இடைநிலை ஆசிரியர்
பயிற்சியை 1989 ஏப்ரலில் முடித்தாலும், பட்டயமும் சான்றிதழும் 1989 ஜூனில்தான் கிடைத்தன.
1989 ஆகஸ்ட் 10 ஆம் தேதி அப்பாவின் நண்பர் திரு கேசவன் அவர்கள் தாளாளராக இருந்த சு.கீணனூர்
உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் விடுப்புப் பதிலி ஆசிரியராக பணியில் சேர்ந்தேன். எனக்காகவே
ஆசிரியர்கள் திரு.மகாலிங்கம், திரு.ஜெயராமன், திரு.கேசவன் ஆகியோர் மருத்துவ விடுப்பில்
சென்றனர். இப்படி முதல் ஆறுமாதம் கீணனூர் பள்ளியில்தான் என் ஆசிரியர் வாழ்வு தொடங்கியது.
என் தந்தையும் இப்பள்ளியில்தான் தன் பணியைத்தொடங்கினாராம்.
அதன் பிறகு
19.8.1991 இல் தொழூர் உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் பணி கிடைத்தது. அங்கு ஒரு 8 ஆண்டுகள்.
அங்கு ஆண்டுதோறும் நடைபெறும் ஆண்டுவிழா சுற்றுவட்டார ஊர்கள் வரை பிரபலமானது. மாணவர்களின்
பல திறமைகளை வெளிக்கொணர்ந்தோம். கல்விச்சுற்றுலாவும் மாணவர்களுக்கும் எங்களுக்கும்
புதிய அனுபவங்களைக் கற்றுக்கொடுத்தது. அப்போது தலைமை ஆசிரியராகப் பணியாற்றிய திரு.ராஜகோபால்
அவர்கள் ஒவ்வொரு வகுப்பிலும் மெல்லக்கற்கும் மாணவர்களை தனியாகப் பிறித்து சிறப்பு கவனம்
செலுத்தி அவர்களையும் மற்ற மாணவர்களுக்கு இணையாகக் கொண்டு வருவார். இப்போது உள்ளதுபோல்
அன்று எந்த சிறப்பு திட்டங்களும் கிடையாது. அவரே தன் சொந்த அனுபவத்தில் இத்தகைய செயலைச்செய்தது,
இன்று நினைக்க வியப்பாக இருக்கிறது. அவரைத் தொடர்ந்து தலைமை ஆசிரியராக வந்த திரு.சதாசிவம்
அவர்கள் வேதாத்திரி மகரிஷியின் சீடர். இயற்கை உணவு எளிய உடற்பயிற்சிகளில் ஆர்வம் உடையவர்.
எங்களுக்கும் அவ்வப்போது அவற்றைப் பழக்குவார். அலுவலகப் பணிகளைக் கற்றுக் கொடுத்தவரும்
அவரே. அப்பள்ளியில் பணியாற்றியபோதுதான் டெல்லியில் ஒரு மாதகால பொம்மலாட்டப்பயிற்சியைப்பெற்றேன்.
அறிவொளி இயக்கத்தில் ஒன்றிய திட்ட ஒருங்கிணைப்பாளராக ஓராண்டுகாலம் மாற்றுப்பணியாற்றினேன்.
கம்மாபுரம் ஒன்றியம் முழுக்க கற்றலுக்கான கலைப்பயணம் சென்றது இன்றும் பசுமையான நினைவுகள்.
திரு. இறையன்பு இ.ஆ.ப. அவர்களின் நட்பு கிடைத்ததும் அப்போதுதான். அன்றைய தென்னார்க்காடு
மாவட்ட கூடுதல் ஆட்சியர் அவர்.
அதன்பிறகு அரசு
பணி கிடைத்து 19.01.1999 இல் பெலாந்துறை தொடக்கப்பள்ளியில் பணியில் சேர்ந்தேன். அங்கு
ஒராண்டு பணிக்குப்பின் கார்குடல் நடுநிலைப்பள்ளிக்கு பணிமாறுதல் பெற்றேன். அப்பள்ளியில்தான்
பல செயல்பாடுகளைச் சோதனை அடிப்படையில் நிகழ்த்திப்பார்த்தேன். அதற்கான ஒத்துழைப்பு
பெற்றோர் ஆசிரியர் தலைமை ஆசிரியர் என அனைத்து தரப்பிலும் சிறப்பாகக் கிடைத்தது பள்ளிக்கு
செல்லாத நாடோடி சமூகமான சாதிப்பிள்ளை மாணவனை பள்ளியில் சேர்த்து படிக்கவைத்தேன். நடு
நிலைப்பள்ளி அளவில் சாரணர் இயக்கத்தைத்தொடங்கி மூன்று மாணவர்களை ஆளுநர் விருது பெற
வைத்தேன். தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் மாணவர்களைப்பங்கேற்க வைத்து குழந்தை
விஞ்ஞானிகள் பட்டம் பெற வைத்தேன். மாணவர்களுக்கான இதழை ”தளிர்” என்ற பெயரில் அச்சிட்டு
வெளியிட்டேன். மாணவர்களே தயாரித்த மூலிகைப் பல்பொடியை பெற்றோர்களுக்கு அறிமுகம் செய்து
உள்ளூர் வளங்களை சிறப்பாகப் பயன்படுத்தினோம். முன்னோடி சாரணர் ஆசிரியர் பயிற்சி பெற்றதும்
இங்கு பணியாற்றியபோதுதான். மாணவர்களுக்கான ஓவியப் பயிலரங்கை ஓவியர் கோவிந்தன் ஓவியர்
காசி அவர்களின் ஒத்துழைப்போடும் மகளிர் சுய உதவிக்குழுவின் ஒத்துழைப்போடும் நடத்தினோம்.
அதன் பிறகு வேப்பங்குறிச்சி
நடுநிலைப்பள்ளி உயர்நிலைப்பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டபோது விருப்ப மாறுதலில் அங்கு
சென்று ஓராண்டு பணியாற்றினேன். அங்கும் அறிவியல் இயக்க ஆய்வுகள் தொடர்ந்தன. பாரம்பரிய
விதைகளைப் பாதுகாப்பதற்காக ஒரு விதை வங்கியை ஏற்படுத்தினோம். சூரிய ஒளியைக்கொண்டு குடிநீரை
சூடேற்றும் எளிய சாதனத்தை உருவாக்கினோம்.
பின்னர் விருத்தாசலம்
அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் பணியாற்றிடும் வாய்ப்பு கிடைத்தது. அங்கு இலக்கிய
மன்றச்செயலாளராக செயல்பட்டு பேராசிரியர் நன்னன் உள்ளிட்ட தமிழ் அறிஞர்களைப் பள்ளிக்கு
அழைத்து மாணவர்களிடையே தமிழ் உணர்வை ஏற்படுத்தினேன். குறுவட்ட வளமைய ஒருங்கிணைப்பாளராகவும்
செயல்பட வாய்ப்பு கிடைத்தது.
தமிழில் முனைவர்
பட்டம் பெற்றிருந்தாலும் பதவி உயர்வு கிடைக்காமையால் கணக்கில் இளங்கலைப்பட்டம் பெற்று
பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற்று விரும்பிய இடம் கிடைக்காமையால் கிடைத்த ஊரைத்தேர்ந்தெடுத்தேன்.
ஆனால் அங்கு சென்று பணியாற்றிட விருப்பமின்மையால் அரசியல் செல்வாக்கை முதன்முதலாக பயன்படுத்தவேண்டியதாயிற்று.
அப்படித்தான் தொரவளூர் பள்ளியில் சேர்ந்தேன். அப்போதுதான் சமச்சீர் கல்வி அறிமுகமானது.
அதனைத்தொடர்ந்து முப்பருவக் கல்வியும் தொடர் மதிப்பீட்டு முறையும் அறிமுகமானது. சுட்டி
விகடன் இதழில் நண்பர் கணேசன் வாயிலாக சரவணன் அவர்களின் தொடர்பும் கிடைத்தது. வளரறி
மதிப்பீடுகளுக்கான எளிய செயல்பாடுகளை ஊடகத்தின் வாயிலாகவும் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு
அன்றிலிருந்து இன்று வரை தொடர்கிறது. இரண்டு ஆண்டுகளுக்குப்பிறகு பணி நிரவலில் தற்போது
பணியாற்றிக்கொண்டிருக்கும் மன்னம்பாடி பள்ளிக்கு செல்ல நேர்ந்தது. இப்பள்ளியில் முதலில்
சில கசப்பான அனுபவங்கள் நிகழ்ந்தாலும் தொடர்ந்து என்னால் இயன்ற சில பணிகளை இன்று வரை
தொடர்கிறேன்.
மொத்தத்தில் இப்பணி,
ஒரே வேலையைத் தொடர்ந்து 25 ஆண்டுகள் செய்த அலுப்பை சில நேரங்களில் ஏற்படுத்தியிருந்தாலும்
வெவ்வேறு விதமான குணங்களையுடைய பத்தாயிரம் மாணவர்களைச் சந்தித்திருக்கிறேன், அவர்களோடு
கலந்துரையாடியிருக்கிறேன், அவர்களுக்கு ஆலோசனை வழங்கியிருக்கிறேன் என நினைக்கும்போது
மிகவும் நிறைவாகவே உள்ளது.
அதைவிட என்னிடம்
படித்த மாணவர்கள் பலர் இன்றும் தொடர்பில் உள்ளனர். முகநூல் நண்பர்களாக உள்ளனர் என்று
நினைக்கும்போது இப்பணி நிச்சயம் ஒரு வரமாக்க் கிடைக்கப் பெற்றதுதான்.
இப்பணியில் என்னுடன்
பயணித்த சக ஆசிரியர்களை நன்றியோடு நினைத்துப்பார்க்கிறேன். நீங்கள் இல்லாமல் இது சாத்தியம்
இல்லை நண்பர்களே. இயன்றதைச் செய்வோம் இதயத்தால் செய்வோம்.
No comments:
Post a Comment