தை அய்ந்தாவது இதழ் வெளியாகியுள்ளது. ஆசிரியர்: கவிஞர் அறிவுமதி, நூலாக்கம் : கவிஞர் பழநிபாரதி, நூலழகு : ஆர்.சி.மதிராஜ், வெளியீடு : சாரல், 189, அபிபுல்லா சாலை, தியாகராயநகர், சென்னை- 600 017. arivumathi@hotmail.com பேச: 9940221800.
விற்பனை உரிமை : தமிழ் அலை, 1- காவலர் குறுந்தெரு, சைதாப்பேட்டை, சென்னை-600 015. tamilalai@gmail.com , பேச: 9786218777.
நூல் கிடைக்குமிடம் : தணல் பதிப்பகம், சென்னை- 14. பேச: 9445428375.
கவிதைகளோடு கவிஞர்களையும் அழகு செய்வதாக 160 பக்கங்களில் மிகச் சிறப்பாக இதழ் வந்துள்ளது. அண்ணன் அறிவுமதி அவர்களின் அழகுணர்வு இதழின் ஒவ்வொரு பக்கங்களிலும் மின்னுகிறது.
புதைந்த
உதிரக்கொடிகளின் மீது
பொழிந்த மழையில்
புத்துயிர்ப்பின் முதல் அடையாளமாய்
முளைத்துக்கொண்டிருக்கின்றன
பசும் புல்லும்
எம் சொல்லும்.
என்னும் இன்குலாப்பின் கவிதை அட்டையை அழகு செய்ய மலர்கிறது கவிதைத் தை
தையில் வந்த என் கவிதை இதோ.
ஆதி வாழ்க்கை
நுழைந்ததும்
குரைத்து வரவேற்கும்
நாய்
முற்றத்தில்
வரவேற்பறையில்
எலியின் வருகையை
எதிர்பார்த்துக் காத்திருக்கும்
பூனை
கூடு பின்னிக்கொண்டிருக்கும்
சிலந்திகளைத் துரத்தி
வேட்டையாடும்
பல்லிகள் நிறைந்த
கூடம்
கழிவு நீர்க் குழாய்
வழியாக உள்ளே வந்து
தானியங்களைத் தேடி
சமையலறையில் அலையும்
எலிகள்
அழுக்குத்துணிகளிடம்
அடைக்கலம் தேடி
படுக்கையறைக்கு வந்துவிடுகின்றன
கரப்பான் பூச்சிகள்
கழிவறை ஈரத்தில்
அடைந்து கிடக்கும்
தவளைகள் எழுப்பும்
ஒலி கேட்டு
அவ்வப்போது
வந்து போகின்றன
பாம்புகளும்
தோட்டத்து முக்கனிகளைப்
பதம் பார்க்கும்
குரங்குகள்
நகரத்தில்
அமைந்திருந்தாலும்
இயற்கையோடு இயைந்ததுதான்
எங்கள் வாழ்வும்.
No comments:
Post a Comment