தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking

Thursday, January 30, 2020

தமிழிசைப் பாடநூல்கள்



         
          தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித்துறையில் முதன்முதலாக இசையியலுக்கென்று தனியே பாடநூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அந்த பாடநூல்களில் என்ன வகையான தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அவை மாணவர்களுக்கு எத்தகைய அறிவைப் பெற்றிட உதவும். இசைப் பாடங்களின் நோக்கங்கள் என்ன? இவற்றை முழுமையாக நிறைவேற்றிட அரசு செய்ய வேண்டிய தொடர் பணிகள் யாவை? என்பன குறித்து விரிவாக ஆய்வு செய்கிறது இக்கட்டுரை.

தமிழிசைப் பாடநூல்கள்:
         
          தமிழகத்தில் 3 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை இசையியல் ஒரு பாடமாக சேர்க்கப்பட்டு 2018 ஆம் ஆண்டில் முதன்முதலாக அதற்கென ஆசிரியர் கையேடும் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்களின் வயதுக்கு ஏற்ப இசை குறித்து அறிமுகப் படுத்தி பல வகையான இசைப் பாடல்களும் அதற்கு உரிய பண், இராகம், தாளம், நிரல் ஆகியவற்றோடு கொடுக்கப்பட்டுள்ளன.

இசையியல் பாடநூல்களின் உள்ளடக்கம்:
         
          தொடக்க நிலை மாணவர்களுக்கு ( 3 முதல் 5 ஆம் வகுப்புவரை) இசை குறித்த எளிய அறிமுகத்தோடு இசைப்பாடல்கள் அதிகமாகக் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை வகுப்புவாரியாகக் காண்போம்.

மூன்றாம் வகுப்பு : இசை அறிமுகம் என்னும் முதல் பாடத்தில் மனிதர்கள் இயறகையினின்று இசையையும் இசைக்கருவிகளையும் எவ்வாறு உருவாக்கினார்கள், சங்க காலத்தில் ஐவகை நிலங்களில் எத்தகைய இசைக்கருவிகள் புழக்கத்திலிருந்தன என்று விளக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து திருக்குறள் இசைப்பாடல், மகாத்மா பாடல், பாரதியார் பாடல், கிருத்துவர் பாடல், இசுலாமியர் பாடல்,விளக்குப்பாடல் கண்ணன் பாடல், தேவாரம், நாட்டுப்புறப் பாடல் ஆகிய பாடல்கள் இசைக்குறிப்புகளோடு கொடுக்கப்பட்டுள்ளன.

நான்காம் வகுப்பு: பதிமூன்று தலைப்புகளில் பல்வேறு பாடல்கள் மட்டும் இசைக்குறிப்புகளோடு அமைந்துள்ளன.

ஐந்தாம் வகுப்பு: நான்காம் வகுப்பில் உள்ளதுபோல் பல்வேறு பாடல்கள் (திருக்குறள், கம்பராமாயணம், சீராப்புராணம்) இடம்பெற்றுள்ளன.


 6 முதல் 10 ஆம் வகுப்புவரை இசைகுறித்து விரிவான அறிமுகங்களும் கொடுக்கப்பட்டுள்ளன இசை, சரளி வரிசைகள், நாதம்,சுருதி, தாளம், ஏறு நிரல், இறங்கு நிரல், இசைப்பழமொழிகள்,நாட்டுப்புற இசை, தமிழிசைக்கு தொண்டு செய்த முன்னோடிகள் பற்றியெல்லாம் விரிவான தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

ஆறாம் வகுப்பு:  தமிழ் இசை குறித்து விரிவான ஒரு பாடம் இடம்பெற்றுள்ளது. அதில் தமிழ் இசை பற்றிய அறிமுகத்தோடு இசையின் பிறப்பு, தமிழ் இசையின் தொன்மை, சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள இசை பற்றிய தகவல்கள்,பண், இராகம், தாளம், இசைக்கலைஞர்கள், இசைப்பாடல்கள் பற்றி விரிவாக விளக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பயிற்சி பெறும் வகையில் சுரத்தொகுப்புகளின்  சரளி வரிசைகள் அளிக்கப்பட்டுள்ளன. (ச ரி க ம ப த நி ச)
பாரதியார், புரந்தரதாசர் ஆகியோரின் இசைத்தொண்டுகள் பற்றி தனித்தனி பாடங்களாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவை அனைத்தும் முதல் பருவத்திற்கு உரியவை.
இரண்டாம் பருவம்: முதல் பாடத்தில் நாதம், சுருதி, தாளம் பற்றி விரிவான செய்திகள் இடம்பெற்றுள்ளன.நாதத்தின் இரு வகைகளான ஆகதநாதம்,அனாகதநாதம் பற்றியும் பஞ்சம சுருதி, மத்யம சுருதி ஆகிய இரு சுருதி வகைகள் பற்றியும் ஏழு சுரங்கள் மற்றும் ஏழுதாளங்கள் பற்றியும் விளக்கப்பட்டுள்ளது. மேலும் பல இசைப்பாடல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
மூன்றாம் பருவம்: தைப்பொங்கல் குறித்த முதல் பாடத்தில் பொங்கல் பாடலும் இடம்பெற்றுள்ளது. ஏறு நிரல், இறங்கு நிரல் என்னும் பாடத்தில் ஏழு சுரங்கள் ஏறு வரிசையிலும் இறங்கு வரிசையிலும் எவாறு அமையும் என்பதையும் தானங்கள் பற்றி விபுலானந்தரின் யாழ்நூல் குறிப்புகளிலிருந்து மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. மேலும் இசைப்பழமொழிகள் தொகுத்தளிக்கப்பட்டுள்ளமை மாணவர்களின் ஆர்வத்தைத் தூண்டும்படி உள்ளது.

ஏழாம் வகுப்பு: ஆறாம் வகுப்பின் தொடர்ச்சியாக சரளி வரிசைகள் பற்றிய கூடுதல் தகவல்கள் தொகுத்தளிக்கப் பட்டுள்ளன. மேலும் தாளங்கள் பற்றி இரண்டு பாடங்கள் அமைந்துள்ளன.

          அருணாச்சலக் கவிராயர், கோபாலகிருஷ்ண பாரதியார் பற்றி தனித்தனி பாடங்கள் இடம்பெற்றுள்ளன. திருப்பாவை திருவெம்பாவை போன்ற இசைப்பாடல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. கிளிக்கன்னி ஒன்றும் இடம்பெற்றுள்ளது.

எட்டாம் வகுப்பு: சுரங்களை இரண்டிரண்டாக இணைத்து இரட்டைச் சுரங்களுக்கான பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. தாளம் என்னும் பாடத்தில் துருவதாளம், மத்யதாளம், ரூபகதாளம், சம்பதாளம், த்ரிபுட தாளம், அடதாளம், ஏகதாளம் ஆகியவற்றுக்கான பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இசையின் உறுப்புகளை மாணவர்கள் அறிந்துகொள்ளும்பொருட்டு கீதம் பற்றி ஒரு பாடத்தில் விளப்பட்டுள்ளது. முத்துத் தாண்டவர் பற்றிய ஒரு பாடமும் உள்ளது.

ஒன்பதாம் வகுப்பு: பண்கள் பற்றி மாணவர்கள் விரிவாக அறிந்துகொள்ளும்பொருட்டு திறப்பண்கள், தமிழ் இசைப் பண் என்னும் இரு பாடங்கள் இடம்பெற்றுள்ளன. பண்களின் பழமை அதன் வகுப்புகள் குறித்த அறிமுகமாக அமைந்துள்ளது. தியாகராசர் வரலாறு, முத்துசாமி தீட்ச்சிதர், சியாமளா சாஸ்திரிகள் குறித்து தனித்தனி பாடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இசை மையங்கள், இசைக்கருவிகள், நாகசுரம், திரைப்படப்பாடல்களில் தமிழ்ப் பண்கள் என்னும் பாடங்களும் இடம்பெற்றுள்ளன.

பத்தாம் வகுப்பு: அடிப்படை இசை இலக்கணக்குறிப்புகள் என்னும் பாடத்தில் தொடக்க நிலைப் பயிற்சி இசை, இரட்டைச் சுர அடுக்கணி, தாண்டு வரிசை பற்றி விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது. இராக குணங்கள் என்னும் பாடத்தில் ஒவ்வொரு ராகத்திற்கும் ஒரு குணம் உண்டு என்று எடுத்துக் காட்டுகளோடு குறிப்பிடப்பட்டுள்ளது. ( மேகம் திரள – மேக ரஞ்சனி, மழை பொழிய – அமிர்த வர்ஷினி) அது போல நோய் தீர்க்கும் பண்கள் பற்றிய குறிப்புகள் சுவைபட உள்ளன. ( அசாவேரி- தலை வலியைப் போக்கும், சர்க்கரை நோய் குணமாக- நளின காந்தி, சூரிய காந்தம்)

          அறிவியல், கணிதம், கணிப்பொறி, வேளான்மை, மருத்துவம் ஆகிய பல்வேறு துறைகளில் இசை எவ்வாறெல்லாம் பயன்படுகிறது என்னும் பாடமும் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் அமைந்துள்ளது. குரலிசை, புல்லாங்குழல், வீணை, வயலின் போன்ற துறைகளில் புகழ்பெற்ற இசைக்கலைஞர்களின் பட்டியல் தமிழ் இசைக்கு பெருமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

இசைப் பாட நூல்களின் நோக்கங்கள்: 
         
o   மாணவர்களிடம் உள்ள இசைத்திறன்களைக் கண்டறிந்து மேம்படுத்துதல்

o   இசையில் புதிய சிந்தனைகளை வெளிப்படுத்த வாய்ப்பளித்தல்

o   மாணவ்ர்களின் இசைப் படைப்பாற்றல் திறனை வெளிப்படுத்த வாய்ப்பளித்தல்

o   இசை கற்கும் ஆர்வத்தை ஏற்படுத்துதல்

o   குரல் வளத்திற்கும் விரலுக்கும் பயிற்சியளித்தல்

         



இசையில் பன்முகத்தன்மை:
         
          இசை குறித்த வரலாற்றிலும் பாடல்களிலும் கவனமாக பன்முகத்தன்மை கடைபிடிக்கப்பட்டுள்ளது, இசைப்பாடல்களில் மதச்சார்பு இன்றி மும்மதப் பாடல்களும் இடம்பெற்றுள்ளன.

இசைக் கருவிகள் அறிமுகம்:
         
          இசைக்கருவிகள் பற்றிய அறிவினை மாணவர்கள் பெறும் வண்ணம் ஓரொலி வாத்தியம், பல்லொலி வாத்தியம், இசைக்கருவிகள் செய்யப்படும் மரங்கள், தம்புரா, நாகசுரம் ஆகியன பற்றிய வரலாற்றுத்தகவல்கள் விரிவாக இடம்பெற்றுள்ளன.

இசை மையங்கள்:
         
          தமிழகத்தில் பன்னெடுங்காலமாக செயல்பட்டுவரும் இசை மையங்கள் பற்றியும் சிறப்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

இணையச் செயல்பாடுகள்:
         
          ஒவ்வொரு பாடநூலின் இறுதியிலும் இணையச் செயல்பாடுகள் கொடுக்கப்பட்டுள்ளமை மாணவர்களின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் உள்ளன. பாடங்களுக்குள் கொடுக்கப்பட்டுள்ள விரைவு துலங்கல் குறியீடுகள் இன்னும் முழுமையாக செயல்படும்படி ஏற்பாடு செய்ய வேண்டும்.

அரசு செய்யவேண்டிய தொடர் பணிகள்:
         
          பாட நூல்களின் மென் நகல்கள் மட்டுமே கிடைக்கின்றன. முழுமையாக அச்சிட்டு வழங்கினால் மட்டுமே இசைப் பாடங்களை பள்ளிகளில் முழுமையாக நடைமுறைப் படுத்த இயலும்.

          எல்லா பள்ளிகளுக்கும் இசை ஆசிரியர்கள் நியமிக்கப்படும்வரை பாடநூலில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு பாடலும் இசையோடு பாடி இணையத்தில் பதிவேற்றப்பட்டு மாணவர்கள் கேட்டுப் பயிற்சி பெற ஏற்பாடு செய்ய வேண்டும்.
அதற்கு முன்பு ஆசிரியர்களுக்கு இசைக்கென தனிப் பயிற்சியைப் பணியிடைப் பயிற்சியோடு வழங்கிட வேண்டும்.

முடிவுரை:
         
          இசையியலை தனி ஒரு பாடமாக தொடக்க நிலையிலிருந்தே அறிமுகப் படுத்தியிருப்பது தமிழகத்தில்தான் முதல் முயற்சியாக இருக்கும் என்பதை இக்கட்டுரை குறிப்பிடுகிறது. மேலும் மாணவர்களிடையே இதுபோன்ற கலை ஆர்வத்தை சிறு வயதிலேயே ஏற்படுத்துவதன் மூலம் அவர்களிடம் நற்பண்புகள் வளரும். தமிழ் இசையின் பயன்களை சிறுவயதிலேயே உணர்ந்துகொள்வதற்கு இப்பாடநூல்கள் துணையாக அமையும். தமிழ் இசைத்துறையின் முன்னோடிகளின் வாழ்க்கை வரலாறுகளை அறிந்துகொள்வதன் மூலம் மாணவர்கள் தங்களால் இயன்ற பங்களிப்பை இசைத்துறைக்கு வழங்குவார்கள். மாணவர்களுக்கு பதின் வயதில் ஏற்படும் உடல் உள்ள மாற்றங்களை மடை மாற்றிட இசைப்பாடங்கள் மிகுந்த உதவியாக அமையும் என்பது உறுதி.

துணை நூற்பட்டியல்:
          இசை இயல் ஆசிரியர் கையேடுகள் – 7 தொகுதிகள்
          (3 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை )
          தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்
          சென்னை
          2018
 மதுரையில் 2019 திசம்பர் திங்கள் நடைபெற்ற உலகத்தமிழிசை மாநாட்டில் வாசிக்கப் பெற்ற கட்டுரை.

Monday, December 16, 2019

நூறு ஆண்டுகளுக்குப்பிறகு நடைபெற்ற முதலாவது உலகத் தமிழ் இசை மாநாடு


















உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும் மதுரை உலகத் தமிழ் சங்கமும் இணைந்து முதலாவது உலகத் தமிழிசை மாநாட்டினை மதுரையில் 2019 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 14 15 சனி ஞாயிறு ஆகிய இரு நாட்களில் நடத்தின.
100 ஆண்டுகளுக்குப் பிறகு உலக அளவில் நடைபெறும் முதல் தமிழிசை மாநாடு என்பது இந்த மாநாட்டின் சிறப்பு. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் பேராசிரியர் கோ.விசயராகவன், உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தின் அயல்நாட்டு தமிழர் புலம் துறையின் பேராசிரியர் கு.சிதம்பரம், உலகத்தமிழ்ச்சாங்கத்தின் இயக்குநர் முனைவர் ப.அன்புச்செழியன் ஆகியோர் மாநாட்டுப்பணிகளை ஒருங்கிணைத்து சிறப்பாக நடத்தினார்கள்.
இந்த மாநாடு மூன்று இணை அமர்வுகளாக நடத்தப்பட்டது ஒரு அரங்கத்தில் பன்னாட்டு தமிழிசை கலைஞர்கள் இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்தினார்கள். மதுரை இசைக் கல்லூரி குழுவினரின் இசைக் கச்சேரியோடு தொடங்கியது இசை அரங்கம்.   குரு ஆத்மநாதன் அவர்களின் தேமதுரத் தமிழோசை என்னும் நிகழ்ச்சியில் சிலப்பதிகாரம் புறநானூறு வள்ளலார் பாடல்கள் என சங்க இலக்கியங்களை இசை வழியாக மக்களிடம் கொண்டு சேர்த்தார். உலகத் தமிழிசை ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி கழகம் அமெரிக்கா விலிருந்து வந்திருந்த பாபு விநாயகம் அவர்களின் இசை நிகழ்ச்சி, இலங்கை அவை காற்று குழுவினர் நிஷாந்த ராகினி திருக்குமரன் அவர்களின் தலைமையில் தமிழர் நாமும் நவரச வாழ்வும் எனும் தமிழ் இசை நடன நிகழ்ச்சி நடத்தினர்.  திரிகோணமலை வில்லூன்றி குறவஞ்சி என்னும் இசை நாடகத்தை மிகச் சிறப்பாக இலங்கை தியாகராஜர் கலைக்கோயில் குழுவினர் நிகழ்த்தினார். குறத்தியாக நடனமாடிய சிறுமி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். தஞ்சாவூர் நல்லசிவம் குழுவினரின் திருமுறை பண்ணிசை நிகழ்ச்சியும் திண்டிவனம் வேட்டவராயன் குழுவினரின் வில்லிசை நிகழ்ச்சியும் நடைபெற்றன. சென்னை சாகித்ய நாட்டியாலயா குழுவினர் பாரதியார் பாடல்களை தமிழிசையின் துணைகொண்டு  நடனமாகக் காட்சிப்படுத்தினார். மதுரை இசைக் கல்லூரி முதல்வர் டேவிட் அவர்களின் இசை நிகழ்ச்சி, அண்ணாமலைப் பல்கலைக்கழக இசைத்துறை பேராசிரியர் முனைவர் சித்ரா அவர்களின் சிலப்பதிகார நடனம், சேலம் பிரபந்த மாலா இசைக் குழுவினரின் திவ்ய பிரபந்த இன்னிசை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. கோவை சங்கரா நாட்டியப்பள்ளி அரோரா குழுவினர் நிகழ்த்திய வள்ளுவம் வாழ்க்கையானால் என்னும் இசை நிகழ்ச்சியும் திருவண்ணாமலை சிவ தென்றல் நாடனாலயா குழுவினரின் திருவாசக இசை நடனநிகழ்ச்சி நடைபெற்றது.
நிறைவாக மதுரை தங்கவேல் குழுவினரின் பறையிசை ஆட்டம், பெண்களின் தப்பாட்டம் என நிறைவு விழாவில் தமிழரின் தொல்லிசைகள் இசைக்கப்பட்டன. நாட்டுப்புற நடன கலைஞர்களின் பொய்க்கால் குதிரை ஆட்டம் கட்டைக்கால் ஆட்டம் போன்ற நிகழ்ச்சிகள் தமிழ் இசைக்கருவிகள் முழங்க நடந்தேறின.
இன்னொரு அரங்கத்தில் பன்னாட்டு தமிழிசை ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வுக் கட்டுரைகளை அளித்தார்கள். 25 அமர்வுகளில் ஆய்வுக்கட்டுரைகள் அளிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டன. உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து ஆய்வாளர்கள் 500க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பியிருந்தனர் அவற்றுள் மாநாட்டு அறிஞர் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட 250 கட்டுரைகள் தொகுக்கப்பட்டு1800 பக்கங்களில் நூல்களாக 3 தொகுதிகள் இந்த மாநாட்டில் வெளியிடப்பட்டன. மேலும் மாநாட்டு நிகழ்வுகள். தொகுக்கப்பட்டு சிறப்பு மலர் ஒன்றும் வெளியிடப்பட உள்ளது.  மூன்றாவது அரங்கில் தொல்லிசைக் கருவிகள் கண்காட்சி நடைபெற்றது. சென்னை கோடம்பாக்கத்தில் அமைந்துள்ள கோசை நகரான் இசைக்கருவி காட்சிக்கூடத்தினர் பழமையான பல இசைக்கருவிகளை காட்சிப்படுத்தி இருந்தனர். தண்ணுமை, சிறுபறை, முழவு, முரசு, துடி, தமருகம், உறுமி, துடும்பு, கொட்டு தவில்,  மொடா மத்தளம், சேமக்கலம், சங்கு, கொம்பு, நகரா, பாங்கா, போன்ற பல்வேறு வகையான பழங்கால இசைக்கருவிகளைக் காட்சிப்படுத்தி இருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அந்த அரங்கில் பார்வையாளர்கள் பழமையான இசைக் கருவிகளை வாசித்து மகிழ்ந்தனர்.
அமெரிக்கா, இங்கிலாந்து மலேசியா சிங்கப்பூர் ,சீனா, மொரிஷியஸ், ஹாங்காங் ஆகிய நாடுகளிலிருந்து தமிழ் இசைக் கலைஞர்களும் இசை ஆய்வாளர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். உள்ளாட்சித் தேர்தல் அறிவித்ததால்  அமைச்சர்கள் கலந்து கொள்வதற்கு தேர்தல் ஆணையம் அனுமதிக்கவில்லை.
மாநாட்டின் தொடக்க விழாவிலும் நிறைவு விழாவிலும் இசைத்துறை வளர்ச்சிக்கு சிறப்பான பங்களிப்பு செய்தவர்களுக்கும், இந்த மாட்டுக்கு பல்வேறு வகையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கும் பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன. குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் விருதுகளை வழங்கினார்.
இந்த மாநாடு தொடர்ந்து நடைபெறுவதற்காக உலகத் தமிழ் இசை ஆராய்ச்சி சங்கம் என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இந்த சங்கத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இடம்பெற்றனர்.
மேலும் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தமிழ் இசையை இளைய சமுதாயத்திற்கு கொண்டு சேர்ப்பதற்காக அனைத்துப் பள்ளிகளிலும் இசை ஒரு பாடமாக்கப்பட வேண்டும். அதனை பயிற்றுவிப்பதற்கு முறையாக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.
இசை சார்ந்த நூல்களை தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும் ஆங்கிலத்திலிருந்து தமிழிலும் மொழியாக்கம் செய்யப்பட வேண்டும்.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை உள்நாட்டிலோ அல்லது வெளிநாடுகளிலோ உலகத் தமிழிசை மாநாடுகள் நடத்தப்பட வேண்டும்.
தமிழ் இசை சார்ந்த முயற்சிகளை ஆவணப்படுத்துவதற்கு இசை ஆவண காப்பகம் ஒன்றை உருவாக்க வேண்டும்.
பழங்குடி மக்களின் இசை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இசைக் கருவிகளை உருவாக்கும் தொழிலாளர்கள் வாழ்வு மேம்படுவதற்கு ஒரு நல வாரியத்தை ஏற்படுத்த வேண்டும்.
இசைத்துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு இசை அறிஞர்களின் பெயரில் விருதுகள் வழங்கப்பட வேண்டும்
என்று தீர்மானிக்கப்பட்டது.
இரண்டாவது உலக தமிழிசை மாநாட்டினை புதுச்சேரியில் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.


நன்றி: இந்து தமிழ்திசை

Sunday, April 28, 2019

சிங்கப்பூர் கோயில்களில் தமிழ் இசை




முன்னுரை
            தமிழர்கள் வாழும் நாடுகளில் குறிப்பிடதகுந்தது சிங்கப்பூர்.  அந்த நாட்டின் அலுவல் மொழிகளில் ஒன்றாகவும் தமிழ் விளங்குகிறது. அரசால் நிறுவப்படும் அறிவிப்பு பலகைகளில் தமிழ் இடம்பெற்றுள்ளது. தமிழ் மொழியும் தமிழர் பண்பாடும் அங்கு போற்றி வளர்க்கப்படுகிறது. அங்கு இருபதுக்கும் மேற்பட்ட தமிழ்க் கோயில்கள் உள்ளன. அவற்றுள் முக்கியமான நான்கு கோயில்களை நேரடியாக நிர்வகிக்கிறது சிங்கப்பூர் இந்து அறக்கட்டளை வாரியம். அவற்றில் தெற்கு பாலம் சாலையில்    உள்ள மாரியம்மன் கோயிலும், லிட்டில் இந்தியா பகுதி சிராங்கூன் சாலையில் அமைந்திருக்கும் சீனிவாசப் பெருமாள் கோயிலும் சிங்கப்பூரின் தேசியச் சின்னங்களின் பட்டியலில் உள்ளன.  அக்கோயில்களில் தமிழ் இசையின் நிலை பற்றி இக்கட்டுரை ஆய்வுசெய்கிறது.

சிங்கப்பூரில் தமிழ்க் கோயில்கள்
            19 ஆம் நுாற்றாண்டின் தொடக்கத்தில் ஆங்கிலேய கிழக்கிந்திய நிறுவனத்தால் தமிழகத்திலிருந்து தொழிலாளர்கள் கொண்டுவரப்பட்டனர். தாய்நாட்டை விட்டு வெளிநாட்டில் குடியேற வந்த இந்த மக்கள் தங்களது பண்பாட்டு மரபைப் பேணிக்காத்து வந்தனர். அவர்களது வருகை தீவு முழுவதிலும் திராவிட கட்டிடக்கலையின் அடையாளங்களுடன் கோயில்களை எழுப்பக் காரணமாக இருந்தது.
சிங்கப்பூரில் தமிழ்ப் பண்பாட்டைப் பாதுகாத்ததில் தொழிலாளர்கள் பெருமளவு பொறுப்புடையவர்களாக இருந்தபோதிலும், பிற்காலங்களில், வணிகர்களால் வழங்கப்பட்ட நிதிப்பங்களிப்புகள் வழிபாட்டுத் தலங்களைக் கட்டவும், புனரமைக்கவும் பயன்படுத்தப்பட்டது. இவ்வாறு கட்டப்பட்ட தமிழ்க் கோயில்கள் சமுதாயத்தை ஒற்றுமையுடன் வைக்கவும், தாய்நாட்டைப் பிரிந்து வாழும் மக்களுக்கு அந்நிய நாட்டில் ஒரு பாதுகாப்புணர்வைத் தரும் ஒரு அமைப்பாகவும் உதவின.
கோயிகளில் தமிழ் இசை
            அங்குள்ள பெரும்பாலான கோயில்களில் நாள்தோறும் நடைபெறும் பூசைகளில் தவில் மற்றும் நாகசுரம் இசைக்கப்படுகிறது. இசைக்கலை என்பது கோயில் கலையாகவே தொடக்க காலங்களில் வளர்ந்துவந்ததாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். தவிலை கோயில் மேளம் என்றே இன்றும் நாட்டுப்புற மக்கள் குறிப்பிடுகின்றனர். மங்கல இசைக்கருவிகளில் தவிலுக்கு தவிர்க்க இயலாத இடமுண்டு. தவில் என்னும் சொல் வழக்கு பிற்காலத்தில் ஏற்பட்டதாகும். இதனை சங்க இலக்கியங்கள் மண முழவு என்று குறிப்பிடுகின்றன.
மணமுழவு
            மணமுரசு என்ற சொற்றொடரை விழா முரசு என்று சிலப்பதிகார உரை குறிப்பிடுகின்றது. மணமுழவு என்பதனை மருதநிலப் பறை என்று தொல்காப்பியப் பொருளதிகார உரை குறிப்பிடுகின்றது.
            ஓர் இல் நெய்தல் கறங்க, ஓர் இல்
          ஈர்ந் தண் முழவின் பாணி ததும்ப (புறநானூறு;194)
என்று புறநானூறு குறிப்பிடும் முழவுஎன்பது, திருமணத்தில் வாசிக்கப்படும் மங்கல இசைக்கருவியான தவிலேயாகும்.
            இன்றும் திருமண விழாக்களின் பொழுது தவில் கருவி பயன்படுத்தப்படுகிறது. திருமாங்கல்யம் திருப்பூட்டுச் செய்யும் பொழுது கெட்டி மேளம் என்ற பெயரில் இசைக்கப்படுகிறது.

தவிலும் நாகசுரமும்
            கோயிலில் நடைபெறும் அன்றாட நிகழ்வுகளில் ஒவ்வொரு நிலையிலும் மல்லாரி இசைக்கப்படும் வழக்கம் உள்ளது. மல்லாரி என்பது தமிழிசையில் இசைக்கப்படும் ஓர் இசை உருப்படியாகும். மங்கல இசைக் குழுவிற்குரிய நாகசுர இசை உருப்படியாக மல்லாரி அமைந்துள்ளது. இசைப் பரிமாணத்திற்குரிய உருப்படியாக இது அமையும். தவிலின் பங்கு இதில் மிகுதியாக இருக்கும். இறைவன் வீதி உலா எழுந்தருளும் பொழுது மல்லாரியை இசைப்பர். “ மயில்+ ஆரி மயிலாரி என்பது மருவி மல்லாரி என ஆனது. ஆரி என்பது பாடுதல், ஒலியெழுப்புதல் என்ற பொருள்படும்.மயில், தன் கழுத்தை நீட்டிக் கூவுதல்தான் அகவுதல் என்பது. இந்த மயில் அகவுதலும் ஆரியும் சேர்ந்து - மயில் ஆரி - மல்லாரி ஆனது” என்பார் இசை அறிஞர் மம்மது.
கோயில் நிகழ்வுகளில் மல்லாரி 
            இறைவனின் நீராடலுக்கு திருமஞ்சன நீர் கொண்டு வரும் பொழுது திருமஞ்சன மல்லாரி இசைக்கப்படும்.
             தளிகை உணவு தயாரிக்கும் இடமான மடைப்பள்ளியிலிருந்து தளிகை கொண்டு வரும் பொழுது தளிகை மல்லாரி இசைக்கப்படும்.
             திருவிழாக் காலங்களில் இறைவனைத் தேரில் எழுந்தருளச் செய்தல் உண்டு. தொண்டர்கள் தேரின் வடம் பிடித்துத் தேரை இழுப்பர். இவர்களை உற்சாகப்படுத்தும் நிலையில் தேர் மல்லாரி இசைப்பது வழக்கம்.
            இறைவன் வீதியுலா எழுந்தருளும் போது சின்ன மல்லாரி இசைக்கப்படும்.
            சிவன் கோயில்களில் இறைவன் காளை  வாகனத்தில் எழுந்தருளும் பொழுது பெரிய மல்லாரி இசைக்கப்படும். இந்த நிகழ்வுகளை ஆவணப்படமாக லலிதாராம் வெளியிட்டுள்ளார்.
            சிங்கப்பூர் கோயில்களில் தவில் மற்றும் நாகசுர கலைஞர்களைக் கொண்டு மேற்கண்ட முறைப்படி இசை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இதற்காக தமிழகத்திலிருந்து இசைக்கலைஞர்கள் கோயில்களில் குடியமர்த்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அந்த நாட்டு விதிமுறைப்படி உரிய ஊதியம் வழங்கப்படுகிறது.

சிங்கப்பூரில் தமிழிசைக்கலைஞர்கள்
            சிங்கப்பூர் கோயில்களில் தவில் மற்றும் நாகசுரம் வாசிக்கும் இசைக்கலைஞர்கள் கோயில்களிலேயே தங்கியுள்ளனர். அங்கு அவர்களுக்கு உரிய வசதிகள் செய்துதரப்பட்டுள்ளன. கோயிலில் சமைக்கும் உணவு அவர்களுக்கு அளிக்கப்படுகிறது. இறை பணி என்பதால் அந்த இசைக்கலைஞர்கள் அப்பணியை பக்தியோடு மேற்கொள்கின்றனர்.
உறுமிமேளம்
            சிங்கப்பூரில் புகழ்பெற்றுத் திகழும் உறுமிமேளக் குழு ‘சிவசக்தி முனியாண்டி உறுமிமேளக் குழு’ ஆகும். அக்குழு, தைப்பூசத் திரு விழாவில் சிராங்கூன் சாலையில் அமைந்துள்ள பெருமாள் கோயிலில் காலை 7 மணியிலிருந்தே உறுமி மேளம் இசைக்கத் தொடங்கி விடும்.
            ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்குச் சென்று வாசித்துள்ள இந்த 16 பேர் கொண்ட இசைக்குழு, தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற முதன்மையான விழாக்களில் வாசிப்பது தம் குழுவினருக்கு கிடைத்த பெருமையாகக் கருதுவதாக இக்குழுவின் தலைவர் திரு நவின் குமார் இளங்கோவன் தெரிவித்தார்.
            தைப்பூசத் திருநாளில் உறுமி மேளம் வாசிப்பது குறித்து அங்குள்ள உறுமிமேளக் குழுக்கள் ஒரு சந்திப்புக் கூட்டத்தை நடத்தி அதில் தைப்பூசத் திருவிழாவில் கலந்துகொள்வதற்கான விதி முறைகளுக்கு கட்டுப்படுவதென உறுதியளித்துள்ளனர். இந்து அறக்கட்டளை வாரியம் கொடுத்த தகவல்படி   11 உறுமிமேளக் குழுக்கள் தைப்பூசத் திருநாளில் வாசிக்க அனுமதி பெற்றுள்ளன.
கோயில்களில் திருமுறை இசை
            சிங்கப்பூரின் பல்வேறு கோயில்களில் திருமுறை இசை தினமும் ஒலிக்கக் கேட்கலாம். இவற்றைப் பாடுவோர் தமிழ் நாட்டிலிருந்து சென்ற கலைஞர்கள் ஆவர். மேலும், தேவார இசை நிகழ்ச்சிகள் பல அவ்வப்போது ஏற்பாடு செய்யப்படுகின்றன. அவற்றில் தமிழகத்திலிருந்து வரும் ஓதுவார்கள் முதல் உள்ளூர் திருமுறை மாணவர்கள் வரை பலரும் பாடக் கேட்கலாம். பெரும்பாலும் இவை, நவராத்திரி, புத்தாண்டு, பொங்கல் போன்ற விழாக்காலங்களில் நடைபெறும். மேலும் சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகம்  உட்பட பல கலை அமைப்புகள் தமிழ் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன.
முடிவுரை
சிங்கப்பூரில் அமைந்துள்ள கோயில்கள் வழிபாட்டுத் தலங்களாக மட்டுமின்றி தமிழ் இசையைப் போற்றிப்பாதுகாக்கும் நிறுவங்களாகவும் விளங்குகின்றன.
கோயில் இசை மரபுகளின்படி அன்றாட வழிபாடுகளிலும் திருவிழாக் காலங்களிலும் உரிய முறையில் இசைக்கருவிகள் இசைக்கப் படுவதன் மூலம்  தமிழிசைக் கலைஞர்களுக்கு வாழ்வதாரம் அளிக்கப்படுகிறது.
மேலும் சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகம் மற்றும் தஞ்சாவூர் மரபு இசைப் பள்ளி, சிங்கப்பூர் ஆகிய அமைப்புகள் தமிழ் இசையை மக்களிடம் கொண்டுசேர்க்க பல்வேறு நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
துணைநூற் பட்டியல்
1.தொல்காப்பியம் பொருளதிகாரம், உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 2007
2.புறநானூறு,நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம்,சென்னை,2007
3.சிலப்பதிகாரம், வர்த்தமானன் பதிப்பகம்,சென்னை,2000
இணையதளங்கள்
1.தமிழ் இணையக் கல்விக்கழகம்
2. தமிழ் விக்கிப் பீடியா
3.கீற்று/செம்மலர்
தகவலாளர்கள்
1.கவிஞர் தியாக ரமேஷ், செயலாளர், கவிமாலை, சிங்கப்பூர்
2.திரு. நவீன்குமார் இளங்கோவன், தலைவர், சிவசக்தி முனியாண்டி உறுமிமேளக் குழு, சிங்கப்பூர்