சுட்டெரிக்கும் கோடையிலும்கூட
திருமுட்டம் செல்லும்போதெல்லாம்
வெள்ளாற்றின் தென்கரையில் பார்த்திருக்கிறோம்
ஓடி வரும் ஊற்று நீரை
கால்நடைகளின் உறும நேர உயிர்த்தண்ணீர் அது!
பீக் கருவை அடம்பினுள்ளிருக்கும்
அதன் ஆதி தேடி தாகம் தணிப்பர் ஆடு மேய்க்கும் சிறுவர்
அதைச் சேகரித்தே கல்லறுத்து
காளவாய் அமைத்தாராம் கள்ளிப்பாடியில் ஒருவர்
ஆற்றுக்குள்ளிறங்கும் எவரும்
அதில் கால் நனைத்தே கடந்து போக வேண்டும்
கோட்டூர் ஆலைக்கு
குறுக்கு வழியில்
கரும்பேற்றிச்செல்வதற்கு அமைத்த
சாலைச் செம்மண் குருடாக்கித் தொலைத்தது
ஆற்றோர ஊற்றுக் கண்களை.
No comments:
Post a Comment