மகாத்மா காந்தி ஒரு பன்முக ஆளுமை. அவர் பலதுறைகளிலும் தனது பங்களிப்பை செய்திருப்பது இன்றும் வியப்புக்கு உரியதாக உள்ளது. அவர் மீது ஆயிரம் விமர்சனங்கள் இருந்த்போதிலும் ஒவ்வொரு துறையிலும் அவர் ஆற்றிய பணியை இன்று யாராலும் செய்ய இயலவில்லை என்பதே உண்மை.
நாட்டு விடுதலைப்போரில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டதோடு விடுதலை பெற்ற பிறகு நம் நாட்டுக்கான கல்வி முறையை உருவாக்குவதில் அவருக்கு மாபெரும் கனவு இருந்தது. அது போலவே நம் நாட்டின் பொருளாதாரத்தை எந்த வழியில் மேம்படுத்த வேண்டும் என்பதற்கான அறிவியல் பூர்வமான ஆய்வுகளை மேற்கொண்டு அதற்கான செயல் திட்டங்களையும் உருவாக்கினார்.
ஆனால் அவர் மறைவுக்குப் பிறகு அவரின் பொருளாதார கொளகைகள் ஆட்சியாளர்களால் மறக்கப்பட்டது.
காந்தியின் பொருளாதாரக் கொள்கைகளைக் கட்டமைப்பதில் தமிழரான ஜே.சி.குமரப்பாவின் பணி மகத்தானது. அவரைப்பற்றிய சுருக்கமாக அறிந்துகொள்வோம்.
ஜெ.சி.குமரப்பாவும் காந்தியும்
1926ஆம் ஆண்டு, மும்பையில் பட்டயக்கணக்காளராக இருந்த குமரப்பா, அமெரிக்கா சிரக்யூஸ் பல்கலைக்கழகத்தில் மேலாண்மையும் பொதுநிதியும், கொலம்பியாப் பல்கலைக்கழகத்தில் முதுநிலைப் பொதுநிதி பட்டமும் பெற்றார். “இந்தியாவின் நிதிநிலையும் அரசின் பொதுநிதிக் கொள்கையும்” என்னும் தலைப்பில் தன் பட்டப்படிப்பிற்கான ஆய்வறிக்கையை எழுதினார்.
அந்த அறிக்கை, ஆங்கில அரசாங்கத்தின் வரிவிதிப்புக் கொள்கை எப்படிப் பிற்போக்காக இருக்கிறது என்பதைப் பேசுவதாகும். இந்திய பிரிட்டிஷ் ஆட்சியின் வரிவிதிப்புக் கொள்கை, விவசாய வரியையே முதன்மையாக நம்பியிருந்தது. ஏழைகளுக்கு மிகவும் தேவையான உப்பு போன்ற பொருட்களின் மீதான அதிக வரிகள், இவற்றை வசூலிக்க நியமிக்கப்பட்ட பிரிட்டிஷ் அரசு அதிகாரிகளுக்கான அதிக ஊதியம் – இதையெல்லாம் அந்த ஆய்வறிக்கை விரிவாகப் பேசியிருந்தது. படிப்பு முடிந்து, இந்தியா திரும்பியதும், இந்த ஆய்வறிக்கையை புத்தகமாக வெளியிடலாமென்று யோசித்தார். அவர் நண்பரின் ஆலோசனைப் படி 1929ஆம் சபர்மதி ஆசிரமத்தில் காந்தியைச் சந்தித்தார் குமரப்பா.
குமரப்பாவின் ஆய்வறிக்கையைப் பாராட்டிய காந்தி அது யங் இந்தியாவில் தொடராக வெளியிடப்படும் எனத் தெரிவித்தார்.
காந்தி குமரப்பாவிடம், கிராமப்புறப் பொருளாதார ஆய்வு ஒன்றை மேற்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கிறார். அவரின் வேண்டுகோளை ஏற்று குஜராத் மாநில கிராமங்களில் மக்களின் பொருளாதார நிலையை ஆய்வு செய்து அறிக்கையாக அளித்தார். அந்த அறிக்கையின் அடிப்படையில்தான் காந்தியின் உப்பு சத்தியாகிரகப் போராட்டம் தொடங்கியது.
இந்த பொருளியல் ஆய்வு மூலம், குமரப்பாவுக்கு, ஊரகச் சூழலின் உண்மையான நிலை, சமூக ஏற்றத்தாழ்வுகள், வேளாண்மை, சிறு தொழில் போன்றவற்றைப் பற்றிய நேரடியான அறிதல் ஏற்பட்டது. இந்தத் தரவுகள், காந்திய கிராம மறுசீரமைப்புத் திட்டங்களை உருவாக்க அடிப்படையாக அமைந்தன. நிர்மாணப் பணிகள் (Constructive program) என்னும் மாபெரும் இலட்சியத்தை காங்கிரஸின் முன்வைத்தார் காந்தி.
காந்தியப் பொருளியல் கொள்கையின் முக்கியக் கூறுகள்:
1. பலகோடி சிறு உற்பத்தியாளர்கள் இணைந்து உருவாக்குவதே காந்தியத் தொழில் முறை. Production by masses and not mass production.
2. பொருளாதார நிலையில் பிந்தங்கி இருப்பவரின் தேவைகளையும் பூர்த்திசெய்ய வேண்டும்.
3. உற்பத்தியாளரும், நுகர்வோரும் எந்த இடைத்தரகரும் இல்லாமல், சந்திக்கும் முறை. இருவர் நலனும் முக்கியம் என எண்ணும் ஒரு தொழில்முறை.
4. இயற்கை வளங்களை நீடித்து நிலைக்கும் வகையில் பயன்படுத்திக்கொள்ளும், செயல் திறன் மிக்க ஒரு வழிமுறை.
உற்பத்தியில் அதிக மக்களை ஈடுபடுத்த வேண்டும் மாறாக அதிக பொருள்களை உற்பத்தி செய்தால் அது முதலாளிகளை இலாபம் கொழிக்க வைக்கும் என்பதே காந்தியின் முக்கியமான பொருளாதாரக் கொள்கை ஆகும். இந்தியாவில் அதிகமான கிராமங்கள் உள்ளன அங்குதான் அதிக மக்கள் வாழ்கின்றனர் அவர்களின் பொருளாதார நிலை உயர்ந்தால் நாட்டின் பொருளாதாரம் உயரும் இதுவே கீழிருந்து மேல்நொக்கி வளரும் அறிவியல் பூர்வமான வளர்ச்சி என்று காந்தி கருதினார். ஆனால் நம் ஆட்சியாளர்கள் தொழில் வளர்ச்சியிலும் ஆங்கில மாதிரியைக் கடை பிடிக்கத்தொடங்கினர். பெரிய தொழிற்சாலைகளை உருவாக்கினால் நாடு வளர்ச்சிப் பாதையில் செல்லும் என நம்பினர். இது மேலிருந்து கீழ் நோக்கி தலைகீழாக இயற்கைக்கு முரணாக செயல்பட்டு நகரங்கள் மட்டுமே வளர்ந்தன கிராமப் பொருளாதாரம் வளரவில்லை.
காந்திய பொருளாதாரக் கொள்கையே இன்றைய தேவை
கிராமங்கள் வளர்ந்தால் தான் நாடு முன்னேறும். அதிக மக்களை உற்பத்தியில் ஈடுபடுத்துவதோடு உற்பத்தி செய்த பொருள்களை இடைத்தர்கர் இல்லாமல் நுகர்வோரிடம் கொண்டு சேர்ப்பதும் காந்திய வழி ஆகும். அதற்கு சரியான எடுத்துக் காட்டு ஆவின் பால் நிறுவனம். பல கிராமங்களில் சேகரிக்கப்பட்ட பால் பல லட்சம் நுகர்வோரை சென்றடைகிறது இதில் அதிக மக்கள் பங்களிப்பு செய்கின்றனர் இலாபமும் அவர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது. விரைவில் கெட்டுவிடக்கூடிய பாலையே நுகர்வோரிடம் விரைவாக கொண்டு சேர்க்க முடிகிறது என்றால் அதற்கான வலைப்பின்னல் அமைப்பு சிறந்த முறையாகும்.
பாலுக்கு அடுத்தபடி நம் கிராமங்களில் உற்பத்தியாவது நெல் ஆகும். அதனை வியாபாரிகளிடம் அவர்கள் கேட்கும் விலைக்கு விற்க வேண்டிய அவல நிலையில்தான் பல விவசாயிகள் உள்ளனர். ஒரு சிலர் மட்டுமே ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களைப் பயன்படுத்துகிறனர். ஆவின் போன்ற ஒரு நிறுவனத்தை ஏற்படுத்தி நெல்லை அரிசியாக்கி இடைத் தரகர் இல்லாமல் நேரடியாக நுகர்வோரிடம் சேர்ப்பதன் மூலம் உற்பத்தியாளர்கள் அதிக பயனடைய முடியும்.
எனவே அரசு இது குறித்து சிந்தித்து கிராமப்புற பொருளாதார நிலை உயரும்படியான திட்டங்களை வகுப்பதன் மூலம் கந்தியின் கிராம சுய ராஜ்யம் என்ற கனவை நனவாக்க வேண்டும்.
சீனாவைப் போல் அதிக மக்களை உற்பத்தியில் ஈடு படுத்தி நம் நாட்டுக்கான பொருளாதாரத்தை மேம்படுத்துவதே காலத்தின் கட்டாயம்.
நன்றி: தினகரன் நாளிதழ்
No comments:
Post a Comment