தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking

Saturday, May 20, 2023

மிதியுந்து குறிப்புகள் 3

 

***
காலை ஐந்து முப்பதுக்கு கிளம்பும்போதே நெய்வேலி வரை சென்று வருவது தான் திட்டம். வள்ளலார் தேநீர் கடையில் ராஜா கொடுத்த முதல் தேநீர் மிகுந்த உற்சாகத்தை அளிக்க இன்று பயணம் நீளும் என்பதை உடல் மொழி உணர்த்தியது.
காற்றின் வேகம் 2.8 கி.மீ. வேளாண் அறிவியல் நிலையம் அறிவித்தது.
கூரைப்பேட்டையை கடக்கும்போது ஆட்டின் கழுத்தை அறுத்து உப்பிட்ட கிண்ணத்தில் குருதியைப் பிடித்துக் கொண்டிருந்தனர்.
சாத்தமங்கலத்தை நெருங்கிய போது பொழுது புலரத் தொடங்கியிருந்தது.
ஒளியை மட்டும் பூமிக்கு அனுப்பி மேகத்தில் ஒளிந்து கொண்டு மாயம் செய்தான் காலை கதிரவன்.
வானம் தெளிந்த நீரோடையை போல் மாசற்று விளங்கியது.
சுங்கச்சாவடியில் வரவேற்பையும் நன்றியையும் உமிழ்ந்து கொண்டிருந்தன சிவப்பு நிற மின்னணு விளக்குகள். இருபுறமும் வேகத்தடைகள் அகற்றப்பட்டிருந்தன. மீண்டும் வாகனங்களுக்கு வரி வசூலிக்க தொடங்கியிருந்தனர்.
வழக்கத்திற்கு அதிகமாக காவலர்கள் அமர்ந்திருந்தனர் ஒரு ஆண் காவலரும் பெண் காவலரும் நாற்காலியில் அமரந்து உரையாடிக் கொண்டிருந்தனர்.
டாக்கா நெய்வேலி காலனி நுழைவாயிலில் தனியார் நிறுவன பாதுகாவலர் சீருடையில் நின்றபடி உள்ளிருந்து வந்த மகிழுந்துக்கு சல்யூட் அடித்துக் கொண்டிருந்தார்.
ஊமங்கலம் குளத்து செந்நிற அல்லிகள் சிரித்துக் கொண்டிருந்தன.
கால்களுக்கு கீழே சாலை பின்னோக்கி விரைந்தது.
பாலத்தின் அடியில் சுரங்கத்திலிருந்து பழுப்பு நிலக்கரியை அனல் மின் நிலையத்திற்கு சேர்த்துக் கொண்டிருந்தது கன்வேயர் பெல்ட். கொதிகலன்களின் நீராவி ஓசோனில் ஓட்டை போட்டுக் கொண்டிருந்தது.
வழக்கமாக எலுமிச்சை தேநீர் குடிக்கும் ஸ்ரீவாரி அடுமனையில் ஏனோ இன்று நிற்க தோன்றவில்லை. மந்தாரக்குப்பம் பேருந்து நிலையம் கங்கைகொண்டான் காலனி உயர்நிலைப்பள்ளி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் எல்லாவற்றையும் தன் கோர பசியால் விழுங்கியிருந்தது சுரங்கம். எஞ்சி இருப்பது ரயில் பாதையும் தேசிய நெடுஞ்சாலையும் மட்டுமே. சுரங்கத்தில் புதைந்து போன அந்த நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக அப்பா பணியாற்றிய போது நான் அங்கு பலமுறை சென்றிருக்கிறேன் போட்டிகளில் கலந்து கொள்வதற்காகவும் அந்த மாணவர்களோடு சுற்றுலா செல்வதற்காகவும். அந்த நினைவுகள் எல்லாம் ஏனோ இன்று நெஞ்சில் நிழலாடின. அந்தப் பள்ளியில் மிகச்சிறந்த ஒளிப்பட கலைஞர் ஒருவர் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றினார் அவர் என்னை எடுத்த படங்கள் இன்னும் பத்திரமாக ஆல்பத்தில் இருக்கின்றன. அந்த வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் தான் முதன் முதலாக ஓட்டுனர் உரிமம் பெற்றேன். மோட்டார் சைக்கிளில் முன்பக்க எண் பலகை இல்லை என்பதற்காக அந்த ஆய்வாளர் என்னை திருப்பி அனுப்ப நினைத்தார். முதலில் என்னை சோதித்து விடுங்கள் எண் பலகையோடு உங்களை வந்து சந்திக்கிறேன் என்று உறுதி அளித்து தேர்வில் தேர்ச்சி பெற்றேன். எண் பலகையில் தலை கீழாக எழுதி ஓவியர் கொடுக்க அதை ஊர்தியில் பொருத்த முடியாமல் கட்டுக் கம்பி உதவியோடு ஆய்வாளருக்கு கொடுத்த உறுதியை நிறைவேற்றினேன். இந்த நினைவுகள் எல்லாம் அந்த சுரங்கம் விழுங்கி வைத்திருக்கிறது.
ஓம் சக்தி கடையில் ஒரு தேநீரை விழுங்கி பறக்கத் தொடங்கினேன். குறவன் குப்பம் இது மாபெரும் கூத்து கலைஞர் சடகோபன் ஊர். தெருக்கூத்து கலையை இந்த கலைஞன் எழுபது ஆண்டுகளாக உயிரோடு வைத்திருக்கிறார். சேப்ளாநத்தத்தில் பாம்பு கடிக்கு மருந்து கொடுப்பவரின் விளம்பரப் பதாகை கிழிந்து தொங்கிக் கொண்டிருந்தது.
விவேகானந்தா கல்வி நிறுவனங்களை கடக்கும் போது கால் நூற்றாண்டுக்கு முன்பாக அறிவொளி இயக்க கலைப் பயணம் மேற்கொண்டு அந்த கலைஞர்களோடு இரவு அங்கு தங்கியிருந்த நினைவுகள். இன்று ஏனோ கால்களுக்கு ஒரு புது உற்சாகம். கிருஷ்ணா அடுமனையில் தேனீருக்காக காத்திருந்த மக்கள் கூட்டத்தில் நீந்தி ஒரு தேநீரை குடித்து சத்திய ஞான சபையை வலம் வந்தேன். அந்த திடல் முழுக்க காலை உணவுக்காக காத்திருக்கும் மக்கள் கூட்டம்.
வள்ளலார் தொடங்கி வைத்த அந்த அணையா அடுப்பு இன்றும் பசிப்பிணி நீக்கும் மருத்துவராக எரிந்து கொண்டிருக்கிறது.
திரும்பும்போதும் அதே உற்சாகம் கால்களுக்கு வியப்பு மனதுக்கு. சுங்கச்சாவடி தாண்டும்போது சிறிது ஓய்வு தேவைப்பட்டது பாலத்தில் அமர்ந்து ஒரு மிடறு தண்ணீரை குடித்து மீண்டும் தொடர்ந்தேன் அய்யனார் மெஸ் ஆம்லெட்டோடு இன்றைய பயணம் இனிதே முடிந்தது.
நான் மட்டும் தனியாக 50 கிலோமீட்டர் பயணம் மேற்கொண்டதாக எண்ணிக் கொண்டிருந்தேன். அப்படி அல்ல என்பதை புது டெல்லி கதை திருவிழாவில் நான் பார்த்த சோலோ என்ற ஆங்கில குறும்படம் நினைவூட்டியது. மலையேறும் வீரர் ஒருவர் பாறை இடுக்குகளில் இரும்பு ஆணிகளை அடித்து கயிற்றை பிடித்த படி மலையேறிக் கொண்டிருப்பார் பாதி தூரம் சென்றதும் ஆணி அடிப்பதற்காக ஒரு பாறை இடுக்கைப் பார்த்தபோது அதில் ஒரு தேரை இருப்பதை கண்டு அதை ஒரு தாளில் மடித்து தன் சட்டை பையில் வைத்துக் கொண்டார். அதன் பிறகு அவர் அந்தத் தவளையோடு மலை உச்சிக்கு செல்வார் அங்கு அந்த தவளையை உயிர் பிழைக்க விடுவார். இந்த ஐந்து நிமிட குறும்படம் மலையில் தனியாக ஏறுவதாக நினைத்துக் கொண்ட அந்த வீரருக்கு வழி துணையாக அந்த தவளை இருந்தது என்பதை சொல்லாமல் சொல்லி இருப்பார் அந்த இயக்குனர். அதுபோலத்தான் இன்றைய எனது பயணமும்.

No comments:

Post a Comment