ஒலிம்பிக் போட்டியின் பதக்கப்பட்டியலை நாள்தோறும்
ஆவலாய்ப் பார்ப்பேன். நம் இந்தியா எந்த இடத்தில் இருக்கிறது என்று. அது பட்டியலிலேயே
இல்லை என்பது நமக்கு வருத்தமாக இருக்கலாம். நம்மை விட மக்கள் தொகையிலும் பரப்பளவிலும்
குட்டி நாடான ஜப்பான் இன்றைய நிலவரப்படி (11.8.2016) 18 பதக்கங்களைப்பெற்று மூன்றாமிடத்தில்
உள்ளது. மக்கள் தொகையில் உலகின் இரண்டாவது பெரிய நாடான நம்மால் ஏன் மற்ற நாடுகளோடு
விளையாட்டில் ஈடு கொடுக்க இயலவில்லை என்பது கவலைக்குறிய ஒரு கேள்வியாகும். இந்த ஒலிம்பிக்
போட்டியில் மட்டுமல்ல நடந்து முடிந்த ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டியிலும் இந்தியாவின் நிலை
மிகவும் கவலைக்கிடமானதுதான்.
நம் நாட்டில் விளையாட்டுக்கு முக்கியத்துவம் இல்லையா?
அல்லது நாம் இன்னும் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டுமா? என்று சிந்தித்தால் நம் நாட்டுப்பள்ளிகள்
விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்காமையும் ஒரு காரணம் என்பதை மறுப்பதற்கு இல்லை.
நம் பள்ளிகளில் விளையாட்டு என்பது உடற்கல்வி என்ற
பெயரில் வாரத்திற்கு இரண்டு பாடவேளை அனுமதிக்கப்பட்டுள்ளது. அந்த பாடவேளையை உடற்கல்வி
ஆசிரியர் மேற்பார்வையிடவேண்டும். ஆனால் பல பள்ளிகளில் இது நடைமுறைப்படுத்தப்படுவது
இல்லை. அதற்குப் பல காரணங்கள் உள்ளன. பத்து பனிரெண்டாம் வகுப்புகளுக்கு உடற்கல்வி என்பது
கால அட்டவணையில் மட்டும்தான் இருக்கும். நடைமுறையில் இருக்காது. அதற்கு காரணம் அவர்கள்
அரசுப் பொதுத்தேர்வு எழுகிறவர்கள் எனவே விளையாட்டில் நேரத்தை வீணடிக்கக் கூடாது என்பது
எழுதப்படாத சட்டம். சில பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் இருப்பார் ஆனால் விளையாட்டு
மைதானம் இருக்காது. சில பள்ளிகளில் விளையாட்டு மைதானம் இருக்கும் உடற்கல்வி ஆசிரியர்
இருக்க மாட்டார். இப்படி பல காரணங்களால் நம் நாட்டுப் பள்ளிகளில் உடற்கல்வி என்பதே
ஒரு வேண்டாத பாடவேளையாக ஆசிரியர்களாலும் தலைமை ஆசிரியர்களாலும் பார்க்கப்படுகிறது.
ஆனால் உண்மையிலேயே பள்ளிகளில் மாணவர்களால் அதிகம் விரும்பப்படும் பாடவேளை உடற்கல்விப்
பாடவேளைதான். விளையாடுவதற்கு முன்பு இருக்கும் மாணவரின் மனநிலையைவிட விளையாண்ட பிறகு
இருக்கும் மன நிலை கற்பதற்கு மிகவும் உகந்ததாக உள்ளதை ஒரு ஆசிரியராக நன்கு கவனித்து
உணர்ந்துள்ளேன். விளையாட்டு ஒருபோதும் கல்விப்பணியை பாதிக்காது என்பதை நம் ஆசிரியர்களே
ஏற்பதில்லை. மாணவர்களுக்கு இருக்கும் விளையாட்டு ஆர்வத்தை பள்ளிப்பருவத்திலிருந்தே
கண்டுணர்ந்து முறையாகப் பயிற்சி அளித்தால் அரோக்கியமான இளைஞர்கள் உருவாவார்கள். அது
நம் நாட்டு மனிதவளத்திற்குக் கூடுதல் பலமாக அமையும்.
அப்படி ஒரு நிலை ஏற்படவேண்டுமெனில் தேர்வு முடிவுகளை
ஆய்வு செய்து உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பது போல் விளையாட்டுப்போட்டிகளில் ஒவ்வொரு
பள்ளியிலிருந்தும் எத்தனை பேர் வெற்றி பெற்றனர் என்பதை ஆய்வு செய்து உடனுக்குடன் நடவடிக்கை
எடுக்க வேண்டும். ஜப்பான் நாட்டு பள்ளிகளில் கல்விக்கு அளிக்கும் அதே முக்கியத்துவம்
விளையாட்டிற்கும் அளிக்கப்படுகிறது என்பது
உலகறிந்த உண்மை. ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டியிலும் அவர்கள் பெறும் பதக்கங்களே அதற்குச்
சான்றாகும்.
நம் நாட்டுக்கல்வித்துறை இதனை முழுமையாக செயல்படுத்த
வேண்டுமெனில் பாட ஆசிரியர்களை நியமிப்பதில் காண்பிக்கும் அக்கரையை உடற்கல்வி ஆசிரியர்
நியமனத்திலும் காண்பிக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள உயர்நிலை மற்றும் மேல் நிலைப்பள்ளிகளின்
எண்ணிக்கை 5820. ஆனால் தற்போது பணியில் உள்ள உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கை
5200 மட்டுமே. 620 உடற்கல்வி ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளன. இது உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுக்கான
கணக்குதான். தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் தனியாக உடற்கல்வி ஆசிரியர்
நியமிக்கப்படுவதில்லை. அது போல் புதிதாக தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப்பள்ளிகளிலும்
உடற்கல்வி ஆசிரியர் பணியிடம் அனுமதிக்கப்படவில்லை.
தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை சுமார்
5700000 (ஐம்பத்து ஏழு லட்சம்) மாணவ மாணவியர் படிக்கின்றனர். 40 மாணவர்களுக்கு ஒரு
உடற்கல்வி ஆசிரியர் என்ற விகித்த்தில் தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை உடற்கல்வி
ஆசிரியர் பணிகளைத் தோற்றுவித்து நியமித்தால் 142500 உடற்கல்வி ஆசிரியர்கள் தமிழகத்திற்குத்தேவை
தற்போதுள்ள 5820 பணியிடங்கள் போக மீதமுள்ள 136680 ஆசிரியர்கள் நியமிக்கப்படவேண்டும்.
இது இன்னும் 50 ஆண்டுகள் ஆனாலும் நம் அரசியல் அமைப்பு முறையும் நிதி ஆதாரமும் இதற்கு
இடமளிக்காது. ஆனால் திட்டமிட்டு செயல்படுத்தினால் நிச்சயம் நம் இளைஞர்களை விளையாட்டுத்துறையில்
சாதனை படைக்கவைக்க முடியும். பள்ளிப்பருவத்திலேயே விளையாட்டு ஆர்வம் மிக்க மாணவர்களைக்கண்டறிந்து
அவர்களுக்கு சிறப்புப் பயிற்சிகள் அளித்தால் நிச்சயம் ஒலிம்பிக் போன்ற போட்டிகளில்
நாமும் சில பதக்கங்களைப்பெறலாம். தொடக்கப்பள்ளியிலிருந்தே அதற்கான பயிற்சிகளைத்தொடங்குவது
அவசியம். அதற்கு ஏதுவாக தொடக்கப்பள்ளிகளிலும் உடற்கல்வி ஆசிரியர்கள் நியமிக்கப்படவேண்டும்.
உடற்கல்வி ஆசிரியர்கள் நியமனத்தில் பதிவு மூப்பு அடிப்படையைப்பின்பற்ற வேண்டும் என்று
வேலையில்லா உடற்கல்வி ஆசிரியர் சங்கம் நீதிமன்றத்தில் பெற்றுள்ள தடை ஆணையை ரத்து செய்திட
அரசு ஆவன செய்து காலிப்பணியிடங்களை உடனடியாக நியமிக்க நடவடிக்கை எடுப்பதும் அவசியம்.
ஆளுமையை வளர்க்கும் மூன்று காரணிகளில் முதன்மையானதும்
முக்கியமானதும் உடல்தான். அதனால்தான் உடம்பை வளர்த்தேன் உயி வளர்த்தேனே என்றனர் நம்
முன்னோர்.
எல்லா தடைகளையும் தாண்டி உடற்கல்வி ஆசிரியர் இல்லாத
பள்ளிகள் நம் நாட்டில் இல்லை என்ற நிலையை எய்தினால் நம் நாடும் மற்ற நாடுகளோடு விளையாட்டுத்துறையிலும்
போட்டியிடலாம். அந்த நிலையை ஏற்படுத்துவது நம் ஆட்சியாளர்களின் கைகளில்தான் உள்ளது.
செயல்படுவார்களா?
நன்றி: குங்குமச்சிமிழ் கல்வி வேலை வாய்ப்பு வழிகாட்டி
No comments:
Post a Comment