தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking

Monday, March 16, 2009

கடிதங்கள்-கலாப்ரியா

அன்பு மிக்க புகழேந்தி, வணக்கம். உங்கள் தொகுப்பு கிடைத்தது நன்றி.கரிகாலன் ஏற்கெனவே சொன்னார். பனி முடிந்து கோடை நுழைந்து கொண்டிருக்கிறது. இந்த வருடம் அக்காக் குருவியின் முதல் கூவலை பிபரவரி 7/8 வாக்கில் கேட்டேன். முன்பு இதை தெளிவாகக் குறித்து வைப்பேன். ஒரு முறை நானும் வண்ணநிலவனும் எங்களூர் ரயில் பாதையோரமாக மாலை நேரம் நடந்துகொண்டிருந்த போது அந்த வருடத்தைய முதல் கூவலைக் கேட்டேன். இதமான மனுசன், ஆதமான பழைய நினைவுப் பகிர்தல்களுடன் நடந்துகொண்டிருந்த போது இதமான கூவல் அக்காக்குருவியின் சோகமான கூவல், செண்பகப் பூவின் மணம் தருகிற சோக பாவம் என்று ஒரு விதமான சோம் தான் நான் போலிருக்கிறது. இன்றும் இந்த மாலைப் பொழுது ஒரு சோர்வாகத்தானிருக்கிறது. உங்கள் கவிதைகளை வாசிக்கத் தொடங்கியதும் சற்று சோர்வு விடுபட்ட உணர்வு. ஏற்கெனவே சில கவிதைகள் பத்திரிகைகளில் படித்தவை ஆனாலும் ஒரு கவிஞனுக்கு தொகுப்புதான் முழு உருவையும் ஆளுமையையும் வெளிப்படுத்த உதவுகிறது அந்த வகையில் நல்ல தொகுப்பாக அமைந்திருக்கிறது. அச்சும் அமைப்பும் அழகாக இருக்கிறது. ஒன்றிரண்டேயுள்ள படங்களை முற்றாகத் தவிர்த்திருக்கலாம். நிரல் கவிதை போல நானொன்று எழுதியிருக்கிறேன். வரிசை மனிதர்கள் யாரையும் விட்டு வைக்கமாட்டார்கள் போலிருக்கிறது. பல்லி கவிதை ஏற்கெனவே பத்திரிகையில் தீராநதி(!) படித்த போதே பிடித்திருந்தது 'பல்லிகளின் கடவுள்' என்ற பிரயோகம் நன்றாயிருக்கிறது பொருளோடு இயைந்து. சில அதிகப்படியான வரிகளை நீக்கியிருக்கலாம். வெளியில் போகும்போது பல்லிச் சத்தம் குறித்து இரண்டு முறை வருவதையும் ஒரு நாள் என்ற வரியை நீக்கி விட்டு கால் இடறி தலையில் விழுகிறதொரு பல்லி தலை தெரிக்க ஓடுகிறோம் களியலறை நோக்கி மரண பயத்தில்இன்னும் இறுக்கமாக இருக்கும் என்று தோன்றுகிறது. மரணத்தை மறந்து- நல்ல கவிதை செறிவான வரிகளுடன் புதுக்கோணத்தில் குழந்தைகளின் பார்வையில் சொல்கிறது. பிரபஞ்சன் கூறியிருப்பது போல் நீங்கள் குழந்தை மனதுடன் நிறைய எழுதியுள்ளீர்கள். கி.ரா. சொல்லுவார் குழந்தைக் கதைகளை குழந்தையின் பாசையில் பரிமாணத்தில் பெரிய மனுச வார்த்தைகள் இல்லாமல் சொல்லணும் என்று. தமிழ் சினிமாக் குழந்தைகள் அவ்வளவு புத்திசாலித் தனமாய் அனுபவத்திற்கு அதிகமான வார்த்தைகளில் சொல்லும் போது எரிச்சலாய் இருக்கிறது எனக்கு நினைவுக்கு வரும். உங்கள் குழந்தைகள் உலகம் குழந்தைகளின் கண்கள்/வார்த்தைகளாலேயே பார்க்கப்படுவது சிறப்பு.பிணத்தை உண்பவன் சரியான கவிதை இதிலும் 'வெந்து சுருங்கிய உடலை' என்ற வரி நீக்கப்படுமானால் எப்படியிருக்கும் (இப்படிச் சொல்லலாமா தெரியவில்லை-தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்) விபத்தின் முகவரி அழகான செறிவாக உள்ள கவிதை. தலைப்பும் அற்புதம். கவிதை சிறிதாகவும் இருக்கலாம் நீளமாகவும் இருக்கலாம். ஆனால் தன்னை மறந்து படிமங்கள் வரிகளை அடுக்கிக் கொண்டே போவது அயர்ச்சியூட்டக் கூடியது ஒரு நல்ல (நீளக்) கவிதை தானே தன்னைக் கட்டமைத்துக் கொள்ளும் உங்களுடைய மணிப்பேச்சு அப்படி ஒரு கவிதை.இளம் பெண்களைதங்களின் கண்காணிப்பில்வைத்திருக்கிறதுகொலுசு மணி- நல்ல வரிகள்மாட்டுக்கு சலங்கை மணி கட்டுவது பற்றி நான் எழுதியிருக்கிற நினைவு. ஆனால் உங்கள் வரிகளில் தோன்றுகிற தோற்றுவிக்கிற வலி அடர்த்தியானது. கீதாரியின் வருகையைப் புரிந்து கொள்கிற கிடையின் மணியும் எங்கேயோ இட்டுச்செல்கிறதுஇளநீரை விற்பவன் - இன்னொரு நல்ல கவிதை. கைக்குழந்தையென தாங்கிப் பிடித்து சீவுகிறான் கடைசி இளநீரை . மரண அறிவிப்பாளன் நன்றாக வந்திருக்கிறது. கைவிட இயலாத நட்பு போன்ற கவிதையாக மறுக்கிற கவிதைகளைத் தவிர்த்திருக்கலாம். இவை என்னுடைய அன்பு கலந்த அபிப்ராயங்கள் சற்று அக்கறையும் எடுத்துக் கொள்ள உங்கள்,கரிகாலன்,செல்வி,ஞானதிரவியம் போன்றோரின் அன்பு என்னை அனுமதிக்கும் என்ற நெகிழ்வுடன்,என்றும் உங்கள், கலாப்ரியா.9842178870

No comments:

Post a Comment