தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking

Monday, April 18, 2022

மிதியுந்து குறிப்புகள்

 

மிதியுந்து  ஓட்டத் தொடங்கி ஆறு மாதங்கள் ஆகிவிட்டன. ஓட்டத் தொடங்கிய சில நாட்களிலிருந்தே 100 கிலோமீட்டர் சென்று வர வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஒரு முறை முயற்சி செய்து 70 கிலோ மீட்டர் மட்டுமே செல்ல முடிந்தது அதற்குள் களைப்படைந்ததனால் திரும்பிவிட்டோம்.

இந்த நான்கு நாட்கள் விடுமுறையில் எப்படியாவது சென்றுவிடவேண்டும் என்று நானும் நண்பர் சீராளனும் முடிவெடுத்தோம். அதற்கு ஆயத்தமாக முதல்நாள் 50 கிலோமீட்டர் ஒட்டிப் பழகினோம் மறுநாள் அதாவது நேற்று 100 கிலோமீட்டர் ஓட்டுவது என்று முடிவெடுத்தோம். கங்கைகொண்ட சோழபுரம் செல்லலாம் என்று அதிகாலை 4:00 மணிக்கு புறப்பட்டோம் விருத்தாசலத்தில் இருந்து தெற்கு நோக்கி பயணிக்க வேண்டும் அதிகாலை நேரம் தென்றல் காற்று இந்த கோடைக்கு குளிர்ச்சியாக இருந்தாலும் மிதிவண்டி மிதிப்பதற்கு மிகவும் கடினமாக இருந்தது. பத்து கிலோமீட்டர் செல்வதற்குள் இந்த தென்றலையும் மீறி வியர்த்துக் கொட்டியது. மிகவும் களைப்பாக உணர்ந்தோம். 100 கிலோ மீட்டர் இன்றும் செல்ல முடியாது என்கிற அய்யம் இருவருக்குமே இருந்தது. ஆனாலும் வெளியில்  சொல்லிக் கொள்ளவில்லை. இருப்பினும் உள்ள உறுதியோடு தென்றலை எதிர்கொண்டு பயணித்துக் கொண்டிருந்தன எங்கள் மிதியுந்துகள். ஐந்தரை மணிக்கு ஆண்டிமடத்தை அடைந்திருந்தோம். எலுமிச்சை தேனீர் குடிப்பது வழக்கம். அங்கு பால் தேநீர் மட்டுமே கிடைத்தது. வேறுவழியின்றி ஒரு தேநீர் குடித்து அங்கிருந்து கிளம்பினோம். இது வெயில் காலம் என்பதால் வியர்வையில் பொட்டாசியம் சத்தும், உப்பு நீரும் வெளியேறும் என்பதால் நீராகாரத்தில் உப்பு போட்டு குடிப்பது போல் குடி நீரில் உப்பை போட்டு எடுத்துச் சென்றோம்( இது எங்கள் குழுவின் தலைவர் மருத்துவர் விஜய் சொன்ன யோசனை). ஜெயங்கொண்டம் சென்ற போது மணி ஆறரை ஆகியிருந்தது. ஆளுக்கு இரண்டு இளநீரைக் குடித்தோம்.

ஜெயங்கொண்டத்தில் இருந்து கங்கை கொண்ட சோழபுரம் செல்லும் சாலை தேசிய நெடுஞ்சாலையாக மாற்றப்பட்டு விரிவாக்கப் பணி நடைபெற்று முடியும் நிலையில் உள்ளது. பொன்னேரி எனப்படும் சோழகங்கம் ஏரியில் கோடையிலும் தண்ணீர் இருந்தது. நண்பர் முனைவர் மு. இளங்கோவனின் சொந்த ஊரான இடைக்கட்டு செல்லும் பாதையில் படம் எடுத்துக்கொண்டோம். கங்கைகொண்ட சோழபுரத்தை நெருங்கும்போது பெருவுடையார் கோயில் கோபுரம் எங்களை வரவேற்றது. கோயிலை சுற்றி வந்து பல்வேறு கோணங்களில் படங்களை எடுத்துக்கொண்டு வெயில் அதிகம் ஆவதற்குள் புறப்பட வேண்டும் என்று கிளம்பினோம். மீண்டும் ஜெயங்கொண்டம் வந்தபோது ஆளுக்கு இரண்டு இளநீரை குடித்துவிட்டு கிளம்பிவிட்டோம் கோடை வெப்பம் தன் கொடிய முகத்தை காட்டத் தொடங்கியிருந்தது. உடம்பிலிருந்து நீர்ச்சத்து எல்லாம் வெளியேறி, ஒரு கட்டத்தில் வியர்வையே நின்றுபோனது. எவ்வளவு நேரம் ஆனாலும்  காலை சிற்றுண்டிக்கு வீட்டுக்கு சென்று விட வேண்டும் என்பதுதான் எங்கள் திட்டம். ஆனாலும் ராஜேந்திர பட்







டினம் வந்த போது மணி பதினொன்றை நெருங்கிக் கொண்டிருந்தது. சாலையோர மர நிழலில் தமிழரின் பாரம்பரிய உணவான கம்மங்கூழைப் பார்த்துவிட்டோம். வெங்காயத் துண்டுகளோடு மோர் கலந்து கோடைக்கு இதமாக இருந்த கூழை ஆளுக்கு ஒரு சொம்பு குடித்து காலை சிற்றுண்டியை முடித்துக் கொண்டோம். இல்லம் திரும்பிய போது பயண தூரம் தொண்ணூற்று ஆறு கிலோமீட்டர் இருந்தது குறைந்த 4 கிலோ மீட்டருக்கு மீண்டும் பெரியார் நகர் வழியாக ஒரு சுற்று சுற்றி விட்டு வீடு வந்து சேர்ந்தோம்.

படங்கள்: சீராளன்

No comments:

Post a Comment