திருச்சி
11-02-2006
அன்பு நண்பர் புகழேந்திக்கு,
நலமா? நகர்க்குருவி வாசித்துவிட்டேன். இயல்பான எளிமையான பல கவிதைகள் அளித்துள்ளீர்கள்.. வாசிப்பு நெருக்கடி இன்றி கவிதைகளை உள்வாங்கிக்கொள்ள முடிந்தது.ந்வீன கவிதைகளில் இது ஒரு பிரதான அம்சமாக மிளிர்வதை அறிந்திருப்பீர்கள். இன்றைய கவிதை மொழியில் புதிர்கள் எதுவுமில்லை என்பதே அதன் பலம். அதே சமயம், கவிதைக்குள் ஒரு வித மாயாவாத வெளிப்பாட்டைக்கொண்டுவர முடியும். காட்சிப்பதிவுகளின் வழியே கருத்துப்பதிவின் நுண்ணிய இடங்களை கவிஞன் தொட்டுவிட முடியும். கவிதை நகர்வு, கவிதையைவிட முக்கியமான ஒன்றாகக் கருதுகிறேன். நூலகத்திலிருக்கும் புத்தக அடுக்கு போல, ஒரு இசைக்குறிப்பு போல, ஒரு தேர்ந்த வாகன ஓட்டியின் சாகசம் போல கவிதையை நகர்த்திச் செல்ல முடியும். ஒரு நல்ல கவிதை தன் மையத்தை ஒரு நாளும் இழப்பதில்லை. அது எப்போது எழுதப்பட்டதாக இருப்பினும் சரி அது இன்று மலர்ந்த பூவாகத்தான் மணம் வீசும்.
இழப்புகள் சுமைகள் இவைகளிலிருந்து விடுபடத் துடிக்கும் மன்க் கொந்தளிப்பைத் தங்களின் பல கவிதைகளில் உண்ர்கிறேன். கவிஞனுக்கே உரித்தான nostalgic மன நிலையும் கூட. ' நடப்பது என்பது நடந்தது ஆகிவிட்டது' , 'பூமிக்குள் புதைக்கப்பட்ட நம் மூதாதையர்...', ' என் மகனின் நாள்காட்டி முழுக்க ஞாயிற்றுக்கிழமைகள்' ஆகிய வரிகளில் a touch of class உள்ளது. அதே சமயம் . ' அன்றெ தொடங்கினேன் சமையல் கலையை மறந்து போக..' என்பது apt ஆகத் தெரியவில்லை. 'சமையலறையில் இனி எனக்கென்ன வேலை என்று இருக்கலாமோ அது? கவனிக்கவும். ஒரு கவிதையில் அதிகப்படியான சொற்களைப்பற்றிக்கூட நான் கவலைப்படவில்லை. ஆனால் பொருத்தமற்ற சொற்கள் இருக்கலாகாது என உணர்கிறேன். கவிதையின் மீதான உரையாடலைத் தொடர்ந்து நிகழ்த்தும்போது, ' சொல் தேர்வு' மற்றும் சொற்பொருத்தம் கை கூடிவிடும். உதாரணமாக என்னுடைய பூனைகளின் காலம் என்ற கவிதையில் புனுகுத்தைலம் என்ற ஒரு சொற்றொடருக்கு சுமார் 6 மாத காலம் நான் காத்திருக்க வேண்டியதாயிற்று. இறுதியில் அதுவாகவே நிகழ்ந்தது. உக்கிரமான மன நிலையில் இயங்கும்போது அங்கு மேலோட்டமான சொற்கள் வலுவிழந்து விடுகின்றன. தொடர்ந்து அப்படிப்பட்ட மனநிலையைத் தக்க வைத்துக்கொள்வதுதான் அரிதானது. மற்றபடி தொடர்ந்து எழுதுங்கள். கவிதையின் வடிவம் செய்நேர்த்தி ஆகியவை பற்றியெல்லாம் அதிகம் அலட்டிக்கொள்ள வேண்டாம். நீங்கள் என்ன சொல்லவேண்டுமென்று நினைக்கிறீர்களோ அதை மட்டுமே சொல்லுங்கள். வடிவமும் செய்நேர்த்தியும் தம்மால் வந்துவிடும். கவிதை என்பது கையில் பிரம்பை வைத்துக்கொண்டு நம்மைப் பயமுறுத்தும் ஒன்றாம் வகுப்பு ஆசிரியர் அல்ல. அது நம் வீட்டு நாய்க்குட்டி அது நம்மைக் கடிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் அவ்வளவுதான். மற்றபடி தங்களின் 'வித்தைக்காரி', 'நாற்றமில்லாத...', 'நடந்த கதை' ஆகிய கவிதைகளை ரசித்துப் படித்தேன். அனைத்திற்கும் எழுதுங்கள்.
தபசி.
No comments:
Post a Comment