தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking

Sunday, November 29, 2009

மாணவர்களின் வரைபடத் திறனை மதிப்பிடுதல்

அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் ஆசிரியர்கள் தங்கள் வகுப்பறை செயல்பாடுகளை சுய மதிப்பீடு செய்துகொள்வதற்கு ஏற்ப செயல் ஆராய்ச்சி என்றொரு திட்டத்தை நடைமுறைப் படுத்தி வருகின்றனர். அதன் கீழ் இவ்வாண்டு நான் மேற்கொண்ட செயல் ஆய்வினை இங்கு வெளியிடுகிறேன்.தலைப்பு...

மாணவர்களின் வரைபடத் திறனை மதிப்பிடுதல்





முன்னுரை
தேர்வுகள் என்பவை மாணவர்களை மட்டும் மதிப்பிடுபவை அல்ல. அவர்களுக்குக் கற்பித்த ஆசிரியர்களின் திறனையும் சேர்த்து தான் மதிப்பிடுகின்றன. ஓர் ஆசிரியர் எத்தகைய திறமை வாய்ந்தவராக இருப்பினும் அவரால் உருவாக்கப்படும் மாணவர்கள் எத்தனை பேர் தேர்ச்சியடைகின்றனர் என்பதைப் பொறுத்துதான் அவரது கற்பித்தல் பணி மதிப்பிடப்படுகிறது. அந்த வகையில் ஒரு கல்வியாண்டில் நடைபெறும் அனைத்துத் தேர்வு முடிவுகளும் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் ஏதேனும் ஒரு பாடத்தைக் கற்பிப்பதாகவே அமைந்து விடுகின்றன.
(2009 -10) நடப்புக் கல்வியாண்டின் காலாண்டுத் தேர்வு முடிவுகளின் அடிப்படையில் குறிப்பிட்ட ஒரு பாடத்திற்கான விடைத்தாளில் எளிதாகப் பெற வேண்டிய மதிப்பெண்ணைக் கூட மாணவர்கள் பெறவில்லை என்பது தெரியவந்தது. அதற்கான காரணங்கள் கண்டறியப்பட்டு, அதற்கான தீர்வுகளைக் கண்டறிந்து, அவற்றை நடைமுறைப் படுத்தி, முடிவுகளை எடுத்துக் கூறுவதாக இச்செயலாய்வு அமைந்திருக்கிறது.
ஆய்வுக்களம்
விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு `அ’ பிரிவு மாணவர்களின் காலாண்டுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் போது சமூகவியல் பாடத்தில் வரைபடத்திற்கு உரிய பத்து மதிப்பெண்களை முழுமையாக ஒருவர் கூட பெறவில்லை. அதற்கான காரணங்களைக் கண்டறிவதற்காக மாணவர்களிடம் உரையாடிய போது அவர்கள் பலவாறு தெரிவித்தனர். அவை தொகுக்கப்பட்டதோடு, அவர்கள் வரைபட வினாக்களில் செய்த தவறுகளும் பட்டியலிடப்பட்டுள்ளன. அதற்கு முன்பாக வினாத்தாளில் வரைபடம் சார்ந்து கேட்கப்பட்ட வினாக்களைக் காண்போம்.
வினாத்தாளில் இடம் பெற்ற வரைபட வினாக்கள்
விருத்தாசலம் கல்விமாவட்ட அளவில் தயாரிக்கப்பட்டுள்ள (2009-10ஆம் கல்வியாண்டு) காலாண்டுத் தேர்வுக்கான ஆறாம் வகுப்பு சமூகவியல் வினாத்தாளில் 54ஆவது வினாவில் உலகப்படத்தில் குறிக்க வேண்டிய இடங்கள் குறிப்பிடப் பட்டுள்ளன. அவையாவன: பசுபிக் பெருங்கடல். ஆசியா, ஆப்ரிக்கா, வடஅமெரிக்கா, இந்தியா இவ்விடங்களைச் சரியாகக் குறித்தால் ஐந்து மதிப்பெண்கள்.
55ஆவது வினாவில் இந்தியப்படத்தில் குறிக்க வேண்டிய இடங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.அவையாவன: வங்காள விரிகுடா, அரபிக்கடல், இந்தியப்பெருங்கடல், கொற்கை, வஞ்சி, இவ்விடங்களைச் சரியாகக் குறித்தால் ஐந்து மதிப்பெண்கள் ஆக மொத்தம் மாணவர்களின் வரைபடத்திறனுக்கு 10 மதிப்பெண்கள். ஆனால் யாரும் 10க்கு 10 மதிப்பெண் பெறவில்லை. ஒவ்வொருவரும் ஏதேனும் சில தவறுகளைச் செய்திருந்தனர்.
வரைபட வினாக்களில் மாணவர்கள் செய்த தவறுகள்
உலகப்படத்தில் ஒரு சில மாணவர்கள் கண்டங்களின் பெயர்களைக் கடல் பகுதியிலும், கடல்களின் பெயர்களைக் கண்டப்பகுதியிலும் குறிப்பிட்டிருந்தனர். ஒரு மாணவர் இந்தியப் படத்தில் குறிக்க வேண்டிய இடங்களை உலகப்படத்திலும், உலகப்படத்தில் குறிக்க வேண்டிய இடங்களை இந்தியப் படத்திலும் குறித்திருந்தார்.
பெரும்பாலான மாணவர்கள் கண்டங்களின் பெயர்களை மாற்றி மாற்றி குறித்திருந்தனர்.
மாணவர்களின் தவறுகளுக்கான காரணங்கள்
வரைபடத்தில் போதிய பயிற்சியளிக்கப்பட்டிருந்தும் மாணவர்கள் ஏன் இத்தகைய தவறுகளைச் செய்தனர் என்பது ஆராயப்பட்டது. தொடர் பயிற்சியும், வலுவூட்டலும் இன்மையால் இத்தகைய தவறுகளை மாணவர்கள் செய்திருக்கலாம் எனக் கருதியதோடு மாணவர்களிடம் கலந்துரையாடி தவறுகளுக்கான காரணங்கள் தொகுக்கப்பட்டன.
சமூக அறிவியல் வகுப்பின் போது மட்டுமே வரைபடத்தைப் பார்க்கும்வாய்ப்பு மாணவர்களுக்குக் கிடைக்கிறது என்பது கண்டறியப்பட்டது.
கண்டங்களின் பெயர்கள் மட்டுமே நினைவில் உள்ளது. படத்தைப் பார்க்கும் போது கண்டங்களின் அமைவிடம் குழப்பம் விளைவிப்பதாக நான்கு மாணவர்கள் குறிப்பிட்டனர்.
கண்டங்கள் எவை? கடல்கள் எவை? என்பதில் குழப்பம் ஏற்படுவதாக இரண்டு மாணவர்கள் கூறினர்.
இந்திய வரைபடத்தில் அரபிக்கடல் எது, வங்காள விரிகுடா எது என்பதில் அடிக்கடி குழப்பம் ஏற்படுவதாக மூன்று மாணவர்கள் குறிப்பிட்டனர்.
மாணவர்கள் விடைகளுக்குக் கொடுக்கின்ற முக்கியத்துவத்தை வரைபடங்களுக்குக் கொடுப்பதில்லை என்பது அவர்களின் கூற்றிலிருந்து உணர முடிந்தது.
வரைபடத்தின் அவசியத்தை மாணவர்கள் உணரவில்லை என்பதும் தெரியவில்லை.
வரைபட வினாக்களில் மாணவர்கள் செய்யும் தவறுகளைக் குறைப்பதற்கான வழிமுறைகள்
மேற்கண்ட தவறுகளைக் குறைப்பதற்கு முன்பு மாணவர்களிடம் வரைபடம் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தும் பொருட்டு, வரைபடங்களின் அவசியம் குறித்து எடுத்துக் கூறலாம். நம் அன்றாட வாழ்வில் வரைபடங்கள் எவ்வாறெல்லாம் பயன்படுகின்றன என்பதை எடுத்துக் கூறலாம்.
உலக உருண்டை, வரைப்படங்கள், நிலப்படங்கள் ஆகியவற்றின் உதவியோடு முக்கிய நாடுகள், கண்டங்கள், கடல்கள், முக்கிய நகரங்கள் ஆகியவற்றின் அமைவிடங்களைக் காண்பித்து மாணவர்களை ஒவ்வொருவராகத் தனித்தனியே அழைத்து குறிப்பிட்ட பகுதியைக்காண்பிக்கும் படி கேட்கலாம். படிப்படியாக இது போன்ற பயிற்சிகளைசகமாணவர்களின் உதவியோடு குழுவாக மேற்கொள்ளச்செய்யலாம்.
வகுப்பறைச் சுவரில் வரைபடங்களை மாட்டி வைத்து மாணவர்களின்பார்வையில் படும்படிச் செய்வதன் மூலம் மாணவர்களுக்கு ஏற்படும்மறதியைத் தவிர்க்கலாம். வரைபடத்திற்கென தனிப் பயிற்சி ஏடுகளை மாணவர்களுக்கு வழங்கி செயல் முறைப் பயிற்சியளிக்கலாம்.வழிமுறைகளை நடைமுறைப்படுத்துதல்
முதலில் மாணவர்களுக்கு வரைபடத்தின் அவசியம் பற்றி விளக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வரைபடங்கள் நமக்கு எவ்வாறெல்லாம் பயன்படுகின்றன என்பன பற்றியும் விளக்கிக் கூறப்பட்டது.
வரைபடத்தின் அவசியம்
வரைபடத் திறனை மாணவர்கள் வளர்த்துக் கொள்வதன் மூலம் பாடக் கருத்துகளைக் கண்முன் காட்சிப் படுத்தி நினைவில் வைத்துக் கொள்ளலாம். ஒரு நாட்டின் இயற்கை வளங்கள் பற்றியும், நாட்டின், மாநிலத்தின் எல்லைகள், தலைநகரங்கள், முக்கிய நகரங்கள், முக்கிய சாலைகள் ஆகியவற்றைப் பற்றியும் தெரிந்து கொள்வதற்கு வரைபடங்கள் அவசியம் என்பது மாணவர்களுக்கு விளக்கிக் கூறப்பட்டது.
வரைபடத்தின் பயன்கள்
இன்று வரைபடம் பல துறைகளிலும் பயன்படுகிறது. குறிப்பாக இராணுவத்துறையில் வரைபடத்தின் உதவியோடு தான் இடங்களை அடையாளம் காண்கின்றனர். சுற்றுலா செல்பவர்கள் புதிய இடங்களை வரைபடத்தின் உதவியோடு தெரிந்து கொள்கின்றனர். நேரில் செல்லாத பல உலக நாடுகளைப் பற்றியும் அந்நாட்டு இயற்கை அமைப்புகள் பற்றியும் வரைபடத்தின் வாயிலாகத் தெரிந்து கொள்ளலாம். என்பன போன்ற வரைபடத்தின் பயன்களை வலியுறுத்தும் கருத்துகள் மாணவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டன.வழங்கப்பட்ட பயிற்சிகள் மாணவர்களின் வரைபடத்திறனை மேம்படுத்தும் பொருட்டு அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள கட்டகத்திலுள்ள (வரைபடத்திறன் தெரிந்து கொள்வோமா?) அடிப்படைப் பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
* கண்டங்கள், நாடுகள், மாநிலங்கள் ஆகியவற்றின் வடிவங்களை உற்று நோக்கி எவை ஒத்தவை என்று கண்டறிந்து பெயர்களை எழுதுதல்.
* திசைகளறியும் பயிற்சியாக பல்வேறு திசைகளை நோக்கி அம்புக்குறிகள் வரைந்து, அம்புக் குறிகள் காட்டும் திசையைக் கூறச்செய்தல்.
* அட்சக்கோடுகள், தீர்க்கக் கோடுகளைக் கொண்டு நாடுகளின் அமைவிடங்களைக் கூறும் முறையைக் கற்பித்தல்மேற்கண்ட பயிற்சிகள் மூலம் மாணவர்கள் வரைபடங்களில் திசைகள், அளவுகள், நாடுகளின் அமைவிடங்கள் ஆகியவற்றை அறிந்து கொண்டனர்.
மேலும் வரைபடங்கள், நிலப்படங்கள், உலக உருண்டை ஆகியவற்றைக் கொண்டு தொடர் பயிற்சியளிக்கப்பட்டது. ஒரு வாரகாலப் பயிற்சிக்குப் பிறகு மாணவர்களின் வரைபடத்திறன் சோதிக்கப்பட்டது.
அத்தேர்வில் போதிய முன்னேற்றம் காணப்பட்டது. காலாண்டுத் தேர்வில் மாணவர்கள் வரைபட வினாக்களில் பெற்ற மதிப்பெண்களைத் தொடர் வலுவூட்டல் பயிற்சிக்குப்பிறகு பெற்ற மதிப்பெண்களோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் இது உணரப்பட்டது.தொடர் நடவடிக்கை
மாணவர்களுக்கு அவர்களின் குழுத் தலைவர்கள் மூலம் தொடர் பயிற்சியளிக்கப்பட்டுவருகிறது. இதுபோல் பிற வகுப்புகளிலும் வரைபடத் திறன் குறைந்த மாணவர்களுக்கு வலுவூட்டல் பயிற்சி வழங்குமாறு தொடர்புடைய ஆசிரியர்களுக்கு தலைமை ஆசிரியர் வாயிலாக அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. பிற பாடங்களைக் கற்பிக்கும் ஆசிரியர்கள் தேவைப்படுகிறபோது வரைபடங்களைப் பயன்படுத்திட வேண்டுமாய் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அந்தந்த வகுப்பறையில் உலக, இந்திய வரைபடங்களை மாணவர்களின் பார்வையில் படுமாறு மாட்டி வைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முடிவுரை
சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் என்ற பொன் மொழிக்கு எடுத்துக்காட்டாக இச்செயலாய்வு முடிவு அமைந்துள்ளது. மாணவப் பருவம் விளையாட்டுப் பருவம் எதையும் உடனுக்குடன் மறந்து விடுவது அவர்களின் இயல்பு எனவே தொடர்பயிற்சியின் மூலம் வலுவூட்டி அவர்களின் மனத்திலிறுத்தினால் கற்றல் செயல்பாடு வெற்றி அடையும் என்பதை இச்செயலாய்வு முடிவு எடுத்துக்காட்டுகிறது.
போதிய வலுவூட்டலின்மையால் தேர்வில் எளிதாகப் பெறவேண்டிய பத்து மதிப்பெண்களை மாணவர்கள் இழக்க நேரிடுகிறது என்பதால் இச்செயலாய்வு முடிவு (உயர்தொடக்க வகுப்புகளுக்குக் கற்பிக்கும்) அனைத்து ஆசிரியர்களுக்கும் எடுத்துக் கூறப்பட்டு அதன் விளைவாக அவர்களும் மாணவர்களுக்கு வரைபடத் திறனை வலுவூட்டிவருகின்றனர்.

No comments:

Post a Comment