அன்புயிர் புகழ் ! உன் அன்பு மடலும் படைப்புகளும் கிடைத்தன. அரசு ' தீட்டு ' படைப்பையும் இன்று கொடுத்தார். எழுது. எழுது. இது அச்சிற்கு... இது மற்றவர் பார்வைக்கு என்ற எண்ணம் இல்லாமல் எழுது. உனக்கென ஒரு மொழி அமையும் நேரமிது. அதன் செழுமை உணரும் வேகத்தில் எழுது. டாக்டர் கூட உனது
' கரும்பு ' கதையைப் படித்துவிட்டு அரசுவிடம் உன்னை விசாரித்திருக்கிறார். தொடர்ந்து எழுது. சிறுகதை வடிவமே சிறந்த வடிவம். முக்கியத்துவம் கொடு. கோணங்கி, தமிழ்ச்செல்வன், பூமணி, வண்ணதாசன், வண்ணநிலவன் இவர்களோடு கி.ரா. கிழவனையும் படி. வண்ணதாசன் வித்தியாசமான ஆள். மனிதன் - மிருகம், இயற்கை என்கிற வித்தியாசம் பார்க்கத் தெரியாத வித்தியாசமான ஆள். நுட்பமான பார்வை, மிருதுவான மனசு, நளினமான நடை. தேடிப் படி. எவனையும் ரசி. நீயாக மலர். உன்னைச் சூழ்ந்த மக்களில்... இயற்கையில் படைப்புகள் பறி. அவ்வப்போது மடலிடு. இப்படி இடைவெளி விடாதே. அன்பின் அம்மா, அப்பா,கரிகாலன் அனைவரையும் மிக மிக கேட்டதாகக் கூறு. இங்கே புத்தகக் கண்காட்சி நிகழ்கிறது. வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். என்ன பையன் நீ !அண்ணமலைப் பல்கலைக் கழகத்திலா ! எதையாவது சாதித்துவிட்டு அங்கு பேசலாமே புகழ். இப்போது வேண்டுமா ? யோசி, அப்புறம் உன் இஷ்டம். மேடத்திடமும் கேட்டுக்கொள்.
உடன் பதில் எழுது.
அன்புடன்
அறிவுமதி.
07.01.1993
குறிப்பு: கடிதத்தில் டாக்டர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது மருத்துவர் ராமதாசு அவர்களை. அப்போது தினப்புரட்சி நாளிதழில் ஞாயிறுதோறும் மக்கள் இலக்கியம் என்றொரு பக்கம் வெளியாகும் அதன் பொறுப்பாசிரியர் ப. திருநாவுக்கரசு (தாமரைச்செல்வி பதிப்பகம் ). அவரைத்தான் அரசு என அறிவுமதி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment