தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்குவதற்காக போராடிய தலைவர்கள் மத்தியில் தனது பதவி அதிகாரத்தைப் பயன்படுத்தி இட ஒதுக்கீட்டை நடைமுறைப் படுத்திக்காட்டியவர் கானூர் சாமிக்கண்ணு படையாட்சி. 1891 ஆம் ஆண்டு சின்னத்தம்பி-சிவகாமி இணையருக்கு மகனாகப் பிறந்தவர்.இவரின் சொந்த ஊர் உடையார்பாளையம் அருகிலுள்ள வாரியங்காவல் ஆகும். இவரது தந்தை காலத்தில் கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்புக்கு அருகிலுள்ள கானூர் கிராமத்திற்கு இடம் பெயர்ந்தனர்.சாமிக்கண்ணு தேவங்குடியிலுள்ள தன் தாய் மாமன் வீட்டில் தங்கி விளாகம் பள்ளியில் தொடக்கக்கல்வி பயின்றார்.அப்போது அங்கு காலரா நோய் பரவியதனால் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு கானூருக்கு வந்துவிட்டார்.அதன் பிறகு அவர் படிக்கவே இல்லை.மூன்றாம் வகுப்போடு அவர் கல்வி முடிந்து போனது. கானூரில் மணியக்காரராகப் பொது வாழ்வைத் தொடங்கிய சாமிக்கண்ணு 1946 இல் சிதம்பரம் தாலுக்கா போர்டு தலைவரானார். 1952 இல் சென்னை சட்டமன்றத் தேர்தலில் உழைப்பாளர் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். 1953 இல் விருத்தாசலம் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அதே கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினரான பிறகு அவரது புகழ் பரவத்தொடங்கியது. 1955 இல் தென்னார்க்காடு மாவட்ட நாட்டாண்மைக்கழகத் தலைவராகப் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப் பெற்றார். அவரது பதவிக்காலத்தில் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட இளைஞர்கள் பலருக்கு வேலைவாய்யபை வழங்கினார். இவரது பதவிக்காலத்தில் ஒரு முறை ஆசிரியர் பணிக்கு நேர்காணல் நடத்தவேண்டிய சூழல்.மாவட்டத் தலைநகருக்கு நேர்காணலுக்கு வந்தவர்களை கானூருக்கு வரும்படி கூறிச் சென்றுவிட்டார். பணிநாடுநர்களும் அங்கு சென்றுள்ளனர். களத்துமேட்டிற்கு அழைத்துச் சென்று வயலில் இறங்கி நாற்றரிக்கச் சொன்னாராம். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட இளைஞர்கள் வயலில் இறங்கி நாற்று அரிக்கத் தொடங்கவிட்டனர் உயர்சாதி இளைஞர்கள் வரப்பிலேயே நின்றுகொண்டிருந்தனராம்.அவர்களைப் பார்த்து சாமிக்கண்ணு கூறினாராம்," இவ்வளவு நாளா நீங்க நாற்காலியில உக்காந்திருந்தீங்க இவனுவோ நாத்தரிச்சிகிட்டு கெடந்தானுவோ, இவன்லாம் இப்படியே கெடக்க வேண்டியதுதானா? இவனும் கொஞ்சம் நாளைக்கு நாற்காலியில உக்காந்து பார்க்கட்டும் நீங்க வீட்டுக்கு போங்க" என்று அனுப்பி வைத்தாராம். இவரது பதவிக்காலத்தில்தான் இம்மாவட்டத்தில் பல பள்ளிகள் திறக்கப்பட்டன. கிராமங்களில் தொடங்கப்பள்ளி, நகரங்களில் உயர்நிலைப்பள்ளி என்பது இவரது இலக்காக இருந்தது. பழமையான பல பள்ளிக் கட்டடங்களின் கல்வெட்டுகளில் இவர் பெயர் இடம்பெற்றிருப்பதை இன்றும் காணலாம். சாலை வசதிகள், குடிநீர் வசதி, மருத்துவ வசதி என ஏழை எளிய மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து கொடுத்தார். இவர் பதவிக்காலத்தில்தான் விருத்தாசலத்திலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் வெள்ளாற்றின் குறுக்கே தரைப்பாலம் கட்டப்பட்டது. அப்பாலம் இன்றுவரை மக்களுக்கு பயன்பட்டது. தற்போதுதான் அது மேம்பாலமாக மாற்றப்பட்டு வருகிறது. 1957 இல் திருமுட்டம் பேரூராட்சித் தலைவராக மூன்றரை ஆண்டுகள் பதவி வகித்தார்.உடையார்பாளையம் ஜமீன்தார் காலத்திற்குப் பிறகு ஓடாத திருமுட்டம் கோயில் தேரை இவரது பதவிக்காலத்தில்தான் ஓட வைத்தார். 1962 இல் செயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். 1967 இல் கானூர் ஊராட்சிமன்றத் தலைவராகப் பதவி வகித்தார். வாழ்நாள் முழுதும் மக்களுக்கு தொண்டு செய்தாலும் விவசாயப் பணியைக் கைவிட்டதில்லை. அரசியலில் ஈடுபடுபவர்கள் சொந்தமாக ஏதேனும் தொழில் செய்தால்தான் பொதுவாழ்வில் தூய்மையைக் கடைபிடிக்க முடியும் என்பது அவரின் கொள்கை. அதிகாரிகளுக்கு அஞ்சாமல் ஒன்றுக்கும் உதவாத விதிமுறைகளை மீறி ஏழை எளிய மக்களுக்கு உதவுவதில் அவருக்கு நிகர் அவரே. படித்த பலரைத் தேடி வேலைவாய்ப்பை வழங்கி விட்டு பின்னர் நியமன ஆணையை அனுப்பி வைப்பாராம். இத்தகைய பல சிறப்புகளைப் பெற்ற மக்கள் தலைவர் சாமிக்கண்ணு 1984 இல் இயர்கை எய்தினார். கடலூர் மாவட்டத்தில் இன்று ஓய்வூதியம் பெறும் பல ஆசிரியர்கள் கானூர் சாமிக்கண்ணு படையாட்சியால் பணியமர்த்தப் பட்டவர்கள் என்பதை அவர்களே கூறக் கேட்டிருக்கிறேன். இது போன்ற தலைவர்கள் நமக்கு இப்போது கிடைப்பார்களா என்ற ஏக்கம் மனதுக்குள் எழுகிறது.
நன்றி: சாவடிகுப்பம் திரு. ந.இராமலிங்கம்.எம்.ஏ.எட்.,
No comments:
Post a Comment