தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking
Showing posts with label கட்டுரை. Show all posts
Showing posts with label கட்டுரை. Show all posts

Thursday, January 30, 2020

தமிழிசைப் பாடநூல்கள்



         
          தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித்துறையில் முதன்முதலாக இசையியலுக்கென்று தனியே பாடநூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அந்த பாடநூல்களில் என்ன வகையான தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அவை மாணவர்களுக்கு எத்தகைய அறிவைப் பெற்றிட உதவும். இசைப் பாடங்களின் நோக்கங்கள் என்ன? இவற்றை முழுமையாக நிறைவேற்றிட அரசு செய்ய வேண்டிய தொடர் பணிகள் யாவை? என்பன குறித்து விரிவாக ஆய்வு செய்கிறது இக்கட்டுரை.

தமிழிசைப் பாடநூல்கள்:
         
          தமிழகத்தில் 3 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை இசையியல் ஒரு பாடமாக சேர்க்கப்பட்டு 2018 ஆம் ஆண்டில் முதன்முதலாக அதற்கென ஆசிரியர் கையேடும் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்களின் வயதுக்கு ஏற்ப இசை குறித்து அறிமுகப் படுத்தி பல வகையான இசைப் பாடல்களும் அதற்கு உரிய பண், இராகம், தாளம், நிரல் ஆகியவற்றோடு கொடுக்கப்பட்டுள்ளன.

இசையியல் பாடநூல்களின் உள்ளடக்கம்:
         
          தொடக்க நிலை மாணவர்களுக்கு ( 3 முதல் 5 ஆம் வகுப்புவரை) இசை குறித்த எளிய அறிமுகத்தோடு இசைப்பாடல்கள் அதிகமாகக் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை வகுப்புவாரியாகக் காண்போம்.

மூன்றாம் வகுப்பு : இசை அறிமுகம் என்னும் முதல் பாடத்தில் மனிதர்கள் இயறகையினின்று இசையையும் இசைக்கருவிகளையும் எவ்வாறு உருவாக்கினார்கள், சங்க காலத்தில் ஐவகை நிலங்களில் எத்தகைய இசைக்கருவிகள் புழக்கத்திலிருந்தன என்று விளக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து திருக்குறள் இசைப்பாடல், மகாத்மா பாடல், பாரதியார் பாடல், கிருத்துவர் பாடல், இசுலாமியர் பாடல்,விளக்குப்பாடல் கண்ணன் பாடல், தேவாரம், நாட்டுப்புறப் பாடல் ஆகிய பாடல்கள் இசைக்குறிப்புகளோடு கொடுக்கப்பட்டுள்ளன.

நான்காம் வகுப்பு: பதிமூன்று தலைப்புகளில் பல்வேறு பாடல்கள் மட்டும் இசைக்குறிப்புகளோடு அமைந்துள்ளன.

ஐந்தாம் வகுப்பு: நான்காம் வகுப்பில் உள்ளதுபோல் பல்வேறு பாடல்கள் (திருக்குறள், கம்பராமாயணம், சீராப்புராணம்) இடம்பெற்றுள்ளன.


 6 முதல் 10 ஆம் வகுப்புவரை இசைகுறித்து விரிவான அறிமுகங்களும் கொடுக்கப்பட்டுள்ளன இசை, சரளி வரிசைகள், நாதம்,சுருதி, தாளம், ஏறு நிரல், இறங்கு நிரல், இசைப்பழமொழிகள்,நாட்டுப்புற இசை, தமிழிசைக்கு தொண்டு செய்த முன்னோடிகள் பற்றியெல்லாம் விரிவான தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

ஆறாம் வகுப்பு:  தமிழ் இசை குறித்து விரிவான ஒரு பாடம் இடம்பெற்றுள்ளது. அதில் தமிழ் இசை பற்றிய அறிமுகத்தோடு இசையின் பிறப்பு, தமிழ் இசையின் தொன்மை, சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள இசை பற்றிய தகவல்கள்,பண், இராகம், தாளம், இசைக்கலைஞர்கள், இசைப்பாடல்கள் பற்றி விரிவாக விளக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பயிற்சி பெறும் வகையில் சுரத்தொகுப்புகளின்  சரளி வரிசைகள் அளிக்கப்பட்டுள்ளன. (ச ரி க ம ப த நி ச)
பாரதியார், புரந்தரதாசர் ஆகியோரின் இசைத்தொண்டுகள் பற்றி தனித்தனி பாடங்களாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவை அனைத்தும் முதல் பருவத்திற்கு உரியவை.
இரண்டாம் பருவம்: முதல் பாடத்தில் நாதம், சுருதி, தாளம் பற்றி விரிவான செய்திகள் இடம்பெற்றுள்ளன.நாதத்தின் இரு வகைகளான ஆகதநாதம்,அனாகதநாதம் பற்றியும் பஞ்சம சுருதி, மத்யம சுருதி ஆகிய இரு சுருதி வகைகள் பற்றியும் ஏழு சுரங்கள் மற்றும் ஏழுதாளங்கள் பற்றியும் விளக்கப்பட்டுள்ளது. மேலும் பல இசைப்பாடல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
மூன்றாம் பருவம்: தைப்பொங்கல் குறித்த முதல் பாடத்தில் பொங்கல் பாடலும் இடம்பெற்றுள்ளது. ஏறு நிரல், இறங்கு நிரல் என்னும் பாடத்தில் ஏழு சுரங்கள் ஏறு வரிசையிலும் இறங்கு வரிசையிலும் எவாறு அமையும் என்பதையும் தானங்கள் பற்றி விபுலானந்தரின் யாழ்நூல் குறிப்புகளிலிருந்து மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. மேலும் இசைப்பழமொழிகள் தொகுத்தளிக்கப்பட்டுள்ளமை மாணவர்களின் ஆர்வத்தைத் தூண்டும்படி உள்ளது.

ஏழாம் வகுப்பு: ஆறாம் வகுப்பின் தொடர்ச்சியாக சரளி வரிசைகள் பற்றிய கூடுதல் தகவல்கள் தொகுத்தளிக்கப் பட்டுள்ளன. மேலும் தாளங்கள் பற்றி இரண்டு பாடங்கள் அமைந்துள்ளன.

          அருணாச்சலக் கவிராயர், கோபாலகிருஷ்ண பாரதியார் பற்றி தனித்தனி பாடங்கள் இடம்பெற்றுள்ளன. திருப்பாவை திருவெம்பாவை போன்ற இசைப்பாடல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. கிளிக்கன்னி ஒன்றும் இடம்பெற்றுள்ளது.

எட்டாம் வகுப்பு: சுரங்களை இரண்டிரண்டாக இணைத்து இரட்டைச் சுரங்களுக்கான பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. தாளம் என்னும் பாடத்தில் துருவதாளம், மத்யதாளம், ரூபகதாளம், சம்பதாளம், த்ரிபுட தாளம், அடதாளம், ஏகதாளம் ஆகியவற்றுக்கான பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இசையின் உறுப்புகளை மாணவர்கள் அறிந்துகொள்ளும்பொருட்டு கீதம் பற்றி ஒரு பாடத்தில் விளப்பட்டுள்ளது. முத்துத் தாண்டவர் பற்றிய ஒரு பாடமும் உள்ளது.

ஒன்பதாம் வகுப்பு: பண்கள் பற்றி மாணவர்கள் விரிவாக அறிந்துகொள்ளும்பொருட்டு திறப்பண்கள், தமிழ் இசைப் பண் என்னும் இரு பாடங்கள் இடம்பெற்றுள்ளன. பண்களின் பழமை அதன் வகுப்புகள் குறித்த அறிமுகமாக அமைந்துள்ளது. தியாகராசர் வரலாறு, முத்துசாமி தீட்ச்சிதர், சியாமளா சாஸ்திரிகள் குறித்து தனித்தனி பாடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இசை மையங்கள், இசைக்கருவிகள், நாகசுரம், திரைப்படப்பாடல்களில் தமிழ்ப் பண்கள் என்னும் பாடங்களும் இடம்பெற்றுள்ளன.

பத்தாம் வகுப்பு: அடிப்படை இசை இலக்கணக்குறிப்புகள் என்னும் பாடத்தில் தொடக்க நிலைப் பயிற்சி இசை, இரட்டைச் சுர அடுக்கணி, தாண்டு வரிசை பற்றி விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது. இராக குணங்கள் என்னும் பாடத்தில் ஒவ்வொரு ராகத்திற்கும் ஒரு குணம் உண்டு என்று எடுத்துக் காட்டுகளோடு குறிப்பிடப்பட்டுள்ளது. ( மேகம் திரள – மேக ரஞ்சனி, மழை பொழிய – அமிர்த வர்ஷினி) அது போல நோய் தீர்க்கும் பண்கள் பற்றிய குறிப்புகள் சுவைபட உள்ளன. ( அசாவேரி- தலை வலியைப் போக்கும், சர்க்கரை நோய் குணமாக- நளின காந்தி, சூரிய காந்தம்)

          அறிவியல், கணிதம், கணிப்பொறி, வேளான்மை, மருத்துவம் ஆகிய பல்வேறு துறைகளில் இசை எவ்வாறெல்லாம் பயன்படுகிறது என்னும் பாடமும் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் அமைந்துள்ளது. குரலிசை, புல்லாங்குழல், வீணை, வயலின் போன்ற துறைகளில் புகழ்பெற்ற இசைக்கலைஞர்களின் பட்டியல் தமிழ் இசைக்கு பெருமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

இசைப் பாட நூல்களின் நோக்கங்கள்: 
         
o   மாணவர்களிடம் உள்ள இசைத்திறன்களைக் கண்டறிந்து மேம்படுத்துதல்

o   இசையில் புதிய சிந்தனைகளை வெளிப்படுத்த வாய்ப்பளித்தல்

o   மாணவ்ர்களின் இசைப் படைப்பாற்றல் திறனை வெளிப்படுத்த வாய்ப்பளித்தல்

o   இசை கற்கும் ஆர்வத்தை ஏற்படுத்துதல்

o   குரல் வளத்திற்கும் விரலுக்கும் பயிற்சியளித்தல்

         



இசையில் பன்முகத்தன்மை:
         
          இசை குறித்த வரலாற்றிலும் பாடல்களிலும் கவனமாக பன்முகத்தன்மை கடைபிடிக்கப்பட்டுள்ளது, இசைப்பாடல்களில் மதச்சார்பு இன்றி மும்மதப் பாடல்களும் இடம்பெற்றுள்ளன.

இசைக் கருவிகள் அறிமுகம்:
         
          இசைக்கருவிகள் பற்றிய அறிவினை மாணவர்கள் பெறும் வண்ணம் ஓரொலி வாத்தியம், பல்லொலி வாத்தியம், இசைக்கருவிகள் செய்யப்படும் மரங்கள், தம்புரா, நாகசுரம் ஆகியன பற்றிய வரலாற்றுத்தகவல்கள் விரிவாக இடம்பெற்றுள்ளன.

இசை மையங்கள்:
         
          தமிழகத்தில் பன்னெடுங்காலமாக செயல்பட்டுவரும் இசை மையங்கள் பற்றியும் சிறப்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

இணையச் செயல்பாடுகள்:
         
          ஒவ்வொரு பாடநூலின் இறுதியிலும் இணையச் செயல்பாடுகள் கொடுக்கப்பட்டுள்ளமை மாணவர்களின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் உள்ளன. பாடங்களுக்குள் கொடுக்கப்பட்டுள்ள விரைவு துலங்கல் குறியீடுகள் இன்னும் முழுமையாக செயல்படும்படி ஏற்பாடு செய்ய வேண்டும்.

அரசு செய்யவேண்டிய தொடர் பணிகள்:
         
          பாட நூல்களின் மென் நகல்கள் மட்டுமே கிடைக்கின்றன. முழுமையாக அச்சிட்டு வழங்கினால் மட்டுமே இசைப் பாடங்களை பள்ளிகளில் முழுமையாக நடைமுறைப் படுத்த இயலும்.

          எல்லா பள்ளிகளுக்கும் இசை ஆசிரியர்கள் நியமிக்கப்படும்வரை பாடநூலில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு பாடலும் இசையோடு பாடி இணையத்தில் பதிவேற்றப்பட்டு மாணவர்கள் கேட்டுப் பயிற்சி பெற ஏற்பாடு செய்ய வேண்டும்.
அதற்கு முன்பு ஆசிரியர்களுக்கு இசைக்கென தனிப் பயிற்சியைப் பணியிடைப் பயிற்சியோடு வழங்கிட வேண்டும்.

முடிவுரை:
         
          இசையியலை தனி ஒரு பாடமாக தொடக்க நிலையிலிருந்தே அறிமுகப் படுத்தியிருப்பது தமிழகத்தில்தான் முதல் முயற்சியாக இருக்கும் என்பதை இக்கட்டுரை குறிப்பிடுகிறது. மேலும் மாணவர்களிடையே இதுபோன்ற கலை ஆர்வத்தை சிறு வயதிலேயே ஏற்படுத்துவதன் மூலம் அவர்களிடம் நற்பண்புகள் வளரும். தமிழ் இசையின் பயன்களை சிறுவயதிலேயே உணர்ந்துகொள்வதற்கு இப்பாடநூல்கள் துணையாக அமையும். தமிழ் இசைத்துறையின் முன்னோடிகளின் வாழ்க்கை வரலாறுகளை அறிந்துகொள்வதன் மூலம் மாணவர்கள் தங்களால் இயன்ற பங்களிப்பை இசைத்துறைக்கு வழங்குவார்கள். மாணவர்களுக்கு பதின் வயதில் ஏற்படும் உடல் உள்ள மாற்றங்களை மடை மாற்றிட இசைப்பாடங்கள் மிகுந்த உதவியாக அமையும் என்பது உறுதி.

துணை நூற்பட்டியல்:
          இசை இயல் ஆசிரியர் கையேடுகள் – 7 தொகுதிகள்
          (3 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை )
          தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்
          சென்னை
          2018
 மதுரையில் 2019 திசம்பர் திங்கள் நடைபெற்ற உலகத்தமிழிசை மாநாட்டில் வாசிக்கப் பெற்ற கட்டுரை.

Saturday, December 20, 2014

குழந்தைகளுக்கான வலைத்தளங்கள்

தமிழ்நாடு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (SCERT) சென்னையில் (18,19.12.2014) நடத்திய மாநில கருத்தரங்கில் அளித்த கட்டுரை இங்கே பதிவுசெய்யப்பட்டுள்ளது.

முன்னுரை
            தகவல் தொழில்நுட்பம் அபரிமிதமான வளர்ச்சி கண்டுள்ள இந்த நூற்றாண்டில் தகவல்கள் உள்ளங்கையில் கிடைக்கின்றன. இப்படிப்பட்ட சூழலில் பள்ளிக் குழந்தைகளை மின்னணு சாதனங்கள் அளவிற்கு பாட நூல்கள் கவர்வதில்லை. இதனால் பாட நூல்களை மட்டும் நம்பியுள்ள ஆசிரியர்கள் கற்பித்தலில் மிகப்பெரிய சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. புதிய தொழில்நுட்பங்களையும் அவற்றின் வாயிலாகக் கிடைக்கும் வளங்களையும் தெரிந்துகொள்வது இருபத்தொன்றாம் நூற்றாண்டு  ஆசிரியரின் கட்டாயத்தேவையாகிறது. அந்த வகையில் இந்த நூற்றாண்டில் தகவல் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள புரட்சியாகக் கருதப்படுகின்ற  இணையதளங்கள் வாயிலாக மாணவர்களும் ஆசிரியர்களும் கற்றல் கற்பித்தல் வளங்களை ஒரு சின்னஞ்சிறு கைபேசியின் வாயிலாக அமர்ந்த இடத்திலிருந்தே பெற்றுக்கொள்ள முடிகிறது. கலை, இலக்கியம், அறிவியல், விளையாட்டு, தொழில்நுட்பம் எனப் பல துறை சார்ந்த தகவல்களை இணையதளங்கள் வாயிலாகப் பெறமுடிகிறது. மாணவர்களுக்கு பயன்படக்கூடிய இணையதளங்கள் மற்றும் வலைப்பூக்களை சக ஆசிரியர்களோடு பகிர்ந்துகொளவதாக இந்த ஆய்வுக்கட்டுரை அமைந்துள்ளது.
  குழந்தைகளுக்கான வலைத்தளங்கள்
          குழந்தைகளுக்கான வலைத்தளங்களை கலை, இலக்கியம், அறிவியல், விளையாட்டு, தொழில்நுட்பம் என வகைப்படுத்தலாம்.

கலைகளுக்கான வலைத்தளங்கள்:
            குழந்தைகளைக் கவரும் கலைகளில் முதன்மையானது ஓவியக்கலை. ஓவியக்கலையை ஒரு ஓவியர் கற்றுத்தருவதைப்போல் ஒவ்வொரு கோடாக யாருடைய துணையுமின்றி கணினியின் முன் அமர்ந்து கற்றுக்கொள்ள வகை செய்கிறது http://www.unclefred.com என்ற இணையதளம். இந்த தளத்தில் பன்னிரண்டு வகை கார்ட்டூன் ஓவியங்களை வரையக்கற்றுக்கொள்ளலாம்.மேலும் ஓவியங்கள் வரையும் காணொளிக் காட்சிகளாகவும்  யூ ட்யூபில் கிடைக்கின்றன.
            http://www.drawingnow.com  இந்த தளம் ஒவ்வொரு படியாக ஓவியம் வரைய கற்றுத்தருகிறது.ஒரு எளிமையான வீடு படம் வரைய 12 படிநிலைகள் உள்ளன. நம் கண்முன்னே வரைந்து காட்டுகிறது.அதனைப்பார்த்து தனியாக தாளிலோ அல்லது கணினியிலோ வரைந்துகொள்ளலாம்.
            http://www.my-how-to-draw.com  இந்த தளத்தில் படிப்படியாக முன்னரே வரைந்து வைத்துள்ளனர் ஒவ்வொரு படியாகப் பார்த்து வரைய வசதி செய்யப்பட்டுள்ளது.
            http://www.cartooncritters.com  இந்த தளத்தில் ஓவியங்களை பல வகையில் அச்சு நகல் எடுத்து மாணவர்களுக்கு வழங்கி வண்ணம் தீட்டிட பயிற்சி அளிக்கலாம். புள்ளிகளை இணைத்து ஓவியம் வரைவதற்கும் பயிற்சிகள் இங்கே நிறைய உள்ளன.
            http://dev.neechalkaran.com கோல சுரபி என்னும் இத்தளம் தமிழ் ஆங்கிலம்,இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் ஆக்கப்பட்டுள்ளது. புள்ளிகள் எண்ணிக்கை அடிப்படையிலும் சதுரம், சாய் சதுரம் என்று வடிவங்களின் அடிப்படையிலும், வளைவுகள் கோடுகள் என கோடுகள் அடிப்படையிலும் கோலங்களைக் கற்றுத்தருகிறது இந்த தளம்.


கைவினைக் கலைகளுக்கான வலைத்தளங்கள்:
            http://www.kinderart.com இந்த தளத்தில் இரண்டரை வயது முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகளுக்கான கைவினைக் கலைகள் பல உள்ளன. ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பல வகையான பொருள்களை மறுசுழற்சி முறையில் கலைப்பொருளாக செய்வதற்கான பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. தாள் முதல் காலணி வரை எல்லாம் இங்கே கலைப்பொருள்களாக மாறுகின்றன. நம் குழந்தைகள் அவசியம் பார்க்கவேண்டிய தளம் இது.
             http://www.enchantedlearning.com  இந்த தளம் பல நூறு வகை கலைப்பொருள்கள் செய்யக் கற்றுக்கொடுக்கிறது. உறிஞ்சுகுழல், பலூன், களிமண், தாள் என எளிதில் கிடைக்கும் பொருள்களில் கலைப்பொருள்கள் செய்வதற்கான முறைகள் விளக்கப்பட்டுள்ளன.

இலக்கிய வலைத்தளங்கள்
            சிறுவர் பூங்கா:  http://siruvarpoonga.blogspot.in/  இது பரஞ்சோதி என்பவரால் பதியப்படும் வலைப்பூ. குழந்தைகளுக்கான கதைகள் நிறைந்து காணப்படுகின்றன.
            தினம் ஒரு சென்: http://zendaily.blogspot.in/ கங்கா அவர்களின் இந்த வலைப்பூவில் சென்கதைகள் மொழிபெயர்க்கப்பட்டு பதிவுசெய்யப்படுகிறது.
            குட்டிக்கதைகள் : http://tamil-kutti-kathaikal.blogspot.in
உதயகுமார் வெளியிடும் இந்த வலைப்பூ பல்வேறு மொழிகளில் வெளிவந்த நீதிக்கதைகளை மொழிபெயர்த்து பதிவுசெய்யப்படுகிறது.          http://tamilcomicsulagam.blogspot.in 200 க்கும் மேற்பட்ட (காமிக்ஸ்) படக்கதைகள் இந்தத் தளத்தில் உள்ளன.
          http://www.thamizham.net  பல அரிய நூல்கள், இதழ்களை ஒருங்கே தொகுத்துவைத்துள்ளார் பொள்ளாச்சி நசன். சிற்றிதழ் செய்தி என்ற இதழை நடத்தியவர். இதுவரை 30600 கோப்புகளைப் பதிவேற்றியுள்ளார். இது தமிழில் தனிநபர் செய்துள்ள மிகப்பெரிய ஆவணம் எனலாம். மாணவர்கள் அறிந்துகொள்ளவேண்டிய பல தகவல்கள் இந்த தளத்தில் உள்ளன.
          http://www.tamilsirukathaigal.comஈசாப் நீதிக்கதைகள்,பஞ்ச தந்திரக் கதைகள்,தெனாலிராமன் கதைகள், நீதிக்கதைகள் என பல வகைக் கதைகள் இந்த தளத்தில் உள்ளன.
            http://tamilarivukadhaikal.blogspot.inஅறிவுக்கதைகள், புதிய நீதிக்கதைகள், நகைச்சுவைக்கதைகள், சிந்தனைக்கதைகள் என பல்வகைகதைகள் 300க்கும் மேல் உள்ளன.

அறிவியல் வலைத்தளங்கள்
            http://www.ariviyal.in  இதன் ஆசிரியர் ராமதுரை தினமணி நாளிதழின் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். 2009-ல் சிறந்த அறிவியல் எழுத்தாளருக்கான தேசிய விருதைப் பெற்றவர்.இவர் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பயன்படும் வகையில் தமிழில் சிறந்த அறிவியல் கட்டுரைகளை எழுதியுள்ளார்.
            http://arivialnambi.blogspot.in அணு, அண்டம், கடவுள் துகள் என பல் சுவையான அறிவியல் செய்திகள் இத்தளத்தில் உள்ளன.
            http://www.tnkanitham.in சிவகங்கை மாவட்டத்தில் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றும் செந்தில் செல்வன் அவர்களின் கணினி வழி கணிதம் என்னும் இத்தளத்தில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அனைத்து பாடத்தலைப்புகளும் பவர் பாயிண்ட்டுகளாகவும் காணொளிக்காட்சிகளாகவும் காணக்கிடைக்கின்றன.
            http://sweatmaths.edublogs.org கணக்கும் இனிக்கும் என்னும் இந்த வலைத்தளம் இக்கட்டுரை ஆசிரியரால் உருவாக்கப்பட்டதாகும். வளரறி மதிப்பீடுகளுக்கான செய்ல்பாடுகள், கணித ஆய்வகம், கணிதவியலாளர்களின் வரலாறு,புதிர்கள், செயல்திட்டங்கள் ஆகியன இந்த தளத்தில் உள்ளன.



விளையாட்டுக்கான வலைத்தளங்கள்
            ஆடுபுலி ஆட்டம், http://dev.neechalkaran.com/p/aadu-puli.html  இந்த தளத்தில் உள்ளது. தமிழில் சொல் புதிர்கள் http://dev.neechalkaran.com/p/tamil-puzzle.html  இந்த இணைப்பில் உள்ளன.
            http://www.kidsgames.org  கல்வி, வேடிக்கை,நாடுகளும் கொடிகளும் போன்ற பலவகை விளையாட்டுகள் இந்த தளத்தில் உள்ளன.
            http://www.kidspsych.org  1 முதல் 9 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு பல் வகை விளையாட்டுகள் இங்கே கொட்டிக்கிடக்கின்றன.

தொழில் நுட்ப இணையதளங்கள்
            http://www.tamilinfotech.com/ கணினி, மென்பொருள்கள், சமூக ஊடகங்கள் போன்றவை பற்றி அறிந்துகொள்ள புதிய செய்திகள் பல உள்ளன.
            http://www.bloggernanban.com  தொழில் நுட்பம் சார்ந்து ஆயிரக்கணக்கான தகவல்கள் உள்ளன.
            http://arjunmathu.blogspot.in  மாணவர்களுக்கு உதவும் பயனுள்ள மென்பொருள்கள், பென் டிரைவ் சில பயனுள்ள தகவல்கள், பாய்ச்சல் கோட்டுப்படங்கள் ,ஹார்டு வேர்டு பிரச்சனைகளும் தீர்வுகளும்  போன்ற தொழில் நுட்பச்செய்திகள் நூற்றுக்கணக்கில் உள்ளன.

            http://www.mytamilpeople.in/   தகவல் தொழில் நுட்பம் தமிழர்களுக்காக தமிழில் என்ற முழக்கத்தோடு பல தகவல்கள் கணினியில் அழிந்த கோப்புகளை மீட்பது, மிகச்சிறந்த மென்பொருள்கள் , கணினி அகராதி போன்ற பயனுள்ள தகவல்கள் உண்டு.





முடிவுரை
            பாட நூல்களுக்கு வெளியே தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கும் படைப்பாற்றலுக்கும் வழிவகுக்கும் தளங்களை இக்கட்டுரை அறிமுகம் செய்திருக்கிறது.
            இருபத்து ஒன்றாம் நூற்றாண்டின் வகுப்பறை என்பது பாடநூல்களைத் தாண்டியும் விரிந்த தளத்தில் செயல்படவேண்டிய கட்டாயத்தில் உள்ளது என்பதை இந்த ஆய்வுக்கட்டுரை வலியுறுத்துகிறது.  அதற்கான தொடக்கமாக இந்த ஆய்வுக்கட்டுரை அமைந்துள்ளது.
            நூற்றுக்கணக்கான இணைய தளங்களை ஆய்வு செய்து அவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முப்பது இணையதளங்கள் மட்டுமே இங்கு அறிமுகப்படுத்தப்பட்டுளன.
            விரிவஞ்சி சில இணைய தளங்களைக் குறிப்பிட இயலவில்லை. இதில் குறிப்பிட்டுள்ள இணையதளங்களைப் பார்வையிடும் ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோருக்கு  பயனுள்ள இணையதளங்களை  தேடுவதற்குத் தூண்டுகோலாக இக்கட்டுரை அமையும்.
            இக்கட்டுரைக்காக இணையதளங்களை தேடியபோது இக்கட்டுரை ஆசிரியர் பெற்ற பட்டறிவின் விளைவாக கணக்கும் இனிக்கும் என்றொரு கல்விச் செயல்பாடுகளுக்கான வலைப்பூவை உருவாக்கியுள்ளார். இக்கருத்தரங்கின் நல் விளைவாக இதனைக் கருதலாம்.