தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking

Saturday, February 7, 2015

சோவை தணிக்கை


கள்ளிப் பல்வித்துறையில் சோவைத்தணிக்கை ( நன்றி லூசுப்பையன்) என்றொரு தணிக்கை முறை உள்ளது. ஊதியம் பெற்று வழங்கும் அலுவலர் ஓய்வு பெறுவதற்கு முன் இந்த தணிக்கை முடியவேண்டும். அவ்வாறு ஒரு அலுவலர் ஓய்வு பெற்றார். அவர் பணிக்காலம் இரண்டு ஆண்டுகள். அந்த கால கட்டத்தில் அரசின் மூலம் கிடைத்த தொகை ஆண்டுக்கு 4000 என இரு ஆண்டுகளுக்கும் 8000. இந்த தொகையைத் தணிக்கை செய்வதற்காக வரும் தணிக்கையாளருக்கு ஓர் ஆண்டுக்கு 3000 ஆயிரம் என  6000 ஆயிரம் தரவேண்டுமாம். அது சிறிய அலுவலகம் என்பதால் அந்த சலுகையாம். பெரிதென்றால் தொகையும் அப்படியே..
சொன்னால் நம்ப மாட்டீர்கள். ஒரு மணிநேரத்தில் தணிக்கை முடிந்தது. பெறவேண்டியதைப் பெற்றுக்கொண்டு கிளம்பிவிட்டார். வெற்றிகரமாக தணிக்கை முடிந்தது.       2 மாதங்கள் கழித்து தணிக்கை அறிக்கை வந்தது. அதில் ஒன்றும் தணிக்கைத்தடை இருக்க வாய்ப்பில்லை என்றுதானே நினைக்கிறீர்கள். அதுதான் இல்லை அரசு பணத்திற்கான வட்டித்தொகை ரூ.10 எடுத்து செல்விடப்பட்டது தவறு அதனை அரசு கணக்கில் செலுத்த்வேண்டும் என்று குறிப்பு எழுதியுள்ளார். மிகப்பெரிய தவறு நடந்துவிட்டதே அரசு பணத்தை அரசு கணக்கில் செலுத்திவிடலாம் என்று எண்ணியிருந்த வேளையில் அருகிலுள்ள உயர் அலுவலரிடமிருந்து அறிவிப்பு ஒன்று வந்தது. இந்த தேதிக்குள் தணிக்கைத் தடைகளை சரி செய்து விவரங்களை உரிய படிவத்தில் 2 நகல்களில் ஒப்படைக்கவேண்டும் என்று. அடித்து பிடித்துக்கொண்டு அதற்கான செலுத்துச் சீட்டினைப் பெற்று (அதைப் பெற்று கணக்குத் தலைப்பினை தெரிந்து கொள்ள 2 நாட்கள் ஆனது) வங்கிக்கு சென்று கால் கடுக்க வரிசையில் நின்று 10 ரூபாய் அரசு பணத்தை அரசின் கணக்கில் செலுத்திவிட்டு அந்த செலுத்து சீட்டு, படிவம், தணிக்கை அறிக்கை இவ்வளவையும் இரு நகல் எடுத்து படிவத்தை நிரப்பி அலுவலகத்தில் ஒப்படைப்பதற்குள் போதும் ..போதும்.. என்றானது. 10 ரூபாயை திருப்பி செலுத்த ஆன செலவு 50ரூபாய். கொளத்தங்கிறிச்சி தாத்தா சொன்ன பழமொழிக்கு இப்போதான் பொருள் விளங்கியது. “வெடுப்புல உழுந்தது கார்ரூவா வெட்டியெடுத்தது முக்கார்ரூவா”
இதவிட ஒரு கேலிக்கூத்து எழுது பொருளுக்காக ஒரு ஆண்டுக்கு 75 ரூவா கொடுப்பாங்க அத வாங்குறதுக்கு எவ்வளவு செலவு ஆகும்னு நினைக்கிறீங்க. முழிக்க வேண்டாம் 100 ரூவாதான் ஆகும்.
இதையெல்லாம் மாத்தவே முடியாதா?

கொஞ்சம் யோசிங்க அதிகாரிகளே!

அரசுகணக்கிலே திருப்பி செலுத்துவதில் 100 ரூபாய் வரைக்குமாவது  விலக்கு அளிக்கக் கூடாதா?

எழுதுவதையே அன்றாடம் தொழிலாகக் கொண்ட அலுவலகங்களுக்காவது 1000 ரூபாய் கொடுக்கக் கூடாதா?
  

Saturday, December 20, 2014

பூமணியின் அஞ்ஞாடி நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது




இந்த ஆண்டின் (2014)  தமிழுக்கான சாகித்ய அகாடமி விருது பூமணிக்கு வழங்கப்பட்டுள்ளது. அவரது அஞ்ஞாடி நாவலுக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
தற்போது பரிசுபெற்றிருக்கும் அஞ்ஞாடி, க்ரியா பதிப்பகத்தால் 2012ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.
கரிசல்காட்டின் நூற்றி ஐம்பது ஆண்டு கால வரலாற்றை பின்னணியாகக் கொண்ட இந்த நாவலுக்காக 8 ஆண்டுகளுக்கும் மேலாக பூமணி ஆய்வுமேற்கொண்டார். கலைகளுக்கான இந்திய அறக்கட்டளை இந்த ஆய்வுக்காக கணிசமான தொகையை 2004ஆம் ஆண்டில் மானியமாக அளித்தது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டியில் 1947ல் பிறந்த பூமணியின் இயற்பெயர் பூ. மாணிக்கவாசகம்.
கரிசல்காடு என்று அழைக்கப்படும் கோவில்பட்டியைச் சுற்றியுள்ள பகுதியின் வாழ்க்கையை குறிப்பாக அப்பகுதியின் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை தன் படைப்புகளின் பின்னணியாகக் கொண்டிருந்தார் பூமணி.
இவரது முதல் நாவலான பிறகு வெளிவந்தபோது, இலக்கிய உலகில் பெரும் பரபரப்பையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியது.
பூமணி இதுவரை வெக்கை, பிறகு, வரப்புகள், வாய்க்கால், நைவேத்தியம், அஞ்ஞாடி உள்ளிட்ட நாவல்களையும் வயிறுகள், ரீதி, நொறுங்கல்கள் உள்ளிட்ட சிறுகதைத் தொகுப்புகளையும் வெளியிட்டிருக்கிறார்.
இவ்வளவு விரிவான ஆய்வில் அடிப்படையில் தமிழில் இதுவரை வேறு எந்த நாவலும் வரவில்லை என்கிறார் இதனை வெளியிட்ட க்ரியா பதிப்பகத்தின் பதிப்பாளர் எஸ் ராமகிருஷ்ணன்.
பரிசை வென்றிருக்கும் இந்த நாவலில் 1880களில் தமிழகத்தை உலுக்கிய தாது வருஷப் பஞ்சமும் தமிழகத்தில் அந்த காலகட்டத்தில் நிகழ்ந்த இரண்டு பெரும் ஜாதிக் கலவரங்களும் மிகச் சிறப்பாக பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன.
அடித்தட்டு மக்கள்தான் தன் படைப்புகளின் அடிநாதமாக இருக்கிறார்கள் என்கிறார் விருதை வென்றிருக்கும் பூமணி. ஆய்வுகளின் அடிப்படையில் படைப்புகளை உருவாக்க வேண்டும் என்ற போக்கு தமிழில் இல்லை என்ற கருத்தையும் முன்வைக்கிறார் அவர்.
தமிழ் இலக்கியத்தில் மனம் சார்ந்தே படைப்புகள் வெளிவந்துகொண்டிருந்த நிலம் சார்ந்து படைப்புகளை முதன் முதலில் முன்வைத்த எழுத்தாளர் பூமணிதான் என்கிறார் கவிஞரும் விமர்சகருமான எழுத்தாளர் சுகுமாரன்.
தற்போது கோவில்பட்டியில் வசித்துவரும் பூமணி, கருவேலம்பூக்கள் என்ற திரைப்படத்தையும் இயக்கியுள்ளார். இவருடைய வெக்கை நாவல் இந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
புவியரசு, சிவசங்கரி, ஈரோடு தமிழன்பன் ஆகியரைக் கொண்ட நடுவர் குழு பூமணியைத் தேர்வுசெய்த்து. இந்த விருது, மார்ச் 9ஆம் தேதி புதுதில்லியில் நடைபெறும் விழாவில் வழங்கப்படும்.

                                                                                                                           நன்றி :BBC


பூமணி (பிறப்பு - 1947, இயற்பெயர் - பூ. மாணிக்கவாசகம்.)
இவர் தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி அருகே உள்ள ஆண்டிபட்டி எனும் ஊரில் பிறந்தார். இவரின் தந்தை பூலித்துரை, தாய் தேனம்மை. பூமணி தேவேந்திர குல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர். இவர், தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத் துறை துணைப் பதிவாளாராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்
கரிசல் வட்டாரத்து வாழ்க்கையின் நுட்பங்களைத் தனது எழுத்தில் வெளிப்படுத்திய எழுத்தாளர். இவருடைய கல்லூரிக் காலத்தில் இவருக்கு விமர்சகர் சி. கனகசபாபதி ஆசிரியராக இருந்தார். எழுத்தாளர் கி.ராஜநாராயணன் பூமணியை சிறுகதைகள் எழுத ஊக்குவித்தார். 1971இல் பூமணியின் முதல் சிறுகதை ‘அறுப்பு’ தாமரை இதழில் வெளிவந்தது. அதன் பிறகு தாமரை ஆசிரியராக இருந்த தி. க. சிவசங்கரன் பூமணியை ஊக்குவித்தார்.
சிறுகதைத் தொகுப்புகள்
1.வயிறுகள்.
2.ரீதி.
3.நொறுங்கல்கள்.
புதினங்கள்
1.வெக்கை.
2.நைவேத்தியம்.
3.வரப்புகள்.
4.வாய்க்கால்.
5.பிறகு.
6.அஞ்ஞாடி
திரைப்படம்
கருவேலம்பூக்கள்
பெற்ற சிறப்புகள்
தேசிய திரைப்பட வளர்ச்சி நிறுவனத்துக்காக இவர் இயக்கிய கருவேலம்பூக்கள் திரைப்படம் பல முக்கிய உலகத் திரைப்பட விழாக்களில் பங்கு பெற்றது.
வெக்கை நாவல் இந்தியில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.
பெற்ற விருதுகள்
இலக்கியச் சிந்தனை பரிசு
அக்னி விருது
திருவனந்தபுரம் தமிழ்ச் சங்க விருது
இலக்கியத்துக்கான பங்களிப்புக்காக 2011க்கான விஷ்ணுபுரம் விருது

குழந்தைகளுக்கான வலைத்தளங்கள்

தமிழ்நாடு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (SCERT) சென்னையில் (18,19.12.2014) நடத்திய மாநில கருத்தரங்கில் அளித்த கட்டுரை இங்கே பதிவுசெய்யப்பட்டுள்ளது.

முன்னுரை
            தகவல் தொழில்நுட்பம் அபரிமிதமான வளர்ச்சி கண்டுள்ள இந்த நூற்றாண்டில் தகவல்கள் உள்ளங்கையில் கிடைக்கின்றன. இப்படிப்பட்ட சூழலில் பள்ளிக் குழந்தைகளை மின்னணு சாதனங்கள் அளவிற்கு பாட நூல்கள் கவர்வதில்லை. இதனால் பாட நூல்களை மட்டும் நம்பியுள்ள ஆசிரியர்கள் கற்பித்தலில் மிகப்பெரிய சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. புதிய தொழில்நுட்பங்களையும் அவற்றின் வாயிலாகக் கிடைக்கும் வளங்களையும் தெரிந்துகொள்வது இருபத்தொன்றாம் நூற்றாண்டு  ஆசிரியரின் கட்டாயத்தேவையாகிறது. அந்த வகையில் இந்த நூற்றாண்டில் தகவல் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள புரட்சியாகக் கருதப்படுகின்ற  இணையதளங்கள் வாயிலாக மாணவர்களும் ஆசிரியர்களும் கற்றல் கற்பித்தல் வளங்களை ஒரு சின்னஞ்சிறு கைபேசியின் வாயிலாக அமர்ந்த இடத்திலிருந்தே பெற்றுக்கொள்ள முடிகிறது. கலை, இலக்கியம், அறிவியல், விளையாட்டு, தொழில்நுட்பம் எனப் பல துறை சார்ந்த தகவல்களை இணையதளங்கள் வாயிலாகப் பெறமுடிகிறது. மாணவர்களுக்கு பயன்படக்கூடிய இணையதளங்கள் மற்றும் வலைப்பூக்களை சக ஆசிரியர்களோடு பகிர்ந்துகொளவதாக இந்த ஆய்வுக்கட்டுரை அமைந்துள்ளது.
  குழந்தைகளுக்கான வலைத்தளங்கள்
          குழந்தைகளுக்கான வலைத்தளங்களை கலை, இலக்கியம், அறிவியல், விளையாட்டு, தொழில்நுட்பம் என வகைப்படுத்தலாம்.

கலைகளுக்கான வலைத்தளங்கள்:
            குழந்தைகளைக் கவரும் கலைகளில் முதன்மையானது ஓவியக்கலை. ஓவியக்கலையை ஒரு ஓவியர் கற்றுத்தருவதைப்போல் ஒவ்வொரு கோடாக யாருடைய துணையுமின்றி கணினியின் முன் அமர்ந்து கற்றுக்கொள்ள வகை செய்கிறது http://www.unclefred.com என்ற இணையதளம். இந்த தளத்தில் பன்னிரண்டு வகை கார்ட்டூன் ஓவியங்களை வரையக்கற்றுக்கொள்ளலாம்.மேலும் ஓவியங்கள் வரையும் காணொளிக் காட்சிகளாகவும்  யூ ட்யூபில் கிடைக்கின்றன.
            http://www.drawingnow.com  இந்த தளம் ஒவ்வொரு படியாக ஓவியம் வரைய கற்றுத்தருகிறது.ஒரு எளிமையான வீடு படம் வரைய 12 படிநிலைகள் உள்ளன. நம் கண்முன்னே வரைந்து காட்டுகிறது.அதனைப்பார்த்து தனியாக தாளிலோ அல்லது கணினியிலோ வரைந்துகொள்ளலாம்.
            http://www.my-how-to-draw.com  இந்த தளத்தில் படிப்படியாக முன்னரே வரைந்து வைத்துள்ளனர் ஒவ்வொரு படியாகப் பார்த்து வரைய வசதி செய்யப்பட்டுள்ளது.
            http://www.cartooncritters.com  இந்த தளத்தில் ஓவியங்களை பல வகையில் அச்சு நகல் எடுத்து மாணவர்களுக்கு வழங்கி வண்ணம் தீட்டிட பயிற்சி அளிக்கலாம். புள்ளிகளை இணைத்து ஓவியம் வரைவதற்கும் பயிற்சிகள் இங்கே நிறைய உள்ளன.
            http://dev.neechalkaran.com கோல சுரபி என்னும் இத்தளம் தமிழ் ஆங்கிலம்,இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் ஆக்கப்பட்டுள்ளது. புள்ளிகள் எண்ணிக்கை அடிப்படையிலும் சதுரம், சாய் சதுரம் என்று வடிவங்களின் அடிப்படையிலும், வளைவுகள் கோடுகள் என கோடுகள் அடிப்படையிலும் கோலங்களைக் கற்றுத்தருகிறது இந்த தளம்.


கைவினைக் கலைகளுக்கான வலைத்தளங்கள்:
            http://www.kinderart.com இந்த தளத்தில் இரண்டரை வயது முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகளுக்கான கைவினைக் கலைகள் பல உள்ளன. ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பல வகையான பொருள்களை மறுசுழற்சி முறையில் கலைப்பொருளாக செய்வதற்கான பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. தாள் முதல் காலணி வரை எல்லாம் இங்கே கலைப்பொருள்களாக மாறுகின்றன. நம் குழந்தைகள் அவசியம் பார்க்கவேண்டிய தளம் இது.
             http://www.enchantedlearning.com  இந்த தளம் பல நூறு வகை கலைப்பொருள்கள் செய்யக் கற்றுக்கொடுக்கிறது. உறிஞ்சுகுழல், பலூன், களிமண், தாள் என எளிதில் கிடைக்கும் பொருள்களில் கலைப்பொருள்கள் செய்வதற்கான முறைகள் விளக்கப்பட்டுள்ளன.

இலக்கிய வலைத்தளங்கள்
            சிறுவர் பூங்கா:  http://siruvarpoonga.blogspot.in/  இது பரஞ்சோதி என்பவரால் பதியப்படும் வலைப்பூ. குழந்தைகளுக்கான கதைகள் நிறைந்து காணப்படுகின்றன.
            தினம் ஒரு சென்: http://zendaily.blogspot.in/ கங்கா அவர்களின் இந்த வலைப்பூவில் சென்கதைகள் மொழிபெயர்க்கப்பட்டு பதிவுசெய்யப்படுகிறது.
            குட்டிக்கதைகள் : http://tamil-kutti-kathaikal.blogspot.in
உதயகுமார் வெளியிடும் இந்த வலைப்பூ பல்வேறு மொழிகளில் வெளிவந்த நீதிக்கதைகளை மொழிபெயர்த்து பதிவுசெய்யப்படுகிறது.          http://tamilcomicsulagam.blogspot.in 200 க்கும் மேற்பட்ட (காமிக்ஸ்) படக்கதைகள் இந்தத் தளத்தில் உள்ளன.
          http://www.thamizham.net  பல அரிய நூல்கள், இதழ்களை ஒருங்கே தொகுத்துவைத்துள்ளார் பொள்ளாச்சி நசன். சிற்றிதழ் செய்தி என்ற இதழை நடத்தியவர். இதுவரை 30600 கோப்புகளைப் பதிவேற்றியுள்ளார். இது தமிழில் தனிநபர் செய்துள்ள மிகப்பெரிய ஆவணம் எனலாம். மாணவர்கள் அறிந்துகொள்ளவேண்டிய பல தகவல்கள் இந்த தளத்தில் உள்ளன.
          http://www.tamilsirukathaigal.comஈசாப் நீதிக்கதைகள்,பஞ்ச தந்திரக் கதைகள்,தெனாலிராமன் கதைகள், நீதிக்கதைகள் என பல வகைக் கதைகள் இந்த தளத்தில் உள்ளன.
            http://tamilarivukadhaikal.blogspot.inஅறிவுக்கதைகள், புதிய நீதிக்கதைகள், நகைச்சுவைக்கதைகள், சிந்தனைக்கதைகள் என பல்வகைகதைகள் 300க்கும் மேல் உள்ளன.

அறிவியல் வலைத்தளங்கள்
            http://www.ariviyal.in  இதன் ஆசிரியர் ராமதுரை தினமணி நாளிதழின் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். 2009-ல் சிறந்த அறிவியல் எழுத்தாளருக்கான தேசிய விருதைப் பெற்றவர்.இவர் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பயன்படும் வகையில் தமிழில் சிறந்த அறிவியல் கட்டுரைகளை எழுதியுள்ளார்.
            http://arivialnambi.blogspot.in அணு, அண்டம், கடவுள் துகள் என பல் சுவையான அறிவியல் செய்திகள் இத்தளத்தில் உள்ளன.
            http://www.tnkanitham.in சிவகங்கை மாவட்டத்தில் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றும் செந்தில் செல்வன் அவர்களின் கணினி வழி கணிதம் என்னும் இத்தளத்தில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அனைத்து பாடத்தலைப்புகளும் பவர் பாயிண்ட்டுகளாகவும் காணொளிக்காட்சிகளாகவும் காணக்கிடைக்கின்றன.
            http://sweatmaths.edublogs.org கணக்கும் இனிக்கும் என்னும் இந்த வலைத்தளம் இக்கட்டுரை ஆசிரியரால் உருவாக்கப்பட்டதாகும். வளரறி மதிப்பீடுகளுக்கான செய்ல்பாடுகள், கணித ஆய்வகம், கணிதவியலாளர்களின் வரலாறு,புதிர்கள், செயல்திட்டங்கள் ஆகியன இந்த தளத்தில் உள்ளன.



விளையாட்டுக்கான வலைத்தளங்கள்
            ஆடுபுலி ஆட்டம், http://dev.neechalkaran.com/p/aadu-puli.html  இந்த தளத்தில் உள்ளது. தமிழில் சொல் புதிர்கள் http://dev.neechalkaran.com/p/tamil-puzzle.html  இந்த இணைப்பில் உள்ளன.
            http://www.kidsgames.org  கல்வி, வேடிக்கை,நாடுகளும் கொடிகளும் போன்ற பலவகை விளையாட்டுகள் இந்த தளத்தில் உள்ளன.
            http://www.kidspsych.org  1 முதல் 9 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு பல் வகை விளையாட்டுகள் இங்கே கொட்டிக்கிடக்கின்றன.

தொழில் நுட்ப இணையதளங்கள்
            http://www.tamilinfotech.com/ கணினி, மென்பொருள்கள், சமூக ஊடகங்கள் போன்றவை பற்றி அறிந்துகொள்ள புதிய செய்திகள் பல உள்ளன.
            http://www.bloggernanban.com  தொழில் நுட்பம் சார்ந்து ஆயிரக்கணக்கான தகவல்கள் உள்ளன.
            http://arjunmathu.blogspot.in  மாணவர்களுக்கு உதவும் பயனுள்ள மென்பொருள்கள், பென் டிரைவ் சில பயனுள்ள தகவல்கள், பாய்ச்சல் கோட்டுப்படங்கள் ,ஹார்டு வேர்டு பிரச்சனைகளும் தீர்வுகளும்  போன்ற தொழில் நுட்பச்செய்திகள் நூற்றுக்கணக்கில் உள்ளன.

            http://www.mytamilpeople.in/   தகவல் தொழில் நுட்பம் தமிழர்களுக்காக தமிழில் என்ற முழக்கத்தோடு பல தகவல்கள் கணினியில் அழிந்த கோப்புகளை மீட்பது, மிகச்சிறந்த மென்பொருள்கள் , கணினி அகராதி போன்ற பயனுள்ள தகவல்கள் உண்டு.





முடிவுரை
            பாட நூல்களுக்கு வெளியே தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கும் படைப்பாற்றலுக்கும் வழிவகுக்கும் தளங்களை இக்கட்டுரை அறிமுகம் செய்திருக்கிறது.
            இருபத்து ஒன்றாம் நூற்றாண்டின் வகுப்பறை என்பது பாடநூல்களைத் தாண்டியும் விரிந்த தளத்தில் செயல்படவேண்டிய கட்டாயத்தில் உள்ளது என்பதை இந்த ஆய்வுக்கட்டுரை வலியுறுத்துகிறது.  அதற்கான தொடக்கமாக இந்த ஆய்வுக்கட்டுரை அமைந்துள்ளது.
            நூற்றுக்கணக்கான இணைய தளங்களை ஆய்வு செய்து அவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முப்பது இணையதளங்கள் மட்டுமே இங்கு அறிமுகப்படுத்தப்பட்டுளன.
            விரிவஞ்சி சில இணைய தளங்களைக் குறிப்பிட இயலவில்லை. இதில் குறிப்பிட்டுள்ள இணையதளங்களைப் பார்வையிடும் ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோருக்கு  பயனுள்ள இணையதளங்களை  தேடுவதற்குத் தூண்டுகோலாக இக்கட்டுரை அமையும்.
            இக்கட்டுரைக்காக இணையதளங்களை தேடியபோது இக்கட்டுரை ஆசிரியர் பெற்ற பட்டறிவின் விளைவாக கணக்கும் இனிக்கும் என்றொரு கல்விச் செயல்பாடுகளுக்கான வலைப்பூவை உருவாக்கியுள்ளார். இக்கருத்தரங்கின் நல் விளைவாக இதனைக் கருதலாம்.
           


Saturday, November 15, 2014

கிராமத்து விளையாட்டுகள்


விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84

விளையாட்டின் நோக்கம் _ உடற்பயிற்சியோ கேளிக்கையோ மட்டுமன்று; உடல், உள்ளம், ஆன்மா இவற்றின் பண்புகளை ஒருங்கிணைத்து மேம்படுத்துவதும்தான். இவற்றை வளர்ப்பதன் மூலம் தனி மனிதனிடம் குழு உணர்வை ஏற்படுத்தி அவனை சமூகத்தின் ஓர் அங்கமாகச் செய்யும் கடமையைச் செய்கிறது விளையாட்டு!
குழந்தைப் பருவம் என்பது ஓடி ஆடி விளையாட வேண்டிய பருவம். படிப்பு, நல்ல வேலை, வசதியான வாழ்க்கை என்பவை அவசியம்தான், ஆனால், விளையாட்டைத் தொலைத்துத்தான் வாழ்க்கையில் வெல்ல முடியும் என்றில்லை. மேற்படிப்பு கற்றுத் தரும் பல மேலாண்மைப் பண்புகளை விளையாட்டு எப்படி சிறுவயதிலேயே கற்றுத் தருகிறது என்பதை இந்த நூல் சுட்டிக்காட்டுகிறது.
சமூகமாக மனிதன் கூடி வாழ வேண்டும்; வலியோரிடமிருந்து எளியோரைக் காக்க வேண்டும்; சக மனிதர்களுக்கு விட்டுக் கொடுக்க வேண்டும் என்பது போன்றவற்றை, சிறு வயதில் விளையாட்டு மூலம் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள் என்பதை இந்த நூலில் பதிவு செய்துள்ளார் நூலாசிரியர் இரத்தின.புகழேந்தி.
சமூகத்தின் அரிய பொக்கிஷமாக இருக்கும் விளையாட்டுகள் நகர்மயமாதல், உலகமயமாக்கல் போன்ற காரணங்களால், காலப்போக்கில் குறைந்து வருவதை நூலாசிரியர் மிகுந்த ஆதங்கத்தோடு பதிவு செய்திருக்கிறார்.
இந்த நூலில், நம் நாட்டின் பாரம்பரிய விளையாட்டுகள் ஒவ்வொன்றும் நான்கு பகுதிகளாகத் தரப்பட்டுள்ளன. விளையாட்டு எப்போது எவரால் விளையாடப்படுகிறது, அதன் விதிகள் என்னென்ன, பண்டைய இலக்கியங்களில் இந்த விளையாட்டைப் பற்றிய குறிப்புகள் என்ன இருக்கிறது, இந்த விளையாட்டை விளையாடுவதால் கிடைக்கும் பலன்கள் என்ன ஆகியவற்றை இந்த நூல் சுவாரசியமாகச் சொல்கிறது.
இதன் மூலம், கிராமிய விளையாட்டுகளின் நுட்பங்களையும், அதன் மூலம் கற்றுக் கொள்ளப்படுபவற்றையும், சங்க இலக்கியங்கள், தமிழ்ச் சான்றோர்களின் கருத்துகள், கள ஆய்வுச் செய்திகள் ஆகியவற்றையும் நாம் அறிந்துகொள்கிறோம்.
படித்து, நாம் மனக்கண்ணில் பதிவு செய்துகொள்ளும் விளையாட்டுகள், தகுந்த படங்கள் மூலம் நம் புறக்கண்களுக்கும் விருந்தாக அமைந்துள்ளது, இந்த நூலின் சிறப்பு.

http://books.dinamalar.com/details.asp?id=21273#

Friday, September 19, 2014

மாதவிடாய் இது ஆண்களுக்கான பெண்களின் படம்

எனக்கு ஒரு மின்னஞ்சலில் வந்த இந்த விமர்சனத்தை இங்கே பதிவிடுகிறேன்.

“எந்நாடு போனாலும்
தென்னாடுடைய சிவனுக்கு
மாதவிலக்கான பெண்கள் மட்டும்
ஆவதே இல்லை”
      - கவிஞர் கனிமொழி

மாதவிலக்கு எனப்படும் மாதவிடாய் குறித்து ஓர் ஆவணப்படம் வெளிவந்திருக்கிறது. கீதா இளங்கோவன் அந்த ஆவணப்படத்தை இயக்கி வெளியிட்டுள்ளார். புனிதங்களும், தீண்டாமைகளும் உடைத்து நொறுக்கப்பட்டுக் கொண்டிருக் கின்ற சூழலில், பெண்ணின் மீது இந்தச் சமூகம் ஏற்றி வைத்தி ருக்கின்ற தீண்டாமையான மாதவிடாய் பற்றிய கருத்தாக்கங் களையும், மருத்துவர்களின் அறிவியல் சார்ந்த ஆலோசனை களையும் இப்படத்தில் பதிவு செய்திருக்கிறார். இதில் இடம் பெற்றுள்ள, “இது ஆண்களுக்கான பெண்களின் படம்” என்னும் தொடர், நோக்கத்தைத் தெளிவுபடுத்துகிறது.
பெண்ணின் உடலில் இயற்கையாக ஏற்படும் ஒரு மாதாந்திர நிகழ்வைக் குறித்து, 21ஆம் நூற்றாண்டிலும் மக்களிடையே நிலவும் மூடநம்பிக்கைகளையும், அறியாமையையும் வேதனையுடன் கீதா பதிவு செய்திருக்கிறார். சமூகத்திற்குச் சொல்ல வேண்டிய, பெரும்பான்மையும் சொல்லத் தயங்குகின்ற செய்தியைச் சிறப்பாகச் சொன்ன மாதவிடாய் படத்தின் இயக்குனர் மற்றும் அவருடைய குழுவினருக்கு நம்முடைய பாராட்டுகளும், வாழ்த்துகளும்.
ஓர் உயர் நிலைப்பள்ளி மாணவியிடம், ‘மாதவிடாய்னா என்னம்மா?’ என்று கேட்கப்படுகிறது. அந்த மாணவியிடம், வெட்கமும், தயக்கமும்தான் விடையாக வெளிப்படுகின்றன. பள்ளி இறுதி ஆண்டுகளில் நிற்கின்ற அந்தப் பெண் குழந்தை, படித்து முடித்ததும், மேற்படிப்புக்குப் போகலாம் அல்லது மணவாழ்க்கைக்குள்ளும் தள்ளப்படலாம். ஒரு வேளை அந்தப் பெண் திருமணம் செய்து கொடுக்கப்பட்டால், தன் உடலைப் பற்றிய அடிப்படை மாற்றங்கள் கூடத் தெரியாத நிலையில், எப்படி அந்த வாழ்க்கையை எதிர்கொள்வாள்? இத்தனை ஆண்டுகள் அவளுக்குக் கற்பிக்கப்பட்ட கல்வி வேறு என்னதான் அவளுக்குச் சொல்லிக் கொடுத்தது?
மற்றொரு மாணவியிடம், “வயசுக்கு வந்தப்போ உங்கம்மா, என்ன சொல்லிக் கொடுத்தாங்க?” என்று கேட்கப்படுகிறது. ‘வெளியில போக்கூடாது, பூஜ ரூம் பக்கமா வரக்கூடாது, குங்குமம் வச்சிக்கக்கூடாது, வெறும் பொட்டுதான் வச்சிக்கணும், ஆடாம, ஓடாம, பொம்பளப் புள்ளயா அடக்க ஒடுக்கமா இருக்கணும். அந்த மாதிரி நாள்ல பள்ளிக்கூடம் வரும்போது, கையில இரும்புத் துண்டு, இல்லன்னா துடைப் பத்தை மடிச்சிக் கையில கொடுத்தனுப்புவாங்க’ என்று பதில் வருகிறது. ஆக, பள்ளிக் கூடத்திலும், மாதவிடாய் பற்றி அறிவியல் சார்ந்த விழிப்புணர்வு கிடைப்பதில்லை, வீடுகளிலும் மூடநம்பிக்கை சார்ந்த கருத்துகளே திணிக்கப்படு கின்றன.
அறிவியல் பயிற்சியாளர், ‘மாதவிடாய் பத்தி விளக்கமா சொல்லும்போது, பிள்ளைங்க வெக்கப்படுதுக. 10, 11, 12ஆம் வகுப்புலயே, அறிவியல் பாடத்துல, ஆண், பெண் இனப்பெருக்க உறுப்புகள், மண்டலங்கள் இதெல்லாம் படத்தோட வருது. ஆனா டீச்சருங்களே நடத்த அசிங்கப்பட்டுட்டு, நீங்களே வாசிச்சி தெரிஞ்சிக்குங்கன்னு சொல்லிட்டுப் போயிடுறாங்க அப்படீன்னு அந்தப் பிள்ளைக சொல்லுதுக’ என்கிறார். பிறகு எப்படி இது குறித்து விழிப்புணர்வு ஏற்படும்?
தொடக்கப்பள்ளி நிலையிலிருந்தே பாலியல் கல்வி பாடத்திட்டத்தில் இணைக்கப்பட வேண்டும். கலாச்சாரக் காவலர்கள் கூச்சலிடுவதுபோல், பாலியல் உறவுகளை வகைப்படுத்துகின்ற கல்வியன்று, பாலியல் கல்வி. மனித உடல் அமைப்பு, உடல் உறுப்புகள், உடலியல் மாற்றங்கள் குறித்து, ஆரோக்கியமான முறையில் கற்றுத் தரப்படும் அறிவியல் கல்வியே பாலியல் கல்வி. ஆண், பெண் இருபாலருக்கும் மிகவும் இன்றியமையாத கல்வி & பாலியல் கல்வி.
இந்தப் படத்தில், பெண்கள், இளம்பெண்கள், ஆண்கள் சொல்லி யிருக்கின்ற மாதவிடாய் குறித்த கற்பிதங்கள், உடலியல் கல்வி & பாலியல் கல்வியின் தேவைக்குச் சான்றுகளாக இருக்கின்றன.
கூவிலபுரம் என்னும் ஊரில், மாதவிலக்கின் போது பெண்கள் நடத்தப்படும் விதம், தீண்டாமைக் கொடுமையின் உச்சம். ஊருக்கு ஒதுக்குப்புறத்தில், மாதவிலக்கானவர்கள், பிள்ளை பெற்றவர்கள் தங்குவதற்காகத் தனி வீடே வைத்திருக்கிறார்கள். கைக்குழந்தை வைத்திருப்பவர்கள்கூட, மாதவிலக்கின் போது, பச்சைக் குழந்தையைப் பிரிந்து, தனியாக அந்த வீட்டில்தான் இருக்க வேண்டுமாம். ‘வீட்டிற் குள்ளேயே இருந்து விட்டால், யாருக்கும் தெரியாமல் போய்விடும். இப்படித் தனி வீட்டில் வைப்பதால், ஊருக்கே தெரிந்துவிடுகிறது.  பசித்தாலும், தாகம் எடுத்தாலும், யாராவது அந்தப் பக்கமாக வந்தால்தான் சோறோ, தண்ணீரோ கிடைக்கும். பிச்சை எடுப்பதுபோல, கையேந்திச் சாப்பிட வேண்டியிருக்கிறது’ என்று அவமானத்தில் குமுறுகிறார் ஓர் இளம்பெண். அந்த நேரத்தில் பயன்படுத்தப்படும் பாத்திரங்களை மூட்டையில் கட்டி, ஒரு மரத்தில் தொங்கவிட்டிருக்கிறார்கள். அதைப் பார்க்கும் நமக்கு, பெண்களின் தன்மானத்தைத் தூக்கில் தொங்கவிட்டது போலத் தெரிகிறது.
மருத்துவ ரீதியான விளக்கங்களும், எளிமையான சொற்களில், துறை சார்ந்த மருத்துவர்களைக் கொண்டு பதிவு செய்யப்பட்டுள்ள விதமும் அருமை. பள்ளி ஆசிரியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோரின் கருத்துகளும் விழிப்புணர்வூட்டுபவையாக உள்ளன.
மாதவிடாயின் போது வெளிப்படும் ரத்தத்தில் உள்ள ஸ்டெம்செல்கள் 78 வகையான இரத்த சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்தக் கூடியவை என்று கண்டறியப் பட்டுள்ளது. மாதவிடாய் ரத்தத்தைச் சேமிக்கும் வங்கிகளும் இருக்கின்றன என்ற செய்தியையும் தருகிறது இப்படம்.
மாதவிடாய் ரத்தத்தை உறிஞ்சுவதற்குத் துணிகளைப் பயன்படுத்திய நிலை மாறி, இன்று பஞ்சுப் பட்டைகள் கடை களில் கிடைக்கின்றன. ஆனாலும் சரியான கழிப்பறை வசதிகள் இல்லாத காரணத்தால், இச்சமயங்களில் பெண்களின் நிலை மிகவும் சிக்கலானதாக இருக்கிறது.
சமூகத்தில் ஆண்கள் & பெண்கள், படித்தவர்கள் & படிக்காதவர்கள் என அனைத்துத் தரப்பினரிடமும், மாதவிடாய் தொடர்பான மூடநம்பிக்கைகளும், அறியாமையும் மண்டிக் கிடப்பதை இப்படம் ஆழமாகப் பதிவு செய்திருக்கிறது. தலைவலி, காய்ச்சல் வந்தால் சொல்வது போன்று, மாதவிடாயின் போது ஏற்படும் வலிகளைப் பெண்கள் வெளிப்படையாகச் சொல்வ தில்லை. மருந்துக்கடைகளில் ஆணுறையை எந்தத் தாளிலும் மறைக்காமல் எடுத்துக்கொடுக்கும் கடைக்காரர், பெண்கள் மாத விடாய்ப் பஞ்சுப் பட்டைகளை வாங்கும்போது, செய்தித்தாளில் வைத்துச் சுருட்டி, கருப்புப் பாலித்தீன் பையில் போட்டு ரகசியமாகத்தான் கொடுக்கிறார். இரண்டையுமே மறைக்க வேண்டியதில்லை. உடம்பிலிருந்து வெளியேறுகின்ற ரத்தக் கழிவுகள் சம்பந்தப்பட்டவைதானே இவைகள்.

நம் சமூகத்தில், பலவற்றை மதங்கள் மறைத்து வைத்துப் புனிதம் என்கின்றன அல்லது ஒதுக்கி வைத்துத் தீட்டு என்கின்றன. இரண்டுமே இல்லை என்கிறது அறிவியல். மாதவிடாயின் மீது கட்டப்பட்டுள்ள கற்பிதங்களை உடைக்கின்ற சிற்றுளியாக இப்படம் இருக்கிறது.
                                          மாதவிடாய் ஆவணப்பட இயக்குநர் தோழர் கீதா


நன்றி

naalaividiyum@gmail.com
இரா.உமா

Thursday, August 7, 2014

உங்களுக்கு தெரியுமா? எல்லோருக்கும் சொல்லுங்கள்

ஸ்ரீ விஜயலட்சுமி பொதுநல அறக்கட்டளை
-----------------------------------------------------------
107-A செங்குப்தா வீதி , ராம்நகர், கோவை-641009
போன்-0422-2236633, 2236644
தமிழகம் முழுவதும் உள்ள தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு
ஸ்ரீ விஜயலட்சுமி பொதுநல அறக்கட்டளை 1990 ஆம் ஆண்டுமுதல் +1 , +2 , மற்றும் கல்லூரி படிப்பு தொடரும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.
3.03.2013நாளிதழ்கள் மூலமாக தமிழகம் முழுவதும் உள்ள "நகராட்சி,மாநகராட்சி மற்றும் அரசு பள்ளிகளில்" 2012-2013 கல்வியாண்டில் +2 வகுப்பு முடித்து 90 %(1080/1200) மதிப்பெண் பெற்றிருந்தால் அவர்களது கல்லூரி படிப்பிற்கான முழு உதவிதொகையை (வருடத்திற்கு அதிகபட்சம் ரூ ஒரு இலட்சம்) அறக்கட்டளையே ஏற்றுக்கொள்ளும் என்பதை அறிவித்திருந்தோம்.
இந்த செய்தி , தினசரி பத்திரிகை வாங்கி கூட படிக்க முடியாத கிராமங்களில் உள்ள ஏழை-எளிய மாணவர்களுக்கு சரியாக சென்றடையாமல் இருக்க வாய்ப்பு உள்ளது. எனவே அனைத்து நகராட்சி,மாநகராட்சி மற்றும் அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் தங்களது பள்ளியில், தகுதியான மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு முழு உதவிதொகையை (வருடத்திற்கு அதிகபட்சம் ரூ ஒரு இலட்சம்) குறித்து தெரிவித்து பயனடைய செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்
இங்ஙனம்
ஒ. ஆறுமுகசாமி, நிறுவனர்
--------------------------------------------------------------------------------------
அன்பு நண்பர்களே இத்தகவலை தங்கள் வலைப்பக்கத்திலும்,நேரடியாகவும் , மற்றும் தங்களுக்கு தெரிந்த வழிகளில் பயனுறு மாணவர்களுக்கு சென்றடையும் வகையில் பரவ செய்யுங்கள் .
இந்த அறக்கட்டளை கோவையை சுற்றி உள்ள நான்கு மாவட்ட மாணவர்களுக்கு கடந்த பல ஆண்டுகளாக மதம்,மொழி இனம் ஜாதி கடந்து உதவி வருகிறது.
இவ்வுதவிதொகை பெறுவதற்காக கோவைக்கு வரும் மாணவர்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் எனது தொலைபேசியில் அழைக்கலாம்....
அன்புடன் கார்த்திகை மைந்தன்

Friday, July 25, 2014

நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் பாராட்டு விழா

நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் ஒவ்வொரு நாளும் ஒரு எழுத்தாளரை பாராட்டி பரிசளிக்கின்றனர்.
இந்த ஆண்டு எனக்கும் அந்த வாய்ப்பு கிடைத்தது. அந்த விழா காட்சிகளை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.
 மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றல்
 பாராட்டு சான்று வழங்கல்
 பொற்கிழி வழங்கல்
 எழுத்தாளர் ஜீவகாருண்யன் எழுதிய வள்ளலாரின் வாழ்க்கைவரலாறு காவியம்
எனது ஏற்புரை.