தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking
Showing posts with label ஆவணப்படம். Show all posts
Showing posts with label ஆவணப்படம். Show all posts

Friday, September 19, 2014

மாதவிடாய் இது ஆண்களுக்கான பெண்களின் படம்

எனக்கு ஒரு மின்னஞ்சலில் வந்த இந்த விமர்சனத்தை இங்கே பதிவிடுகிறேன்.

எந்நாடு போனாலும்
தென்னாடுடைய சிவனுக்கு
மாதவிலக்கான பெண்கள் மட்டும்
ஆவதே இல்லை
      - கவிஞர் கனிமொழி

மாதவிலக்கு எனப்படும் மாதவிடாய் குறித்து ஓர் ஆவணப்படம் வெளிவந்திருக்கிறது. கீதா இளங்கோவன் அந்த ஆவணப்படத்தை இயக்கி வெளியிட்டுள்ளார். புனிதங்களும், தீண்டாமைகளும் உடைத்து நொறுக்கப்பட்டுக் கொண்டிருக் கின்ற சூழலில், பெண்ணின் மீது இந்தச் சமூகம் ஏற்றி வைத்தி ருக்கின்ற தீண்டாமையான மாதவிடாய் பற்றிய கருத்தாக்கங் களையும், மருத்துவர்களின் அறிவியல் சார்ந்த ஆலோசனை களையும் இப்படத்தில் பதிவு செய்திருக்கிறார். இதில் இடம் பெற்றுள்ள, “இது ஆண்களுக்கான பெண்களின் படம்என்னும் தொடர், நோக்கத்தைத் தெளிவுபடுத்துகிறது.
பெண்ணின் உடலில் இயற்கையாக ஏற்படும் ஒரு மாதாந்திர நிகழ்வைக் குறித்து, 21ஆம் நூற்றாண்டிலும் மக்களிடையே நிலவும் மூடநம்பிக்கைகளையும், அறியாமையையும் வேதனையுடன் கீதா பதிவு செய்திருக்கிறார். சமூகத்திற்குச் சொல்ல வேண்டிய, பெரும்பான்மையும் சொல்லத் தயங்குகின்ற செய்தியைச் சிறப்பாகச் சொன்ன மாதவிடாய் படத்தின் இயக்குனர் மற்றும் அவருடைய குழுவினருக்கு நம்முடைய பாராட்டுகளும், வாழ்த்துகளும்.
ஓர் உயர் நிலைப்பள்ளி மாணவியிடம், ‘மாதவிடாய்னா என்னம்மா?’ என்று கேட்கப்படுகிறது. அந்த மாணவியிடம், வெட்கமும், தயக்கமும்தான் விடையாக வெளிப்படுகின்றன. பள்ளி இறுதி ஆண்டுகளில் நிற்கின்ற அந்தப் பெண் குழந்தை, படித்து முடித்ததும், மேற்படிப்புக்குப் போகலாம் அல்லது மணவாழ்க்கைக்குள்ளும் தள்ளப்படலாம். ஒரு வேளை அந்தப் பெண் திருமணம் செய்து கொடுக்கப்பட்டால், தன் உடலைப் பற்றிய அடிப்படை மாற்றங்கள் கூடத் தெரியாத நிலையில், எப்படி அந்த வாழ்க்கையை எதிர்கொள்வாள்? இத்தனை ஆண்டுகள் அவளுக்குக் கற்பிக்கப்பட்ட கல்வி வேறு என்னதான் அவளுக்குச் சொல்லிக் கொடுத்தது?
மற்றொரு மாணவியிடம், “வயசுக்கு வந்தப்போ உங்கம்மா, என்ன சொல்லிக் கொடுத்தாங்க?” என்று கேட்கப்படுகிறது. வெளியில போக்கூடாது, பூஜ ரூம் பக்கமா வரக்கூடாது, குங்குமம் வச்சிக்கக்கூடாது, வெறும் பொட்டுதான் வச்சிக்கணும், ஆடாம, ஓடாம, பொம்பளப் புள்ளயா அடக்க ஒடுக்கமா இருக்கணும். அந்த மாதிரி நாள்ல பள்ளிக்கூடம் வரும்போது, கையில இரும்புத் துண்டு, இல்லன்னா துடைப் பத்தை மடிச்சிக் கையில கொடுத்தனுப்புவாங்கஎன்று பதில் வருகிறது. ஆக, பள்ளிக் கூடத்திலும், மாதவிடாய் பற்றி அறிவியல் சார்ந்த விழிப்புணர்வு கிடைப்பதில்லை, வீடுகளிலும் மூடநம்பிக்கை சார்ந்த கருத்துகளே திணிக்கப்படு கின்றன.
அறிவியல் பயிற்சியாளர், ‘மாதவிடாய் பத்தி விளக்கமா சொல்லும்போது, பிள்ளைங்க வெக்கப்படுதுக. 10, 11, 12ஆம் வகுப்புலயே, அறிவியல் பாடத்துல, ஆண், பெண் இனப்பெருக்க உறுப்புகள், மண்டலங்கள் இதெல்லாம் படத்தோட வருது. ஆனா டீச்சருங்களே நடத்த அசிங்கப்பட்டுட்டு, நீங்களே வாசிச்சி தெரிஞ்சிக்குங்கன்னு சொல்லிட்டுப் போயிடுறாங்க அப்படீன்னு அந்தப் பிள்ளைக சொல்லுதுகஎன்கிறார். பிறகு எப்படி இது குறித்து விழிப்புணர்வு ஏற்படும்?
தொடக்கப்பள்ளி நிலையிலிருந்தே பாலியல் கல்வி பாடத்திட்டத்தில் இணைக்கப்பட வேண்டும். கலாச்சாரக் காவலர்கள் கூச்சலிடுவதுபோல், பாலியல் உறவுகளை வகைப்படுத்துகின்ற கல்வியன்று, பாலியல் கல்வி. மனித உடல் அமைப்பு, உடல் உறுப்புகள், உடலியல் மாற்றங்கள் குறித்து, ஆரோக்கியமான முறையில் கற்றுத் தரப்படும் அறிவியல் கல்வியே பாலியல் கல்வி. ஆண், பெண் இருபாலருக்கும் மிகவும் இன்றியமையாத கல்வி & பாலியல் கல்வி.
இந்தப் படத்தில், பெண்கள், இளம்பெண்கள், ஆண்கள் சொல்லி யிருக்கின்ற மாதவிடாய் குறித்த கற்பிதங்கள், உடலியல் கல்வி & பாலியல் கல்வியின் தேவைக்குச் சான்றுகளாக இருக்கின்றன.
கூவிலபுரம் என்னும் ஊரில், மாதவிலக்கின் போது பெண்கள் நடத்தப்படும் விதம், தீண்டாமைக் கொடுமையின் உச்சம். ஊருக்கு ஒதுக்குப்புறத்தில், மாதவிலக்கானவர்கள், பிள்ளை பெற்றவர்கள் தங்குவதற்காகத் தனி வீடே வைத்திருக்கிறார்கள். கைக்குழந்தை வைத்திருப்பவர்கள்கூட, மாதவிலக்கின் போது, பச்சைக் குழந்தையைப் பிரிந்து, தனியாக அந்த வீட்டில்தான் இருக்க வேண்டுமாம். வீட்டிற் குள்ளேயே இருந்து விட்டால், யாருக்கும் தெரியாமல் போய்விடும். இப்படித் தனி வீட்டில் வைப்பதால், ஊருக்கே தெரிந்துவிடுகிறது.  பசித்தாலும், தாகம் எடுத்தாலும், யாராவது அந்தப் பக்கமாக வந்தால்தான் சோறோ, தண்ணீரோ கிடைக்கும். பிச்சை எடுப்பதுபோல, கையேந்திச் சாப்பிட வேண்டியிருக்கிறதுஎன்று அவமானத்தில் குமுறுகிறார் ஓர் இளம்பெண். அந்த நேரத்தில் பயன்படுத்தப்படும் பாத்திரங்களை மூட்டையில் கட்டி, ஒரு மரத்தில் தொங்கவிட்டிருக்கிறார்கள். அதைப் பார்க்கும் நமக்கு, பெண்களின் தன்மானத்தைத் தூக்கில் தொங்கவிட்டது போலத் தெரிகிறது.
மருத்துவ ரீதியான விளக்கங்களும், எளிமையான சொற்களில், துறை சார்ந்த மருத்துவர்களைக் கொண்டு பதிவு செய்யப்பட்டுள்ள விதமும் அருமை. பள்ளி ஆசிரியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோரின் கருத்துகளும் விழிப்புணர்வூட்டுபவையாக உள்ளன.
மாதவிடாயின் போது வெளிப்படும் ரத்தத்தில் உள்ள ஸ்டெம்செல்கள் 78 வகையான இரத்த சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்தக் கூடியவை என்று கண்டறியப் பட்டுள்ளது. மாதவிடாய் ரத்தத்தைச் சேமிக்கும் வங்கிகளும் இருக்கின்றன என்ற செய்தியையும் தருகிறது இப்படம்.
மாதவிடாய் ரத்தத்தை உறிஞ்சுவதற்குத் துணிகளைப் பயன்படுத்திய நிலை மாறி, இன்று பஞ்சுப் பட்டைகள் கடை களில் கிடைக்கின்றன. ஆனாலும் சரியான கழிப்பறை வசதிகள் இல்லாத காரணத்தால், இச்சமயங்களில் பெண்களின் நிலை மிகவும் சிக்கலானதாக இருக்கிறது.
சமூகத்தில் ஆண்கள் & பெண்கள், படித்தவர்கள் & படிக்காதவர்கள் என அனைத்துத் தரப்பினரிடமும், மாதவிடாய் தொடர்பான மூடநம்பிக்கைகளும், அறியாமையும் மண்டிக் கிடப்பதை இப்படம் ஆழமாகப் பதிவு செய்திருக்கிறது. தலைவலி, காய்ச்சல் வந்தால் சொல்வது போன்று, மாதவிடாயின் போது ஏற்படும் வலிகளைப் பெண்கள் வெளிப்படையாகச் சொல்வ தில்லை. மருந்துக்கடைகளில் ஆணுறையை எந்தத் தாளிலும் மறைக்காமல் எடுத்துக்கொடுக்கும் கடைக்காரர், பெண்கள் மாத விடாய்ப் பஞ்சுப் பட்டைகளை வாங்கும்போது, செய்தித்தாளில் வைத்துச் சுருட்டி, கருப்புப் பாலித்தீன் பையில் போட்டு ரகசியமாகத்தான் கொடுக்கிறார். இரண்டையுமே மறைக்க வேண்டியதில்லை. உடம்பிலிருந்து வெளியேறுகின்ற ரத்தக் கழிவுகள் சம்பந்தப்பட்டவைதானே இவைகள்.

நம் சமூகத்தில், பலவற்றை மதங்கள் மறைத்து வைத்துப் புனிதம் என்கின்றன அல்லது ஒதுக்கி வைத்துத் தீட்டு என்கின்றன. இரண்டுமே இல்லை என்கிறது அறிவியல். மாதவிடாயின் மீது கட்டப்பட்டுள்ள கற்பிதங்களை உடைக்கின்ற சிற்றுளியாக இப்படம் இருக்கிறது.
                                          மாதவிடாய் ஆவணப்பட இயக்குநர் தோழர் கீதா


நன்றி

naalaividiyum@gmail.com
இரா.உமா

Saturday, May 16, 2009

ஆசிரியரைப் பேணிக்காக்கும் மாணவர்கள்ஆவணப்படமான உண்மை நிகழ்வு


ஏறிவந்த ஏணியை எட்டி உதைக்கின்ற மனிதர்கள் நிறைந்த இந்த உலகத்தில்தான் அதனை நன்றியோடு நினத்துப் போற்றுகிறவர்களும் இருக்கிறார்கள். நம் நாட்டின் எதிர்காலத்தை உறுவாக்குகின்ற வகுப்பரையில் சின்னஞ்சிறு சுட்டிகளாய்ப் பயின்ற அந்த பட்டாம்பூச்சி நாட்கள் ஒவ்வொரு மனித மனத்திலும் என்றும் நீங்காத நினைவுகளாய் பதிந்திருக்கும். மலறும் நினைவுகளாய் நாம் அவ்வப்போது நம்மோடு பயின்ற தோழர்களையும் நமக்குப் பாடம் கற்பித்த ஆசிரியர்களையும் நினைத்துப் பார்த்துக்கொள்வதுண்டு. வயது ஆக ஆக நம் பள்ளிப் பருவத்திற்கு நாம் திரும்பிவிட மாட்டோமா என்கிற ஏக்கம் அதிகரிப்பது தவிர்க்க இயலாதது. நம்மோடு படித்த நம் தோழர்களை மீண்டும் அதே பள்ளியில் சந்தித்தால் மனதுக்கு எவ்வளவு இதமாக இருக்கும். பள்ளிக்கூடம் படம் வெளிவந்த பிறகு இத்தகைய சந்திப்புகள் அதிகரித்து வருவதைக் காணமுடிகிறது. அப்படிச் சந்திப்பவர்கள் அந்த பள்ளிக்கோ பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கோ அங்கு பணியாற்றிய ஆசிரியர்களுக்கோ ஆக்கப்பூர்வமாக ஏதேனும் செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் ஒன்று சேர்ந்து தங்களால் இயன்ற நற்பணியைச் செய்வதுண்டு. நெய்வேலி குளூனி பள்ளியில் பயின்ற இரண்டாவது அணி மாணவர்கள் குளூனி சங்கமம் என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து ஒன்று சேர்ந்தனர். எழுபதுகளில் இரண்டாம் வகுப்பு படித்த மாணவர்கள் இப்போது மருத்துவர்களாகவும் பொறியாளர்களாகவும் ஆசிரியர்களாகவும் தொழில்நுட்ப வல்லுநர்களாகவும் பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் எல்லோரும் குடும்பத்தோடு அந்த விழாவில் பங்கேற்க உற்சாகம் கரை புரண்டு ஓடியது என்றாலும் அவர்களுக்கு மிகவும் பிடித்த பாட்டும் இசையும் கற்றுத்தந்த ஸ்டெல்லா மிஸ் விழாவுக்கு வராதது ஒரு குறையாக இருந்தது. பள்ளியில் விசாரித்தபோது அவர்கள் பெங்களூரிலிருப்பது தெரிய வந்தது. பெங்களூரிலிந்து விழாவுக்கு வந்திருந்த ஆனந்திடம் ஸ்டெல்லா மிஸ் முகவரியைக் கொடுத்து அவர்களை எப்படியாவது தேடிக் கண்டு பிடிக்கச் சொன்னார்கள். அவர் அங்கு சென்ற போது அந்த ஆசிரியை எழுபது வயதைக் கடந்து கவனித்துக்கொள்ள யாருமற்று ஒரு சின்னஞ்சிறு அறையில் தானே சமைத்துக்கொண்டு பேச்சுத்துணைக்குக் கூட மனிதர்களில்லாமல் இரண்டு கிளிகளோடு பேசிக்கொண்டு இன்னலுறுவதைக் காண நேர்ந்தது. உடனே ஸ்டெல்லா மிஸ்ஸின் நிலையை நண்பர்களுக்குக் கூறி நெய்வேலியில் அவருக்கு ஒரு வீடு பார்த்து அங்கு தங்கவைத்து நெய்வேலி நண்பர்கள் அவரை கவனித்துக்கொள்வது என்று ஏற்பாடு செய்து இன்று ஸ்டெல்லா மிஸ்க்கு உதவியாக ஒரு மாணவப் பட்டாளமே அணிதிரண்டு உதவி வருகின்றனர்.




இயக்குநர் செல்வன்

ஆசிரியை ஸ்டெல்லா

இந்த உணர்ச்சி பூர்வமான உண்மைச்சம்பவத்தை மிக அழகான ஆவணப் படமாக்கியிருக்கிறார் நெய்வேலி செல்வன். தங்கள் ஆசிரியரின் பண்பு நலன்களை மாணவர்கள் கூறும் போது நமக்கு மெய்சிலிர்க்கிறது. இப்படிப்பட்ட ஆசிரியரிடம் படிக்க நமக்கு வாய்ப்பு கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் மனதுக்குள் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை. முப்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு தம்மிடம் பயின்ற மாணவர்களின் நிழற்படத்தைப் பார்த்து அவர்களின் பெயர்களை மிகச்சரியாக தலைப்பெழுத்தோடு கிடு கிடுவென ஸ்டெல்லா மிஸ் கூறுவதைக் கேட்கும்போது அந்த மாணவர்களிடம் அவர் கொண்டிருந்த அனபையும் ஈடுபாட்டையும் அறிந்துகொள்ள முடிகிறது. தன்னிடம் படித்த மாணவர் மருத்துவராகி தனக்கே மருத்துவம் செய்கின்ற வாய்ப்பு எத்தனை ஆசிரியர்களுக்குக் கிட்டும், அப்படிக் கிட்டினால் அது அந்த ஆசிரியருக்கு எவ்வளவு மகிழ்ச்சியைத் தரும். அந்த மகிழ்ச்சியைத் தன்னுடைய மாணவர் மருத்துவர் செந்திலின் வாயிலாக ஸ்டெல்லா மிஸ் பெறுவதை நாம் படத்தில் காணலாம். இந்த நிகழ்ச்சிகளையெல்லாம் கதை கூறுவது போல சலிப்பை ஏற்படுத்தா வண்ணம் தன் இனிமையான குரலால் விளக்குகிறார் கமலா சுதன். செந்தில், அமலா,சத்தியதேவன், அனிதாதேவராசன், பாரதி, பாபு, செல்வன் ஆகிய மாணவர்கள் இன்று நெய்வேலியில் அந்த ஆசிரியையை கவனித்துக்கொள்கின்றனர். ஏறத்தாழ ஓராண்டுகாலம் இப்பணியோடு படத்திற்கான ஒளிப்பதிவுப் பணியையும் செய்துள்ளனர் செல்வன்,பிரசன்னா, அரவிந்த், பாரதிக்குமார் ஆகியோர். படம் முடியும்போது ஒலிக்கும் பாரதிக்குமாரின் கவிதை காட்சிகளுக்கேற்ப அமைந்து அழகூட்டுகிறது. தங்களுக்குக் கற்பித்த ஆசிரியைக்கு காலத்தால் அழியாத ஒரு கலைப்படைப்பை உருவாக்கி பெருமைப்படுத்திய இந்த மாணவர்கள் அவரை வாழ்வின் கடைசி காலத்தில் பேணிக்காப்பாற்றி வருவதன்மூலம் இப்படைப்பை மேலும் அழகுபடுத்துகிறார்கள். ஆசிரியர்களை கிள்ளுக்கீரையாக எண்ணி எள்ளி நகையாடும் இன்றைய மாணவ சமுதாயத்தினருக்கு இந்தப் படத்தை அவசியம் திரையிட்டுக் காண்பிக்க வேண்டும். என்ன உங்களுக்கும் ஸ்டெல்லா மிஸ்ஸைப் பார்க்க வேண்டும் போல் இருக்கிறதா? இயக்குநர் செல்வனை 9442470721 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்.
காண்க: தமிழ் ஓசை களஞ்சியம்.