தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking

Tuesday, April 19, 2011

பேராசிரியர் முனைவர் ஆறு இராமநாதன் பணி பாராட்டு , நூல் வெளியீட்டு விழா


தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழக நாட்டுப்புறவியல் துறை பேராசிரியர் முனைவர் ஆறு இராமநாதன் அவர்களின் பணிகளைப் பாராட்டியும் நூல்களை வெளியிட்டும் சிறப்பானதொரு விழாவை அவரது மாணவர்கள் பல்கலைக் கழக வளாகத்தில் நிகழ்த்துகின்றனர். நாட்டுப்புறவியல் துறைக்கு பேராசிரியர் ஆற்றிய பணிகள் மிகவும் குறிப்பிடத்தக்க்வை. நிட்டூரி கதை, சின்னண்ணன் சின்னச்சாமி கதை ஆகிய கதைகள் குறித்து அவர் தமிழகம் முழுவதும் பயணம் செய்து மேற்கொண்ட வரலாற்று நிலவியல் கோட்பாட்டு ஆய்வு இதுவரை தமிழில் யாரும் செய்யாத முயற்சி. முனைவர் பட்ட ஆய்வுக்கு வரும் மாணவர்களை தரமான ஆய்வாளர்களாக உருவாக்குவதில் அவருக்கு நிகர் அவரே.
ஆய்வு நேர்மையும் அயரா உழைப்பும் பேராசிரியரின் தனித்தன்மைகள்.
அத்தகைய சிறப்பு வாய்ந்த பேராசிரியரின் பணிகளைப் பாராட்டி நிகழும் விழா பற்றிய விவரங்கள் அழைப்பில் கண்சடுள்ளவாறு நிகழும்.

நாள் : 21.04.2011.

காலம் : காலை 10.30

இடம் : தமிழ்ப் பல்கலைக் கழக மொழிப்புல அரங்கு


வரவேற்பு : சேவியர் அந்தோணி

தலைமை : முனைவர் த. சந்திரகுமார்

சிறப்புரை : பாவலர் அறிவுமதி
வ. கவ்தமன் திரைப்பட இயக்குநர்

வாழ்த்துரை : முனைவர் ச. பரிமளா பதிவாளர் (பொ)
திருமதி புனிதா - தாளாளர், பாரத் கல்வி நிறுவனம்
முனைவர் அந்தோணி குருசு

ஏற்புரை : முனைவர் ஆறு இராமநாதன்

நன்றியுரை : முனைவர் சக்திவேல்.

பேராசிரியருக்கு உங்கள் வாழ்த்துகளைச் சொல்ல : 9894499237



இணைப்புகள்


இணைப்புகள்

http://www.ulakaththamizh.org/JotsTags.aspx?word=%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81.%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D

http://rathinapughazhendi.blogspot.com/search/label/%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81.%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D

http://aruramanathan.blogspot.com/

http://www.tamilvu.org/courses/diploma/a081/a0811/html/a0811214.htm

Thursday, March 31, 2011

இந்திய மக்கள் தொகை 121 கோடி

புதுடெல்லி : இந்திய மக்கள் தொகை 121 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் மக்கள் தொகை 18 கோடியே 10 லட்சம் அதிகரித்துள்ளது. தமிழகத்தின் மக்கள்தொகை 7 கோடி 21 லட்சத்து 38,958 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் 10 ஆண்டுக்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

கடந்த 1872&ம் ஆண்டு முதல் இதுவரை 14 கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டு உள்ளன. கடைசியாக, 2001&ம் ஆண்டு இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது, இந்திய மக்கள்தொகை 103 கோடியாக இருந்தது. இந்நிலையில், 2001&2011 ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பை 2 கட்டமாக நடத்த முடிவு செய்யப்பட்டது.

முதல் கட்ட கணக்கெடுப்பு, கடந்த ஆண்டு மே 1ம் தேதி தொடங்கியது. அப்போது, வீடுகள் போன்றவை கணக்கெடுக்கப்பட்டன. பின்னர், 2&ம் கட்ட கணக்கெடுப்பு கடந்த பிப்ரவரி 9ம் தேதி தொடங்கி, 28ம் தேதி முடிந்தது. இதில், 25 லட்சம் பேர் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த பணிக்காக ஸி2,200 கோடி செலவிடப்பட்டது.

கணக்கெடுப்பில் கிடைத்த முதல் புள்ளி விவரத்தை மத்திய உள்துறை செயலாளர் ஜி.கே.பிள்ளையும், இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு துறையின் பதிவாளர் ஜெனரல் சந்திரமவுலியும் டெல்லியில் நேற்று வெளியிட்டனர். அதன்படி, இந்திய மக்கள்தொகை இப்போது 121 கோடியாக உயர்ந்துள்ளது.

இது கடந்த முறையை விட 18 கோடியே 10 லட்சம் அதிகம். 62.37 கோடி ஆண்களும், 58.65 கோடி பெண்களும் உள்ளனர். கணக்கெடுப்பின்படி, ஆயிரம் ஆண்களுக்கு 914 பெண்கள் உள்ளனர். 2001ல் இருந்து கடந்த 10 ஆண்டுகளில் மக்கள்தொகை பெருக்கம் 17.69 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த முறை இது 21.15 சதவீதமாக இருந்தது.

நாட்டிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமாக தொடர்ந்து, உத்தர பிரதேசமே நீடிக்கிறது. இங்கு இப்போது 19 கோடியே 90 லட்சம் பேர் உள்ளனர். குறைந்த மக்கள் தொகை கொண்ட பகுதியாக லட்சத்தீவு (64,429) உள்ளது. இந்தியாவின் இப்போதைய மக்கள் தொகை அமெரிக்கா, இந்தோனேஷியா, பிரேசில், பாகிஸ்தான் மற்றும் வங்கதேச நாடுகளின் மொத்த மக்கள் தொகையை விட அதிகம். உத்தர பிரதேசம், மகாராஷ்டிராவின் மொத்த மக்கள் தொகை அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையை விட அதிகமாக உள்ளது. தமிழக மக்கள்தொகை 7 கோடி 21 லட்சத்து 38,958 ஆக உயர்ந்துள்ளது.

மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியாக டெல்லியின் வட கிழக்கு மாவட்டமும், நெருக்கம் குறைந்த பகுதியாக அருணாச்சல பிரதேசத்தில் உள்ள திபாங் பள்ளத்தாக்கும் உள்ளன. டெல்லி வட கிழக்கு மாவட்டத்தில் ஒரு சதுர கி.மீ.க்கு 37,346 பேரும், திபாங் பள்ளத்தாக்கில் ஒரு சதுர கி.மீ.க்கு ஒருவரும் வசிக்கின்றனர்.

சிறுவர்கள் குறைவு

கடந்த 2001 கணக்கெடுப்பின்போது, நாட்டில் 6 வயது வரையான சிறுவர்கள் 16 கோடியே 38 லட்சம் பேர் இருந்தனர். இப்போது இந்த எண்ணிக்கை 15 கோடியே 88 லட்சமாக குறைந்துள்ளது. 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்த வயதில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள் உள்ளனர். 5 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், ஒரு லட்சம் எண்ணிக்கையை இன்னும் தாண்டவில்லை. அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில் 2 கோடியே 97 லட்சம் சிறுவர்களும், பீகாரில் 1 கோடியே 86 லட்சம் சிறுவர்களும் உள்ளனர்.


கல்வியறிவு அதிகரிப்பு

நடப்பு கணக்கெடுப்பின்படி நாட்டின் கல்வியறிவு சதவீதம் 74.04 சதவீதமாக உள்ளது. 2001ல் இது 64.83 சதவீதமாக இருந்தது. கடந்த 10 ஆண்டுகளில் 9.21 சதவீதம் அதிகமாகியுள்ளது. 2001ம் ஆண்டில் 53.67 சதவீதமாக இருந்த பெண்கள் கல்வியறிவு, இப்போது 65.46 சதவீதமாக உயர்ந்துள்ளது. 2001ல் 75.26 சதவீதமாக இருந்த ஆண்களின் கல்வியறிவு இப்போது 82.14 சதவீதமாக அதிகரித்துள்ளது.

கல்வியறிவில் கேரளாவே தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. அதன் கல்வியறிவு சதவீதம் 93.91. மாவட்ட அளவில் மிசோரம் மாநிலத்தில் உள்ள செர்ச்சிப் மாவட்டம் (98.76 சதவீதம்), ஐஸ்வால் மாவட்டம் (98.50 சதவீதம்) முதல் 2 இடங்களை பிடித்துள்ளன. கேரளாவை தொடர்ந்து லட்சத்தீவு 92.28 சதவீதத்துடன் 2வது இடம் வகிக்கிறது. கல்வியறிவு சதவீதத்தில் வழக்கம்போல் பீகார் கடைசி இடத்தில் (63.82 சதவீதம்) உள்ளது. புதுச்சேரி உட்பட 10 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் 85 சதவீத கல்வியறிவை எட்டியுள்ளன.
நன்றி : தினகரன்

Sunday, March 6, 2011

எனக்கு வந்த கடிதங்கள் - 2

அன்புயிர் புகழ் ! உன் அன்பு மடலும் படைப்புகளும் கிடைத்தன. அரசு ' தீட்டு ' படைப்பையும் இன்று கொடுத்தார். எழுது. எழுது. இது அச்சிற்கு... இது மற்றவர் பார்வைக்கு என்ற எண்ணம் இல்லாமல் எழுது. உனக்கென ஒரு மொழி அமையும் நேரமிது. அதன் செழுமை உணரும் வேகத்தில் எழுது. டாக்டர் கூட உனது
' கரும்பு ' கதையைப் படித்துவிட்டு அரசுவிடம் உன்னை விசாரித்திருக்கிறார். தொடர்ந்து எழுது. சிறுகதை வடிவமே சிறந்த வடிவம். முக்கியத்துவம் கொடு. கோணங்கி, தமிழ்ச்செல்வன், பூமணி, வண்ணதாசன், வண்ணநிலவன் இவர்களோடு கி.ரா. கிழவனையும் படி. வண்ணதாசன் வித்தியாசமான ஆள். மனிதன் - மிருகம், இயற்கை என்கிற வித்தியாசம் பார்க்கத் தெரியாத வித்தியாசமான ஆள். நுட்பமான பார்வை, மிருதுவான மனசு, நளினமான நடை. தேடிப் படி. எவனையும் ரசி. நீயாக மலர். உன்னைச் சூழ்ந்த மக்களில்... இயற்கையில் படைப்புகள் பறி. அவ்வப்போது மடலிடு. இப்படி இடைவெளி விடாதே. அன்பின் அம்மா, அப்பா,கரிகாலன் அனைவரையும் மிக மிக கேட்டதாகக் கூறு. இங்கே புத்தகக் கண்காட்சி நிகழ்கிறது. வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். என்ன பையன் நீ !அண்ணமலைப் பல்கலைக் கழகத்திலா ! எதையாவது சாதித்துவிட்டு அங்கு பேசலாமே புகழ். இப்போது வேண்டுமா ? யோசி, அப்புறம் உன் இஷ்டம். மேடத்திடமும் கேட்டுக்கொள்.
உடன் பதில் எழுது.
அன்புடன்
அறிவுமதி.
07.01.1993

குறிப்பு: கடிதத்தில் டாக்டர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது மருத்துவர் ராமதாசு அவர்களை. அப்போது தினப்புரட்சி நாளிதழில் ஞாயிறுதோறும் மக்கள் இலக்கியம் என்றொரு பக்கம் வெளியாகும் அதன் பொறுப்பாசிரியர் ப. திருநாவுக்கரசு (தாமரைச்செல்வி பதிப்பகம் ). அவரைத்தான் அரசு என அறிவுமதி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Thursday, March 3, 2011

எனக்கு வந்த கடிதங்கள் -1

தகவல் தொடர்புச் சாதனங்களின் வளர்ச்சியினால் கடிதம் எழுதும் வழக்கம் முற்றிலும் மறைந்துவிட்டது, பின்லாந்து நாட்டு ஆவணக்காப்பகங்களில் ஒரு உள்நாட்டுக் கடிதத்தைக் கூட ஆவணாமாகப் பாதுகாக்கின்றனராம். கடிதம் இலக்கியத்தின் ஒரு பகுதியாகியுள்ளது கடித இலக்கியம் என்று. எனக்கு வந்த கடிதங்களை இங்கே பதிவு செய்கிறேன். நாளை இதுவும் கூட ஆவணமாகலாம். முதலில் கவிஞர் அறிவுமதி எனக்கு எழுதிய கடிதங்களை ஒவ்வொன்றாக பதிவுசெய்கிறேன்.

12/06/1991
சென்னை

அன்புயிர் புகழ்,
அண்ணன் மதி பேசுகிறேன்.
உனது அன்பின் மடல்களுக்கு உடன் மடலிட முடியாமைக்கு... பொறுத்தருள்க.
என்னிடமுள்ள குறைபாடே இதுதான். என் தொட்டில் பூமிக்கருகிலேயே இத்தகைய நம்பிக்கை வெளிச்சங்கள்
அறிமுகமாக அறிமுகமாக மனசு தெம்படைகிறது.
உனது மொழி உணர்வுகளும் அரசியல் உணர்வுகளும் செழுமையடையவும் வைரம் பாயவும் வாழ்த்துகிறேன்.
சுற்றிலும் நம்பிக்கையாளர்களைத் துளிர்விடச்செய். அண்ணன் ராசு அவர்களை அடிக்கடி சந்தி.புது நெல்லு புது நாத்து முடிந்து திரைக்குத் தயாராக இருக்கிறது.
விரைவில் சிதம்பரம் வரலாம். நான் ஊருக்கு வருகிற போது தெரிவிக்கிறேன் சந்திப்போம்.
அன்புடன் அண்ணன்
அறிவுமதி

குறிப்பு : அண்ணன் ராசு என கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பது விருத்தாசலத்தில் வாழ்ந்த கொள்கையளரை.
திராவிட நாடு அடையும் வரைத் திருமணம் செய்துகொள்ளமாட்டோம் என்று பெரியாரிடம் குருதியால் ஒப்பமிட்டுக்கொடுத்தத்ற்காக் கடைசி வரை திருமணமே செய்தொகொள்ளாமல் மரணமடைந்தவர். சிந்தனைச்சிற்பி என எங்களால் அழைக்கப்பட்டவர்.


Saturday, February 5, 2011

கண்ணகியின் சிலம்புக்கு நிகரான செடலின் சலங்கை.









தமிழகத்தில் நாட்டுப்புற மக்களிடையே பலவகையான வழிபாட்டுமுறைகள் நடைமுறையில் உள்ளன. அவற்றுள் வட மாவட்ட மக்களிடையே பெரும்பான்மையாகக் காணப்படுவது திரௌபதி அம்மன் வழிபாடு. இவ்வழிபாட்டு முறை குறித்து தமிழில் குறிப்பிடும்படியான நூல்கள் வெளிவரவில்லை. அமெரிக்க பல்கலைக் கழக பேராசிரியர் அல்ப் கில்டபைடல்தான் திரௌபதி வழிபாட்டு மரபு குறித்து தமிழகத்திற்கு வந்து ஆய்வு செய்து (The cult of Draupadi - on Hindu Ritual and the Goddess) என்ற நூலை முதன் முதலில் வெளியிட்டார். திரௌபதி அம்மன் வழிபாடு சார்ந்த படைப்பிலக்கியங்களும் தமிழில் இல்லை என்றே கூறலாம்.

செல்லியம்மன், செல்லியாயி, துரோபதியம்மன் என்றெல்லாம் அழைக்கப்படும் அந்தப் பெண்தெய்வக் கோயில்கள் இல்லாத சிற்றூர்கள் வட மாவட்டங்களில் இல்லை. ஆண்டுக்கொரு முறை தீ மிதித் திருவிழா நடைபெறும்.18 நாட்கள் நடைபெறும் இவ்விழாவின் முதல் நாள் குறிப்பிட்ட ஒரு பெண் கைகாட்டினால்தான் தெய்வம் கோயிலிலிருந்து உற்சவத்திற்காக வெளிவரும். அந்தப் பெண்ணைச் சில ஊர்களில் தேவடியாள் என்று குறிப்பிடுவார்கள். அவர்கள் தேவரடியார்கள் தெய்வப் பணிக்காகப் பொட்டு கட்டி விடப்பட்டவர்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று.

தென்னார்க்காடு மாவட்ட கிராமம் ஒன்றில் செல்லியம்மன் கோயிலுக்காக பொட்டு கட்டி விடப்பட்ட ஒரு பெண்ணின் கதையை செடல் என்ற புதினமாக்கி, வழிபாடு என்ற பெயரில் அரங்கேறிக்கொண்டிருக்கும் சமூக அவலங்களை வேரோடும் வேரடி மண்ணோடும் நம் கண்முன் கொண்டு வந்து காட்சிப் படுத்தி நம்மைப் பதற வைக்கிறார் இமையம்.

இசை வேளாளர் இனப் பெணகளுக்குத்தான் பொட்டு கட்டும் வழக்கம் நடைமுறையில் இருக்கிறது. இது எல்லாருக்கும் தெரிந்த வழக்கம். ஆனால் இமையத்தின் புதின நாயகி செடல் பறையர்களுக்கும் கீழாக அடிமைப்பட்டுக் கிடக்கும் கூத்தாடி இனப் பெண் என்பதும் அவளுக்கு பொட்டு கட்டுவது என்பதும் இதுவரை தமிழில் பதிவாகவில்லை. முதன்முதலாக இமையத்தின் புதினம்தான் இந்த வழக்கத்தை வெளி உலகுக்கு தெரிவிக்கிறது. இசை வேளாள இனப்பெண்கள் பொட்டு கட்டப்படுவது பெரும்பாலும் அரசர்களால் கட்டப்பட்ட கோயில்களுக்குத்தான் அந்த கோயில்களுக்கென்று நிலையான வருமானம் உண்டு நிலங்கள் உண்டு எனவே அப்பெண்களுக்கு பாதுகாப்பான வாழ்க்கை நிச்சயம். ஆனால் செடல் போன்ற கூத்தாடி இனப் பெண்கள் பொட்டு கட்டப்படுவதோ எளிய கிராமக் கோயில்கள் அதற்கென நிலைத்த வருமானம் எதுவும் இல்லை ஊர்க்காரர்கள் பார்த்து ஏதாவது கொடுத்தால்தான் உண்டு. இப்படி எவ்வித பாதுகாப்பும் இல்லாத ஒரு வாழ்க்கைக்குத் தள்ளப்பட்ட ஒரு பெண்ணின் கதைதான் செடல்.

செடல் என்ற பத்து வயதே ஆன அந்த சிறுமியை பலியாடு போல கோயிலுக்கு முன்பு நிறுத்தி தலையில் தண்ணீரைத் தெளித்து மொட்டையடித்து பொட்டுகட்டி விடுகின்றனர். அதற்கு முன்பாக அச்சிறுமியின் தந்தையை ஊர்ப் பஞ்சாயத்தில் நிறுத்தி கட்டாயப்படுத்தி சம்மதிக்க வைக்கின்றனர். அதிலிருந்து அந்தப் பெண் ஊர்ப் பொதுச் சொத்தாகி விடுகிறாள் அவளுக்கென்று அந்த பருவத்திற்கே உரிய எந்தவிதமான விருப்பு வெறுப்பையும் வெளிக்காட்ட இயலாமல் அவள் தவிக்கின்ற தவிப்புகள் நம்மை வெட்கித் தலை குனிய வைக்கின்றன.

செடல் தன்னை ஈன்றெடுத்த தாய் தந்தையரை விட்டு உடன் பிறப்புகளை விட்டு தனக்கு தொடர்பில்லாத ஒரு அனாதைக் கிழவியோடு கோயிலுக்கு அருகில் ஒரு குடிசையில் குடியமர்த்தப் படுகிறாள். வீட்டுக்கு வரக்கூடாது என்று புராண புளுகுகளை அவிழ்த்து விட்டு அவளை கோயிலே கதி என்ற நிலைக்குத் தள்ளி விடுகின்றனர். ஓரிரு ஆண்டுகள் இப்படியே உருண்டோட அவ்வூரில் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. மக்கள் சோளத் தவிட்டை வறுத்து உணபதும், புற்றில் கிடைக்கும் அரிசியைச் சேகரித்து உண்பதுமாக நாட்களைக் கடத்துகின்றனர். வறுமை தாளாமல் மக்கள் இலங்கைக்குக் கப்பலேறுகின்றனர். தமிழர்கள் அதிகமாக இலங்கைகுச் சென்ற 1960 ஆம் ஆண்டு அது. அதற்கு செடலின் பெற்றோரும் விதி விலக்கல்ல.

அதன் பிறகு செடலுக்கு வாழ்க்கையே நரகமாகிறது. மறுத்துப் போன மனத்தோடு நரகத்தில் வாழப் பழகி விடுகிறாள். மூன்று பாகங்களாக அமைந்துள்ள இந்தப் புதினம் செடலின் வாழ்க்கை வரலாறாக மட்டுமில்லாமல் அரை நூற்றாண்டுக்கு முந்திய தமிழகச் சிற்றூர் ஒன்றின் அசலான வரலாற்றைப் படம் பிடிப்பதோடு இலங்கை இனச்சிக்கலையும் தொட்டுக்காட்டிச் செல்கிறது. செடலின் பெற்றோர் இலங்கைக்குச் செல்லும் காலம் அங்கு தமிழர்கள் அமைதியாக வாழ்ந்த காலம். இனக்கலவரம் தொடங்குகிற 1975 கால கட்டத்தில் செடலின் அக்காள் தமிழகம் திரும்புகிறாள் அதன் பிறகுதான் செடல் தன் சொந்த ஊருக்குத் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இவற்றையெல்லாம் இமையம் புதினத்தில் வெளிப்படையாக் கூறாமல் உள்ளுரையாக உணர்த்திச் செல்கிறார். வட்டார வழக்குகளை திணிக்காமல் தேவையான இடங்களில் மட்டும் அளவாகக் கையாண்டு இயல்பாகக் கதையை நகர்த்திச் செல்கிற பாங்கு இமையத்தின் கதைத் தொழில் நுட்ப ஆற்றலை வெளிப்படுத்துகிறது. பிற வட்டாரங்களைச் சேர்ந்தவர்களுக்கும் எளிதில் புரியும்படியான ஒரு மொழி நடை, படைப்பை மேலும் வலுப்படுத்துகிறது.

இன்றைய இளைஞர்கள் வியக்கும் படியான கற்பனை வளமிக்க உரை நடைக்கு சொந்தக்காரர்களாக நம் முன்னோர்கள் இருந்திருக்கிறார்கள் என்பது கதைப் பாத்திரங்களின் பேச்சுகளூடாக வெளிப்படுகிறது. எவ்வளவு பழமொழிகள் எத்தனை விடுகதைகள் அப்பப்பா... எல்லாம் மறைந்து விட்டனவே என்று வருந்துபவர்களுக்கு விருத்து படைக்கிறார்கள் கதை மாந்தர்கள். மொழியின் இண்டு இடுக்குகளிலெல்லாம் நுழைந்து நுட்பமாகப் பேசும் கலையை எங்கிருந்து கற்றுக்கொண்டனர் இந்த மக்கள். அடடா... படித்துப் பாருங்கள் வியந்து போவீர்கள்.

இப்படி மெல்ல நகரும் அந்த வாழ்க்கையில் சோதனைகள் தலை தூக்கத் தொடங்குகின்றன. செடலுக்குத் துணையாக இருந்த கிழவி இறந்து போக பஞ்சத்திற்குப் பிறகு பெய்த மழையில் அவளுக்காக ஊர்ப்பொதுவில் கட்டிக்கொடுத்த குடிசையும் இடிந்துபோக அவள் வயதுக்கு வந்துவிடுகிறாள். அதை சொல்வதற்குக் கூட யாருமின்றி வெள்ளத்தில் சிக்கிக்கொண்டு தவிக்கும் அவளை தூரத்து உறவினரான கூத்தாடி பொன்னன் அழைத்துச் செல்ல புதினத்தின் இரண்டாம் பகுதி தொடங்குகிறது.

சூழ்நிலை காரணமாக பொட்டு கட்டி விடப்பட்ட செடல் கூத்தாடி செடலாகிறாள். இந்த பகுதி தான் புதினத்தின் மையச் சரடாக அமைந்திருக்கிறது. பெண்வேட மிட்டு ஆண் கூத்தாடுவதுண்டு பெண் வேடத்தில் ஒரு பெண்ணே காலில் சலங்கை கட்டி நடிப்பது என்பது எத்தனை சவால்கள் நிறைந்து என்பதை செடல் நமக்கு உணர்த்துகிறார். செடலின் கால்களில் கட்டப்பட்ட சலங்கை அவளுக்கு விலங்காக மாறி தீராத்துயரில் ஆழ்த்துகிறது. கண்ணகிக்கு சிலம்பால் நிகழ்ந்த துயரத்திற்கு நிகரானது. மேலும் சில கூறுகள் சிலப்பதிகாரத்தோடு ஒப்பு நோக்கத்தக்கன. சிலப்பதிகாரத்திற்குப் பிறகு கூத்து பற்றியும் அடவுகள் பற்றியும் பல குறிப்புகள் இப்புதினத்தில் துல்லியமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. கூத்தாடுபவர்கள் என்றால் உடலை விற்றுப் பிழைப்பவர்கள் என்ற எண்ணம் மனித பொது புத்தியில் பதிவாகியிருக்கிறது என்பதை செடலோடு உறவு கொள்ளத் துடிக்கும் ஆண்கள் மறு உறுதி செய்கின்றனர். அதனை ஆபாசமோ படிப்பவர்களின் முகச்சுளிப்போ இன்றி மிக லாவமாகச் சொல்லி படைப்பின் செவ்வியல் தன்மையைக் கூட்டியிருக்கிறார் ஆசிரியர்.

கோவேறு கழுதைகள், ஆறுமுகம் ஆகிய புதினங்களை விடவும் செடல் இமையத்தின் படைப்பாற்றலை மெருகூட்டியிருக்கிறது என்பதைத் தொடக்கத்திலிருத்து அவரின் படைப்புகளைப் படித்தவர்கள் உணரலாம். பறையர்களை செல்லியம்மன் கோயிலுக்குள் அனுமதிக்காத உயர் சாதிக் காரர்கள் தங்களின் பொது நலத்திற்காக சுய நலத்தோடு பொட்டு கட்டுவதற்குமட்டும் பறையர் இனச் சிறுமியைப் பயன்படுத்திக் கொள்ளும் மேல்சாதித் தந்திரங்களை, சமூகத்தில் புரையோடிக் கிடக்கும் பழமை வாதத்தை தோலுரிப்பதோடு மனித மனங்களில் மண்டிக்கிடக்கும் மர அழுக்குகளில் வெளிச்சம் பாய்ச்சுகிறது இந்தப் படைப்பு.

கூத்தாடச் செல்கின்ற இடத்தில் செடலைக் கண்களால் மொய்க்கும் இளைஞர் கூட்டம், கோயில் திருவிழாவுக்கு சென்று அங்கு இரவில் உறங்கும் அவளை உறங்க விடாமல் சதா தொல்லை கொடுக்கும் நடுத்தர வயது ஆண்கள் என அவளைப் பொதுச் சொத்தாக, போகப் பொருளாகவே பார்க்கும் சமூகக் கொடுமைகளைப் படிப்போர் கொதிக்கும்படி எழுத்தில் வடித்திருக்கிறார். இவ்வளவையும் அவள் சற்றும் முகம் சுளிக்காமல் புன்னகையோடுதான் எதிர்கொள்ள வேண்டும் என்பது எழுதப்படாத சட்டம். தன் ஒழுக்கத்திற்கு ஒரு கேடும் நேராமல் தன்னை ஒரு தெய்வப் பெண்ணாகவே கருதி நெறி பிறழாமல் வாழும் செடல் வாசகர் மனத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துகொள்கிறாள். அந்த ஆசனமும் அவளுக்கு கடைசி வரை நிலைக்கவில்லை.

சகக் கூத்துக் கலைஞர்கள் அவளைக் கண்ணின் மணியைப் போல் காப்பாற்றி வந்தாலும் ஈடுபாடில்லாமலே கூத்தாடி வரும் செடலுக்கு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு இதுதான் வாழ்க்கை என்றாகி விடுகிறது. தீவிர கூத்தாடியான பிறகு நாடகக் குழுக்களுக்கு சவாலாக விளங்குகிறாள். பிறந்த ஊர், உறவுகளை விட்டு வந்த அவளுக்கு நடுத்தர வயதைத் தொடும்போது இலங்கையிலிருந்து திரும்பும் செடலின் அக்காள் கட்டாயப்படுத்த மீண்டும் சொந்த ஊருக்குத் திரும்புகிறாள். அதிலிருந்து புதினத்தின் மூன்றாம் பாகம் தொடங்குகிறது.

பதின் வயதில் கட்டிக் காப்பாறிய ஒழுக்க நெறியை மெல்ல கரைத்து அவளை பலவீனப்படுத்தி களங்கப்டுத்துகிறான் ஒரு காமுகன். அப்போதும் நாம்மால் செடலைத் தவறாக எண்ணமுடியவில்லை.அதற்குக் காரணம் கதாசிரியரின் நுட்பமான கதைசொல்லும் உத்திதான்.
கூத்துதான் செடலின் வாழ்க்கையாகி விட நலிவடைந்த கூத்தாடியான பாஞ்சாலி தனது குழுவை செடலிடம் ஒப்படைப்பதோடு கதை முடிகிறது. வாசகர் மனங்களில் புதினம் மேலும் மேலும் விரிவடைந்து முடிவற்ற பாதையை அமைத்துச் செல்கிறது.

வழக்கமான கதைப் போக்குதான் என்றாலும் இந்த வாழ்க்கை இது வரை வெளிவராதது. சாதிய கட்டுமானங்களும், சடங்கு சம்பிரதாயங்களும் இந்த சமூகத்தில் கால காலமாக ஒடுக்கப் பட்டவர்களை எப்படி மேலும் ஒடுக்குகின்றன. அதிலும் குறிப்பாகப் பெண்கள் சாதி வேறுபாடின்றி சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் கீழினும் கீழாக நடத்தப்படுகின்றனர், அவர்கள் ஆண்கள் நினைப்பதற்கு மாறாக சிந்தித்துக் கூடப் பார்க்கக்கூடாது என்பதில் ஆண் சமூகம் எவ்வளவு ஒற்றுமையாக இருக்கிறது என்பதையெல்லாம் செடல் போகிற போக்கில் வாசகர்களுக்கு உணர்த்திச்செல்கிறாள்.

கல்வி அறிவில்லாத செடலுக்கு இந்த சமூகம் சிறந்த பாடத்தைக் கற்றுத்தருகிறது. மெல்ல மெல்ல கற்று தேரும் அவள் சமூகத்திற்குப் பாடம் கற்றுத்தருபவளாகப் பக்குவப்படுகிறாள். இது ஒரு தனி மனுசியின் வாழ்க்கை வரலாறு மட்டுமல்ல ஒட்டு மொத்த பெண் சமூகத்தின் வரலாறாகவே வரிக்கப்படுகிறது. பெண்கள் கால காலமாக அனுபவித்து வரும் கொடுமைகளின் குறீயீடாகவே செடல் பாத்திரம் அமைந்திருக்கிறது.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் இமையத்தின் படைப்புகள் பற்றி அறிமுகம் செய்வதற்காகப் பொன்னீலன் கூறும்போது ," எங்கள் பகுதியில் கூறுவார்கள் மாம்பழம் சாப்பிட்டால் கொஞ்சம் நேரம் வாயை அப்படியே வைத்திருக்க வேண்டும் தண்ணீர் குடிக்கவோ வாய் கொப்பளிக்கவோ கூடாது. அப்பொழுதுதான் மாம்பழத்தின் சுவை நாவில் இனித்துக் கொண்டிருக்கும். அதுபோல்தான் இமையத்தின் கதைகள். அவற்றைப்படித்த பிறகு வேறு கதைகளைப் படிக்காமல் மனதுக்குள் அசைபோடத் தோன்றும் " என்றார். அப்படி தோன்றக்கூடிய ஒரு புதினமாகத்தான் செடல் அமைந்திருக்கிறது.

ஒரு புனைவுப் படைப்பாளராக வெற்றி கண்டிருக்கும் இமையம் சிறந்த ஆவணக் காப்பகராகவும், ஆய்வாளராகவும் இந்த படைப்பின் வழி நுட்பமான பல தரவுகளைப் பொதித்து வைத்திருக்கிறார். சென்ற தலைமுறையின் பண்பாட்டு ஆவணங்கள் பல இப்புதினத்தில் வைரமாய் மின்னுகின்றன. தெருக் கூத்து மரபுகள், பாடல்கள் ஒப்பாரி, வழிபாட்டுப் பாடல்கள், பழமொழிகள் பழக்க வழக்கங்கள் என வாய்மொழி வழக்காறுகள் , வாய்மொழி வரலாறுகள் என நுட்பமான பல ஆய்வுத் தகவல்களை சேகரித்து அளித்திருக்கிறார். ஆய்வாளர்களுக்கு மிகச் சிறந்த களஞ்சியமாக விளங்குவது இப்படைப்பின் கூடுதல் பலமாக நான் கருதுகிறேன்.

பதிப்பாளர் சிறப்பாக வெளியிட்டு இந்த நூலுக்கு மேலும் அழகு சேர்த்திருக்கிறார்.

செடல் - இமையம்,
க்ரியா - பக்கம் : 285
விலை : 250
நன்றி : அம்ருதா

அம்மி மிதித்து அருந்ததி பார்த்த சீன நாட்டுப்பெண்

இன்று காலை உறவினர் வீட்டுத் திருமணத்திற்கு சென்றேன். மணமகன் செந்தில்குமார் சிங்கப்பூரில் பணியாற்றுகிறார். சொந்த ஊர் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் கண்மணி நகர்.அங்கு பாணியாற்றும் சீன நாட்டுப் பெண்ணை தமிழ் முறைப்படி இன்று காலை திருமணம் செய்துகொண்டார். பெண்ணின் சொந்த ஊர் சீனாவின் ஷாங்ஷான் லிலி வாண் மாவட்டம் குங்ஜாவ் ப்ரவீன்ஸ், (பி.ஆர். சைனா) மணமகள் லியூ யிங் கூரைப் புடவை கட்டி தமிழ்ப்பெண்ணாக மாலையும் கழுத்துமாக மண மேடையில் அமர்ந்திருக்க அவரின் பெற்றோர் லியூ ஹாங்க்யூ - யாங் யூன்யிங் ஆகியோர் வேட்டியும் புடவையும் உடுத்தி தமிழர்களாக பாத பூசை சகிதம் அனைத்து சடங்குகளோடும் திருமணம் நடந்தது. தாலி கட்டியதும் மணமகள் அம்மி மிதிக்க அவரின் மாமியார் மலர்க்கொடி மெட்டி அணிவிக்க உறவினர் அனைவரும் வியந்து மணமகனின் பெற்றோர் ராசவேலு மலர்க்கொடியை பாராட்டினர். ராசவேலு வெண்பா எழுதுவதில் வல்லவர். 2000 குறள் வெண்பாக்களை எழுதி வைத்துள்ளார் வெளியிடுவதற்குத் தயாராக.
மணமக்களுக்கு வாழ்த்து கூறி விடை பெற்றோம். நீங்களும் மண மக்களை வாழ்த்துங்கள். இந்திய சீன நல்லுறவிற்கு இரு குடும்பங்களும் தங்கள் பங்களிப்பை எளிமையாகவும் உறுதியாகவும் செய்திருப்பதற்காக அவர்களுக்கு நம் பாரட்டுகள்.

Wednesday, January 5, 2011

கவிஞர் தமிழச்சிதங்கபாண்டியன் நூல் வெளியீட்டு விழா காட்சிகள்

கவிஞர் தமிழச்சிதங்கபாண்டியன் நூல் வெளியீட்டு விழா காட்சிகள்


விழாவில் 3 ஆம் அரங்கு குழுவினர் நிகழ்த்திய எட்டு ரூபா செப்புக்குடம் நிகழ்த்து கலைக் காட்சி


மூன்றாம் அரங்குக் குழுவினர்




நூல்களின் முகப்பு


டாக்டர் ஹெச்.எஸ்.சிவப்ரகாஷ் நூலை வெளியிட பெற்றுக்கொள்ளும் குழந்தைகள் இமையாதங்கம் தென்னரசு, இதையாதங்கம் தென்னரசு