தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking

Thursday, March 17, 2016

பத்தாம் வகுப்பு கணக்கு தேர்வு சில ரகசியங்கள்   
  கணக்கு என்றாலே கடினமான பாடம் அதில் மதிப்பெண் பெறுவது அதை விட கடினம் என்ற எண்ணம் மாணவர்களிடம் மட்டுமல்ல ஆசிரியர்களிடமும் உள்ளது. ஆனால் உண்மை நிலை அப்படி யில்லை. கணக்கு பாடத்தில் எளிதாக தேர்ச்சி பெறுவது மட்டுமின்றி அதிக மதிப்பெண்ணும் பெறலாம். அதெற்கென சில ரகசியங்கள் உள்ளன. அந்த ரகசியங்களை நீங்களும் தெரிந்து கொண்டால் உங்களுக்கும் கணக்கும் இனிக்கும்.
     மாணவர்கள் பதற்றமில்லாமல் தேர்வு எழுத வேண்டும் என்பதற்காக வினாத்தாள் படிப்பதற்கு என கூடுதலாக 15 நிமிடங்கள் வழங்கப் பட்டுள்ளது. ஆனால் பல மாணவர்கள் அந்த நேரத்தையும் தேர்வு எழுதுவதற்கே பயன்படுத்திக்கொண்டால் கூடுதல் மதிப்பெண் பெறலாம் என நினைக்கின்றனர். அது தவறான நினைப்பு. அப்படி செய்தால் மதிப்பெண்கள் கூடுவதற்கு அல்ல குறைவதற்குத்தான் வாய்ப்பு உள்ளது. வினாக்களில் உள்ள லாஜிக்கை புரிந்து கொள்ள நிதானமாக வினாக்களை ஒரு முறை படிப்பது அவசியம். எனவே அந்த நேரத்தை சரியாக பயன்படுத்தி நிதானமாக வினாத்தாளைப் படித்து கேட்கப்பட்டுள்ள வினாக்களை முதலில் புரிந்துகொள்ளுங்கள்.
கணக்கு வினத்தாள் ,,, என நான்கு பகுதிகளைக் கொண்டது.முதலில் ஒரு மதிப்பெண் வினாக்கள் அடுத்து இரு மதிப்பெண் அதற்கடுத்து ஐந்து மதிப்பெண் இறுதியாக பத்து மதிப்பெண் வினாக்கள் என வரிசைப்படுத்தப்பட்டு  அமைக்கப்பட்டுள்ளது.  முதலில்பகுதிக்குதான் விடையளிக்க வேண்டும் என்பது கட்டாயம் இல்லை. ஆனால் பல மாணவர்கள் முதலில் ஒரு மதிப்பெண் வினாக்களுக்கே விடையளிக்கின்றனர். நீங்கள் பத்து மதிப்பெண் வினாக்கள் இடம்பெற்றுள்ள கடைசி பகுதியானபகுதியிலிருந்து விடையளிக்கத் தொடங்குவதே அறிவார்ந்த செயல். அதனைத்தொடர்ந்து ஐந்து மதிப்பெண்,அடுத்து இரு மதிப்பெண் கடைசியாகத்தான் ஒரு மதிப்பெண் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதிக மதிப்பெண்களைப் பெறுவதற்கு அதிக உழைப்பும், நேரமும் தேவை உடலும் மனுமும் ஆற்றலுடன் இருக்கும் காலை நேரத்தில் அது எளிது. குறைந்த மதிப்பெண்ணுக்கு குறந்த அளவு உழைப்பும் நேரமும் போதுமானது. உடல் களைத்திருக்கும் நண்பகல் வேளையில் ஒரு மதிப்பெண் வினாக்களை எழுதுவது எளிது.
 கணக்கு என்பது எண்களை அடிப்படையாகக் கொண்ட பாடம் என்பதால் ஒவோரு எண்ணையும் தெளிவாக எழுதுவது அவசியம். பல மாணவர்கள் எண்களைப் பலமாதிரி வடிவங்களில் எழுதுகின்றனர். குறிப்பாக 2, 3, 4, 5, 7 ஆகிய எண்களை ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி எழுதுகின்றனர். (எண் இரண்டினை இடையில் சுழித்து எழுதுவது, மூன்றிலும் ஐந்திலும் அடிப்பகுதியில் சுழித்து  எழுதுவது ஏழின் குறுக்கே சிறு கோடு கிழிப்பது) அப்படி எழுதாமல் அச்சில் உள்ளது போல் பொது வடிவத்தைப் பின்பற்றவேண்டும். இத்தனை ஆண்டுகள் அப்படியே எழுதிப் பழகியிருந்தாலும் அப்பழக்கத்தை மாற்றிவிட முடியும். தேர்வுக்கு இரண்டு நாட்கள் முன்பாக முனைந்து சரியான முறையில் மேற்சொன்ன  எண்களை மட்டுமாவது  எழுதிப்பழகினால் சரியாகிவிடும். ஆசிரியர்களில் பலருக்கு இப்படி எழுதுகிற பழக்கம் இருப்பதால் இது மாணவர்களுக்கும் தொற்றிக்கொள்கிறது. மக்கள் தொகை கணக்கு எடுக்கும்போது ஆசிரியர்களுக்கு இது போன்ற பயிற்சி கொடுத்து மக்கள் தொகைப்பதிவேட்டில் அனைத்து எண்களையும் சரியான வடிவத்தில் எழுதவைத்தனர்.
சரியான வடிவத்தில் எண்களை எழுதாவிடில் விடைத்தாள் திருத்துபவர்களுக்கு விடைகளைக் கண்டறிவதில் குழப்பம் ஏற்படும் அதனால் மதிப்பெண்கள் குறைவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே எண்களை தெளிவாக எழுதுவது அவசியம்.
பிரிவு பத்து மதிப்பெண் வினாக்கள்
பத்து மதிப்பெண் வினாக்களான செய்முறை வடிவியல், வரை படம் ஆகியவற்றை முதலில் எழுதவேண்டும். கடைசி நேரத்தில் எழுதுவதால் தேவையற்ற தவறுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே முதலில் 10 மதிப்பெண் வினாக்கள் இரண்டையும் சரியாக எழுதி 20 மதிப்பெண்களை கைகளில் வைத்துக்கொண்டால் மனம் உற்சாகமாகும்.
செய்முறை வடிவியலில் உதவிப்படத்திற்கு மதிப்பெண்கள் உண்டு என்பதால் தேவைப்படும் கருவிகளைப் பயன்படுத்தி அளவுகளின்றி தெளிவாக வரைந்து உதவிப்படம் என்று அவசியம் எழுதவேண்டும். படம் வரையும்போது ஒவ்வொரு புள்ளிக்கும் ஒரு எழுத்தால் பெயரிடுவது அவசியம். அதன்பிறகு மறக்காமல் அளவுகளை உரிய இடங்களில் குறிப்பிடவேண்டும். இவை ஒவ்வொன்றையும் கருத்தில் கொண்டே முழு மதிப்பெண் வழங்கப்படும்.
அதுபோல் வரை படம் வரைவதற்கு முன் பொருத்தமான அளவுத்திட்டத்தினை  எக்ஸ் அச்சுக்கும் ஒய் அச்சுக்கும் தனித்தனியாக வரைபடத்தாளின் மேல் பகுதியின் வலப்புறம் எழுதவேண்டும். புள்ளிகளை தெளிவாகக் குறித்து தேவையான கோட்டினை வரைவதோடு கேட்கப்படும் தீர்வினை வரைந்தும் எழுதியும் காட்டவேண்டும்.
பிரிவு ஐந்து மதிப்பெண்
ஐந்து மதிப்பெண் வினாக்களில் 9 வினாக்கள் எழுதவேண்டும் இதில் ஒன்று கட்டாய வினா. மொத்தமுள்ள 12 பாடங்களில் 1, 2, 5, 8, ஆகிய நான்கு  பாடங்களைப் படித்திருந்தாலே 8 வினாக்களுக்கு விடை அளித்து 40 மதிப்பெண்கள் பெறலாம். அல்லது பாட நூலிலுள்ள எடுத்துக்காட்டு கணக்குகளை செய்து பார்த்தால் 6 வினாக்களுக்கு விடையளித்து 30 மதிப்பெண்கள் எளிதாகப் பெறலாம்.
பிரிவு இரு மதிப்பெண்
இப்பிரிவில் 10 வினாக்களுக்கு விடையளித்து 20 மதிப்பெண்கள் பெறவேண்டும். 1, 3, 4, 5, 7, 8 ஆகிய ஆறு பாடங்களை மட்டும் படித்தால் 12 மதிபெண்கள் எளிதாகப் பெற்றுவிடலாம்.
பிரிவு ஒரு மதிப்பெண்.
ஒரு மதிப்பெண் வினாக்களை கடைசியாக எழுதுவதே நல்லது.  ஒரு மதிப்பெண் வினாக்கள் மொத்தம் 15. ஆனால் அதற்காக பத்து அத்தியாங்களிலிருந்து பாடங்களின் பிற்பகுதியிலுள்ள 205 வினாக்களை கட்டாயம் படித்திருக்க வேண்டும். பல மாணவர்களுக்கு இது கடினாமாக உள்ளது. அப்படி உணர்பவர்கள்: 2, 3, 5, 6, 7 ஆகிய ஐந்து பாடங்களின் பிற்பகுதியில் உள்ள 108 வினாக்களை மட்டும் நன்கு படித்துக்கொண்டால் பதினைந்துக்கு பத்து மதிப்பெண்கள் உறுதியாக பெறலாம். மேற்சொன்ன அத்தியாயங்கள் ஒவ்வொன்றிலும் தலா இரு வினாக்கள் கேட்கப்படும் மற்ற அத்தியாயங்களில் தலா ஒரு வினா மட்டுமே கேட்கப்படும்.
இவை அனைத்தும் மதிப்பெண்களைப் பெறுவதற்கான ரகசியம் மட்டுமே. கணக்கியலில் மதிப்பெண் மட்டும் போதாது. கணக்கை வாழ்க்கையில் பயன்படுத்தவேண்டும். அதற்கு ஒவ்வொரு பாடத்தின் தொடக்கத்திலும் உள்ள கணித அடிப்படைக் கருத்துகளை நன்கு படித்து புரிந்து கொள்ளவேண்டும். இதுவரை படிக்காதவர்கள் இப்போதாவது படியுங்கள். தேர்விலும் வாழ்விலும் வெற்றி நிச்சயம். வாழ்த்துகள்.No comments:

Post a Comment