தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking

Monday, December 16, 2019

நூறு ஆண்டுகளுக்குப்பிறகு நடைபெற்ற முதலாவது உலகத் தமிழ் இசை மாநாடு


















உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும் மதுரை உலகத் தமிழ் சங்கமும் இணைந்து முதலாவது உலகத் தமிழிசை மாநாட்டினை மதுரையில் 2019 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 14 15 சனி ஞாயிறு ஆகிய இரு நாட்களில் நடத்தின.
100 ஆண்டுகளுக்குப் பிறகு உலக அளவில் நடைபெறும் முதல் தமிழிசை மாநாடு என்பது இந்த மாநாட்டின் சிறப்பு. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் பேராசிரியர் கோ.விசயராகவன், உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தின் அயல்நாட்டு தமிழர் புலம் துறையின் பேராசிரியர் கு.சிதம்பரம், உலகத்தமிழ்ச்சாங்கத்தின் இயக்குநர் முனைவர் ப.அன்புச்செழியன் ஆகியோர் மாநாட்டுப்பணிகளை ஒருங்கிணைத்து சிறப்பாக நடத்தினார்கள்.
இந்த மாநாடு மூன்று இணை அமர்வுகளாக நடத்தப்பட்டது ஒரு அரங்கத்தில் பன்னாட்டு தமிழிசை கலைஞர்கள் இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்தினார்கள். மதுரை இசைக் கல்லூரி குழுவினரின் இசைக் கச்சேரியோடு தொடங்கியது இசை அரங்கம்.   குரு ஆத்மநாதன் அவர்களின் தேமதுரத் தமிழோசை என்னும் நிகழ்ச்சியில் சிலப்பதிகாரம் புறநானூறு வள்ளலார் பாடல்கள் என சங்க இலக்கியங்களை இசை வழியாக மக்களிடம் கொண்டு சேர்த்தார். உலகத் தமிழிசை ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி கழகம் அமெரிக்கா விலிருந்து வந்திருந்த பாபு விநாயகம் அவர்களின் இசை நிகழ்ச்சி, இலங்கை அவை காற்று குழுவினர் நிஷாந்த ராகினி திருக்குமரன் அவர்களின் தலைமையில் தமிழர் நாமும் நவரச வாழ்வும் எனும் தமிழ் இசை நடன நிகழ்ச்சி நடத்தினர்.  திரிகோணமலை வில்லூன்றி குறவஞ்சி என்னும் இசை நாடகத்தை மிகச் சிறப்பாக இலங்கை தியாகராஜர் கலைக்கோயில் குழுவினர் நிகழ்த்தினார். குறத்தியாக நடனமாடிய சிறுமி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். தஞ்சாவூர் நல்லசிவம் குழுவினரின் திருமுறை பண்ணிசை நிகழ்ச்சியும் திண்டிவனம் வேட்டவராயன் குழுவினரின் வில்லிசை நிகழ்ச்சியும் நடைபெற்றன. சென்னை சாகித்ய நாட்டியாலயா குழுவினர் பாரதியார் பாடல்களை தமிழிசையின் துணைகொண்டு  நடனமாகக் காட்சிப்படுத்தினார். மதுரை இசைக் கல்லூரி முதல்வர் டேவிட் அவர்களின் இசை நிகழ்ச்சி, அண்ணாமலைப் பல்கலைக்கழக இசைத்துறை பேராசிரியர் முனைவர் சித்ரா அவர்களின் சிலப்பதிகார நடனம், சேலம் பிரபந்த மாலா இசைக் குழுவினரின் திவ்ய பிரபந்த இன்னிசை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. கோவை சங்கரா நாட்டியப்பள்ளி அரோரா குழுவினர் நிகழ்த்திய வள்ளுவம் வாழ்க்கையானால் என்னும் இசை நிகழ்ச்சியும் திருவண்ணாமலை சிவ தென்றல் நாடனாலயா குழுவினரின் திருவாசக இசை நடனநிகழ்ச்சி நடைபெற்றது.
நிறைவாக மதுரை தங்கவேல் குழுவினரின் பறையிசை ஆட்டம், பெண்களின் தப்பாட்டம் என நிறைவு விழாவில் தமிழரின் தொல்லிசைகள் இசைக்கப்பட்டன. நாட்டுப்புற நடன கலைஞர்களின் பொய்க்கால் குதிரை ஆட்டம் கட்டைக்கால் ஆட்டம் போன்ற நிகழ்ச்சிகள் தமிழ் இசைக்கருவிகள் முழங்க நடந்தேறின.
இன்னொரு அரங்கத்தில் பன்னாட்டு தமிழிசை ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வுக் கட்டுரைகளை அளித்தார்கள். 25 அமர்வுகளில் ஆய்வுக்கட்டுரைகள் அளிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டன. உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து ஆய்வாளர்கள் 500க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பியிருந்தனர் அவற்றுள் மாநாட்டு அறிஞர் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட 250 கட்டுரைகள் தொகுக்கப்பட்டு1800 பக்கங்களில் நூல்களாக 3 தொகுதிகள் இந்த மாநாட்டில் வெளியிடப்பட்டன. மேலும் மாநாட்டு நிகழ்வுகள். தொகுக்கப்பட்டு சிறப்பு மலர் ஒன்றும் வெளியிடப்பட உள்ளது.  மூன்றாவது அரங்கில் தொல்லிசைக் கருவிகள் கண்காட்சி நடைபெற்றது. சென்னை கோடம்பாக்கத்தில் அமைந்துள்ள கோசை நகரான் இசைக்கருவி காட்சிக்கூடத்தினர் பழமையான பல இசைக்கருவிகளை காட்சிப்படுத்தி இருந்தனர். தண்ணுமை, சிறுபறை, முழவு, முரசு, துடி, தமருகம், உறுமி, துடும்பு, கொட்டு தவில்,  மொடா மத்தளம், சேமக்கலம், சங்கு, கொம்பு, நகரா, பாங்கா, போன்ற பல்வேறு வகையான பழங்கால இசைக்கருவிகளைக் காட்சிப்படுத்தி இருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அந்த அரங்கில் பார்வையாளர்கள் பழமையான இசைக் கருவிகளை வாசித்து மகிழ்ந்தனர்.
அமெரிக்கா, இங்கிலாந்து மலேசியா சிங்கப்பூர் ,சீனா, மொரிஷியஸ், ஹாங்காங் ஆகிய நாடுகளிலிருந்து தமிழ் இசைக் கலைஞர்களும் இசை ஆய்வாளர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். உள்ளாட்சித் தேர்தல் அறிவித்ததால்  அமைச்சர்கள் கலந்து கொள்வதற்கு தேர்தல் ஆணையம் அனுமதிக்கவில்லை.
மாநாட்டின் தொடக்க விழாவிலும் நிறைவு விழாவிலும் இசைத்துறை வளர்ச்சிக்கு சிறப்பான பங்களிப்பு செய்தவர்களுக்கும், இந்த மாட்டுக்கு பல்வேறு வகையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கும் பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன. குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் விருதுகளை வழங்கினார்.
இந்த மாநாடு தொடர்ந்து நடைபெறுவதற்காக உலகத் தமிழ் இசை ஆராய்ச்சி சங்கம் என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இந்த சங்கத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இடம்பெற்றனர்.
மேலும் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தமிழ் இசையை இளைய சமுதாயத்திற்கு கொண்டு சேர்ப்பதற்காக அனைத்துப் பள்ளிகளிலும் இசை ஒரு பாடமாக்கப்பட வேண்டும். அதனை பயிற்றுவிப்பதற்கு முறையாக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.
இசை சார்ந்த நூல்களை தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும் ஆங்கிலத்திலிருந்து தமிழிலும் மொழியாக்கம் செய்யப்பட வேண்டும்.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை உள்நாட்டிலோ அல்லது வெளிநாடுகளிலோ உலகத் தமிழிசை மாநாடுகள் நடத்தப்பட வேண்டும்.
தமிழ் இசை சார்ந்த முயற்சிகளை ஆவணப்படுத்துவதற்கு இசை ஆவண காப்பகம் ஒன்றை உருவாக்க வேண்டும்.
பழங்குடி மக்களின் இசை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இசைக் கருவிகளை உருவாக்கும் தொழிலாளர்கள் வாழ்வு மேம்படுவதற்கு ஒரு நல வாரியத்தை ஏற்படுத்த வேண்டும்.
இசைத்துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு இசை அறிஞர்களின் பெயரில் விருதுகள் வழங்கப்பட வேண்டும்
என்று தீர்மானிக்கப்பட்டது.
இரண்டாவது உலக தமிழிசை மாநாட்டினை புதுச்சேரியில் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.


நன்றி: இந்து தமிழ்திசை

Sunday, April 28, 2019

சிங்கப்பூர் கோயில்களில் தமிழ் இசை




முன்னுரை
            தமிழர்கள் வாழும் நாடுகளில் குறிப்பிடதகுந்தது சிங்கப்பூர்.  அந்த நாட்டின் அலுவல் மொழிகளில் ஒன்றாகவும் தமிழ் விளங்குகிறது. அரசால் நிறுவப்படும் அறிவிப்பு பலகைகளில் தமிழ் இடம்பெற்றுள்ளது. தமிழ் மொழியும் தமிழர் பண்பாடும் அங்கு போற்றி வளர்க்கப்படுகிறது. அங்கு இருபதுக்கும் மேற்பட்ட தமிழ்க் கோயில்கள் உள்ளன. அவற்றுள் முக்கியமான நான்கு கோயில்களை நேரடியாக நிர்வகிக்கிறது சிங்கப்பூர் இந்து அறக்கட்டளை வாரியம். அவற்றில் தெற்கு பாலம் சாலையில்    உள்ள மாரியம்மன் கோயிலும், லிட்டில் இந்தியா பகுதி சிராங்கூன் சாலையில் அமைந்திருக்கும் சீனிவாசப் பெருமாள் கோயிலும் சிங்கப்பூரின் தேசியச் சின்னங்களின் பட்டியலில் உள்ளன.  அக்கோயில்களில் தமிழ் இசையின் நிலை பற்றி இக்கட்டுரை ஆய்வுசெய்கிறது.

சிங்கப்பூரில் தமிழ்க் கோயில்கள்
            19 ஆம் நுாற்றாண்டின் தொடக்கத்தில் ஆங்கிலேய கிழக்கிந்திய நிறுவனத்தால் தமிழகத்திலிருந்து தொழிலாளர்கள் கொண்டுவரப்பட்டனர். தாய்நாட்டை விட்டு வெளிநாட்டில் குடியேற வந்த இந்த மக்கள் தங்களது பண்பாட்டு மரபைப் பேணிக்காத்து வந்தனர். அவர்களது வருகை தீவு முழுவதிலும் திராவிட கட்டிடக்கலையின் அடையாளங்களுடன் கோயில்களை எழுப்பக் காரணமாக இருந்தது.
சிங்கப்பூரில் தமிழ்ப் பண்பாட்டைப் பாதுகாத்ததில் தொழிலாளர்கள் பெருமளவு பொறுப்புடையவர்களாக இருந்தபோதிலும், பிற்காலங்களில், வணிகர்களால் வழங்கப்பட்ட நிதிப்பங்களிப்புகள் வழிபாட்டுத் தலங்களைக் கட்டவும், புனரமைக்கவும் பயன்படுத்தப்பட்டது. இவ்வாறு கட்டப்பட்ட தமிழ்க் கோயில்கள் சமுதாயத்தை ஒற்றுமையுடன் வைக்கவும், தாய்நாட்டைப் பிரிந்து வாழும் மக்களுக்கு அந்நிய நாட்டில் ஒரு பாதுகாப்புணர்வைத் தரும் ஒரு அமைப்பாகவும் உதவின.
கோயிகளில் தமிழ் இசை
            அங்குள்ள பெரும்பாலான கோயில்களில் நாள்தோறும் நடைபெறும் பூசைகளில் தவில் மற்றும் நாகசுரம் இசைக்கப்படுகிறது. இசைக்கலை என்பது கோயில் கலையாகவே தொடக்க காலங்களில் வளர்ந்துவந்ததாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். தவிலை கோயில் மேளம் என்றே இன்றும் நாட்டுப்புற மக்கள் குறிப்பிடுகின்றனர். மங்கல இசைக்கருவிகளில் தவிலுக்கு தவிர்க்க இயலாத இடமுண்டு. தவில் என்னும் சொல் வழக்கு பிற்காலத்தில் ஏற்பட்டதாகும். இதனை சங்க இலக்கியங்கள் மண முழவு என்று குறிப்பிடுகின்றன.
மணமுழவு
            மணமுரசு என்ற சொற்றொடரை விழா முரசு என்று சிலப்பதிகார உரை குறிப்பிடுகின்றது. மணமுழவு என்பதனை மருதநிலப் பறை என்று தொல்காப்பியப் பொருளதிகார உரை குறிப்பிடுகின்றது.
            ஓர் இல் நெய்தல் கறங்க, ஓர் இல்
          ஈர்ந் தண் முழவின் பாணி ததும்ப (புறநானூறு;194)
என்று புறநானூறு குறிப்பிடும் முழவுஎன்பது, திருமணத்தில் வாசிக்கப்படும் மங்கல இசைக்கருவியான தவிலேயாகும்.
            இன்றும் திருமண விழாக்களின் பொழுது தவில் கருவி பயன்படுத்தப்படுகிறது. திருமாங்கல்யம் திருப்பூட்டுச் செய்யும் பொழுது கெட்டி மேளம் என்ற பெயரில் இசைக்கப்படுகிறது.

தவிலும் நாகசுரமும்
            கோயிலில் நடைபெறும் அன்றாட நிகழ்வுகளில் ஒவ்வொரு நிலையிலும் மல்லாரி இசைக்கப்படும் வழக்கம் உள்ளது. மல்லாரி என்பது தமிழிசையில் இசைக்கப்படும் ஓர் இசை உருப்படியாகும். மங்கல இசைக் குழுவிற்குரிய நாகசுர இசை உருப்படியாக மல்லாரி அமைந்துள்ளது. இசைப் பரிமாணத்திற்குரிய உருப்படியாக இது அமையும். தவிலின் பங்கு இதில் மிகுதியாக இருக்கும். இறைவன் வீதி உலா எழுந்தருளும் பொழுது மல்லாரியை இசைப்பர். “ மயில்+ ஆரி மயிலாரி என்பது மருவி மல்லாரி என ஆனது. ஆரி என்பது பாடுதல், ஒலியெழுப்புதல் என்ற பொருள்படும்.மயில், தன் கழுத்தை நீட்டிக் கூவுதல்தான் அகவுதல் என்பது. இந்த மயில் அகவுதலும் ஆரியும் சேர்ந்து - மயில் ஆரி - மல்லாரி ஆனது” என்பார் இசை அறிஞர் மம்மது.
கோயில் நிகழ்வுகளில் மல்லாரி 
            இறைவனின் நீராடலுக்கு திருமஞ்சன நீர் கொண்டு வரும் பொழுது திருமஞ்சன மல்லாரி இசைக்கப்படும்.
             தளிகை உணவு தயாரிக்கும் இடமான மடைப்பள்ளியிலிருந்து தளிகை கொண்டு வரும் பொழுது தளிகை மல்லாரி இசைக்கப்படும்.
             திருவிழாக் காலங்களில் இறைவனைத் தேரில் எழுந்தருளச் செய்தல் உண்டு. தொண்டர்கள் தேரின் வடம் பிடித்துத் தேரை இழுப்பர். இவர்களை உற்சாகப்படுத்தும் நிலையில் தேர் மல்லாரி இசைப்பது வழக்கம்.
            இறைவன் வீதியுலா எழுந்தருளும் போது சின்ன மல்லாரி இசைக்கப்படும்.
            சிவன் கோயில்களில் இறைவன் காளை  வாகனத்தில் எழுந்தருளும் பொழுது பெரிய மல்லாரி இசைக்கப்படும். இந்த நிகழ்வுகளை ஆவணப்படமாக லலிதாராம் வெளியிட்டுள்ளார்.
            சிங்கப்பூர் கோயில்களில் தவில் மற்றும் நாகசுர கலைஞர்களைக் கொண்டு மேற்கண்ட முறைப்படி இசை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இதற்காக தமிழகத்திலிருந்து இசைக்கலைஞர்கள் கோயில்களில் குடியமர்த்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அந்த நாட்டு விதிமுறைப்படி உரிய ஊதியம் வழங்கப்படுகிறது.

சிங்கப்பூரில் தமிழிசைக்கலைஞர்கள்
            சிங்கப்பூர் கோயில்களில் தவில் மற்றும் நாகசுரம் வாசிக்கும் இசைக்கலைஞர்கள் கோயில்களிலேயே தங்கியுள்ளனர். அங்கு அவர்களுக்கு உரிய வசதிகள் செய்துதரப்பட்டுள்ளன. கோயிலில் சமைக்கும் உணவு அவர்களுக்கு அளிக்கப்படுகிறது. இறை பணி என்பதால் அந்த இசைக்கலைஞர்கள் அப்பணியை பக்தியோடு மேற்கொள்கின்றனர்.
உறுமிமேளம்
            சிங்கப்பூரில் புகழ்பெற்றுத் திகழும் உறுமிமேளக் குழு ‘சிவசக்தி முனியாண்டி உறுமிமேளக் குழு’ ஆகும். அக்குழு, தைப்பூசத் திரு விழாவில் சிராங்கூன் சாலையில் அமைந்துள்ள பெருமாள் கோயிலில் காலை 7 மணியிலிருந்தே உறுமி மேளம் இசைக்கத் தொடங்கி விடும்.
            ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்குச் சென்று வாசித்துள்ள இந்த 16 பேர் கொண்ட இசைக்குழு, தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற முதன்மையான விழாக்களில் வாசிப்பது தம் குழுவினருக்கு கிடைத்த பெருமையாகக் கருதுவதாக இக்குழுவின் தலைவர் திரு நவின் குமார் இளங்கோவன் தெரிவித்தார்.
            தைப்பூசத் திருநாளில் உறுமி மேளம் வாசிப்பது குறித்து அங்குள்ள உறுமிமேளக் குழுக்கள் ஒரு சந்திப்புக் கூட்டத்தை நடத்தி அதில் தைப்பூசத் திருவிழாவில் கலந்துகொள்வதற்கான விதி முறைகளுக்கு கட்டுப்படுவதென உறுதியளித்துள்ளனர். இந்து அறக்கட்டளை வாரியம் கொடுத்த தகவல்படி   11 உறுமிமேளக் குழுக்கள் தைப்பூசத் திருநாளில் வாசிக்க அனுமதி பெற்றுள்ளன.
கோயில்களில் திருமுறை இசை
            சிங்கப்பூரின் பல்வேறு கோயில்களில் திருமுறை இசை தினமும் ஒலிக்கக் கேட்கலாம். இவற்றைப் பாடுவோர் தமிழ் நாட்டிலிருந்து சென்ற கலைஞர்கள் ஆவர். மேலும், தேவார இசை நிகழ்ச்சிகள் பல அவ்வப்போது ஏற்பாடு செய்யப்படுகின்றன. அவற்றில் தமிழகத்திலிருந்து வரும் ஓதுவார்கள் முதல் உள்ளூர் திருமுறை மாணவர்கள் வரை பலரும் பாடக் கேட்கலாம். பெரும்பாலும் இவை, நவராத்திரி, புத்தாண்டு, பொங்கல் போன்ற விழாக்காலங்களில் நடைபெறும். மேலும் சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகம்  உட்பட பல கலை அமைப்புகள் தமிழ் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன.
முடிவுரை
சிங்கப்பூரில் அமைந்துள்ள கோயில்கள் வழிபாட்டுத் தலங்களாக மட்டுமின்றி தமிழ் இசையைப் போற்றிப்பாதுகாக்கும் நிறுவங்களாகவும் விளங்குகின்றன.
கோயில் இசை மரபுகளின்படி அன்றாட வழிபாடுகளிலும் திருவிழாக் காலங்களிலும் உரிய முறையில் இசைக்கருவிகள் இசைக்கப் படுவதன் மூலம்  தமிழிசைக் கலைஞர்களுக்கு வாழ்வதாரம் அளிக்கப்படுகிறது.
மேலும் சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகம் மற்றும் தஞ்சாவூர் மரபு இசைப் பள்ளி, சிங்கப்பூர் ஆகிய அமைப்புகள் தமிழ் இசையை மக்களிடம் கொண்டுசேர்க்க பல்வேறு நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
துணைநூற் பட்டியல்
1.தொல்காப்பியம் பொருளதிகாரம், உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 2007
2.புறநானூறு,நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம்,சென்னை,2007
3.சிலப்பதிகாரம், வர்த்தமானன் பதிப்பகம்,சென்னை,2000
இணையதளங்கள்
1.தமிழ் இணையக் கல்விக்கழகம்
2. தமிழ் விக்கிப் பீடியா
3.கீற்று/செம்மலர்
தகவலாளர்கள்
1.கவிஞர் தியாக ரமேஷ், செயலாளர், கவிமாலை, சிங்கப்பூர்
2.திரு. நவீன்குமார் இளங்கோவன், தலைவர், சிவசக்தி முனியாண்டி உறுமிமேளக் குழு, சிங்கப்பூர்




Wednesday, August 15, 2018

கல்வித்துறையும் கலைஞரும்.




     கலைஞர் கருணாநிதி அவர்கள் தமிழகத்தின் முதலமைச்சராக ஐந்து முறை பதவியிலிருந்த போதெல்லாம் தமிழக மக்களுக்குப் பயனளிக்கும் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார். என்றாலும் அவர் கல்வித்துறையில் செயல்படுத்திய திட்டங்கள் பல மாநிலங்களுக்கு முன் மாதிரியானவை என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

கல்வித்துறைக்கு இரு அமைச்சகங்கள்:
     நம் நாடு விடுதலை பெற்றதிலிருந்து கல்வித் துறைக்கு என ஒரு அமைச்சகம் மட்டுமே இருந்து வந்த நிலையில் முதல் முறையாக கல்வித்துறையை இரண்டாகப்பிரித்து பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை என இரு அமைச்சகங்களை 2006 ஆம் ஆண்டு உருவாக்கிய பெருமைக் கலைஞரைச் சாரும். அதனால் கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீடு இரு மடங்காக உயர்ந்து கல்வித்துறை வளர்ச்சியடைந்தது. பள்ளிக் கல்வித்துறையின் முதலாவது அமைச்சராக தங்கம் தென்னரசு அவர்களை நியமித்து பள்ளிக்கல்வித்துறையில் பல நல்ல திட்டங்களைச் செயல்படுத்திட வழி வகுத்தார்.

தமிழ் கட்டாயப் பாடம்:
     தமிழ் நாட்டில் தமிழ் படிக்காமலேயே ஒருவர் பள்ளிக் கல்வியை முடித்துவிடலாம் என்ற நிலையை மாற்றி 2006 ஆம் ஆண்டில் தமிழ்நாடு தமிழ் கற்கும் சட்டம் இயற்றப்பட்டு தமிழ்நாட்டில் அனைத்துப் பள்ளிகளிலும் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை தமிழ் காட்டாயப் பாடமாக்கப்பட்டதும் கலஞரின் முயற்சியால் விளைந்ததுதான்.

சமச்சீர் கல்வி:
     தமிழ்நாட்டில் மாநில அரசு கல்வி, மெட்ரிகுலேசன், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல் என்ற நான்கு விதமான கல்வி முறை நடைமுறையில் இருந்து வந்தது.  ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பாட திட்டம், இது கல்வியில் ஏற்றத் தாழ்வுகளுக்கு வழி வகுப்பதாகவே அமைந்தது. வசதிபடைத்தவர்களுக்கு ஒரு கல்வி எழ்ழைகளுக்கு ஒரு கல்வி என்ற நிலையை மாற்றி அனைவருக்கும் ஒரே சீரான கல்வி கிடைக்க வகை செய்யும் பொருட்டு தமிழகத்தில் சமச்சீர் கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்காக தமிழ்நாடு சமச்சீர் பள்ளிக் கல்வி முறைச் சட்டம் 2010 இயற்றப்பட்டு 2011 ஆம் ஆண்டு நடைமுறைப் படுத்தப்பட்டது. 

நுழைவுத்தேர்வுகள் ரத்து:
      பொறியியல், மருத்துவம் போன்ற உயர் கல்வி பயில விரும்பும் மாணவர்கள் அதற்கு உரிய கல்வித்தகுதியைப் பெற்றிருந்தாலும் பொது நுழைவுத்தேர்வு எழுதி அதில் உயர்ந்த மதிப்பெண் பெற்றால் மட்டுமே சேர்க்கை கிடைக்கும் என்ற நிலை இருந்தது. இதனால் கிராமப்புறத்திலிருந்து படித்து நல்ல மதிப்பெண் பெற்ற தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டது. இந்த நிலை 1984 முதல் 2006 ஆம் ஆண்டு வரை அதாவது 23 ஆண்டுகள் தொடர்ந்தது. இதனை மாற்ற விரும்பிய கலைஞர் 2006 ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் புதிய சட்டத்தை நிறைவேற்றி அதற்குக் குடியரசுத்தலைவரின் ஒப்புதலையும் பெற்று நுழைவுத்தேர்வை ஒழித்தார். அதனால் பல ஏழை எளிய குடும்பத்திலிருந்து மருத்துவர்கள் உருவாக வாய்ப்பு கிடைத்தது.

கட்டணக் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி:
     தனியார் பள்ளிகளும் கல்லூரிகளும் தங்கள் விருப்பம்போல் கல்விக்கட்டணம் என்ற பெயரில் பெற்றோர்களிடம் நிகழ்த்திய கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைத்தவர் கலைஞர். தமிழகத்திலுள்ள தனியார் பள்ளிகளும் கல்லூரிகளும் கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்தும் சட்டம் 2009 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. அதன் படி ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டு பள்ளிகளுக்கான கட்டணங்கள் முறைப் படுத்தப்பட்டன.


மாவட்டந்தோறும் மருத்துவக் கல்லூரி:
      பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்ப மருத்துவர்களின் தேவை அதிகரித்துள்ள நிலையில் மருத்துவர்களை உருவாக்கும் மருத்துவக் கல்லூரிகளை அதிக அளவில் நிறுவ வேண்டியது காலத்தின் கட்டாயம் என்பதை உணர்ந்த கலைஞர் தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டத் தலை நகரங்களிலும் மருத்துவக்கல்லூரிகளைத் தொடங்குவதற்கான முன் முயற்சியை மேற்கொண்டவர்.


பொறியியல் மற்றும் கலைக் கல்லூரிகள்:
      அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் வகையில் மாவட்டங்களில் பல்கலைக் கழக பொறியியல் கல்லூரிகளை 12 இடங்களில் நிறுவினார். அதுபோலவே 14 கலை அறிவியல் கல்லூரிகளையும் நிறுவினார்.

பல்கலைக் கழகங்களை உருவாக்கியவர்:
     தமிழகத்தின் அனைத்து மாவட்ட இளைஞர்களுக்கும் உயர்கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பல்கலைக் கழகங்கள் இல்லாத பகுதிகளில் புதிதாகப் பல்கலைக் கழகங்களை உருவாக்கியவர் கலைஞர். 1990 ஆம் ஆண்டு திருநெல்வேலியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தையும், 1997 ஆம் ஆண்டு சேலத்தில் பெரியார் பல்கலைக் கழ்கத்தையும் உருவாக்கினார்.

நூலகத்துறையில் மாற்றங்கள்:
     பள்ளிக் கல்வித்துறையின் ஒரு பிரிவான நூலகத்துறையிலும் பல புதுமைகளையும் ஆக்கப்பூர்வமான பணிகளையும் செய்தவர் கலைஞர். நூலகங்களுக்கு பதிப்பாளர்களிடமிருந்து 750 புத்தகங்கள் மட்டுமே வாங்கிய நிலை இருந்தது. கலைஞர் 1000 நூல்கள் வாங்கிட வழி வகுத்தவர். மேலும் ஆசியாவின் மிகப்பெரிய நூலகமாகத் திகழும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை கோட்டூர்புறத்தில் உருவாக்கி இன்று போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு அரிய வாய்ப்பினை வழங்கியதோடு அறிவு சார் கருத்தரங்குகள் பயிலரங்குகள் நடைபெற ஓர் சிறந்த இடமாகவும் திகழ்வதற்கு அடிகோலியவர். வாசகர்கள் தம்மிடம் உள்ள சொந்த நூல்களையும் எடுத்துச் சென்று படிக்கவும் அந்த நூலக்த்தில் வாய்ப்பளிக்கப்படுகிறது.

பதிப்பாளர் வாரியம்:
      பதிப்புத் தொழில் நலிவடைந்து விடாமல் காக்கும் பொருட்டு அத்தொழிலில் ஈடுபடும் பதிப்பாளர்கள் விற்பனையாளர்கள் மற்றும் பணியாளர்களை உள்ளடக்கிய நல வாரியம் உருவக்கியவரும் கலைஞரே. அவ்வாரியத்தின் வாயிலாக உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு நிதி உதவிகள் அளிக்கப்படுகின்றன.
நன்றி: குங்குமச்சிமிழ்
http://kungumam.co.in/CArticalinnerdetail.aspx?id=3592&id1=93&issue=20180816


Tuesday, August 14, 2018

தேசிய நூலகர் தினம் உருவானது எப்படி?




தேசிய நூலகர் தினம் உருவானது எப்படி?

இரத்தின புகழேந்தி
 
சென்னையிலுள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஒரு நூலைத் தேடி எடுக்கவேண்டுமெனில் ஒவ்வொரு தளத்திலும் நுழைவாயிலில் உள்ள கணினியில் நூலின் பெயரையோ ஆசிரியர் பெயரையோ தட்டச்சு செய்தால் எந்த அலமாரியில் எந்த இடத்தில் அந்த நூல் உள்ளது என்பதை கணினியில் பார்த்து எளிதாக எவ்வித அலைச்சலும் இன்றி எடுத்து வரலாம். இது தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் பயனால் விளைந்த நன்மை.
     ஆனால் மற்ற நூலகங்களில் நூல்களை இவ்வளவு எளிதாக நாம் தேடி எடுத்துவிட இயலாது. ஒரு நூலைத் தேடி எடுப்பதற்குள் களைப்புதான் மிஞ்சும். நூல்களை அப்படி அடுக்கி வைத்திருப்பார்கள்.
     நூலகங்களில் நூல்களை எவ்வாறு அடுக்கி வைப்பது என்பது மிகப்பெரிய சவாலான பணிதான். அதற்கு ஒரு வழிமுறையை நம் நாட்டுக்கு வழங்கியவர் ஒரு தமிழர் என்பதில் நமக்குப் பெருமைதான். அந்த பெருமைக்குரியவர்தான் இந்திய நூலகத் தந்தை என்று போற்றப்படும் சீர்காழி ராமாமிர்தம் ரங்கநாதன்.

எஸ்.ஆர்.ரங்கநாதன்:
     இவர் சீர்காழிக்கு அருகிலுள்ள வேதாந்தபுரம் என்னும் ஊரில் 1892 ஆம் ஆண்டு ஆகஸ்டு 12 ஆம் நாள் ராமாமிர்தம் சீத்தாலட்சுமி இணையருக்கு மகனாகப் பிறந்தார். பள்ளிக் கல்வியை சீர்காழியிலும் கல்லூரிக் கல்வியை சென்னையிலும் முடித்து கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். அதன் பிறகு சென்னை மாநிலக்கல்லூரியில் கணிதவியல் துறையில் உதவிப்பேராசிரியராகப் பணியாற்றினார். அவரது ஊதியம் குடும்பம் நடத்த போதுமானதாக இல்லை என்பதால்

முதல் நூலகர்: 
1924ல் சென்னைப் பல்கலைக்கழக நூலகத்தில் முதல் நூலகராக பணியில் சேர்ந்தார். ஊதியம் அதிகம் என்றாலும் கற்பித்தல் பணியில் கிடைத்த மன நிறைவு நூலகர் பணியில் இல்லை. அதனால் அப்பணி அவரைக் கவரவில்லை. எனினும் மாநிலக்கல்லூரி முதல்வரின் ஆலோசனைப் படி, லண்டன் சென்று, நூலக அறிவியலில் பல்வேறு நுணுக்கங்களைக் கற்றார்.

அங்கிருந்து நாடு திரும்பியதும், பல்கலைக்கழக நூலகத்தை சீரமைக்கத் தொடங்கினார். அதனை அடுத்து சென்னை நூலகச் சங்கத்தை நிறுவினார். இது நூலக இயக்கத்தின் சின்னமாக மாறியது. அதன் அமைப்பு செயலாளராக 1928 முதல் 1945 வரை செயல்பட்டார்.

நூலகத்துறைக்கு ஆற்றிய பணிகள்:
     1948 இல் இவரது முயற்சியால்தான் சென்னை பொது நூலகச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தின்படிதான் உள்ளாட்சி நிறுவனங்கள் வசூல் செய்யும் சொத்து வரியில் 10 சதவீதம் நூலகத்துறைக்கு வழங்கப்படுகிறது.

     இந்திய நூலகத் துறைக்கு அவர் அளித்த கொடைதான் கோலன் பகுப்பு முறை. நூல்களைப் பொருள்வாரியாகப் பிரித்து அடுக்குவதற்கான அறிவியல்பூர்வமான அணுகுமுறையே கோலன் பகுப்பு முறை எனப்படுகிறது. இந்த பகுப்பு முறை இவரால் ஆராய்ந்து கண்டுப்பிடிக்கப்பட்டதாகும். இது நூலகத்துறையைச் சார்ந்த பல மேனாட்டு அறிஞர்களால் ஒப்புக்கொள்ளப்பட்டது. அதுவரை கையாளப்பட்டு வந்த பகுப்பு முறையைக் காட்டிலும் கோலன் பகுப்பு முறை மாறுபட்டதாகவும், தனித்தன்மை வாய்ந்ததாகவும் இருந்தது. இந்தியாவில் மட்டுமல்லாது பல்வேறு நாடுகளில் உள்ள நூலகங்களும் இக்கோலன் பகுப்பு முறையைத் தான் இன்றும் பயன்படுத்துகின்றன.

நூலக அறிவியல் துறைக்கு வித்திட்டவர்:  
நூலக அறிவியல் பள்ளி என்ற அமைப்பைத் தொடங்கி, 15 ஆண்டுகள் அதன் இயக்குநராகப் பணியாற்றினார். தன் சேமிப்பு முழுவதையும் அதற்காக வழங்கினார்.
1945 இல் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு பனாரஸ் பல்கலைக் கழகத்தில் நூலக அமைப்பை மேம்படுத்தும் பணியில் தன்னை அற்பணித்துக்கொண்டு 2 ஆண்டுகள் தனி ஒருவராக அங்கிருந்த ஒரு லட்சம் நூல்களை வகைப்படுத்தினார். மேலும் அங்கு நூலக அறிவியல் பட்டயப்படிப்பை அறிமுகப்படுத்தி அவரே அதற்கான ஆசிரியராகவும் செயல்பட்டார்.
     அதன் பிறகு டெல்லி பல்கலைக்கழக அழைப்பை ஏற்று அங்கு சென்று நூலக் அறிவியல் பாடம் கற்பித்தார். அவர் அங்கு பணியாற்றியபோதுதான் நூலக அறிவியலில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டப் படிப்புகள் தொடங்கப் பட்டன,

     இவர் சிறந்த எழுத்தாளரும்கூட. நூலக நிர்வாகம் உள்ளிட்டவை தொடர்பாக 60-க்கு மேற்பட்ட நூல்கள், 2,000-க்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதியுள்ளார். பல நாடுகளுக்குச் சென்று நூலகம் குறித்து உரையாற்றினார். கடுமையாகப் பாடுபட்டு நூலகம் மற்றும் தகவல் அறிவியலுக்கான புதிய, அடிப்படைக் கோட்பாடுகளை நிறுவினார்.
பனாரஸ் பல்கலைகழகத்தில் நூலகராகவும், தில்லி நூலகத்துறையின்  தலைவராகவும் பணியாற்றினார். தில்லியில் உள்ள நூலகத் தரக் குழுவின் தலைவராகவும் இருந்தார்.

பதம்ஸ்ரீ ரங்கநாதன்:
1957 ஆம் ஆண்டு இந்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது அளித்து சிறப்பித்தது

நூலகத்துறைக்கு ஆற்றியுள்ள அளப்பரிய பங்களிப்புக்காக எஸ்.ஆர் ரங்கநாதன் “இந்திய நூலகத் தந்தை” எனப் போற்றப்படுகிறார். இவருடைய பிறந்த நாளான ஆகஸ்ட் 12ம் நாளை நூலகர் தினமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. சிறந்த நூலகர்களுக்கு நல் நூலகர் விருதும் இந்த நாளில் வழங்கப்படுகிறது.

     நூலக்த்தைச் சிறப்பாகப் பயன்படுத்தி ஒரு அறிவார்ந்த சமூகம் உருவாகவேண்டும் என்பதற்கான விழிப்பு உணர்வு மக்களிடம் ஏறபடுவதற்கும் இந்த நாள் பயன்படுகிறது.

நன்றி: தமிழ்முரசு
http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=426128

Sunday, August 12, 2018

கடலூர் கலைத்திருவிழா2018




















கடலூர் கலைத்திருவிழா2018
***
இன்று கடலூரில் நடைபெற்ற மாபெரும் ஓவியப்போட்டி நிறைவு விழாவில் பங்கேற்றது மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வு. ஓவியப்போட்டி என்பதை விட கலைத்திருவிழா என்றுதான் சொல்லவேண்டும். ஓவியக்கலைஞர் ஏ.ஆர். ( கலைப் புரட்சி என்பதன் ஆங்கிலச் சுருக்கம்) ஓவியப் பயிற்சிக் கூட நிறுவனர் ராஜசேகர் 
அண்ணாமலைப் பல்கலைக் கழக வேளாண் துறை பேராசிரியர் சிவசக்திவேலன், குழந்தைகள் நல வல்லுநர் மருத்துவர் இளந்திரையன் ( இவர் குழந்தை மருத்துவர் நமசிவாயம் அவர்களின் உறவினர்) வருமான வரித்துறை அலுவலர் செங்குட்டுவன் என வேவ்வேறு துறை சார்ந்த நண்பர்கள் ஒன்றிணைந்து இதுபோன்ற ஒரு விழாவினை மூன்று ஆண்டுகளாக சிறப்பாக நிகழ்த்தி வருவது பிரமிக்க வைக்கிறது. 700 மாணவர்கள் அவர்களின் பெற்றோர்கள் என 1000 பேர் ஒன்றுகூடிய ஒரு திருவிழாவாக நடைபெற்றது. மணற்சிறபம் அட்டைச் சிற்பம் நெகிழி சிற்பம் என ஒவ்வொரு சிற்பமும் காண்போரை சிந்திக்க வைத்தது. குழந்தைகளின் நிம்மதியை மின்னணு சாதனங்கள் எவ்வாறு குலைக்கின்றன என்பதை மணற்சிறபம் உணர்த்தியது. மடியில் உரங்கவேண்டிய குழந்தை மடிக்கணினியில் உரங்கும் அவலத்தை உரத்துச் சொன்னது அருளியின் மணற்சிற்பம். ஒற்றை மரக் கன்றை காப்பாற்ற மழை வராதா என ஏக்கத்தோடு வானத்தை நோக்கும் உயிர்வளி உருளையை முதுகில் சுமந்திருக்கும் மனிதனை அட்டைச் சிற்பமாக அடுத்த நூற்றாண்டுக்கே நம்மை அழைத்துச் செல்லும்படி அமைத்திருந்தார் ஆகாஷ். நெகிழி தண்ணீர் பாட்டில்களால் உருவான நெகிழி மரம் நெஞ்சை பதைக்க வைத்தது. தினேஷின் இந்த முயற்சி பார்ப்போர் மனதில் நிச்சயம் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்தும். அதற்கு பொருத்தமான கவிதைகளை ஆயுதமொழியன் சீனிவாசன் ஆகிய மாணவர்கள் எழுதி காட்சிப்படுத்தியதும் அருமை.
இந்த நிகழ்வில் கூடுதல் சிறப்பு மரபுவழி சுடுமண் சிற்பக்கலைஞர் யுனெஸ்கோ விருதுபெற்ற சிறப்புக்குறிய வில்லியனூர் முனுசாமி அவர்களின் சிற்பக் காட்சியும் பயிலரங்கும். குழந்தைகளோடு குழந்தையாக அவர்களுக்கு களிமண் சிற்பங்களுக்கான பயிற்சி வழங்கி வீட்டில் செய்து பார்க்க களிமண்ணையும் வழங்கினார். அவரின் வில்லியனூர் பட்டறைக்கு குடியரசு முன்னாள் தலைவர் மேதகு அப்துல்கலாம் அவர்களும் புதுவை துணை நிலை ஆளுநர் மேதகு கிரண்பேடி அவர்களும் சென்று அவரோடு உரையாடி உள்ளனர். சுடுமண் சிற்பங்களோடு அன்றாட பயன்பாட்டுக்கான சுடுமண் கைவினைப் பொருள்களையும் மக்களுக்கு வழங்கி வருவது கூடுதல் சிறப்பு.
போட்டிக்கு நடுவர்களாக ஓவியக்கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் வந்திருந்து பரிசுக்கு உரிய ஓவியங்களைத் தேர்வு செய்தனர். கலந்துகொண்ட எல்லாருக்கும் பரிசளித்திருக்க வேண்டும். ஆனால் அது இயலாது என்பதால் வேறு வழியின்றி ஒரு சில ஓவியங்களை மட்டுமே தேர்வுசெய்தோம் என நடுவர்களில் ஒருவர் கூறியது பார்வையாளர்களிடம் ஆரவாரத்தை ஏற்படுத்தியது.
இந்த ஏ.ஆர். ஓவியப் பயிற்சிப் பட்டறை ஒரு ஓவியக்கல்லூரியாக பரிணமிக்க வேண்டும் என்கிற என் அவாவை வெளிப்படுத்தி நண்பர்களிடமிருந்து விடைபெற்றேன்.
என் அழைப்பை ஏற்று என்னுடன் கடலூர் பயணத்தில் உறுதுணையாக வந்த நண்பர் தணிக்கையாளர் ராமச்சந்திரன் அவர்களோடு நிகழ்வின் சிறப்புகளைப் பேசிக்கொண்டே வந்தது பயணக் களைப்பைப் போக்கியது.
இந்த நாளை இனிய நாளாக்கிய நண்பர்களுக்கு நன்றி.
விடுமுறை நாளிலும் தங்கள் பள்ளி மாணவர்களைத் திரளாகப் பங்கேற்கச் செய்த திருவள்ளுவர் பள்ளி மற்றும் எம்.ஜி.ஆர்.நகர் பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டுகள்.

நன்றி: படங்கள் - பேராசிரியர் சிவசக்திவேலன்.

Sunday, July 22, 2018

உள்ளிழுக்கும் கவிதை




     கவிதை வாசிப்பு என்பதே இன்று அரசியலாகியிருக்கிறது. யாருடைய கவிதைகளை நாம் வாசிக்கவேண்டும் என்று நமக்கு கட்டளையிடும் விதமாகவே இன்றைய இதழ்கள் நம் மீது சிலரது கவிதைகளைத் திணிக்கின்றன. நாமும் அவற்றை வாசிக்கவேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளாகிறோம். இன்று இடைநிலை இதழ்களால் சிறு பத்திரிகைகளின் மூச்சுத் திணறுகிறது.. நாம் விரும்பும் கவிதைகளைத் தேடி வாசிப்பதற்கான வாய்ப்புகள் குறைந்துள்ளன. வாசகர்களிடம் நிலவும் இத்தகைய தேக்க நிலையை, சமூக ஊடகங்கள் சரிசெய்ய முயல்கின்றன.
     இப்படி ஒரு சூழலில் கவிதை நூல் வெளியிடுவது என்பதே மிகப்பெரிய சவால். அப்படியே வெளியிட்டாலும் அவற்றை வாசகர்களிடம் கொண்டு சேர்ப்பது அதைவிட சவாலாகும். அந்த பணியை துணிவோடு செய்திருக்கும் நம் கவிஞர் சூர்யநிலா அவர்களுக்கு வாழ்த்துகள்.
     தொடர்ந்து மிகுந்த ஆயாசங்களுக்கிடையிலும் இயங்கி வருபவர் கவிஞர். இவரது அண்மை வரவு, ”புனலில் மிதக்கும் முகம்” இக்கவிதை நூலில் என்னைக்கவர்ந்த இரு கவிதைகளில் ஒன்றை மட்டும் சக வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
     ஒரு நூலை நாம் தொடர்ந்து வாசிக்கவேண்டுமா என்பதை முதல் பத்து வரிகளே தீர்மானிக்கின்றன. நான் பல முக்கியமான நூல்களை இன்னும் வாசிக்காமலிருப்பதற்கும் அதுவே காரணம். எத்தனை முக்கியமான எழுத்தாளராக இருந்தாலும் முதல் பத்தியிலேயே என்னைக் கவரவேண்டும் இல்லையெனில் அந்த நூலை நான் அவ்வளவு சீக்கிரம் வாசிப்பதில்லை. இந்த என் மனநிலைக்கு சரியான தொகுப்பாக அமைந்துள்ளது இந்த தொகுப்பு.
     சமர் என்னும் முதல் கவிதையே என்னை மிகவும் கவர்ந்த கவிதை. இந்த ஒரு கவிதையே போதும் இந்த தொகுப்பைப் படிக்க நம்மை உள்ளிழுத்துச் செல்லும் திறவுகோலாக அமைத்துள்ளது. நம் கற்பனை செய்யும், கனவுகாணும் உலகம் அழகாக இருக்கிறது. ஆனால் எதேர்த்தமோ அதற்கு நேர்மாறாக உள்ளது. எல்லோரும் இன்னாட்டு மன்னர் என்றார்களே ஆனால் நிச வாழ்க்கை அப்படியா இருக்கிறது. ஒவ்வொன்றுக்கும் போராடத்தானே வேண்டியிருக்கிறது. அன்றாட வாக்கையே போராட்டமாக அமைந்த ஒரு எளிய மனிதன் தனியாக எத்தனை போராட்டங்களுக்கு வாளைச் சுழற்ற முடியும். இயலாது என்பதற்காக விட்டுவிட முடியுமா? போராடி வாழ்ந்தாகத்தானே வேண்டியிருக்கிறது. நம் வாழ்க்கைப் போராட்டங்களை பக்கம் பக்கமாக எழுதலாம். ஆனால் அவையெல்லாம் கவிதையாகிவிடாது. கவிதைக்கு அழகு சுருங்கச் சொல்லுதலாயிற்றே. இத்தகையதொரு சாமான்யனின் போராட்ட வாழ்க்கையைத்தான் இந்த முதல் கவிதை சுருங்கச் சொல்கிறது. அதனூடே வாசகனின் கற்பனைகளையும் விரிவடையச் செய்கிறது.
    
     பெரும் சேனைகளின் முன்னே
     கம்பீரமாக நடந்தேன்
என்று தொடங்கும் இரண்டு வரிகள் பல சிந்தனைகளை வாசகரிடம் கிளரிவிடுகின்றன. அரசன் ஒருவன் தன் படைகள் பின் தொடர கம்பீரமாக நடந்து செல்வதாக ஒரு காட்சி சட்டென தோன்றி மறைகிறது. தமிழர் மரபு என்பது உறவுகள் சூழ வாழ்ந்தது. நாட்டுப்புற வழக்காற்றில் சேனை என்பது உறவுகளைக் குறிக்கப் பயனபடுத்தப்படும் ஒரு சொல்லாகும். இப்படி உறவுகளோடு வாழ்ந்த பழய வாழ்க்கையை நினைத்துப் பார்க்கவும் இவ்விரு அடிகள் வாசகரின் கற்பனையை விரிக்கும் புள்ளிகளாகவும் உள்ளன. நம் நாட்டின் தற்கால அரசனையும் நாம் இங்கே பொருத்திப் பர்த்துக்கொள்ளலாம்
     ”பல்லக்கு கொண்டு வரவா?”
     படைத்தலைவன்
     பணிந்து கேட்டான்
அடுத்ததாக இப்படி நகரும் கவிதை மன்னனைப் பணியும் படைத்தலைவனை ஒரு குறியீடாகக் கொண்டுள்ளது. மோடியிடம் பணியும் எடப்பாடியும் நம் கண்முன் வந்து போவதைத் தவிர்க்க இயலவில்லை. படை பலத்தோடு பணபலமும் பெருகிவிட்டால் உறவுகளும் இப்படிப் பணிவது இயல்பாகிவிட்டது. பணிவு என்பது அதிகாரத்துக்கு அடிபணிவது மட்டுமில்லை. இவையெல்லாம் கவிஞரின் கனவில் நடப்பவை.
     மறுதலித்து நடந்தேன்
     கவச உடைகள்
     கனத்துத் தொங்கின
என்னும் அடுத்த பத்தியும் கனவு உலகில்தான். மன்னனுக்கு கவச உடைகள் கனக்கின்றன கூலிகளுக்கோ சாதாரண உடைகளே கனக்கின்றன. அதனால்தான் வெற்றுடம்புடன் உழைக்கிறார்களோ?  பல்லக்கை மறுதலித்து நடப்பது ஏனோ? என்னும் வினாவும் வாசகனுக்கு வருவதில் வியப்பில்லை.
     ஆயிரக்கணக்கான சிப்பாய்கள் பின் தொடர மன்னர் போருக்கு ஆயத்தமாகிறார் அதற்குள் இல்லத்தரசியின் குரல் கனவைக் கலைக்கிறது. கவிஞர்கள் எப்போதும் கற்பனை உலகில் வாழ்பவர்கள். எதார்த்த உலகை விட்டு அவ்வப்போது வெளியேறி விடுவார்கள் அவர்களை இப்படி ஏதேனும் ஒரு அன்றாட நிகழ்வுதான் மீண்டும் எதார்த்தத்தை நோக்கி இழுத்து வருகிறது.
     பால் வாங்கி வரலையா
     என்ற விளித்தலில்
     விழித்தேன்
என்றுதான் கவிஞர் குறிப்பிடுகிறார். அது யாருடைய விளித்தல் என்பது படிக்கும் குழந்தைக்குக்கூட தெரிந்திருக்கும். அந்த மந்திரக் குரல்தான் கவிஞரை கனவுலகிலிருந்து அசல் உலகத்திற்கு அழைத்து வருகிறது.
அடுத்த வரியிலேயே ”ஆரம்பமாகிவிட்டது சமர்”. கனவில் சென்றதோ வேறு ஒரு போருக்கு அது உயர்ந்த நோக்கமுடைய போராகவும் இருக்கலாம். எதிரிகளை வீழ்த்தும் போர், நாட்டைப் பிடிக்கும் போர், அணு ஆயுதங்களை அழிக்கும் போர், சொந்த நாட்டு மக்களையே சுட்டுக்கொல்லும் போர், போர் அறங்களை மீறி ஆயுதங்களை ஏவும் போர் என ஏதோ ஒரு போருக்கு செல்ல கனவுகண்ட மன்னன் ஒருவனை வாழ்க்கை பால் வாங்கி வருவதற்கு விரட்டுகிறது.
     சுற்றம் சூழ வாழ்ந்த மனிதன் தனித்து விடப்படுகிறான். என் சேனைகள் எங்கே என கேவி அழும் மன்னனாக இனி அவன் தனியாகத்தான் வாளைச் சுழற்ற வேண்டும்.
                ஆரம்பமாகிவிட்டது
                சமர்
                இனி
                நான் தனியாகத்தான்
                வாளைச் சுழற்ற வேண்டும்
என்னும் முடிவு நம் நெஞ்சைப் பிசைகிறது. இது யார் செய்த குற்றம். இன்றைய பொருளாதார சூழல் விலை ஏற்றம் என ஒவ்வொரு நாளும் போராட்டமாகவே சென்றால் என்னதான் செய்ய  இயலும் தனி மனிதன்.
ஒரு பெரும் கூட்டத்திலிருந்து தனித்து விடப்பட்ட செம்மரி ஆட்டைப்போல் மனிதர்கள் அன்றாட வாழ்க்கைப் போராட்டத்தில் தனித்து வாள் சுழற்றும் சோகம் மாறுமா? என்ற ஏக்கத்தை நம்மிடம் ஏற்படுத்திவிடுகிறது இக்கவிதை.
புனலில் மிதக்கும் முகம்
சூர்யநிலா
எழுத்துக்களம் வெளியீடு 2017
22/07/18
மணிமுத்தாறு இலக்கியவட்டம் நிகழ்த்திய கவிஞர் சூர்யநிலாவின் புனலில் மிதக்கும் முகம் நூல் திறனாய்வுக் கூட்டத்தில் வாசித்த விமர்சனக் கட்டுரை.