தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking

Sunday, September 27, 2009

சாமான்ய மக்களின் தலைவர் சாமிக்கண்ணு



தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்குவதற்காக போராடிய தலைவர்கள் மத்தியில் தனது பதவி அதிகாரத்தைப் பயன்படுத்தி இட ஒதுக்கீட்டை நடைமுறைப் படுத்திக்காட்டியவர் கானூர் சாமிக்கண்ணு படையாட்சி. 1891 ஆம் ஆண்டு சின்னத்தம்பி-சிவகாமி இணையருக்கு மகனாகப் பிறந்தவர்.இவரின் சொந்த ஊர் உடையார்பாளையம் அருகிலுள்ள வாரியங்காவல் ஆகும். இவரது தந்தை காலத்தில் கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்புக்கு அருகிலுள்ள கானூர் கிராமத்திற்கு இடம் பெயர்ந்தனர்.சாமிக்கண்ணு தேவங்குடியிலுள்ள தன் தாய் மாமன் வீட்டில் தங்கி விளாகம் பள்ளியில் தொடக்கக்கல்வி பயின்றார்.அப்போது அங்கு காலரா நோய் பரவியதனால் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு கானூருக்கு வந்துவிட்டார்.அதன் பிறகு அவர் படிக்கவே இல்லை.மூன்றாம் வகுப்போடு அவர் கல்வி முடிந்து போனது. கானூரில் மணியக்காரராகப் பொது வாழ்வைத் தொடங்கிய சாமிக்கண்ணு 1946 இல் சிதம்பரம் தாலுக்கா போர்டு தலைவரானார். 1952 இல் சென்னை சட்டமன்றத் தேர்தலில் உழைப்பாளர் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். 1953 இல் விருத்தாசலம் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அதே கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினரான பிறகு அவரது புகழ் பரவத்தொடங்கியது. 1955 இல் தென்னார்க்காடு மாவட்ட நாட்டாண்மைக்கழகத் தலைவராகப் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப் பெற்றார். அவரது பதவிக்காலத்தில் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட இளைஞர்கள் பலருக்கு வேலைவாய்யபை வழங்கினார். இவரது பதவிக்காலத்தில் ஒரு முறை ஆசிரியர் பணிக்கு நேர்காணல் நடத்தவேண்டிய சூழல்.மாவட்டத் தலைநகருக்கு நேர்காணலுக்கு வந்தவர்களை கானூருக்கு வரும்படி கூறிச் சென்றுவிட்டார். பணிநாடுநர்களும் அங்கு சென்றுள்ளனர். களத்துமேட்டிற்கு அழைத்துச் சென்று வயலில் இறங்கி நாற்றரிக்கச் சொன்னாராம். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட இளைஞர்கள் வயலில் இறங்கி நாற்று அரிக்கத் தொடங்கவிட்டனர் உயர்சாதி இளைஞர்கள் வரப்பிலேயே நின்றுகொண்டிருந்தனராம்.அவர்களைப் பார்த்து சாமிக்கண்ணு கூறினாராம்," இவ்வளவு நாளா நீங்க நாற்காலியில உக்காந்திருந்தீங்க இவனுவோ நாத்தரிச்சிகிட்டு கெடந்தானுவோ, இவன்லாம் இப்படியே கெடக்க வேண்டியதுதானா? இவனும் கொஞ்சம் நாளைக்கு நாற்காலியில உக்காந்து பார்க்கட்டும் நீங்க வீட்டுக்கு போங்க" என்று அனுப்பி வைத்தாராம். இவரது பதவிக்காலத்தில்தான் இம்மாவட்டத்தில் பல பள்ளிகள் திறக்கப்பட்டன. கிராமங்களில் தொடங்கப்பள்ளி, நகரங்களில் உயர்நிலைப்பள்ளி என்பது இவரது இலக்காக இருந்தது. பழமையான பல பள்ளிக் கட்டடங்களின் கல்வெட்டுகளில் இவர் பெயர் இடம்பெற்றிருப்பதை இன்றும் காணலாம். சாலை வசதிகள், குடிநீர் வசதி, மருத்துவ வசதி என ஏழை எளிய மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து கொடுத்தார். இவர் பதவிக்காலத்தில்தான் விருத்தாசலத்திலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் வெள்ளாற்றின் குறுக்கே தரைப்பாலம் கட்டப்பட்டது. அப்பாலம் இன்றுவரை மக்களுக்கு பயன்பட்டது. தற்போதுதான் அது மேம்பாலமாக மாற்றப்பட்டு வருகிறது. 1957 இல் திருமுட்டம் பேரூராட்சித் தலைவராக மூன்றரை ஆண்டுகள் பதவி வகித்தார்.உடையார்பாளையம் ஜமீன்தார் காலத்திற்குப் பிறகு ஓடாத திருமுட்டம் கோயில் தேரை இவரது பதவிக்காலத்தில்தான் ஓட வைத்தார். 1962 இல் செயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். 1967 இல் கானூர் ஊராட்சிமன்றத் தலைவராகப் பதவி வகித்தார். வாழ்நாள் முழுதும் மக்களுக்கு தொண்டு செய்தாலும் விவசாயப் பணியைக் கைவிட்டதில்லை. அரசியலில் ஈடுபடுபவர்கள் சொந்தமாக ஏதேனும் தொழில் செய்தால்தான் பொதுவாழ்வில் தூய்மையைக் கடைபிடிக்க முடியும் என்பது அவரின் கொள்கை. அதிகாரிகளுக்கு அஞ்சாமல் ஒன்றுக்கும் உதவாத விதிமுறைகளை மீறி ஏழை எளிய மக்களுக்கு உதவுவதில் அவருக்கு நிகர் அவரே. படித்த பலரைத் தேடி வேலைவாய்ப்பை வழங்கி விட்டு பின்னர் நியமன ஆணையை அனுப்பி வைப்பாராம். இத்தகைய பல சிறப்புகளைப் பெற்ற மக்கள் தலைவர் சாமிக்கண்ணு 1984 இல் இயர்கை எய்தினார். கடலூர் மாவட்டத்தில் இன்று ஓய்வூதியம் பெறும் பல ஆசிரியர்கள் கானூர் சாமிக்கண்ணு படையாட்சியால் பணியமர்த்தப் பட்டவர்கள் என்பதை அவர்களே கூறக் கேட்டிருக்கிறேன். இது போன்ற தலைவர்கள் நமக்கு இப்போது கிடைப்பார்களா என்ற ஏக்கம் மனதுக்குள் எழுகிறது.

நன்றி: சாவடிகுப்பம் திரு. ந.இராமலிங்கம்.எம்.ஏ.எட்.,

Monday, September 7, 2009

வள்ளுவர் தமிழ் மன்ற தொடக்கவிழா




வள்ளுவர் தமிழ் மன்ற தொடக்கவிழா
ஆலத்தியூர் வித்யா மந்திர் பதின்ம மேல்நிலைப் பள்ளியில் வள்ளுவர் தமிழ் மன்ற தொடக்க விழாவில் சிறப்புரையாற்ற அப்பள்ளித் தமிழாசிரியர் பூ.மணிவண்ணன் அழைத்திருந்தார்.தமிழ் இலக்கியத்தின் இன்றைய போக்கு என்ற தலைப்பில் பேசும்படி குறிப்பிட்டனர் மாணவர்களுக்கேற்ப சற்று பேச்சில் சமரசம் செய்துகொள்ளத்தான் வேண்டியிருந்தது. மாணவர்கள் சிறப்பாக கவனித்த விதம் மகிழ்ச்சியளித்தது.தமிழாசிரியர் வீரமணியின் வரவேற்புரை இலக்கிய நயத்தோடிருந்தது. மணிவண்ணன் மன்றத்தின் குறிக்கோள்களைக் கூறி என்னை அறிமுகப் படுத்தினார்.தாளாளரும் ராம்கோ சிமெண்ட் நிறுவனத்தின் மூத்த பொது மேலாளருமான (நிர்வாகம்) திரு.மதன்மோகன் தலைமையுரையில் இனி வருங்காலங்களில் தமிழ் மன்ற நிகழ்ச்சிக்கென்று ஒரு நாள் ஒதுக்கி சிறப்பாக செயல்பட வேண்டும் எனக் குறிப்பிட்டது அனைவருக்கும் மகிழ்ச்சியளித்தது.பள்ளியின் முதல்வர் திருமதி இராதாரவீந்திரன் அவர்கள் பெண் எழுத்தாளர்கள்,பேச்சாளர்கள் பற்றி மாணவிகளிடம் வினவி தன் பள்ளிப் பருவ நாட்களை நினைவுகூர்ந்தார். ஓசூரில் பணியாற்றுகின்ற தோழர் மதியழகன் இன்று அறிமுகமானதோடு நிகழ்ச்சியிலும் பங்கேற்று இலக்கியப் போக்குகள் குறித்து உரையாடினார் அவரது வலைப்பக்கம் பற்றியும் கூறினார்.http://mathikavithaigal.blogspot.com/ பள்ளி நூலகத்தை முதல்வர், மணிவண்ணன், நூலகர் ஆகியோருடன் பார்த்தோம் ஒரு கல்லூரி நூலகத்தைப்போல் மாணவர்கள் அமர்ந்து படிக்கப் போதுமான இருக்கை வசதிகள் செய்யப்பட்டிருந்தது.நல்ல பல நூல்கள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. அதைப் பார்த்தபோது அரசு பள்ளிகளில் இது போன்று அமைக்க இயலவில்லையே என்னும் ஏக்கம் எழுந்தது.மரம், செடிகொடிகள், புல்வெளி என இற்கை எழில்கொஞ்சும் சூழலில் பள்ளி அமைந்திருப்பது சிறப்பம்சம்.

Friday, September 4, 2009

ஆசிரியருக்குக் கல்வியாளர் எழுதிய கடிதம்.





(ஆறு ஆண்டுகளுக்குமுன் எனக்கு வந்த கடிதம் இது. ஆசிரியரும் கல்வியாளரும் என் தந்தையின் நண்பருமான திரு. மு.கதிர்வேல் அவர்கள் எழுதியது. குழந்தை விஞ்ஞானிகளை உருவாக்குவதற்காக தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்தும் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பங்கேற்பதற்காக என் மாணவர்கள் மேற்கொண்ட நெல்வயலில் மீன் வளர்க்கும் ஆய்வுத்திட்டம் பற்றி ஆனந்தவிகடனில் வெளிவந்த செய்திக் கட்டுரையைப் படித்துவிட்டு அவர் எழுதிய கடிதம் என்னை இன்றும் ஊக்கப்படுத்தி வருகிறது. நம் பணியை நம் துறைசாட்ந்த வல்லுநர்கள் பாராட்டும்போது நமக்கு கிடைக்கின்ற மகிழ்ச்சி அலாதியானது. இந்த ஆசிரியர் தினத்தில் உங்களோடு பகிர்ந்துகொளவதில் மகிழ்ச்சியடைகிறேன்.)
ஓட்டேரிவிரிவுப்பகுதி
1.12.2003
அன்புள்ள புகழேந்திக்கு,
எனது மனங்கனிந்த வாழ்த்துக்கள்.
நீ மேற்கொண்டுள்ள ஆக்கபூர்வமான முயற்சி பற்றி ஆனந்தவிகடனில் வெளியான செய்திகளைப் படித்து புளகாங்கிதம் அடைந்தேன். ஓர் ஆசிரியர் ஏட்டிலுள்ள பாடங்களை மட்டும் படித்துக்காட்டி பொருள் கூறி மாணவர்களைத் தேர்விற்கு தயார் செய்யும் ஒரு சராசரி மனிதனாக மட்டும் விளங்கினால் பயனே இல்லை. நேர்மை, கடின உழைப்பு, தியாகம், பாசம் ஆகியவற்றுடன் மாணவர்களைப் புத்தாக்கம் புனையக்கூடியவர்களாக பரிணமிக்கச் செய்யும் ஒரு மாமனிதனாக ஓர் ஆசிரியர் செயலாற்ற வேண்டும் என்பதில் முழு நம்பிக்கை உடையவன் நான். இக்குணங்களைப் பெற்று ஒரு முன்மாதிரி ஆசிரியராய் நீ விளங்குகிறாய் என அறிந்து பெருமையடைகிறேன். 'ஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயலுகள' என்ற திருப்பாவையின் வரிக்கு நம்மூர் வளத்தினையே எடுத்துக்காட்டாக அன்றும் இன்றும் என்றும் கூறிப் பெருமிதம் அடைபவன் நான். நீயும் அதே பாணியில் எழுதியிருப்பது என்னைக் கவர்ந்தது. நான் 1962-63 இல் ஆதனூர் நடுநிலைப் பள்ளியில் பணியாற்றியபோது அப்பகுதி மாணவர்களிடம் பொதிந்திருந்த திறமைகளை எவ்வாறு வெளிக் கொணர்ந்தேன் என்பதை உன் அப்பாவைக் கேட்டுப்பார் தெரியும். உனது மாணவர்கள் இயற்கையிலேயே திறமை உள்ளவர்கள். அவர்களது அனைத்துத் திறமைகளையும் வெளிக்கொணர்ந்து மேம்பாடடையச்செய்யும் நல்ல முயற்சியில் ஈடுபட்டிருப்பது உனது தொழிலில் நீ ஏற்படுத்திக்கொண்ட கமிட்மெண்ட்டை காட்டுகிறது. மாணவர்களின் மனதைப் பக்குவப்படுத்தி ஆக்கபூர்வமான பணிகளில் ஈடுபடச் செய்வதில் நானும் ஈடுபடுவேன். இனி வெறும் போதனையாளர்களுக்கு மரியாதை கிடையாது. சாதனையாளர்களுக்கு தான் மரியாதை. எனவே நீ அனைத்து தரப்பினரின் அரவணைப்பையும் பெற்று மாணவர்களை ஆக்கபூர்வமான செயல்பாடுகளிலும் திறன் மிக்கவர்களாக நல்ல அனுபவ சாலிகளாக உருவாக்கு. எனது நல் வாழ்த்துகள் உனக்கு துணை நிற்கட்டும். 'என் கடன் பணி செய்து கிடப்பதே'
என்றும் அன்புடன்,
மு.கதிர்வேல்.

Wednesday, July 29, 2009

காந்தி ஒரு மகாத்மாவா?-அம்பேத்கர் பதில்

1938 ஆம் ஆண்டு சித்ரா என்ற மராத்தி இதழின் தீபாவளி மலரில் வெளியான அம்பேத்கரின் கட்டரையிலிருந்து சில பகுதிகள். காந்தி ஒரு மகாத்மாவா? இந்த கேள்வி எனக்கு எரிச்சலூட்டுகிறது. நான் எல்லா மகாத்மாக்களையும் வெறுக்கிறேன், அவர்கள் ஒழித்துக் கட்டப்பட வேண்டும் என்று உறுதியாக நம்புகிறேன். அவர்கள் இருந்து வருவது அவர்கள் பிறந்த நாட்டுக்கு ஒரு சாபத்தீடு எனக் கருதுகிறேன். தனது உடையை மாற்றுவதன் மூலம் மட்டுமே இந்தியாவில் யாரும் மிக எளிதில் ஒரு மகாத்மா ஆகிவிடலாம். சத்தியத்தையும், அகிம்சையையும் காந்தி போதித்ததாக உரிமை கொண்டாடப்படுகிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் மகான் புத்தர் உண்மை, அகிம்சை என்ற போதனையை உலகுக்கு அளித்தார். உண்மையும், அகிம்சையும் காந்தியினுடைய மூலக் கண்டு பிடிப்புகள் அல்ல. காந்தியின் குணாம்சத்தை நான் ஆழ்ந்து ஆராயும்போது, அவருடைய குணாம்சத்தில் ஆழ்ந்த தன்மையையோ அல்லது நேர்மையையோ காட்டிலும் தந்திரம்தான் கூடுதல் தெளிவாகத் தெரிகிறது என்பதை நான் மிகவும் தெளிவாக உணர்கிறேன். வட்ட மேஜை மாநாட்டின் போது," தாழ்த்தப் பட்ட வர்க்கங்களின் பிரதிநிதிகள் முன் வைக்கும் கோரிக்கைகளுக்கு எதிராக நான் எந்த ஆட்சேபணையும் எழுப்ப மாட்டேன் " என்று கூறினார். ஆனால் தாழ்த்தப்பட்ட வர்க்கங்களின் பிரதிநிதிகள் தங்களுடைய கோரிக்கைகளைச் சமர்ப்பித்த உடனேயே காந்தி, தான் அளித்த உறுதி மொழிகளையெல்லாம் ஓசை படாமல் மறந்து விட்டார். அவர் முஸ்லிம்களிடம் சென்று, தாழ்த்தப்பட்ட வர்க்கங்களின் பிரதிநிதிகள் முன் வைக்கும் கோரிக்கைகளை அவர்கள் எதிர்த்தால், அவர்களுடைய முஸ்லிம்களின் 14 கோரிக்கைகளைத் தான் ஆதரிப்பதாகக் கூறினார். ஒரு கயவன் கூட இதைச் செய்திருக்கமாட்டார். இது காந்தியின் துரோகத்திற்கு ஓர் உதாரணம் மட்டுமேயாகும். காந்தியன் அரசியல் பொருளற்றதும் ஆரவாரமானதுமாகும். இந்திய ஆட்சி அரசியலின் வரலாற்றில் அது மிகவும் நேர்மையற்ற அரசியலாகும். அரசியலிலிருந்து நேர்மை அகற்றப்படுவதற்கான பொறுப்பு காந்தி என்ற மனிதரையே சாரும். அதற்கு பதிலாக இந்திய அரசியலில் வர்த்தகத் தன்மையைக் கொண்டு வந்தார். அரசியலிலிருந்து அதனுடைய நற்பண்பு அகற்றப் பட்டுவிட்டது. இந்தியப் பொது வாழ்விலிருந்து காந்திஜியின் தீங்கான மகான் தன்மையுடன் கூடிய கோமாளித் தனங்களை எவ்வாறு போக்குவது என்பது மிகவும் முக்கியமான பிரச்சினையாகும்.
ஆதாரம்: டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் நூல் தொகுப்பு: தொகுதி-36. வெளியீடு: சமூகநீதி மற்றும் உரிமையளிப்பு அமைச்சகம், இந்திய அரசு.
விற்பனை உரிமை: நியூ செஞ்சுரி புக் அவுஸ்.
முக்கியமான இரண்டு ஆளுமைகளின் மனப்போக்கினை வெளிப்படுத்தும் இக்கட்டுரை நமக்கு பலவற்றை சொல்லாமல் சொல்லிச் செல்கிறது.

Tuesday, July 14, 2009

பெரியாருக்கு வ.உ.சி. எழுதிய கடிதம்.


பெரியாருக்கு வ.உ.சி. எழுதிய கடிதம்.

V.O.Chidambaram பிள்ளாய் KOILPATTI,S.I.R.

PLEADER 6-6-28


அன்பார்ந்த சகோதரர் அவர்களே,

சேமம். சேமத்துக்குக் கோருகிறேன்.

நாகப்பட்டணத்திலும்,கும்பகோணத்திலும் நீங்களில்லாமை எல்லாருக்கும் அசந்தோசத்தை உண்டு பண்ணியது. ஒருவாறு இரண்டிடங்களிலும் எங்கள் வேலைகளைச் செய்து முடித்தோம். இப்பொழுது உங்கள் உடம்பு பூரண சவுக்கியம் அடைந்து விட்டதா? ஆம் என்றால் நீங்கள் எப்பொழுது சென்னைக்குச் செல்லுதல் கூடும். என் மகன் school final examinationல் தேறிவிட்டான். இனிமேல் என்னால் அவனைப் படிக்கவைக்க முடியாது. போலீஸ் டிப்பார்ட்டு மெண்டுக்கு அவனை அனுப்பலாமென்று நினைக்கிறேன். தகுதியான சிபார்சு இருந்தால், முதலிலேயே Inspector ஆகலாம் சாதாரண சிபார்சு இருந்தால் முதலில் Sub-Inspector ஆகலாம். தகுதியான சிபார்சு நமக்குக் கிடைக்குமா என்பதைப்பற்றி எனக்குத் தெரிவியுங்கள். கடவுள் துணை.

அன்புள்ள,
வ.உ.சிதம்பரம்


(தேச விடுதலைக்காக பாடு பட்ட ஒரு மாபெரும் தலைவரின் இக்கடிதம் பலவற்றை நமக்கு உணர்த்துகிறது. ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியை எதிர்த்து கப்பல் வாங்கிய வ.உ.சி.யால் மகனை பள்ளி இறுதி வகுப்பிற்கு மேல் படிக்க வைக்க இயலாமல் போனதும், வேலைக்கு சரியான பரிந்துரை கிடைக்குமா என தயங்கிய படி பெரியாரிடம் கேட்டிருப்பதும் இன்று நடக்குமா? கடவுள் இல்லை, கடவுளை மற மனிதனை நினை என்று கூறிய பெரியாருக்கு எழுதிய கடிதத்திலேயே கடவுள் துணை என்று எழுதிய வ.உ.சி. எவ்வளவு வெளிப்படையான மனிதர் பாருங்கள்.)

Thursday, July 9, 2009

கிராமத்து விளையாட்டுகள்


கிராமத்து விளையாட்டுகள் : மறைந்து வரும் தமிழர் விளையாட்டுகள் பற்றிய கட்டுரைகள் படங்களுடன், வெளியீடு: விகடன் பிரசுரம், முதல் பதிப்பு 2008, விலை ரூ. 55. ISBN: 978-81-8476-126-9. நூலைப்பற்றி: விளையாட்டு ஒரு சமூகத்தின் தொன்மையை, பண்பாட்டு மூலங்களை தன்னுள் சேகரித்து வைத்திருக்கிறது. எல்லா துறைகளிலும் நம் பண்பாட்டு அடையாளங்களை இழந்து வரும் இன்றைய சூழலில் நம் தமிழ்க்குழந்தைகள் இழந்து வரும் மரபு வழி விளையாட்டுகளை கவனப் படுத்துகிறது இந்நூல். நம் மரபு வழி விளையாட்டுகள் தோழமை உணர்வு, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, தலைமைப்பண்பு, அச்சமின்மை, நெருக்கடிகளை எதிர்கொள்ளும் திறன், சமயோசித அறிவு போன்ற அற மதிப்புகளை உருவாக்குபவை என்பதை இந்நூலைப் படித்து முடிக்கையில் நீங்கள் புரிந்துகொள்வீர்கள்.

மரபுவழி அறிவுமுறை


மரபுவழி அறிவுமுறை: நாட்டுப்புற ஆய்வுக்கட்டுரைகள் , வெளியீடு : ஸ்நேகா பதிப்பகம், முதல் பதிப்பு 2006, விலை ரூ. 60 மிஷிஙிழி : 81-87371-56-0. நூலைப்பற்றி: தொன்மத்தின் கொடையும் மரபின் செழுமையும் நவீன வாழ்க்கைக்கு வளம் சேர்க்கக்கூடியவைதான் எனும் நம்பிக்கையை மறு உறுதி செய்கிறது இந்நூல். நீள் பழமையும் நாகரிகத் தொடர்ச்சியும் கொண்ட தமிழ் இனக்குழு சமூகங்களின் அறிதல் முறை அறிவியல் பண்பும் தருக்கத் தொடர்பும் உடையவை. உணவு, மருத்துவம், விளையாட்டு, பாலியல் குறித்த இம்மரபுவழி அறிவு நம்முடைய பண்பாட்டுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவை. நவீன மயமாக்கல், உலகமயமாக்கல் போன்ற ஏகாதிபத்திய போக்குகள் நம் மரபு வழி அறிவைக் குலைத்து பண்பாட்டு அடையாளங்களை அழித்துக்கொண்டிருக்கும் சூழலில் நிலவும் மந்தகதியைக் கலைத்து சுய விழிப்பைத் தூண்டுவதாய் அமைந்திருக்கிறது இந்நூல்.