தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking

Wednesday, August 15, 2018

கல்வித்துறையும் கலைஞரும்.




     கலைஞர் கருணாநிதி அவர்கள் தமிழகத்தின் முதலமைச்சராக ஐந்து முறை பதவியிலிருந்த போதெல்லாம் தமிழக மக்களுக்குப் பயனளிக்கும் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார். என்றாலும் அவர் கல்வித்துறையில் செயல்படுத்திய திட்டங்கள் பல மாநிலங்களுக்கு முன் மாதிரியானவை என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

கல்வித்துறைக்கு இரு அமைச்சகங்கள்:
     நம் நாடு விடுதலை பெற்றதிலிருந்து கல்வித் துறைக்கு என ஒரு அமைச்சகம் மட்டுமே இருந்து வந்த நிலையில் முதல் முறையாக கல்வித்துறையை இரண்டாகப்பிரித்து பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை என இரு அமைச்சகங்களை 2006 ஆம் ஆண்டு உருவாக்கிய பெருமைக் கலைஞரைச் சாரும். அதனால் கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீடு இரு மடங்காக உயர்ந்து கல்வித்துறை வளர்ச்சியடைந்தது. பள்ளிக் கல்வித்துறையின் முதலாவது அமைச்சராக தங்கம் தென்னரசு அவர்களை நியமித்து பள்ளிக்கல்வித்துறையில் பல நல்ல திட்டங்களைச் செயல்படுத்திட வழி வகுத்தார்.

தமிழ் கட்டாயப் பாடம்:
     தமிழ் நாட்டில் தமிழ் படிக்காமலேயே ஒருவர் பள்ளிக் கல்வியை முடித்துவிடலாம் என்ற நிலையை மாற்றி 2006 ஆம் ஆண்டில் தமிழ்நாடு தமிழ் கற்கும் சட்டம் இயற்றப்பட்டு தமிழ்நாட்டில் அனைத்துப் பள்ளிகளிலும் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை தமிழ் காட்டாயப் பாடமாக்கப்பட்டதும் கலஞரின் முயற்சியால் விளைந்ததுதான்.

சமச்சீர் கல்வி:
     தமிழ்நாட்டில் மாநில அரசு கல்வி, மெட்ரிகுலேசன், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல் என்ற நான்கு விதமான கல்வி முறை நடைமுறையில் இருந்து வந்தது.  ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பாட திட்டம், இது கல்வியில் ஏற்றத் தாழ்வுகளுக்கு வழி வகுப்பதாகவே அமைந்தது. வசதிபடைத்தவர்களுக்கு ஒரு கல்வி எழ்ழைகளுக்கு ஒரு கல்வி என்ற நிலையை மாற்றி அனைவருக்கும் ஒரே சீரான கல்வி கிடைக்க வகை செய்யும் பொருட்டு தமிழகத்தில் சமச்சீர் கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்காக தமிழ்நாடு சமச்சீர் பள்ளிக் கல்வி முறைச் சட்டம் 2010 இயற்றப்பட்டு 2011 ஆம் ஆண்டு நடைமுறைப் படுத்தப்பட்டது. 

நுழைவுத்தேர்வுகள் ரத்து:
      பொறியியல், மருத்துவம் போன்ற உயர் கல்வி பயில விரும்பும் மாணவர்கள் அதற்கு உரிய கல்வித்தகுதியைப் பெற்றிருந்தாலும் பொது நுழைவுத்தேர்வு எழுதி அதில் உயர்ந்த மதிப்பெண் பெற்றால் மட்டுமே சேர்க்கை கிடைக்கும் என்ற நிலை இருந்தது. இதனால் கிராமப்புறத்திலிருந்து படித்து நல்ல மதிப்பெண் பெற்ற தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டது. இந்த நிலை 1984 முதல் 2006 ஆம் ஆண்டு வரை அதாவது 23 ஆண்டுகள் தொடர்ந்தது. இதனை மாற்ற விரும்பிய கலைஞர் 2006 ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் புதிய சட்டத்தை நிறைவேற்றி அதற்குக் குடியரசுத்தலைவரின் ஒப்புதலையும் பெற்று நுழைவுத்தேர்வை ஒழித்தார். அதனால் பல ஏழை எளிய குடும்பத்திலிருந்து மருத்துவர்கள் உருவாக வாய்ப்பு கிடைத்தது.

கட்டணக் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி:
     தனியார் பள்ளிகளும் கல்லூரிகளும் தங்கள் விருப்பம்போல் கல்விக்கட்டணம் என்ற பெயரில் பெற்றோர்களிடம் நிகழ்த்திய கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைத்தவர் கலைஞர். தமிழகத்திலுள்ள தனியார் பள்ளிகளும் கல்லூரிகளும் கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்தும் சட்டம் 2009 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. அதன் படி ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டு பள்ளிகளுக்கான கட்டணங்கள் முறைப் படுத்தப்பட்டன.


மாவட்டந்தோறும் மருத்துவக் கல்லூரி:
      பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்ப மருத்துவர்களின் தேவை அதிகரித்துள்ள நிலையில் மருத்துவர்களை உருவாக்கும் மருத்துவக் கல்லூரிகளை அதிக அளவில் நிறுவ வேண்டியது காலத்தின் கட்டாயம் என்பதை உணர்ந்த கலைஞர் தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டத் தலை நகரங்களிலும் மருத்துவக்கல்லூரிகளைத் தொடங்குவதற்கான முன் முயற்சியை மேற்கொண்டவர்.


பொறியியல் மற்றும் கலைக் கல்லூரிகள்:
      அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் வகையில் மாவட்டங்களில் பல்கலைக் கழக பொறியியல் கல்லூரிகளை 12 இடங்களில் நிறுவினார். அதுபோலவே 14 கலை அறிவியல் கல்லூரிகளையும் நிறுவினார்.

பல்கலைக் கழகங்களை உருவாக்கியவர்:
     தமிழகத்தின் அனைத்து மாவட்ட இளைஞர்களுக்கும் உயர்கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பல்கலைக் கழகங்கள் இல்லாத பகுதிகளில் புதிதாகப் பல்கலைக் கழகங்களை உருவாக்கியவர் கலைஞர். 1990 ஆம் ஆண்டு திருநெல்வேலியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தையும், 1997 ஆம் ஆண்டு சேலத்தில் பெரியார் பல்கலைக் கழ்கத்தையும் உருவாக்கினார்.

நூலகத்துறையில் மாற்றங்கள்:
     பள்ளிக் கல்வித்துறையின் ஒரு பிரிவான நூலகத்துறையிலும் பல புதுமைகளையும் ஆக்கப்பூர்வமான பணிகளையும் செய்தவர் கலைஞர். நூலகங்களுக்கு பதிப்பாளர்களிடமிருந்து 750 புத்தகங்கள் மட்டுமே வாங்கிய நிலை இருந்தது. கலைஞர் 1000 நூல்கள் வாங்கிட வழி வகுத்தவர். மேலும் ஆசியாவின் மிகப்பெரிய நூலகமாகத் திகழும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை கோட்டூர்புறத்தில் உருவாக்கி இன்று போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு அரிய வாய்ப்பினை வழங்கியதோடு அறிவு சார் கருத்தரங்குகள் பயிலரங்குகள் நடைபெற ஓர் சிறந்த இடமாகவும் திகழ்வதற்கு அடிகோலியவர். வாசகர்கள் தம்மிடம் உள்ள சொந்த நூல்களையும் எடுத்துச் சென்று படிக்கவும் அந்த நூலக்த்தில் வாய்ப்பளிக்கப்படுகிறது.

பதிப்பாளர் வாரியம்:
      பதிப்புத் தொழில் நலிவடைந்து விடாமல் காக்கும் பொருட்டு அத்தொழிலில் ஈடுபடும் பதிப்பாளர்கள் விற்பனையாளர்கள் மற்றும் பணியாளர்களை உள்ளடக்கிய நல வாரியம் உருவக்கியவரும் கலைஞரே. அவ்வாரியத்தின் வாயிலாக உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு நிதி உதவிகள் அளிக்கப்படுகின்றன.
நன்றி: குங்குமச்சிமிழ்
http://kungumam.co.in/CArticalinnerdetail.aspx?id=3592&id1=93&issue=20180816


Tuesday, August 14, 2018

தேசிய நூலகர் தினம் உருவானது எப்படி?




தேசிய நூலகர் தினம் உருவானது எப்படி?

இரத்தின புகழேந்தி
 
சென்னையிலுள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஒரு நூலைத் தேடி எடுக்கவேண்டுமெனில் ஒவ்வொரு தளத்திலும் நுழைவாயிலில் உள்ள கணினியில் நூலின் பெயரையோ ஆசிரியர் பெயரையோ தட்டச்சு செய்தால் எந்த அலமாரியில் எந்த இடத்தில் அந்த நூல் உள்ளது என்பதை கணினியில் பார்த்து எளிதாக எவ்வித அலைச்சலும் இன்றி எடுத்து வரலாம். இது தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் பயனால் விளைந்த நன்மை.
     ஆனால் மற்ற நூலகங்களில் நூல்களை இவ்வளவு எளிதாக நாம் தேடி எடுத்துவிட இயலாது. ஒரு நூலைத் தேடி எடுப்பதற்குள் களைப்புதான் மிஞ்சும். நூல்களை அப்படி அடுக்கி வைத்திருப்பார்கள்.
     நூலகங்களில் நூல்களை எவ்வாறு அடுக்கி வைப்பது என்பது மிகப்பெரிய சவாலான பணிதான். அதற்கு ஒரு வழிமுறையை நம் நாட்டுக்கு வழங்கியவர் ஒரு தமிழர் என்பதில் நமக்குப் பெருமைதான். அந்த பெருமைக்குரியவர்தான் இந்திய நூலகத் தந்தை என்று போற்றப்படும் சீர்காழி ராமாமிர்தம் ரங்கநாதன்.

எஸ்.ஆர்.ரங்கநாதன்:
     இவர் சீர்காழிக்கு அருகிலுள்ள வேதாந்தபுரம் என்னும் ஊரில் 1892 ஆம் ஆண்டு ஆகஸ்டு 12 ஆம் நாள் ராமாமிர்தம் சீத்தாலட்சுமி இணையருக்கு மகனாகப் பிறந்தார். பள்ளிக் கல்வியை சீர்காழியிலும் கல்லூரிக் கல்வியை சென்னையிலும் முடித்து கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். அதன் பிறகு சென்னை மாநிலக்கல்லூரியில் கணிதவியல் துறையில் உதவிப்பேராசிரியராகப் பணியாற்றினார். அவரது ஊதியம் குடும்பம் நடத்த போதுமானதாக இல்லை என்பதால்

முதல் நூலகர்: 
1924ல் சென்னைப் பல்கலைக்கழக நூலகத்தில் முதல் நூலகராக பணியில் சேர்ந்தார். ஊதியம் அதிகம் என்றாலும் கற்பித்தல் பணியில் கிடைத்த மன நிறைவு நூலகர் பணியில் இல்லை. அதனால் அப்பணி அவரைக் கவரவில்லை. எனினும் மாநிலக்கல்லூரி முதல்வரின் ஆலோசனைப் படி, லண்டன் சென்று, நூலக அறிவியலில் பல்வேறு நுணுக்கங்களைக் கற்றார்.

அங்கிருந்து நாடு திரும்பியதும், பல்கலைக்கழக நூலகத்தை சீரமைக்கத் தொடங்கினார். அதனை அடுத்து சென்னை நூலகச் சங்கத்தை நிறுவினார். இது நூலக இயக்கத்தின் சின்னமாக மாறியது. அதன் அமைப்பு செயலாளராக 1928 முதல் 1945 வரை செயல்பட்டார்.

நூலகத்துறைக்கு ஆற்றிய பணிகள்:
     1948 இல் இவரது முயற்சியால்தான் சென்னை பொது நூலகச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தின்படிதான் உள்ளாட்சி நிறுவனங்கள் வசூல் செய்யும் சொத்து வரியில் 10 சதவீதம் நூலகத்துறைக்கு வழங்கப்படுகிறது.

     இந்திய நூலகத் துறைக்கு அவர் அளித்த கொடைதான் கோலன் பகுப்பு முறை. நூல்களைப் பொருள்வாரியாகப் பிரித்து அடுக்குவதற்கான அறிவியல்பூர்வமான அணுகுமுறையே கோலன் பகுப்பு முறை எனப்படுகிறது. இந்த பகுப்பு முறை இவரால் ஆராய்ந்து கண்டுப்பிடிக்கப்பட்டதாகும். இது நூலகத்துறையைச் சார்ந்த பல மேனாட்டு அறிஞர்களால் ஒப்புக்கொள்ளப்பட்டது. அதுவரை கையாளப்பட்டு வந்த பகுப்பு முறையைக் காட்டிலும் கோலன் பகுப்பு முறை மாறுபட்டதாகவும், தனித்தன்மை வாய்ந்ததாகவும் இருந்தது. இந்தியாவில் மட்டுமல்லாது பல்வேறு நாடுகளில் உள்ள நூலகங்களும் இக்கோலன் பகுப்பு முறையைத் தான் இன்றும் பயன்படுத்துகின்றன.

நூலக அறிவியல் துறைக்கு வித்திட்டவர்:  
நூலக அறிவியல் பள்ளி என்ற அமைப்பைத் தொடங்கி, 15 ஆண்டுகள் அதன் இயக்குநராகப் பணியாற்றினார். தன் சேமிப்பு முழுவதையும் அதற்காக வழங்கினார்.
1945 இல் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு பனாரஸ் பல்கலைக் கழகத்தில் நூலக அமைப்பை மேம்படுத்தும் பணியில் தன்னை அற்பணித்துக்கொண்டு 2 ஆண்டுகள் தனி ஒருவராக அங்கிருந்த ஒரு லட்சம் நூல்களை வகைப்படுத்தினார். மேலும் அங்கு நூலக அறிவியல் பட்டயப்படிப்பை அறிமுகப்படுத்தி அவரே அதற்கான ஆசிரியராகவும் செயல்பட்டார்.
     அதன் பிறகு டெல்லி பல்கலைக்கழக அழைப்பை ஏற்று அங்கு சென்று நூலக் அறிவியல் பாடம் கற்பித்தார். அவர் அங்கு பணியாற்றியபோதுதான் நூலக அறிவியலில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டப் படிப்புகள் தொடங்கப் பட்டன,

     இவர் சிறந்த எழுத்தாளரும்கூட. நூலக நிர்வாகம் உள்ளிட்டவை தொடர்பாக 60-க்கு மேற்பட்ட நூல்கள், 2,000-க்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதியுள்ளார். பல நாடுகளுக்குச் சென்று நூலகம் குறித்து உரையாற்றினார். கடுமையாகப் பாடுபட்டு நூலகம் மற்றும் தகவல் அறிவியலுக்கான புதிய, அடிப்படைக் கோட்பாடுகளை நிறுவினார்.
பனாரஸ் பல்கலைகழகத்தில் நூலகராகவும், தில்லி நூலகத்துறையின்  தலைவராகவும் பணியாற்றினார். தில்லியில் உள்ள நூலகத் தரக் குழுவின் தலைவராகவும் இருந்தார்.

பதம்ஸ்ரீ ரங்கநாதன்:
1957 ஆம் ஆண்டு இந்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது அளித்து சிறப்பித்தது

நூலகத்துறைக்கு ஆற்றியுள்ள அளப்பரிய பங்களிப்புக்காக எஸ்.ஆர் ரங்கநாதன் “இந்திய நூலகத் தந்தை எனப் போற்றப்படுகிறார். இவருடைய பிறந்த நாளான ஆகஸ்ட் 12ம் நாளை நூலகர் தினமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. சிறந்த நூலகர்களுக்கு நல் நூலகர் விருதும் இந்த நாளில் வழங்கப்படுகிறது.

     நூலக்த்தைச் சிறப்பாகப் பயன்படுத்தி ஒரு அறிவார்ந்த சமூகம் உருவாகவேண்டும் என்பதற்கான விழிப்பு உணர்வு மக்களிடம் ஏறபடுவதற்கும் இந்த நாள் பயன்படுகிறது.

நன்றி: தமிழ்முரசு
http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=426128

Sunday, August 12, 2018

கடலூர் கலைத்திருவிழா2018




















கடலூர் கலைத்திருவிழா2018
***
இன்று கடலூரில் நடைபெற்ற மாபெரும் ஓவியப்போட்டி நிறைவு விழாவில் பங்கேற்றது மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வு. ஓவியப்போட்டி என்பதை விட கலைத்திருவிழா என்றுதான் சொல்லவேண்டும். ஓவியக்கலைஞர் ஏ.ஆர். ( கலைப் புரட்சி என்பதன் ஆங்கிலச் சுருக்கம்) ஓவியப் பயிற்சிக் கூட நிறுவனர் ராஜசேகர் 
அண்ணாமலைப் பல்கலைக் கழக வேளாண் துறை பேராசிரியர் சிவசக்திவேலன், குழந்தைகள் நல வல்லுநர் மருத்துவர் இளந்திரையன் ( இவர் குழந்தை மருத்துவர் நமசிவாயம் அவர்களின் உறவினர்) வருமான வரித்துறை அலுவலர் செங்குட்டுவன் என வேவ்வேறு துறை சார்ந்த நண்பர்கள் ஒன்றிணைந்து இதுபோன்ற ஒரு விழாவினை மூன்று ஆண்டுகளாக சிறப்பாக நிகழ்த்தி வருவது பிரமிக்க வைக்கிறது. 700 மாணவர்கள் அவர்களின் பெற்றோர்கள் என 1000 பேர் ஒன்றுகூடிய ஒரு திருவிழாவாக நடைபெற்றது. மணற்சிறபம் அட்டைச் சிற்பம் நெகிழி சிற்பம் என ஒவ்வொரு சிற்பமும் காண்போரை சிந்திக்க வைத்தது. குழந்தைகளின் நிம்மதியை மின்னணு சாதனங்கள் எவ்வாறு குலைக்கின்றன என்பதை மணற்சிறபம் உணர்த்தியது. மடியில் உரங்கவேண்டிய குழந்தை மடிக்கணினியில் உரங்கும் அவலத்தை உரத்துச் சொன்னது அருளியின் மணற்சிற்பம். ஒற்றை மரக் கன்றை காப்பாற்ற மழை வராதா என ஏக்கத்தோடு வானத்தை நோக்கும் உயிர்வளி உருளையை முதுகில் சுமந்திருக்கும் மனிதனை அட்டைச் சிற்பமாக அடுத்த நூற்றாண்டுக்கே நம்மை அழைத்துச் செல்லும்படி அமைத்திருந்தார் ஆகாஷ். நெகிழி தண்ணீர் பாட்டில்களால் உருவான நெகிழி மரம் நெஞ்சை பதைக்க வைத்தது. தினேஷின் இந்த முயற்சி பார்ப்போர் மனதில் நிச்சயம் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்தும். அதற்கு பொருத்தமான கவிதைகளை ஆயுதமொழியன் சீனிவாசன் ஆகிய மாணவர்கள் எழுதி காட்சிப்படுத்தியதும் அருமை.
இந்த நிகழ்வில் கூடுதல் சிறப்பு மரபுவழி சுடுமண் சிற்பக்கலைஞர் யுனெஸ்கோ விருதுபெற்ற சிறப்புக்குறிய வில்லியனூர் முனுசாமி அவர்களின் சிற்பக் காட்சியும் பயிலரங்கும். குழந்தைகளோடு குழந்தையாக அவர்களுக்கு களிமண் சிற்பங்களுக்கான பயிற்சி வழங்கி வீட்டில் செய்து பார்க்க களிமண்ணையும் வழங்கினார். அவரின் வில்லியனூர் பட்டறைக்கு குடியரசு முன்னாள் தலைவர் மேதகு அப்துல்கலாம் அவர்களும் புதுவை துணை நிலை ஆளுநர் மேதகு கிரண்பேடி அவர்களும் சென்று அவரோடு உரையாடி உள்ளனர். சுடுமண் சிற்பங்களோடு அன்றாட பயன்பாட்டுக்கான சுடுமண் கைவினைப் பொருள்களையும் மக்களுக்கு வழங்கி வருவது கூடுதல் சிறப்பு.
போட்டிக்கு நடுவர்களாக ஓவியக்கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் வந்திருந்து பரிசுக்கு உரிய ஓவியங்களைத் தேர்வு செய்தனர். கலந்துகொண்ட எல்லாருக்கும் பரிசளித்திருக்க வேண்டும். ஆனால் அது இயலாது என்பதால் வேறு வழியின்றி ஒரு சில ஓவியங்களை மட்டுமே தேர்வுசெய்தோம் என நடுவர்களில் ஒருவர் கூறியது பார்வையாளர்களிடம் ஆரவாரத்தை ஏற்படுத்தியது.
இந்த ஏ.ஆர். ஓவியப் பயிற்சிப் பட்டறை ஒரு ஓவியக்கல்லூரியாக பரிணமிக்க வேண்டும் என்கிற என் அவாவை வெளிப்படுத்தி நண்பர்களிடமிருந்து விடைபெற்றேன்.
என் அழைப்பை ஏற்று என்னுடன் கடலூர் பயணத்தில் உறுதுணையாக வந்த நண்பர் தணிக்கையாளர் ராமச்சந்திரன் அவர்களோடு நிகழ்வின் சிறப்புகளைப் பேசிக்கொண்டே வந்தது பயணக் களைப்பைப் போக்கியது.
இந்த நாளை இனிய நாளாக்கிய நண்பர்களுக்கு நன்றி.
விடுமுறை நாளிலும் தங்கள் பள்ளி மாணவர்களைத் திரளாகப் பங்கேற்கச் செய்த திருவள்ளுவர் பள்ளி மற்றும் எம்.ஜி.ஆர்.நகர் பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டுகள்.

நன்றி: படங்கள் - பேராசிரியர் சிவசக்திவேலன்.

Sunday, July 22, 2018

உள்ளிழுக்கும் கவிதை




     கவிதை வாசிப்பு என்பதே இன்று அரசியலாகியிருக்கிறது. யாருடைய கவிதைகளை நாம் வாசிக்கவேண்டும் என்று நமக்கு கட்டளையிடும் விதமாகவே இன்றைய இதழ்கள் நம் மீது சிலரது கவிதைகளைத் திணிக்கின்றன. நாமும் அவற்றை வாசிக்கவேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளாகிறோம். இன்று இடைநிலை இதழ்களால் சிறு பத்திரிகைகளின் மூச்சுத் திணறுகிறது.. நாம் விரும்பும் கவிதைகளைத் தேடி வாசிப்பதற்கான வாய்ப்புகள் குறைந்துள்ளன. வாசகர்களிடம் நிலவும் இத்தகைய தேக்க நிலையை, சமூக ஊடகங்கள் சரிசெய்ய முயல்கின்றன.
     இப்படி ஒரு சூழலில் கவிதை நூல் வெளியிடுவது என்பதே மிகப்பெரிய சவால். அப்படியே வெளியிட்டாலும் அவற்றை வாசகர்களிடம் கொண்டு சேர்ப்பது அதைவிட சவாலாகும். அந்த பணியை துணிவோடு செய்திருக்கும் நம் கவிஞர் சூர்யநிலா அவர்களுக்கு வாழ்த்துகள்.
     தொடர்ந்து மிகுந்த ஆயாசங்களுக்கிடையிலும் இயங்கி வருபவர் கவிஞர். இவரது அண்மை வரவு, ”புனலில் மிதக்கும் முகம்” இக்கவிதை நூலில் என்னைக்கவர்ந்த இரு கவிதைகளில் ஒன்றை மட்டும் சக வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
     ஒரு நூலை நாம் தொடர்ந்து வாசிக்கவேண்டுமா என்பதை முதல் பத்து வரிகளே தீர்மானிக்கின்றன. நான் பல முக்கியமான நூல்களை இன்னும் வாசிக்காமலிருப்பதற்கும் அதுவே காரணம். எத்தனை முக்கியமான எழுத்தாளராக இருந்தாலும் முதல் பத்தியிலேயே என்னைக் கவரவேண்டும் இல்லையெனில் அந்த நூலை நான் அவ்வளவு சீக்கிரம் வாசிப்பதில்லை. இந்த என் மனநிலைக்கு சரியான தொகுப்பாக அமைந்துள்ளது இந்த தொகுப்பு.
     சமர் என்னும் முதல் கவிதையே என்னை மிகவும் கவர்ந்த கவிதை. இந்த ஒரு கவிதையே போதும் இந்த தொகுப்பைப் படிக்க நம்மை உள்ளிழுத்துச் செல்லும் திறவுகோலாக அமைத்துள்ளது. நம் கற்பனை செய்யும், கனவுகாணும் உலகம் அழகாக இருக்கிறது. ஆனால் எதேர்த்தமோ அதற்கு நேர்மாறாக உள்ளது. எல்லோரும் இன்னாட்டு மன்னர் என்றார்களே ஆனால் நிச வாழ்க்கை அப்படியா இருக்கிறது. ஒவ்வொன்றுக்கும் போராடத்தானே வேண்டியிருக்கிறது. அன்றாட வாக்கையே போராட்டமாக அமைந்த ஒரு எளிய மனிதன் தனியாக எத்தனை போராட்டங்களுக்கு வாளைச் சுழற்ற முடியும். இயலாது என்பதற்காக விட்டுவிட முடியுமா? போராடி வாழ்ந்தாகத்தானே வேண்டியிருக்கிறது. நம் வாழ்க்கைப் போராட்டங்களை பக்கம் பக்கமாக எழுதலாம். ஆனால் அவையெல்லாம் கவிதையாகிவிடாது. கவிதைக்கு அழகு சுருங்கச் சொல்லுதலாயிற்றே. இத்தகையதொரு சாமான்யனின் போராட்ட வாழ்க்கையைத்தான் இந்த முதல் கவிதை சுருங்கச் சொல்கிறது. அதனூடே வாசகனின் கற்பனைகளையும் விரிவடையச் செய்கிறது.
    
     பெரும் சேனைகளின் முன்னே
     கம்பீரமாக நடந்தேன்
என்று தொடங்கும் இரண்டு வரிகள் பல சிந்தனைகளை வாசகரிடம் கிளரிவிடுகின்றன. அரசன் ஒருவன் தன் படைகள் பின் தொடர கம்பீரமாக நடந்து செல்வதாக ஒரு காட்சி சட்டென தோன்றி மறைகிறது. தமிழர் மரபு என்பது உறவுகள் சூழ வாழ்ந்தது. நாட்டுப்புற வழக்காற்றில் சேனை என்பது உறவுகளைக் குறிக்கப் பயனபடுத்தப்படும் ஒரு சொல்லாகும். இப்படி உறவுகளோடு வாழ்ந்த பழய வாழ்க்கையை நினைத்துப் பார்க்கவும் இவ்விரு அடிகள் வாசகரின் கற்பனையை விரிக்கும் புள்ளிகளாகவும் உள்ளன. நம் நாட்டின் தற்கால அரசனையும் நாம் இங்கே பொருத்திப் பர்த்துக்கொள்ளலாம்
     ”பல்லக்கு கொண்டு வரவா?”
     படைத்தலைவன்
     பணிந்து கேட்டான்
அடுத்ததாக இப்படி நகரும் கவிதை மன்னனைப் பணியும் படைத்தலைவனை ஒரு குறியீடாகக் கொண்டுள்ளது. மோடியிடம் பணியும் எடப்பாடியும் நம் கண்முன் வந்து போவதைத் தவிர்க்க இயலவில்லை. படை பலத்தோடு பணபலமும் பெருகிவிட்டால் உறவுகளும் இப்படிப் பணிவது இயல்பாகிவிட்டது. பணிவு என்பது அதிகாரத்துக்கு அடிபணிவது மட்டுமில்லை. இவையெல்லாம் கவிஞரின் கனவில் நடப்பவை.
     மறுதலித்து நடந்தேன்
     கவச உடைகள்
     கனத்துத் தொங்கின
என்னும் அடுத்த பத்தியும் கனவு உலகில்தான். மன்னனுக்கு கவச உடைகள் கனக்கின்றன கூலிகளுக்கோ சாதாரண உடைகளே கனக்கின்றன. அதனால்தான் வெற்றுடம்புடன் உழைக்கிறார்களோ?  பல்லக்கை மறுதலித்து நடப்பது ஏனோ? என்னும் வினாவும் வாசகனுக்கு வருவதில் வியப்பில்லை.
     ஆயிரக்கணக்கான சிப்பாய்கள் பின் தொடர மன்னர் போருக்கு ஆயத்தமாகிறார் அதற்குள் இல்லத்தரசியின் குரல் கனவைக் கலைக்கிறது. கவிஞர்கள் எப்போதும் கற்பனை உலகில் வாழ்பவர்கள். எதார்த்த உலகை விட்டு அவ்வப்போது வெளியேறி விடுவார்கள் அவர்களை இப்படி ஏதேனும் ஒரு அன்றாட நிகழ்வுதான் மீண்டும் எதார்த்தத்தை நோக்கி இழுத்து வருகிறது.
     பால் வாங்கி வரலையா
     என்ற விளித்தலில்
     விழித்தேன்
என்றுதான் கவிஞர் குறிப்பிடுகிறார். அது யாருடைய விளித்தல் என்பது படிக்கும் குழந்தைக்குக்கூட தெரிந்திருக்கும். அந்த மந்திரக் குரல்தான் கவிஞரை கனவுலகிலிருந்து அசல் உலகத்திற்கு அழைத்து வருகிறது.
அடுத்த வரியிலேயே ”ஆரம்பமாகிவிட்டது சமர்”. கனவில் சென்றதோ வேறு ஒரு போருக்கு அது உயர்ந்த நோக்கமுடைய போராகவும் இருக்கலாம். எதிரிகளை வீழ்த்தும் போர், நாட்டைப் பிடிக்கும் போர், அணு ஆயுதங்களை அழிக்கும் போர், சொந்த நாட்டு மக்களையே சுட்டுக்கொல்லும் போர், போர் அறங்களை மீறி ஆயுதங்களை ஏவும் போர் என ஏதோ ஒரு போருக்கு செல்ல கனவுகண்ட மன்னன் ஒருவனை வாழ்க்கை பால் வாங்கி வருவதற்கு விரட்டுகிறது.
     சுற்றம் சூழ வாழ்ந்த மனிதன் தனித்து விடப்படுகிறான். என் சேனைகள் எங்கே என கேவி அழும் மன்னனாக இனி அவன் தனியாகத்தான் வாளைச் சுழற்ற வேண்டும்.
                ஆரம்பமாகிவிட்டது
                சமர்
                இனி
                நான் தனியாகத்தான்
                வாளைச் சுழற்ற வேண்டும்
என்னும் முடிவு நம் நெஞ்சைப் பிசைகிறது. இது யார் செய்த குற்றம். இன்றைய பொருளாதார சூழல் விலை ஏற்றம் என ஒவ்வொரு நாளும் போராட்டமாகவே சென்றால் என்னதான் செய்ய  இயலும் தனி மனிதன்.
ஒரு பெரும் கூட்டத்திலிருந்து தனித்து விடப்பட்ட செம்மரி ஆட்டைப்போல் மனிதர்கள் அன்றாட வாழ்க்கைப் போராட்டத்தில் தனித்து வாள் சுழற்றும் சோகம் மாறுமா? என்ற ஏக்கத்தை நம்மிடம் ஏற்படுத்திவிடுகிறது இக்கவிதை.
புனலில் மிதக்கும் முகம்
சூர்யநிலா
எழுத்துக்களம் வெளியீடு 2017
22/07/18
மணிமுத்தாறு இலக்கியவட்டம் நிகழ்த்திய கவிஞர் சூர்யநிலாவின் புனலில் மிதக்கும் முகம் நூல் திறனாய்வுக் கூட்டத்தில் வாசித்த விமர்சனக் கட்டுரை.

Monday, April 30, 2018

மே நாள் சிந்தனை




     பல மணி நேர உழைப்புச்சுரண்டலுக்கு எதிராக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் 18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் போராடி 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பெற்ற உரிமைதான் 8 மணி நேர வேலை முறை.
8 மணி நேர வேலை 8 மணிநேர ஓய்வு 8 மணி நேர உறக்கம் என ஒரு நாள் பொழுதை பகுத்துக்கொண்ட வரலற்றுப் பின்னணி இந்த தொழிலாளர் நாளுக்கு உண்டு.
உடல் உழைப்பும் மூளை உழைப்பும்:
     நாம் உழைப்பு என்பதை உடலுழைப்பு என்று மட்டும் நினைத்துவிடக்கூடாது. மூளை உழைப்பும் உடலுழைப்புக்கு நிகரானதே. ஆனால் இந்த இரு வகை உழைப்புகளும் சமமாக பார்க்கப்படுவதில்லை. உடல் உழைப்புக்கு குறைவான ஊதியமும் மூளை உழைப்புக்கு அதிக ஊதியமும் வழங்குவது என்பது தொழில் துறையின் ஏற்றத்தாழ்வாகப் பார்க்கப்படுகிறது.
மறைமுக உழைப்புச் சுரண்டல்:
     இப்போது அரசு மற்றும் தனியார் துறைகளில் 8 மணி நேர வேலைமுறை என்பது நடைமுறையில் இருப்பினும் மறைமுக உழைப்புச்சுரண்டல் இன்றும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. பொதுத்துறை நிறுவனங்களில் ஆள் குறைப்பு செய்து அங்கு பணியாற்றும் தொழிலாளர்களுக்கு வேலைப்பளுவை அதிகமாக்கி மன உளைச்சலுக்கு ஆளாக்குகின்றனர்.
     வேறு சில தனியார் நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு இலக்கு நிர்ணயம் செய்து பல மணிநேர உழைப்புச்சுரண்டலை மறைமுகமாக நிகழ்த்துகின்றனர்.
குறிப்பாக மென்பொருள் நிறுவனங்கள் இளைஞர்களின் உழைப்பைத் திருடிக் கொழுக்கின்றன. ஒரு நாளைக்கு 10 மணிநேரம் கட்டாயம் வேலைபார்த்தாகவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர். அதற்கேற்ற ஊதியமும் அவர்களுக்கு வழங்கப்படுவதில்லை.
துப்புறவுத் தொழிலாளர் நிலை:
     துப்புறவுத் தொழிலாளர்களின் நிலையோ இன்னும் பரிதாபம். அவர்களுக்கு முறையான பாதுகாப்புக் கருவிகள் வழங்கப்படுவதில்லை. சமுதாயத்தில் மற்ற தொழிலாளர்களுக்கு இணையான மறியாதை கிடைப்பதில்லை. அவர்களை அலட்சியப்படுத்தும் மனப்போக்கே சமூகத்தில் காணப்படுகிறது. வங்கிக்கு ஊதியம் பெற வரும் துப்புரவுத் தொழிலாளர்கள் மற்ற வாடிக்கையாளர்களைப்போல் மறியாதையுடன் நடத்தப்படுவதில்லை. பொது மக்களும் அவர்க்ளைப்பார்க்கும் பார்வையே அவர்களை அவமதிப்பதாக உள்ளது. இன்னும் மனிதக்கழிவுகளை மனிதர்களே அகற்றும் இழிநிலைகூட ஒழிக்கப்படவில்லை.  
வேளாண் தொழிலாளர்கள்:
     இந்தியா விவசாய நாடு என்றாலும் விவ்சாயத்தை ஒரு தொழிலாக அங்கீகரிக்கவில்லை. அரசு சார்ந்த பண்ணைகளிலும்கூட நாடு முழுவதும் ஒரே மாதிர்யான ஊதியம் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவதில்லை. ஊதியத்தில் பால் பாகுபாடு இந்தத்துறையில்மட்டுமே இன்றளவும் காணப்படுகிறது. ஆணுக்கு ஒரு ஊதியம் பெண்ணுக்கு ஒரு ஊதியம் வழங்கப்படுகிறது இந்த அநீதி இன்னும் களையப்படவில்லை.பசுமைப்புரட்சி என்ற பெயரில் இயந்திர்மயமாக்கல் நிகழ்வு வெகுவாக தொழிலாளர்களின் வருமானத்தை பாதித்துள்ளது.
நெசவுத் தொழிலாளர்கள்:
     உழவும் நெசவும் இரு கண்களைப்போன்ற தொழில்கள் என்றாலும் இவ்விரு தொழில்களுமே இன்று நலிவடைந்து வருகின்றன. நெசவாளர்களுக்கு கஞ்சித்தொட்டியும் விவசாயிகளுக்கு எலிக்கரியும் பரிசளித்த பெருமைமிகு நாடு நம்முடையது. நெசவாளர்களின் வாழ்க்கை நிலையும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. ஒரு வேட்டியோ புடவையோ நெய்யும் நெசவாளியின் கூலியை விட குறைவான விலைக்கு விற்கவேண்டிய அவலமே கைத்தறி நெசவுக்கு உள்ளது.
கட்டடத் தொழிலாளர்கள்:
     உலகின் எல்லா நாடுகளிலும் இன்று முன்னணியில் இருக்கும் துறை கட்டுமானத்துறை எனலாம். அதனால் பல தொழிலாளர்கள் வாழ்கின்றனர் என்றாலும் இந்தத் துறையிலும் ஆண்களுக்கும் பெண்களுக்கும், ஊதிய ஏற்றத்தாழ்வு மலிந்து கிடக்கிறது. மாநகரங்களில் வானுயர்ந்த கட்டடங்களில் உயிரைப் பணயம் வைத்தே பணிசெய்கின்றனர். இதனால் அதிக அளவு தொழிலாளர்கள் நாட்டுக்குள்ளும் நாட்டுக்கு வெளியிலும் இடம்பெயர்கின்றனர். இந்த இடப்பெயர்ச்சியால் ஒவ்வொரு சமுதாயத்திலும் விரும்பத் தகாத பல பண்பாட்டுச் சீரழிவுகள் நடைபெறுகின்றன.தொழிலாளர்களின் இடப்பெயர்ச்சி அக்குடும்பச் சிறுவர்களை அவர்களின் எதிர்காலத்தை வெகுவாக பாதிக்கிறது.
இல்லத்தரசிகளின் இன்னல்:
     அலுவலகங்களிலும் தொழிலகங்களிலும் பணியாற்றும் தொழிலாளர்கள் அடையும் துன்பங்கள் வெளி உலகம் அறிந்தவை. மேலும் அவர்களுக்கென்று சங்கங்கள் உண்டு. அவர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் சக தொழிலாளர்கள் ஒன்றிணைது போராடும் வாய்ப்பாவது உள்ளது. ஆனால் இல்லத்தரசிகளின் பிரச்சனைகள் தனி ரகம். அவர்களுக்கென்று 8 மணி நேர வேலைமுறை கிடையாது. அதற்கென தனி ஊதியமும் வழங்குவதில்லை அவர்களின் உழைப்பு தொழிலாகக் கருதப்படுவதுகூட இல்லை. இப்படியான உழைப்புச்சுரண்டல் வேறு எந்தத் துறையிலும் நிகழ்வதில்லை. இதில் என்ன கொடுமை என்றால் இதைப்பற்றியெல்லாம் அவர்கள் சிந்திப்பதல்லை என்பதுதான்.
இந்த தொழிலாளர் தினத்தில் இல்லத்தரசிகளின் பணிகளைப்போற்றுவோம். அவர்களுக்கு உரிய மறியாதையை அளித்து மற்ற பணிகளுக்கு நிகரான பணியாக அங்கீகரிப்போம்.
நன்றி: தமிழ் முரசு மற்றும் நண்பர் நாகமணி


Thursday, March 22, 2018

அம்பானி வளர்வதேன்? அரசாங்கம் நலிவதேன்?


அம்பானி வளர்வதேன்? அரசாங்கம் நலிவதேன்?
மோடி வித்தையால். மோடி வித்தையால்.
திருவாளர் அம்பானி அவர்கள் ஜியோவை இலவசமாகக் கொடுத்தபோதே வாங்க மறுத்தவர்களில் நானும் ஒருவன். நம் பி.எஸ்.என்.எல்.ஐ வாழவைப்பது நம் கடமை என்றிருந்தேன். இலவசக்காலம் முடிந்து ஒரு நாளைக்கு  ஒரு ஜி.பி. மூன்று மாதத்திற்கு 500 ரூபாய் என்று அறிவித்து சில நாட்களிலேயே நம் தேசிய இணைய இணைப்பு திக்கித்திணறியது. அப்போதும் பொறுத்துக்கொண்டேன். மாதங்கள் சில உருண்டன மாதம் ரூ.1250 பில் வந்துகொண்டே இருந்தது ஆனாலும் இணையத்தைப் பயன்படுத்த இயலவில்லை. அலுவலகத்தைத் தொடர்பு கொண்டபோது. அம்பானி நம்ம மோடத்துல வைரஸை விட்டுட்டார்ன்னு ரீ பூட் செய்து கொடுத்தார்கள். ஆனாலும் எவ்வித மாற்றமும் இல்லை. எத்தனை மாதம்தான் பயன்படுத்தாமலே கட்டணம் செலுத்துவது என்கிற மன நிலைக்குத் தள்ளப்பட்ட நான் ஒருவழியாக பாரத் சஞ்சார் நிகாமுடனான இணைய இணைப்பை மட்டும் துண்டித்து தரை வழி தொலைபேசியை மட்டும் பயன்படுத்தி வருகிறேன்.
     இது ஒரு புறம் இருக்க மகள் பரிசளித்த புதிய கைபேசிக்கு 4ஜி சிம் வாங்கிட கடைக்குச்சென்றேன். ஆதார் எண் கேட்டார் கைரேகை வைக்கச்சொன்னர் 5 நிமிடங்களில் வேலை முடிந்தது. கையோடு செல் ஒன் சிம்மையும் மாற்றிவிடலாமே என்று பா.ச.நி. அலுவலகம் சென்று கேட்டேன். உங்கள் முகவரிக்கான அடையாளச் சான்றும் புகைப்படமும் எடுத்து வாருங்கள் என்றார் நம் அரசு அலுவலர். நான் அவரிடம் கேட்டேன் ஏன் சார் எங்க ஆதார் விவரத்தை எல்லாம் அம்பானியே வச்சிருக்காரு அரசாங்கத்திடம் இல்லையா? என்று… அவரால் பதிலளிக்க இயலாமல் பரிதாபமாக என்னைப்பார்த்தார். தாள் குப்பைகளை நீங்கள் சேர்த்து வைத்து அலுவலகத்தைக் குப்பைக்கூடமாக்குங்கள் நான் வருகிறேன் என்று கூறிவிட்டு  செல் கடைக்குச் சென்றேன் பழைய சிம்மை நேனோ சிம்மாக ஒரு நிமிடத்தில் நறுக்கிக் கொடுக்க நன்றி சொல்லி விடைபெற்றேன்.
மோடி வித்தை என்பது இதுதானோ?

Thursday, February 15, 2018

கானல்வரி பன்னாட்டுக் கருத்தரங்கம் 2018 அறிவிப்பு





உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை சுல்தான் இட்ரிசு கல்வியியல் பல்கலைக்கழகம், மலேசியா 
கற்க அறக்கட்டளை, சிங்கப்பூர் மற்றும் கானல்வரி கலை இலக்கிய இயக்கம், விருத்தாசலம்
இணைந்து நடத்தும்
தமிழர் சிற்பங்கள்
பன்னாட்டுக் கருத்தரங்கம்  சிற்பக்கலைப் பயிலரங்கம்  மற்றும்
கலை விருது வழங்கும் விழா

கருத்தரங்கத் தலைவர்
பேரா.முனைவர் கோ.விசயராகவன்
இயக்குநர்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,சென்னை
இடம் : உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை
நாள்:13.04.2018


அன்புடையீர் வணக்கம்,
 உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,
 சுல்தான் இட்ரிசு கல்வியியல் பல்கலைக்கழகம் மற்றும் கற்க அறக்கட்டளை
இணைந்து நடத்தும்
கானல்வரி பன்னாட்டுக் கருத்தரங்கிற்கு தங்களை அழைப்பதில் மகிழ்கிறோம்.
2018 ஏப்ரல் திங்கள் 13 ஆம் நாள் சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற உள்ள இக் கருத்தரங்கின் மையத் தலைப்பு  
                ”சிற்பக்கலை”
இது சார்ந்து கீழ்க்கண்ட தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகளை அனுப்பலாம்

· தமிழ் இலக்கியத்தில் சிற்பக்கலை
· சோழர் காலச் சிற்பங்கள்
· பல்லவர் காலச் சிற்பங்கள்
· சிற்பக்கலை நூல்கள்
· தமிழ் சிற்பக் கலைஞர்கள்
· கற்சிற்பங்கள், மரச்சிற்பங்கள்
· உலோகச்சிற்பங்கள்,                சுடுமண் சிற்பங்கள்
· மணற் சிற்பங்கள், வார்ப்புச் சிற்பங்கள்
· புடைப்புச் சிற்பங்கள்
· சுதைச் சிற்பங்கள்

கட்டுரைகள் A4  அளவில் 5 பக்கங்களுக்கு மிகாமல் அமைதல் வேண்டும் .எழுத்துரு அளவு 12 புள்ளி. (PDF வடிவில் அனுப்பக் கூடாது WORD DOCUMENT ஆக மட்டும் அனுப்புக)

பேராளர்கள் கவனத்திற்கு

· குறிப்பிட்டுள்ள தலைப்புகள் மட்டுமின்றி சிற்பக்கலை சார்ந்து வேறு தலைப்புகளிலும் ஆய்வுக்கட்டுரைகள் அனுப்பலாம்
· கட்டுரையை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode font) word document ஆக            kaanalvari2016@gmail.com என்னும் மின்னஞ்சலுக்கு மட்டுமே அனுப்பவேண்டும்.
· கட்டுரை அனுப்ப இறுதி நாள்                30.03.2018
· பதிவுக்கட்டணம்:                           பேராசிரியர்களுக்கு: ரூ.1000         மாணவர்களுக்கு:ரூ.600
      அஞ்சலில் நூல் மற்றும் சான்றிதழ் 
      பெறுவதற்குப் பதிவுக்கட்டணத்துடன் ரூ.100
      சேர்த்து அனுப்பிட வேண்டும்
· பதிவுக்கட்டணத்தை வங்கி வரைவோலையாகவோ இணைய வழியாகவோ அனுப்பலாம்
· வரைவோலை R PUGAZHENDI என்ற பெயரில் இருக்கவேண்டும்.
· இணையவழி பரிமாற்றம் செய்திட       
      R PUGAZHENDI                                        
      A/C NO.915010017230175                               
      BANK: AXIS BANK                                   
      BRANCH: VIRUDHACHALAM                 
      IFSC CODE: UTIB0002198
· கட்டுரைகள் தொகுக்கப்பட்டு ISBN எண்ணுடன் நுலாகக் கருத்தரங்க நாளில் வழங்கப்படும்



ஆலோசனைக் குழு
முனைவர் ஆறு.இராமநாதன்
தகைசால் பேராசிரியர், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
முனைவர் ஒப்பிலா. மதிவாணன், தலைவர்
தமிழ் இலக்கியத் துறை,
சென்னைப் பல்கலைக்கழகம்
பேராசிரியர் இரா.இலட்சாராமன், முதல்வர்(ப.நி.)
ஸ்ரீ சி.பா.கல்லூரி, மயிலம்

கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர்கள்
முனைவர் இரத்தின புகழேந்தி
செயலாளர், கானல்வரி கலை இயக்கம்
முனைவர்  கு.சிதம்பரம்
உதவிப் பேராசிரியர்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,சென்னை
முனைவர் சாமிக்கண்ணு ஜெபமணி
இணைப் பேராசிரியர்
தமிழ்த் துறை
சுல்தான் இட்ரிசு கல்வியியல் பல்கலைக்கழகம்

கருத்தரங்க அமைப்புக் குழு
முனைவர் ஆ.மணவழகன்,இணைப் பேராசிரியர்
சமூகவியல்,கலை மற்றும் பண்பாட்டுப் புலம்,          உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
கவிஞர் தியாக இரமேஷ் நிறுவனர்,
கற்க அறக்கட்டளை
ஓவியர் கே.கோவிந்தன்
முனைவர் எழிலாதிரை,  பேராசிரியர்(ப.நி.)
முனைவர் இரா.செந்தில்குமார், ஆசிரியர்
திரு.நா.இரமேஷ்பாபு, ஆசிரியர்
திரு.த.கார்த்திகேயன்
மென்பொருள் கட்டமைப்பாளர்
எச்.சி.எல்.நிறுவனம்
மயிலம் இளமுருகு, ஆசிரியர்
முனைவர் இரா.மோகனா, உதவிப் பேராசிரியர்
திரு. பா.இராம்குமார், ஐ.ஐ.டி., சென்னை



கருத்தரங்கில் கலந்துகொண்டு கட்டுரை வாசிப்பவர்களுக்கு ஆய்வுக்கோவை நூல், நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.
            கலந்துகொள்ள இயலாதவர்களுக்கு சான்றிதழும் நூலும் அஞ்சலில் அனுப்பப்படும்.
(அதற்குப் பதிவுக் கட்டணத்துடன் ரூ.100 சேர்த்து அனுப்பிட வேண்டும்)

            கருத்தரங்க நாளன்று சிற்பக்கலையில் சிறந்து விளங்கும் கலைஞர்கள் இருவருக்கு
கற்க அறக்கட்டளை வழங்கும்
கானல்வரி கலைவிருது வழங்கப்படும்.
மூத்த கலைஞருக்கு 10,000 ரூபாய் பரிசுத்தொகையுடன் விருதும்,
இளைய கலைஞருக்கு விருதுடன் 5,000 ரூபாய் பரிசுத் தொகையும் வழங்கப்படும்.
மாணவர்களுக்குச் சிற்பக்கலைப் பயிலரங்கும்
நடைபெறும்.

குறிப்பு: ஆய்வுக் கட்டுரைகள் கள ஆய்வுத் தரவுகள் மற்றும் மேற்கோள் நூல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் ஆய்வு முறையைப் பின்பற்றி தரமாக எழுதப்பட வேண்டும்.

அனைத்துத் தொடர்புகளுக்கும்

முனைவர் இரத்தின புகழேந்தி
4,தங்கம் நகர்,
அண்ணசாலை,பெரியார்நகர்-தெற்கு
விருத்தாசலம்-606001,பேசி:9944852295
kaanalvari2016@gmail.com




பதிவுப் படிவம்

பெயர்:________________________________

பதவி:________________________________

முகவரி:_______________________________

______________________________________

_____________________

_____________________








அ.கு. எண்:


கைபேசி எண்:

மின்னஞ்சல்:

கட்டுரைத் தலைப்பு:


கட்டணம் செலுத்திய விவரம்:

வரை ஓலை எண் & நாள்:

வங்கியின் பெயர்:





இடம்:
நாள்:
                                                                                                                      கையொப்பம்