தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking
Showing posts with label கடித இலக்கியம். Show all posts
Showing posts with label கடித இலக்கியம். Show all posts

Wednesday, May 23, 2012

தபசி கடிதம்...









திருச்சி
11-02-2006

அன்பு நண்பர் புகழேந்திக்கு,
நலமா? நகர்க்குருவி வாசித்துவிட்டேன். இயல்பான எளிமையான பல கவிதைகள் அளித்துள்ளீர்கள்.. வாசிப்பு நெருக்கடி இன்றி கவிதைகளை உள்வாங்கிக்கொள்ள முடிந்தது.ந்வீன கவிதைகளில் இது ஒரு பிரதான அம்சமாக மிளிர்வதை அறிந்திருப்பீர்கள். இன்றைய கவிதை மொழியில் புதிர்கள் எதுவுமில்லை என்பதே அதன் பலம். அதே சமயம், கவிதைக்குள் ஒரு வித மாயாவாத வெளிப்பாட்டைக்கொண்டுவர முடியும். காட்சிப்பதிவுகளின் வழியே கருத்துப்பதிவின் நுண்ணிய இடங்களை கவிஞன் தொட்டுவிட முடியும். கவிதை நகர்வு, கவிதையைவிட முக்கியமான ஒன்றாகக் கருதுகிறேன். நூலகத்திலிருக்கும் புத்தக அடுக்கு போல, ஒரு இசைக்குறிப்பு போல, ஒரு தேர்ந்த வாகன ஓட்டியின் சாகசம் போல கவிதையை நகர்த்திச் செல்ல முடியும். ஒரு நல்ல கவிதை தன் மையத்தை ஒரு நாளும் இழப்பதில்லை. அது எப்போது எழுதப்பட்டதாக இருப்பினும் சரி அது இன்று மலர்ந்த பூவாகத்தான் மணம் வீசும்.
இழப்புகள் சுமைகள் இவைகளிலிருந்து விடுபடத் துடிக்கும் மன்க் கொந்தளிப்பைத் தங்களின் பல கவிதைகளில் உண்ர்கிறேன். கவிஞனுக்கே உரித்தான nostalgic மன நிலையும் கூட. ' நடப்பது என்பது நடந்தது ஆகிவிட்டது' , 'பூமிக்குள் புதைக்கப்பட்ட நம் மூதாதையர்...', ' என் மகனின் நாள்காட்டி முழுக்க ஞாயிற்றுக்கிழமைகள்' ஆகிய வரிகளில் a touch of class உள்ளது. அதே சமயம் . ' அன்றெ தொடங்கினேன் சமையல் கலையை மறந்து போக..' என்பது apt ஆகத் தெரியவில்லை. 'சமையலறையில் இனி எனக்கென்ன வேலை என்று இருக்கலாமோ அது? கவனிக்கவும். ஒரு கவிதையில் அதிகப்படியான சொற்களைப்பற்றிக்கூட நான் கவலைப்படவில்லை. ஆனால் பொருத்தமற்ற சொற்கள் இருக்கலாகாது என உணர்கிறேன். கவிதையின் மீதான உரையாடலைத் தொடர்ந்து நிகழ்த்தும்போது, ' சொல் தேர்வு' மற்றும் சொற்பொருத்தம் கை கூடிவிடும். உதாரணமாக என்னுடைய பூனைகளின் காலம் என்ற கவிதையில் புனுகுத்தைலம் என்ற ஒரு சொற்றொடருக்கு சுமார் 6 மாத காலம் நான் காத்திருக்க வேண்டியதாயிற்று. இறுதியில் அதுவாகவே நிகழ்ந்தது. உக்கிரமான மன நிலையில் இயங்கும்போது அங்கு மேலோட்டமான சொற்கள் வலுவிழந்து விடுகின்றன. தொடர்ந்து அப்படிப்பட்ட மனநிலையைத் தக்க வைத்துக்கொள்வதுதான் அரிதானது. மற்றபடி தொடர்ந்து எழுதுங்கள். கவிதையின் வடிவம் செய்நேர்த்தி ஆகியவை பற்றியெல்லாம் அதிகம் அலட்டிக்கொள்ள வேண்டாம். நீங்கள் என்ன சொல்லவேண்டுமென்று நினைக்கிறீர்களோ அதை மட்டுமே சொல்லுங்கள். வடிவமும் செய்நேர்த்தியும் தம்மால் வந்துவிடும். கவிதை என்பது கையில் பிரம்பை வைத்துக்கொண்டு நம்மைப் பயமுறுத்தும் ஒன்றாம் வகுப்பு ஆசிரியர் அல்ல. அது நம் வீட்டு நாய்க்குட்டி அது நம்மைக் கடிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் அவ்வளவுதான். மற்றபடி தங்களின் 'வித்தைக்காரி', 'நாற்றமில்லாத...', 'நடந்த கதை' ஆகிய கவிதைகளை ரசித்துப் படித்தேன். அனைத்திற்கும் எழுதுங்கள்.

அன்புடன்
தபசி.

Monday, May 30, 2011

கடித இலக்கியம் - பொள்ளாச்சி நசன் கடிதம்




பொள்ளச்சிநசன்
16/9/94

அன்பு நண்பருக்கு ,

வணக்கம். தங்களின் 'மண்கவுச்சி' நூல் கிடைத்தது. பின் அட்டையில் இருப்பது தங்களின் புகைப்படம் என்று நினைக்கிறேன், சரிதானே! களம் வெளியீடாக நான் பிறந்த ஊரான சிதம்பரத்தின் சபாநாயகம் அச்சகத்தில் அச்சடித்ததாக - சிறுகதை ,கவிதை, நேர்காணல், விடுகதை எனப்பல்சுவையோடு கூடிய இத்தொகுப்பு ஒரு மாறுபட்ட முயற்சிதான். என் கவனத்தை ஈர்த்தது ப.அருள் - அவர்களின் கடிதம். தாங்கள் டி.ட்டி.எட்., படித்திருப்பதாகக் குறிப்பிட்டிருப்பதும் இண்டேனல் ஹிச்ட்ரி, சைக்காலஜி - 2 மார்க் பற்றியும் படிக்கும் போது நான் தங்களின் முதுகில் தட்டிக்கொடுப்பதுபோல் உணர்ந்தேன், ஏனெனில் நான் டி.ட்டி.எட் சைன்ஸ் லெக்சரர், ஆசிரியருக்கு அனைத்து கலைகளையும் சொந்தமாக்கி - விண்ணில் பறந்து - சமுதாயத்தைச் சாடி, இப்படி பன்முகத் தோற்றம் காட்டுவது சிறப்பானது, உயிரூட்டுவது. நூலைப் படித்து முடித்தபோது எங்கோ கிளம்பி எங்கோ சென்று இறங்கியது போன்று ஒரு எண்னம். அன்னப்பூ - கதையிலே நவீன சாதனங்களின் வளர்ச்சியினால் அடையும் சுகத்திற்கு அடியில் மறைந்து கிடக்கும் சோக நிகழ்வைக் காண முடிகிறது அந்த நல்ல உள்ளத்தை பைத்தியக்காரியாக, ராசியானவள் உள்ளுக்குள் நினைத்தாலும் ஏதும் செய்யமுடியாத ஏதிலிகளுக்கிடையில் வாழும் சாதாரண - எளிய ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாகக்காட்டும் போது மகிழ்ந்தேன். எழுதப்படாத, எழுதப்படுவதற்கு அப்பாற்பட்ட, எழுத்தே அறியாத- அந்த உலகம் வெளிச்சம் போட்டு காடப்பட வேண்டியதன் அவசியத்தை இந்த நூல் காட்டுகிறது. இது ஒரு வெற்றிதான். தனியொரு மனிதனின் படைப்பிலக்கியம் என்று சுட்டிக்காட்டி, பட்டும், பாராட்டும் - பெற்றுவாழும் போலிகளுக்கிடையில் தனி மனிதனை முதன்மைப் படுத்தாது - பலரின் படைப்பு வழி- கருத்து வழி - ஒரு சமுதாய சிக்கலை, சீரழிவை, சிதைவை - காட்டுவது பாராடப்பட வேண்டிய ஒன்று. கால் காணி கரும்புக் கணக்கு - யோசிக்க வைக்கும் - செருப்பு, காணாமல் போன பணமும் நெய்வாசல் சோசியமும் - கதைகளும், ஆண்களுக்கு சமமாய், பாதுகாத்தல் கவிதைகளும் பளிச் எனத்தெரிகின்றன. விடுகதையும் - விடையும் ரசித்தேன் விடை இல்லாது இருந்திருந்தால் ஏதேதோ தோன்றியிருக்கும். நல்ல முயற்சி. தொடர என் வாழ்த்துகள்

என்றும் அன்புடன்,
பொள்ளாச்சி நசன்.

Sunday, March 6, 2011

எனக்கு வந்த கடிதங்கள் - 2

அன்புயிர் புகழ் ! உன் அன்பு மடலும் படைப்புகளும் கிடைத்தன. அரசு ' தீட்டு ' படைப்பையும் இன்று கொடுத்தார். எழுது. எழுது. இது அச்சிற்கு... இது மற்றவர் பார்வைக்கு என்ற எண்ணம் இல்லாமல் எழுது. உனக்கென ஒரு மொழி அமையும் நேரமிது. அதன் செழுமை உணரும் வேகத்தில் எழுது. டாக்டர் கூட உனது
' கரும்பு ' கதையைப் படித்துவிட்டு அரசுவிடம் உன்னை விசாரித்திருக்கிறார். தொடர்ந்து எழுது. சிறுகதை வடிவமே சிறந்த வடிவம். முக்கியத்துவம் கொடு. கோணங்கி, தமிழ்ச்செல்வன், பூமணி, வண்ணதாசன், வண்ணநிலவன் இவர்களோடு கி.ரா. கிழவனையும் படி. வண்ணதாசன் வித்தியாசமான ஆள். மனிதன் - மிருகம், இயற்கை என்கிற வித்தியாசம் பார்க்கத் தெரியாத வித்தியாசமான ஆள். நுட்பமான பார்வை, மிருதுவான மனசு, நளினமான நடை. தேடிப் படி. எவனையும் ரசி. நீயாக மலர். உன்னைச் சூழ்ந்த மக்களில்... இயற்கையில் படைப்புகள் பறி. அவ்வப்போது மடலிடு. இப்படி இடைவெளி விடாதே. அன்பின் அம்மா, அப்பா,கரிகாலன் அனைவரையும் மிக மிக கேட்டதாகக் கூறு. இங்கே புத்தகக் கண்காட்சி நிகழ்கிறது. வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். என்ன பையன் நீ !அண்ணமலைப் பல்கலைக் கழகத்திலா ! எதையாவது சாதித்துவிட்டு அங்கு பேசலாமே புகழ். இப்போது வேண்டுமா ? யோசி, அப்புறம் உன் இஷ்டம். மேடத்திடமும் கேட்டுக்கொள்.
உடன் பதில் எழுது.
அன்புடன்
அறிவுமதி.
07.01.1993

குறிப்பு: கடிதத்தில் டாக்டர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது மருத்துவர் ராமதாசு அவர்களை. அப்போது தினப்புரட்சி நாளிதழில் ஞாயிறுதோறும் மக்கள் இலக்கியம் என்றொரு பக்கம் வெளியாகும் அதன் பொறுப்பாசிரியர் ப. திருநாவுக்கரசு (தாமரைச்செல்வி பதிப்பகம் ). அவரைத்தான் அரசு என அறிவுமதி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Thursday, March 3, 2011

எனக்கு வந்த கடிதங்கள் -1

தகவல் தொடர்புச் சாதனங்களின் வளர்ச்சியினால் கடிதம் எழுதும் வழக்கம் முற்றிலும் மறைந்துவிட்டது, பின்லாந்து நாட்டு ஆவணக்காப்பகங்களில் ஒரு உள்நாட்டுக் கடிதத்தைக் கூட ஆவணாமாகப் பாதுகாக்கின்றனராம். கடிதம் இலக்கியத்தின் ஒரு பகுதியாகியுள்ளது கடித இலக்கியம் என்று. எனக்கு வந்த கடிதங்களை இங்கே பதிவு செய்கிறேன். நாளை இதுவும் கூட ஆவணமாகலாம். முதலில் கவிஞர் அறிவுமதி எனக்கு எழுதிய கடிதங்களை ஒவ்வொன்றாக பதிவுசெய்கிறேன்.

12/06/1991
சென்னை

அன்புயிர் புகழ்,
அண்ணன் மதி பேசுகிறேன்.
உனது அன்பின் மடல்களுக்கு உடன் மடலிட முடியாமைக்கு... பொறுத்தருள்க.
என்னிடமுள்ள குறைபாடே இதுதான். என் தொட்டில் பூமிக்கருகிலேயே இத்தகைய நம்பிக்கை வெளிச்சங்கள்
அறிமுகமாக அறிமுகமாக மனசு தெம்படைகிறது.
உனது மொழி உணர்வுகளும் அரசியல் உணர்வுகளும் செழுமையடையவும் வைரம் பாயவும் வாழ்த்துகிறேன்.
சுற்றிலும் நம்பிக்கையாளர்களைத் துளிர்விடச்செய். அண்ணன் ராசு அவர்களை அடிக்கடி சந்தி.புது நெல்லு புது நாத்து முடிந்து திரைக்குத் தயாராக இருக்கிறது.
விரைவில் சிதம்பரம் வரலாம். நான் ஊருக்கு வருகிற போது தெரிவிக்கிறேன் சந்திப்போம்.
அன்புடன் அண்ணன்
அறிவுமதி

குறிப்பு : அண்ணன் ராசு என கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பது விருத்தாசலத்தில் வாழ்ந்த கொள்கையளரை.
திராவிட நாடு அடையும் வரைத் திருமணம் செய்துகொள்ளமாட்டோம் என்று பெரியாரிடம் குருதியால் ஒப்பமிட்டுக்கொடுத்தத்ற்காக் கடைசி வரை திருமணமே செய்தொகொள்ளாமல் மரணமடைந்தவர். சிந்தனைச்சிற்பி என எங்களால் அழைக்கப்பட்டவர்.