கலை, இலக்கியம்,அரசியல்,குறும்படங்கள்,கல்வி,நாட்டுப்புறவியல் பயண அனுபவம் குறித்த பதிவுகள்
தமிழ்மணம்
target="_blank">
Saturday, February 5, 2011
கண்ணகியின் சிலம்புக்கு நிகரான செடலின் சலங்கை.
தமிழகத்தில் நாட்டுப்புற மக்களிடையே பலவகையான வழிபாட்டுமுறைகள் நடைமுறையில் உள்ளன. அவற்றுள் வட மாவட்ட மக்களிடையே பெரும்பான்மையாகக் காணப்படுவது திரௌபதி அம்மன் வழிபாடு. இவ்வழிபாட்டு முறை குறித்து தமிழில் குறிப்பிடும்படியான நூல்கள் வெளிவரவில்லை. அமெரிக்க பல்கலைக் கழக பேராசிரியர் அல்ப் கில்டபைடல்தான் திரௌபதி வழிபாட்டு மரபு குறித்து தமிழகத்திற்கு வந்து ஆய்வு செய்து (The cult of Draupadi - on Hindu Ritual and the Goddess) என்ற நூலை முதன் முதலில் வெளியிட்டார். திரௌபதி அம்மன் வழிபாடு சார்ந்த படைப்பிலக்கியங்களும் தமிழில் இல்லை என்றே கூறலாம்.
செல்லியம்மன், செல்லியாயி, துரோபதியம்மன் என்றெல்லாம் அழைக்கப்படும் அந்தப் பெண்தெய்வக் கோயில்கள் இல்லாத சிற்றூர்கள் வட மாவட்டங்களில் இல்லை. ஆண்டுக்கொரு முறை தீ மிதித் திருவிழா நடைபெறும்.18 நாட்கள் நடைபெறும் இவ்விழாவின் முதல் நாள் குறிப்பிட்ட ஒரு பெண் கைகாட்டினால்தான் தெய்வம் கோயிலிலிருந்து உற்சவத்திற்காக வெளிவரும். அந்தப் பெண்ணைச் சில ஊர்களில் தேவடியாள் என்று குறிப்பிடுவார்கள். அவர்கள் தேவரடியார்கள் தெய்வப் பணிக்காகப் பொட்டு கட்டி விடப்பட்டவர்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று.
தென்னார்க்காடு மாவட்ட கிராமம் ஒன்றில் செல்லியம்மன் கோயிலுக்காக பொட்டு கட்டி விடப்பட்ட ஒரு பெண்ணின் கதையை செடல் என்ற புதினமாக்கி, வழிபாடு என்ற பெயரில் அரங்கேறிக்கொண்டிருக்கும் சமூக அவலங்களை வேரோடும் வேரடி மண்ணோடும் நம் கண்முன் கொண்டு வந்து காட்சிப் படுத்தி நம்மைப் பதற வைக்கிறார் இமையம்.
இசை வேளாளர் இனப் பெணகளுக்குத்தான் பொட்டு கட்டும் வழக்கம் நடைமுறையில் இருக்கிறது. இது எல்லாருக்கும் தெரிந்த வழக்கம். ஆனால் இமையத்தின் புதின நாயகி செடல் பறையர்களுக்கும் கீழாக அடிமைப்பட்டுக் கிடக்கும் கூத்தாடி இனப் பெண் என்பதும் அவளுக்கு பொட்டு கட்டுவது என்பதும் இதுவரை தமிழில் பதிவாகவில்லை. முதன்முதலாக இமையத்தின் புதினம்தான் இந்த வழக்கத்தை வெளி உலகுக்கு தெரிவிக்கிறது. இசை வேளாள இனப்பெண்கள் பொட்டு கட்டப்படுவது பெரும்பாலும் அரசர்களால் கட்டப்பட்ட கோயில்களுக்குத்தான் அந்த கோயில்களுக்கென்று நிலையான வருமானம் உண்டு நிலங்கள் உண்டு எனவே அப்பெண்களுக்கு பாதுகாப்பான வாழ்க்கை நிச்சயம். ஆனால் செடல் போன்ற கூத்தாடி இனப் பெண்கள் பொட்டு கட்டப்படுவதோ எளிய கிராமக் கோயில்கள் அதற்கென நிலைத்த வருமானம் எதுவும் இல்லை ஊர்க்காரர்கள் பார்த்து ஏதாவது கொடுத்தால்தான் உண்டு. இப்படி எவ்வித பாதுகாப்பும் இல்லாத ஒரு வாழ்க்கைக்குத் தள்ளப்பட்ட ஒரு பெண்ணின் கதைதான் செடல்.
செடல் என்ற பத்து வயதே ஆன அந்த சிறுமியை பலியாடு போல கோயிலுக்கு முன்பு நிறுத்தி தலையில் தண்ணீரைத் தெளித்து மொட்டையடித்து பொட்டுகட்டி விடுகின்றனர். அதற்கு முன்பாக அச்சிறுமியின் தந்தையை ஊர்ப் பஞ்சாயத்தில் நிறுத்தி கட்டாயப்படுத்தி சம்மதிக்க வைக்கின்றனர். அதிலிருந்து அந்தப் பெண் ஊர்ப் பொதுச் சொத்தாகி விடுகிறாள் அவளுக்கென்று அந்த பருவத்திற்கே உரிய எந்தவிதமான விருப்பு வெறுப்பையும் வெளிக்காட்ட இயலாமல் அவள் தவிக்கின்ற தவிப்புகள் நம்மை வெட்கித் தலை குனிய வைக்கின்றன.
செடல் தன்னை ஈன்றெடுத்த தாய் தந்தையரை விட்டு உடன் பிறப்புகளை விட்டு தனக்கு தொடர்பில்லாத ஒரு அனாதைக் கிழவியோடு கோயிலுக்கு அருகில் ஒரு குடிசையில் குடியமர்த்தப் படுகிறாள். வீட்டுக்கு வரக்கூடாது என்று புராண புளுகுகளை அவிழ்த்து விட்டு அவளை கோயிலே கதி என்ற நிலைக்குத் தள்ளி விடுகின்றனர். ஓரிரு ஆண்டுகள் இப்படியே உருண்டோட அவ்வூரில் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. மக்கள் சோளத் தவிட்டை வறுத்து உணபதும், புற்றில் கிடைக்கும் அரிசியைச் சேகரித்து உண்பதுமாக நாட்களைக் கடத்துகின்றனர். வறுமை தாளாமல் மக்கள் இலங்கைக்குக் கப்பலேறுகின்றனர். தமிழர்கள் அதிகமாக இலங்கைகுச் சென்ற 1960 ஆம் ஆண்டு அது. அதற்கு செடலின் பெற்றோரும் விதி விலக்கல்ல.
அதன் பிறகு செடலுக்கு வாழ்க்கையே நரகமாகிறது. மறுத்துப் போன மனத்தோடு நரகத்தில் வாழப் பழகி விடுகிறாள். மூன்று பாகங்களாக அமைந்துள்ள இந்தப் புதினம் செடலின் வாழ்க்கை வரலாறாக மட்டுமில்லாமல் அரை நூற்றாண்டுக்கு முந்திய தமிழகச் சிற்றூர் ஒன்றின் அசலான வரலாற்றைப் படம் பிடிப்பதோடு இலங்கை இனச்சிக்கலையும் தொட்டுக்காட்டிச் செல்கிறது. செடலின் பெற்றோர் இலங்கைக்குச் செல்லும் காலம் அங்கு தமிழர்கள் அமைதியாக வாழ்ந்த காலம். இனக்கலவரம் தொடங்குகிற 1975 கால கட்டத்தில் செடலின் அக்காள் தமிழகம் திரும்புகிறாள் அதன் பிறகுதான் செடல் தன் சொந்த ஊருக்குத் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இவற்றையெல்லாம் இமையம் புதினத்தில் வெளிப்படையாக் கூறாமல் உள்ளுரையாக உணர்த்திச் செல்கிறார். வட்டார வழக்குகளை திணிக்காமல் தேவையான இடங்களில் மட்டும் அளவாகக் கையாண்டு இயல்பாகக் கதையை நகர்த்திச் செல்கிற பாங்கு இமையத்தின் கதைத் தொழில் நுட்ப ஆற்றலை வெளிப்படுத்துகிறது. பிற வட்டாரங்களைச் சேர்ந்தவர்களுக்கும் எளிதில் புரியும்படியான ஒரு மொழி நடை, படைப்பை மேலும் வலுப்படுத்துகிறது.
இன்றைய இளைஞர்கள் வியக்கும் படியான கற்பனை வளமிக்க உரை நடைக்கு சொந்தக்காரர்களாக நம் முன்னோர்கள் இருந்திருக்கிறார்கள் என்பது கதைப் பாத்திரங்களின் பேச்சுகளூடாக வெளிப்படுகிறது. எவ்வளவு பழமொழிகள் எத்தனை விடுகதைகள் அப்பப்பா... எல்லாம் மறைந்து விட்டனவே என்று வருந்துபவர்களுக்கு விருத்து படைக்கிறார்கள் கதை மாந்தர்கள். மொழியின் இண்டு இடுக்குகளிலெல்லாம் நுழைந்து நுட்பமாகப் பேசும் கலையை எங்கிருந்து கற்றுக்கொண்டனர் இந்த மக்கள். அடடா... படித்துப் பாருங்கள் வியந்து போவீர்கள்.
இப்படி மெல்ல நகரும் அந்த வாழ்க்கையில் சோதனைகள் தலை தூக்கத் தொடங்குகின்றன. செடலுக்குத் துணையாக இருந்த கிழவி இறந்து போக பஞ்சத்திற்குப் பிறகு பெய்த மழையில் அவளுக்காக ஊர்ப்பொதுவில் கட்டிக்கொடுத்த குடிசையும் இடிந்துபோக அவள் வயதுக்கு வந்துவிடுகிறாள். அதை சொல்வதற்குக் கூட யாருமின்றி வெள்ளத்தில் சிக்கிக்கொண்டு தவிக்கும் அவளை தூரத்து உறவினரான கூத்தாடி பொன்னன் அழைத்துச் செல்ல புதினத்தின் இரண்டாம் பகுதி தொடங்குகிறது.
சூழ்நிலை காரணமாக பொட்டு கட்டி விடப்பட்ட செடல் கூத்தாடி செடலாகிறாள். இந்த பகுதி தான் புதினத்தின் மையச் சரடாக அமைந்திருக்கிறது. பெண்வேட மிட்டு ஆண் கூத்தாடுவதுண்டு பெண் வேடத்தில் ஒரு பெண்ணே காலில் சலங்கை கட்டி நடிப்பது என்பது எத்தனை சவால்கள் நிறைந்து என்பதை செடல் நமக்கு உணர்த்துகிறார். செடலின் கால்களில் கட்டப்பட்ட சலங்கை அவளுக்கு விலங்காக மாறி தீராத்துயரில் ஆழ்த்துகிறது. கண்ணகிக்கு சிலம்பால் நிகழ்ந்த துயரத்திற்கு நிகரானது. மேலும் சில கூறுகள் சிலப்பதிகாரத்தோடு ஒப்பு நோக்கத்தக்கன. சிலப்பதிகாரத்திற்குப் பிறகு கூத்து பற்றியும் அடவுகள் பற்றியும் பல குறிப்புகள் இப்புதினத்தில் துல்லியமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. கூத்தாடுபவர்கள் என்றால் உடலை விற்றுப் பிழைப்பவர்கள் என்ற எண்ணம் மனித பொது புத்தியில் பதிவாகியிருக்கிறது என்பதை செடலோடு உறவு கொள்ளத் துடிக்கும் ஆண்கள் மறு உறுதி செய்கின்றனர். அதனை ஆபாசமோ படிப்பவர்களின் முகச்சுளிப்போ இன்றி மிக லாவமாகச் சொல்லி படைப்பின் செவ்வியல் தன்மையைக் கூட்டியிருக்கிறார் ஆசிரியர்.
கோவேறு கழுதைகள், ஆறுமுகம் ஆகிய புதினங்களை விடவும் செடல் இமையத்தின் படைப்பாற்றலை மெருகூட்டியிருக்கிறது என்பதைத் தொடக்கத்திலிருத்து அவரின் படைப்புகளைப் படித்தவர்கள் உணரலாம். பறையர்களை செல்லியம்மன் கோயிலுக்குள் அனுமதிக்காத உயர் சாதிக் காரர்கள் தங்களின் பொது நலத்திற்காக சுய நலத்தோடு பொட்டு கட்டுவதற்குமட்டும் பறையர் இனச் சிறுமியைப் பயன்படுத்திக் கொள்ளும் மேல்சாதித் தந்திரங்களை, சமூகத்தில் புரையோடிக் கிடக்கும் பழமை வாதத்தை தோலுரிப்பதோடு மனித மனங்களில் மண்டிக்கிடக்கும் மர அழுக்குகளில் வெளிச்சம் பாய்ச்சுகிறது இந்தப் படைப்பு.
கூத்தாடச் செல்கின்ற இடத்தில் செடலைக் கண்களால் மொய்க்கும் இளைஞர் கூட்டம், கோயில் திருவிழாவுக்கு சென்று அங்கு இரவில் உறங்கும் அவளை உறங்க விடாமல் சதா தொல்லை கொடுக்கும் நடுத்தர வயது ஆண்கள் என அவளைப் பொதுச் சொத்தாக, போகப் பொருளாகவே பார்க்கும் சமூகக் கொடுமைகளைப் படிப்போர் கொதிக்கும்படி எழுத்தில் வடித்திருக்கிறார். இவ்வளவையும் அவள் சற்றும் முகம் சுளிக்காமல் புன்னகையோடுதான் எதிர்கொள்ள வேண்டும் என்பது எழுதப்படாத சட்டம். தன் ஒழுக்கத்திற்கு ஒரு கேடும் நேராமல் தன்னை ஒரு தெய்வப் பெண்ணாகவே கருதி நெறி பிறழாமல் வாழும் செடல் வாசகர் மனத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துகொள்கிறாள். அந்த ஆசனமும் அவளுக்கு கடைசி வரை நிலைக்கவில்லை.
சகக் கூத்துக் கலைஞர்கள் அவளைக் கண்ணின் மணியைப் போல் காப்பாற்றி வந்தாலும் ஈடுபாடில்லாமலே கூத்தாடி வரும் செடலுக்கு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு இதுதான் வாழ்க்கை என்றாகி விடுகிறது. தீவிர கூத்தாடியான பிறகு நாடகக் குழுக்களுக்கு சவாலாக விளங்குகிறாள். பிறந்த ஊர், உறவுகளை விட்டு வந்த அவளுக்கு நடுத்தர வயதைத் தொடும்போது இலங்கையிலிருந்து திரும்பும் செடலின் அக்காள் கட்டாயப்படுத்த மீண்டும் சொந்த ஊருக்குத் திரும்புகிறாள். அதிலிருந்து புதினத்தின் மூன்றாம் பாகம் தொடங்குகிறது.
பதின் வயதில் கட்டிக் காப்பாறிய ஒழுக்க நெறியை மெல்ல கரைத்து அவளை பலவீனப்படுத்தி களங்கப்டுத்துகிறான் ஒரு காமுகன். அப்போதும் நாம்மால் செடலைத் தவறாக எண்ணமுடியவில்லை.அதற்குக் காரணம் கதாசிரியரின் நுட்பமான கதைசொல்லும் உத்திதான்.
கூத்துதான் செடலின் வாழ்க்கையாகி விட நலிவடைந்த கூத்தாடியான பாஞ்சாலி தனது குழுவை செடலிடம் ஒப்படைப்பதோடு கதை முடிகிறது. வாசகர் மனங்களில் புதினம் மேலும் மேலும் விரிவடைந்து முடிவற்ற பாதையை அமைத்துச் செல்கிறது.
வழக்கமான கதைப் போக்குதான் என்றாலும் இந்த வாழ்க்கை இது வரை வெளிவராதது. சாதிய கட்டுமானங்களும், சடங்கு சம்பிரதாயங்களும் இந்த சமூகத்தில் கால காலமாக ஒடுக்கப் பட்டவர்களை எப்படி மேலும் ஒடுக்குகின்றன. அதிலும் குறிப்பாகப் பெண்கள் சாதி வேறுபாடின்றி சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் கீழினும் கீழாக நடத்தப்படுகின்றனர், அவர்கள் ஆண்கள் நினைப்பதற்கு மாறாக சிந்தித்துக் கூடப் பார்க்கக்கூடாது என்பதில் ஆண் சமூகம் எவ்வளவு ஒற்றுமையாக இருக்கிறது என்பதையெல்லாம் செடல் போகிற போக்கில் வாசகர்களுக்கு உணர்த்திச்செல்கிறாள்.
கல்வி அறிவில்லாத செடலுக்கு இந்த சமூகம் சிறந்த பாடத்தைக் கற்றுத்தருகிறது. மெல்ல மெல்ல கற்று தேரும் அவள் சமூகத்திற்குப் பாடம் கற்றுத்தருபவளாகப் பக்குவப்படுகிறாள். இது ஒரு தனி மனுசியின் வாழ்க்கை வரலாறு மட்டுமல்ல ஒட்டு மொத்த பெண் சமூகத்தின் வரலாறாகவே வரிக்கப்படுகிறது. பெண்கள் கால காலமாக அனுபவித்து வரும் கொடுமைகளின் குறீயீடாகவே செடல் பாத்திரம் அமைந்திருக்கிறது.
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் இமையத்தின் படைப்புகள் பற்றி அறிமுகம் செய்வதற்காகப் பொன்னீலன் கூறும்போது ," எங்கள் பகுதியில் கூறுவார்கள் மாம்பழம் சாப்பிட்டால் கொஞ்சம் நேரம் வாயை அப்படியே வைத்திருக்க வேண்டும் தண்ணீர் குடிக்கவோ வாய் கொப்பளிக்கவோ கூடாது. அப்பொழுதுதான் மாம்பழத்தின் சுவை நாவில் இனித்துக் கொண்டிருக்கும். அதுபோல்தான் இமையத்தின் கதைகள். அவற்றைப்படித்த பிறகு வேறு கதைகளைப் படிக்காமல் மனதுக்குள் அசைபோடத் தோன்றும் " என்றார். அப்படி தோன்றக்கூடிய ஒரு புதினமாகத்தான் செடல் அமைந்திருக்கிறது.
ஒரு புனைவுப் படைப்பாளராக வெற்றி கண்டிருக்கும் இமையம் சிறந்த ஆவணக் காப்பகராகவும், ஆய்வாளராகவும் இந்த படைப்பின் வழி நுட்பமான பல தரவுகளைப் பொதித்து வைத்திருக்கிறார். சென்ற தலைமுறையின் பண்பாட்டு ஆவணங்கள் பல இப்புதினத்தில் வைரமாய் மின்னுகின்றன. தெருக் கூத்து மரபுகள், பாடல்கள் ஒப்பாரி, வழிபாட்டுப் பாடல்கள், பழமொழிகள் பழக்க வழக்கங்கள் என வாய்மொழி வழக்காறுகள் , வாய்மொழி வரலாறுகள் என நுட்பமான பல ஆய்வுத் தகவல்களை சேகரித்து அளித்திருக்கிறார். ஆய்வாளர்களுக்கு மிகச் சிறந்த களஞ்சியமாக விளங்குவது இப்படைப்பின் கூடுதல் பலமாக நான் கருதுகிறேன்.
பதிப்பாளர் சிறப்பாக வெளியிட்டு இந்த நூலுக்கு மேலும் அழகு சேர்த்திருக்கிறார்.
செடல் - இமையம்,
க்ரியா - பக்கம் : 285
விலை : 250
நன்றி : அம்ருதா
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment