தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking

Tuesday, September 13, 2022

தகுதிக்கான பதக்கம்



எங்கள் வீட்டில் ஒரு பெரிய மரப்பெட்டி இருந்தது. நான் ஆறாம் வகுப்பு படிக்கும்போது அதனுள்ளிருந்த காக்கி சீருடையை  எடுத்து அடிக்கடி அணிந்து பார்ப்பேன். அதனோடு தொப்பி விசில் எல்லாம் இருந்ததனால் அதை போலீஸ் சீருடை என்று நினைத்திருந்தேன். அப்பாவிடம் கேட்டபோது அது அவரின் சாரணர் சீருடை என்று தெரிந்தது. அப்பா சாரண ஆசிரியராகப் பயிற்சி பெற்றவர். நாமும் இதுபோல் சாரணர் இயக்கத்தில் சேர்ந்து சீருடை அணிந்துகொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டேன். பள்ளிப் பருவத்தில் அதற்கான வாய்ப்பு கிட்டவில்லை. கடலூர் பேராயர் பேதுரு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் 1988 ஆம் ஆண்டு அடிப்படை சாரணாசிரியர் பயிற்சியினை வழங்கியபோது தான் எனது எண்ணம் ஈடேறியது. ஆசிரியராக பணியில் சேர்ந்தது ஒரு தொடக்கப்பள்ளி என்பதனால் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க இயலவில்லை. 1999 ஆம் ஆண்டு கார்குடல் நடுநிலைப் பள்ளிக்கு பணிமாறுதலில் சென்றதும் மாணவர்களுக்கு பயிற்சியளித்து ஆளுனரால் வழங்கப்படும் ராஜ்யபுரஸ்கார் விருது பெறச் செய்தேன். அங்கு பணியாற்றிய போதுதான் முன்னோடி சாரணாசிரியர் பயிற்சியும் பெற்றேன். தற்போது பணியாற்றும் மன்னம்பாடி பள்ளியில் மாணவர்களிடையே இயக்க ஈடுபாட்டை ஏற்படுத்தி பல்வேறு சேவைகளைச் செய்தோம். கடந்த ஆண்டில்தான் மத்தியப் பிரதேச மாநிலம் பச்மாரியில் அமைந்துள்ள தேசிய பயிற்சி மையத்தில் இமய வனக்கலை பயிற்சி பெற்றேன். இந்த நெடிய பயணத்திற்கான ஒரு அங்கீகாரமாக நேற்று தகுதிக்கான பதக்கம் கிடைத்தது. மெடல் ஆஃப் மெரிட் எனும் சான்றிதழையும் பதக்கத்தையும் சாரணர் இயக்கத்தின் தமிழ்நாடு தலைவரும் கல்வி அமைச்சருமான திரு. அன்பில் மகேஷ் பொய்யா மொழி அவர்கள் வழங்கினார். அவரும் பள்ளிக் கல்வி ஆணையர் மற்றும் இயக்குநர்கள் அனைவரும் சீருடையில் வந்து அசத்தினார்கள். இதை யாரும் எதிர்பார்க்கவில்லை. அமைச்சர் தன் சீருடையை தானே சலவை செய்து அணிந்து வந்ததாகக் கூறினார். எங்களோடு முதன்மைக் கல்வி அலுவலர்கள் மாவட்டக் கல்வி அலுவலர்களும் விருது பெற்றனர். அவர்களிலும் ஒரு சிலர் சீருடையில் வந்திருந்தனர். வீட்டுக்கு ஒரு சாரணர் வேண்டும் என்று விரும்பினார் மகாத்மா அந்த விருப்பத்தை மூன்று தலைமுறையாக நிறைவேற்றியுள்ளோம். என் மகன் இளவேனிலும்  ராஜ்ய புரஸ்கார் சாரணர். அப்பா இருந்திருந்தால் அப்படி மகிழ்ந்திருப்பார்.

#TNSchools  #BSG #bsgindia  #AnbilMaheshPoyyamozhi 

#medalofmerit

https://tamil.abplive.com/news/tamil-nadu/minister-anbil-mahesh-who-used-to-wash-his-uniform-and-wear-it-scout-teacher-pugazhenthi-73180https://tamil.abplive.com/news/tamil-nadu/minister-anbil-mahesh-who-used-to-wash-his-uniform-and-wear-it-scout-teacher-pugazhenthi-73180

No comments:

Post a Comment