தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking

Friday, September 16, 2016

கல்வித்துறையில் ஒரு புரட்சிகரத்திட்டம்!    

     பள்ளிக்கல்வி வாழ்க்கைக்கு சிறிதும் பயன்படுவதில்லை என்கிற குறைபாடு நம்மிடம் நீண்ட நாட்களாக உள்ளது. அதன் விளைவாகத்தோன்றியதுதான் ஏட்டுச்சுரைக்காய் கூட்டுக்கு உதவாது என்ற பழமொழி. பாட நூலில் உள்ள கருத்துகளை குருட்டு மனப்பாடம் செய்து தேர்வில் வாந்தி எடுப்பது என்ற மரபான முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கவே அனைவரும் நினைக்கிறோம். ஆனால் அது நடைமுறையில் சாத்தியப்படாத ஒன்றாகவே உள்ளது.
படிக்கின்ற பாடத்தை நடைமுறை வாழ்வில் பயன்படுத்தினால் , கல்வி என்பது அர்த்தமுள்ளதாகும். அதற்காக பல தன்னார்வக்குழுக்கள் நீண்ட நாட்களாகச் செயல்பட்டு வருகின்றன. தேசிய அறிவியல் இயக்கம் மாணவர்களிடையே புதைந்து கிடக்கும் ஆற்றல்களை வெளிப்படுத்திட வாய்ப்பளிக்கும் வகையில் ஆண்டுதோறும் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நட்த்தி மாணவர்களிடையே புதியனவற்றைக் கண்டுபிடிக்கும் ஆர்வத்தைத் தூண்டி வருகிறது. அப்படி புதிய கண்டுபிடிப்புகள் நிகழ்த்தியவர்களுக்கு குழந்தை விஞ்ஞானி என்று விருது வழங்கி அவர்களைச் சிறப்பிக்கிறது.
இது அரசு செய்யவேண்டிய பணி என்பதை இப்போதுதான் உணர்ந்திருக்கிறார்கள் நம் ஆட்சியாளர்கள். குழந்தைகளுக்கு அறிவியல், கணக்கு, ஆங்கிலம் ஆகிய பாடங்களில் ஆர்வத்தை ஏற்படுத்தும் விதமாக ஒரு இயக்கத்தைத் தொடங்கியிருக்கிறது நம் நடுவணரசு. ராஷ்ட்ரிய அவிஷ்கார் அபியான் என்னும் செயல் திட்டம்தான் அது அதனை சுருக்கமாக (RAA) எனக்குறிப்பிடுகின்றனர். இதனைத் தமிழில் தேசிய கண்டுபிடிப்பு இயக்கம் என்று குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கலாம். இந்த செயல் திட்டம் கடந்த ஆண்டு நடைமுறைக்கு வந்தது. இத்திட்டத்தை குடியரசு முனாள் தலைவர் மறைந்த அப்துல்கலாம் அவர்கள் தொடக்கி வைத்தார். தற்போது ஒரு மாவட்டத்திற்கு பத்து பள்ளிகளில் இத்திட்டம் நடைமுறைப் படுத்தப் பட்டுள்ளது  இன்னும் ஐந்து ஆண்டுகளில் படிப்படியாக அனைத்து பள்ளிகளிலும் இது நடைமுறைக்கு வரும் என்று திட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் முக்கிய நோக்கம் பள்ளி மாணவர்கள் கணக்கையும் அறிவியலையும் கறபதை மகிழ்வானதாகவும் அர்த்தமுள்ளதாகவும் ஆக்குதலாகும். மேலும் பள்ளிசார்ந்த அறிவை பள்ளிக்கு வெளியே உள்ள வாழ்வோடு இணைப்பதும் ஆகும்.
உதாரணமாக கணக்குப்பாடத்தில் வடிவியல் படிக்கின்றனர். இந்த வடிவியல் அன்றாட வாழ்க்கையில் எங்கே எப்படி பயன்படுகிறது என்பதை மாணவர்களுக்கு நேரடியாக உணர்த்துவதாகும். பாலங்கள் காட்டடங்கள் கட்டும்போது அவை உறுதியாகவும் அழகாகவும் அமைய எப்படி வடிவியல் பயன்படுகிறது என்பதை நேரடியாக கட்டுமானப்பணிகள் நடைபெறும் இட்த்திற்கே சென்று தெரிந்துகொள்ளுதல் அல்லது பொறியியல் வல்லுநர்களைக்கொண்டு விளக்கம் அளித்தல் போன்ற செயல்பாடுகள் வாயிலாக மாணவர்களுக்கு புரியவைப்பது. இப்படிச்செய்வதன் மூலம் கற்றல் என்பது அன்றாட வாழ்வோடு தொடர்புடைய ஒன்று என்பதை உணரும் மாணவர்கள் எதிர்கால நலன் கருதி ஆர்வமாகக் கற்கும் நிலை ஏற்படுவதோடு கற்றலில் ஆர்வமும் ஏற்படும். கல்வி சுமையானதாக இல்லாமல் எளிமையாகும்.
இத்திட்டத்தில் ஆங்கிலத்திற்கு ELCOM - என்ற பெயரிலும் (ENGLISH LANGUAGE COMMUNICATION), அறிவியலுக்கு STEM – என்ற பெயரிலும் (SCIENCE TECHNOLOGY ENGINEERING MATHEMATICS) கணக்கிற்கு (ARIAL) என்ற பெயரிலும் (ARITHMATIC ALGIBRA) செயல் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த் திட்டங்களை செயல்படுத்திட உயர்கல்வி நிறுவன்ங்களோடு பள்ளிகள் இணைக்கப்பட்டுள்ளன. கல்லூரிகள் ,IIT போன்ற உயர்கல்வி நிறுவன்ங்கள், மத்திய பல்கலைக்கழகங்கள் போன்ற நிறுவன்ங்களுக்கு மாணவர்களை அழைத்துச்சென்று அங்குள்ள வசதிகளை பள்ளி மாணவர்களுக்கு அளிப்பது. அங்குள்ள பேராசிரியர்களை பள்ளிக்கு அழைத்து ஆசிரியர் மாணவர்களின் சந்தேகங்களை போக்குவது என இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் அறிவியல் ஆய்வகங்களை முழுமையாகப் பயன்படுத்துவது. ஆய்வகத்தில் அனைத்து வசதிகளையும் உருவாக்குவது. கணக்கு ஆய்வகங்களைப் பள்ளிகளில் ஏற்படுத்துவது. ஒவ்வொரு பாட்த்தையும் இயன்ற வரை செயல்வழியாக செய்துபார்த்து புரிந்துகொள்வது, கணித மன்றங்கள், அறிவியல் மன்றங்கள் போன்ற மன்றச்செயல்பாடுகளில் மாணவர்களை மிழிமையாக ஈடுபடுத்துவது போன்ற பல குறிப்பிட்த்தக்க குறிக்கோள்களை இத்திட்டம் கொண்டுள்ளது. 6 வயது முதல் 18 வயது வரை உள்ள குழந்தைகளே இத்திட்டத்திற்கான இலக்காக நடுவணரசு அறிவித்துள்ளது.
இத்திட்ட்தை நடைமுறைப்படுத்த தேசிய அளவில் பள்ளிக்கல்வித்துறை செயலர் உயர்கல்வித்துறை செயலர் இணைந்த குழுவும் மாநில அளவில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தலைமையிலான குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கான நிதி அனைவருக்கும் கல்வி இயக்கத்திலிருந்தும் தேசிய இடைநிலைக்கல்வித்திட்ட்த்திலிருந்தும் வழங்கபடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிவியல் , கணக்கு ஆகிய பாடங்களில் புதுமைச்செயல்பாடுகளை நிகழ்த்துவதற்காக 33 கோடியும்,ஆசிரியர்களுக்கான பயிற்சிக்காக 98 கோடியும், கற்றல் கற்பித்தல் உபகரணங்களுக்காக 6.5 கோடியும் மேலும் RMSA மூலம் ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்க 125 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் குழந்தைகள் அறிவியல் மாநாடு, ஆசிரியர்கள் அறிவியல் மாநாடு, கணித மேளா போன்ற வற்றை கல்வித்துறையே முன்னின்று நடத்துவது போன்ற முக்கிய அம்சங்களும் இத்திட்ட்த்தில் உள்ளன.
ஆசிரியர்கள் அதிலும் குறிப்பாக அறிவியல், கணக்குப் பாட ஆசிரியர்களின் முக்கியமான பணி அனைத்துவிதமான கற்றல் கருவிகளை இயன்றவரை தலைமை ஆசிரியர் உதவியோடு முழுமையாகப் பயன்படுத்தி மாணவர்களின் ஆர்வத்தை கணக்கிலும் அறிவியலிலும் ஈர்ப்பதாகும்.
ஆசிரியர்கள் மாதம் ஒரு செயல்திட்ட்த்தை அறிவியலிலும் கணக்கிலும் மாணவர்களைக் கொண்டு செயல்படுத்துவது. அதன் வாயிலாக மேற்கண்ட பாடங்களில் மிகவும் ஆர்வமாகவும் துடிப்பாகவும் செயல்படும் மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களை உயர்ந்த நிலைக்குக் கொண்டுவருவது இதன் நோக்கமாகும்.
மாணவர்களை கேள்விக்கு பதில் எழுதுபவர்களாக இல்லாமல் கேள்விகளைக் கேட்பவர்களாக மாற்றிடவேண்டும். இதனை கடமைக்கு செய்யாமல் அற்பணிப்பு உணர்வோடு செய்தால் கல்வித்துறையில் மாபெரும் புரட்சி ஏற்படும் என்பது உறுதி.

  

1 comment:

  1. தமிழை ஒரு மொழியாகக் கற்பிக்கவும், அதன் நுட்பம் கண்டு மேலெழவும், அகலம் காட்டவும் பயன்படுத்த வேண்டிய பாடங்கள் அனைத்தையும் வரிசைப்படுத்தி விட்டேன். அனைத்தும் அரசியலாகி, கல்வியும், அதன் பிடியில் சிக்கியதால் அதை உணர யாருக்கும் வாய்ப்பு இல்லை. அறிவுக்கான கல்வியை என்று மக்கள் ஏற்க நினைக்கிறார்களோ அன்றுதான் உயர்வான வாழ்வு கிட்டும். அதுவரை குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடும் நிலைதான். நசன் 9788552061

    ReplyDelete