இசையை உயிராக நேசிப்பவன்
கற்றுக்கொள்வதற்காக
பட்டினி கிடந்தேனும்
பறையைக்கொணரும்
திறம் படைத்தவனுக்கு
அலகிட்டு வாய்பாடு
சொல்லித்தருகிறார்
தமிழாசிரியர்
அதனை இளையராஜாவின்
இசையோடு
பொருத்திப் பார்க்கிறான்
அவன்
காய்ச்சிய பறையில்
பேசத்தெரிந்தவனுக்கு
வவ்வல்ஸ் எல்லாம்
வவ்வாலாய்த்தெரிவதில்
வியப்பேதுமில்லை.
வடிவியலில் வட்டம்
வரையும் போதெல்லாம்
அவன் பறையை வரைந்து
பார்ப்பதாக
எண்ணி மகிழ்வான்
ஒலியில் விளயாடும்
அவனுக்கு
ஓம்ஸ் விதி பற்றி
கவலை இல்லை
காலத்தை தீர்மானிக்கப்போகிறவனுக்கு
காலக்கோடு எதற்கெனெ
எண்ணினான்
கடந்த ஆண்டு கலைக்கழகப்போட்டியில்
கோப்பை வென்ற அவனுக்கு
வருகையைக் காரணம்
காட்டி
அனுமதி மறுக்கப்பட்டதும்
விடுதலைப் பறவையாய்
வந்து
உற்று நோக்குகிறான்
போட்டிகளை
கருவி இசைக்கான
முடிவுகள்
வெளியாகி வேறொருவன்
பெற்றுவிட்ட சான்றிதழைக்
கிழித்தெறிந்துவிட்டு
இளையராஜாவாக விரும்பியவனை
இஞ்சினியர் ஆக்கத்துடிக்கும்
ஆசிரியர்களை
சபித்தபடி வெளியேறினான்
கருப்புசாமி என்றொரு
மாணவன்.
No comments:
Post a Comment