தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking
Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Saturday, January 7, 2017

கருப்புசாமி என்றொரு மாணவன்


 

 

இசையை உயிராக நேசிப்பவன்

கற்றுக்கொள்வதற்காக

பட்டினி கிடந்தேனும்

பறையைக்கொணரும் திறம் படைத்தவனுக்கு

 

அலகிட்டு வாய்பாடு சொல்லித்தருகிறார்

தமிழாசிரியர்

அதனை இளையராஜாவின் இசையோடு

பொருத்திப் பார்க்கிறான் அவன்

 

காய்ச்சிய பறையில் பேசத்தெரிந்தவனுக்கு

வவ்வல்ஸ் எல்லாம் வவ்வாலாய்த்தெரிவதில்

வியப்பேதுமில்லை.

 

வடிவியலில் வட்டம் வரையும் போதெல்லாம்

அவன் பறையை வரைந்து பார்ப்பதாக

எண்ணி மகிழ்வான்

 

ஒலியில் விளயாடும் அவனுக்கு

ஓம்ஸ் விதி பற்றி கவலை இல்லை

 

காலத்தை தீர்மானிக்கப்போகிறவனுக்கு

காலக்கோடு எதற்கெனெ எண்ணினான்

 

கடந்த ஆண்டு கலைக்கழகப்போட்டியில்

கோப்பை வென்ற அவனுக்கு

வருகையைக் காரணம் காட்டி

அனுமதி மறுக்கப்பட்டதும்

 

விடுதலைப் பறவையாய் வந்து

உற்று நோக்குகிறான் போட்டிகளை

 

கருவி இசைக்கான முடிவுகள்

வெளியாகி வேறொருவன்

பெற்றுவிட்ட சான்றிதழைக்

 கிழித்தெறிந்துவிட்டு

இளையராஜாவாக விரும்பியவனை

இஞ்சினியர் ஆக்கத்துடிக்கும்

ஆசிரியர்களை

சபித்தபடி வெளியேறினான்

கருப்புசாமி என்றொரு மாணவன்.

 

Tuesday, January 5, 2016

முக நூல் கவிதைகள் 13


1.குட்டி வானத்தை
பொருட் காட்சியில்
வாங்கியதோடு
படுக்கையறையின்
மேற்கூறையாக்கி
பலஆண்டுகளாயிற்று
ஒவ்வொரு இரவிலும்
எங்களைக்காண
பிறைநிலாவும்
விண்மீன்களும்
கோள்களும்
நீல்ஆம்ஸ்ட்ராங்கும்
வந்தனர்.
அழுக்கான
வானத்துக்கு
வெள்ளையடிக்கும்
நாளில்
தென்னை விளக்குமாற்றின்
தீண்டுதலில்
உதிர்ந்தன 
விண்மீன்களும்
தரையில் கிடந்த
நிலவையும்
குப்பைத் தொட்டியில்
போட்டாயிற்று
நிலா பார்க்காமல்
உறங்குவது
எப்படி?
எங்காவது
பொருட்காட்சி
நடக்கிறதா
சொல்லுங்களேன்.

2. ஒரு புளியமரம்
குழம்புக்கு 
புளி மட்டும் தருவதில்லை
குழந்தைகள்
ஊஞ்சலாட
தோள் மட்டும் தருவதில்லை
கல்லெறிந்த
சிறுவருக்கு
பிஞ்சுகளை உதிர்ப்பது
மட்டுமல்ல
தன் தழைகளை
மருந்தாகத் தருவது
மட்டுமல்ல
உயிர்நீத்த பின்
உரலாவது மட்டுமல்ல
எங்களுக்கு 
வகுப்பறையாகவும்தான்
அதன் வயிற்றில்
ஆணியைச்
செருகி
கரும்பலகையைத்
தூக்கிலிடுவோம்
கைகளாய் நீளும்
அதன் வேர்
முடிச்சில்
சாக்பீஸ் கொடுக்க
எங்களை
அமர்த்தி
பாடம் நடத்தத்
தொடங்குவார்
புளியமர வாத்தியார்.

3. நாம் பிள்ளைப் பருவத்தில்
துள்ளி விளையாடியதை
நினைவூட்டுகின்றன
இருசக்கர ஊர்தியினடியில்
நழுவும்
மழைக்கால
சாலைகள்

4. நடக்கச் சென்றவனை
ஓட வைக்கிறது
மழை.

5.மாணவர் கற்றுக் கொடுக்கிறார்
ஆசிரியருக்கு
கார் ஓட்டுவதற்கு

6. வாரக் கடைசியைக்
கொண்டாடுவோம்
மாதக் கடைசியில்
திண்டாடுவோம்.

7. ஊர்திச் சக்கரங்களின்
எண்ணிக்கையிலும்
வீட்டு விலங்குகளின்
விலையிலும்
உயர்ந்துகொண்டிருக்கிறது
தமிழரின் வாழ்க்கைத் தரம்.

8. டியோடரண்ட்
பூசாத எழுத்தின்
வியர்வை நெடியை
சகித்துக்கொள்வோமாக.

9. சொல்லுக்கும்
செயலுக்கும்
இடையில்
ஏன்
வெளி
அதுவும்
இவ்வளவு
அகலமாஅக!

10. இது 
எந்த கடைவீதியிலும்
கிடைக்காது
இலக்கியவான்களுக்கு
தேவைப்படலாம்
சொற்களை சலித்தெடுக்க
சோதிக்க விரும்பினால்
மிஞ்சுவது 
ஒற்றைச் சொல் மட்டுமே
எழுதுவோமா
வாழ்நாள் முழுவதும்
அந்த ஒற்றைச்சொல்
இலக்கியத்தை!

11. முன் தயாரிப்பின்றி
உள்ளே சென்ற
உதயநிதியை
செல்லக்குட்டிகள்
சந்தானமாக்கி
வெளியேற்றுகின்றனர்

12. நேர்க்கோட்டுப் பாதையில்
சென்றுகொண்டிருக்கும்
போது
அதன் சாய்வை 
மனம் நினைக்க
எக்சும் தெரியாமல்
ஒய்யும் தெரியாமல்
ஆயத் தொலை வடிவியலாய்
அச்சுறுத்துகிறது
வாழ்க்கை.

13. கவிதைக்கா
பொய்
அழகு
கவிதைக்கு
பொய்யா
அழகு
கவிதைக்கு
பொய்
அழகா?


Monday, January 14, 2013

அந்த நான்கு நாட்கள்

 நாள்.1

வடக்குத் தெற்கென
இரு மருங்கிலும்
ஆறுகள் வறண்டோடும்
சிற்றூரொன்றில்
சாணிப்பிள்ளயாரை
கோலங்களின் மீதமர்த்தி
பனித்துளி மினுங்கும் பூசணிப்பூவை
அதன் தலையில் செருகும்
தலைவியிடம்

பேச்சுறுப்பில் ஆவி பறக்க
புன்னகை தந்து
முந்திய இரவில் கொய்த
கசப்புக்காய் மரத்தின்
இலைக்கொத்துகளைச் சுமந்து
கம்பளி முக்காடிட்டு
வயல் வெளிகளின் சனி மூலையைத்
தேடிச்செல்வான் தலைவன்.

 நாள்.2

விரல் மூட்டுகளால்
தட்டி எழுப்பப் பட்ட
செஞ்சூளைப் பானைகள்
மஞ்சளிலை உடுத்தி
கரும்புக்காவலர்கள் புடை சூழ
வாசலடுப்பில் அமர்ந்து
பொங்கி வழியும் சர்க்கரைச் சிரிப்பால்
சூரியனைச் சூடாக்கும்.


நாள்.3

கொம்பு முளைத்த தோழர்கள்
குளித்துத் திரும்புகையில் 
வால் நீர்த் துளிகள்
எழுதிய கவிதைகள்
வரவேற்கும் வீதிகள்

பச்சை வெள்ளை மஞ்சள்
இலை மலர்களாலான
மாலைகள் கிடத்திய திண்ணைகள்

வீட்டு தெய்வத்திற்கு 
ஊற்றிய சாணித்தொட்டி 
கஞ்சியில் ஆடை படரும்
உள் வாசல்

பசும்புற்கள் நிரம்பிய
கட்டுத்தறிகள்

எரியும் சூடத்தை
பெருமூச்சால் அணைக்க முயலும்
வாயில்லா ஜீவன்கள்.

நாள்.4

பால் பொங்கியதை
தெய்வத்தைக்குறிக்கும் சொல்லால்
வினவும் பணியாளர்கள் உலவும்
சாராயம் நாறும் சடு குடு தெருக்கள்

கத்திரிக்கொல்லையை
வெட்டப்பிறந்த
தம்பியின் பெருமை பேசும்
வளையல் கரங்கள்
முன்னிரவை வழியனுப்பி
விடியலை வரவேற்கும்


Tuesday, June 5, 2012

ஏட்டுச் சுரைக்காய்





ஒரு குளத்தில்
நூறு கொக்குகள் இருந்தன
அதில் ஒன்றைச் சுட்டான்
வேட்டைக்காரன்
மீதி எத்தனை
கொக்குகள்
அங்கிருக்கும்?

தொண்ணூற்றொன்பது
என்றனர்
மாணவர்

பூச்சியம்
என்றனர்
ஞானியர்.


நன்றி : படம் - தமிழ்விக்கிப்பீடியா

Monday, June 4, 2012

படிப்பு





எழுதச்சொல்லி
நச்சரிக்கும்
ஆசிரியர்களின்
பிடுங்கல்களிலிருந்து
விடுபட நினைக்கும்
என் மகனின்
நாள்காட்டி முழுக்க
ஞாயிற்றுக்கிழமைகள்

பள்ளி செல்லாமல்
வீதியில் திரியும்
நாய்களின் சுதந்திரம்
தனக்கில்லாதது பற்றி
வருந்துமவனை
உணவு முறையில்
நமக்கும் நாய்க்குமான
வேறுபாடு கூறி
தேற்றுவாள் மனைவி

விளையாட்டு மைதானத்தில்
கழற்றி வைக்கப்பட்ட
மனத்தோடு
பள்ளிக்கு விரட்டப்படும்
அவன் கடிகாரம்
நொண்டியடிக்கும்

உற்சாகத்தோடு
வீடு திரும்பும்
ஒவ்வொரு அந்தியிலும்
அவனுக்குக்
கண்ணீரால் எழுதக்
காத்திருக்கும்
பை நிறைய வீட்டுப்பாடம்

விரலிடுக்குகளில்
எழுதுகோலோடும்
விரிக்கப்பட்ட
குறிப்பேடுகளின் மீது
உலர்ந்த கண்ணீர்க் கோட்டு
கன்னங்களோடும்
உறங்கிப் போனவனை
எழுப்பி
ஊட்ட முயல்கையில்
உள்ளிறங்க மறுக்கும்
சோற்றுருண்டைகளும்.

Monday, May 28, 2012

பல்லி பயம்




புதிதாகக் கட்டப்பட்ட
நம் வீட்டில்
நாம் குடியேறுவதற்குள்
வந்து நுழைந்து விடுகின்றன
பல்லிகள்

நாம் முதன்முதலாக
வீடிற்குள் அடி வைக்கும்போது
தம் இருப்பைச்சொல்லி
நம்மை வரவேற்கின்றன

அன்று முதல்
பல்லிகள்
நம்மை மேய்க்கத் தொடங்கிவிடுகின்றன

அவை
கிழித்த கோட்டைத் தாண்டுவதில்லை
நாம்

யாதொரு பணியையும்
தொடங்கும் முன்
அவற்றின் சம்மதம் வேண்டி
நிற்கிறோம்

நாம் வெளியில் புறப்படும்போது
விபத்தின்றி திரும்ப
ஆசீர்வதித்தனுப்புகின்றன

நமக்கென்று
சில உதவிகளையும் செய்கின்றன

கொசுக்களை உண்டு
நம்மைத்
தொற்று நோய்களிலிருந்து
காப்பாற்றுவதோடு
சிலந்திகளையும் தின்று
ஒட்டடையற்ற
வீடாகவும் பராமரிக்கின்றன

நாமோ
அவை கதவிடுக்குகளில்
இருப்பதைக் கண்டுகொள்ளாமல்
கதவைச் சாற்றி
வால்களைத் துண்டித்துவிடுகிறோம்

துண்டான வால்
துடிப்பதைப் பற்றியெல்லாம்
கவலைப் படுவதில்லை
பல்லிகள்

குட்டை வால்களை
விரைவிலேயே
வளரச் செய்துவிடுகிறார்
பல்லிகளின் கடவுள்

திருமணத்திற்குத் தயாராகிவிடும்
நம் பிள்ளைகளுக்குத்
துணை தேட
பல்லிகளிடம் ஒப்புதல்
கேட்கிறோம்

தன் துணையை
புணர்ச்சிக்கு அழைக்கிறது பல்லி
அழைப்பொலியைச்
சம்மதமாகக் கருதி வெளியேறுகிறோம் நாம்

பெரிதாகிவிட்ட
பல்லிக்குட்டிகளைப் பார்த்து
பயப்படுகின்றனர்
நம் பேரப்பிள்ளைகள்

ஒரு நாள்
கால் இடறி
நம் தலையில் விழுகிறதொரு பல்லி

மரண பயத்தில்
தலை தெரிக்க ஓடுகிறோம்
குளியலறை நோக்கி.

Sunday, May 27, 2012

நிரல்





நாட்டின் எதிர்காலத்தை
கைகளில் ஏந்தி
வரிசையில் நின்றனர் குழந்தைகள்
சத்துணவு கூடத்தின் முன்

சுகாதர நிலையங்களில்
நோயாளிகளின் வரிசை

ரசிகர்கள் கூட்டம்
இப்போது குறைவுதான்
திரையரங்க வரிசையில்

முன் பதிவுக்குக் காத்து நிற்கிறது
பயணிகளின் வரிசை

வளைந்து நெளிகிறது
ரேஷன் கடை வரிசை

ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமின்றி
அவ்வப்போது தோன்றும்
வாக்காளர் வரிசை

பொங்கல் தோறும்
விலையில்லா வேட்டி சேலைக்கு நிற்கிறது
ஏழைகள் வரிசை

இந்நாட்டு மன்னர்களெல்லாம்
ஏதோ ஒரு
வரிசையில் நிற்க

எதிர்கால மன்னர்களோ
கைரேகைப் பதிவிற்காக
காத்து நிற்கின்றனர்
அமெரிக்க தூதரகத்தின்
நீண்ட வரிசையில்.

Saturday, May 26, 2012

பிணத்தை உண்பவன்



பூமிக்குள் புதைக்கப்பட்ட
நம் மூதாதையர்
ஒருவரைப் போல்
காட்சியளிக்கிறது
மண்ணுக்குள்ளிருந்து
தோண்டியெடுக்கப்பட்ட
சக்கரைவள்ளிக்கிழங்கு

தணலுக்குள் 
நுழைத்து வைத்து
மறுநாள் 
எடுத்துப் பார்க்கிறேன்

வெந்து சுருங்கிய உடலை
என் கோரைப் பற்கள்
நீண்டு வெளிவர
பிய்த்து உண்கிறேன்

எனக்கு மிகவும் விருப்பமான
என் மூதாதையரின்
வெந்த பிணத்தை.

Wednesday, January 18, 2012

தை ஏழாவது இதழ்

தை ஏழாவது இதழில் என் கவிதை


கனவுகள் கிளைத்த மரங்கள்
--------------------------------------------------

ஆல்
அரசு
வேம்பு
புன்னை
வாகை
எல்லா மரங்களையும்
வழிபாட்டின் பெயரால்
வளர்த்து சூழல் காத்த
வம்சா வழியினர்தான்...

வளர்க்கத் தொடங்கினோம்
தென்னை
மா
பலா
முந்திரி
தேக்கு
சந்தனம்
என
கனவுகள் கிளைத்து வளர்ந்தன
பணம் காய்க்கும் மரங்கள்
எல்லாம்
"தானே" சாய்ந்து
நொறுங்கிப் போயின
கற்பனைக் கோட்டைகள்.


Wednesday, March 24, 2010

தெரிந்தது தெரியாதது

ஆங்கிலம் தெரியாத ஆயா
கணினி தெரியாத தாத்தா
இந்தி தெரியாத அம்மா
கணக்கு தெரியாத அப்பா
எல்லாம் தெரிந்த குழந்தை

எதுவும் தெரியாத நாம்
எல்லாம் தெரிந்தது போல்
நடந்து கொள்கிறோம்

எல்லாம் தெரிந்த குழந்தைகள்
எதுவும் தெரியதது போல்
நடந்துகொள்கின்றன.

Thursday, January 14, 2010

தை அய்ந்தாவது இதழ்




தை அய்ந்தாவது இதழ் வெளியாகியுள்ளது. ஆசிரியர்: கவிஞர் அறிவுமதி, நூலாக்கம் : கவிஞர் பழநிபாரதி, நூலழகு : ஆர்.சி.மதிராஜ், வெளியீடு : சாரல், 189, அபிபுல்லா சாலை, தியாகராயநகர், சென்னை- 600 017. arivumathi@hotmail.com பேச: 9940221800.

விற்பனை உரிமை : தமிழ் அலை, 1- காவலர் குறுந்தெரு, சைதாப்பேட்டை, சென்னை-600 015. tamilalai@gmail.com , பேச: 9786218777.

நூல் கிடைக்குமிடம் : தணல் பதிப்பகம், சென்னை- 14. பேச: 9445428375.

கவிதைகளோடு கவிஞர்களையும் அழகு செய்வதாக 160 பக்கங்களில் மிகச் சிறப்பாக இதழ் வந்துள்ளது. அண்ணன் அறிவுமதி அவர்களின் அழகுணர்வு இதழின் ஒவ்வொரு பக்கங்களிலும் மின்னுகிறது.

புதைந்த
உதிரக்கொடிகளின் மீது
பொழிந்த மழையில்
புத்துயிர்ப்பின் முதல் அடையாளமாய்
முளைத்துக்கொண்டிருக்கின்றன
பசும் புல்லும்
எம் சொல்லும்.

என்னும் இன்குலாப்பின் கவிதை அட்டையை அழகு செய்ய மலர்கிறது கவிதைத் தை

தையில் வந்த என் கவிதை இதோ.

ஆதி வாழ்க்கை

நுழைந்ததும்
குரைத்து வரவேற்கும்
நாய்
முற்றத்தில்

வரவேற்பறையில்
எலியின் வருகையை
எதிர்பார்த்துக் காத்திருக்கும்
பூனை

கூடு பின்னிக்கொண்டிருக்கும்
சிலந்திகளைத் துரத்தி
வேட்டையாடும்
பல்லிகள் நிறைந்த
கூடம்

கழிவு நீர்க் குழாய்
வழியாக உள்ளே வந்து
தானியங்களைத் தேடி
சமையலறையில் அலையும்
எலிகள்

அழுக்குத்துணிகளிடம்
அடைக்கலம் தேடி
படுக்கையறைக்கு வந்துவிடுகின்றன
கரப்பான் பூச்சிகள்

கழிவறை ஈரத்தில்
அடைந்து கிடக்கும்
தவளைகள் எழுப்பும்
ஒலி கேட்டு
அவ்வப்போது
வந்து போகின்றன
பாம்புகளும்

தோட்டத்து முக்கனிகளைப்
பதம் பார்க்கும்
குரங்குகள்

நகரத்தில்
அமைந்திருந்தாலும்
இயற்கையோடு இயைந்ததுதான்
எங்கள் வாழ்வும்.

Sunday, December 6, 2009

ஊற்றுக்கண்கள்

சுட்டெரிக்கும் கோடையிலும்கூட
திருமுட்டம் செல்லும்போதெல்லாம்
வெள்ளாற்றின் தென்கரையில் பார்த்திருக்கிறோம்
ஓடி வரும் ஊற்று நீரை

கால்நடைகளின் உறும நேர உயிர்த்தண்ணீர் அது!
பீக் கருவை அடம்பினுள்ளிருக்கும்
அதன் ஆதி தேடி தாகம் தணிப்பர் ஆடு மேய்க்கும் சிறுவர்
அதைச் சேகரித்தே கல்லறுத்து
காளவாய் அமைத்தாராம் கள்ளிப்பாடியில் ஒருவர்

ஆற்றுக்குள்ளிறங்கும் எவரும்
அதில் கால் நனைத்தே கடந்து போக வேண்டும்

கோட்டூர் ஆலைக்கு
குறுக்கு வழியில்
கரும்பேற்றிச்செல்வதற்கு அமைத்த
சாலைச் செம்மண் குருடாக்கித் தொலைத்தது
ஆற்றோர ஊற்றுக் கண்களை.