தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking

Sunday, April 4, 2010

தமிழ்மருத்துவத்தின் தொன்மையும் தனித்தன்மையும்
தமிழ்மருத்துவத்தின் தொன்மையும் தனித்தன்மையும் மூன்றுநாள் கருத்தரங்கு செனைப் பல்கலைக் கழக பவளவிழா அரங்கில் செம்மொழித்தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் நடத்தப்பட்டது. துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடக்கிவைக்க நிதியமைச்சர் பேராசிரியர் அன்பழகன் அவர்கள் நிறைவுப்பேருரையாற்ற சிறப்பாக நடந்தது. நான் வழங்கிய கட்டுரைச் சுருக்கத்தினை இணைத்துள்ளேன்.

தமிழர்களின் உணவு மருத்துவ அறிவு


முன்னுரை
தமிழர்களின் மரபுவழி உணவுப்பழக்கம் உடல் நலத்தைக்காப்பதாகவும், நோய் எதிர்ப்பு ஆற்றல் உடையதாகவும், தமிழ் மருத்துவக் கோட்பாடுகளுக்குட்பட்டதாகவும் அமைந்திருக்கிறது என்பதை உரிய சான்றுகளோடு இக்கட்டுரை ஆராய்கிறது.

உடல்நலம் காக்கும் உணவு
மருந்தென வேண்டாவாம் யாக்கைக் கருந்திய
தற்றது போற்றி உணின்.
என்னும் திருக்குறள் உணவை அளவறிந்து உண்டால் உடலுக்கு மருந்தே தேவையில்லை என்பதை வலியுறுத்துகிறது. தமிழர்கள் உணவை அளவறிந்து எவ்வாறு உண்டனர் அதன் மூலம் உடல் நலத்தை எவ்வாறு காத்தனர் என்பது இக்கட்டுரையில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

நோயை எதிர்கும் உணவு
தமிழர்களின் மரபு வழி உணவு முறையில் எந்தவகை உணவுப்பொருள்கள் நோய் எதிர்ப்பு ஆற்றலுடையவை என்பதைக் கண்டறிந்து பட்டியலிடுவதோடு அறிவில் பூர்வமாக உரிய சான்றுகளோடு ஆராய்கிறது இக்கட்டுரை.

தமிழர்களின் உணவுக் கோட்பாடு
தமிழர்கள் உணவுப்பொருள்களைச் சூடு, குளிர்ச்சி, பித்தம்,வாயு எனப் பகுத்துப் பார்த்து உடல்நிலை, பருவகாலம், வயது ஆகிய சூழலுக்கேற்ப உண்ணும் வழக்கத்தை மரபு வழியாகப் பின்பற்றி வருகின்றனர். இந்த உணவுக் கோட்பாடு தமிழ் மருத்துவமுறையான சித்த மருத்துவ முறையோடு பொருந்துவதாக உள்ளது இதனை இக்கட்டுரை விரிவாக ஆய்வு செய்கிறது.

அறுசுவைக் கோட்பாடு
அறுசுவை யுண்டி அமர்ந்தில்லாள் ஊட்ட
மறுசிகை நீக்கி உண்டாகும்
என்னும் நாலடியார் பாடல் தமிழர்களிடம் அறுசுவை உணவுக் கோட்பாடு இருந்ததை உணர்த்துகிறது. இந்த ஆறு சுவைகள் ஒவ்வொன்றும் ஒரு வகை ஆற்றலை உடலுக்கு அளிப்பதாக மருத்துவ நூல்கள் குறிப்பிடுகின்றன. இனிப்புச் சுவை வளத்தினையும், கார்ப்பு வீரத்தையும், துவர்ப்பு ஆற்றலையும், புளிப்பு இனிமையையும், உவர்ப்பு தெளிவினையும், கசப்பு மென்மையையும் அளிக்கிறது. மேலும் உணவில் இந்த ஆறு சுவைகளும் குறிப்பிட்ட அளவில் அமைய வேண்டும். அந்த அளவு கூடினாலும் குறைந்தாலும் உடலுக்குக் கேடு நேரும் என்பதை மருத்துவ நூல்களின் துணைகொண்டு இக்கட்டுரை விளக்குகிறது.

உணவே மருந்து
தமிழர்களின் அன்றாட உணவே எவ்வாறு மருத்தாகத் திகழ்கிறது. அவர்கள் வழக்கமாக உண்ணும் உணவுப் பொருள்கள் எத்தகைய மருத்துவ குணங்கள் நிறைந்தனவாக உள்ளன.வாழ்க்கை வட்டச் சடங்குகளில் பயன்படுத்தும் உணவுகள் அச்சடங்குகளுக்குப் பொருத்தமான மருத்துவ குணம் கொண்டவையாக உள்ளனவா. எளிய நோய்களுக்கு உணவு மருத்துவத்தின் வாயிலாக எவ்வாறு தீர்வு காணப்படுகிறது என்பனவற்றை இக்கட்டுரைக் கள ஆய்வுத் தரவுகளையும் துறை சார்ந்த நூல்களையும் கொண்டு ஆராய்கிறது.

முடிவுரை
தமிழர்களின் மரபு வழி உணவுப் பழக்கம் உடல் நலம் காப்பதோடு மருத்துவத் தன்மை நிறைந்ததாக உள்ளது என்பதை வலுவான சான்றுகளோடு இக்கட்டுரை நிறுவுகிறது.

No comments:

Post a Comment