தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking

Friday, September 4, 2009

ஆசிரியருக்குக் கல்வியாளர் எழுதிய கடிதம்.

(ஆறு ஆண்டுகளுக்குமுன் எனக்கு வந்த கடிதம் இது. ஆசிரியரும் கல்வியாளரும் என் தந்தையின் நண்பருமான திரு. மு.கதிர்வேல் அவர்கள் எழுதியது. குழந்தை விஞ்ஞானிகளை உருவாக்குவதற்காக தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்தும் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பங்கேற்பதற்காக என் மாணவர்கள் மேற்கொண்ட நெல்வயலில் மீன் வளர்க்கும் ஆய்வுத்திட்டம் பற்றி ஆனந்தவிகடனில் வெளிவந்த செய்திக் கட்டுரையைப் படித்துவிட்டு அவர் எழுதிய கடிதம் என்னை இன்றும் ஊக்கப்படுத்தி வருகிறது. நம் பணியை நம் துறைசாட்ந்த வல்லுநர்கள் பாராட்டும்போது நமக்கு கிடைக்கின்ற மகிழ்ச்சி அலாதியானது. இந்த ஆசிரியர் தினத்தில் உங்களோடு பகிர்ந்துகொளவதில் மகிழ்ச்சியடைகிறேன்.)
ஓட்டேரிவிரிவுப்பகுதி
1.12.2003
அன்புள்ள புகழேந்திக்கு,
எனது மனங்கனிந்த வாழ்த்துக்கள்.
நீ மேற்கொண்டுள்ள ஆக்கபூர்வமான முயற்சி பற்றி ஆனந்தவிகடனில் வெளியான செய்திகளைப் படித்து புளகாங்கிதம் அடைந்தேன். ஓர் ஆசிரியர் ஏட்டிலுள்ள பாடங்களை மட்டும் படித்துக்காட்டி பொருள் கூறி மாணவர்களைத் தேர்விற்கு தயார் செய்யும் ஒரு சராசரி மனிதனாக மட்டும் விளங்கினால் பயனே இல்லை. நேர்மை, கடின உழைப்பு, தியாகம், பாசம் ஆகியவற்றுடன் மாணவர்களைப் புத்தாக்கம் புனையக்கூடியவர்களாக பரிணமிக்கச் செய்யும் ஒரு மாமனிதனாக ஓர் ஆசிரியர் செயலாற்ற வேண்டும் என்பதில் முழு நம்பிக்கை உடையவன் நான். இக்குணங்களைப் பெற்று ஒரு முன்மாதிரி ஆசிரியராய் நீ விளங்குகிறாய் என அறிந்து பெருமையடைகிறேன். 'ஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயலுகள' என்ற திருப்பாவையின் வரிக்கு நம்மூர் வளத்தினையே எடுத்துக்காட்டாக அன்றும் இன்றும் என்றும் கூறிப் பெருமிதம் அடைபவன் நான். நீயும் அதே பாணியில் எழுதியிருப்பது என்னைக் கவர்ந்தது. நான் 1962-63 இல் ஆதனூர் நடுநிலைப் பள்ளியில் பணியாற்றியபோது அப்பகுதி மாணவர்களிடம் பொதிந்திருந்த திறமைகளை எவ்வாறு வெளிக் கொணர்ந்தேன் என்பதை உன் அப்பாவைக் கேட்டுப்பார் தெரியும். உனது மாணவர்கள் இயற்கையிலேயே திறமை உள்ளவர்கள். அவர்களது அனைத்துத் திறமைகளையும் வெளிக்கொணர்ந்து மேம்பாடடையச்செய்யும் நல்ல முயற்சியில் ஈடுபட்டிருப்பது உனது தொழிலில் நீ ஏற்படுத்திக்கொண்ட கமிட்மெண்ட்டை காட்டுகிறது. மாணவர்களின் மனதைப் பக்குவப்படுத்தி ஆக்கபூர்வமான பணிகளில் ஈடுபடச் செய்வதில் நானும் ஈடுபடுவேன். இனி வெறும் போதனையாளர்களுக்கு மரியாதை கிடையாது. சாதனையாளர்களுக்கு தான் மரியாதை. எனவே நீ அனைத்து தரப்பினரின் அரவணைப்பையும் பெற்று மாணவர்களை ஆக்கபூர்வமான செயல்பாடுகளிலும் திறன் மிக்கவர்களாக நல்ல அனுபவ சாலிகளாக உருவாக்கு. எனது நல் வாழ்த்துகள் உனக்கு துணை நிற்கட்டும். 'என் கடன் பணி செய்து கிடப்பதே'
என்றும் அன்புடன்,
மு.கதிர்வேல்.

4 comments:

 1. thanks for sharing!ஆசிரியர் தின வாழ்த்துகள்!

  அவரது பக்குவத்தையும், மாணவர் சமூகம் மேல் அவ்ர் கொண்டிருந்த நம்பிக்கையையுமே காட்டுகிறது!!

  ReplyDelete
 2. ஆசிரியர் நாள் வாழ்த்துக்கள் அய்யா! தங்கள் அளப்பரிய பணிகளை நினைத்து வியக்காமல் இருக்கமுடியவில்லை. பொதுவாக இந்திய மாணவர்களுக்குக் கல்வி புகட்டி அயல்நாடுகளுக்கு ஏற்றுமதிசெய்யும் தொழிற்சாலைகளாகவே இருக்கின்றன நம் கல்வி நிறுவனங்கள். இந்நிலை மாற தங்களைப் போன்றவரது அரும்பெரும் பணிகள் நாட்டின் உடனடி தேவை. வாழ்க.

  ReplyDelete
 3. இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.
  அருமையானதோர் கடிதம். இந்நாளில் நான் ஆசிரியராக ஆவதற்கு எனக்கு உறுதுணை புரிந்த என் ஆசான்களை நான் நினைவு கூறுகின்றேன்.

  ReplyDelete