ஆசிரியர் என்பவர் மாணவர்கள் கல்வி கற்பதற்கான சூழலை ஏற்படுத்தித் தரக்கூடிய ஃபெசிலிடேட்டர் ஆக இருக்கவேண்டும் என்பதே நவீன கல்விமுறையின் கொள்கையாக உள்ளது. ஆனால் நடைமுறையில் நம் ஆசிரியர்களால் அப்படி இருக்க முடிகிறதா? என்றால் இல்லை என்பதுதான் உண்மை நிலை. இதற்குக் காரணம் ஆசிரியர்கள் மட்டுமல்ல. அவர்களை அப்படி இருக்கவிடாமல் செய்கிற நமது அரசும்தான்.
மாணவர்களை மதிப்பெண் பெறுகிற இயந்திரமாக மட்டுமே பார்க்கும் நிலை இருக்கின்ற வரை நம் ஆசிரியர்கள் ஃபெசிலிடேட்டர்களாக இருப்பது சாத்தியமிலை. அப்படி இல்லாமிலிருப்பதைக்கூட சகித்துக்கொள்ளலாம். அனால் ஒவ்வொரு ஆசிரியரும் டீச்சராகக்கூட இனி இருக்கமுடியாது. வெறும் கோச்சராக மட்டுமே காலம் தள்ளவேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளனர். நம் ஆட்சியாளர்களும் உயர் அதிகாரிகளும் இந்த நிலைக்கு தமிழக ஆசிரியர்களைத் தள்ளியுள்ளனர்.
நூறு விழுக்காடு தேர்ச்சி என்ற இலக்கின் மூலம் கற்பித்தல் என்னும் செயல்பாட்டிற்கு கொஞ்சம் கொஞ்சமாக மூடுவிழா நடத்திவிடுவார்கள். கடந்த ஆண்டு 90% தேர்ச்சி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த ஆண்டு இலக்கு 100% ஆகும். இதனை மேலோட்டமாக பார்க்கும் பொதுமக்கள் நல்ல முயற்சிதானே என்று எண்ணுகின்றனர். ஆனால் இது முழுமையான கற்பித்தலுக்கு எதிரான செயலாகும். கல்வி என்பது சிறுவர்களிடையே ஆளுமைப் பண்பை வளர்க்க வேண்டும். அப்படியெனில் ஒருவரின் உடல் உள்ளம், ஆன்மா ஆகிய மூன்றின் ஒருங்கிணைந்த வளர்ச்சியே ஆளுமைக்கு அடிப்படை. இவற்றைப்பறியெல்லாம் கவலைப்படாமல் மதிப்பெண் பெறுவது மட்டும்தான் சிறந்த கல்வி என்ற நிலைக்கு வந்திருக்கிறது இன்றைய அரசு. அதனால்
மாணவர் மைய கல்வி என்பது மதிப்பெண்
மையக்கல்வியாக மாறியுள்ளது.
100% தேர்ச்சி என்ற கொள்கைக்கும் கற்பித்தலுக்கும் என்ன தொடர்பு இருக்கமுடியும் என்றுதானே யோசிக்கிறீர்கள். 100% தேர்ச்சி என்பது வழக்கமான கற்பித்தல் முறையைப் பின்பற்றி நிச்சயமாக பெறமுடியாத ஒன்று. அதற்கென சில முறைகளை பின்பற்றிட உயர் அலுவலர்களே ஆசிரியர்களுக்கு மறைமுகமாக வலியுறுத்துகின்றனர். ஒவ்வொரு பாடத்தையும் எத்தனை பாடவேளைகளில் முடிக்கவேண்டும் என்ற கணக்கு இருக்கிறது. ஒரு பாடநூலில் உள்ள அத்தனைப் பாடங்களையும் ஒரு கல்வியாண்டிற்குள் முடிக்கவேண்டும் என்பதுதான் நியதி.அப்படி முடித்தால் ஓர் ஆண்டில் 3 தேர்வுகள் மட்டுமே நடத்தவேண்டும். நாம் படிக்கும் போது அப்படித்தான் தேர்வு எழுதினோம். காலாணடு,அரையாண்டு முழுஆண்டு என 3 தேர்வுகள் மட்டுமே எழுதுவோம். ஆனால் இன்றைய நிலை அப்படியா உள்ளது. வாரத்தேர்வு, மாதத்தேர்வு, பருவத்தேர்வு, திருப்புதல் தேர்வு, பொதுத் தேர்வு என ஆண்டு முழுவதும் தேர்வுகள், மாணவர்களை அச்சுறுத்தி அச்சுறுத்தி மன அழுத்தத்திலேயே வைத்துள்ளன. எனக்கு
தெரிந்த ஒரு ஆசிரியர் பள்ளி திறந்த முதல்நாளான ஜூன் 1 ஆம் தேதியே 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு வைத்தார் . இதனை உங்களால் நம்ப முடிகிறதா? அனால் இது உண்மை.
அலுவலர்கள் ஆசிரியர்களிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்றால் 10 ஆம் வகுப்பில் எப்படியாவது 35 மதிப்பெண் எடுத்து தேர்ச்சிபெறச் செய்து விடுங்கள் 100% தேர்ச்சி என்ற இலக்கை எளிதாக எட்டிவிடலாம். எப்படியாவது என்பதற்கு நீங்கள் தவறாக பொருள்கொள்ள வேண்டாம். ஒரு நாளைக்கு ஒரு மதிப்பெண்ணுக்கு சொல்லிக்கொடுத்தாலே போதும் 180 நாள்கள் பள்ளி நடைபெறுகிறது. அதில் ஆசிரியர்கள் விடுப்பு, இதர பணிகள், தேர்வுகள், மாணவர் விடுப்பு என 80 நாட்கள் போனாலும் மீதமுள்ள 100 நாட்கள் சொல்லிக்கொடுத்தாலே 100 மதிப்பெண் பெற்று விடலாம் என எல்லா நடைமுறைகளையும் கணக்காக அணுகுகின்றனர். இவர்களின் கணக்குப்படி ஒரு ஆசிரியர் ஒரு நாளைக்கு ஒரு மதிப்பெண்ணுக்கு மட்டும் நடத்தினால் போதுமா அப்படித்தான் நடத்தமுடியுமா? இதனுடைய விளைவுதான் முதல் வேலை நாளிலேயே தேர்வு வைத்தார் அந்த ஆசிரியர். நமக்கு ஏன் வம்பு என்று பல ஆசிரியர்கள் மாணவர்களைத் தேர்வுக்கு தயார்செய்வதையே குறிக்கோளாகக்கொண்டு செயல்பட்டு வருகின்றனர். இதனால் முழுமையான கற்பித்தல் நடைபெறாமல். வினாவுக்கான விடையைத் தயார்செய்து மாணவர்களுக்கு வழங்கி மனப்பாடம் செய்து தினமும் எழுதிக்காட்டி அவனை தேர்வுக்கு முழுமையாக தயாரித்து விடுகின்றனர். சைக்கிளை தினமும் ஓட்டி ஓட்டி பயிற்சி எடுத்துக்கொள்வதுபோல் தேர்வை எழுதி எழுதி பயிற்சி எடுக்கின்ற ஒரு பயிற்சிக்கூடமாக பள்ளிகள் மாறிவருகின்றன. இதனால் மாணவர்களின் கண்ணுக்குத் தெரிவதெல்லாம் தேர்வும் மதிப்பெண்ணும் மட்டுமே. யார் எப்படிப் போனாலும் எனக்குக் கவலையில்லை. எனக்கு என் தேர்வு முக்கியம் மதிப்பெண் அதைவிட முக்கியம். இப்படி ஒரு இளைஞர் சமூகத்தை நம் பள்ளிகள் உருவாக்கி வருகின்றன. இது எதிர்காலத்தில் மிகுந்த ஆபத்தை ஏற்படுத்தும். இப்படி வளரும் ஒருவன் இந்த சமூகத்தைப் பற்றியோ நம் நாட்டைப் பற்றியோ நிச்சயம் கவலைப்பட மாட்டான். இன்றைய மாணவர்கள் எதிர்கால சமூகத்தின் தூண்கள் அல்லவா? இப்படி பலகீனமான தூண்களை நாமே விரும்பி உருவாக்குகிறோமே இது எங்கே போய் முடியப்போகிறது என்று சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?
அரசு, கல்வித்துறைக்கு பல
கோடி ரூபாய் செலவு செய்கிறது. அந்த செலவுக்கு முழுமையான பலன் வேண்டாமா? அதனால்தான் 100% தேர்ச்சியை எதிர்பார்க்கிறது. எப்படி செலவாகிறது இந்த தொகை. அரசு பள்ளியில் மட்டுமல்ல அரசு உதவிபெறும் பள்ளியிலும் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் 14 வகையான நலத்திட்டங்கள் செயல்படுகின்றன. அவற்றுள் பெரும்பாலானவை விலையில்லா திட்டங்கள். மிதிவண்டி, மடிக்கணினி, சீருடை, பை, நோட்டு , பாடநூல், வடிவியல் பெட்டி, நிலவரைபடநூல், செறுப்பு என எல்லாம் விலையில்லாமல். இது உண்மையில் மிகப்பெரிய புரட்சிதான். உண்மையில் தேவையான திட்டங்கள்தான். இவற்றை எல்லாம் வெற்றிகரமாக செயல்படுத்த முடிகிறதா என்றால் புள்ளிவிவரப்படி முடிகிறது. சீருடையும் பாட நூலும் முழுமையாக வழங்கப்படுகின்றன. மற்ற பொருள்கள் ஒவ்வொரு கல்வியாண்டிலும் வழங்கப்பட்டாலும் மாணவர்களுக்குத் தேவைப்படும்போது கிடைப்பதில்லை. பாடநூல், நோட்டுகள் தவிர மற்ற பொருள்களின் தரம் முழுமையாக இல்லை. இந்த திட்டங்கள் மூலம் அலுவலர்கள் முதல் ஆட்சியாளர்கள்வரை அனைவருக்கும் பல கோடி ரூபாய் கமிஷனாகச் செல்கிறது என்பதை பல பத்திகைகளில் செய்திகள் வந்துள்ளன. ஆனால் அவற்றைப்பற்றியெலாம் கவலைப்படாமல் ஆசிரியர்களையும் மாணவர்களையும் வதிக்கின்றனர்.
10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களை விளையாட்டுப் பாடவேளையில்கூட விளையாட விடுவதில்லை. வாழ்க்கைக்கல்வி, நன்னெறிக்கல்வி என எந்த பாடவேளையாக இருந்தாலும் யாராவது ஒரு பாட ஆசிரியர் அந்த பாடவேளையில் அங்கு சென்று அவரது பாடத்தைப் படிக்க வலியுறுத்துவார் அல்லது தேர்வு வைப்பார். அது மட்டுமின்றி காலை மாலை சிறப்பு வகுப்புகள் என அரசு பள்ளிகளும் இன்று மதிப்பெண் ஒன்றே குறியாக செயல்படுவது எதிர்கால சமூகத்திற்கு உகந்தது அல்ல. மதிப்பெண் பற்றிய கவலைகளிலிருந்தும் மன உளைச்சல்களிலிருந்தும் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் விடுதலை கொடுப்போம் அரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவோம்.
நன்றி: தினகரன்
No comments:
Post a Comment