)


முன்னுரை
கடவுளர் சிலைகளை சகடை எனப்படும் ஊர்தியில் வைத்து ஊர்வலமாக எடுத்துச்செல்லும்போது பயன்படுத்தப்படும் குடை சாமி குடை எனப்படுகிறது.அக்குடை நெசவாளர்களால் உருவாக்கப்படுகிறது.அதற்கான மூலப்பொருள்கள் யாவை, அவற்றை எவ்வாறு தயார்படுத்துகின்றனர், எத்தகைய தொழில்நுட்பம் பின்பற்றப்படுகிறது, அதன் மூலம் எவ்வளவு வருவாய் ஈட்டுகின்றனர் என்பனவற்றை இக்கட்டுரை ஆராய்கிறது.

ஆய்வுக்களம்
கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டை, நடுவீரப்பட்டு ஆகிய ஊர்களில் சாமி குடை செய்பவர்களிடம் கலந்துரையாடி பெறப்பட்ட தகவல்கள் இக்கட்டுரைக்கு சான்றாதாரங்களாக அமைகின்றன.

மூலப்பொருள்கள்
மூங்கில்கழி, இரும்பு வளையம், கட்டுக்கயிறு, காடாதுணி, உட்புற உறையணி துணி(லைனிங் கிளாத்), பட்டு அல்லது வெல்வெட் துணி, சரிகை, ஜால்ரா, தையல் நூல், உல்லன் நூல், பி.வி.சி.குழாய், பெரிய ஆலம் விழுது ஆகியவை சாமி குடை செய்வதற்கான மூலப்பொருள்கள் ஆகும்.

ஆயத்தப் பணி
கல்லங்கழி எனப்படும் நடுப்பகுதியில் ஓட்டையில்லாத மூங்கில்கழியைத் தேர்ந்தெடுத்துப் பிளந்து தேவையான அளவில் சிறு பிளாச்சுகளாக்கி அவற்றை எவ்வாறு பதப்படுத்துகின்றனர்,அதற்காகப் பின்பற்றப்படும் மரபுவழி தொழில்நுட்பம் எத்தகையது என்பனவற்றை ஆய்வுக் கட்டுரையின் இப்பகுதியில் காணலாம்.

புள்ளத்தண்டு தயாரித்தல்
குடையின் கைப்பிடி புள்ளத்தண்டு எனக் குறிப்பிடப்படுகிறது. பெரிய ஆலம் விழுதில் இது தயாரிக்கப்படுகிறது. ஆலம் விழுதை எவ்வாறு பக்குவப் படுத்துகின்றனர், விழுதைப் பூச்சிகளிடமிருந்து பாதுகாப்பதற்கான வழிமுறைகள் யாவை, இத் தண்டில் பூசப்படும் எண்ணெய் வகைகள் யாவை என்பன இப்பகுதியில் இடம்பெறும்.

குடை செய்முறை
மேற்கண்ட மூலப்பொருள்களைக் கொண்டு சாமி குடை செய்வதற்கு மரபுவழி தொழில்நுட்பங்களைப் பின்பற்றுகின்றனர். வட்ட வடிவில் துணியை வெட்டுவதற்கும், ஆரக்கால்களை அமைப்பதற்கும் குடையைச்சுருக்குவதற்கேற்ப வடிவமைக்கும் விதம், குடையை அலங்கரிக்கும் முறை ஆகியவை மேற்கண்ட துணைத் தலைப்பில் ஆய்வு செய்யப்படும்.


ஒரு குடைக்கான செலவு
ஒரு குடை செய்வதற்கான செலவு எவ்வளவு, அதற்கு எத்தனை நாட்கள் உழைக்கவேண்டும் அதன் மூலம் கிடைக்கும் வருவாய் எவ்வளவு, இலாபம் கிடைக்கிறதா என்கிற தகவல்கள் இத்தலைப்பின் கீழ் ஆராயப்படும்.

முடிவுரை
இக்கைவினைத் தொழிலைச் செய்துவரும் குடும்பத்தினர் எத்தனை தலைமுறையாக இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். தங்களின் முன்னோர்களிடமிருந்து கற்றுக்கொண்ட தொழில்நுட்பங்களை முற்றிலும் பயன்படுத்த இயலுகிறதா காலத்திற்கேற்ப மாற்றங்கள் ஏதேனும் செய்துள்ளனரா சமூகத்தில் பொருளாதார நிலையில் இத்தொழிலாளர்களின் நிலை என்ன? எதிர்காலத்தில் இத்தொழில் தொடர்வதற்கு வழிவகை உள்ளதா அரசு தரப்பில் இத்தொழில் கைவினைத்தொழிலாக ஏற்கப்பட்டுள்ளதா என்பனவற்றையெல்லாம் இந்த ஆய்வுக்கட்டுரையின் முடிவரை எடுத்து இயம்பும்.

Sunday, April 4, 2010

தமிழ்மருத்துவத்தின் தொன்மையும் தனித்தன்மையும்




தமிழ்மருத்துவத்தின் தொன்மையும் தனித்தன்மையும் மூன்றுநாள் கருத்தரங்கு செனைப் பல்கலைக் கழக பவளவிழா அரங்கில் செம்மொழித்தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் நடத்தப்பட்டது. துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடக்கிவைக்க நிதியமைச்சர் பேராசிரியர் அன்பழகன் அவர்கள் நிறைவுப்பேருரையாற்ற சிறப்பாக நடந்தது. நான் வழங்கிய கட்டுரைச் சுருக்கத்தினை இணைத்துள்ளேன்.

தமிழர்களின் உணவு மருத்துவ அறிவு


முன்னுரை
தமிழர்களின் மரபுவழி உணவுப்பழக்கம் உடல் நலத்தைக்காப்பதாகவும், நோய் எதிர்ப்பு ஆற்றல் உடையதாகவும், தமிழ் மருத்துவக் கோட்பாடுகளுக்குட்பட்டதாகவும் அமைந்திருக்கிறது என்பதை உரிய சான்றுகளோடு இக்கட்டுரை ஆராய்கிறது.

உடல்நலம் காக்கும் உணவு
மருந்தென வேண்டாவாம் யாக்கைக் கருந்திய
தற்றது போற்றி உணின்.
என்னும் திருக்குறள் உணவை அளவறிந்து உண்டால் உடலுக்கு மருந்தே தேவையில்லை என்பதை வலியுறுத்துகிறது. தமிழர்கள் உணவை அளவறிந்து எவ்வாறு உண்டனர் அதன் மூலம் உடல் நலத்தை எவ்வாறு காத்தனர் என்பது இக்கட்டுரையில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

நோயை எதிர்கும் உணவு
தமிழர்களின் மரபு வழி உணவு முறையில் எந்தவகை உணவுப்பொருள்கள் நோய் எதிர்ப்பு ஆற்றலுடையவை என்பதைக் கண்டறிந்து பட்டியலிடுவதோடு அறிவில் பூர்வமாக உரிய சான்றுகளோடு ஆராய்கிறது இக்கட்டுரை.

தமிழர்களின் உணவுக் கோட்பாடு
தமிழர்கள் உணவுப்பொருள்களைச் சூடு, குளிர்ச்சி, பித்தம்,வாயு எனப் பகுத்துப் பார்த்து உடல்நிலை, பருவகாலம், வயது ஆகிய சூழலுக்கேற்ப உண்ணும் வழக்கத்தை மரபு வழியாகப் பின்பற்றி வருகின்றனர். இந்த உணவுக் கோட்பாடு தமிழ் மருத்துவமுறையான சித்த மருத்துவ முறையோடு பொருந்துவதாக உள்ளது இதனை இக்கட்டுரை விரிவாக ஆய்வு செய்கிறது.

அறுசுவைக் கோட்பாடு
அறுசுவை யுண்டி அமர்ந்தில்லாள் ஊட்ட
மறுசிகை நீக்கி உண்டாகும்
என்னும் நாலடியார் பாடல் தமிழர்களிடம் அறுசுவை உணவுக் கோட்பாடு இருந்ததை உணர்த்துகிறது. இந்த ஆறு சுவைகள் ஒவ்வொன்றும் ஒரு வகை ஆற்றலை உடலுக்கு அளிப்பதாக மருத்துவ நூல்கள் குறிப்பிடுகின்றன. இனிப்புச் சுவை வளத்தினையும், கார்ப்பு வீரத்தையும், துவர்ப்பு ஆற்றலையும், புளிப்பு இனிமையையும், உவர்ப்பு தெளிவினையும், கசப்பு மென்மையையும் அளிக்கிறது. மேலும் உணவில் இந்த ஆறு சுவைகளும் குறிப்பிட்ட அளவில் அமைய வேண்டும். அந்த அளவு கூடினாலும் குறைந்தாலும் உடலுக்குக் கேடு நேரும் என்பதை மருத்துவ நூல்களின் துணைகொண்டு இக்கட்டுரை விளக்குகிறது.

உணவே மருந்து
தமிழர்களின் அன்றாட உணவே எவ்வாறு மருத்தாகத் திகழ்கிறது. அவர்கள் வழக்கமாக உண்ணும் உணவுப் பொருள்கள் எத்தகைய மருத்துவ குணங்கள் நிறைந்தனவாக உள்ளன.வாழ்க்கை வட்டச் சடங்குகளில் பயன்படுத்தும் உணவுகள் அச்சடங்குகளுக்குப் பொருத்தமான மருத்துவ குணம் கொண்டவையாக உள்ளனவா. எளிய நோய்களுக்கு உணவு மருத்துவத்தின் வாயிலாக எவ்வாறு தீர்வு காணப்படுகிறது என்பனவற்றை இக்கட்டுரைக் கள ஆய்வுத் தரவுகளையும் துறை சார்ந்த நூல்களையும் கொண்டு ஆராய்கிறது.

முடிவுரை
தமிழர்களின் மரபு வழி உணவுப் பழக்கம் உடல் நலம் காப்பதோடு மருத்துவத் தன்மை நிறைந்ததாக உள்ளது என்பதை வலுவான சான்றுகளோடு இக்கட்டுரை நிறுவுகிறது.

Tuesday, March 30, 2010

தமிழ் மருத்துவத்தின் தொன்மையும் தனித்தன்மையும்

தமிழ் மருத்துவத்தின் தொன்மையும் தனித்தன்மையும்
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் நடத்தும் 3 நாள் கருத்தரங்கு
02.04.2010 - 04.04.2010. சென்னைப் பல்கலைக்கழக பவளவிழா கலையரங்கம்.
மாண்புமிகு தமிழகத்துணை முதல்வர் டாக்டர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கருத்தரங்கைத் தொடக்கி வைக்கிறார்.
இரண்டாம் நாள் அமர்வில் 'தமிழர்களின் உணவு மருத்துவ அறிவு' என்ற தலைப்பில் அடியேனும் கட்டுரைவாசிக்கிறேன்.
விரிவான தகவல்களுக்கு இங்கே சொடுக்குக.

Wednesday, March 24, 2010

தெரிந்தது தெரியாதது

ஆங்கிலம் தெரியாத ஆயா
கணினி தெரியாத தாத்தா
இந்தி தெரியாத அம்மா
கணக்கு தெரியாத அப்பா
எல்லாம் தெரிந்த குழந்தை

எதுவும் தெரியாத நாம்
எல்லாம் தெரிந்தது போல்
நடந்து கொள்கிறோம்

எல்லாம் தெரிந்த குழந்தைகள்
எதுவும் தெரியதது போல்
நடந்துகொள்கின்றன.

Friday, February 26, 2010

கவிஞர் இசாக்கின் கவிதை நூல் வெளியீட்டு விழா

இசாக்கின் துணையிழந்தவளின் துயரம் கவிதை நூல் வெளியீட்டு விழா 28.02.2010 ஞாயிற்றுக் கிழமை மாலை 5-30 மணிக்கு சென்னை தியாராயநகர் பெனின்சுலா விடுதியில் நடைபெறுகிறது.

தலைமை : பாவலர் அறிவுமதி

வரவேற்பு: சாதிக்பாட்சா

நூலை வெளியிடுபவர் : கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன்

பெற்றுக்கொள்பவர்கள்: மதுராபாலன், சேதுகுமணன், சாகுல்அமீது, தனபால், ஹாஜி, இரமேசு.

கருத்துரை: பழநிபாரதி, நங்கை குமணராசன், மீரா கதிரவன், வன்னிஅரசு.

ஏற்புரை : இசாக்.

நன்றி: தமிழன்பு.

நிகழவு ஒருங்கிணைப்பு: தமிழ் அலை குடும்பம், பேச: 9786218777.

"தமிழ்க் கவிதைக் களத்திற்குள் இதுவரைக் கேட்டிராத ஒரு புதிய குரல் தன் பண்பாட்டு அடையாளத்தோடு கூடியதாக நேரிடையாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது இசாக்கின் இக்கவிதைத் தொகுப்பில்"- இந்திரன்.

Thursday, February 18, 2010

தமிழுக்குக் கிடைத்த பன்முக ஆளுமை-சேலம் தமிழ்நாடன்





சேலம் மாவட்டம் ஏர்வாடியில் 1943ஆம் ஆண்டு பிறந்த தமிழ்நாடனின் இயற்பெயர்
சுப்பிரமணியன். திருமணிமுத்தாற்றங்கரையில் அமைந்திருக்கும் அவ்வூரின் எளிய விவசாயக்
குடும்பத்தைச் சேர்ந்த ஆறுமுகம் இருசாயம்மாள் இணையர், இவரின் பெற்றோர்.
சிறுவயதிலேயே பெரிய வாசகரானவர் தமிழ்நாடன். ஆண்டுக்கு ஆயிரம் நூல்களைப் படித்
திருக்கிறார். இவர் பள்ளி செல்லும் வழியில்தான்
அவ்வூரின் திராவிடர் கழக அலுவலகம் அமைந்
திருந்தது. அங்கு வரும் "விடுதலை’ செய்தித்தாளைப்
பத்து வயதிலேயே படித்து விட்டுதான் பள்ளிக்குச்
செல்வார். ""அவன்கிட்ட முதல்ல குடுங்க படிச்சிட்டு
பள்ளிக்கூடம் போகட்டும்’’ என்று கூறி பெரியவர்கள்
இவரின் ஆர்வத்தை ஊக்கப்படுத்தியிருக்கின்றனர்.
ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது பள்ளி
மலரில் வெளியான கவிதைதான் அச்சில் வந்த முதல்
படைப்பு. அப்போதே தமிழ்நாடன் என்ற பெயரில்தான்
எழுதியிருக்கிறார். பள்ளிப் பதிவேடுகளில் பெயரை
மாற்ற விரும்பியும் இவரின் தந்தையின் ஒப்புதல் கிடைக்
காமையால் இன்றுவரை சுப்பிரமணியன் என்ற
பெயரில்தான் ஓய்வூதியம் பெற்று வருகிறார்.
1960இல் கல்லூரிப் படிப்பை முடித்ததும் வேளாண்
துறையில் ஓர் ஆண்டு பணி, அது பிடிக்காமல்
ஆசிரியர் பயிற்சி முடித்து பள்ளியில் ஆசிரியராகப்
பணியில் சேர்ந்தார். கல்லூரி, பல்கலைக் கழகங்களில்
பணியாற்ற முயற்சித்தபோது இவர் மார்க்சியவாதி
என்ற காரணத்திற்காக பணிவாய்ப்பு மறுக்கப்பட்
டிருக்கிறது. அதற்காக அவர் கவலைப்படவில்லை.
பெரியார் கொள்கைகளில் ஈடுபாடு
கொண்டவர். ஆனால் திராவிட இயக்கங்கள்மீது
விமர்சனத்தைக் கூறவும் தயங்காதவர்.
திராவிடக் கட்சிகள் தமிழ் இலக்கியத்தைப்
பிரச்சாரத்திற்கு கையில் எடுத்துக் கொண்டன.
ஆனால் தமிழ் இலக்கியத்தை வளர்த்தெடுத்தனவா
என்றால் இல்லை’’ என்று கூறும் தமிழ்நாடன்
கடவுள் மறுப்புக் கொள்கையில் பெரியாரின்
வழித்தோன்றலாகவே திகழ்கிறார்.
கலை இலக்கியம் யாவும் மக்களுக்காகவே
என்ற கருத்துடையவர் வானம்பாடி இயக்கத்தை
உருவாக்கியதில் ஒருவர். வானம்பாடி கவிஞராக
அறியப்படுபவர்.

எழுபதுகளில் மார்க்சிய கவிதைகளைத் தமிழில் மொழி
பெயர்த்திருக்கிறார் ." மாவோ ’என்ற பெயரைச்
சொன்னாலே முதுகெலும்பை முறிக்கிற சூழல் நிலவிய
ஒரு கால கட்டத்தில் மாவோவின் கவிதைகளை
மொழிபெயர்த்தவர் தமிழ்நாடன்.

சேலத்தில் கல்வி அலுவலராகப் பணியாற்றிய
"அனந்த பல்ப்’ என்பவருடன் நட்பு ஏற்பட, அவரிடம்
மாவோ பற்றிய புத்தகங்கள் வேண்டும் என்று கேட்டிருக்
கிறார். அவர் நம்பூதிரிபாட்டை (அப்போதைய கேரள
முதல்வர்) பார்க்கச் சொல்லி கடிதம் கொடுத்திருக்
கிறார் (அனந்தப் பல்ப்பும் நம்பூதிரிபாட்டும்
நண்பர்கள்). தமிழ்நாடன் நம்பூதிரிபாட் அவர்களைச்
சந்திக்கச் சென்றபோது அவரின் நூலகத்தைத் திறந்து
விட்டு ""என்ன வேண்டுமோ எடுத்துக் கொள்ளுங்கள்
தோழர்’’ என்றாராம்.

தமிழ்நாடனின் மொழிபெயர்ப்புகளில் குறிப்பிடத்
தகுந்தது "மனுதர்மம்’ ஆகும். நாம் எவ்வாறு அடக்கி
ஆளப்படுகிறோம் என்பது மக்களுக்குத் தெரிய
வேண்டும் என்பதற்காகவே மனுதர்மத்தை
மொழிபெயர்த்ததாகக் கூறுகிறார்.
"அம்மா அம்மா’ என்ற இவரது கவிதைத்
தொகுப்பில் உள்ள கவிதைகள் ஒவ்வொன்றும்
ஒவ்வொரு நாட்டைப் பற்றியது. நூல் வெளிவந்த
போது மிகுந்த வரவேற்பினையும் பாராட்டையும்
பெற்ற படைப்பு.

தமிழ்நாடன் கவிதைகள் தமிழ் இலக்கியத்திற்கு
வளம் சேர்ப்பவை மட்டுமன்று பொதுஉடைமைப்
போராளிகளுக்கு வலுச் சேர்ப்பவையாகவும் அமைந்துள்ளன.
"மண்ணின் மாண்பு’ நூலிலுள்ள கவிதைகளைப்
போராட்ட காலங்களில் சுவர் எழுத்தாகப் பயன்
படுத்தியுள்ளனர் தோழர்கள். அதனால் காவல் துறை
நெருக்கடிகளைச் சந்தித்தவர் கவிஞர் தமிழ்நாடன்.
அதனால் ஏற்பட்ட மனச் சோர்வினால்
இலக்கியத்திலிருந்து சற்று காலம் விலகி உள்ளூர்
வரலாறுகளை ஆய்வு செய்யத் தொடங்கி பத்துக்கும்
மேற்பட்ட ஆய்வு நூல்களை நண்பர்களோடு
இணைந்து வெளியிட்டவர். சேலம் மாவட்டத்தைப்
பற்றி மூன்று ஆய்வு நூல்களை வெளியிட்டுள்ளார்.
பாரதிதாசனின் "குமரகுருபரன்’ நூலின்
கையெழுத்துப் படியைப் பழைய புத்தகக் கடையில்கண்டு
பிடித்து பல அலைக்கழிப்புகளுக்குப் பிறகு அதனை
நூலாக வெளியிட்டுள்ளார். அந்நூல் பெங்களூர்
பல்கலைக் கழகத்தில் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டது.
சேலத்தின் பழமைகளை மீட்டெடுக்கும்
நோக்கில் 1973ஆம் ஆண்டு இந்தியாவில் வேறெங்கும்
இல்லாத வகையில் எழுத்தாளர் ஓவியர் மன்றம்
என்ற அமைப்பைத் தொடங்கி அதன்மூலம் சேலத்
தில் அருங்காட்சியகம் தொடங்கினார். இதுதான்
இந்திய அளவில் மக்களால் தொடங்கப்பட்ட முதல்
அருங்காட்சியகம். மேலும் இந்த அமைப்பின்மூலம்
பத்துக்கும் மேற்பட்ட ஓவியக் கண்காட்சிகள்
நடத்தியதோடு பத்துக்கும் மேற்பட்ட நூல்களும் வெளி
யிட்டுள்ளனர். இன்றும் இவ்வமைப்பு வெற்றிகர
மாகச் செயல்பட்டு வருகிறது. மாணவர்களுக்கு
இலவச ஓவியப் பயிற்சியும் அளித்து வருகின்றனர்.
முப்பத்தைந்து ஆண்டுக்காலம் ஆசிரியராகப்
பணியாற்றி ஓய்வு பெற்றிருக்கும் தமிழ்நாடன் நம்
தமிழ்நாட்டு கல்வித்துறை மீதும் பள்ளிப் பாடநூல்கள்
குறித்தும் கவனிக்கத்தக்க விமர்சனங்களை வல்லினம்
இதழுக்கு அளித்துள்ள நேர்காணலில் முன் வைத்துள்ளார்.

தமிழ்நாடனின் "சாரா’ நாவல் ஒரு புதிய
மாதிரியில் எழுதப்பட்டது.
"சாரா நாவல் உலக அளவில் அங்குமிங்கும்
விரிந்து செல்கிறது. தமிழில் உலகளவில் விரிந்த
பரப்பைத் தனக்குள் கொண்டுள்ள நாவல் என்று
இதைத்தான் சொல்லமுடியும். பல்வேறு வரலாற்று
நிகழ்ச்சிகள், அனுபவங்கள் நாவலில் இடம்பெறு
கின்றன. அமெரிக்காவில் செவ்விந்தியர்கள் எப்படி
ஒழித்துக் கொல்லப்பட்டார்கள், நியூயார்க் ஹார்லெம்
சேரியில் நடந்த கலவரம் எவ்வளவு பிரம்மாண்ட
மானது! அரபு மக்களின் புரட்சிகரப் போராட்டம், தமிழ
கத்தின் அரசியல், திராவிடர் இயக்கம், சோவியத்
புரட்சி, லெனின் காலம் என்றெல்லாம் பலதிசை
வரலாற்று அனுபவங்கள் நாவலுக்குள் வந்திருக்
கின்றன. தமிழகத்து இளைஞர்கள் இப்படிச் சில
வரலாற்று அனுபவங்களை இந்த நாவல் மூல
மேனும் கற்றுக் கொள்ள முடியும்’’ என்கிறார்
கோவை ஞானி.

"சேலம் திருமணிமுத்தாறு’ என்ற நூலில் ஓர்
ஆற்றைப் பற்றி கூறுவதற்கு இவ்வளவு தகவல்களா
என்ற வியப்பில் ஆழ்த்துகிறது. பல்வேறு வரலாற்றுச்
சான்றாதாரங் களையும் நூலோடு இணைத்து
அளித்திருப்பது ஆய்வாளர்களுக்கு மிகவும்
பயனுள்ள ஒன்றாகும்.
தமிழின் முதல் அச்சு நூலையும் வெளியுல
கிற்கு அடையாளம் காட்டியவர் தமிழ்நாடன்தான்.
இவரது மொழிபெயர்ப்பில் வெளிவந்த ஏழு
கார்ட்டூன்களும் ஒரு வண்ண ஓவியமும் என்ற நூல்
2000ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதெமி விருது
பெற்றது. நாமறிந்த வரையில் சாகித்திய அகாதெமி
விருதுபெற்ற முதல் விளிம்பு நிலைப் படைப்பாளி கவிஞர்
தமிழ்நாடன்தான்.
தமிழ் எழுத்தாளர்கள் சாகித்திய அகாதெமி
யின் வரலாற்றைப் புரிந்துகொண்டு செயல்பட
வேண்டும் என்ற ஆர்வத்தினால் "சாகித்திய அகாதெமி
தமிழ் விருதுகள் சில விவரங்கள், விசாரங்கள்’ என்ற
நூலை எழுதியுள்ளார்.
கவிதை, கதை, கட்டுரை, ஆய்வு, மொழி
பெயர்ப்பு, ஓவியம் எனப் பல தளங்களில் சிறப்பாக
இயங்கும் பன்முக ஆளுமை கொண்ட தமிழ்நாடன்
படைப்புகள் காலத்தால் அழியாதவை.

தமிழ்நாடன் நூல்கள்

விளிம்பு நிலை ஆய்வுகள் :
1. தமிழ்நாட்டு மலைவாழ் பழங்குடிமக்கள்
2. பரமத்தி அப்பாவு
3. கெட்டி முதலி அரசர்கள்.

கவிதைகள் :
1. வேள்வி
2. மண்ணின்மாண்பு
3. காமரூபம்
4. அம்மா அம்மா
5. நட்சத்திரப் பூக்கள்
6. தமிழ்நாடன் கவிதைகள்.

கட்டுரைகள் :
1. ஒரு வானம்பாடியின் இலக்கிய வானம்
2. தமிழ் மொழியின் முதல் அச்சுப் புத்தகம்
3. சேலம் கலையும் இலக்கியமும்
4. என்மொழி, என் மக்கள், என் நாடு
5.புதுமையின் வேர்கள்
6. எழுத்தென்ப
7. கலைகள் உறவும் உருமாற்றமும்
8. உயிர் ஒன்று உடல் நான்கு
9. சாகித்திய அகாதெமி தமிழ் விருதுகள் சில விவரங்கள் விசாரங்கள்
10. சேலம் திருமணிமுத்தாறு
11. திருக்குறள் புதிர்கள்.

புதினம் :
சாரா.

சிறுககைதகள் :
மசா நிவேதனம்

மொழிபெயர்ப்பு :
1. மனுதர்மம்
2.சாணக்கியனின் அர்த்த சாஸ்திரம்
3. ஏழு கார்ட்டூன்களும் ஒரு வண்ண ஓவியமும்
4.ஜப்பானிய கவிதைகள்.

முகவரி
சேலம் தமிழ்நாடன்
14-ஐ மாரியம்மன் கோவில் 6ஆம் தெரு,
சஞ்சீவிராயன்பேட்டை,
தாசகாப்பட்டி,
சேலம்-6.
பேசி : 0427-2469423

Saturday, February 6, 2010

ரவிக்குமார் நூல்கள் அறிமுகம்

எழுத்தாளரும் காட்டுமன்னார்கோவில் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான நண்பர் ரவிக்குமார் எழுதிய ஒன்பது நூல்களை அறிமுகப்படுத்தும் விழா விருத்தாசலத்தில் நடைபெறுகிறது.

இடம் : ஏ.எல்.சி. சமுதாயக்கூடம், விருத்தாசலம்.
நாள் : 10.02.2010, மாலை 4.30. மணி.

தலைமை : இமையம், முன்னிலை: இராமநாதன் (நா.ம.மு.உ.), ஏசுஅடியான், பாக்கியராஜ்.

வரவேற்புரை :வீரராகவன்.

நூல்களை அறிமுகப் படுத்துபவர்கள்:

ந.முருகேசபாண்டியன் - கற்றனைத்தூறும்
கரிகாலன் - தமிழராய் உணரும் தருணம்
அஜயன்பாலா - அவிழும் சொற்கள்
கண்மணி குணசேகரன்- சூலகம்
அசதா - Venomous Touch
சு.தமிழ்ச்செல்வி - சோளிக்கே பீச்சே
சிபிச்செல்வன் - துயரத்தின் மேல் படியும் துயரம்
இரத்தின.புகழேந்தி - நீளும் வரலாறு அறியப்படாத நந்தனின் கதை
காலபைரவன் - பிறவழிப் பயணம்

ஏற்புரை : ரவிக்குமார்
நன்றியுரை : கனகராஜ்

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : திருமுதுகுன்றம் இலக்கியவட்டம்.

Tuesday, February 2, 2010

வாழ்வின் வண்ணங்கள்- ஒளிப்படக் காட்சி




12-02-2010 முதல் 16-02-2010 முடிய புதுவையில் நண்பர் ஜான்பாஸ்கோவின் வண்ணமிகு ஒளிப்படங்கள் காட்சிக்கு வைக்கப்படுகின்றன.

இடம்: கொலம்பானி கலைக்கூடம்,
அலியான்ஸ் ப்ரான்காய்ஸ்,
புதுச்சேரி.

முதல் நாள் மாலை ஆறு மணிக்கு திரு. சி. விவேகானந்தன் காட்சியைத் தொடக்கி வைக்கிறார்.
வாருங்கள் வாழ்க்கையின் வண்ணமிகுக் காட்சிகளைக் கண்டு களிப்போம்.

Monday, January 25, 2010

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் மருத்துவ சிந்தனைகள்




கோவை பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரியில் பல்கலைக்கழக நிதி நல்கைக்குழுவின் நிதியுதவியுடன் 2010 ,சனவரி 29, 30 ஆகிய இரு நாட்கள் மேற்கண்ட தலைப்பில் தேசிய கருத்தரங்கு நடைபெற உள்ளது.
தொடக்கவிழாவில் வரவேற்புரை தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் காந்திமதி.
அறுமுக உரை முனைவர் பரிமளம், தலைமை முனைவர் கே.எம்.சின்னதுரை, சிறப்புரை முனைவர் சி.மா.இரவிச்சந்திரன், நன்றியுரை பேராசிரியர் கமலா.
வல்லாளர் அமர்வில் முனைவர் அ.அறிவுநம்பி, முனைவர் இரத்தின.புகழேந்தி, முனைவர் மா.கிருபாகரன் ஆகியோர் கட்டுடரை அளிக்கின்றனர். இணை அமர்வுகள் முனைவர் செல்வி, முனைவர் ரங்கநாதன் தலைமையில் நடைபெறுகின்றன.
மாலையில் முனைவர் எழிலவன், முனைவர் பத்மாவதி, முனைவர் பிரான்சிஸ் சேவியர், முனைவர் இரவி, முனைவர் லட்சுமி, முனைவர் டாக்டர் நசீம்தீன் ஆகியோர் வல்லாளர் அமர்வில் கட்டுரை அளிக்கின்றனர். பேராசிரியர்கள் கமலா, கந்தசுப்ரமணியம் ஆகியோர் தலைமையில் கட்டுரை அமர்வுகள் நடைபெறுகின்றன.
நிறைவு விழாவில் பேராசிரியர் ஜோதிலதா வரவேற்க முனைவர் சீலா ராமச்சந்திரன் தலைமையில் முனைவர் ஆறு.இராமநாதன் சிறப்புரையாற்ற கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் இரா. பரிமளம் நன்றி கூறுகிறார்.

Saturday, January 16, 2010

பிச்சாவரத்தில் ஓர் ஓவியக் கண்காட்சி






ஓவியர் தமிழரசன் ஈரநிலம் அறக்கட்டளையின் மூலம் சுற்றுச்சூழலைக் காக்க வேண்டி தமிழக அளவில் ஓவியக்கண்காட்சி நடத்தி வருகிறார். 2010 சனவரி 1 ஆம் நாள் கன்னியாகுமரியில் தொடங்கி 16 ஆம் தேதியான இன்று கடலூர் மாவட்டம் பிச்சாவரத்தில் இக் கண்காட்சி நடைபெற்றது.இது அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற உள்ளது. இன்று கண்காட்சியை கவிஞர் அறிவுமதி தொடக்கி வைத்தார். கிள்ளை ஊராட்சித் தலைவர் இரவிச்சந்திரன் முன்னிலையில் நடைபெற்ற விழாவுக்கு நான், ஆறு.இளங்கோவன், ரெங்கப்பிள்ளை, பிரதீப் ஆகியோர் சென்றிருந்தோம். காட்சிக்கு வைக்கப்பட்ட ஓவியங்கள் பல காண்போரின் சிந்தனையைத் தூண்டுவதாக அமைந்திருந்தன. தாயின் வயிற்றில் கருவைக் காப்பது போல் நாம் இந்த உலகைக் காக்கவேண்டும் என்னும் சிந்தனையை ஒரு படமும் பசுங்காடுகள்தான் இவ்வுலகைக் காக்கும் பாதுகாப்பு அரண்கள் எனபதை ஒரு படமும் நமக்கு உணர்த்தின.

சுற்றுலாத் துறையினர் பொங்கல் விழாவை சிறப்பாகக் கொண்டாடினர். சிதம்பரம் மாலைக் கட்டித்தெரு பள்ளி மாணவர்களும் பிரம்பகுமாரிகள் இயக்கமும் இணைந்து கலை நிகழ்ச்சி நடத்தினர்.சூழல் சுற்றுலா மையமாக பிச்சாவரம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது அத்துறை செயலர் இறையன்பு அவர்களின் முயற்சி. இதனை விழாவில் பேசியபோது அண்ணன் அறிவுமதி பாராட்டினார்.

படகில் சுரபுன்னைக் காடுகளின் ஊடாக பயணித்து பறவைகளைக்கண்டு மகிழ்ந்து ரசித்தபடி திரும்பினோம்.