பகை முடிப்பதற்காக போர் மேற் சென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் பிரிந்து வருந்தும் தலைவிக்கு ஒரு பொழுது ஓர் ஊழிக்காலமாகத் தோன்றுவதால் வாடைக்காலம் தலைவியைப் பொறுத்த வரை நெடிய வாடையாய் உள்ளது. இன்பத்தில் ஈடுபடாமல் வேற்று நாட்டிற்குச் சென்று, பாசறைக்கண் தங்கி, வினைபுரியும் தலைவனுக்கு, வாடை, நல்ல வாடையாய் உள்ளது. இவ்விரு நிலைகளையும் உணர்த்துவதால் இப்பாடல் நெடு நல் வாடை எனப்பட்டது.
188 அடிகளைக்கொண்ட இந்நூலை மதுரைக் கணக்காயனார் மகன் நக்கீரன் இயற்றினார். இன்று இதனைப்படிப்பவர்களுக்கு பொருள் விளங்குவது கடினம்.
இந்நூலில் மனை வகுத்த முறை, கோபுர வாயில், முற்றம் முன் வாயில், அந்தப்புறத்தின் அமைப்பு, கட்டில், கட்டில் மேலமைந்த படுக்கை எனத் தொழிலியல் சார்ந்த பல நுட்பமான செய்திகள் மிகுதியாக இடம்பெற்றுள்ளன.
இவற்றை மனதிற்கொண்டு நெடு நல் வாடையை 96 படங்களாகக் காட்சிப் படுத்தியிருக்கிறார் பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன். இராதாகிருட்ணன் என்ற பெயரைத் தமிழில் மாற்றிக்கொண்டதோடு தன் மகனுக்கும் மெய்ம்மன் தெந்நா எனப்பெயர் சூட்டியுள்ளார்.
சென்னை கவின்கலைக் கல்லூரியில் மரபுக் கட்டடக்கலை படித்த இவர் தமிழர்களின் மரபுப்படி கட்டடங்களை அமைத்துத் தருவதில் ஆர்வமாக ஈடுபட்டு வருபவர். அது குறித்து நூலும் வெளியிட்டுள்ளார். நெடு நல் வாடையை முதலில் காட்சிப் படுத்தியதற்குக் காரணமும் அதிலுள்ள தொழில் சார் செய்திகள்தான் என்கிறார்.
சங்க இலக்கியங்கள் முழுவதையும் ஓவியங்களாக வரையத் திட்டமிட்டுள்ள இவர் தனித் தமிழில் பேசும் இயல்புடையவர். தன் மகனை சிறு வயதிலேயே சங்க இலங்கியங்களைப் படிக்க வைத்து வருகிறார் அவருக்காகத்தான் இந்த ஓவிய முயற்சி என்று மகிழவோடு தெரிவித்தார்.
பருவம் பொய்க்காமல் உரிய காலத்தில் மழையைத் தரும் மேகங்கள், தாங்கள் கிடந்த மலைப்பகுதியை வலமாக சூழ்ந்து மேலெழுந்தன என்ற பொருளிலமைந்த
வையகம் பனிப்ப வலனேர்பு வளைஇப்
பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தென
என்னும் முதல் பாடல் தொடங்கி இறுதிக் காட்சிகளை விளக்கும் அனைவரும் உறங்கும் யாமப் பொழுதிலும், துயில் கொள்ளச் செல்லாமல், பாசறையில் சிலரொடு உலவியவாறு அரசன் கடமையுணர்வினனாய் விளங்கியமையால், வாடை, அவனுக்குத் துயரைத் தராமல் நன்மையைத் தருவதாயிற்று என்னும் ஈற்றுப் பாடலான
நள்ளென் யாமத்து பள்ளி கொள்ளான்
சிலரொடு திரிதரும் வேந்தன்
பலரொடு முரணிய பாசறைத் தொழிலே
என்ற பாடல் முடிய 96 ஓவியங்களும் நம்மை சங்க காலத்திற்கே அழைத்துச் செல்வதாக அமைந்துள்ளன.
இவரின் இம்முயற்சி தமிழுக்கு முற்றிலும் புதிது. குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் இது பயன்படும். நீங்களும் நெடு நல் வாடையைக் காண விரும்புகிறீர்களா 9282348253 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள் பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மனை.
வாழ்த்துகள் தோழர் தொடர்க உங்கள் தமிழ்ப் பணி.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteசெம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தைத் தொடர்புகொண்டால் இவர் முயற்சிக்கு உதவி கிடைக்கும்.
மு.இளங்கோவன்
புதுச்சேரி
இவர் எனது உறவினர் எனச் சொல்லிக்கொள்வதில் பெருமிதம் கொள்கிறேன்.
ReplyDelete