தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking
Showing posts with label அஞ்சலி. Show all posts
Showing posts with label அஞ்சலி. Show all posts

Thursday, July 13, 2017

ஓவியப்போராளி வீரசந்தானம்



ஓவியர் வீர சந்தானம் மறைந்த செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. இரு மாதங்களுக்கு முன் அண்ணன் அறிவுமதி அவர்களின் இல்லத் திருமண விழாவில் பார்த்தேன். தமிழர் ஓவியம் கருத்தரங்கு நடந்ததைப்பற்றிக் கூறியதோடு அந்த ஆய்வுக்கோவையில் உங்களைப்பற்றிதான் கட்டுரை எழுதியுள்ளேன் நூல் அனுப்பி வைக்கிறேன் என்று கூறியபோது மிகவும் மகிழ்ந்தார் அவசியம் அனுப்புங்கள் நான் இணையத்தில் பதிவிடுகிறேன் என்றார். இன்னும் அனுப்பவில்லை. அந்த குற்ற உணர்வில் தவிக்கிறது மனசு இதோ அவரைப்பற்றிய கட்டுரை.


முன்னுரை:
ஓவியம் என்பது ஒரு கலைமட்டும் அல்ல அது ஒரு போராட்டவடிவமாகவும் திகழ்கிறது. ஓவியத்தின் மூலமும் போராடமுடியும் என்பதை நம் தமிழக ஓவியர்கள் பலர் நிரூபித்துள்ளனர். அப்படிப்பட்ட ஓவியர்களில் மிகவும் முக்கியமானவராக ஓவியர் வீரசந்தானம் அவர்களைக் குறிப்பிடலாம். தமிழ்ச் சமூகம் சந்தித்த பல இன்னல்களை தன் ஓவியத்தின் மூலம் மீட்டெடுக்க முயன்ற சமகால ஓவியர்தான் வீர சந்தானம். ஓவியத்தில் மட்டுமின்றி நடிப்பிலும் தன் திறமையை வெளிப்படுத்தியவர். அவரது ஓவியச் செயல்பாடுகளையும் போராட்டங்களையும் இக்கட்டுரை ஆய்வுசெய்கிறது.
வீரசந்தானம்:
நம் நாடு விடுதலைபெற்ற ஆண்டான 1947 இல் கும்பகோணம் அருகிலுள்ள திருநாகேஸ்வரம் என்னும் ஊரில் வீரமுத்து பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தவர் வீரசந்தானம். 1966 – 72 இல் ஓவியக் கல்லூரி படிப்பை முடித்து நடுவணரசின் நெசவாளர் சேவை மையத்தில் பதினாறு ஆண்டுகள் சிறப்பாகப் பணியாற்றியுள்ளார். இவரின் பணியைப்பாராட்டி குடியரசுத்தலைவர் சித்ரகலா விருது வழங்கியுள்ளார். சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட இவருக்கு இரு மகள்கள். இருவரும் அயல்நாடுகளில் உள்ளனர்.
இளமையில் வருமை:
தன் இளமைக் காலத்தில் தனக்கு உதவிய நல் உள்ளங்களை நினைவு கூறும்போது இவ்வாறு குறிப்பிடுகிறார் ஓவியர்,”நான் கோயில் சோற்றைத் தின்னு வளர்ந்தவன். எங்க ஊர் உப்பிலியப்பன் கோயில்ல இருந்து அஞ்சு மைல் தூரம் நடந்து போய், கும்பகோணம் ஓவியப் பள்ளியில் ஓவியம் கத்துக்கிட்டேன். என் கஷ்டத்தைப் புரிஞ்சுக்கிட்டு ரலே சைக்கிள் வாங்கிக் கொடுத்த கோயில் செயல் அலுவலர் மீசை சீனிவாசன், நான் பசியோடு வருவேன்னு, தன் காலை உணவுல எனக்கும் பங்குவெச்ச ஓவியப் பள்ளி முதல்வர் கிருஷ்ணராவ், சென்னையில் என்னை ஒரு வருஷம் தங்கவெச்சு, மதிய உணவும் போட்டு சிற்பம் செய்யக் கத்துக்கொடுத்த என் குருநாதர் தனபால் சார், எனக்குத் திருமணம் செய்துவைத்த ஓவியர் ஆதிமூலம்... இப்படி எத்தனையோ பேரால்தான் இந்த சந்தானம் உருவானான்.”
ஓவியப்போராளி:
இயல்பிலேயே போர்க்குணம் உடையவர் வீரசந்தானம். குறிப்பாக ஈழத்தமிழர்களுக்காக பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டவர். அவரே ஒரு நேர்காணலில்,” என் இனத்துக்காகப் போராடணும், என் மக்கள் துன்பப்படுறாங்க, அவங்களுக்காகப் போராடணும்னு விருப்ப ஓய்வு கொடுத்துட்டு வந்துட்டேன். இன்னைக்கு வரைக்கும் ஈழத்துக்கு ஆதரவா, தமிழ் இனத்துக்கு ஆதரவா எங்கே கூட்டம், போராட்டம் நடந்தாலும் நான்தான் முதல் ஆளா நின்னு குரல் கொடுத்திருக்கேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
அணு உலை எதிர்ப்பு:
கூடங்குளம் அணு உலைக்கு எதிராக தன் ஓவியங்களைப் பயன்படுத்தியுள்ளார்.  கலைஞன் தான் உலகின் முதல் கலகக்காரனாக இருந்திருக்க வேண்டும் என்ற கலகக்குரலோடு தனது தாடியையும் தூரிகையையும் நீவிவிட்டவாறு, முதல் அணு உலை எதிர்ப்பு வண்ணத்தை பதிவு செய்ய தொடங்கினார் ஓவியர் வீரசந்தானம். அருகிலிருந்தவரின் கைரேகைகளை தனது ஓவியத்திற்காக கவர்ந்து கொண்டார். அனைவரது வண்ணங்களிலும் எதிர்ப்பும் இரத்தமும் வாழ்வும் சாவும் ஏகாதிபத்தியமும் சுரண்டலும் வறட்சியும் மலர்ச்சியும் சுடுகாடுகளும் கல்லறைகளும் மற்றும் அணு உலைகளும் குழைத்து குழைத்து நிறைந்திருந்தன. என்று அணு உலை எதிர்ப்பு ஓவியங்களைப் பற்றி பத்திரிகைச் செய்தி ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஓவியக்கொள்கை:
வீரசந்தானம் அவர்களின் ஓவியங்கள் சில கொள்கைகளை முன்வைத்தே தீட்டப்படுகின்றன. அந்த நோக்கத்தை நிறைவேற்றும்பொருட்டு பல ஓவியக் கண்காட்சிகளை நிகழ்த்தியுள்ளார். அது பற்றி குறிப்பிடும்போது,”தனி ஆளாகவும் குழுவாகவும் நிறைய ஓவிய கண்காட்சிகளும் நடத்தியிருக்கிறேன். ஓவியம் தொடர்பாக சில வெளிநாடுகளுக்கு பயணம் செய்திருக்கிறேன். தொடர்ச்சியாக நம் மரபுசார்ந்த ஓவியங்களை வரைகிறேன். அதற்காக நாடு முழுவதும் சுற்றி நிறைய ஆராய்ச்சிகள் செய்திருக்கிறேன். இது நான் எடுத்துகொண்டிருக்கும் (மரபு சார்ந்த ஓவிய பாணி) ஒரு கலையை அழியாமல் பாதுகாக்க என்னாலான முயற்சி, பங்களிப்பு. இந்த ஆராய்ச்சி என் ஓவிய பாணியை பின்தொடர நினைக்கும் இளைஞர்களுக்கு நிச்சயம் பயன்படும். நான் ஒரு சமூகப் போராளி. தமிழ் கலாசாரத்தை பாதிக்கும் எந்த சக்தியாக இருந்தாலும் எதிர்த்து போராடிக் கொண்டு இருக்கிறேன்.” என்று குறிப்பிடுகிறார்.
’தானே’ துயர் துடைத்த ஓவியங்கள்:
விகடன் நிகழ்த்திய ’தானே’(புயல்) துயர் நீக்கும் திட்டத்தில் ஓவியங்களை வரைந்து தானமாகக் கொடுத்து அதன்மூலம் கிடைத்த தொகையை தானே துயர்துடைப்புப் பணிக்குப் பயன்படுத்தினர். அப்பணியில் முதல் கலைஞராக நம் ஓவியர் கலந்துகொண்டு ஓவியம் வரைந்து கொடுத்துள்ளார். தானே புயல் பதிப்புகளைப் பற்றிய விகடன் ஓவியக்கண்காட்சியில்,''எவ்வளவோ ஓவியக் கண்காட்சி களுக்குப் போய் இருக்கிறேன். ஆனால், இதுதான் சாதனை!'' என்று தொடங்கினார் ஓவியர் வீரசந்தானம். இப்படி ஒரு கண் காட்சியை விகடன் நடத்தலாமே... ஓவியர்கள் நாங்கள் ஒரே குடையின் கீழ் நின்று உதவுகிறோமே என்று இந்த எண்ணத்தை விதைத்தவரே வீரசந்தானம்தான். ''தேசிய அளவிலான கண்காட்சிகளில்கூட இவ்வளவு ஓவியங்கள் வைக்கப்பட்டது  இல்லை. ஒரு சமூகத்தில் மக்கள் வளமாக இருக்கும்போது, கலைஞர்களை அவர்கள் பாதுகாக்க வேண்டும்; அதேபோல, மக்கள் சோதனையை எதிர்கொள்ளும்போது அவர்களை அரவணைக்க கலைஞர்கள் முன்நிற்க வேண்டும். அந்த வகையில் தமிழக ஓவியர்கள் எங்கள் கடமையைச் செய்திருக்கிறோம். கலைத் துறையைச் சேர்ந்த ஏனையோரும் இதை முன்மாதிரியாகக்கொண்டு 'தானே’ துயர் துடைக்க முன்வர வேண்டும்!'' என்றார் வீரசந்தானம் கூறியதாக விகடன் குறிப்பிடுகிறது.
இசைக்கருவி ஓவியங்கள்:
நம் பழந்தமிழ் இசைக்கருவிகளை ஓவியங்களாகத் தீட்டியுள்ளார். மகர யாழ், சகோட யாழ், செங்கோட்டு யாழ் போன்ற யாழிசைக் கருவிகளின் கம்பீரமான அழகை இவரது ஓவியங்கள் பறைசாற்றுகின்றன. “யாழிசைக்கும் பாணர்கள் நமது பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் உலகம் முழுவதும் யாழ் கருவியை இசைத்துப் பரப்பிவந்தார்கள். யாழ்தேவிக்குக் கோயில் இருந்ததாகவும், பின்னாளில் அது காணக் கிடைக்காமல் போய்விட்டதாகவும் ஒரு செய்தி இருக்கிறது. எனவே அச்சில் இருந்த யாழ் ஓவியங்களை அருங்காட்சியகம், நூலகம் போன்றவற்றில் தேடிப் பார்த்து, படித்துத் தெரிந்து கொண்டு அவற்றை ஓவியங்களாக்கினேன். திருவாரூர் கோயிலில் இருக்கும் தோற்கருவியான பஞ்சமுக வாத்தியத்தையும் என் ஓவியத்தில் கொண்டுவந்திருக்கிறேன். தற்போது, பறையாட்டத்தின் பல கூறுகளை ஓவியங்களாக்க முயன்றுவருகிறேன். எந்தக் கலையாக இருந்தாலும் மானுட மேம்பாட்டுக்காகப் படைக்கப்பட வேண்டும் என்பதுதான் என் எண்ணம். அதை நோக்கித்தான் என்
பயணம்” என்கிறார் வீரசந்தானம்.
நடிகர் வீரசந்தானம்:
ஓவியராக மட்டுமின்றி நடிகராகவும் தன் கலைப் பணியைச் சிறப்பாகச் செய்தவர் வீரசந்தானம். பாலுமகேந்திராவின் சந்தியாராகம் படத்தில் கதை நாயகனாக நடித்துள்ளார். மீரா கதிரவனின் அவள் பெயர் தமிழரசி என்ற படத்திலும், கௌதமனின் மகிழ்ச்சி படத்திலும் ஓவியர் வீரசந்தானம் நடித்துள்ளார்.
முடிவுரை:

பணியாளராக, குடும்பத்தலைவராக, ஓவியராக, சமூகப்போராளியாக, நடிகராக என தான் வகித்த அனைத்து பொருப்புகளிலும் தலை சிறந்து விளங்கிய சமகால பன்முகக் கலைஞராகத்திகழ்கிறார் ஓவியர் வீர சந்தானம். இவரது ஓவியங்கள் சமூக மேம்பாட்டுக்காகவும், இயற்கைச் சீற்றங்களினால் மக்களுக்கு ஏற்படும் துயரங்களைக் களையவும், இழந்த பண்பட்டுக் கூறுகளை மீட்டெடுக்கவும், பழமையான இசைக்கருவிகளை எதிர்கால சந்ததியினருக்குத் தெரிவிக்கவும் பயன்படுகின்றன. கலைஞர்களின் பணி கலையைக் காப்பதோடு முடிந்துவிடுவதில்லை சமூக மேம்பாட்டுக்கான களப்பணிகளிலும் தம்மை ஈடுபடுத்திக்கொள்ளவேண்டும் என்னும் கொள்கையாளராக வாழும்  இவரைப் போன்ற கலைஞர்களால்தான் இம்மண்ணில் கலைகள் இன்னும் விளைந்துகொண்டிருக்கின்றன. 

Wednesday, April 8, 2015

ஜெயகாந்தன் ஒரு சகாப்தம்



ஜெயகாந்தன் தமிழ் இலக்கிய வரலாற்றில் மிக வலிமையான ஆளுமை. அவர் கூறும் கருத்துகள் அவ்வப்போது சர்ச்சையை ஏற்படுத்தியவை. யாருக்கும் அஞ்சாமல் தன் மனத்தில் பட்டதை கூறும் இயல்புடைய படைப்பாளி. அவர் மறைந்தாலும் அவரின் படைப்புகள் காலம் உள்ளவரை வாழும்.
அவரைப்பற்றி சுருக்கமாக நினைவு கூர்ந்து அவரது மறைவுக்கு வீர வணக்கம் செலுத்துவோம்.
ஜெயகாந்தன் 1934-ஆம் ஆண்டு கடலூரில், ஒரு வேளாண் குடும்பத்தில் பிறந்தார். பள்ளிப்படிப்பில் நாட்டம் இல்லாமையால், ஐந்தாம் வகுப்பிலேயே பள்ளி வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி வைத்தார். உலகியல் அனுபவம் பெறவேண்டி, வீட்டை விட்டு வெளியேறி விழுப்புரம் சென்றார். அங்கு, அவர் மாமாவின் மேற்பார்வையில் வளர்ந்தார். அவர் ஜெயகாந்தனைப் பொதுவுடைமைக் கோட்பாடுகளுக்கும் பாரதியின் எழுத்துக்களுக்கும் அறிமுகப்படுத்தினார்.
ஜெயகாந்தன் சில ஆண்டுகள் விழுப்புரத்தில் வாழ்ந்த பின் சென்னைக்குக் குடிபெயர்ந்தார். அங்கு பெரும்பாலான நேரத்தை சி.பி.ஐ ( C. P. I ) -யின் ஜனசக்தி அலுவலக அச்சகத்தில் பணிபுரிந்தும், ஜனசக்தி இதழ்கள் விற்றும் கழித்தார். 1949-ஆம் ஆண்டு சி. பி. ஐ மீதும் அதன் உறுப்பினர்கள் மீதும் தடை போடப் பட்டது. ஆதலால் சில திங்கள்கள், தஞ்சையில் காலணிகள் விற்கும் கடை ஒன்றில் பணிபுரிந்தார். இந்த எதிர்பாராத இடைவேளை அவர் வாழ்க்கையில் முதன்மையான காலகட்டமாக அமைந்தது. அவர் சிந்திக்கவும் எழுதவும் அப்பொழுது நேரம் கிடைத்தது. இக்கால கட்டத்தில், தமிழ்நாட்டில் முக்கிய அரசியல் மாற்றங்களும் நேர்ந்தன. தி.மு.க மற்றும் தி.க -வின் வளர்ச்சியால், சி.பி.ஐ மெதுவாக மறையத் துவங்கியது. உட்கட்சிப் பூசல்களினாலும், கட்சியுடன ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளினாலும், ஜெயகாந்தன் சி.பி.ஐ-யிலிருந்து விலகினார். பின்னர் காமராசருடைய தீவிரத் தொண்டனாக மாறி, தமிழகக் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.
அவரது இலக்கிய வாழ்க்கை 1950களில் தொடங்கியது - சரஸ்வதி, தாமரை, கிராம ஊழியன், ஆனந்த விகடன் போன்ற ஏடுகளில் இவரது படைப்புகள் வெளியாயின. படைப்புகளுக்குப் புகழும் அங்கீகாரமும் கிடைத்தன. இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவராகப் போற்றப் பெற்றார். ஜெயகாந்தன் சில ஆண்டுகள், தமிழ்த் திரையுலகிலும் வலம் வந்தார். இவரது நாவல்களான "உன்னைப் போல் ஒருவன்" மற்றும் "சில நேரங்களில் சில மனிதர்கள்" ஆகியவை படமாக்கப்பட்டன. இதில் "உன்னைப் போல் ஒருவன்" சிறந்த மாநில மொழித் திரைப்படத்திற்கான குடியரசுத் தலைவர் விருதில் மூன்றாம் விருதைப் பெற்றது. மேலும், அவருக்கும் ஒரு நடிகைக்கும் ஏற்பட்ட உறவே "ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்" என்ற புதினமாக உருப் பெற்றது.

ஜெயகாந்தன்படைப்புகள்
தன் வரலாறு
  ஒர் இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள் (அக்டோபர் 1974 )
  ஒர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள் (செப்டம்பர் 1980 )
  ஓர் இலக்கியவாதியின் பத்திரிகை அனுபவங்கள் (டிசம்பர் 2009)
 ஓர் இலக்கியவாதியின் ஆன்மீக அனுபவங்கள்
வாழ்க்கை வரலாறு
  வாழ்விக்க வந்த காந்தி 1973 (ரொமெயின் ரொலேண்ட்டின் ஃப்ரெஞ்சு    மொழியில் வந்த காந்தியின் தன்வரலாற்றின் தமிழாக்கம் )
 ஒரு கதாசிரியனின் கதை (மே 1989 ( முன்ஷி பிரேம்சந்தின் வாழ்க்கை  வரலாறு)
நாவல்கள் மற்றும் குறுநாவல்கள்
 வாழ்க்கை அழைக்கிறது (ஆகஸ்ட் 1957)
 கைவிலங்கு (ஜனவரி 1961)
 யாருக்காக அழுதான்? (பெப்ரவரி 1962)
 பிரம்ம உபதேசம் (மே 1963)
 பிரியாலயம் (ஆகஸ்ட் 1965)
 கருணையினால் அல்ல (நவம்பர் 1965 )
 பாரீசுக்குப் போ! (டிசம்பர் 1966)
 கோகிலா என்ன செய்துவிட்டாள்? (நவம்பர் 1967)
 சில நேரங்களில் சில மனிதர்கள் (ஜூன் 1970)
 ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் (ஜனவரி 1971)
 ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் (ஏப்ரல் 1973)
 ஜெய ஜெய சங்கர... (செப்டம்பர் 1977)
 கங்கை எங்கே போகிறாள் (டிசம்பர் 1978)
 ஒரு குடும்பத்தில் நடக்கிறது... (ஜனவரி 1979)
 பாவம், இவள் ஒரு பாப்பாத்தி ! (மார்ச் 1979)
 எங்கெங்கு காணினும்... (மே 1979)
 ஊருக்கு நூறு பேர் (ஜூன் 1979)
 கரிக்கோடுகள் (ஜூலை 1979)
 மூங்கில் காட்டினுள்ளே (செப்டம்பர் 1979)
 ஒரு மனிதனும் சில எருமை மாடுகளும் (டிசம்பர் 1979)
 ஒவ்வொரு கூரைக்கும் கீழே... (ஜனவரி 1980)
 பாட்டிமார்களும் பேத்திமார்களும் (ஏப்ரல் 1980)
 அப்புவுக்கு அப்பா சொன்ன கதைகள் (ஆகஸ்ட் 1980)
 இந்த நேரத்தில் இவள்... (1980)
 காத்திருக்கா ஒருத்தி (செப்டம்பர் 1980)
 காரு (ஏப்ரல் 1981)
 ஆயுத பூசை (மார்ச் 1982)
 சுந்தர காண்டம் (செப்டம்பர் 1982)
 ஈஸ்வர அல்லா தேரே நாம் (ஜனவரி 1983)
 ஓ, அமெரிக்கா! (பெப்ரவரி 1983)
 இல்லாதவர்கள் (பெப்ரவரி 1983)
 இதய ராணிகளும் ஸ்பெடு ராஜாக்களும் (ஜூலை 1983)
 காற்று வெளியினிலே... (ஏப்ரல் 1984)
 கழுத்தில் விழுந்த மாலை (செப்டம்பர் 1984)
 அந்த அக்காவினைத்தேடி... (அக்டோபர் 1985)
 இன்னும் ஒரு பெண்ணின் கதை (ஜூலை 1986)
 ரிஷிமூலம் (செப்டம்பர் 1965)
 சினிமாவுக்குப் போன சித்தாளு (செப்டம்பர் 1972)
 உன்னைப் போல் ஒருவன்
 ஹர ஹர சங்கர (2005)
 கண்ணன் (2011)
சிறுகதை தொகுப்புகள்
 ஒரு பிடி சோறு (செப்டம்பர் 1958)
 இனிப்பும் கரிப்பும் (ஆகஸ்ட் 1960)
 தேவன் வருவாரா (1961)
 மாலை மயக்கம் (ஜனவரி 1962)
 யுகசந்தி (அக்டோபர் 1963)
 உண்மை சுடும் (செப்டம்பர் 1964)
 புதிய வார்ப்புகள் (ஏப்ரல் 1965)
 சுயதரிசனம் (ஏப்ரல் 1967)
 இறந்த காலங்கள் (பெப்ரவரி 1969)
 குருபீடம் (அக்டோபர் 1971)
 சக்கரம் நிற்பதில்லை (பெப்ரவரி 1975)
 புகை நடுவினிலே... (டிசம்பர் 1990)
 சுமைதாங்கி
 பொம்மை
பெற்ற விருதுகள்
 சாகித்திய அகாதமி விருது
 2002-ம் ஆண்டுக்கான ஞான பீட விருது
 2009-ம் ஆண்டின் இலக்கியத்துறைக்கான பத்ம பூஷன் விருது
 ரஷ்ய விருது