***
உள்ளூரில் கைவினைக் கலைஞர்கள் யாராவது இருக்கிறார்களா என்று மாணவர்களிடம் கேட்டபோது "அப்படியெனன்றால்?" என்பது போல் விழித்தனர். உள்ளூரில் கிடைக்கும் தாவர கொடிகளைக் கொண்டு கூடை தட்டு போன்ற புழங்கு பொருள்களைப் பின்ன தெரிந்தவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று கேட்க எங்க தாத்தாவுக்கு தெரியும் சார் என்றனர் கோகுலும் கோபிகாவும். தலைமை ஆசிரியரின் அனுமதியோடு அவர்களின் தாத்தாவை நேரில் சந்தித்து உங்களுக்குத் தெரிந்த கலைகளை எங்கள் மாணவர்களுக்கு கற்றுத் தரவேண்டும் என்று கேட்டதும் பள்ளிக்கு வர ஒப்புக் கொண்டார். அதற்கு தேவையான கசங்கு ( ஈச்சங்கழி) வெட்டவேண்டுமே எனக்கு இப்போது வேலை இருக்கிறது என்றார். நாங்கள் வெட்டி வைக்கிறோம். நீங்கள் பின்னிக் காட்டினால் போதும் என்று கூறிவிட்டு வந்தோம். மாலை 3.00 மணிக்கு மன்ற செயல்பாட்டுக்கு சிறப்பு விருந்தினராக எங்கள் அழைப்பை ஏற்று எம் மாணவர்களுக்கு ஈச்சங்கூடை எப்படி பின்னுவது என்று செயல் விளக்கமளித்தார். இதனை குள்ளபுட்டி என்று குறிப்பிடுவர். தானியங்களை வயலில் விதைக்க இந்த குள்ள புட்டியைத்தான் பயன்படுத்துவர். கைவினைக் கலைஞர் திரு. பெரியசாமி அவர்கள் மாட்டு சாணம் அள்ளப் பயன்படும் தட்டு ( அழிஞ்சில் குச்சிகளைக் கொண்டு பின்னுவது) ஈச்சம்பாய், தென்னங்கீற்று, பனை ஓலை தடுக்கு, சம்பங்கூடு, பிரிமணை, நைலான் கயிறு ஆகிய கைவினைப் பொருள்களை உருவாக்கத் தெரிந்தவர்.
ஒரு சிறு கூடையை உருவாக்க எத்தனை மணி நேர உழைப்பு தேவைப் படுகிறது என்பதை பார்த்த மாணவர்களிடம் இந்த உழைப்புக்குத் தகுந்த ஊதியத்தை கொடுக்க வேண்டும். அதனால்தான் கைவினைப் பொருள்களும் கைத்தரி துணிகளும் சற்று விலை கூடுதலாக இருக்கிறது. எனவே அந்த உழைப்பைப் போற்ற வேண்டும் என்றால் அவர்களிடம் பேரம் பேசாமல் உரிய விலை கொடுத்து வாங்கவேண்டும் என்ற நற் கருத்தை மாணவர் மனத்தில் பதிய வைத்தோம்.
No insights to show
No comments:
Post a Comment