தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking
Showing posts with label நூல் அறிமுகம். Show all posts
Showing posts with label நூல் அறிமுகம். Show all posts

Sunday, May 21, 2017

கோவிந்தன் மலர்தாசன் ஆன கதை




வாழ்க்கை நமக்கு பல பாடங்களைக் கற்றுத்தருகிறது. அதையெல்லாம் நாம் எப்படி எடுத்துக்கொள்கிறோம் என்பது ஒவ்வொருவருக்கும் வேறுபடும். எதையுமே எளிதாக எடுத்துக்கொண்டு அலட்டிக்கொள்ளாமல் கடந்து செல்பவர்களுக்கு வாழ்க்கை சுவார்ஸ்யமாகிறது. சிறு சிறு பிரச்சனைகளைக்கூட பெரிதாக எண்ணி துயரப்படுபவர்களுக்கு வாழ்க்கை என்றுமே சுமைதான். இவற்றுள் முதல்வகையான மனிதர்தான் நம் மலர்தாசன்.
வாழ்க்கையில் எத்தனை துயரங்கள் வந்தாலும் அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் தன்னை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளூம் மனிதர் இவர். மிகுந்த நகைச்சுவை உணர்வு கொண்டவர். அவரது வாழ்வின் இளமைப் பகுதியை வாசமுள்ள மலரிது என்று நூலாக வெளியிட்டுள்ளார். 60 பக்க நூல்தான் என்றாலும் வாழ்வின் அனைத்து பரிமாணங்களையும் வெளிப்படுத்தும் சுவார்ஸ்யம் குறையாத அற்புத எழுத்து நம்மை உள்ளிழுத்துச்செல்கிறது. எளிய நடை என்றாலும் முழுக்க உண்மைகள் அதுவே நூலுக்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது. பள்ளி மாணவனாய் அவர் செய்த குறும்புகள் ஏறாளம் எல்லாமே சுவையான நிகழ்வுகள். இளம் வயதில் தாய் தந்தையை இழந்த வலியைக்கூட அவர் சொல்லும் விதம் வாசகர்களுக்கு வாழ்வின் துயரங்களைக் கடக்க ஒரு சிறு துடுப்பாகவேனும் இந்த நூல் பயன்படும். வாழ்க்கை வரலாறு என்றாலே பெரும் தலைவர்கள் சாதனையாளர்கள்தான் எழுதவேண்டும் என்ற நிலையை மலர்தாசன் உடைத்துள்ளார். எளிய மனிதர்களின் வாழ்விலும் சொல்லிக்கொள்ள ஏறாளமான செய்திகள் உள்ளன. அவை மற்றவர்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவலாம் என்கிற நோக்கில் எழுப்பட்ட இந்த தன் வரலாற்று நூல் இதுவரை வந்த தன்வரலாறுகளிலிருந்து வேறுபட்டு நிற்கிறது. சிறுவனாக இருந்தபோதே முதன் முதலாக ஒலிப்பெருக்கியில் கோயில் அறிவிப்பு செய்யப்போக அந்த குரல்வளத்தைக்கண்டு காங்கிரஸ் கட்சிக் கூடம் பற்றிய அறிவிப்புக்குச்செல்லும் இவருக்கு கட்சியின் முக்கிய பிரமுகர்களுடன் நட்பு கிடைக்கிறது இவற்றை எல்லாம் அவர் கூறும் விதம் படிப்பவர்களைக் கவர்வதாக அமைந்துள்ளன.
பத்திரிகையில் மாணவராக இருந்தபோதே நகைச்சுவைத் துணுக்குகளை எழுதி தனது எழுத்து ஆர்வத்தை வளர்த்துள்ளமை என தன் வாழ்வில் நிகழ்ந்த அத்தனை நிகழ்வுகளையும் ஒளிவு மறைவின்றி எழுதியுள்ளது பாராட்டுக்குரியது. அச்சில் வரப்போகிறது என்பதால் தன்னைப்பற்றிய பெருமைகளை மட்டும் பேசாமல் தனக்கு ஏற்பட்ட சிறுமைகளையும் தோல்விகளையும் அப்பட்டமாக எழுதியுள்ளார். 'உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண் டாகும்" எனப் பாரதியார் கூறியதைப்போல் மலர்தாசன் எழுத்தில் உணமை உள்ளது அதுவே இந்த நூலுக்கு பலம் சேர்க்கிறது.
மல்ர்தாசனின் அரசியல் பயணம் அடுத்த பாகத்தில் வெளிவரவிருப்பதாகக் கூறியுள்ளார் அது எப்போது வரும் என படிப்பவர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது இந்த நூல்.
வாசமுள்ள மலரிது
ஆ.மலர்தாசன்
தெய்வானைப் பதிப்பகம்
24,சிதம்பரம் சாலை
விருத்தாசலம்

பக்கம்.68, விலை ரூ.80

Wednesday, June 10, 2015

கலைவிளையும் நிலம் நூல் அறிமுகம்


கலை விளையும் நிலம் என்ற தலைப்பில் எனது கட்டுரைகளைத்தொகுத்து நூலாக வெளியிட உள்ளேன். இன்று நூல் அச்சாகி வந்துள்ளது. அதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி.

வெளியீடு : நிவேதிதா பதிப்பகம்
                  22/105 , பாஸ்கர் காலனி
                  3 ஆவது தெரு விருகம்பாக்கம்
                  சென்னை -600092
                  893987276 
பக்கம்: 168
விலை:150
அட்டைப்படங்கள்: ந.செல்வன்
வடிவமைப்பு: கீர்த்தி&ஹபிப்


முன்னுரையிலிருந்து...

ஏழு ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட கட்டுரைகள் இவை. தமிழ் ஓசை நாளிதழில் ஞாயிறு இணைப்பாக வெளிவந்த களஞ்சியம் இதழில் பணியற்றிய தோழர் யாணன் அவர்கள் கலைகள் குறித்த இக்கட்டுரைகள் வெளிவர காரணமாக இருந்தார். தெருக்கூத்து பற்றிய கட்டுரையைப் படித்துவிட்டு என்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு தொடர்ந்து எழுதுங்கள் என்று ஊக்கப்படுத்தினார். அதன் விளைவுதான் கிராமத்து விளையாட்டுகள், கலை விளைந்த நிலம் ஆகிய இருநூல்களும். நண்பர் யாணன்  அவர்களுக்கு நன்றி.
          கோவை பி.எஸ்.ஜி. கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு வழங்கிய கட்டுரை ஏலாதி உணர்த்தும் மருத்துவ சிந்தனைகள். திருமுதுகுன்றம் கவிதைகள் சிங்கப்பூரில் நடைபெற்ற பன்னாட்டுக் கருத்தரங்கில் வாசிக்கப்பட்டது.
          தமிழர்களின் உணவு மருத்துவ அறிவு என்ற கட்டுரை செம்மொழித்தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் வழங்கியது.
          சுற்றுச்சூழல் குறித்த கட்டுரைகள் புதுவை வானொலியில் ஏழு நாட்கள் நிகழ்த்திய தொடர் சொற்பொழிவின் எழுத்து வடிவமாகும்.
          இந்த நூலில் இடம்பெற்றுள்ள சில கட்டுரைகளில் ஆசிரியரால் குறிப்பிடப் பட்ட குறைகள் சரிசெய்யப்பட்டுள்ளன சில விருப்பங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
          விடுதலைப்போராட்ட வீரர் கடலூர் அஞ்சலை அம்மாள் பற்றி எழுதிய விடுதலை வேர்கள் கட்டுரை வெளியானதன் விளைவாக இன்று பாடநூல்களில் அவரைப் பற்றிய விரிவான வரலாறு இடம்பெற்றுள்ளது.
          அதுபோலவே மதிப்பீட்டு முறையில் மாற்றம் தேவை என்று நான் கண்ட கனவு இன்று நனவாகியிருக்கிறது. புதிய மதிப்பீட்டு முறை (CCE) வருவதற்கு முன்பே என் ஆய்வு அதனை வலியுறுத்தியது.
          பள்ளி நூலகங்களை மாணவர்கள் அணுக இயலாத சூழலிருந்தது அதனை வெளிப்படித்தியது பெட்டிக்குள் உறங்கும் நூல்கள் கட்டுரை. அதற்கான தீர்வாகத்தான் வகுப்பறை நூலகம் என்னும் புத்தகப் பூங்கொத்து திட்டம்.
          நிலம் கையகப் படுத்தும்போது வழங்கும் இழப்பீடு போதுமானது இல்லை என்னும் கருத்தை வலியுறுத்தியது ’நிலம் கையகப்படுத்தும் அரசியல் ’ கட்டுரை. இப்போது ஐந்து லட்சம் இழப்பீடு வழங்கப்படுகிறது.
                    விருத்தாசலத்தை திருமுதுகுன்றம் என மீண்டும் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை அரசால் கைவிடப் பட்டாலும். ஒரு காலத்தில் நிச்சயம் நிறைவேறும் என்பதற்கான நம்பிக்கையை போராட்ட உணர்வை மக்களிடம்  இந்த நூலில் இடம்பெற்றுள்ள  ஊர்ப்பெயர் அரசியல் என்னும் கட்டுரை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்.

          நூலை சிறப்பாக வெளியிட்டுள்ள நிவேதிதா பதிப்பகத்தாருக்கும் அதற்குக் காரணமாக இருந்த நண்பர் கவிஞர் பல்லவி குமார் அவர்களுக்கும் நன்றி. என்னையும் என் எழுத்தையும் நேசிக்கும் நண்பர் கவிஞர் தியாக ரமேஷ் அவர்களுக்கு என்றும் எனது நன்றிகள்.

Wednesday, April 1, 2015

விருத்தாசலத்தில் கவிதை நூல் அறிமுக விழா.




கவிஞர் கருணாகரசு எழுதிய நீ வைத்த மருதாணி கவிதை நூல் அறிமுக விழா விருத்தாசலத்தில் நடைபெற்றது.
விர்த்தாசலம் நகராட்சிப்பள்ளியில் நடைபெற்ற இவ்விழாவுக்கு கவிஞர் இரத்தின.புகழேந்தி தலைமை வகித்தார். கவிஞர் பட்டி.சு.செங்குட்டுவன், தலைமை ஆசிரியர் வீரராகவன், ரோட்டரி சங்க தலைவர் ஜாகிர் உசேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எழுத்தாளர் சுந்தரபாண்டியன் வரவேற்புரையாற்றினார் .
தலைமை ஆசிரியர் வீரபாண்டியன் கவிதை நூலை வெளியிட கருவேப்பிலங்குறிச்சி அரிமா சங்க செயலர் வெற்றிவேல் பெற்றுக்கொண்டார்.
தமிழ் படைப்பாளிகள் பேரியக்க மாநில செயலாளர் எழுத்தாளர் கண்மணி குணசேகரன், மாநில பொருளாளர் கவிஞர் ஆறு.இளங்கோவன், கவிஞர்கள் புதூர் சாமி, பூவனூர் அரங்கநாதன் கவிதாயினி சிலம்புச்செல்வி ஆகியோர் கவிதை நூலை அறிமுகம் செய்து வைத்து பேசினார்கள்.
எழுத்தாளர்கள் ஒகளூர் நிலவன், ஓவியர் மோகன், பழமலை, டேனியல் ரொசாரியோ, இளம்பரிதி , பாரதிரெங்கன் , செல்வமணி, செல்வசுப்ரமனியன் , ஜெகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் கவிஞர் இரத்தின.புகழேந்திக்கு மணிமுத்தாறு இலக்கிய வட்டம் சார்பில் 'இலக்கியச்சுடர் ' பட்டம் வழங்கப்பட்டது.
இறுதியாக எழுத்தாளர் மலர்தாசன் நன்றி கூறினார் .

Tuesday, June 11, 2013

கொலைச்சேவல்



'கொலைச்சேவல்' இமையத்தின் மூன்றாவது சிறுகதைத்தொகுப்பு. வெவ்வேறு விதமான கதைகளாக இவை தோற்றம் கொண்டிருந்தாலும் நவீன வாழ்க்கையை எதிர்கொள்ளும் கிராமத்துக் கிழவி ஒருத்தியின் மனம் இந்த கதைகளின் இடையே இழையோடுவதை நம்மால் உணரமுடியும்.புலம்பல்களின் கலை வடிவம் என்று இக்கதைகளில் சிலவற்றை நாம் கூறலாம். புலம்பல்கள் சில நேரங்களில் மறைமுகமான சமூக விமர்சனங்களாகவும் செயல்படுவதை இமையத்தின் இந்த கதைகளில் நாம் காணலாம்.

வெளியீடு க்ரியா,http://www.crea.in/

Thursday, May 24, 2012

முன்னேற்ற வந்த மூன்று தலைமுறைகள்-நூல் அறிமுகம்





                                      தென்னவராயன்பட்டு வேணுகோபால்



                 அறிஞர் வே. ஆனைமுத்து அவர்களின் வாழ்த்துரை







தென்னவராயன் பட்டுஇராமசாமி, விடுதலைப்போராட்ட வீரர் வேணுகோபாலசாமி அவர்களின் , நல்லாசிரியர் சஞ்சீவிராயன் ஆகிய மூன்றுதலைமுறை வரலாற்றை பேராசிரியர் த. பழமலை அவர்கள் தொகுத்துள்ளார். இந்நூலுக்கு அறிமுகவுரை எழுதியுள்ள அறிஞர் வே.ஆனைமுத்து அவர்கள் பல வரலாற்று உண்மைகளையும் ஆதிக்க சக்திகள் ஒடுக்கப்பட்ட மக்களை காங்கிரஸ் கட்சியின் பெயரால் எப்படியெல்லாம் ஒடுக்கினர் என்பதையும் அதற்கு எதிராக தந்தை பெரியார் ஆற்றிய தேர்தல் பணிகள் பற்றியெல்லாம் வெகுசன வரலாற்றில் அதிகம் பேசப்படாத செய்திகளை ஆனைமுத்து அவர்கள் இங்கே பதிவுசெய்துள்ளார். அந்த காலகட்டத்தில் ஆதிதிராவிடர்களும் வன்னியர்களும் இணைந்து தேர்தல் களம் கண்டு வெற்றிபெற்ற செய்திகள் இன்றைக்கு பாடமாக அமைகின்றன.
இந்த நூலைத் தொகுத்துள்ள பேராசிரியர் பழமலை அவர்கள் கடின உழைப்பு செய்திகளில் மிளிர்கிறது. அவர் முன்னுரையில்,"பத்துப்பாட்டு, எட்டுத்தொகை என வழங்கும் நம்முடைய பண்டைநாள் நூல்கள் யாவும் தொகுக்கப்பட்டவையே அந்நாளில் அவற்றைத்தொகுத்தவர்கள் பட்ட அரும்பாட்டை இன்று நாம் நினைத்துப் பார்க்கவும் இயலாது. நம் கற்பனைக்கும் எட்டாது. இந்நாளில், இந்நூலைத் தொகுக்கையில் அடியேன் பட்ட பாடு அவர்கள் கடின உழைப்பில் ஆயிரத்தில் ஒரு பங்காவது இருக்கலாம். இதுதான் ஆசை பற்றி அறையலுற்றேன் என்பது". என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னேற்ற வந்த மூன்று தலைமுறைகள்
பக்கங்கள் : 192
விலை : ரூ.100/-
கிடைக்குமிடம் : மலையரசன் பதிப்பகம்
தென்னவராயன் பட்டு
வாக்கூர் அஞ்சல்
விழுப்புரம் மாவட்டம் - 605501.