தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking
Showing posts with label நூல்விமர்சனம். Show all posts
Showing posts with label நூல்விமர்சனம். Show all posts

Friday, October 17, 2025

காற்றில் கலந்த சொற்கள்

 


தகவல் தொடர்பு சாதனங்கள் இன்று பல வகைகளில் பல்கிப் பெருகி உள்ளன. இவற்றுக்கெல்லாம் தாயாக விளங்குவது வானொலி என்றால் அது மிகை இல்லை. 1920 களில் அறிமுகமான வானொலி இன்று கைபேசி செயலிகள் வாயிலாகவும் கேட்கக் கூடிய அளவிற்கு காலத்திற்கு ஏற்ப தன்னை உருமாற்றிக் கொண்டுள்ளது. தொலைக்காட்சி அறிமுகம் ஆவதற்கு முன்பு கிராமங்களில் வானொலி பெட்டிகள் தான் தகவல்களை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் மிகச் சிறந்த சாதனமாக இருந்திருக்கிறது. சிறுவயதில் விடுமுறை நாட்களில் எங்கள் வீட்டு மர்ஃபி ரேடியோவில் பாட்டு கேட்டபடி மாடுகளை மேய்ப்போம். உலகச் செய்திகள் முதல் ஒலிச்சித்திரங்கள் வரை மக்களிடம் கொண்டு சேர்த்த தகவல் சாதனம் வானொலி. பல்வேறு அறிஞர்களின் கருத்துறைகளையும் வானொலியில் கேட்டிருக்கிறோம். 

1970 கள் தொடர்ந்து அண்மைக் காலம் வரை எங்கள் அன்பு மிகு பேராசிரியர் முனைவர் ஆறு ராமநாதன் அவர்கள் வானொலியில் ஆற்றிய அறிவுசார் உரைகளை தொகுத்து சல்லி வேர்கள் என்ற தலைப்பில் நூலாக்கி இருக்கிறார். ஒரு சிறந்த கல்வியாளராக எதையும் நேர்த்தியோடு செய்யக்கூடிய இயல்புடையவர் பேராசிரியர். வானொலி உரைகள் என்றாலும் அவற்றை முறைப்படுத்தி தொகுத்து நூலாக்கி உள்ளார். அறிவு சார்ந்த ஆறு உரைகள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன.

கலை, இலக்கியம், அரசியல் என்று மூன்று களங்களிலும் தனது உரைகளைத் திட்டமிட்டு நிகழ்த்தியுள்ளார். வானொலி உரைகள் பெரும்பாலும் கட்டுரைகளைப் போல் திட்டமிட்டு நிகழ்த்தப்பட வேண்டும். குறித்த நேரத்தில் செரிவான கருத்துக்களை நேயர்கள் நெஞ்சில் பதியும்படியாக கட்டமைக்கப்பட வேண்டும். போகிற போக்கில் மேடைப்பேச்சு போல் எதையாவது பேசி வைக்க முடியாது. எடுத்துக்கொண்ட தலைப்புக்கு ஏற்ற சரியான கருத்துக்களை தொகுத்து தயாரிக்கப்பட்ட உரையாக தான் அவை அமையும். அப்படித்தான் பேராசிரியரின் உரைகளும் ஆய்வு கட்டுரைகளாகவே அமைந்துள்ளன. தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு பக்தி இலக்கியங்கள் மிகுதியாக பங்களிப்பு செய்திருக்கின்றன. ஆனால் அந்த பக்தி இலக்கியங்கள் நாட்டுப்புற இலக்கிய வடிவங்களை எவ்வாறு கையாண்டிருக்கின்றன. குறிப்பாக தாலாட்டுப் பாடல்கள் கும்மி பாடல்கள் போன்ற நாட்டுப்புற பாடல் வடிவங்கள் பக்தி இலக்கியங்களில் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தி உள்ளன என்பதை தனக்கே உரிய பாணியில் ஆய்வு செய்து தனது உரையை வடிவமைத்திருக்கிறார் பேராசிரியர்.

தெருக்கூத்து குறித்த ஆய்வுகளுக்காக பழைய ஒருங்கிணைந்த தென்னார்க்காடு மாவட்டம் முழுவதுமாக பயணம் செய்து தகவல்களை திரட்டியவர். பேராசிரியரின் ஆய்வுக் கட்டுரை வாயிலாகத் தான் கடலூர் மாவட்டம் குரவன்குப்பம் நாடக ஆசிரியர் சடகோபன் அவர்களை நான் அடையாளம் கண்டேன். அவர் 200 ஆண்டுகாலம் பாதுகாத்து வைத்திருந்த சம்பூர்ண ராமாயணம் எனும் கையெழுத்து பிரதியை அண்மையில் வெளியிட்டேன். அந்த தெருக்கூத்து கலைஞர்களோடு பேராசிரியர் வானொலி நிலையத்திற்கு சென்று பதிவு செய்ததை ஒரு தனி கட்டுரையாக எழுதலாம். அந்த அளவுக்கு பல்வேறு அனுபவங்கள். அவற்றையெல்லாம் முன்னுரையில் கோடிட்டு காட்டி உள்ளார். தெருக்கூத்து, மேடை நாடகங்கள் ஆகிய இரண்டு கலைகள் பற்றியும் மண்வாசம் என்ற தலைப்பில் இரண்டு ஆய்வு உரைகள் இந்த நூலில் இணைக்கப்பட்டுள்ளன. 

இரவீந்திரநாத் தாகூரின் கல்விச் சிந்தனைகளை கல்வியியல் படித்தவர்கள் அறிவார்கள். அவரது தேசிய சிந்தனைகளை பேராசிரியரின் ஆய்வுரை குறிப்பிடுகிறது. அவரின் பல்வேறு சிந்தனைகள் இன்றைக்கும் பொருந்தக் கூடியதாக இருப்பதை சுட்டிக்காட்டும் பேராசிரியர் தாகூர் வாய்ச்சொல் வீரர் மட்டுமல்ல செயல்பாட்டிலும் தனது கொள்கைகளை எவ்வாறு கடைபிடித்தார் என்பதை எல்லாம் உரையில் இடம் பெறச் செய்துள்ளார். அவர் தேசியவாதி மட்டுமல்ல சர்வதேசவாதி என்பதையும் இந்த உரை நமக்கு உணர்த்துகிறது. 

இந்த ஆறு உரைகளில் மிக முக்கியமான உரைகளாக நான் கருதுவது விடுதலைக்கு வீர முழக்கம் என்னும் இரண்டு உரைகள். 

எண்ணற்ற தியாகிகள் விடுதலைக்காக பாடுபட்டு இருந்தாலும் இந்திய அளவில் குறிப்பிட்ட சிலரை மட்டும் நமக்கு வரலாறுகள் சுட்டிக் காட்டுகின்றன. நாடெங்கிலும் பல்லாயிரக்கணக்கான விடுதலைப் போராளிகளின் வரலாறு வெளியில் தெரியாமலே இருந்த நிலை தற்போது மாறி வருகிறது. வரலாற்றின் மீது அக்கறை கொண்ட பல்வேறு அறிஞர்கள் மாவட்ட வாரியாக விடுதலைப் போராளிகளின் வரலாறுகளை தொகுத்து வருகின்றனர். கடலூர் அஞ்சலையம்மாள் குறித்து ஊடகவியலாளர் ராஜா அவர்கள் ஒரு வரலாற்று புதினத்தை வெளியிட்டார். விடுதலைப் போரில் சீர்காழி என்ற நூலை ஜனதா இமயவரம்பன் அவர்கள் அண்மையில் மிகப் பிரம்மாண்டமாக சீர்காழியில் வெளியிட்டுள்ளார். மயிலாடுதுறை காளான் பதிப்பகம் இந்த நூலை வெளியிட்டுள்ளது. பேராசிரியரின் உரையில் அரியலூர், ஜெயங்கொண்டம், திருவாரூர் ஆகிய பகுதிகளில் வாழ்ந்த நாட்டுப்புற மக்கள் பாடிய ஆங்கிலேய எதிர்ப்பு பாடல்களைப் பதிவு செய்துள்ளார். மேலும் அந்தப் பகுதிகளில் விடுதலைக்கு போராடிய பல்வேறு போராளிகளின் விரிவான பட்டியலையும் அளித்துள்ளார். காந்தியின் ஒத்துழையாமை இயக்கம் சத்தியாகிரகம் போன்ற போராட்டங்களில் கலந்து கொண்ட அரியலூர், ஜெயங்கொண்டம், திருவாரூர் பகுதி விடுதலைப் போராளிகளின் பெயர் பட்டியல் மிக முக்கியமான வரலாற்று ஆவணமாகும். இந்தப் பகுதியில் விடுதலைக்கு போராடியவர்கள் யார் என்று தெரிந்தால் தான் அது குறித்து ஆய்வுகளைத் தொடர முடியும். அதற்கான திறவுகோலை இந்த வானொலி உரை நமக்கு வழங்குகிறது. 

காற்றில் கலந்த இந்த அறிவு சார் சொற்களை ஏடுகளில் பதித்து நம் கரங்களில் தவழச் செய்துள்ளார் பேராசிரியர். கலை இலக்கியம் அரசியல் என்ற மூன்று துறைகளிலும் ஆய்வு செய்பவர்களுக்கும் சராசரி வாசகர்களுக்கும் பயன்படும் வகையில் இந்த நூல் வந்துள்ளது. கல்வித்துறைக்கும் இலக்கியத் துறைக்கும் வளம் சேர்க்கும் ஒரு வரலாற்று ஆவணமாக இந்த நூல் திகழும் என்பது உறுதி. 

     

21.06.2025                                                                                                          

இரத்தின புகழேந்தி

தலைவர் 

கானல் வரி கலை இலக்கிய இயக்கம் 

                                              4, தங்கம் நகர்,

                                            அண்ணா சாலை,

                                பெரியார் நகர் தெற்கு,

                              விருத்தாசலம் -606001. 

                         

    பேசி:9944852295

Sunday, July 22, 2018

உள்ளிழுக்கும் கவிதை




     கவிதை வாசிப்பு என்பதே இன்று அரசியலாகியிருக்கிறது. யாருடைய கவிதைகளை நாம் வாசிக்கவேண்டும் என்று நமக்கு கட்டளையிடும் விதமாகவே இன்றைய இதழ்கள் நம் மீது சிலரது கவிதைகளைத் திணிக்கின்றன. நாமும் அவற்றை வாசிக்கவேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளாகிறோம். இன்று இடைநிலை இதழ்களால் சிறு பத்திரிகைகளின் மூச்சுத் திணறுகிறது.. நாம் விரும்பும் கவிதைகளைத் தேடி வாசிப்பதற்கான வாய்ப்புகள் குறைந்துள்ளன. வாசகர்களிடம் நிலவும் இத்தகைய தேக்க நிலையை, சமூக ஊடகங்கள் சரிசெய்ய முயல்கின்றன.
     இப்படி ஒரு சூழலில் கவிதை நூல் வெளியிடுவது என்பதே மிகப்பெரிய சவால். அப்படியே வெளியிட்டாலும் அவற்றை வாசகர்களிடம் கொண்டு சேர்ப்பது அதைவிட சவாலாகும். அந்த பணியை துணிவோடு செய்திருக்கும் நம் கவிஞர் சூர்யநிலா அவர்களுக்கு வாழ்த்துகள்.
     தொடர்ந்து மிகுந்த ஆயாசங்களுக்கிடையிலும் இயங்கி வருபவர் கவிஞர். இவரது அண்மை வரவு, ”புனலில் மிதக்கும் முகம்” இக்கவிதை நூலில் என்னைக்கவர்ந்த இரு கவிதைகளில் ஒன்றை மட்டும் சக வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
     ஒரு நூலை நாம் தொடர்ந்து வாசிக்கவேண்டுமா என்பதை முதல் பத்து வரிகளே தீர்மானிக்கின்றன. நான் பல முக்கியமான நூல்களை இன்னும் வாசிக்காமலிருப்பதற்கும் அதுவே காரணம். எத்தனை முக்கியமான எழுத்தாளராக இருந்தாலும் முதல் பத்தியிலேயே என்னைக் கவரவேண்டும் இல்லையெனில் அந்த நூலை நான் அவ்வளவு சீக்கிரம் வாசிப்பதில்லை. இந்த என் மனநிலைக்கு சரியான தொகுப்பாக அமைந்துள்ளது இந்த தொகுப்பு.
     சமர் என்னும் முதல் கவிதையே என்னை மிகவும் கவர்ந்த கவிதை. இந்த ஒரு கவிதையே போதும் இந்த தொகுப்பைப் படிக்க நம்மை உள்ளிழுத்துச் செல்லும் திறவுகோலாக அமைத்துள்ளது. நம் கற்பனை செய்யும், கனவுகாணும் உலகம் அழகாக இருக்கிறது. ஆனால் எதேர்த்தமோ அதற்கு நேர்மாறாக உள்ளது. எல்லோரும் இன்னாட்டு மன்னர் என்றார்களே ஆனால் நிச வாழ்க்கை அப்படியா இருக்கிறது. ஒவ்வொன்றுக்கும் போராடத்தானே வேண்டியிருக்கிறது. அன்றாட வாக்கையே போராட்டமாக அமைந்த ஒரு எளிய மனிதன் தனியாக எத்தனை போராட்டங்களுக்கு வாளைச் சுழற்ற முடியும். இயலாது என்பதற்காக விட்டுவிட முடியுமா? போராடி வாழ்ந்தாகத்தானே வேண்டியிருக்கிறது. நம் வாழ்க்கைப் போராட்டங்களை பக்கம் பக்கமாக எழுதலாம். ஆனால் அவையெல்லாம் கவிதையாகிவிடாது. கவிதைக்கு அழகு சுருங்கச் சொல்லுதலாயிற்றே. இத்தகையதொரு சாமான்யனின் போராட்ட வாழ்க்கையைத்தான் இந்த முதல் கவிதை சுருங்கச் சொல்கிறது. அதனூடே வாசகனின் கற்பனைகளையும் விரிவடையச் செய்கிறது.
    
     பெரும் சேனைகளின் முன்னே
     கம்பீரமாக நடந்தேன்
என்று தொடங்கும் இரண்டு வரிகள் பல சிந்தனைகளை வாசகரிடம் கிளரிவிடுகின்றன. அரசன் ஒருவன் தன் படைகள் பின் தொடர கம்பீரமாக நடந்து செல்வதாக ஒரு காட்சி சட்டென தோன்றி மறைகிறது. தமிழர் மரபு என்பது உறவுகள் சூழ வாழ்ந்தது. நாட்டுப்புற வழக்காற்றில் சேனை என்பது உறவுகளைக் குறிக்கப் பயனபடுத்தப்படும் ஒரு சொல்லாகும். இப்படி உறவுகளோடு வாழ்ந்த பழய வாழ்க்கையை நினைத்துப் பார்க்கவும் இவ்விரு அடிகள் வாசகரின் கற்பனையை விரிக்கும் புள்ளிகளாகவும் உள்ளன. நம் நாட்டின் தற்கால அரசனையும் நாம் இங்கே பொருத்திப் பர்த்துக்கொள்ளலாம்
     ”பல்லக்கு கொண்டு வரவா?”
     படைத்தலைவன்
     பணிந்து கேட்டான்
அடுத்ததாக இப்படி நகரும் கவிதை மன்னனைப் பணியும் படைத்தலைவனை ஒரு குறியீடாகக் கொண்டுள்ளது. மோடியிடம் பணியும் எடப்பாடியும் நம் கண்முன் வந்து போவதைத் தவிர்க்க இயலவில்லை. படை பலத்தோடு பணபலமும் பெருகிவிட்டால் உறவுகளும் இப்படிப் பணிவது இயல்பாகிவிட்டது. பணிவு என்பது அதிகாரத்துக்கு அடிபணிவது மட்டுமில்லை. இவையெல்லாம் கவிஞரின் கனவில் நடப்பவை.
     மறுதலித்து நடந்தேன்
     கவச உடைகள்
     கனத்துத் தொங்கின
என்னும் அடுத்த பத்தியும் கனவு உலகில்தான். மன்னனுக்கு கவச உடைகள் கனக்கின்றன கூலிகளுக்கோ சாதாரண உடைகளே கனக்கின்றன. அதனால்தான் வெற்றுடம்புடன் உழைக்கிறார்களோ?  பல்லக்கை மறுதலித்து நடப்பது ஏனோ? என்னும் வினாவும் வாசகனுக்கு வருவதில் வியப்பில்லை.
     ஆயிரக்கணக்கான சிப்பாய்கள் பின் தொடர மன்னர் போருக்கு ஆயத்தமாகிறார் அதற்குள் இல்லத்தரசியின் குரல் கனவைக் கலைக்கிறது. கவிஞர்கள் எப்போதும் கற்பனை உலகில் வாழ்பவர்கள். எதார்த்த உலகை விட்டு அவ்வப்போது வெளியேறி விடுவார்கள் அவர்களை இப்படி ஏதேனும் ஒரு அன்றாட நிகழ்வுதான் மீண்டும் எதார்த்தத்தை நோக்கி இழுத்து வருகிறது.
     பால் வாங்கி வரலையா
     என்ற விளித்தலில்
     விழித்தேன்
என்றுதான் கவிஞர் குறிப்பிடுகிறார். அது யாருடைய விளித்தல் என்பது படிக்கும் குழந்தைக்குக்கூட தெரிந்திருக்கும். அந்த மந்திரக் குரல்தான் கவிஞரை கனவுலகிலிருந்து அசல் உலகத்திற்கு அழைத்து வருகிறது.
அடுத்த வரியிலேயே ”ஆரம்பமாகிவிட்டது சமர்”. கனவில் சென்றதோ வேறு ஒரு போருக்கு அது உயர்ந்த நோக்கமுடைய போராகவும் இருக்கலாம். எதிரிகளை வீழ்த்தும் போர், நாட்டைப் பிடிக்கும் போர், அணு ஆயுதங்களை அழிக்கும் போர், சொந்த நாட்டு மக்களையே சுட்டுக்கொல்லும் போர், போர் அறங்களை மீறி ஆயுதங்களை ஏவும் போர் என ஏதோ ஒரு போருக்கு செல்ல கனவுகண்ட மன்னன் ஒருவனை வாழ்க்கை பால் வாங்கி வருவதற்கு விரட்டுகிறது.
     சுற்றம் சூழ வாழ்ந்த மனிதன் தனித்து விடப்படுகிறான். என் சேனைகள் எங்கே என கேவி அழும் மன்னனாக இனி அவன் தனியாகத்தான் வாளைச் சுழற்ற வேண்டும்.
                ஆரம்பமாகிவிட்டது
                சமர்
                இனி
                நான் தனியாகத்தான்
                வாளைச் சுழற்ற வேண்டும்
என்னும் முடிவு நம் நெஞ்சைப் பிசைகிறது. இது யார் செய்த குற்றம். இன்றைய பொருளாதார சூழல் விலை ஏற்றம் என ஒவ்வொரு நாளும் போராட்டமாகவே சென்றால் என்னதான் செய்ய  இயலும் தனி மனிதன்.
ஒரு பெரும் கூட்டத்திலிருந்து தனித்து விடப்பட்ட செம்மரி ஆட்டைப்போல் மனிதர்கள் அன்றாட வாழ்க்கைப் போராட்டத்தில் தனித்து வாள் சுழற்றும் சோகம் மாறுமா? என்ற ஏக்கத்தை நம்மிடம் ஏற்படுத்திவிடுகிறது இக்கவிதை.
புனலில் மிதக்கும் முகம்
சூர்யநிலா
எழுத்துக்களம் வெளியீடு 2017
22/07/18
மணிமுத்தாறு இலக்கியவட்டம் நிகழ்த்திய கவிஞர் சூர்யநிலாவின் புனலில் மிதக்கும் முகம் நூல் திறனாய்வுக் கூட்டத்தில் வாசித்த விமர்சனக் கட்டுரை.

Friday, July 3, 2015

மக்கள் 'மறந்த' மண்ணின் பெருமிதம் பேசும் 'கலை விளையும் நிலம்'

புத்தகக் குறிப்புகள்: 

பால்நிலவன்
கலை, இலக்கியம், கல்வி, மருத்துவம் குறித்து பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதிவந்த இரத்தின புகழேந்தியின் எழுத்துகள் 'கலை விளையும் நிலம்' எனும் நூல்வடிவில் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.

ஸ்மார்ட் நகரங்கள் பெருகும் காலம் இது. உழவுத் தொழிலில் தங்களை உருக்கிக்கொண்டு உலகுக்கே உணவளிக்கும் விவசாயிகள் வாழும் கிராமங்களைப் பற்றிய மரியாதை அருகி வரும் காலமும் இதுவே.

ஆனால், பழந்தமிழர் வாழ்வியல் அறத்தின் கூறுகள் ஓரளவுக்கேனும் எஞ்சி நிற்கும் இடங்களாக நமது கிராமங்கள் அமைந்துள்ளன. சாதி எனும் அரக்கனைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் கிராமங்கள் செம்மாந்த வாழ்வியல் பண்புகளின் சிம்மாசனமாக திகழ்வதை அறியலாம்.

இக்காலத்திலும் கிராமங்களில் கூத்தும் பாட்டும் தேர்த்திருவிழாக்களும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனால் பழங்காலத்தில் கொண்டாடப்பட்ட அளவுக்கு நடக்கிறதா என்றால் நிச்சயம் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.

'கலை விளையும் நிலம்' என்ற இந்நூலில் 'திருமுதுகுன்றம்' என நற்றமிழ் ஆர்வலர்களால் வாஞ்சையோடு அழைக்கப்படும் 'விருதாசலம்' வட்டாரத்தின், செய்திகள் சேகரிக்கப்பட்டுள்ளன. திருமுதுகுன்றம் எப்படி விருதாசலமானது என்பது பற்றி ஊர்ப்பெயர் அரசியல் என்று ஒரு தனிக்கட்டுரையும் இதில் உண்டு. மேலும் அவ்வூரில் உள்ள பழமலைநாதர் கோயில் வரலாறு உள்ளிட்ட பல்வேறு சிறப்பான செய்திகளைத் தேடித் தேடி தந்திருக்கிறார் நூலாசிரியர்.

நாட்டுப்புறவியலில் தமிழகம் முழுவதும் பாடல்களைத் திரட்டி அரிய சாதனைகள் நிகழ்த்திய தமிழறிஞர் டாக்டர் ஆறு.இராமனாதன் அவர்களின் விரிவான நேர்காணலும் இந்நூலில் முக்கிய அம்சமாக அமைந்திருக்கிறது.

நாட்டுப்புற ஆய்வில் முனைவர் பட்டம் பெற்ற இந்நூலாசிரியர் இரத்தின புகழேந்தியின் நாட்டுப்புறம் சார்ந்த ஆர்வம் என்பது பல்கலைக்கழக ஆய்வையும் கடந்தது; அவரது பள்ளிக்கூட ஆசிரியர் பணிக்கும் அப்பாற்பட்டது.

இந்நூலில் இடம்பெற்றுள்ள கலை, இலக்கியம், அறிவியல், அரசியல், கல்வி ஆகிய தலைப்புகளின்கீழே பல்வேறு கட்டுரைகளின் வாயிலாக அந்த ஆர்வத்தைக் காணமுடிகிறது.

தெருக்கூத்து, கரகாட்டம், தவில் சுட்டி, பீங்கான் தொழில், மரச்சிற்பங்கள், சுடுமண் சிற்பங்கள், குறிஞ்சிப்பாடி நெசவு போன்ற கலைத்தொழில்களைப் பற்றி இந்நூல் எங்கும் கவினுற விதந்தோதப்பட்டுள்ளன.

'உலகப் புகழ்பெற்ற திருவதிகைச் சிற்பங்கள்' என்ற தலைப்பின் கீழ் அமைந்துள்ள கட்டுரையிலிருந்து சில பகுதிகள் வாசகர் பார்வைக்கு:

கோயில்களுக்கான தேர்கள், திருவிழாக்காலங்களில் தெரு உலாச் செல்லும் கடவுளர்களுக்கான ஊர்திகள், சூரியப் பலகைகள் என அனைத்து வகையான மரச்சிற்பங்கள் செய்வதில் கைதேர்ந்தவர்களாக விளங்குகின்றனர் திருவதிகைச் சிற்பிகள். மரபுவழியாகவே இக்கலைத்திறமை இவர்களின் ரத்தத்தோடு கலந்திருக்கிறது. இக்கலைப்பணி ஆறாவது தலைமுறையாகத் தொடர்கிறது.

1947ஆம் ஆண்டு திருவதிகை குப்பாசாரியும் அவர் உடன்பிறந்தவர்களான சுப்பிரமணிய ஆச்சாரி, பொன்னுசாமி ஆச்சாரி ஆகியோரும் சேர்ந்துதான் திருப்பதி கோயில் தேரைச் செய்திருக்கின்றனர். இந்த உடன்பிறப்புகளின் வாரிசுகளான இராசாமணி ஆச்சாரி, புருசோத்தமாச்சாரி, இராசாராம் ஆச்சாரி, இராதாகிருட்டிண ஆச்சாரி, தேவா ஆகியோர் இக்கலைப் பணியை இன்றும் தொடர்கின்றனர்.

கோயில்களுக்கான தேர் செய்வதற்கென்று இலக்கணம் உண்டு. அவ்விலக்கணப்படி தேரை வடிவமைத்து உருவாக்குகின்றனர். கோயிலின் மூல இட அளவைப் பொறுத்தே தேரின் அளவை அமைக்க வேண்டும் என்ற விதிமுறைக்கேற்ப தேருக்கான நீள அகலத்தை முடிவு செய்கின்றனர்.

தேரில் பத்து வகையுண்டு. ஸ்ரீகரம், த்வஜம்காந்தம், ரேஷிகேசம், நிகேதுனம், ஸ்ரிபாத்ரம், விசாலஞ்சம், பத்மக்கம், பத்ரம், சிவம் உள்ளிட்ட இவற்றில் கோயிலுக்கேற்ற தேரை வடிவமைப்பது என்பது முக்கியமானது. இவற்றை உணர்ந்துதான் தேரை வடிவமைப்போம் என்று இராசாமணி ஆச்சாரி கூறினார். இவர் திருவண்ணாமலை, செவ்வாய்ப்பேட்டை, புதுச்சேரி, திருக்கோயிலூர் ஆகிய ஊர்களில் கோயில்களுக்குத் தேர் செய்துள்ளார்.

தேரின் ஒவ்வொரு பாகங்களையும் ஒவ்வொரு மரத்தால் செய்கின்றனர். தேர்ச்சக்கரம் இலுப்பை மரத்தாலும், அடிப்பாகம் காட்டுவாகை மரத்தாலும், மேல் பாகம் தேக்கு, வேங்கை மரங்களாலும் செய்யப்படுகின்றன. சிங்கப்பூர், மலேசியா, பிரான்ஸ், அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளுக்கு இவர்கள் செய்த தேர்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. காசி, ஐதராபாத், விஜயவாடா போன்ற நகரங்களுக்குச் சென்று, தேரும் மரச்சிற்பங்களும் செய்துள்ளனர். சமணக் கோயில்களிலும் சிற்பங்கள் செய்த அனுபவம் இவர்களுக்கு உண்டு.

தென்திருப்பதி என்றழைக்கப்படும் திருநீருமலையில் 45 பாகை சாய்வான பாதையில் புதிதாகச் செய்த தேரை ஏற்றுவதற்குப் பொறியாளர்கள் திணறியபோது இராசாரம் ஆச்சாரி அம்மலையில் தேரைப் பத்திரமாக ஏற்றி நிலைநிறுத்தியது தன் வாழ்நாளில் மறக்கமுடியாத அனுபவம் என்று நெகிழ்ச்சியோடு கூறினார்.

மேலும் பல்வேறு பயனுள்ள தகவல்களைத் தரும்விதமாகத் தொடரும் இக்கட்டுரையின் இறுதியில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல் நமக்கு வியப்பை அளிக்கிறது. இந்திய அளவில், அல்ல தமிழக அளவிலேயே அரசு இதுவரையில் இவர்களை உற்சாகப்படுத்தும் விதமாகவோ இத்தகைய நற்கலையம்சங்களை ஊக்கும்விக்கும் விதமாகவோ விருதுகள் எதையும் வழங்கி கவுரவிக்கவில்லையாம்.

கிராமங்களின் சிறந்த பண்புகளையும் கபளீகரம் செய்வதற்கென்றே வந்ததுபோல் வான்வழி ஊடகத் தாக்குதலையும் மீறி தனித்துவம் மிக்க நல்ல அம்சங்களை நிலைநிறுத்தப் போராடிவருகிறார்கள் இவர்கள். அவர்களுக்கு சிறிதளவேனும் ஆதரவையும் உற்சாகத்தையும் தர வேண்டும் என்ற உந்துதலை இரத்தினப் புகழேந்தி நமக்கு 'கலை விளையும் நிலம்' நூலின்வழியே தந்துவிட்டார்.

நூலின் பெயர்: கலை விளையும் நிலம்

ஆசிரியர்: இரத்தின புகழேந்தி

பக்.168, விலை: ரூ.150

வெளியீடு: நிவேதிதா பதிப்பகம்,

22/105, பாஸ்கர் காலனி, 3வது தெரு,

விருகம்பாக்கம், சென்னை - 600 092.

தொலைபேசி 89393 87276,
நன்றி : tamil.thehindu.com
சரவணன், பால்நிலவன்