தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking
Showing posts with label பணியிடைப்பயிற்சி. Show all posts
Showing posts with label பணியிடைப்பயிற்சி. Show all posts

Saturday, January 2, 2016

பயிற்சியா……? அலறும் ஆசிரியர்கள்.


                    
          
            பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு அவ்வப்போது பணியிடைப்பயிற்சிகள் வழங்கப்படுவது உண்டு. அது தேவைதான். புதிய கற்பித்தல் உத்திகளை நடைமுறைப்படுத்தவும், வகுப்பறைச் சூழலில் ஆசிரியர் மாணவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை விவாதித்து அவற்றுக்கான தீர்வுகளைக் கண்டறிவதாகவும்  ஆசிரியர்களுக்குள் கலந்துரையாடி துறை சார்ந்த வளர்ச்சிக்கு வித்திடுவதாகவும் அமையும் எனில் கட்டாயம் பணி இடைப்பயிற்சிகள் தேவைதான். ஆனால் சமீப காலமாகக் கல்விதுறையில் நடைபெறும் பயிற்சிகள் மேலே கூறியவாறு நடைபெற வில்லை. அதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.
 இந்த பயிற்சிகளை ஆசிரியர்களுக்கு வழங்குவதற்கு கல்வித்துறையில் மூன்று அமைப்புகள் உள்ளன. அனைவருக்கும் கல்வித்திட்டம்(SSA) ,அனைவருக்கும் இடைநிலைக்கல்வித்திட்டம் (RMSA), மாவட்ட ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்(DIET) ஆகிய திட்டங்களின் மூலம் ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
ஓர் ஆண்டுக்கு ஓர் ஆசிரியர் (SSA) மூலம் 20 நாட்கள் பயிற்சி பெறவேண்டும். குறுவட்ட வள மையம் எனப்படும் (CRC)இல் 10 நாட்களும் வட்டார வள மையம் எனப்படும்(BRC)இல் 10 நாட்களும் இந்த பயிற்சிகள் வழங்கப்படும். (RMSA) மூலம் பாடம் தொடர்பான பயிற்சி 10 நாட்களும் மதிப்பீட்டு முறை சார்ந்த பயிற்சி 3 நாட்களும் நிர்வாகம் சார்ந்த பயிற்சி 3 நாட்களும் TAN EXEL எனப்படும் பயிற்சி 5 நாட்களும் (அரசு பள்ளி மாணவர்களை மாநில மாவட்ட அளவில் முதலிடம் பெற வைப்பதற்கான சிறப்புப் பயிற்சி) ஆகிய பயிற்சிகள் நடைபெறும். (DIET) மூலம் சுகாதாரப் பயிற்சி, வாழ்வியல்திறன் பயிற்சி பாடங்களில் உள்ள கடினப்பகுதிகளைக் கண்டறிந்து அவற்றை எளிமைப்படுத்தும் பயிற்சி என பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
இவை தவிர ஆண்டுக்கு ஒரு முறை வாக்காளர் கணக்கெடுப்புக்கான பயிற்சி மற்றும் பணிகள், 5 ஆண்டுக்கு ஒருமுறை தேர்தல் பணி மற்றும் பயிற்சி (உள்ளாட்சி,சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல்கள் தனித்தனியே), 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகைக் கணக்கிடுவதற்கான பயிற்சி மற்றும் பணி பொருளாதாரக் கணக்கெடுப்புப் பயிற்சி. என பல்வேறு பயிற்சிகள் ஒவ்வோர் ஆண்டும் நடைபெறுகின்றன. பயிற்சிகள் ஒரு அளவோடு இருந்தால் அது ஊக்கமளிப்பதாக அமையும். அளவுக்கு அதிகமாக பயிற்சிகள் வழங்கப்படுவதால் அவை ஆசிரியர்களுக்கு அலுப்பூட்டுவதாக உள்ளன என்றால் கல்வித்துறை சாராத பயிற்சிகள் கூடுதல் சுமையாக அமைகின்றன.
            பயிற்சி வழங்குவதற்கான கருத்தாளர்கள் பற்றாக்குறை கல்வித்துறையில் உள்ளது. சிறந்த ஆசிரியர்கள் பலர் கருத்தாளர்களாக முன் வருவதில்லை. (SSA) திட்டத்தில் பயிற்சிகள் வழங்குவதற்கு (BRT) எனப்படும் வட்டார வளமைய ஆசிரியர்கள் உள்ளனர். அவர்களுக்கு பள்ளியில் பாடம் நடத்திய அனுபவம் இல்லை நேரடி நியமனம் மூலம் நியமிக்கப்பட்டவர்கள் என்பதால் பள்ளியில் ஆசிரியர்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்சினைகள் பற்றி அவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இது இப்படி என்றால் (RMSA) திட்டத்தில் அதற்கும் வழி இல்லை. அலுவலர்களுக்கு நெருக்கமான ஆசிரியர்களே இங்கு கருத்தாளர்கள். கருத்தாளர்களுக்கு பயிற்சி வழங்குவதற்கு சில நேரங்களில் கல்லூரி பேராசிரியர்களைப் பயன் படுத்துகின்றனர். பள்ளிக் கல்விக்கும் பேராசிரியர்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லாமையால் பயிற்சியின் நோக்கம் பல வேளைகளில் நிறைவேறாமலே போய்விடுகிறது. மொத்தத்தில் பயிற்சிகள் என்பது அதற்காக ஒதுக்கப்பட்ட தொகையை செலவு செய்வதற்கான ஒரு சடங்காக ஆகிவிடுகிறது. ஓர் ஆசிரியர் ஓர் ஆண்டில் 20 முதல் 40 நாட்கள் வரை பயிற்சிக்காக செல்லவேண்டிய நிலை உள்ளது. ஒரு பள்ளியில் 10 ஆசிரியர்கள் இருந்தால் 5 ஆசிரியர்கள் பயிற்சிக்கு சென்று விடுவார்கள் மீதமுள்ள 5 ஆசிரிய்ர்கள்தான் மாணவர்களுக்குப் பாடம் கற்பிக்க வேண்டும். இது அவர்களுக்கு கூடுதல் சுமையாகவே உள்ளது. அந்த கற்பித்தல் நாட்களை பயிற்சிக்கு சென்ற ஆசிரியர் எவ்வாறு ஈடு செய்வார் என்பதை யாரும் எண்ணிப்பார்ப்பதில்லை. இவை ஒரு புறமிருக்க இன்னும் பல்வேறு பணிகளையும் ஆசிரியர்கள் செய்யவேண்டியுள்ளது
            மாணவர்களுக்கு சீருடைகள், பாடநூல்கள், காலணிகள், பை போன்ற நலத்திட்டப் பொருள்களை அலுவலகத்திலிருந்து பெற்று வந்து வழங்குவது, அதற்கான பதிவேடுகளைப் பராமரிப்பது,மூவகைச்சான்றுகள் (சாதி,வருமானம்,இருப்பிடம்) பெறுவதற்கான விண்ணப்பங்களை நிரப்பி உரிய அலுவலகத்தில் சேர்த்து சான்றுகளைப் பெற்று வழங்குவது, மிதிவண்டி, மடிக்கணினி ஆகியவற்றுக்கான தேவைப்பட்டியல் தயாரிப்பது, அவற்றைப் பெற்று மாணவர்களுக்கு வழங்குவது, வழங்கிய விவரங்களை இணியத்தில் பதிவிடுவது. பெண்கல்வி ஊக்கத்தொகை, சாதி வாரியான உதவித்தொகை, power finance, தேசிய திறனறித்தேர்வு, ஊரகப்பகுதி மாணவர்களுக்கான திறனறித்தேர்வு போன்ற உதவித்தொகைகள் பெறுவதற்காக மாணவர்களுக்கு வங்கிக்கணக்கு தொடங்கிட வங்கிக்கு சென்று விண்ணப்பப் படிவங்கள் பெற்றுவந்து அவற்றுக்குத்தேவையான ஆவணங்களை மாணவர்களிடம் பெற்று விண்ணப்பத்தை நிரப்பி வங்கியில் கொடுத்து கணக்கு தொடங்கி அந்த எண்களையும் மற்ற விவரங்களையும் இணையத்தில் பதிவேற்றுவதோடு குறுந்தகடாகவும் அச்சிட்ட நகலாகவும் உரிய அலுவலகங்களுக்கு வழங்குவது, பஸ் பாஸ் பெறுவதற்கு போக்குவரத்துக் கழக அலுவலகம் சென்று அதற்கான நடைமுறைகளை மேற்கொள்வது என அந்த பட்டியல் நீளும். இவை தவிர தற்செயல் விடுப்பு, ஈட்டிய விடுப்பு, வரையறுக்கப்பட்ட விடுப்பு, மருத்துவ விடுப்பு, அரைச்சம்பள விடுப்பு, ஊதியமில்லா விடுப்பு, மகப்பேறு விடுப்பு என பல்வேறு விடுப்புகளை எடுக்க நேரும். இவையேல்லாம் போக மீதமுள்ள நாட்களில்தான் கற்பிக்க முடியும்.
            இவையெல்லாம் முழுமையான கற்பித்தலுக்கு இடையூறாகவே உள்ளன. இவற்றை சரி செய்யவேண்டுமெனில்
ஆசிரியர்களை கற்பித்தல் பணி சாரத பணிகளில் ஈடுபடுத்தக்கூடாது.
ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பயிற்சி நாட்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும்.
நலத்திட்டங்களை வழங்கிட தனி அலுவலர்களை நியமிக்க வேண்டும்
துறை சார்ந்த வல்லுநர்களை பயிற்சிக்கான கருத்தாளர்களாக நியமிக்க வேண்டும்.

ஒவ்வொரு பயிற்சியும் உயர் அலுவலர்களின் மேற்பார்வையில் நடைபெற வேண்டும்.