தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking

Monday, April 12, 2010

திராவிட பல்கலைக்கழகத்தில் நாட்டுப்புறவியல் கருத்தரங்கம்
ஆந்திர மாநிலம் குப்பத்திலுள்ள திராவிட பல்கலைக்கழகத்தில் தென்னிந்திய நாட்டுப்புறவியல் கழகம் நடத்திய (8-10,ஏப்ரல் 2010) மூன்று நாள் கருத்தரங்கில் கலந்துகொண்டு 'சாமி குடை உருவாக்கத்தில் மரபுவழித் தொழில்நுட்பம்' என்ற தலைப்பில் கட்டுரை வழங்கினேன். தமிழ் அமர்வு நண்பர் முனைவர் எழிலவன் தலைமையில் நடைபெற்றது.27 கட்டுரைகள் தமிழில் வழங்கப்பட்டன.இலங்கை நண்பர்கள் கலந்து கொண்டனர் பேராசிரியர் ஜெயசங்கர் அவர்களின் அறிமுகம் கிடைத்தது. அவரின் மூன்றாவது கண் அமைப்பு நம் பழங்கலைகளை மீட்டுருவாக்கம் செய்வதில் சிறப்பாக பணியாற்றுகிறது.
பல்கலைக்கழகம் இயற்கை எழில் சூழ்ந்த வளாகத்தில் அமைந்துள்ளது. மலையின் மீது அமைந்திருப்பதால் இதமான தட்பவெப்பம். கொசுக்களே இல்லை என்பதுதான் வியப்பு.

வரும்போது ஒகேனகல் சென்று வந்தோம். இத்தகைய இயற்கை எழிலை இவ்வளவு நாட்களாக சென்று பார்க்காமலிருந்து விட்டோமே என்கிற ஏக்கம் மனதுக்குள் எழுந்தது.அவசியம் ஒரு முறை சென்று வாருங்கள் நண்பர்களே.
கட்டுரைச் சுருக்கத்தினையும் அது தொடர்பான படங்களையும் ஒகேனக்கல் படத்தையும் பார்வைக்கு வழங்குகிறேன். கருத்தரங்கப் படம் அழிந்துவிட்டது. நண்பர் எழிலவனிடம் பெற்று பிறகு இணைப்பேன்.

சாமி குடை உருவாக்கத்தில் மரபுவழித் தொழில்நுட்பம்(கட்டுரைச் சுருக்கம்)


முன்னுரை
கடவுளர் சிலைகளை சகடை எனப்படும் ஊர்தியில் வைத்து ஊர்வலமாக எடுத்துச்செல்லும்போது பயன்படுத்தப்படும் குடை சாமி குடை எனப்படுகிறது.அக்குடை நெசவாளர்களால் உருவாக்கப்படுகிறது.அதற்கான மூலப்பொருள்கள் யாவை, அவற்றை எவ்வாறு தயார்படுத்துகின்றனர், எத்தகைய தொழில்நுட்பம் பின்பற்றப்படுகிறது, அதன் மூலம் எவ்வளவு வருவாய் ஈட்டுகின்றனர் என்பனவற்றை இக்கட்டுரை ஆராய்கிறது.

ஆய்வுக்களம்
கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டை, நடுவீரப்பட்டு ஆகிய ஊர்களில் சாமி குடை செய்பவர்களிடம் கலந்துரையாடி பெறப்பட்ட தகவல்கள் இக்கட்டுரைக்கு சான்றாதாரங்களாக அமைகின்றன.

மூலப்பொருள்கள்
மூங்கில்கழி, இரும்பு வளையம், கட்டுக்கயிறு, காடாதுணி, உட்புற உறையணி துணி(லைனிங் கிளாத்), பட்டு அல்லது வெல்வெட் துணி, சரிகை, ஜால்ரா, தையல் நூல், உல்லன் நூல், பி.வி.சி.குழாய், பெரிய ஆலம் விழுது ஆகியவை சாமி குடை செய்வதற்கான மூலப்பொருள்கள் ஆகும்.

ஆயத்தப் பணி
கல்லங்கழி எனப்படும் நடுப்பகுதியில் ஓட்டையில்லாத மூங்கில்கழியைத் தேர்ந்தெடுத்துப் பிளந்து தேவையான அளவில் சிறு பிளாச்சுகளாக்கி அவற்றை எவ்வாறு பதப்படுத்துகின்றனர்,அதற்காகப் பின்பற்றப்படும் மரபுவழி தொழில்நுட்பம் எத்தகையது என்பனவற்றை ஆய்வுக் கட்டுரையின் இப்பகுதியில் காணலாம்.

புள்ளத்தண்டு தயாரித்தல்
குடையின் கைப்பிடி புள்ளத்தண்டு எனக் குறிப்பிடப்படுகிறது. பெரிய ஆலம் விழுதில் இது தயாரிக்கப்படுகிறது. ஆலம் விழுதை எவ்வாறு பக்குவப் படுத்துகின்றனர், விழுதைப் பூச்சிகளிடமிருந்து பாதுகாப்பதற்கான வழிமுறைகள் யாவை, இத் தண்டில் பூசப்படும் எண்ணெய் வகைகள் யாவை என்பன இப்பகுதியில் இடம்பெறும்.

குடை செய்முறை
மேற்கண்ட மூலப்பொருள்களைக் கொண்டு சாமி குடை செய்வதற்கு மரபுவழி தொழில்நுட்பங்களைப் பின்பற்றுகின்றனர். வட்ட வடிவில் துணியை வெட்டுவதற்கும், ஆரக்கால்களை அமைப்பதற்கும் குடையைச்சுருக்குவதற்கேற்ப வடிவமைக்கும் விதம், குடையை அலங்கரிக்கும் முறை ஆகியவை மேற்கண்ட துணைத் தலைப்பில் ஆய்வு செய்யப்படும்.


ஒரு குடைக்கான செலவு
ஒரு குடை செய்வதற்கான செலவு எவ்வளவு, அதற்கு எத்தனை நாட்கள் உழைக்கவேண்டும் அதன் மூலம் கிடைக்கும் வருவாய் எவ்வளவு, இலாபம் கிடைக்கிறதா என்கிற தகவல்கள் இத்தலைப்பின் கீழ் ஆராயப்படும்.

முடிவுரை
இக்கைவினைத் தொழிலைச் செய்துவரும் குடும்பத்தினர் எத்தனை தலைமுறையாக இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். தங்களின் முன்னோர்களிடமிருந்து கற்றுக்கொண்ட தொழில்நுட்பங்களை முற்றிலும் பயன்படுத்த இயலுகிறதா காலத்திற்கேற்ப மாற்றங்கள் ஏதேனும் செய்துள்ளனரா சமூகத்தில் பொருளாதார நிலையில் இத்தொழிலாளர்களின் நிலை என்ன? எதிர்காலத்தில் இத்தொழில் தொடர்வதற்கு வழிவகை உள்ளதா அரசு தரப்பில் இத்தொழில் கைவினைத்தொழிலாக ஏற்கப்பட்டுள்ளதா என்பனவற்றையெல்லாம் இந்த ஆய்வுக்கட்டுரையின் முடிவரை எடுத்து இயம்பும்.

1 comment:

  1. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

    அன்புடன்
    www.bogy.in

    ReplyDelete