தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking

Thursday, November 26, 2015

நகர்க் குருவி திறனாய்வு கவிஞர் கி.தனவேல்



கவிஞர் கி.தனவேல் பணி நிறைவு பெற்ற இந்திய ஆட்சிப் பணி அலுவலர். தமிழ்நாட்டு அரசுத் தொழில்துறையின் முதன்மைச் செயலராகப் பணியாற்றியவர். எனது நகர்க்குருவி கவிதை நூலைப் படித்து எனக்கு எழுதிய கடிதம் இங்கே ...

அன்பார்ந்த இரத்தின புகழேந்தி,
            வணக்கம் உங்களது ‘மண்கவுச்சி’ கவிதைகளை ஏற்கனவே துய்த்துவிட்ட எனக்கு சமீபத்தில் உங்களது ‘நகர்க்குருவி’ கவிதைத் தொகுப்பு கிடைத்த்து.

“சுட்டெரிக்கும் கோடையிலும்கூட
திருமுட்டம் செல்லும்போதெல்லாம்
வெள்ளாற்றின் தென்கரையில் பார்த்திருக்கிறோம்
ஓடிவரும் ஊற்று நீரை

கால் நடைகளின்
உரும நேர
                                                உயிர்த் தண்ணீர் அது!”                                          (நிரல்)
என வெள்ளாற்றின் ஊற்று நீரை நீங்கள் நினைவு படுத்தும் போது வறண்டுபோன விருத்தாசலம் மணிமுத்தா நதியில் கோடையிலும் கொடிபோல ஒடிக்கொண்டிருந்த ஊற்று நீரைப் பார்த்த எனது பள்ளிக் கூட நாட்கள் நினைவுக்கு வருகின்றன.
“அன்று முதல்
பல்லிகள்
நம்மை மேய்க்கத் தொடங்கி வருகின்றன”
என வரும் ‘பல்லி பயம்’ நயமான கவிதை.  ‘மரணத்தை மறந்து’ கவிதையில் சிறுவர்களின் சிந்தை சித்திரமாக்கப் பட்டுள்ளது.  ‘ஒரு இறுதிச்சடங்கு’ நல்லபதிவு.  ‘ஒருவன் நீரை ஊற்றிக் காப்பாற்றினான் நகரத்தின் மானத்தை’ (அணைத்தல்) நல்ல கவிதை.
“இரவில் செத்து
காலையில் பிழைத்த
அமைச்சர்கள் காத்திருக்கின்றனர்
கழிவறை செல்வதற்கு
                                    அரசியின் ஆணையை எதிர்பார்த்து”                       (வித்தைக்காரி)
இது சிறந்த அங்கதக் கவிதை.
நடப்பது என்பது
நடந்தது ஆகிவிட்டது
மருத்துவரின் ஆலோசனையால்
இன்றும்
அதிகாலையில்
நடந்து கொண்டுத்தான் இருக்கின்றனர்
                                                நகரத்து மனிதர்கள்.             (நடந்த கதை)
“உற்சாகத்தோடு
வீடு திரும்பும்
ஒவ்வொரு அந்தியிலும்
அவனுக்கு
கண்ணீரால் எழுதக்
காத்திருக்கும்
                       பை நிறைய வீட்டுப்பாடம் ”             (படிப்பு)
இதையும் ஒரு ஆசிரியர் தான் சொல்கிறார்.  நாம் தப்பித்துவிட்டோம் என்ற ஆறுதல்தான் பெற்றோர்களுக்கு.  ‘நிலாவிழுந்தமாடி’ அழகிய கவிதை.
“மரணத்திலிருந்து தப்பிய
பறவைகளை எண்ணி
மகிழ்ந்த கவிஞனுக்கும்
உமிழ்நீர் சுரக்கத் தொடங்கியது
                                    கொக்குக் கறியின் சுவை கேட்டறிந்து. ”    (உயிர் பிழைத்தல்)
இக்கவிதை வரிகள் நடப்பியல் மன முரண்பாடுகளை நன்றாகச் சித்திரித்துள்ளன.
“அங்காடியைக் கைகளிலேந்தி
சிற்றூர்களின் தெருக்களில்
அலைந்து திரிந்து
அரைஞாண் கயிறு விற்பவர்கள்
இப்போது காணக் கிடைப்பதில்லை”
(அரைஞாண் கயிறும் ஆனைமுகக் கடவுளும்)
‘அரைஞாண் கயிறும் ஆனைமுகக் கடவுளும்’ என்ற கவிதை நடப்பியலையும் தொன்மத்தையும் சுட்டிக் காட்டி அவை அறுந்து போனதை அழகாய்ச் சொல்கிறது.
“அன்று
தொல்தமிழர் வீடுகளில்
ஆட்டுக்கறி தின்ற
எங்கள் முருகன்
இன்று பழனியில்
பஞ்சாமிர்தம் உண்டு
                                      நாக்கு செத்துக் கிடக்கிறான்”            (மேல்நிலையாக்கம்)
இது ஒரு சிறந்த ஆய்வுக் கவிதை.
            உங்களது ஒவ்வொரு கவிதையைப் பற்றியும் சொல்லிக் கொண்டே போகலாம்... அதுசரி... “கவிஞர்களின் மனைவிமார்களுக்கு ஒரு வேண்டுகோள்”  இந்த கவிதையை யாராவது கொஞ்சம் விளம்பரப்படுத்தினால் பல கவிஞர்களுக்கும் பயனுள்ளதாய் இருக்கும்.

“கோட்டூர் ஆலைக்கு
குறுக்கு வழியில்
கரும்பேற்றிச் செல்வதற்கு
அமைத்த சாலைச் செம்மன்
குருடாக்கித் தொலைத்தது
                                     ஆற்றோர ஊற்றுக் கண்களை ”.      (ஊற்றுக் கண்கள்)
நாம் தொலைத்து வருபவை ‘ஆற்றோர ஊற்றுக் கண்களும்’ ‘முட்புதர் சூழ்ந்த ஒழுங்கை’ களும் மட்டுமல்ல; அவை பற்றிய சொல்லாடல்களும் தான்.  அறியப் போகிறதா அடுத்த தலைமுறை?
தொடர்ந்து எழுதுங்கள்; வாழ்த்துகள்.
என்றும் அன்புடன்
        கி.தனவேல்

 




Tuesday, October 27, 2015

பத்தாம் வகுப்பு தேர்வு முறையை ஏன் மாற்ற வேண்டும்?




அண்மையில் நடைபெற்ற காலாண்டுப் பொதுத்தேர்வில் 80%-க்கு குறைவாக தேர்ச்சி பெற்ற பள்ளி ஆசிரியர்களை மாவட்ட வாரியாக பள்ளிக்கல்வித்துறை இயக்குநரே நேரில் சந்தித்து ஆய்வுக்கூட்டங்களை நடத்தி வருகிறார். 100% தேர்ச்சி என்பதுதான் அரசின் இலக்கு என்பதை வலியுறுத்தினார். அரசின் இந்த இலக்கை அடையவேண்டுமெனில் அலுவலர்கள் மேலிருந்து திட்டங்களைத் தீட்டுகிற போக்கை மாற்றிக்கொள்வது அவசியம். களத்திலுள்ள ஆசிரியர்களின் ஆலோசனைகள் கேட்கப்பட வேண்டும்; ஆய்வுக்கூட்டங்கள் என்பது அரசின் முடிவுகளை ஆசிரியர்கள் மீது திணிப்பதாக இல்லாமல், அவர்களின் கோரிக்கைகள் கேட்கப்பட்டு, அதிலுள்ள சாதக பாதகங்களை ஆராய்ந்து நடைமுறைப்படுத்திட வேண்டும்.

மாணவர்களின் தேர்ச்சி விழுக்காட்டை அதிகரிக்க வேண்டுமெனில், நடைமுறையிலுள்ள தேர்வு முறையில் மாற்றம் தேவை என்பது ஆசிரியர்களின் கருத்து.

பள்ளியில் ஓர் ஆண்டு முழுவதும் கற்ற அறிவை மூன்று மணி நேரத்தில் மதிப்பிடுவது என்பதுதான் பொதுத்தேர்வு நடைமுறையாக உள்ளது. இது முழுமையான மதிப்பீடாக இருக்கமுடியாது என்பது கல்வியாளர்களின் கருத்து. அவர்களின் கருத்துக்கு வலுசேர்க்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டதுதான் சி.சி.இ. என்று சுருக்கமாக அறியப்படும் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை.

பள்ளிக் கல்வித்துறையில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை இந்த மதிப்பீட்டு முறை தமிழகத்தில் பின்பற்றப்படுகிறது. மாணவர்களிடம் புதைந்து கிடக்கும் பல்வேறு வகையான திறமைகளை வெளிக்கொணர்வதற்கு இந்த மதிப்பீட்டு முறை பெரிதும் பயன்படுகிறது. நன்கு படம் வரையும் ஒரு மாணவர் தன் ஓவியத் திறமையைக் கொண்டு மதிப்பெண் பெறுகிறார். மரபுக் கலைகளில் ஆர்வமுடையவர்கள் தம் கலைத்திறனால் மதிப்பெண் பெறுகிறார்கள். கைவினைக்கலை, சேவை, சுற்றுச்சூழல், விளையாட்டு, சாரணர் இயக்கும், இளம்செஞ்சிலுவைச் சங்கம், தேசிய பசுமைப்படை, சுற்றுச்சூழல் மன்றம் என அவரவர் ஆர்வத்திற்கேற்ப பாட இணைச்செயல்பாடுகளில் மதிப்பெண் பெற்று தன்னம்பிக்கையோடு கல்வி கற்கின்றனர்.

இந்த மதிப்பீடு முறை மாணவர்களிடமிருந்த தேர்வு பயத்தைப் போக்கியிருக்கிறது. எல்லா மாணவர்களும் ஒரே மாதிரி இருப்பதில்லை. அவர்களிடையே தனியாள் வேற்றுமைகள் உண்டு. இந்தப் புதிய மதிப்பீடுமுறை தனியாள் வேற்றுமைகளை கவனத்தில் கொள்வதாக இருப்பதால் மாணவர்களுக்குத் தன்னம்பிக்கையை அளிப்பதாக உள்ளது. கல்விச் சுமையாக இல்லாமல் சுகமான ஒன்றாக மாறியுள்ளது.

மேலும், மாணவர்களின் அறிவும் திறமையும் தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்பட்டு அவ்வப்போது மதிப்பிடப்படுகின்றன. பாட நூலில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு பாடம் முடியும்போது, எஃப்.ஏ. எனப்படும் வளரறி மதிப்பீடுச் செயலபாடுகள் வாயிலாகவும், சிறு தேர்வுகள் மூலமும் மதிப்பீடு செய்யப்பட்டு அந்த மதிப்பீடுகள் தொகுக்கப்படுகின்றன. அந்தப் பருவம் முடியும்போது அந்தப் பருவத்தில் கற்ற அனைத்துப் பாடங்களையும் எப்படி கற்றுள்ளனர் என்று தொகுத்தறிந்து கொள்வதற்காக தொகுத்தறி மதிப்பீடு செய்யப்படுகிறது. இவ்வாறாக மதிப்பிடுவது என்பது தொடர்ச்சியாக நடைபெறுகிறது. இதனால்தான் இது முழுமையான மதிப்பீடாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

இந்த மதிப்பீட்டு முறையில் ஒவ்வொரு பாடத்துக்கும் 100 மதிப்பெண் என்பது வளரறி மதிப்பீட்டுக்கு 40 மதிப்பெண் தொகுத்தறி மதிப்பீட்டுக்கு 60 மதிப்பெண் என்று இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவற்றுள் வளரறி மதிப்பீடு என்பது இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டு ஒரு பகுதி செயல்பாடுகள் மூலமும் மற்றொரு பகுதி சிறு தேர்வுகள் மூலமும் மதிப்பிடப்படுகிறது. ஒவ்வொரு பிரிவிலும் குறைந்தது நான்கு மதிப்பீடுகள் உண்டு. ஒரு பருவத்தில் ஒரு மாணவர் குறைந்தது நான்கு செயல்பாடுகளும் நான்கு சிறு தேர்வுகளும் முடிக்க வேண்டும். ஒவ்வொன்றுக்கும் 10 மதிப்பெண்கள். ஆக மொத்தம் 40 மதிப்பெண்கள். ஒவ்வொன்றிலும் சிறந்த இரு மதிப்பீடுகள் கணக்கிடப்பட்டு மதிப்பெண் வழங்கப்படும். பருவம் முடிவில் 60 மதிப்பெண்ணுக்கான தொகுத்தறி தேர்வு நடைபெறும். இதில் மாணவர்களின் பிற திறமைகள் பாட இணைச்செயல்பாடுகள் கணக்கில் கொள்ளப்படுவதால் அனைவரும் சிறந்த மதிப்பெண் பெறுகின்றனர். அவர்களுக்குத் தன்னம்பிக்கை வளர்கிறது.

இந்த மன நிலையோடு 9 ஆண்டுகள் கல்வி கற்ற ஒரு மாணவர் பத்தாம் வகுப்புக்கு வரும்போது அவரது மற்ற திறமைகளை கவனத்தில் கொள்ளாத வெறும் ஏட்டுக்கல்விக்கு மட்டுமே மதிப்பெண் அளிக்கப்படுகிறது. இந்தத் தேர்வு முறை அவனிடமிருந்த தன்னம்பிக்கையை சீர்குலைத்து அவனிடம் தேர்வு குறித்த அச்சத்தை ஏற்படுத்துகிறது. அதனால் தேர்ச்சி விழுக்காடு குறைகிறது. தேர்வில் தோல்வி அடைந்த ஒரு சிலரே விடாமுயற்சியோடு மீண்டும் வெற்றி பெறுகின்றனர். அத்தோடு படிப்பை முடித்துக்கொள்வதே பலரின் வாடிக்கையாக உள்ளது.

பள்ளிக்கல்வியில் ஒன்பது ஆண்டுகள் ஒருவித மதிப்பீட்டு முறையைப் பின்பற்றிவிட்டு திடீரென 10-ஆம் வகுப்பில் வேறு ஒரு மதிப்பீட்டு முறைக்கு மாறுவது என்பது மாணவர்களுக்கு சுமையாக உள்ளது. அவர்கள் மனச்சோர்வுக்கு ஆளாகின்றனர். ஓர் ஆசிரியர் என்ற முறையில் இதிலுள்ள சிக்கல்களை நன்கு உணர முடிகிறது.

எனவே, பள்ளிக்கல்வித் துறை பத்தாம் வகுப்புக்கும் மற்ற வகுப்புகளுக்கு உள்ளது போல மதிப்பீட்டு முறையை மாற்றிட வேண்டும். அல்லது அறிவியல் பாடத்திற்கு செய்முறைத்தேர்வுக்கு 25 மதிப்பெண்களும் எழுத்துத் தேர்வுக்கு 75 மதிப்பெண்களும் வழங்கியது போல் மற்ற பாடங்களுக்கும் செயல்படுத்தலாம். இதனால் அறிவியல் பாடத்தில் தோல்வி இல்லை என்னுமளவிற்கு வெற்றி பெறுவோர் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது. அதேமுறையைப் பின்பற்றி மொழிப்பாடங்களுக்கு வாய்மொழித்தேர்வுக்கு 25 எழுத்துதேர்வுக்கு 75 எனவும், கணக்கு, சமூக அறிவியல் பாடங்களுக்கு செய்முறைத் தேர்வுக்கு 25 எழுத்துத் தேர்வுக்கு 75 எனவும் மதிப்பெண் நிர்ணயம் செய்து தேர்வு முறையில் மாற்றங்களைக் கொண்டுவருவது காலத்தின் கட்டாயம்.

தகவல் தொடர்புச் சாதனங்களின் வளர்ச்சிக்கு ஈடு கொடுக்கும் வகையில் பாட நூல்களிலும் கற்பித்தல் முறைகளிலும் இந்த நூற்றாண்டுக்கேற்ற மாற்றங்களை கொண்டு வருவது எவ்வளவு அவசியமோ, அதே அளவு தேர்வுமுறையிலும் மாற்றங்களைக் கொண்டுவருவதும் அவசியம்.
 நன்றி :தமிழ் இந்து


Friday, July 3, 2015

மக்கள் 'மறந்த' மண்ணின் பெருமிதம் பேசும் 'கலை விளையும் நிலம்'

புத்தகக் குறிப்புகள்: 

பால்நிலவன்
கலை, இலக்கியம், கல்வி, மருத்துவம் குறித்து பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதிவந்த இரத்தின புகழேந்தியின் எழுத்துகள் 'கலை விளையும் நிலம்' எனும் நூல்வடிவில் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.

ஸ்மார்ட் நகரங்கள் பெருகும் காலம் இது. உழவுத் தொழிலில் தங்களை உருக்கிக்கொண்டு உலகுக்கே உணவளிக்கும் விவசாயிகள் வாழும் கிராமங்களைப் பற்றிய மரியாதை அருகி வரும் காலமும் இதுவே.

ஆனால், பழந்தமிழர் வாழ்வியல் அறத்தின் கூறுகள் ஓரளவுக்கேனும் எஞ்சி நிற்கும் இடங்களாக நமது கிராமங்கள் அமைந்துள்ளன. சாதி எனும் அரக்கனைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் கிராமங்கள் செம்மாந்த வாழ்வியல் பண்புகளின் சிம்மாசனமாக திகழ்வதை அறியலாம்.

இக்காலத்திலும் கிராமங்களில் கூத்தும் பாட்டும் தேர்த்திருவிழாக்களும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனால் பழங்காலத்தில் கொண்டாடப்பட்ட அளவுக்கு நடக்கிறதா என்றால் நிச்சயம் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.

'கலை விளையும் நிலம்' என்ற இந்நூலில் 'திருமுதுகுன்றம்' என நற்றமிழ் ஆர்வலர்களால் வாஞ்சையோடு அழைக்கப்படும் 'விருதாசலம்' வட்டாரத்தின், செய்திகள் சேகரிக்கப்பட்டுள்ளன. திருமுதுகுன்றம் எப்படி விருதாசலமானது என்பது பற்றி ஊர்ப்பெயர் அரசியல் என்று ஒரு தனிக்கட்டுரையும் இதில் உண்டு. மேலும் அவ்வூரில் உள்ள பழமலைநாதர் கோயில் வரலாறு உள்ளிட்ட பல்வேறு சிறப்பான செய்திகளைத் தேடித் தேடி தந்திருக்கிறார் நூலாசிரியர்.

நாட்டுப்புறவியலில் தமிழகம் முழுவதும் பாடல்களைத் திரட்டி அரிய சாதனைகள் நிகழ்த்திய தமிழறிஞர் டாக்டர் ஆறு.இராமனாதன் அவர்களின் விரிவான நேர்காணலும் இந்நூலில் முக்கிய அம்சமாக அமைந்திருக்கிறது.

நாட்டுப்புற ஆய்வில் முனைவர் பட்டம் பெற்ற இந்நூலாசிரியர் இரத்தின புகழேந்தியின் நாட்டுப்புறம் சார்ந்த ஆர்வம் என்பது பல்கலைக்கழக ஆய்வையும் கடந்தது; அவரது பள்ளிக்கூட ஆசிரியர் பணிக்கும் அப்பாற்பட்டது.

இந்நூலில் இடம்பெற்றுள்ள கலை, இலக்கியம், அறிவியல், அரசியல், கல்வி ஆகிய தலைப்புகளின்கீழே பல்வேறு கட்டுரைகளின் வாயிலாக அந்த ஆர்வத்தைக் காணமுடிகிறது.

தெருக்கூத்து, கரகாட்டம், தவில் சுட்டி, பீங்கான் தொழில், மரச்சிற்பங்கள், சுடுமண் சிற்பங்கள், குறிஞ்சிப்பாடி நெசவு போன்ற கலைத்தொழில்களைப் பற்றி இந்நூல் எங்கும் கவினுற விதந்தோதப்பட்டுள்ளன.

'உலகப் புகழ்பெற்ற திருவதிகைச் சிற்பங்கள்' என்ற தலைப்பின் கீழ் அமைந்துள்ள கட்டுரையிலிருந்து சில பகுதிகள் வாசகர் பார்வைக்கு:

கோயில்களுக்கான தேர்கள், திருவிழாக்காலங்களில் தெரு உலாச் செல்லும் கடவுளர்களுக்கான ஊர்திகள், சூரியப் பலகைகள் என அனைத்து வகையான மரச்சிற்பங்கள் செய்வதில் கைதேர்ந்தவர்களாக விளங்குகின்றனர் திருவதிகைச் சிற்பிகள். மரபுவழியாகவே இக்கலைத்திறமை இவர்களின் ரத்தத்தோடு கலந்திருக்கிறது. இக்கலைப்பணி ஆறாவது தலைமுறையாகத் தொடர்கிறது.

1947ஆம் ஆண்டு திருவதிகை குப்பாசாரியும் அவர் உடன்பிறந்தவர்களான சுப்பிரமணிய ஆச்சாரி, பொன்னுசாமி ஆச்சாரி ஆகியோரும் சேர்ந்துதான் திருப்பதி கோயில் தேரைச் செய்திருக்கின்றனர். இந்த உடன்பிறப்புகளின் வாரிசுகளான இராசாமணி ஆச்சாரி, புருசோத்தமாச்சாரி, இராசாராம் ஆச்சாரி, இராதாகிருட்டிண ஆச்சாரி, தேவா ஆகியோர் இக்கலைப் பணியை இன்றும் தொடர்கின்றனர்.

கோயில்களுக்கான தேர் செய்வதற்கென்று இலக்கணம் உண்டு. அவ்விலக்கணப்படி தேரை வடிவமைத்து உருவாக்குகின்றனர். கோயிலின் மூல இட அளவைப் பொறுத்தே தேரின் அளவை அமைக்க வேண்டும் என்ற விதிமுறைக்கேற்ப தேருக்கான நீள அகலத்தை முடிவு செய்கின்றனர்.

தேரில் பத்து வகையுண்டு. ஸ்ரீகரம், த்வஜம்காந்தம், ரேஷிகேசம், நிகேதுனம், ஸ்ரிபாத்ரம், விசாலஞ்சம், பத்மக்கம், பத்ரம், சிவம் உள்ளிட்ட இவற்றில் கோயிலுக்கேற்ற தேரை வடிவமைப்பது என்பது முக்கியமானது. இவற்றை உணர்ந்துதான் தேரை வடிவமைப்போம் என்று இராசாமணி ஆச்சாரி கூறினார். இவர் திருவண்ணாமலை, செவ்வாய்ப்பேட்டை, புதுச்சேரி, திருக்கோயிலூர் ஆகிய ஊர்களில் கோயில்களுக்குத் தேர் செய்துள்ளார்.

தேரின் ஒவ்வொரு பாகங்களையும் ஒவ்வொரு மரத்தால் செய்கின்றனர். தேர்ச்சக்கரம் இலுப்பை மரத்தாலும், அடிப்பாகம் காட்டுவாகை மரத்தாலும், மேல் பாகம் தேக்கு, வேங்கை மரங்களாலும் செய்யப்படுகின்றன. சிங்கப்பூர், மலேசியா, பிரான்ஸ், அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளுக்கு இவர்கள் செய்த தேர்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. காசி, ஐதராபாத், விஜயவாடா போன்ற நகரங்களுக்குச் சென்று, தேரும் மரச்சிற்பங்களும் செய்துள்ளனர். சமணக் கோயில்களிலும் சிற்பங்கள் செய்த அனுபவம் இவர்களுக்கு உண்டு.

தென்திருப்பதி என்றழைக்கப்படும் திருநீருமலையில் 45 பாகை சாய்வான பாதையில் புதிதாகச் செய்த தேரை ஏற்றுவதற்குப் பொறியாளர்கள் திணறியபோது இராசாரம் ஆச்சாரி அம்மலையில் தேரைப் பத்திரமாக ஏற்றி நிலைநிறுத்தியது தன் வாழ்நாளில் மறக்கமுடியாத அனுபவம் என்று நெகிழ்ச்சியோடு கூறினார்.

மேலும் பல்வேறு பயனுள்ள தகவல்களைத் தரும்விதமாகத் தொடரும் இக்கட்டுரையின் இறுதியில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல் நமக்கு வியப்பை அளிக்கிறது. இந்திய அளவில், அல்ல தமிழக அளவிலேயே அரசு இதுவரையில் இவர்களை உற்சாகப்படுத்தும் விதமாகவோ இத்தகைய நற்கலையம்சங்களை ஊக்கும்விக்கும் விதமாகவோ விருதுகள் எதையும் வழங்கி கவுரவிக்கவில்லையாம்.

கிராமங்களின் சிறந்த பண்புகளையும் கபளீகரம் செய்வதற்கென்றே வந்ததுபோல் வான்வழி ஊடகத் தாக்குதலையும் மீறி தனித்துவம் மிக்க நல்ல அம்சங்களை நிலைநிறுத்தப் போராடிவருகிறார்கள் இவர்கள். அவர்களுக்கு சிறிதளவேனும் ஆதரவையும் உற்சாகத்தையும் தர வேண்டும் என்ற உந்துதலை இரத்தினப் புகழேந்தி நமக்கு 'கலை விளையும் நிலம்' நூலின்வழியே தந்துவிட்டார்.

நூலின் பெயர்: கலை விளையும் நிலம்

ஆசிரியர்: இரத்தின புகழேந்தி

பக்.168, விலை: ரூ.150

வெளியீடு: நிவேதிதா பதிப்பகம்,

22/105, பாஸ்கர் காலனி, 3வது தெரு,

விருகம்பாக்கம், சென்னை - 600 092.

தொலைபேசி 89393 87276,
நன்றி : tamil.thehindu.com
சரவணன், பால்நிலவன்


Monday, June 29, 2015

விந்தன் 99



எழுத்தாளர் விந்தன் நினைவு நாள் இன்று. அடுத்த ஆண்டு விந்தன் நூற்றாண்டு. அவரது நினைவுகளைப்போற்றுவோம்.
கோவிந்தன் காஞ்சிபுரம் மாவட்டம் நாவலூரில் வேதாசலம், ஜானகி ஆகியோருக்குப் பிறந்தார். சென்னை சூளைப் பகுதியில் கோவிந்தன் ஆரம்பக் கல்வி கற்றார். சிறு வயதிலேயே தந்தையோடு கருமான் (ஆசாரி) வேலை செய்து வந்தார்.

இரவுப் பள்ளியில் சேர்ந்து மீண்டும் கல்வியைத் தொடர்ந்தார். தொடர்ந்து படிக்க இயலவில்லை. ஓவியக் கல்லூரியில் சேர்ந்து சில ஆண்டுகள் ஓவியம் பயின்றார். அதையும் தொடர முடியவில்லை. ஜெமினி பட நிறுவனத்தில் பணியாற்றினார்.

1938ஆம் ஆண்டு லீலாவதி எனும் பெண்மணியை மணந்தார். இரண்டு குழந்தைகளை விட்டுவிட்டு அந்த அம்மையார் இறந்துபோக, பின் சரஸ்வதி என்ற பெண்ணை இரண்டாம் தாரமாக மணந்தார். ஆறு குழந்தைகள் பிறந்தன.
மாசிலாமணி முதலியார் நடத்திய "தமிழரசு" மாத இதழில் அச்சுக் கோப்பவராகச் சேர்ந்தார். தமிழரசுக்குப் பிறகு ஆனந்த விகடன் அச்சுக் கூடத்தில் வேலை கிடைத்தது. கையெழுத்துப் பிரதிகளிலிருந்து அச்சுக்கோக்கும் வாய்ப்பு ஏற்பட்டதால் தமிழ் இலக்கிய அறிவை வளர்த்துக் கொண்டார். தாமும் எழுத வேண்டும் என்ற அவா அவருக்கு ஏற்பட்டது.

கல்கி கிருஷ்ணமூர்த்தியால் 1941ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கல்கி இதழ், விந்தன் வாழ்க்கையில் புதுத் திருப்பத்தை ஏற்படுத்தியது. ஆனந்த விகடனில் இருந்து வெளியேறிய டி.எம்.இராஜா பாதர் என்ற அவரது நண்பர் விந்தனுக்கு கல்கி வார இதழில் அச்சுக் கோக்கும் பணியில் சேர உதவினார். கோவிந்தனுடைய அச்சுக் கோக்கும் திறமையைப் பாராட்டியதோடு, அவர் கதைகளும் எழுதுவார் என்பதை அறிந்து, "கல்கி" இதழில் தொடர்ந்து எழுதுமாறு கூறினார். சில மாதங்களில் துணை ஆசிரியராகவும் நியமித்தார். கல்கியின் துணை ஆசிரியராகச் சேர்ந்த விந்தன், குழந்தைகளுக்கு (பாப்பா மலர் பகுதியில்) "விஜி" என்ற பெயரில் பல கதைகள் எழுதினார். விஜி என்ற பெயரை "விந்தன்" என்று பெயர் மாற்றிக் கொள்ளச் சொன்னவர் "கல்கி" கிருஷ்ணமூர்த்தி தான்.
1946 இல் விந்தன் எழுதிய "முல்லைக் கொடியாள்" என்னும் சிறுகதைத் தொகுப்பு நூல் வெளிவந்தது. தமிழக அரசின் தமிழ் வளர்ச்சிக் கழகம் அந்தத் தொகுதிக்கு முதல் பரிசை அளித்தது. விந்தனின் எழுத்துக்குத் தமிழ்நாட்டில் பெரும் வரவேற்பு ஏற்பட்டதால், "பொன்னி" மாத இதழ் ஆசிரியர், விந்தனைத் தொடர்களை எழுதுமாறு வேண்டினார்.

"கண் திறக்குமா?" என்ற கதையை 1947இல் "நக்கீரன்" என்ற புனைப்பெயரில் எழுதினார். "பாலும் பாவையும்" என்ற கற்பனையும் கருத்தும் நிறைந்த தொடர் ஒன்றை எழுதினார். "பாலும் பாவையும்" விந்தனுக்குப் பெரும் புகழைத் தேடித்தந்தது. ஏவி.எம்.நிறுவனத்தார், "பாலும் பாவை"யும் கதையைத் திரைப்படமாக்க விரும்பியதால், கல்கி அலுவலகத்திலிருந்து பதவி விலகி, திரைப்படம் நோக்கிப் பயணித்தார்.சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த ராஜாஜி வைதீக மரபைத் தூக்கிப்பிடிக்கும் ‘பஜகோவிந்தம்’(1956) எழுதினார். இந்நூலுக்குப் புடைநூலாக ‘பசிகோவிந்தம்’ (1956) என்ற நூலை விந்தன் எழுதினார் . இவ்விரு நூல்களையும் வெளியிட்டவர் பெண்ணாடம் ராமசாமி
ஆர்.ஆர்.பிக்சர்ஸ் தயாரித்த வாழப் பிறந்தவள் படத்துக்கு வசனமும், "அன்பு" என்ற படத்துக்கு வசனமும், ஒரு பாடலும், கூண்டுக்கிளி என்ற படத்துக்கு வசனமும் எழுதினார். குழந்தைகள் கண்ட குடியரசு, பார்த்திபன் கனவு திரைப்படங்களுக்கு வசனமும் பாடல்களும் எழுதினார்.

கையில் கிடைத்த சொற்ப பணத்தைக் கொண்டு "புத்தகப் பூங்கா" என்ற பதிப்பகமும் "மனிதன்" என்ற மாத இதழையும் தொடங்கினார் விந்தன். "அன்பு அலறுகிறது", "மனிதன் மாறவில்லை" என்ற இரு நாவல்களை எழுதினார்.
பிரபல எழுத்தாளர் சாவி ஆசிரியராக இருந்த தினமணி கதிர் இதழில் உதவி ஆசிரியராகச் சேர்ந்தார். மக்கள் எழுத்தாளர் விந்தன், 1975ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி காலமானார். அவர் மறைவுக்குப் பிறகு அவரது நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.
தமிழ்நாட்டரசு 2008 - 09 இல் விந்தன் எழுதிய நூல்கள் நாட்டுடமை ஆக்கியது. நாட்டுடமை ஆன நூல்களின் பட்டியல்.

அன்பு அலறுகிறது
இந்திய இலக்கியச் சிற்பிகள்
இலக்கியப்பீடம் 2005
எம்.கே.டி.பாகவதர் கதை
ஒரே உரிமை
ஓ, மனிதா
கண் திறக்குமா?
காதலும் கல்யாணமும்
சுயம்வரம்
திரையுலகில் விந்தன்
நடிகவேல் எம்.ஆர்.இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்
பசிகோவிந்தம்
பாலும் பாவையும்
பெரியார் அறிவுச் சுவடி
மனிதன் இதழ் தொகுப்பு
மனிதன் மாறவில்லை
மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்
விந்தன் இலக்கியத் தடம்
விந்தன் கட்டுரைகள்
விந்தன் கதைகள் - 1
விந்தன் கதைகள் -2
விந்தன் குட்டிக் கதைகள்
வேலை நிறுத்தம் ஏன்?
நன்றி: தமிழ் விக்கிப்பீடியா
விந்தன்  : http://www.vindhan.org/

Wednesday, June 10, 2015

கலைவிளையும் நிலம் நூல் அறிமுகம்


கலை விளையும் நிலம் என்ற தலைப்பில் எனது கட்டுரைகளைத்தொகுத்து நூலாக வெளியிட உள்ளேன். இன்று நூல் அச்சாகி வந்துள்ளது. அதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி.

வெளியீடு : நிவேதிதா பதிப்பகம்
                  22/105 , பாஸ்கர் காலனி
                  3 ஆவது தெரு விருகம்பாக்கம்
                  சென்னை -600092
                  893987276 
பக்கம்: 168
விலை:150
அட்டைப்படங்கள்: ந.செல்வன்
வடிவமைப்பு: கீர்த்தி&ஹபிப்


முன்னுரையிலிருந்து...

ஏழு ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட கட்டுரைகள் இவை. தமிழ் ஓசை நாளிதழில் ஞாயிறு இணைப்பாக வெளிவந்த களஞ்சியம் இதழில் பணியற்றிய தோழர் யாணன் அவர்கள் கலைகள் குறித்த இக்கட்டுரைகள் வெளிவர காரணமாக இருந்தார். தெருக்கூத்து பற்றிய கட்டுரையைப் படித்துவிட்டு என்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு தொடர்ந்து எழுதுங்கள் என்று ஊக்கப்படுத்தினார். அதன் விளைவுதான் கிராமத்து விளையாட்டுகள், கலை விளைந்த நிலம் ஆகிய இருநூல்களும். நண்பர் யாணன்  அவர்களுக்கு நன்றி.
          கோவை பி.எஸ்.ஜி. கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு வழங்கிய கட்டுரை ஏலாதி உணர்த்தும் மருத்துவ சிந்தனைகள். திருமுதுகுன்றம் கவிதைகள் சிங்கப்பூரில் நடைபெற்ற பன்னாட்டுக் கருத்தரங்கில் வாசிக்கப்பட்டது.
          தமிழர்களின் உணவு மருத்துவ அறிவு என்ற கட்டுரை செம்மொழித்தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் வழங்கியது.
          சுற்றுச்சூழல் குறித்த கட்டுரைகள் புதுவை வானொலியில் ஏழு நாட்கள் நிகழ்த்திய தொடர் சொற்பொழிவின் எழுத்து வடிவமாகும்.
          இந்த நூலில் இடம்பெற்றுள்ள சில கட்டுரைகளில் ஆசிரியரால் குறிப்பிடப் பட்ட குறைகள் சரிசெய்யப்பட்டுள்ளன சில விருப்பங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
          விடுதலைப்போராட்ட வீரர் கடலூர் அஞ்சலை அம்மாள் பற்றி எழுதிய விடுதலை வேர்கள் கட்டுரை வெளியானதன் விளைவாக இன்று பாடநூல்களில் அவரைப் பற்றிய விரிவான வரலாறு இடம்பெற்றுள்ளது.
          அதுபோலவே மதிப்பீட்டு முறையில் மாற்றம் தேவை என்று நான் கண்ட கனவு இன்று நனவாகியிருக்கிறது. புதிய மதிப்பீட்டு முறை (CCE) வருவதற்கு முன்பே என் ஆய்வு அதனை வலியுறுத்தியது.
          பள்ளி நூலகங்களை மாணவர்கள் அணுக இயலாத சூழலிருந்தது அதனை வெளிப்படித்தியது பெட்டிக்குள் உறங்கும் நூல்கள் கட்டுரை. அதற்கான தீர்வாகத்தான் வகுப்பறை நூலகம் என்னும் புத்தகப் பூங்கொத்து திட்டம்.
          நிலம் கையகப் படுத்தும்போது வழங்கும் இழப்பீடு போதுமானது இல்லை என்னும் கருத்தை வலியுறுத்தியது ’நிலம் கையகப்படுத்தும் அரசியல் ’ கட்டுரை. இப்போது ஐந்து லட்சம் இழப்பீடு வழங்கப்படுகிறது.
                    விருத்தாசலத்தை திருமுதுகுன்றம் என மீண்டும் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை அரசால் கைவிடப் பட்டாலும். ஒரு காலத்தில் நிச்சயம் நிறைவேறும் என்பதற்கான நம்பிக்கையை போராட்ட உணர்வை மக்களிடம்  இந்த நூலில் இடம்பெற்றுள்ள  ஊர்ப்பெயர் அரசியல் என்னும் கட்டுரை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்.

          நூலை சிறப்பாக வெளியிட்டுள்ள நிவேதிதா பதிப்பகத்தாருக்கும் அதற்குக் காரணமாக இருந்த நண்பர் கவிஞர் பல்லவி குமார் அவர்களுக்கும் நன்றி. என்னையும் என் எழுத்தையும் நேசிக்கும் நண்பர் கவிஞர் தியாக ரமேஷ் அவர்களுக்கு என்றும் எனது நன்றிகள்.