தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking

Saturday, June 22, 2013

ஆசிய தடகளப் போட்டியில் காயத்ரி தங்கப்பதக்கம் பெற வாழ்த்துவோம்.




எப்போதும் விளையாட்டுச்செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காகாத என் கண்களை ஈர்த்தது தினமணியின் 13 ஆம் பக்க செய்தி. ஆசிய தடகள சாம்பியன்ஷிப் என்ற செய்தி. தமிழகத்தின் முன்னணி தடகள வீராங்கனை காயத்ரி பற்றிய செய்திதான் அது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தமிழோசையில் காயத்ரி பற்றி நான் எழுதிய கட்டுரையை இங்கே மீண்டும் பதிவுசெகிறேன்.

விளையாட்டுப் போட்டிகளில் உலக அளவில் சாதனை புரிந்தவர்களுக்கு நம் நாட்டு அரசு ஊக்கப்பரிசு வழங்கி அந்த சாதனையைப் பாராட்டுவது நடைமுறை. அதன் மூலம் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர் ஊக்கம் பெறுவதோடு மேலும் பல போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிகளை ஈட்டி நம் நாட்டிற்குப் பெருமை சேர்ப்பார். ஒலிம்பிக் போட்டியிலோ ஆசிய விளையாட்டுப் போட்டியிலோ தங்கப் பதக்கம் வென்றவர்களுக்கு ஒரு கோடியும், வெள்ளிப் பதக்கம் வென்றவர்களுக்கு ஐம்பது லட்சமும், வெண்கலப் பதக்கம் வென்றவர்களுக்கு இருபத்தைந்து லட்சமும் ஊக்கப் பரிசு வழங்குவதற்கு அரசு ஆணையே உள்ளது. அது போலவே காமன் வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் பெற்றவர்களுக்கு இருபது லட்சமும், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களைப் பெற்றவர்களுக்கு முறையே பதினைந்து லட்சமும் பத்து லட்சமும் வழங்குவதற்கும் அதே அரசு ஆணை வழிகாட்டுகிறது. காமன் வெல்த் போட்டியில் ஒரு வெள்ளிப் பதக்கம் வாங்கியதற்காக கேரள மாநிலத்தைச் சேர்ந்த அஞ்சுஜார்ஜுக்கு தமிழக அரசு பதினைந்து லட்சம் வழங்கியுள்ளது.ஆனால் சென்ற ஆண்டு (2008)  அக்டோபர் மாதம் பூனாவில் நடைபெற்ற இளையோருக்கான காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு 4 ஙீ 100 மீ தொடர் ஒட்டத்தில் தங்கப் பதக்கமும், தடைதாண்டும் ஓட்டத்தில் ஒரு வெள்ளிப் பதக்கமும் ட்ரிபிள் ஜம்ப்பில் ஒரு வெள்ளிப் பதக்ககமும் வென்று நம் தமிழகத்திற்கும், இந்தியாவுக்கும் பெருமை சேர்த்திருக்கும் ஒரு தமிழ்ப் பெண்ணுக்கு இது வரை தமிழக அரசு எந்த நிதியும் வழங்கவில்லை, ஏன் என்ற காரணமும் தெரியவில்லை. தற்போது சென்னை புனித வளனார் பொறியியல் கல்லூரியில் முதலாண்டு கணினித் தொழில் நுட்பம் பயிலும் காயத்ரிதான் அந்தப் பெண். தடைதாண்டும் போட்டியில் காயத்ரியின் சாதனையை முறியடிக்க இதுவரை இந்தியாவிலேயே யாராலும் முடியவில்லை. 2007 ஆம் ஆண்டில் 18 வயதுக்குட்பட்டோருக்கான தேசிய தடை தாண்டும் போட்டியில் 100 மீட்டர் பிரிவில் 14.40 நிமிடங்களில் இலக்கை எட்டி பூனம் பெல்லியப்பாவின் 11 ஆண்டு கால (14.50) சாதனையை முறியடித்ததோடு மட்டுமல்லாமல் 2008 ஆம் ஆண்டு ஜாம்செட்பூரில் நடைபெற்ற தேசியப் போட்டியில் 14.04 நிமிடங்களிலும் அதே ஆண்டில் மைசூரில் நடைபெற்ற போட்டியில் 14.02 நிமிடங்களிலும் இலக்கை எட்டி இவரது முந்தைய சாதனைகளை இவரேதான் முறியடித்திருக்கிறார். இதுவரை இவரின் இந்த சாதனைகளை யாரும் முறியடிக்கவில்லை என்பது குறிப்பிடத் தகுந்தது.

2013 அண்மையில் சென்னையில் நடைபெற்ற மாநிலங்களுக்கிடையிலான தடகளப்போட்டியில் 13.97 விந்நடிகளில் இலக்கை எட்டியுள்ளார். காயத்ரி 14 வினாடிகளுக்குள் இலக்கை எட்டி மீண்டும் அவர் சாதனையை அவரே முறியடித்துள்ளார்.

 மேலும் 2007 ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற தெற்காசிய கூட்டமைப்பு விளையாட்டுப் போட்டியில் கலந்துகொண்டு தொடர் ஓட்டத்தில் வெள்ளிப்பதக்கமும், அதே ஆண்டில் தென்கொரியாவில் நடைபெற்ற விளையாட்டுப்போட்டியில் தடைதாண்டுதலில் ஒரு வெள்ளிப்பதக்கமும் பெற்றுள்ளார். இவரது சாதனைகளைப் பாராட்டாத பத்திரிகைகள் இல்லை.இவரது அடுத்த இலக்கு ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று தங்கப்பதக்கம் பெற்று நம் நாட்டிற்குப் பெறுமை சேர்க்கவேண்டும் என்பதுதான். நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த காயத்ரி விளையாட்டு வீராங்கனையானது சுவையான நிகழ்வாகும். இவரது சொந்த ஊர் அரியலூருக்கு அருகிலுள்ள இலந்தங்குழி. தந்தை கோவிந்தராசு, தாய் நவமணி, அக்காள் கயல்விழி, தங்கை கிருத்திகாவோடு தற்போது சென்னையில் வாழ்ந்து வருகிறார். இவர் இரண்டாம் வகுப்பு படித்த போது வட்டார விளையாட்டுப் போட்டி ஒன்றை வேடிக்கை பார்க்கச் சென்றிருக்கிறார் அப்போது விளையாட்டுத் திடலின் ஒரு மூலையில் தாண்டிக் குதித்துக்கொண்டிருந்த இவரை உற்று நோக்கிய பயிற்சியாளர் முனைவர் நாகராஜன் இவரிடமுள்ள திறமையைக் கண்டு கொண்டதோடு காயத்ரியின் பெற்றோரை அணுகி காயத்ரிக்கு உரியமுறையில் பயிற்சி கொடுத்தால் எதிர்காலத்தில் பெரிய விளையாட்டு வீராங்கனையாவார் என்று கூறி அன்று முதல் காயத்ரிக்கு இலவசமாகவே பயிற்சி கொடுத்து வளர்த்தெடுத்திருக்கிறார். இவரின் விளையாட்டுத் திறமைக்காகவே சர்ச்பார்க் ஆங்கிலப் பள்ளி கட்டணமில்லாமல் சேர்த்துக்கொண்டது. பள்ளிக்கல்வியை முடித்ததும் புனிதவளனார் கல்லூரி இலவசக் கல்வியும் விளையாட்டுப் பயிற்சியும் காயத்ரிக்கு வழங்கி வருகிறது. ஒரு அரசு செய்ய வேண்டிய பணியைத் தனியார் நிறுவனம் செய்கிறது.இதற்கு உறுதுணையாக இக்கல்லூரியின் இயக்குநர் பாபுமனோகரன் விளங்குகிறார்.ஆனால் வழங்க வேண்டிய ஊக்கப் பெரும் நிதியைக்கூட வழங்காமல் அரசு காலம் கடத்தி வருவது இவரது ஒலிம்பிக் கனவுகளுக்குத் தடைக்கல்லாக உள்ளது. ஆம் ஒலிம்பிக்கில் சாதிக்கவேண்டும் என்பதுதான் காயத்ரியின் அடுத்த இலக்கு. ஒலிம்பிக்கில் வெற்றி பெறவேண்டுமென்றால் குறைந்தது மூன்றாண்டுகளுக்கு வெளிநாடுகளில் தங்கி பயிற்சி பெற வேண்டும் உணவு, உடல் திறன், விளையாட்டுப் பயிற்சி என ஒவ்வொன்றுக்கும் ஒரு வல்லுனரின் கண்காணிப்பில் தயாரானால்தான் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதற்குத் தகுதியுடையவராகலாம் அதற்கு ஒரு கோடி செலவாகும். தமிழக அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு தற்போதுள்ள அரசாணைப் படி காயத்ரி இதுவரை செய்த சாதனைகளுக்காக வழங்க வேண்டிய ஊக்கத்தொகையே 62 லட்சத்து 15 ஆயிரம். இந்தத்தொ தொகையை உடனே வழங்கினால் கூட காயத்ரி ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதற்கான பயிற்சியில் ஈடுபட உதவியாக இருக்கும். காயத்ரிக்கு ஊக்கப் பெரும் நிதியை உடனே வழங்கவேண்டுமென்று அச்சமில்லை பத்திரிகை ஆசிரியர் இறைவன் தமிழக முதல்வருக்குக் கடிதம் எழுதியுள்ளார். முதல்வரின் தனிக்கவனத்திற்குக் கொண்டு சென்றால் காயத்ரியின் ஒலிம்பிக் கனவு நிறைவேறும். தொடர்புடைய அதிகாரிகள் கவனிப்பார்களா?

இது 2009 இல் எழுதியது இன்ரைய நிலவரம் என்ன என்று தெரியவில்லை. ஆனால் இந்தியாவிலிருந்து ஆசிய தடகளப்போட்டியில் பதக்கம் வெல்லக்கூடியவர்கள் என்று எதிர்பார்க்கப்படுபவர்களில் காயத்ரியும் ஒருவர் என்று இன்றைய திணமணியில் செய்தி வெளியாகி உள்ளது. காயத்ரிக்கு வாழ்த்துகள். பதக்கத்தோடு வருக. உங்கள் ஒலிம்பிக் கனவு நிறைவேறும் நேரம் நெருங்கி விட்டது. வாழ்த்துகள் காயத்ரி.

நன்றி : தினமணி, தமிழ் ஓசை



Tuesday, June 11, 2013

கொலைச்சேவல்



'கொலைச்சேவல்' இமையத்தின் மூன்றாவது சிறுகதைத்தொகுப்பு. வெவ்வேறு விதமான கதைகளாக இவை தோற்றம் கொண்டிருந்தாலும் நவீன வாழ்க்கையை எதிர்கொள்ளும் கிராமத்துக் கிழவி ஒருத்தியின் மனம் இந்த கதைகளின் இடையே இழையோடுவதை நம்மால் உணரமுடியும்.புலம்பல்களின் கலை வடிவம் என்று இக்கதைகளில் சிலவற்றை நாம் கூறலாம். புலம்பல்கள் சில நேரங்களில் மறைமுகமான சமூக விமர்சனங்களாகவும் செயல்படுவதை இமையத்தின் இந்த கதைகளில் நாம் காணலாம்.

வெளியீடு க்ரியா,http://www.crea.in/

Tuesday, May 14, 2013

பட்டா மாறுதல் செய்ய என்ன செய்யவேண்டும்?




பட்டா என்பது விவசாயிகளின் உயிராதாரம். வங்கிகளில் விவசாயக்கடன், நகைக்கடன் பெறவும், பத்திரப்பதிவுகள் செய்யவும் அரசின் நலத்திட்டங்களைப்பெறவும், வெள்ள நிவாரணம், வரட்சி நிவாரணம் போன்றவற்றைப்பெறவும். பட்டா/சிட்டா அவர்களுக்குத்தேவைப்படுகிறது. நில உரிமையாளருக்கு அரசு வழங்கும் இந்த ஆவணம் எளிதில் கிடைத்துவிடுவதில்லை. ஒருவரிடமிருந்து விவசாய நிலத்தை மற்றொருவர் வாங்கும்போது அதற்கான பத்திரம் சார்பதிவாளர் அலுவலகத்தில்  பதிவு செய்யப்படுகிறது என்றாலும் அந்த குறிப்பிட்ட நிலம் விலைகொடுத்து வாங்கியவரின் பெயருக்கு உடனடியாக மாற்றப்படுவதில்லை. நில ஆவணங்கள் வருவாய்த்துறையின் கட்டுப்பாட்டிலிருப்பதால் நிலத்தைவாங்கியவர் அதற்கான பத்திர நகல், அந்த புல எண்ணுக்கு உரிய பட்டா நகல், 'அ' பதிவேடு நகல் நில வரைபடம், உட்பிரிவு செய்ய வேண்டுமெனில் அதற்கான கட்டணம் செலுத்திய சீட்டு நகல் ஆகியவற்றை இணைத்து வட்டாட்சியருக்கு விண்ணப்பித்து அந்த பட்டாவை இவர் பெயருக்கு மாற்றம் செய்யக் கோர வேண்டும்.  அந்த மனுவை உரிய நில அளவையாளருக்கு வட்டாட்சியர் அனுப்புவார். அதன்பிறகு நில அளவையாளர் நிலத்தை நேரில் சென்று அளந்து உட்பிரிவு செய்து ஆவணங்களில் உரிய மாறுதலைச்செய்து புதிய நில உரிமையாளருக்கு பட்டாமாற்றம் செய்து வழங்கவேண்டும். இதனை மாற்றி வாங்குவதற்குள் விவசாயிகள் படும் பாடு பெரும்பாடு.

நிலத்தை பத்திரப் பதிவு செய்யும்போதே உட்பிரிவுக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது அதற்கு ரசீதும் வழங்கப்படுகிறது. ஆனால் வருவாய்த்துறையில் அந்த ரசீதை ஏற்றுக்கொள்வதில்லை. இன்னொருமுறை உட்பிரிவுக்கட்டணம் செலுத்தவேண்டும் என்று கட்டாயப்படுத்துகின்றனர். ஒரே பணிக்கு பொதுமக்கள் இரண்டுமுறை கட்டணம் செலுத்தவேண்டியுள்ளது.இதுகுறித்து அரசு பொதுமக்களுக்கும் ஊழியர்களுக்கும் தெளிவுபடுத்த வேண்டும்.இந்த நடைமுறைகள் கல்வியறிவில்லாத விவசாயிகளுக்கு தேவையற்ற அலைச்சலை ஏற்படுத்துகிறது என்பதற்காகவும் பட்டா மாற்றம் செய்வதில் காலதாமதம் ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டும் ஜெயலலிதா முதல்வரானதும் ஒரு அறிவிப்பை 10/06/2011 அன்று சட்டப்பேரவையில் அறிவித்தார். பட்டா மாறுதல் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க பொதுமக்கள் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அலையாமல்  கிராம நிர்வாக அலுவலரிடம் சமர்ப்பித்தாலே போதும். இதற்காக கிராம நிர்வாக அலுவலர்கள் ஒவ்வொரு திங்கள் கிழமையும் முழு நேரம் அலுவலகத்திலிருந்து மனுக்களைப் பெற்று வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு பெறப்பட்ட மனுக்களின் மீது ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நில அளவையர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் முன்னிலையில் வருவாய்க்கணக்குகளில் தேவையான பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு பட்டா மாற்றத்திற்கான உத்தரவுகள் வழங்கப்படும்.வெள்ளிக்கிழமைதோறும் வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா மாற்றம் செய்யும் நாளாகக் கடைபிடிக்கப்படும். உட்பிரிவு செய்ய அவசியமில்லாத இனங்களில் 15 நாட்களுக்குள்ளாகவும் உட் பிரிவு செய்யவேண்டிய இனங்களில் 30 நாட்களுக்குள்ளாகவும்  பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பதை வட்டாட்சியர் உறுதி செய்ய வேண்டும். இந்த நடைமுறைகள் கணினியில் பதிவு செய்யப்பட்டு நில நிர்வாக ஆணையர் மட்டத்திலும், வருவாய்த்துறை அமைச்சர் அளவிலும் ஆய்வுசெய்யப்படும். இதற்காக வருவாய் நிலை ஆணையில் உரிய திருத்தங்கள் செய்யப்படும். என்று முதல்வர் அறிவித்து இரண்டு ஆண்டுகள் முடிந்து விட்டது.ஆனாலும் மக்கள் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அலைவது மாறவில்லை.
இந்த நடைமுறை சாத்தியமில்லை என்று உணர்ந்து தற்போது பொதுமக்களின் ஊருக்கே சென்று பட்டா மாற்றம் உள்ளிட்ட திட்டங்களை வழங்கும் 'அம்மா' திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான அரசு ஆணை  04/03/2013 அன்று வெளியிடப்பட்டுள்ளது. வட்டட்சியர் தலைமையிலான குழு செவ்வாய்க்கிழமைதோறும் கிராமங்களை நோக்கிச்சென்று பொதுமக்களிடம்  பட்டாமாறுதல், இலவச மனைப்பட்டா , முதியோர் ஓய்வூதியம் போன்ற மனுக்களைப் பெற்று அந்த இடத்திலேயே கோரிக்கை நிறைவேற்றப்படவேண்டும். அவ்வாறு நிறைவேற்றப்படாத மனுக்கள் மீது மாவட்ட ஆட்சியர் 15 நாட்களுக்கு ஒருமுறை ஆய்வுசெய்வார். எக்காரணம் கொண்டும் 30 நாட்களுக்குள் முடிவான பதில்தராமல் மனுக்களை நிலுவையில் வைக்கக்கூடாது.என்று விதிமுறைகளை பொதுமக்களுக்கு சாதகமாக அரசு வகுத்திருந்தாலும் வருவாய்த்துறை அலுவலர்கள் இந்த விதிமுறைகளைக் கண்டுகொள்வதில்லை. பெயரளவுக்கு ஒரு சில மனுக்களின் மீது நடவடிக்கை எடுத்து வாரந்தோறும் ஒரு ஊரில் அம்மா திட்டத்தை நடைமுறைப்படுத்தியதாக செய்தித்தாளில் படத்தையும் அறிக்கையையும் வெளியிடுகின்றனர். இவர்கள் உணமையிலேயே மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்திருந்தால் தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் வட்டாட்சியர் அலுவலகம் வரவேண்டிய அவசியம் இருக்காது.ஆனால் இன்றைக்கும் மக்கள் அலையும் அவலம்தான் நடக்கிறது.

நடைமுறையில் என்னதான் நடக்கிறது? மக்கள் கிராமநிர்வாக அலுவலரிடம் மனுக் கொடுத்துவிட்டு
அந்த மனு நில அளவையாளருக்கு சென்றுவிட்டதா என்பதைத் தெரிந்து கொள்ளவே பல நாட்கள் ஆகும். அப்படியே தெரிந்துகொண்டாலும் அந்த நில அளவையரைப் பார்ப்பது அரிதிலும் அரிது. ஏனென்றால் மற்ற அலுவலர்களைப்போல அவர்கள் தினமும் அலுவலகம் வருவதில்லை. நிலத்தை அளப்பதற்காக ஏதேனும் கிராமத்திற்கு சென்றுவிடுவார். தப்பித்தவறி பார்த்துவிட்டாலோ அவரிடமிருந்து நீங்கள் பதிலை எதிர்பார்க்கக்கூடாது. தொடர்ந்து பலமுறை அவரை சந்தித்தால் அவராக பரிதாபப்பட்டு உங்களுக்கு பதில்கூறுவார். அதுவும் கடுகடு என்று முகத்தை வைத்துக் கொண்டு என்னா சும்மா சும்மா வந்து தொந்தரவுபண்றீங்க. இப்பதான் உங்கள் மனு வந்துள்ளது, அதற்குள் அவசரமோ? ஆறு மாசத்துக்கு முன்னாடி வந்த மனுவே இன்னும் பாக்கி இருக்கு ஒரு பத்துநாள் கழிச்சு வந்து பாருங்க என்று கடுப்படிப்பார்.இதுவாவது பரவாயில்லை ஒருசில நில அளவையர்களோ வாயையேத் திறக்க மாட்டார்கள் நாம் எதோ அவர்களிடம் பிச்சைகேட்க வந்திருப்பவர்போல் நினைத்து கையை மட்டும் இல்லை என்பது போல ஆட்டி சைகை காண்பிப்பார்கள். நம் வேலை இன்னும் முடியவில்லை என்று நாம்தான் புரிந்துகொள்ள வேண்டும்.சரி இப்படியிருந்தால் எப்படி பட்டா மாற்றுவது என்று சிந்தித்து அளவையர் நல்ல மூடில் இருக்கும்போது தனியாகப் பார்த்து முன்பணமாக ஆயிரமோ இரண்டாயிரமோ கொடுத்து அய்யா எப்போ சொல்றீங்களோ அப்போ வந்து உங்களை கார் வைத்து அழைத்துச்செல்கிறேன் என்று கூறினால் அவரும் இரக்கப்பட்டு உங்களுக்கு ஒருநாளைச் சொல்வார் அந்த நாளில் நீங்கள் போனால் உங்களுக்கு எமாற்றம்தான் மிஞ்சும். அவர் வேறு வேலையாக வெளியில் சென்றிருப்பதாக அலுவலகத்திலிருப்பவர்கள் கூறுவார்கள். இதுபோல் பலமுறை நீங்கள் அலைந்து அலுத்துப்போவீர்கள். அதற்குள் சில மாதங்கள் கழிந்திருக்கும். ஒரு வழியாக அவர் வருவதாகக் கூறிய நாளில் நீங்கள் ஊரிலிருக்க மாட்டீர்கள்.அப்படியே அவர் வந்தாலும் உங்கள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்யமாட்டார் வரப்பில் நின்றுகொண்டு எது உங்கள் நிலம் பக்கத்தில் யார் நிலம் என்பதை க்கேட்டு தெரிந்துகொண்டு நில வரைபடத்தோடு ஒப்பிட்டுப்பார்த்து சில குறிப்புகளை எடுத்துக்கொண்டு செல்வார் அதன்பிறகு மீதித் தொகையைக் கொடுத்தால் உங்களுக்கு ஆறு மாதங்களுக்குள் உட்பிரிவு செய்து வழங்கப்படும். இல்லையென்றால் ஏழெட்டு மாதங்கள் நீங்கள் அலைய வேண்டியிருக்கும். இதெல்லாம் எனக்கு எப்படிதெரியும் என்கிறீர்களா? பட்டா மாற்றுவதற்காக வட்டாட்சியர் அலுவலகத்திற்கு 10 மாதங்களாக அலைகிறேனே இதுகூடத் தெரியாதா? இதெல்லாம் தெரிஞ்சி என்ன தெரியவேண்டியது தெரியலையே!

Friday, April 5, 2013

பத்தாம் வகுப்பு கணக்குத் தேர்வில் குழப்பம்



நேற்று  (5/4/2013)  நடைபெற்ற  10 ஆம் வகுப்பு கணிதப் பொதுத்தேர்வு வினாத்தாள்
அரசு வெளியிட்ட வினாத்தாள் வடிவமைப்பை மீறி (BLUE PRINT) வடிவமைக்கப்பட்டுள்ளது. கீழ்க்கண்ட அட்டவணை அம்மீறல் குறித்த விவரங்களைத் தெளிவாக விளக்குகிறது.

அலகு
வினாத்தாள் வடிவமைப்பின்படி கேட்கப்பட
வேண்டிய 5மதிப்பெண் வினாக்களின் எண்ணிக்கை
வினாத்தாளில் கேட்கப்பட்டுள்ள 5மதிப்பெண் வினாக்களின் எண்ணிக்கை
மீறல்/குழப்பம்  பற்றிய குறிப்பு
தொடர்களும் தொடர் வரிசைகளும்
2
1
 5 மதிப்பெண் வினா ஒன்று கேட்கப்படாமல் விடப்பட்டுள்ளது
இயற்கணிதம்
3
2
5 மதிப்பெண் வினா ஒன்று கேட்கப்படாமல் விடப்பட்டுள்ளது
அணிகள்
1
2
5 மதிப்பெண் வினா ஒன்று கூடுதலாகக் கேட்கப்பட்டுள்ளது.
முக்கோணவியல்
1
2
5 மதிப்பெண் வினா ஒன்று கூடுதலாகக் கேட்கப்பட்டுள்ளது.
Ø  இதுமட்டுமின்றி  கணங்களும் சார்புகளும் என்ற முதல் அலகில் கணங்கள் பகுதி புறக்கணிக்கப்பட்டு இரு 5 மதிப்பெண் வினாக்களும் சார்புகள் பகுதியிலிருந்தே கேட்கப்பட்டுள்ளன.
Ø  மாணவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலும் சவாலாக அமையும்படியும் வினாத்தாளை வடிவமைத்து ஒவ்வொரு மாணவருக்கும் 20 மதிப்பெண்கள் இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது
Ø  வினாத்தாள் வடிவமைப்பின் படி மிகவும் கடினமான வினாக்கள் 12% மட்டுமே இடம்பெற்றிருக்க வேண்டும் . மாறாக 40% அளவுக்கு கடினமான வினாக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
Ø  அரசுப்பள்ளி,கிராமப்புற  மாணவர்களின் தேர்ச்சி விழுக்காட்டை பாதிக்கும் வண்ணம்  இவ்வினாத்தாள் அமைந்துள்ளது.
Ø  மேலும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெறும் வாய்ப்பும் மறுக்கப்பட்டுள்ளது.
Ø  இரு மதிப்பெண் வினாக்களுள் 5 வினாக்கள் வழக்கத்திற்கு மாறாக மிகப்பெரிய வினாக்களாக அமைக்கப்பட்டுள்ளன.
Ø  எனவே மாணவர்களின் எதிர்கால நலன் கருதி குறைந்த்து 25 மதிப்பெண்களாவது கருணை மதிப்பெண்களாக வழங்க வேண்டும்  அல்லது மறுதேர்வு நடத்தப்படவேண்டும் .

Ø  ஏற்கனவே மாணவர்களுக்கு கணிதம் என்றாலே கசப்பான பாடம் என்ற எண்ணத்தை மேலும் வலுப்படுத்துவதாக இந்த வினாத்தாள் அமைந்துவிட்டது வேதனைக்குரியதாகும்.

Ø  அரசுத்தேர்வுத்துறை இயக்குநர் இவற்றை கவனிப்பாரா? தவறான வினாத்தாள் வடிவமைத்தமைத்தது குறித்து விசாரணை நடத்தப்படுமா? மாணவர்கள் பெற்றோர்கள் ஆசிரியர்களின் அச்சமும் குழப்பமும் நீக்கப்படுமா?

இரத்தின புகழேந்தி,
தீ.கோ. நாராயணசாமி



Saturday, February 16, 2013

களம் புதிது கவிதை விருது 2012




விருது பெறுபவர் கவிஞர் தேவேந்திரபூபதி
வழங்குபவர் : கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன்
தலைமை : கவிஞர் கரிகாலன்
முன்னிலை : எழுத்தாளர் இமையம்
வரவேற்பு : முனைவர் இரத்தின புகழேந்தி

தேவேந்திர பூபதியின் Endless Noon நூல் வெளியீடு
வெளியிடுபவர் : து.சுகுமாறன் இணை ஆணையர் - வணிக வரிகள்
பெறுபவர்கள் : கவிஞர் தபசி, கவிஞர் சக்திஜோதி
திறனாய்வு : சுரேஷ்குமார இந்திரஜித், ரமேஷ் பிரேதன்

விருதுக்குழு உரை : கவிஞர் இலக்குமிகுமாரன் ஞானதிரவியம்
தெவேந்திர பூபதியின் கவிதைகளை வாசிப்போர் : அமிர்தராசு, அசதா,ரவிசுப்ரமணியன்
நன்றியுரை : இளந்திரையன்
நிகழ்ச்சித்தொகுப்பு : க.கார்க்கி
நாள் :17/02/2013 ஞாயிறு மாலை 4.30
மக்கள் மன்றம் , விருத்தாசலம்.

Saturday, February 9, 2013

எருமனூர் பள்ளியில் இலக்கியமன்ற விழா





 எருமனூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் தமிழ் இலக்கியமன்ற விழா நடைபெற்றது. விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் சசிகலா தலைமை ஏற்றார். இலக்கியமன்ற செயலர் இளம்பரிதி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக முனைவர் இரத்தின புகழேந்தி கலந்துகொண்டு வாய்மொழி இலக்கியங்கள் என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். தமிழக நாட்டுப்புற மக்களின் உணவுமுறைகளும் பழக்க வழக்கங்களும் என்னும் நூல் பள்ளி நூலகத்திற்குப் பரிசளிக்கப்பட்டது. பள்ளி மாணவர்கள் லெனின், கோசலா, கிரிஜா ஆகியோர் பாடல்கள் கதைகள் விடுகதைகள் ஆகியவற்றை வழங்கினர்.  ஆசிரியர் வெற்றிவேல் உட்பட பலர் கலந்துகொண்டனர்.ஆசிரியர் கருணாநிதி நன்றி கூறினார்

Monday, January 14, 2013

அந்த நான்கு நாட்கள்

 நாள்.1

வடக்குத் தெற்கென
இரு மருங்கிலும்
ஆறுகள் வறண்டோடும்
சிற்றூரொன்றில்
சாணிப்பிள்ளயாரை
கோலங்களின் மீதமர்த்தி
பனித்துளி மினுங்கும் பூசணிப்பூவை
அதன் தலையில் செருகும்
தலைவியிடம்

பேச்சுறுப்பில் ஆவி பறக்க
புன்னகை தந்து
முந்திய இரவில் கொய்த
கசப்புக்காய் மரத்தின்
இலைக்கொத்துகளைச் சுமந்து
கம்பளி முக்காடிட்டு
வயல் வெளிகளின் சனி மூலையைத்
தேடிச்செல்வான் தலைவன்.

 நாள்.2

விரல் மூட்டுகளால்
தட்டி எழுப்பப் பட்ட
செஞ்சூளைப் பானைகள்
மஞ்சளிலை உடுத்தி
கரும்புக்காவலர்கள் புடை சூழ
வாசலடுப்பில் அமர்ந்து
பொங்கி வழியும் சர்க்கரைச் சிரிப்பால்
சூரியனைச் சூடாக்கும்.


நாள்.3

கொம்பு முளைத்த தோழர்கள்
குளித்துத் திரும்புகையில் 
வால் நீர்த் துளிகள்
எழுதிய கவிதைகள்
வரவேற்கும் வீதிகள்

பச்சை வெள்ளை மஞ்சள்
இலை மலர்களாலான
மாலைகள் கிடத்திய திண்ணைகள்

வீட்டு தெய்வத்திற்கு 
ஊற்றிய சாணித்தொட்டி 
கஞ்சியில் ஆடை படரும்
உள் வாசல்

பசும்புற்கள் நிரம்பிய
கட்டுத்தறிகள்

எரியும் சூடத்தை
பெருமூச்சால் அணைக்க முயலும்
வாயில்லா ஜீவன்கள்.

நாள்.4

பால் பொங்கியதை
தெய்வத்தைக்குறிக்கும் சொல்லால்
வினவும் பணியாளர்கள் உலவும்
சாராயம் நாறும் சடு குடு தெருக்கள்

கத்திரிக்கொல்லையை
வெட்டப்பிறந்த
தம்பியின் பெருமை பேசும்
வளையல் கரங்கள்
முன்னிரவை வழியனுப்பி
விடியலை வரவேற்கும்