தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking
Showing posts with label நூல் திறனாய்வு. Show all posts
Showing posts with label நூல் திறனாய்வு. Show all posts

Saturday, November 8, 2025

பசுமைப் பயணம் திறனாய்வு

 




எழுத்தாளர், கவிஞர் கட்டுரையாளர் என்று மட்டுமே என்னால் அறியப்பட்ட அன்பிற்கினிய நண்பர் இரத்தின.புகழேந்தி Rathina Pugazhendi மிகச்சிறந்த மிதியுந்து வீரர் என்பதை அவரது பசுமைப் பயணம் என்கிற நூல் வழியாகத்தான் அறிந்தேன்.


பிலோ இருதயநாத் என்றொரு மானுடவியலாளர் இருந்தார். தென்னகப் பழங்குடியினரை நேரில் சந்தித்து அவர்களை ஆவணப்படுத்தியப் பெருமை அவருக்கு உண்டு.. அதுவும் மலைகள் காடுகள் என பல கடினமானப் பாதைகள் அனைத்தையும் தனது மிதிவண்டியில் ஒற்றை ஆளாகப் பயணித்து தகவல்களை சேகரித்தவர். அரசோ அமைப்போ எதனுடைய உதவியுமின்றி தன்னுடைய சொந்தச் செலவில் உழைப்பில் தனிப்பட்ட ஆர்வத்தில் அந்தப் பணியைச் செய்தவர். அவரைப் பற்றி என்னுடைய பாதை தந்த பயணிகள் நூலில் எழுதி இருக்கிறேன். 


பலசமயம் சென்னைப் புறவழிச்சாலையில் செல்லும்போது தனித்துவமான ஆடை, தலைக்கவசம் அணிந்து பலர் மிதிவண்டிகளை ஓட்டிச்செல்வதைப் பார்த்திருக்கிறேன். அது ஒரு பந்தயம் போலத் தெரியாது. சக நண்பர்களுடன் ஒரு மகிழ்வான பயணம் போலத் தோன்றும். ஒரு வகையில் அது உண்மைதான் என்பதை புகழேந்தி அவர்களின் பசுமைப் பயணம் நூலை வாசிக்கையில் உணர்ந்தேன்.


புகழேந்தி இந்த நூலைத் தந்து பல நாட்களாகிவிட்டன. முயன்றால் ஒரு மணி நேரத்துக்குள் வாசித்துவிடலாம். அவரது ஒவ்வொரு மிதியுந்துப் பயணம் பற்றியும் நாட்குறிப்புகள் போல மிகச் சுருக்கமான கட்டுரைகள் ஆனால் ஒவ்வொரு கட்டுரையிலும் அவர் தரும் தகவல்கள், அனுபவங்கள் என்னை அவை பற்றி தேட வைத்துவிட்டன.


 குறிப்பாக அவரது மூன்றாவது கட்டுரையில் BRM மற்றும் SR என்று குறிப்பிடுகிறார். எப்படியாவது SR ஆக வேண்டும் என்று தன் ஆசையை சொல்லிவிட்டு அப்படி என்றால் என்ன என்று அறியும் ஆசையைத் தூண்டிவிட்டு அவர் தன் மிதிவண்டியில் ஏறி பறந்துவிட்டார்.


 நான் புத்தகத்தை மூடி வைத்துவிட்டு தேடத்தொடங்கினேன்.  

BREVETS DE RANDONNEUR MONDIAUX (BRM) என்பது முன்னரே தீர்மானிக்கப்பட்ட நேரக் கட்டுப்பாடுகளை வெற்றிகரமாகக் கடந்து, குறிப்பிட்ட கால வரம்புகளுக்குள் முடிக்கப்பட வேண்டிய நிலையான தூரங்களின் சவாரிகள் ஆகும். உலகளவில் BRMகள் Audax Club Parisien (ACP) என்கிற அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகின்றன. 


BRM-ன் விதி என்பது வரையறுக்கப்பட்ட தூரத்தை, வரையறுக்கப்பட்ட நேரத்துக்குள் தீர்மானிக்கப்பட்ட சாலை வழியாக சென்றடைவது. உதாரணமாக 200 கி.மீ தூரத்தை 13.5 மணி நேரத்துக்குள் சென்றடைவது. யாருடனும் போட்டி இல்லை. தனக்குத்தானே போட்டியாளர் என்று வேண்டுமானால் சொல்லலாம்.   


  சூப்பர் ரேண்டன்னூர் (SR) என்பது ஒரு காலண்டர் வருடத்திற்குள் தொடர்ச்சியான BRMகளை முடிக்கும் சைக்கிள் ஓட்டுநர்களுக்கு ACP வழங்கும் ஒரு பட்டமாகும். இந்தத் தொடரில் நான்கு சுருக்கமான தூரங்கள் உள்ளன: 200 கிமீ, 300 கிமீ, 400 கிமீ மற்றும் 600 கிமீ, முறையே 13.5, 20, 27 மற்றும் 40 மணிநேர வரையறுக்கப்பட்ட நேர அளவுகளுடன். சென்று முடிக்க வேண்டும். ஆனால் கால்ண்டர் வருடம் என்பது ஜனவரியில் தொடங்குவது இல்லை. 

நவம்பர் 1 தொடங்கி அடுத்த அக்டோபருக்குள் இந்த இலக்குகளை முடித்தால் ACP அமைப்பின் சான்றிதழ் மற்றும் பதக்கம் கிடைக்கும்.


 இதில் என்ன கொடுமை என்னவென்றால் ACP இணையதளத்தில் பதிவுக் கட்டணம், பயணச்செலவு, இடையில் மருத்துவ உதவி தேவைப்பட்டால் பங்கேற்பாளர் தன் சொந்த செலவில்தான் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்தியாவில் இந்தப் பயணங்களை AIR ( ALL INDIA RANDONNEUR) என்ற அமைப்பு கண்காணிக்கிறது. அவ்வளவுதான்.. பணமும் தரமாட்டார்கள். பொறுப்பேற்கவும் மாட்டார்கள்.


 இத்தாலியில் தொடங்கப்பட்ட இந்தப் பயண அமைப்புகள். தற்சமயம் பிரான்சில் உள்ள அமைப்பால் உலகம் முழுக்க உள்ள அமைப்புகளை அங்கீகரிக்கின்றது. நான் எப்படியும் SR ஆகிவிடுவேன் என்று புகழேந்தி சபதமெடுத்ததன் விளைவு நான் அங்கே எல்லாம் சென்று திரும்ப அடுத்த அத்தியாயத்துக்கு வரவேண்டி இருக்கிறது. 


அடுத்ததாக விருத்தாசலத்தைச் சுற்றி பல்வேறு வரலாற்றுத் தலங்களுக்குச் சென்று அவைப் பற்றியச் செய்திகளைப் பகிர்கிறார். 


முகாச பரூர் அருகிலுள்ள பொய்கை நல்லூரில் உள்ள கோரக்கர் சித்தர் ஜீவ சமாதி,


 பரூர் கச்சிராயர் வசித்த அர்ண்மனையின் சிதிலமடைந்த மிச்சங்கள், 


சுந்தர பாண்டியனின் கல்வெட்டு, வீரமாமுனிவர் தேம்பாவணி எழுதியதாகக் கருதப்படும் கோணான்குப்பம் பெரியநாயகியம்மன் ஆலயம் இப்படியாக அவரது மிதிவண்டிப்பயணம் பல ஆச்சர்யத் தகவல்களை சுருக்கமாகத் தருகின்றது. 


பின்னர் தான் பார்த்த சோலோ என்கிற ஆங்கிலக் குறும்படம் பற்றி எழுதி இருக்கிறார். மலையேறும் குழு எப்படி பாறை இடுக்கில் இருந்து ஒரு தேரையைக் காப்பாற்றி மலை உச்சிக்கு எடுத்துச்செல்கிறார்கள் என்னும் கதையாம். இனி அந்தப்படத்தைத் தேடிப்பிடித்துப் பார்க்க வேண்டும். 


எனக்கு வேறொரு ஆவணப்படம் நினைவுக்கு வந்தது 1232 KM என்றொரு படம். பீஹாரில் இருந்து தில்லிக்கு தினக்கூலிக்காகச் சென்று கொரானா காலத்தில் கைவிடப்பட்டு பசி பட்டினியுடன் சைக்கிளிலேயே தில்லியில் இருந்து தங்கள் சொந்த மாநிலமான பீகாருக்கு ஏழு நாட்கள் பயணித்து, பீஹாரின் எல்லையிலேயே நிறுத்தப்பட்டு கொடுமைகளை அனுபவித்தவர்களுடன் இயக்குனர் வினோத் காப்ரி பயணித்து படப்பதிவு செய்திருந்தார். அதுவே அந்த ஆவணப்படம். ஹாட்ஸ்டாரில் உள்ளது. 


தற்போது பீகார் தேர்தலையொட்டி திடீர் சாம்பார் திடீர் ரசம் போல திடீர் BIHAR LOVERS தமிழ்நாட்டில் தோன்றிவிட்டார்கள். முகநூலில் பீகார் தெருக்களில் பாலும் தெளிதேனும் பெருக்கெடுத்து ஓடுவதாக கூச்சமில்லாமல் எழுதுகிறார்கள். அவர்கள் அந்த ஆவணப்படத்தைப் பார்க்க வேண்டும். வெளியே சொல்லமாட்டார்கள். கையது கொண்டு மெய்யது போர்த்தி கம்மென இருப்பார்கள்.  


சிறுகதை எழுத்தாளர் இல்லையா தன் மகன் விரும்பிய மிதிவண்டியை தான் வாங்கிக் கொடுக்க இயலாமல் போனதையும் ஆனால் வேலையில் சேர்ந்தபின் மகன் இளவேனில் தன் ஊதியத்தில் இருந்து தான் விருப்பபட்ட மிதிவண்டியை வாங்கித் தந்த அனுபவத்தை நெகிழ்வுடன் பதிவு செய்துள்ளார். மிதிவண்டி பற்றிய அவரது கவிதையும் இடம்பெற்றுள்ளது.


 ஒவ்வொரு பயணமும் ஒவ்வொரு மகத்தான அனுபவம் தேதிவாரியாக புகைப்படங்களுடன் பதிவு செய்துள்ளார். நேர்த்தியான வடிவமைப்பு. பயணிகள் பற்றிய பயண இலக்கியங்கள் பற்றிய பல்லவிகுமாரின் அழகான முன்னுரை. 

இரத்தின புகழேந்தியுடன் அழகான மிதிவண்டிப் பயணங்களை நாமும் அனுபவித்தது போன்ற உணர்வு புத்தகத்தை வாசிக்கும்போது ஏற்படுகிறது. மனமார்ந்த வாழ்த்துக்கள் தோழர் புகழேந்தி. . .

நன்றி: எழுத்தாளர் நெய்வேலி பாரதிக்கு மார்.

Sunday, May 21, 2017

கோவிந்தன் மலர்தாசன் ஆன கதை




வாழ்க்கை நமக்கு பல பாடங்களைக் கற்றுத்தருகிறது. அதையெல்லாம் நாம் எப்படி எடுத்துக்கொள்கிறோம் என்பது ஒவ்வொருவருக்கும் வேறுபடும். எதையுமே எளிதாக எடுத்துக்கொண்டு அலட்டிக்கொள்ளாமல் கடந்து செல்பவர்களுக்கு வாழ்க்கை சுவார்ஸ்யமாகிறது. சிறு சிறு பிரச்சனைகளைக்கூட பெரிதாக எண்ணி துயரப்படுபவர்களுக்கு வாழ்க்கை என்றுமே சுமைதான். இவற்றுள் முதல்வகையான மனிதர்தான் நம் மலர்தாசன்.
வாழ்க்கையில் எத்தனை துயரங்கள் வந்தாலும் அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் தன்னை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளூம் மனிதர் இவர். மிகுந்த நகைச்சுவை உணர்வு கொண்டவர். அவரது வாழ்வின் இளமைப் பகுதியை வாசமுள்ள மலரிது என்று நூலாக வெளியிட்டுள்ளார். 60 பக்க நூல்தான் என்றாலும் வாழ்வின் அனைத்து பரிமாணங்களையும் வெளிப்படுத்தும் சுவார்ஸ்யம் குறையாத அற்புத எழுத்து நம்மை உள்ளிழுத்துச்செல்கிறது. எளிய நடை என்றாலும் முழுக்க உண்மைகள் அதுவே நூலுக்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது. பள்ளி மாணவனாய் அவர் செய்த குறும்புகள் ஏறாளம் எல்லாமே சுவையான நிகழ்வுகள். இளம் வயதில் தாய் தந்தையை இழந்த வலியைக்கூட அவர் சொல்லும் விதம் வாசகர்களுக்கு வாழ்வின் துயரங்களைக் கடக்க ஒரு சிறு துடுப்பாகவேனும் இந்த நூல் பயன்படும். வாழ்க்கை வரலாறு என்றாலே பெரும் தலைவர்கள் சாதனையாளர்கள்தான் எழுதவேண்டும் என்ற நிலையை மலர்தாசன் உடைத்துள்ளார். எளிய மனிதர்களின் வாழ்விலும் சொல்லிக்கொள்ள ஏறாளமான செய்திகள் உள்ளன. அவை மற்றவர்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவலாம் என்கிற நோக்கில் எழுப்பட்ட இந்த தன் வரலாற்று நூல் இதுவரை வந்த தன்வரலாறுகளிலிருந்து வேறுபட்டு நிற்கிறது. சிறுவனாக இருந்தபோதே முதன் முதலாக ஒலிப்பெருக்கியில் கோயில் அறிவிப்பு செய்யப்போக அந்த குரல்வளத்தைக்கண்டு காங்கிரஸ் கட்சிக் கூடம் பற்றிய அறிவிப்புக்குச்செல்லும் இவருக்கு கட்சியின் முக்கிய பிரமுகர்களுடன் நட்பு கிடைக்கிறது இவற்றை எல்லாம் அவர் கூறும் விதம் படிப்பவர்களைக் கவர்வதாக அமைந்துள்ளன.
பத்திரிகையில் மாணவராக இருந்தபோதே நகைச்சுவைத் துணுக்குகளை எழுதி தனது எழுத்து ஆர்வத்தை வளர்த்துள்ளமை என தன் வாழ்வில் நிகழ்ந்த அத்தனை நிகழ்வுகளையும் ஒளிவு மறைவின்றி எழுதியுள்ளது பாராட்டுக்குரியது. அச்சில் வரப்போகிறது என்பதால் தன்னைப்பற்றிய பெருமைகளை மட்டும் பேசாமல் தனக்கு ஏற்பட்ட சிறுமைகளையும் தோல்விகளையும் அப்பட்டமாக எழுதியுள்ளார். 'உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண் டாகும்" எனப் பாரதியார் கூறியதைப்போல் மலர்தாசன் எழுத்தில் உணமை உள்ளது அதுவே இந்த நூலுக்கு பலம் சேர்க்கிறது.
மல்ர்தாசனின் அரசியல் பயணம் அடுத்த பாகத்தில் வெளிவரவிருப்பதாகக் கூறியுள்ளார் அது எப்போது வரும் என படிப்பவர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது இந்த நூல்.
வாசமுள்ள மலரிது
ஆ.மலர்தாசன்
தெய்வானைப் பதிப்பகம்
24,சிதம்பரம் சாலை
விருத்தாசலம்

பக்கம்.68, விலை ரூ.80

Thursday, November 26, 2015

நகர்க் குருவி திறனாய்வு கவிஞர் கி.தனவேல்



கவிஞர் கி.தனவேல் பணி நிறைவு பெற்ற இந்திய ஆட்சிப் பணி அலுவலர். தமிழ்நாட்டு அரசுத் தொழில்துறையின் முதன்மைச் செயலராகப் பணியாற்றியவர். எனது நகர்க்குருவி கவிதை நூலைப் படித்து எனக்கு எழுதிய கடிதம் இங்கே ...

அன்பார்ந்த இரத்தின புகழேந்தி,
            வணக்கம் உங்களது ‘மண்கவுச்சி’ கவிதைகளை ஏற்கனவே துய்த்துவிட்ட எனக்கு சமீபத்தில் உங்களது ‘நகர்க்குருவி’ கவிதைத் தொகுப்பு கிடைத்த்து.

“சுட்டெரிக்கும் கோடையிலும்கூட
திருமுட்டம் செல்லும்போதெல்லாம்
வெள்ளாற்றின் தென்கரையில் பார்த்திருக்கிறோம்
ஓடிவரும் ஊற்று நீரை

கால் நடைகளின்
உரும நேர
                                                உயிர்த் தண்ணீர் அது!”                                          (நிரல்)
என வெள்ளாற்றின் ஊற்று நீரை நீங்கள் நினைவு படுத்தும் போது வறண்டுபோன விருத்தாசலம் மணிமுத்தா நதியில் கோடையிலும் கொடிபோல ஒடிக்கொண்டிருந்த ஊற்று நீரைப் பார்த்த எனது பள்ளிக் கூட நாட்கள் நினைவுக்கு வருகின்றன.
“அன்று முதல்
பல்லிகள்
நம்மை மேய்க்கத் தொடங்கி வருகின்றன”
என வரும் ‘பல்லி பயம்’ நயமான கவிதை.  ‘மரணத்தை மறந்து’ கவிதையில் சிறுவர்களின் சிந்தை சித்திரமாக்கப் பட்டுள்ளது.  ‘ஒரு இறுதிச்சடங்கு’ நல்லபதிவு.  ‘ஒருவன் நீரை ஊற்றிக் காப்பாற்றினான் நகரத்தின் மானத்தை’ (அணைத்தல்) நல்ல கவிதை.
“இரவில் செத்து
காலையில் பிழைத்த
அமைச்சர்கள் காத்திருக்கின்றனர்
கழிவறை செல்வதற்கு
                                    அரசியின் ஆணையை எதிர்பார்த்து”                       (வித்தைக்காரி)
இது சிறந்த அங்கதக் கவிதை.
நடப்பது என்பது
நடந்தது ஆகிவிட்டது
மருத்துவரின் ஆலோசனையால்
இன்றும்
அதிகாலையில்
நடந்து கொண்டுத்தான் இருக்கின்றனர்
                                                நகரத்து மனிதர்கள்.             (நடந்த கதை)
“உற்சாகத்தோடு
வீடு திரும்பும்
ஒவ்வொரு அந்தியிலும்
அவனுக்கு
கண்ணீரால் எழுதக்
காத்திருக்கும்
                       பை நிறைய வீட்டுப்பாடம் ”             (படிப்பு)
இதையும் ஒரு ஆசிரியர் தான் சொல்கிறார்.  நாம் தப்பித்துவிட்டோம் என்ற ஆறுதல்தான் பெற்றோர்களுக்கு.  ‘நிலாவிழுந்தமாடி’ அழகிய கவிதை.
“மரணத்திலிருந்து தப்பிய
பறவைகளை எண்ணி
மகிழ்ந்த கவிஞனுக்கும்
உமிழ்நீர் சுரக்கத் தொடங்கியது
                                    கொக்குக் கறியின் சுவை கேட்டறிந்து. ”    (உயிர் பிழைத்தல்)
இக்கவிதை வரிகள் நடப்பியல் மன முரண்பாடுகளை நன்றாகச் சித்திரித்துள்ளன.
“அங்காடியைக் கைகளிலேந்தி
சிற்றூர்களின் தெருக்களில்
அலைந்து திரிந்து
அரைஞாண் கயிறு விற்பவர்கள்
இப்போது காணக் கிடைப்பதில்லை”
(அரைஞாண் கயிறும் ஆனைமுகக் கடவுளும்)
‘அரைஞாண் கயிறும் ஆனைமுகக் கடவுளும்’ என்ற கவிதை நடப்பியலையும் தொன்மத்தையும் சுட்டிக் காட்டி அவை அறுந்து போனதை அழகாய்ச் சொல்கிறது.
“அன்று
தொல்தமிழர் வீடுகளில்
ஆட்டுக்கறி தின்ற
எங்கள் முருகன்
இன்று பழனியில்
பஞ்சாமிர்தம் உண்டு
                                      நாக்கு செத்துக் கிடக்கிறான்”            (மேல்நிலையாக்கம்)
இது ஒரு சிறந்த ஆய்வுக் கவிதை.
            உங்களது ஒவ்வொரு கவிதையைப் பற்றியும் சொல்லிக் கொண்டே போகலாம்... அதுசரி... “கவிஞர்களின் மனைவிமார்களுக்கு ஒரு வேண்டுகோள்”  இந்த கவிதையை யாராவது கொஞ்சம் விளம்பரப்படுத்தினால் பல கவிஞர்களுக்கும் பயனுள்ளதாய் இருக்கும்.

“கோட்டூர் ஆலைக்கு
குறுக்கு வழியில்
கரும்பேற்றிச் செல்வதற்கு
அமைத்த சாலைச் செம்மன்
குருடாக்கித் தொலைத்தது
                                     ஆற்றோர ஊற்றுக் கண்களை ”.      (ஊற்றுக் கண்கள்)
நாம் தொலைத்து வருபவை ‘ஆற்றோர ஊற்றுக் கண்களும்’ ‘முட்புதர் சூழ்ந்த ஒழுங்கை’ களும் மட்டுமல்ல; அவை பற்றிய சொல்லாடல்களும் தான்.  அறியப் போகிறதா அடுத்த தலைமுறை?
தொடர்ந்து எழுதுங்கள்; வாழ்த்துகள்.
என்றும் அன்புடன்
        கி.தனவேல்

 




Sunday, August 1, 2010

மஞ்சணத்தி நூல் திறனாய்வு

கரிசலில் மஞ்சணத்தியான மருதத்து நுணா






தமிழகத்தின் ஐந்து வகை நிலப்பகுதிகளில் ஒவ்வொனறுக்கும் ஒரு தனித்தன்மை உண்டு. அந்தத் தனித் தன்மைதான் நமது நிலவியல் கோட்பாட்டின் சிறப்பு. வேறுபாடுகளுக்கிடையிலும் மெல்லிய நூலிழைகளாய் சில ஒற்றுமைக் கோடுகள் நம் வாழ்முறையை நெய்து பண்படுத்துகின்றன. தமிழர்களுக்கும் தாவரங்களுக்குமான தொடர்பு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தொன்மையுடையது. இயற்கைக்கும் நமக்குமான தொடர்பை நமது சங்க புலவர்கள் தொடங்கி இன்றைய இளம் படைப்பாளிகள் வரை தங்கள் படைப்புகளில் வெளிப்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக மரங்களுக்கும் மனிதர்களுக்குமான உறவைப் பேசும் பாடல்கள் குறிப்பிடத்தகுந்தவை. மரத்தைத் தாயாக சகோதரியாக தெய்வமாகக் கொண்டாடுகிற மரபைத் தமிழ் இலக்கியத்தில் தொடர்ச்சியாகக் காணலாம்.

"நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகும் என்று
அன்னை கூறினாள் புன்னையது நலனே"

என்னும் நற்றிணைப் பாடலில் இளம் பெண்ணொருத்தி புன்னை மரத்தைத் தங்கையாகப் பார்க்கிறாள். மேலும் புன்னை மரத்திற்கும் மனிதர்களுக்குமான உறவைப் படம்பிடித்துக்காட்டும் பாடல்கள் கலித்தொகையிலும் குறுந்தொகையிலும் இடம்பெற்றுள்ளன. இவற்றின் தொடர்ச்சியாகத்தான் தமிழச்சிக்கும் மஞ்சணத்தி மரத்திற்குமான உறவு இங்கே நவீன கவிதையாகியிருக்கிறது. சிற்றூரில் பிறந்து சிறார் பருவத்தில் அங்கேயே வாழ்ந்தவர்களுக்கு மட்டுமே தெரிந்திருக்கக் கூடிய ஒரு மரம்தான் மஞ்சணத்தி மரம். எங்கள் மருத நிலத்திலும் இந்த மரம் இருக்கிறது. அதனை நாங்கள் நுணா மரம் என்று குறிப்பிடுவோம். நுணாப்பழத்து ருசிக்கு அடிமையாகாத சிறுவர்கள் இருக்க முடியாது. பள்ளிக்கூடம் செல்லும்போது பையை அந்த மரக்கிளையில் மாட்டிவிட்டு அந்த பழங்களைப் பறித்துத் தின்ற பிறகுதான் பள்ளிக்குச் செல்வோம். நுணாப்பழ ருசிக்காக தன் கல்வியையே பறிகொடுத்த கூத்துக்கலைஞர் நடராசன் இன்றும் எங்கள் ஊரில் வாழ்ந்து வருகிறார். நாங்கள் ஏறி விளையாடிய எங்கள் அம்மன்கோயில் மேட்டு நுணா மரம் எங்கள் பெரியப்பாவின் வீட்டில் இன்றும் நின்றுகொண்டிருக்கிறது நிலைப்பேழையாக. ஊருக்குச்செல்லும் போதெல்லாம் அதனைத் தொட்டு முகர்ந்து என் இளமையை மீட்டெடுப்பேன்.
இதற்கும் தமிழச்சியின் கவிதைக்கும் என்ன தொடர்பு இருக்கிறது. ஒரு நல்ல கவிதை முடிந்த பின்னே தொடங்குகிறது என்று தமிழச்சி தனது முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். அப்படிப்பட்ட ஒரு கவிதைதான் மஞ்சணத்தி மரம் குறித்த கவிதை அது ஒரு போதும் முடியாத கவிதையாக எனக்குத் தோன்றுகிறது. வாசித்தாலும் வாசித்தாலும் தீராத புத்தகம் என்றொரு புத்தகத்தை நான் படித்திருக்கிறேன். மலையாளத்தில் ஒரு லட்சம் பிரதிகள் விற்பனையான அந்த புத்தகம் இயற்கையைப் பற்றி குழந்தைகளுக்குக் கூறுவதாக அமைந்துள்ளது. வாசித்தாலும் வாசித்தாலும் தீராத கவிதையாக இந்த கவிதை என்னிடத்தில் அந்த மரம் குறித்த சிந்தனைகளை வளர்த்துக்கொண்டே செல்கிறது.

"என் துரோகத்தின் வலி சுமக்கும்
உன் முனை உடைந்த முட்கள்
என் ரகசியங்களின் போதை தரும்
கள் ததும்பும் உன் பூக்கள்
என் ஆசைகளின் ருசி அறியும்
தேன் உதிர்க்கும் உன் பழங்கள்"

நுணாப் பூ வாசனை மல்லிகைக்கு நிகரானது, அந்தப்பழத்தின் சுவைக்கு நிகராக ஒரு சுவையை எழுத்தில் தர இயலாது. அதை சுவைத்து பார்த்துதான் நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். மருத நிலத்து நுணாவில் முள்ளிருப்பதில்லை. கரிசல் நில நுணாவில் முள்ளிருப்பதாகக் கவிஞர் குறிப்பிடுகிறார். மரத்தின் ஒவ்வொரு பாகமும் கவிஞரின் உணர்வுகளோடு ஒன்று கலந்திருப்பதை மேற்கண்ட அடிகள் நமக்கு உணர்த்துகின்றன. இந்த தொகுப்பின் மிகச்சிறந்த கவிதையாக இந்த கவிதையைத்தான் நான் குறிப்பிட விரும்புகிறேன்.
செயங்கொண்டார் பாடிய கலிங்கத்துப்பரணி போல் தமிழச்சி பாடிய பெரு நகர்ப்பரணியும் ஒரு முக்கியமான கவிதையாக இலக்கிய வரலாற்றில் நாளை நிச்சயம் பதிவாகும். இக்கவிதையில் நாயகியான வனப்பேச்சிதான் தமிழச்சி கண்டுபிடித்த பெரும் படிமம் என்று முன்னுரையில் தமிழவன் குறிப்பிடுகிறார். நகரமயமாதல் இன்று பெரும் பிரச்சினையாகி வருகிறது. நகரங்களின் அபார வளர்ச்சி கிராமங்களை விழுங்கி ஏப்பம் விடுவதாக இருக்கிறது. அதனால்தான் நகரங்களின் வளர்ச்சி இனி, மேல்நோக்கித்தான் அமையவேண்டுமே தவிற பக்கவாட்டில் அல்ல என்று மக்கள் நலனில் அக்கரையுடைய தலைவர்கள் எச்சரிக்கின்றனர். பல பன்னாட்டு நிறுவனங்களுக்கு நமது உழவர்களின் உயிர் ஆதாரமான விளை நிலங்கள் தாரைவார்க்கப்பட்டு வணிகம் கொடி கட்டிப்பறக்கிறது. அவர்களிடம் வணிக அறம் துளியும் இல்லை. சங்க காலத்தில் வணிகர்கள் எப்படி அறத்துடன் வாழ்ந்தனர் என்பதைப் பட்டினப் பாலை கீழ்க்கண்டவாறு கூறுகிறது.

"நெடு நுகத்துப் பகல்போல
நடுவு நின்ற நல் நெஞ்சினோர்
வடு அஞ்சி வாய் மொழிந்து
தமவும் பிறவும் ஒப்ப நாடி
கொள்வதூஉம் மிகை கொளாது
கொடுப்பதூஉம் குறை கொடாது"

நுகத்தடியின் நடுவில் தைக்கப்பட்டுள்ள பகலாணி போல நடுவு நிலை தவறாத நல்ல உள்ளம் படைத்தவர்களாக வாடிக்கையாளர்களைச் சுரண்டாதவர்களாக ரேசன் கடைக்காரரைப்போல் எடையைக் குறைத்து ஏமாற்றாமல் வாழ்ந்திருக்கின்றனர். இன்றைய வணிகர்களிடம் இதில் ஏதேனும் ஒரு குணத்தை நாம் பார்க்க முடியுமா. குளிரூட்டப்பட்ட வணிக வளாகத்தில் வெற்று பாதங்களோடு நுழையும் வனப்பேச்சி வணிகம் குறித்த சிந்தனையைத் தூண்டுகிறாள். மேலும் அவளுக்கு, அங்கு இருந்தும் இல்லாத மனிதர்கள் அன்னியமாகப் படுகின்றனர்.
அண்மையில் சென்னைக்கு சென்றிருந்த போது என்னதான் நடக்கிறது என்று தெரிந்து கொள்வதற்காக நண்பருடன் குளிரூட்டப்பட்ட ஒரு வானுயர்ந்த வணிக வளாகத்தின் உள்ளே சென்றேன் பல தளங்களுக்கும் மின்சார படிக்கட்டுகளில் பயணித்தோம். எங்களால் ஒரு ஐஸ்கிரீம் கூட வாங்க இயலவில்லை . எத்தனை ரூபாயாக இருந்தாலும் வாங்குவதற்குத் தயாராக இருந்தும் நம் ரூபாய் நோட்டுகள் அங்கு செல்லுபடியாகவில்லை. இது என்ன அநியாயம் சிங்கப்பூர் மலேசியாவில் கூட நமது நாட்டு ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து பொருள்கள் வாங்கமுடிகிறது. ஆனால் நமது தலை நகரில் நம் நோட்டுகளைக் கொடுத்து ஒரு ஐஸ்கிரீம் கூட வாங்க இயலவில்லை. அந்த வணிக வளாகத்தில் நுழைந்த உடன் நூறு ரூபாய்க்கு ஒரு அட்டை வாங்கிக்கொள்ள வேண்டும் அந்த அட்டைதான் அங்கு செல்லுபடியாகும். அதற்கு என்ன பொருள், நீங்கள் அந்த நூறு ரூபாயையும் அங்கேயே செலவு செய்து விட்டுதான் வரவேண்டும். நூற்றுக்குக் குறைந்து அட்டைகள் கிடையாது. எங்கள் ஊரில் எங்கள் நிலத்தில் விளைந்த எந்த பொருளையும் கடையில் கொடுத்து எங்களுக்குத் தேவையானதை வாங்கி வருவோம் . அப்படி ஒரு பண்டமாற்று கலாச்சாரம் விளங்கிய நம் மண்ணின் இன்றைய வணிக அறம் இதுதான். வணிகம் குறித்த இத்தகைய சிந்தனைகளைத் தூண்டுகின்றன பாலைக்கலி, பெருநகர்ப் பரணி ஆகிய கவிதைகள்.
மழை குறித்த கவிதைகளில் சில கவிதைகள் மட்டுமே குறிப்பிடும் படியாக அமைந்துள்ளன. மழை குழந்தைகளுக்கும் கவிஞர்களுக்கும்தான் ரசிக்கும்படியாக உள்ளது. உழவர்களுக்கு வாழ்வாதாரமாக இருப்பினும் மழையில் நனைந்தபடி ஏர் உழுபவனால் மழையை ரசிக்க முடியாது. அது போலத்தான் இருக்கிறது 'இடுகாட்டு மழையை இரசிக்கமுடியமா என்ன' என்கிற கவிதை வரிகள்.
நம்மால் செய்யமுடியாததை நம் குழந்தைகள் செய்யவேண்டும் என்கிற எதிர்பார்ப்பு நம் எல்லோரிடமும் இருக்கிறது. நமது எதிர்பார்ப்புகளை நம் குழந்தைகள் மீது திணிக்க நினைக்கின்ற நமது மனப்போக்கினை பகடி செய்வதாக அமைந்திருக்கிறது 'பூச்சாண்டி' கவிதை.
பாடுபொருள்களடிப்படையில் சங்க இலக்கிய தொடர்ச்சியினை தமிழச்சியின் பல கவிதைகளில் காண முடிகிறது. ஒரு சிற்றூரில் பிறந்து வளர்ந்த மனுசி நகரத்தில் சந்திக்கும் அத்தனை நெருக்கடிகளையும் இந்த கவிதைகள் படம் பிடிக்கின்றன .ஒரு சில சாதாரண கவிதைகளைத் தவிர்த்திருக்கலாம்.
மூன்று தொகுதிகளை வெளியிட்டிருக்கும் தமிழச்சியின் கவிதை மொழி ஒவ்வொரு தொகுப்பிலும் செழுமையடைந்து வருகிறது. மேலும் செழுமை மிக்கக் கவிதைகளை அவர் தொடர்ந்து எழுதவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.