தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking

Thursday, November 5, 2009

உலகம் சுற்றும் தமிழ்

அயலகத்தமிழறிஞர்கள்
மு.இளங்கோவன்
வயல்வெளிப் பதிப்பகம்இடைக்கட்டுஉள்கோட்டைகங்கைகொண்டசோழபுரம்- 612 901.பக்கம்:200விலை: ரூ.200


அறிவியல் துறை அறிஞர்களின் பணி வெளியுலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட அளவுக்கு மொழியறிஞர்களின் பணி அறிமுகப்படுத்தப்படவில்லை. அதிலும் குறிப்பாகத் தமிழ் அறிஞர்கள் அம் மொழி வளர்ச்சிக்கு ஆற்றிய ஆக்கப்பூர்வமான பணிகள் பொது வாசகர்களுக்கும் மாணவர் உலகுக்கும் முறையாக அறிமுகப்படுத்தப்படவில்லை.இக்குறையைப் போக்கியிருக்கிறார் புதுவை பாரதிதாசன் மகளிர் கல்லூரி பேராசிரியர் முனைவர் மு.இளங்கோவன் 'அயலகத்தமிழறிஞர்கள்' என்னும் நூலின் வாயிலாக. உலகத்தமிழறிஞர்களை உலகத்தமிழர்களுக்கு அறிமுகம் செய்கிறது இந்நூல். தமிழ் ஓசை நாளிதழின் ஞாயிறு இணைப்பான களஞ்சியம் இதழில் இருபத்தைந்து வாரங்கள் தொடராக வெளி வந்து வாசகர்களின் பரவலான வரவேற்பைப் பெற்ற கட்டுரைகளோடு மேலும் ஐந்து கட்டுரைகள் சேர்க்கப்பட்டு முப்பது தமிழறிஞர்கள், அவர்தம் பணிகள் பற்றிய அரிய செய்திகளை தமக்குள்ள உலாகளாவிய தொடர்புகளைப் பயன்படுத்தி சேகரித்து நூலாக்கியுள்ள இளங்கோவனின் முயற்சி பாராட்டப்படவேண்டியது. இத்தொடரை வெளியிடுவதற்குப் பெரிதும் துணைநின்ற களஞ்சியம் பொறுப்பாசிரியர் யாணனின் பங்கு வெளியுலகம் அறியாதது. நம் தமிழ்மொழி உலகெங்கும் பரவுவதற்கு பல்வேறு நாடுகளிலுள்ள அயல் மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட அறிஞர்கள் எவ்வாறெல்லாம் பங்களித்திருக்கின்றனர் என்பதை இன்றைய இளைஞர்களுக்கு எடுத்துக்கூறுவதாக அமைந்திருப்பது இந்நூலின் கூடுதல் சிறப்பு. வெறும் தகவல்களாகமட்டும் வரண்டுவிடாமல் படிப்போர் மனத்தில் தமிழுணர்வு ஏற்படும்படி சுவையான பல கூடுதல் தகவல்களையும் அளித்து வாசிப்புத் தன்மையுள்ள நூலாக்கியிருப்பது நூலாசிரியரின் தனித்திறன். உலகக் கல்விப் புலங்களோடு ஒப்பிடுகையில் துறை சார்ந்த செய்திகளை ஆவணப்படுத்துகின்ற வழக்கம் தமிழ்நாட்டுக் கல்விப்புலங்களில் குறைவாகவே உள்ளது.நம் கல்வி நிறுவனங்கள் குறிப்பாகப் பல்கலைக் கழகங்கள் ஆற்ற வேண்டிய பல பணிகளை தனிநபர்கள் பலர் வெற்றிகரமாக நிகழ்த்தி வருகின்றனர்.அந்த வரிசையில் நண்பர் இளங்கோவனின் இப்பணியும் சேர்க்கப்பட வேண்டிய ஒன்று. தன்னால் இயன்ற வரை தகவல்களைப் பல்வேறு சிரமங்களுக்கிடையிலே தொகுத்தளித்ததோடு நடுநிலையாகவும் செய்திகளை அளித்திருப்பதாக்கூறுகிறார்.நூலாசிரியரின் விமர்சனப்பார்வையைத் தவிர்த்திருக்கிறார். இது இன்றுள்ள இலக்கிய அரசியலில் சிக்கிக்கொள்ள வேண்டாம் என்கிற எச்சரிக்கை உணர்வு காரணமாக இருக்கலாம். எப்படியிருப்பினும் இளங்கோவனின் இம்முயற்சித் தமிழ் உலகம் போற்றி வரவேற்கத்தகுந்தது. ஒன்பதாம் உலகத் தமிழ் மாநாடு நடைபெற விருக்கின்ற இன்றைய சூழலில் இந்த நூல் வெளிவந்திருப்பது குறிப்பிடத்தகுந்தது.இளங்கோவனின் முயற்சி ஒரு தொடக்கம்தான் இதனைத் தொடர்ந்து இந்தூலில் விடுபட்டுள்ள அறிஞர்களை, அவர்தம் பணிகளை நூலாக்க முயற்சி மேற்கொள்ளலாம். தமிழ் மொழி , தமிழறிஞர்கள் பற்றி அறிந்து கொள்ள விரும்புகிறவர்களுக்குக் கையேடாக இந்நூல் திகழும். ஆய்வு மாணவர்களுக்கும் பயன்தரத் தக்க நூலாக இது அமையும்.வடிவமைப்பும் அச்சமைப்பும் நேர்த்தியாக அமைந்துள்ளன.பள்ளி,கல்லூரி,பல்கலைக்கழக நூலகங்களில் கட்டாயம் இடம்பெற வேண்டிய நூலிது. நன்றி: அம்ருதா நவம்பர்-2009
http://mankavuchi.blogspot.com/

No comments:

Post a Comment