தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking

Monday, August 8, 2016

பூகம்பம் கிளப்பும் புதிய கல்விக்கொள்கை






மத்திய அரசு, புதிய கல்விக் கொள்கை மூலம் பள்ளிக்கல்வி மற்றும் உயர் கல்வியில் பல மாற்றங்கள் கொண்டு வருவதற்கான பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. முன்னாள் அமைச்சரவைச் செயலாளர் டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன் தலைமை யிலான புதிய கல்விக் கொள்கை வரையறை செய்வதற்கான கமிட்டியின் அறிக்கை மனித
வளத்துறை இணையதளத்தில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. அந்த அறிக்கையில் இதுவரை நடைமுறையில் இருந்த பல திட்டங்களை மாற்றுவது குறித்தும், புதிய திட்டங்களை உருவாக்குவது குறித்தும் பல்வேறு அம்சங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இலவசக் கட்டாயக் கல்வி உரிமை சட்டப்படி, 8ம் வகுப்பு வரையிலான, ‘ஆல்பாஸ்’ திட்டம் மாற்றப்பட்டு, 5ம்வகுப்பு வரை மட்டுமே மாணவர்கள் பெயிலாக்கப்படாமல், தேர்ச்சி பெறச் செய்யப்படுவர் என்று புதிய கல்விக் கொள்கை தெரிவிக்கிறது.

5ம் வகுப்பு வரை மாணவர்கள் போதிய திறனின்றி இருந்தால் அவர்களுக்கு மாலை நேரச் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்றும் முழுமையாகத் தகுதிப்படுத்தியே தேர்ச்சி பெறச் செய்ய வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் தேர்ச்சி பெறாவிட்டால் உடனடியாக மறுதேர்வு நடத்தப்பட வேண்டும்.

2 முறை மறுதேர்வு வாய்ப்புகள் வழங்கப்பட்டும் தேர்ச்சி பெறாத மாணவர்கள் மீண்டும் அதே வகுப்பில் படிக்க வேண்டும். அடுத்த ஆண்டும் தேர்ச்சி பெறாவிட்டால், ரெகுலர் வகுப்பில் இருந்து அவர்களை மாற்றி தொழிற்கல்வி வகுப்புகளுக்கு அனுப்ப வேண்டும் என்றும் புதிய கல்விக்கொள்கை வலியுறுத்துகிறது.

இது குறித்து கல்வியாளர்கள் என்ன சொல்கிறார்கள்...!
             இரத்தின புகழேந்திஆசிரியர்/எழுத்தாளர்ஆல்பாஸ் என்பது படிக்காமலே மாணவனைத் தேர்ச்சி பெற வைப்பது கிடையாது. தேர்ச்சி பெறும் அளவுக்கு அவர்களைத் தகுதியுடையவர்களாக மாற்றுவது என்பதுதான் உள்கருத்து. அதாவது, நூறு மாணவர்கள் 
படித்தார்களென்றால் நூறு பேரையும் தகுதியானவர்களாக மாற்ற வேண்டும். 

ஆனால், அதைத் தவறாகப் புரிந்துகொண்டு படித்தாலும் படிக்காவிட்டாலும் ஒன்பதாம் வகுப்பு வரை பாஸ் போட்டு விடுகிறார்கள். இதனால் மாணவர்களின் கல்வித்தரம் குறைந்து விடுகிறது. தவறு ஆசிரியர்கள் பக்கம் இருக்க, மாணவர்களைப் பின்தள்ளுவது சரியல்ல. ஆசிரியர்கள் மாணவர்களின் உளவியல் அறிந்து பாடம் நடத்தும் வகையில் தகுதிப்படுத்தப்பட வேண்டும். 

‘இடைநிற்றல் அதிகமாக உள்ளது’ என்றும் ‘அதை மாற்றவேண்டும்’ என்றும் பேசிக்கொண்டு அதற்கு எதிராக இப்படி ஒரு நடைமுறையைக் கொண்டு வந்தால் நிலை இன்னும் மோசமடையவே செய்யும். இதனால் அடித்தட்டு, ஏழை மக்களுக்குக் கல்வி கிடைக்காமல் போகும். இந்தப் பிரச்னையில் வெறும் மாணவரை மட்டுமோ, ஆசிரியரை மட்டுமோ, அரசை மட்டுமோ குறை சொல்ல முடியாது. 

அனைவரும் ஒன்றுபட்டு குறைகளைக் களைந்தால் மட்டுமே கல்வித்தரத்தை உயர்த்த முடியும். பின்தங்கும் மாணவனுக்குச் சிறப்பு கவனம் செலுத்தி படிக்க வைக்க வேண்டும். அனைத்து மாணவர்களையும் தகுதியானவர்களாக ஆக்க வேண்டும். அதுதான் ஆல்பாஸ் என்பதின் பொருள்.

‘பாடம்’ நாராயணன்சமூக ஆர்வலர்8ம் வகுப்பு வரை ஆல்பாஸ் என்பதின் அர்த்தமே பின்தங்கிய மாணவர்களையும் தகுதியானவர்களாக மாற்ற வேண்டும் என்பதுதான். ஐந்தாம் வகுப்பில் ஒரு மாணவன் நன்றாகப் படிக்கவில்லை என்றாலும் அவனை ஆறாம் வகுப்புக்கு அனுப்புவதோடு அவனுக்கு அடுத்த ஆண்டிலும் ஐந்தாம் வகுப்புப் பாடத்தையும் ஆறாம் வகுப்புப் பாடத்தையும் தெளிவாகச் சொல்லிக் கொடுத்து தகுதி யானவனாக்க வேண்டும்.

ஆனால், நம் ஆசிரியர்கள் மாணவன் படித்தாலும் படிக்காவிட்டாலும் பாஸ் ஆக்கிவிடுகிறார்கள். அவர்கள் சிரமப்படத் தயாராக இல்லை. அதனால்தான் எட்டாம் வகுப்பில் படிக்கும் மாணவனுக்கு மூன்றாம் வகுப்புக்குரிய மாணவனின் தகுதி கூட இல்லை. சின்ன கணக்கு கூட போடத் தெரியாமல் இருக்கிறார்கள். இதில் மாணவர்களைக் குறை சொல்ல முடியாது. ஆசிரியர்கள் அலட்சியமாக இருக்கிறார்கள்.

நாம் மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்கும் முறையையும் தேர்வு முறையையும் மாற்ற வேண்டும். ஒரு வகுப்பில் 20 மாணவர்கள்தான் இருக்க வேண்டும் என்று கல்வி உரிமைச்சட்டம் சொல்கிறது. ஆனால், உண்மையில் பார்த்தால் ஒரு வகுப்பில் 50 மாணவர்கள் இருக்கிறார்கள். ஆசிரியர்களால் கவனம் செலுத்த முடியவில்லை.

ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் இருந்தால் பின்தங்கிய மாணவர்களிடம் ஆசிரியர்கள் சிறப்புக் கவனம் செலுத்த முடியும். மேலும் ஆசிரியருக்குச் சரியான கற்பிக்கும் திறன் இருக்க வேண்டும். தேர்வுமுறையில் மனப்பாடம் செய்யும் முறையை மாற்ற வேண்டும். இந்த மாற்றங்களையெல்லாம் செய்யாமல் 5ம் வகுப்பு வரை ஆல்பாஸ்... 8ம் வகுப்பு வரை ஆல்பாஸ்... என்று பேசுவது சரியாகாது.

எஸ்.எஸ்.ராஜகோபால் மூத்த கல்வியாளர்

ஒரு மாணவன் தோல்வி அடைகிறான் என்றால் அதில் குறை மாணவனிடம் இல்லை. கல்வி அமைப்பிடம்தான் உள்ளது. ஆசிரியர் இல்லாமல் இருப்பது, ஒரே ஆசிரியர் பல வகுப்புகளுக்குப் பாடம் எடுப்பது, பாடத்திட்டம் சுமையானதாக இருப்பது எனப் பல காரணங்கள் இருக்கலாம். நம் நாட்டுப் பாடத்திட்டம் தொடக்கக் கல்வியில் மிகவும் சுமையானது.

படித்த நடுத்தர வர்க்கத்துக்காக உருவாக்கப்பட்ட பாடத்திட்டம் இது.  மாணவன் படிக்கத் தகுதியற்றவன் என்றால் எப்படிப் பத்தாம் வகுப்புத் தேர்வில் நூறு சதவீத தேர்ச்சியெல்லாம் அடைய முடிகிறது. படிக்கத் தகுதியற்றவன் என்றால் எப்போதோ பள்ளியை விட்டு போயிருப்பான். ஆகவே கல்வி அமைப்பில்தான் மாற்றம் கொண்டுவரவேண்டும் என்பது என் கருத்து.

ரத்தின சபாபதிதலைவர்,பொதுப் பள்ளிக்கான மாநில மேடை 8ம் வகுப்பு வரை ஆல்பாஸ் என்ற நடைமுறை இருப்பதில் தவறு இல்லை. எப்படியும் பத்தாம் வகுப்பு வரை படித்துவிடுவார்கள். அடுத்து அவர்களின் சந்ததியைப் படிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகும். நாங்கள் படித்த போதெல்லாம் பத்தாம் வகுப்பில் அரையாண்டுத் தேர்வு நடத்தி அதில் பாஸ் ஆனால்தான் முழு ஆண்டுத் தேர்வுக்கு அனுப்புவார்கள்.

இதற்கு செலக்சன் என்று பெயர். இப்படிச் செய்வதால் நிறைய மாணவர்கள் வடிகட்டப்பட்டு படிப்பில் கவனம் இல்லாமல் போகும் என்பதால்தான் காமராஜர் காலத்தில் பத்தாம் வகுப்பு வரை படித்தவர்களுக்குச் சான்றிதழ் கொடுத்துவிட்டால் அவனுக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கும்... மேற்கொண்டு படிக்க எண்ணம் வரும் என்ற அடிப்படையில் 9ம் வகுப்பு வரை ஆல்பாஸ் கொண்டுவந்தார்கள்.

ஆனால், நம் ஆசிரியர்கள் 9ம் வகுப்பு வரை பாஸ் மட்டும் பண்ண வைக்கிறார்களே தவிர, கல்வித் தரத்தை உயர்த்துவதில் கவனம் செலுத்துவதில்லை. ஆனால், 8ம் வகுப்பு வரை ஆல்பாஸ் என்ற திட்டத்தில் தேர்ச்சியடையாத மாணவர்களுக்கு உடனடித் தேர்வு வைத்தும் பாஸாகாவிட்டால் தொழிற்கல்விக்கு அனுப்பலாம் என்கிறார்கள். அப்படிச் செய்தால் அது பழைய குலக்கல்வி முறைக்கு வழி வகுத்துவிடும்.

கல்வி தரமாக அமைவதற்கு ஆசிரியர், பெற்றோர், கல்வி நிறுவனங்கள், அவற்றுக்குண்டான சட்டதிட்டங்கள், சமூகம் எனப் பல கட்டமைப்புகள் ஒழுங்காக இணைந்து செயல்பட வேண்டும். ஆசிரியர்களை மட்டுமே குறை சொல்ல முடியாது. அதே சமயம் மாணவர்களைத் தகுதியானவர்களாக ஆக்குவதில் ஆசிரியர்களுக்கு பெரும்பங்கு உள்ளது என்பதையும் மறுக்க முடியாது.

நன்றி -எம்.நாகமணி
http://kungumam.co.in/CArticalinnerdetail.aspx?id=2482&id1=93&issue=20160716

No comments:

Post a Comment