புதுடெல்லி : இந்திய மக்கள் தொகை 121 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் மக்கள் தொகை 18 கோடியே 10 லட்சம் அதிகரித்துள்ளது. தமிழகத்தின் மக்கள்தொகை 7 கோடி 21 லட்சத்து 38,958 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் 10 ஆண்டுக்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
கடந்த 1872&ம் ஆண்டு முதல் இதுவரை 14 கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டு உள்ளன. கடைசியாக, 2001&ம் ஆண்டு இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது, இந்திய மக்கள்தொகை 103 கோடியாக இருந்தது. இந்நிலையில், 2001&2011 ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பை 2 கட்டமாக நடத்த முடிவு செய்யப்பட்டது.
முதல் கட்ட கணக்கெடுப்பு, கடந்த ஆண்டு மே 1ம் தேதி தொடங்கியது. அப்போது, வீடுகள் போன்றவை கணக்கெடுக்கப்பட்டன. பின்னர், 2&ம் கட்ட கணக்கெடுப்பு கடந்த பிப்ரவரி 9ம் தேதி தொடங்கி, 28ம் தேதி முடிந்தது. இதில், 25 லட்சம் பேர் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த பணிக்காக ஸி2,200 கோடி செலவிடப்பட்டது.
கணக்கெடுப்பில் கிடைத்த முதல் புள்ளி விவரத்தை மத்திய உள்துறை செயலாளர் ஜி.கே.பிள்ளையும், இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு துறையின் பதிவாளர் ஜெனரல் சந்திரமவுலியும் டெல்லியில் நேற்று வெளியிட்டனர். அதன்படி, இந்திய மக்கள்தொகை இப்போது 121 கோடியாக உயர்ந்துள்ளது.
இது கடந்த முறையை விட 18 கோடியே 10 லட்சம் அதிகம். 62.37 கோடி ஆண்களும், 58.65 கோடி பெண்களும் உள்ளனர். கணக்கெடுப்பின்படி, ஆயிரம் ஆண்களுக்கு 914 பெண்கள் உள்ளனர். 2001ல் இருந்து கடந்த 10 ஆண்டுகளில் மக்கள்தொகை பெருக்கம் 17.69 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த முறை இது 21.15 சதவீதமாக இருந்தது.
நாட்டிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமாக தொடர்ந்து, உத்தர பிரதேசமே நீடிக்கிறது. இங்கு இப்போது 19 கோடியே 90 லட்சம் பேர் உள்ளனர். குறைந்த மக்கள் தொகை கொண்ட பகுதியாக லட்சத்தீவு (64,429) உள்ளது. இந்தியாவின் இப்போதைய மக்கள் தொகை அமெரிக்கா, இந்தோனேஷியா, பிரேசில், பாகிஸ்தான் மற்றும் வங்கதேச நாடுகளின் மொத்த மக்கள் தொகையை விட அதிகம். உத்தர பிரதேசம், மகாராஷ்டிராவின் மொத்த மக்கள் தொகை அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையை விட அதிகமாக உள்ளது. தமிழக மக்கள்தொகை 7 கோடி 21 லட்சத்து 38,958 ஆக உயர்ந்துள்ளது.
மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியாக டெல்லியின் வட கிழக்கு மாவட்டமும், நெருக்கம் குறைந்த பகுதியாக அருணாச்சல பிரதேசத்தில் உள்ள திபாங் பள்ளத்தாக்கும் உள்ளன. டெல்லி வட கிழக்கு மாவட்டத்தில் ஒரு சதுர கி.மீ.க்கு 37,346 பேரும், திபாங் பள்ளத்தாக்கில் ஒரு சதுர கி.மீ.க்கு ஒருவரும் வசிக்கின்றனர்.
சிறுவர்கள் குறைவு
கடந்த 2001 கணக்கெடுப்பின்போது, நாட்டில் 6 வயது வரையான சிறுவர்கள் 16 கோடியே 38 லட்சம் பேர் இருந்தனர். இப்போது இந்த எண்ணிக்கை 15 கோடியே 88 லட்சமாக குறைந்துள்ளது. 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்த வயதில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள் உள்ளனர். 5 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், ஒரு லட்சம் எண்ணிக்கையை இன்னும் தாண்டவில்லை. அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில் 2 கோடியே 97 லட்சம் சிறுவர்களும், பீகாரில் 1 கோடியே 86 லட்சம் சிறுவர்களும் உள்ளனர்.
கல்வியறிவு அதிகரிப்பு
நடப்பு கணக்கெடுப்பின்படி நாட்டின் கல்வியறிவு சதவீதம் 74.04 சதவீதமாக உள்ளது. 2001ல் இது 64.83 சதவீதமாக இருந்தது. கடந்த 10 ஆண்டுகளில் 9.21 சதவீதம் அதிகமாகியுள்ளது. 2001ம் ஆண்டில் 53.67 சதவீதமாக இருந்த பெண்கள் கல்வியறிவு, இப்போது 65.46 சதவீதமாக உயர்ந்துள்ளது. 2001ல் 75.26 சதவீதமாக இருந்த ஆண்களின் கல்வியறிவு இப்போது 82.14 சதவீதமாக அதிகரித்துள்ளது.
கல்வியறிவில் கேரளாவே தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. அதன் கல்வியறிவு சதவீதம் 93.91. மாவட்ட அளவில் மிசோரம் மாநிலத்தில் உள்ள செர்ச்சிப் மாவட்டம் (98.76 சதவீதம்), ஐஸ்வால் மாவட்டம் (98.50 சதவீதம்) முதல் 2 இடங்களை பிடித்துள்ளன. கேரளாவை தொடர்ந்து லட்சத்தீவு 92.28 சதவீதத்துடன் 2வது இடம் வகிக்கிறது. கல்வியறிவு சதவீதத்தில் வழக்கம்போல் பீகார் கடைசி இடத்தில் (63.82 சதவீதம்) உள்ளது. புதுச்சேரி உட்பட 10 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் 85 சதவீத கல்வியறிவை எட்டியுள்ளன.
நன்றி : தினகரன்
No comments:
Post a Comment