தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking

Friday, November 19, 2010

விளிம்பு நிலை படைப்பாளிகள் – 7

விளிம்பு நிலை படைப்பாளிகள் – 7முனைவர் மு.இளங்கோவன்

தமிழகத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க கங்கைகொண்ட சோழபுரத்தை அடுத்துள்ள இடைக்கட்டு என்னும் சிற்றூரில் 20-06-1967 இல் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் முனைவர் மு.இளங்கோவன். முருகேசனார், அசோதை அம்மாள் இணையரின் மகனான இவர், தொடக்கக் கல்வியையும் உயர்நிலைக் கல்வியையும் உள்கோட்டை பள்ளிகளில் முடித்தவர் (1972-1982). மேல்நிலைக் கல்வியை மீன்சுருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் முடித்தவர் (1982-1984). மூன்றாண்டுகள் உழவுத் தொழிலில் ஈடுபட்டிருந்து, புலவர் சுந்தரேசனார் எனும் தமிழாசிரியரின் நெறிப்படுத்தலில் திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் இளங்கலை, முதுகலைப் பட்டங்களை முதல் வகுப்பில், முதல் மாணவராகத் தேறிப் பெற்றவர் (1987-1992).

பின்பு புதுவைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் க.ப. அறவாணன் தலைமையில் இயங்கிய தமிழியல்துறையில் "மராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்' எனும் தலைப்பில் ஆய்வு செய்து ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றவர்(1992-1993). பின்பு திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக நிதியுதவியுடன் முனைவர்பட்ட ஆய்வினை (1993 - 1996) நிறைவு செய்தார். "பாரதிதாசன் பரம்பரை' என்ற தலைப்பில் ஆய்வு செய்து தமிழ்க்கவிதை வரலாற்றில் பல கவிஞர்களின் வாழ்வியலையும் பணிகளையும் பதிவு செய்த பெருமைக்கு சொந்தக்காரர்.

மு. இளங்கோவன் படிக்கும் காலத்தில் தமிழக அளவில் கல்லூரி, பல்கலைக்கழக அளவில் பல கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் கலந்து கொண்டு தங்கப் பதக்கங்கள், சான்றிதழ்கள் பெற்றுள்ளார். இதில் செயங்கொண்டம் தமிழோசை நற்பணிமன்றம் நடத்திய "தாய்மொழிவழிக் கல்வி' எனும் தலைப்பிலான ஆய்வுக்கட்டுரைப் போட்டியில் முதல்பரிசாகத் தங்கப்பதக்கம் பெற்றுப் பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் பொற்கையினால் தங்கப்பதக்கம் சூட்டப்பெற்றவர். நெல்லைத் தனித்தமிழ் இலக்கியக் கழகம் நடத்திய கட்டுரைப்போட்டியில் "மூதறிஞர் வ.சுப. மாணிக்கனாரின் தமிழ்ப்பணிகள்' எனும் தலைப்பிலும், "பாவலர் முடியரசனாரின் தமிழ்த்தொண்டு' எனும் தலைப்பிலும் இருமுறை ஆய்வுக்கட்டுரை எழுதி இரண்டு தங்கப்பதக்கங்கள் பெற்றுள்ளார்.

மாணவப் பருவத்தில் மாணவராற்றுப்படை (1990), பனசைக்குயில் கூவுகிறது (1991), அச்சக ஆற்றுப்படை (1993), மராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும், விடுதலைப்போராட்ட வீரர் வெ. துரையனார் அடிகள் முதலான நூல்களை வெளியிட்டார். இந்நிலையில் 1997-இல் சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் "தமிழியல் ஆவணம்' எனும் திட்டப்பணியில் ஆய்வு உதவியாளராகப் பணிபுரிந்தார். பின்பு 1998-இல் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இசைமேதை வீ.ப.கா. சுந்தரம் அவர்களின் தமிழிசைக் கலைக்களஞ்சியம் எனும் நூலெழுத அவரின் உதவியாளராக ஓராண்டு பணிபுரிந்து களஞ்சியத்தின் நான்காம் தொகுதி வெளிவர உதவினார். இது இசைத்தமிழுக்கு இவர் ஆற்றிய தொண்டு. பின்பு கலவை ஆதிபராசக்தி கலை அறிவியல் கல்லூரியில் 1999 முதல் 2005 வரை தமிழ் விரிவுரையாளராகப் பணிபுரிந்துள்ளார்.

இந்திய அரசின் நடுவண்தேர்வாணையத்தால் தேர்ந்தெடுக்கப்பெற்று 18.08.2005 முதல் புதுவையின் புகழ்பெற்ற கல்லூரியான பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்.

மு. இளங்கோவனின் நூல்களுள் மணல்மேட்டு மழலைகள், இலக்கியம் அன்றும் இன்றும், வாய்மொழிப்பாடல்கள், பழையன புகுதலும், அரங்கேறும் சிலம்புகள், பாரதிதாசன் பரம்பரை, பொன்னி பாரதிதாசன் பரம்பரை, பொன்னி ஆசிரியவுரைகள் (ப.ஆ.), நாட்டுப்புறவியல், அயலகத் தமிழறிஞர்கள், இணையம் கற்போம் முதலியவை குறிப்பிடத்தக்கனவாம்.

கவிதைத்துறையில் ஆர்வம் கொண்ட இவர் தமிழகத்தில் வழங்கும் நாட்டுப்புறப்பாடல்களைப் பாடவும், ஆய்வுசெய்யவும் திறன்பெற்றவர். மேலும் கேரள, ஈழத்து நாட்டுப்புறப்பாடல்கள் பற்றியும் ஆய்வு செய்துள்ளார். திருச்சிராப்பள்ளி வானொலி நிலையத்தின் வழியாக இவர்தம் நாட்டுப்புறப்பாடல்கள் சிறப்பு இலக்கியப் பேருரைகளாக ஒலிபரப்பப்பட்டுள்ளன. தமிழறிஞர்களின் வாழ்வியலை இணையத்தில் பதிவு செய்யும் முயற்சியில் நூற்றுக்கணக்கான அறிஞர்களின் வாழ்வியல் இவரால் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்துக் கல்லூரி மாணவர்கள் தமிழ் இணையம் பற்றிய விழிப்புணர்ச்சி பெறத் தமிழகத்தின் பல கல்லூரிகளில் தமிழ் இணையப் பயிலரங்குகளை நடத்தி வருகிறார். இவர் உத்தமம் என்ற இயக்கத்தின் பொதுக்குழு உறுப்பினராகவும் உள்ளார். இவர்தம் இணையத் தமிழ்ப் பணியைப் பாராட்டித் தருமபுரித் தமிழ்ச்சங்கம் இணையத் தமிழறிஞர் என்னும் விருதை 2008 ஆம் ஆண்டு வழங்கிச் சிறப்பித்துள்ளது தமிழ்ஸ்டுடியோ.காம் சிறந்த வலைபதிவருக்கான விருதினை வழங்கிச் சிறப்பித்துள்ளது.இவர் இளம் வயதிலேயே தமிழுக்கு தொண்டாற்றியமைக்காக இந்திய அரசின் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் செம்மொழி இளம் அறிஞர் விருதினை (2006-2007) இவருக்கு வழங்கியுள்ளது.
சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளுக்கு கருத்தரங்கில் பங்கேற்பதற்காகவும் தமிழ் இணையப் பயிற்சி வழங்குவதற்காகவும் இரு முறை சென்றுள்ளார். பல்வேறு அயல் நாட்டுத் தமிழறிஞர்களோடு தொடர்பு கொண்டு அவர்களைப்பற்றி உலகத்தமிழர்களுக்கு இணையம் வாயிலாகத்தெறிவித்து வருகிறார்.
தமிழகத்தில் எந்த பல்கலைக் கழகத்தில் கருத்தரங்கு நடந்தாலும் அங்கு செல்லும் நபர்களில் நம் இளங்கோவனும் ஒருவர்.

இவரின் பிறந்த ஊரில் வயல்வெளிப் பதிப்பகமும், பாரதிதாசன் உயராய்வு மையமும், புலவர் ந. சுந்தரேசனார் ஆய்வு நூலகமும் இவர் மேற்பார்வையில் இயங்குகின்றன. தனித்தமிழ் ஆர்வம் நிறைந்த இவர் பேராசிரியர் க.ப. அறவாணன், பேராசிரியர் தமிழண்ணல், பேராசிரியர் பொற்கோ, பேராசிரியர் இரா. இளவரசு, பேராசிரியர் பா. வளன்அரசு ஆகியோரின் நம்பிக்கைக்குரியவர். இவரின் எதிர்காலத்திட்டம் தமிழிசைத்துறையிலும் சங்க இலக்கிய ஆய்வுகளிலும் தமிழ் இணையத்துறையிலும் ஆய்வுகளை வளர்த்தெடுப்பது.
செயலாற்றலும் தனித்தமிழ் ஆர்வமும் மிக்க இவர்; மனைவி பொன்மொழி, மகள்கள் கானல்வரி, கண்ணகி, மகன் தமிழ்க்குடிமகன் ஆகியோரோடு புதுவையில் வசித்து வருகிறார். இவர் பெயெரில் வலைப்பூ ஒன்றை உருவாக்கி வாரந்தோறும் புதுப்பித்து வருகிறார். தமிழ் அறிஞர்களைப்பற்றி இணையத்தில் தேடினால் நமக்குக் கிடைக்கின்ற பக்கங்களில் இளங்கோவன் பக்கம் நிச்சயம் இடம்பெறும்.
இணையத்தில் தமிழை எப்படிப் பயன்படுத்துவது என்பதில் சந்தேகம் ஏதேனும் இருந்தால் தயங்காமல் இளங்கோவனைத்தொடர்பு கொள்ளலாம்.
முகவரி : மு.இளங்கோவன், உதவிப்பேரசிரியர், பாரதிதாசன் மகளிர் கல்லூரி, புதுச்சேரி -605 003.
மின்னஞ்சல் : muelangovan@gmail.com
வலைப்பூ : http://muelangovan.blogspot.com
பேசி : +91 9442029053

மு.இளங்கோவன் நூல்கள்
மாணவராற்றுப்படை
பனசைக்குயில் கூவுகிறது
அச்சக ஆற்றுப்படை
மராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்
விடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்
பாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு
மணல்மேட்டு மழலைகள்
இலக்கியம் அன்றும் இன்றும்
பாரதிதாசன் பரம்பரை
பொன்னி - பாரதிதாசன் பரம்பரை
பொன்னி ஆசிரியவுரைகள்
அரங்கேறும் சிலம்புகள்
பழையன புகுதலும்
வாய்மொழிப்பாடல்கள்
நாட்டுப்புறவியல்
அயலகத் தமிழறிஞர்கள்
இணையம் கற்போம்
நன்றி : அச்சமில்லை

1 comment:

 1. வணக்கம்
  இன்று தங்களின் வலைத்தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது.. வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரி
  http://blogintamil.blogspot.com/2014/04/blog-post_8729.html?showComment=1398557553068#c6628647698252830455
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete