புத்தகக் குறிப்புகள்:
கலை, இலக்கியம், கல்வி, மருத்துவம் குறித்து பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதிவந்த இரத்தின புகழேந்தியின் எழுத்துகள் 'கலை விளையும் நிலம்' எனும் நூல்வடிவில் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.
ஸ்மார்ட் நகரங்கள் பெருகும் காலம் இது. உழவுத் தொழிலில் தங்களை உருக்கிக்கொண்டு உலகுக்கே உணவளிக்கும் விவசாயிகள் வாழும் கிராமங்களைப் பற்றிய மரியாதை அருகி வரும் காலமும் இதுவே.
ஆனால், பழந்தமிழர் வாழ்வியல் அறத்தின் கூறுகள் ஓரளவுக்கேனும் எஞ்சி நிற்கும் இடங்களாக நமது கிராமங்கள் அமைந்துள்ளன. சாதி எனும் அரக்கனைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் கிராமங்கள் செம்மாந்த வாழ்வியல் பண்புகளின் சிம்மாசனமாக திகழ்வதை அறியலாம்.
இக்காலத்திலும் கிராமங்களில் கூத்தும் பாட்டும் தேர்த்திருவிழாக்களும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனால் பழங்காலத்தில் கொண்டாடப்பட்ட அளவுக்கு நடக்கிறதா என்றால் நிச்சயம் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.
'கலை விளையும் நிலம்' என்ற இந்நூலில் 'திருமுதுகுன்றம்' என நற்றமிழ் ஆர்வலர்களால் வாஞ்சையோடு அழைக்கப்படும் 'விருதாசலம்' வட்டாரத்தின், செய்திகள் சேகரிக்கப்பட்டுள்ளன. திருமுதுகுன்றம் எப்படி விருதாசலமானது என்பது பற்றி ஊர்ப்பெயர் அரசியல் என்று ஒரு தனிக்கட்டுரையும் இதில் உண்டு. மேலும் அவ்வூரில் உள்ள பழமலைநாதர் கோயில் வரலாறு உள்ளிட்ட பல்வேறு சிறப்பான செய்திகளைத் தேடித் தேடி தந்திருக்கிறார் நூலாசிரியர்.
நாட்டுப்புறவியலில் தமிழகம் முழுவதும் பாடல்களைத் திரட்டி அரிய சாதனைகள் நிகழ்த்திய தமிழறிஞர் டாக்டர் ஆறு.இராமனாதன் அவர்களின் விரிவான நேர்காணலும் இந்நூலில் முக்கிய அம்சமாக அமைந்திருக்கிறது.
நாட்டுப்புற ஆய்வில் முனைவர் பட்டம் பெற்ற இந்நூலாசிரியர் இரத்தின புகழேந்தியின் நாட்டுப்புறம் சார்ந்த ஆர்வம் என்பது பல்கலைக்கழக ஆய்வையும் கடந்தது; அவரது பள்ளிக்கூட ஆசிரியர் பணிக்கும் அப்பாற்பட்டது.
இந்நூலில் இடம்பெற்றுள்ள கலை, இலக்கியம், அறிவியல், அரசியல், கல்வி ஆகிய தலைப்புகளின்கீழே பல்வேறு கட்டுரைகளின் வாயிலாக அந்த ஆர்வத்தைக் காணமுடிகிறது.
தெருக்கூத்து, கரகாட்டம், தவில் சுட்டி, பீங்கான் தொழில், மரச்சிற்பங்கள், சுடுமண் சிற்பங்கள், குறிஞ்சிப்பாடி நெசவு போன்ற கலைத்தொழில்களைப் பற்றி இந்நூல் எங்கும் கவினுற விதந்தோதப்பட்டுள்ளன.
'உலகப் புகழ்பெற்ற திருவதிகைச் சிற்பங்கள்' என்ற தலைப்பின் கீழ் அமைந்துள்ள கட்டுரையிலிருந்து சில பகுதிகள் வாசகர் பார்வைக்கு:
கோயில்களுக்கான தேர்கள், திருவிழாக்காலங்களில் தெரு உலாச் செல்லும் கடவுளர்களுக்கான ஊர்திகள், சூரியப் பலகைகள் என அனைத்து வகையான மரச்சிற்பங்கள் செய்வதில் கைதேர்ந்தவர்களாக விளங்குகின்றனர் திருவதிகைச் சிற்பிகள். மரபுவழியாகவே இக்கலைத்திறமை இவர்களின் ரத்தத்தோடு கலந்திருக்கிறது. இக்கலைப்பணி ஆறாவது தலைமுறையாகத் தொடர்கிறது.
1947ஆம் ஆண்டு திருவதிகை குப்பாசாரியும் அவர் உடன்பிறந்தவர்களான சுப்பிரமணிய ஆச்சாரி, பொன்னுசாமி ஆச்சாரி ஆகியோரும் சேர்ந்துதான் திருப்பதி கோயில் தேரைச் செய்திருக்கின்றனர். இந்த உடன்பிறப்புகளின் வாரிசுகளான இராசாமணி ஆச்சாரி, புருசோத்தமாச்சாரி, இராசாராம் ஆச்சாரி, இராதாகிருட்டிண ஆச்சாரி, தேவா ஆகியோர் இக்கலைப் பணியை இன்றும் தொடர்கின்றனர்.
கோயில்களுக்கான தேர் செய்வதற்கென்று இலக்கணம் உண்டு. அவ்விலக்கணப்படி தேரை வடிவமைத்து உருவாக்குகின்றனர். கோயிலின் மூல இட அளவைப் பொறுத்தே தேரின் அளவை அமைக்க வேண்டும் என்ற விதிமுறைக்கேற்ப தேருக்கான நீள அகலத்தை முடிவு செய்கின்றனர்.
தேரில் பத்து வகையுண்டு. ஸ்ரீகரம், த்வஜம்காந்தம், ரேஷிகேசம், நிகேதுனம், ஸ்ரிபாத்ரம், விசாலஞ்சம், பத்மக்கம், பத்ரம், சிவம் உள்ளிட்ட இவற்றில் கோயிலுக்கேற்ற தேரை வடிவமைப்பது என்பது முக்கியமானது. இவற்றை உணர்ந்துதான் தேரை வடிவமைப்போம் என்று இராசாமணி ஆச்சாரி கூறினார். இவர் திருவண்ணாமலை, செவ்வாய்ப்பேட்டை, புதுச்சேரி, திருக்கோயிலூர் ஆகிய ஊர்களில் கோயில்களுக்குத் தேர் செய்துள்ளார்.
தேரின் ஒவ்வொரு பாகங்களையும் ஒவ்வொரு மரத்தால் செய்கின்றனர். தேர்ச்சக்கரம் இலுப்பை மரத்தாலும், அடிப்பாகம் காட்டுவாகை மரத்தாலும், மேல் பாகம் தேக்கு, வேங்கை மரங்களாலும் செய்யப்படுகின்றன. சிங்கப்பூர், மலேசியா, பிரான்ஸ், அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளுக்கு இவர்கள் செய்த தேர்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. காசி, ஐதராபாத், விஜயவாடா போன்ற நகரங்களுக்குச் சென்று, தேரும் மரச்சிற்பங்களும் செய்துள்ளனர். சமணக் கோயில்களிலும் சிற்பங்கள் செய்த அனுபவம் இவர்களுக்கு உண்டு.
தென்திருப்பதி என்றழைக்கப்படும் திருநீருமலையில் 45 பாகை சாய்வான பாதையில் புதிதாகச் செய்த தேரை ஏற்றுவதற்குப் பொறியாளர்கள் திணறியபோது இராசாரம் ஆச்சாரி அம்மலையில் தேரைப் பத்திரமாக ஏற்றி நிலைநிறுத்தியது தன் வாழ்நாளில் மறக்கமுடியாத அனுபவம் என்று நெகிழ்ச்சியோடு கூறினார்.
மேலும் பல்வேறு பயனுள்ள தகவல்களைத் தரும்விதமாகத் தொடரும் இக்கட்டுரையின் இறுதியில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல் நமக்கு வியப்பை அளிக்கிறது. இந்திய அளவில், அல்ல தமிழக அளவிலேயே அரசு இதுவரையில் இவர்களை உற்சாகப்படுத்தும் விதமாகவோ இத்தகைய நற்கலையம்சங்களை ஊக்கும்விக்கும் விதமாகவோ விருதுகள் எதையும் வழங்கி கவுரவிக்கவில்லையாம்.
கிராமங்களின் சிறந்த பண்புகளையும் கபளீகரம் செய்வதற்கென்றே வந்ததுபோல் வான்வழி ஊடகத் தாக்குதலையும் மீறி தனித்துவம் மிக்க நல்ல அம்சங்களை நிலைநிறுத்தப் போராடிவருகிறார்கள் இவர்கள். அவர்களுக்கு சிறிதளவேனும் ஆதரவையும் உற்சாகத்தையும் தர வேண்டும் என்ற உந்துதலை இரத்தினப் புகழேந்தி நமக்கு 'கலை விளையும் நிலம்' நூலின்வழியே தந்துவிட்டார்.
நூலின் பெயர்: கலை விளையும் நிலம்
ஆசிரியர்: இரத்தின புகழேந்தி
பக்.168, விலை: ரூ.150
வெளியீடு: நிவேதிதா பதிப்பகம்,
22/105, பாஸ்கர் காலனி, 3வது தெரு,
விருகம்பாக்கம், சென்னை - 600 092.
தொலைபேசி 89393 87276,
நன்றி : tamil.thehindu.com
சரவணன், பால்நிலவன்
No comments:
Post a Comment