தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking

Monday, December 30, 2024

பெங்களூரு நினைவுகள்


1988 ஆம் ஆண்டு ஆசிரியர் பயிற்சி பெற்ற போது பெங்களூரு சுற்றுலா சென்று இருக்கிறேன். மகளை மைசூர் அழைத்துச் சென்ற போது ஒரு முறை, இப்போது மகன் இளவேனிலுடன் அரையாண்டு விடுமுறையை செலவிடலாம் என்று மூன்றாவது முறையாக சென்று வந்தோம். ஒவ்வொரு பயணமும் ஏதாவது ஒரு புதிய அனுபவத்தை நமக்கு கற்றுத் தருகிறது. 


தொடர்வண்டிப் பயணம் சில புதிய அனுபவங்கள்:

விருத்தாசலத்தில் இருந்து பெங்களூருக்கு நேரடி தொடர் வண்டி உள்ளது ஆனால் அதிக நேரம் பயணிக்க வேண்டி இருக்கும் என்பதால் சேலம் வரை பயணிகள் தொடர்வண்டியிலும் அங்கிருந்து விரைவு வண்டியிலுமாக பயணத்தை திட்டமிட்டு இருந்தோம். ஆனால் அதுவும் கால தாமதத்தால் நெடும் பயணமாகவே அமைந்துவிட்டது. நாங்கள் செல்ல வேண்டிய இடம் கே ஆர் புரம். அதைக் கடந்தே நாங்கள் பயணித்த தொடர் வண்டி சென்றது ஆனாலும் அங்கு நிறுத்தம் இல்லை என்பதால். கே எஸ் ஆர் சென்று அங்கிருந்து மெட்ரோவில் கே ஆர் புரம் வந்து சேர்ந்தோம். சேலத்தில் நாங்கள் காத்திருந்த நேரத்தில் இரண்டு வந்தே பாரத் தொடர்வண்டிகள் பெங்களூர் சென்றன அவை இரண்டுமே கே ஆர் புறத்தில் நின்று செல்வதாக அறிவித்தார்கள். வந்தே பாரத்தான் எங்கும் நிக்காது என்று கேள்விப்பட்டிருக்கிறோம் ஆனால் அதுவே நிற்கிறது ஆனால் நாங்கள் சென்ற மும்பை எக்ஸ்பிரஸ் அங்கு நில்லாமல் சென்றது தான் வேடிக்கை. இந்த அனுபவத்தால்

ஊருக்கு திரும்பும் போது 2:20 க்கு தொடர்வண்டி. நாங்கள் கே.ஆர் புரத்திலிருந்து மெட்ரோவில் கே எஸ் ஆர் வரவேண்டும் என்பதால் பெங்களூர் டிராஃபிக்கை கருத்தில் கொண்டு 12 30 க்கு வீட்டில் இருந்து கிளம்பி விட்டோம். 

மகன் ரேப்பிடோவில் ஆட்டோ பதிவு செய்துவிட்டு எங்களுக்காக கே ஆர் புரம் மெட்ரோவில் காத்திருந்தார். ஆனால் ஆட்டோ அதை என் தாண்டி கே ஆர் புரம் தொடர்வண்டி நிலையத்தில் கொண்டு வந்து விட அப்போதே பி.பி. எகிரத் தொடங்கியது. மீண்டும் எங்களை மெட்ரோவில் விட்டு விடுங்கள் என்று கேட்க அது ஒரு வழி பாதை செல்ல முடியாது என்ற மறுத்துவிட்டார். மகன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஏனப்பா இவ்வளவு தாமதம் என்று கேட்க தகவலை சொன்னதும் சாலையைக் குறிப்பிட்டு நாங்கள் இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தார். நல்ல வேலையாக தொடர் ஒன்றின் நிலையத்திற்கும் மெட்ரோ நிலையத்திற்கும் இணைப்பு பாதை ஒன்று இருந்தது அது வழியாக நிலையத்தை அடைந்தோம். மெட்ரோவுக்கான பயணச்சீட்டு வாட்ஸப்பில் பதிவு செய்யும் வசதியை ஏற்படுத்தி உள்ளனர். அதில் பதிவு செய்து அந்த க்யூ ஆர் கோடை எனக்கு அனுப்ப அதனைப் பயன்படுத்தி கே எஸ் ஆர் வந்து சரியான நேரத்தில் தொடர் வண்டியில் அமர்ந்தோம். வண்டி காலியாகவே இருந்தது. பிறகு தான் தெரிந்தது இந்த வண்டி கே .ஆர் புறத்தில் நிற்கும் என்பது. இது தெரிந்திருந்தால் இன்னும் இரண்டு மணி நேரம் கழித்து பொறுமையாகக் கிளம்பி இருப்போம். தொடர்ச்சியாக ஏமாந்து கொண்டிருக்கிறோமே கொஞ்சம் ஏச்சரிக்கையாக இருப்போம் என்று போகும்போது தொடர்வண்டி தாமதமாக சென்றது போல் இந்த வண்டியின் தாமதமாக சென்றால் நாம் சேலத்திலிருந்து பயணிகள் தொடர்வண்டிக்கு சீட்டு வாங்குவது கடினம் ஆகிவிட்டால் என்ன செய்வது என்று யோசித்து யூடிஎஸ் செயலியை பதிவிறக்கம் செய்து பயணிச்சிட்டை பதிவு செய்யலாம் என்று தேடிய போது பயணம் தொடங்குவதற்கு 3 மணி நேரம் முன்பாக மட்டுமே பதிவு செய்ய முடியும் என்று தகவல் தந்தது. அந்த நேரத்துக்காக காத்திருந்து பதிவு செய்ய முற்பட்டபோது இரண்டு வகையான பதிவு முறை அதிலுள்ளது. ஒன்று பேப்பர்லெஸ், மற்றொன்று பதிவு செய்து சீட்டை அச்சடித்துக் கொள்ள வேண்டும். சரி நாம் எங்கிருந்து அச்சு எடுப்பது என்று பேப்பர்லெஸ்க்கு முயற்சித்தேன். நீங்கள் தண்டவாளத்திலிருந்து 12 மீட்டர் தொலைவில் தான் பதிவு செய்ய முடியும் என்று தகவல் வந்தது. அச்சடிக்கும் முறை எங்கிருந்து வேண்டாலும் பதிவு செய்யலாம். ஆனால் அச்சடித்த சீட்டை காட்ட வில்லை என்றால் அது பயணச்சீட்டு இல்லாமல் பயணிப்பதற்கு நிகரான தண்டனைக்குரிய குற்றம் என்கிற எச்சரிக்கையும் வழங்கியது. சரி ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வைத்துக் கொள்வோம் எப்படியாவது சமாளித்து விடலாம் என்று எண்ணி அந்த முறையில் பதிவு செய்தேன். வழக்கமான முறையில் நாமே அச்சடிக்க வேண்டும் அதை பிடிஎஃப் ஆக சேகரித்து வைத்துக் கொள்ளலாம் என்று எண்ணி பதிவு செய்தால் அப்படி ஒரு ஆப்ஷன் வரவே இல்லை. ஒரே ஒரு குறிப்பு எண் மட்டும் வந்தது. இந்த எண்ணை கொண்டு பயணச்சீட்டு வழங்கும் இடத்தில் அச்சடித்துக் கொள்ள வேண்டும் என்று தகவல் குறுஞ்செய்தியாக வந்தது. இதற்கு நேரடியாக சீட்டு வாங்கி இருக்கலாமே என்று நினைத்துக் கொண்டேன். சரி என்ன ஆனாலும் பார்த்துக் கொள்வோம் என்ற குருட்டு தைரியம். ஒரு வழியாக சேலத்தை வந்து அடைந்தோம். எங்கள் வண்டி கிளம்புவதற்கு இன்னும் 20 நிமிடங்கள் இருந்தன. இந்த சீட்டு அச்சடிப்பதை என்ன என்று பார்த்து விடுவோம் என்று ஒரு இயந்திரத்தில் சீட்டு வழங்கிக் கொண்டிருந்தவரை அனுப்பி கேட்டபோது பக்கத்தில் இருந்த இயந்திரத்தை கையைக் காட்டி அதில் எடுத்துக் கொள்ளுங்கள் என்றார். அதில் நமது தொலைபேசி எண்ணையும் நமக்கு குறுஞ்செய்தியாக வந்த குறிப்பு என்னையும் உள்ளீடு செய்தால் நமக்கான சீட்டு அச்சிட்டு கிடைத்தது. உள்ளிருந்த வடிவேல் அண்ணே இது புதுசா இருக்குண்ணே என்றார். பயணிகள் ரயிலில் இரண்டு பேர் அமரும் இருக்கையில் நடுவில் பையை வைத்துக்கொண்டு இரண்டு இரண்டு பேராக அமர்ந்து கொண்டிருந்தனர். அவர்களிடம் சண்டை போட்டு இடத்தைப் பிடிக்க வேண்டியதாயிற்று. பெங்களூர் மெட்ரோ விலோ பெரியவர்களுக்கு இளைஞர்கள் எழுந்து இடம் கொடுக்கின்றனர்.

பணியாளர் நேய ஜுனிப்பர் அலுவலகம்: 

மாலை 3:40 க்கு செல்ல வேண்டிய பெங்களூர் தொடர்வண்டி 3 மணி நேரம் தாமதமாக 7: 40க்கு சென்றதால் முதல் நாள் எங்கும் வெளியில் செல்ல இயலவில்லை. மறுநாள் காலை மகன் பணியாற்றும் ஜூனிப்பர் இந்தியா நெட்வொர்க் அலுவலகத்திற்கு சென்றோம். எங்களைப் பார்வையாளராக பதிவு செய்து அடையாள அட்டை பெற்றால் தான் அலுவலகத்தினுள் செல்ல இயலும். அங்கு பார்வையாளராக பதிவு செய்ய வேண்டும் என்றால் முன்பே மின்னஞ்சல் அனுப்பி ஒப்புதல் பெற வேண்டுமாம். ஆனால் மகனின் மேலாளர் வந்ததும் பெற்றுக் கொள்ளலாம் என்று கூறிவிட்டார். ஆனால் அவர் அன்று விடுப்பில் சென்றுவிட்டார். அப்போதே அவருக்கு மின்னஞ்சல் அனுப்பி தொலைபேசியில் அழைத்து அந்த மின்னஞ்சலை ஏற்கும்படி கேட்க அவர் ஒப்புதல் கிடைத்ததும் தொடுதிரை கணினியில் விசிட்டர்ஸ் பாஸ்க்கான விண்ணப்பத்தை நிரப்பினோம். அடுத்த வினாடியில் எங்கள் பெயர் அச்சிடப்பட்ட இரண்டு ஸ்டிக்கர்கள் வழங்கினார்கள். அந்த சட்டையில் ஒட்டிக்கொண்டு அலுவலகத்தை சென்றடைந்தோம். அங்கிருக்கும் கேண்டினில் காலை உணவை முடித்தோம். மகன் பணியாற்றும் இடம், அவர் அணியினர் பணியாற்றும் இடம் ,அலுவலகத்தில் உள்ள விளையாடும் இடம், ஓய்வெடுக்கும் இடம் 

( பணியின் போது களைப்பாக இருந்தால் படுத்து உறங்கும் வகையில் கட்டில் மெத்தைகள் குளிரூட்டப்பட்ட அறையில் அமைத்திருந்தனர்) பணியாற்றும் பெண்களின் குழந்தைகளை பார்த்துக் கொள்ளும் இடம் அனைத்தையும் சுற்றி காட்டினார். மாலையில் பெங்களூருவில் புகழ் பெற்ற உணவு தெருவுக்கு சென்றோம்.

விழாக்கோலம் கொண்ட உணவுச் சாலை: பசவனகுடி விஸ்வேஸ்வர புரா வில் அமைந்துள்ள இந்த உணவுத் தெருவில் தென்னிந்திய வட இந்திய உணவுகள் உள்ளூர் சிறப்பு உணவுகள் சீன உணவுகள் என அனைத்து வகையான உணவுகளும் விற்கப்படுகிறது. மாலை 6:00 மணிக்கு திருவிழா போல் மக்கள் கூட்டம் கூட்டமாக குடும்பம் குடும்பமாக வந்து அவரவர்க்கு பிடித்த உணவை வாங்கி சாப்பிட்டு செல்கின்றனர். கோயிலுக்கு சென்று வழிபடுவதைப் போல கன்னட மக்கள் இதனை கருதுவதாக விக்கிபீடியா குறிப்பிடுகிறது. ஸ்மோக்கிங் ஐஸ்கிரீமும் பொட்டேட்டோ டிவிஸ்ட்டும் சாப்பிட்டு அந்த தெருவை வலம் வந்தோம். 


பெங்களூரு புத்தகத் திருவிழா: 

கர்நாடக மாநில பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு நடத்தும் பெங்களூரு புத்தகத் திருவிழாவில் என் கெழுதகை நண்பர் கவிஞர் தமிழ் இயலன் அவர்களின் “சங்க காலக்குரல்கள்” நூல் வெளியீட்டு விழாவில் குடும்பத்தோடு கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினேன். கலந்துரையாடுவோம் பேரவை வாயிலாக அறிமுகமாகி இருந்த நண்பர் ஜானகிராமன் அவர்களைச் சந்தித்தோம். அவர் விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் நூல்களைப் பரிசாக வழங்கி மகிழ்ந்தார். 


மறுநாள் மகள் பரிந்துரைத்த இஸ்கான் டெம்பிள் (ISKCON)International Society for Krishna Consciousness சென்றோம்.

கர்நாடகத்தில் ஒரு திருப்பதி:

இந்த வளாகத்தில் ஆறு கோயில்கள் அமைந்துள்ளன. இராமர், ராதாகிருஷ்ணர், வெங்கடாஜலபதி ஆகிய மூன்றும் முக்கியமான தெய்வங்களாக மக்களால் பார்க்கப்படுகிறது. திருப்பதியில் அமைந்துள்ளது போலவே வெங்கடாசலபதி திருவுருவம் அமைக்கப்பட்டுள்ளது. கோயில் வளாகம் மிகவும் தூய்மையாக பராமரிக்கப்படுகிறது. சிறிய மலை மீது கோயில் அமைந்துள்ளது. கோயிலுக்கு என்று ஒரு குளம் சுற்றிலும் மரங்கள் என்ற இயற்கை சூழ கண்ணுக்கு குளிர்ச்சியாக அமைந்திருந்தது. அங்கிருந்து அடுத்தது கப்பன் பார்க் சென்றோம். 


154 வயது பூங்கா:

1870 ஆம் ஆண்டு 100 ஏக்கர் பரப்பளவில் தொடங்கப்பட்ட இந்த பூங்கா இன்று 200 ஏக்கர் பரப்பளவாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இது ஒரு பூங்காவாக மட்டுமல்லாமல் பல தரப்பு மக்களின் ஒன்று கூடும் இடமாகவும் அமைந்துள்ளது. இசைக் கலைஞர்கள் நடன கலைஞர்கள் எழுத்தாளர்கள் விலங்கு பிரியர்கள் பறவை பிரியர்கள் மரத்தை பற்றிய ஆய்வாளர்கள் என அனைவருக்கும் இந்த பூங்கா புகலிடமாக அமைந்துள்ளது. பூங்கா 19 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. முக்கியமான கட்டடங்கள் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. 196 வகையான தாவரங்களும் மரங்களும் இந்த பூங்காவில் உள்ளன. இந்த பூங்காவுக்கு என்று ஒரு கைபேசி செயலி உருவாக்கப்பட்டுள்ளது பூங்காவை பற்றிய முழு விவரங்களும் அந்த செயல் வழியாக நாம் அறிந்து கொள்ளலாம். 

https://play.google.com/store/apps/details?id=com.flipp

ar.cubbonpark





No comments:

Post a Comment