முனைவர் இரத்தின புகழேந்தி
விருத்தாசலம், தமிழ்நாடு
முன்னுரை:
அந்தமான் தீவில் வசிக்கும் மண்ணின் மைந்தர்களான ஜராவா பழங்குடி மக்கள் எண்ணிக்கையில் குறைந்து வருகின்றனர். அம்மக்களைக் காப்பாற்ற 1957 இல் ஜராவா பழங்குடியினர் காப்பகம் உருவாக்கப்பட்டது. ஆனாலும் ஜாரவா பழங்குடியினர் வாழும் பகுதிகளைக் கடக்கும் சுற்றுலா பயணிகளிடமிருந்தும், வேட்டைக்காரர்களிடமிருந்தும், இம்மக்கள் வாழும் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை அமைத்த தொழிலாளர்களிடமிருந்தும் பரவிய தொற்று நோய்களால் ஜாராவா மக்கள் பலர் இறந்துவிட்டதாக யுனெஸ்கோ நடத்திய ஆய்வின் மூலம் தெரியவருகிறது.எண்ணிக்கையில் குறைவாக இருக்கும் இம் மக்களின் வாழ்க்கை முறைகளைப்பற்றி சுருக்கமாக விளக்குகிறது இக்கட்டுரை.
யுனெஸ்கோ நிறுவனம் 2010 ஆம் ஆண்டு வெளியிட்ட “அந்தமான் தீவுகளில் ஜராவா பழங்குடியினரின் பண்பாடு மற்றும் உயிரியல் பன்முகத்தன்மை” என்னும் ஆய்வு நூலின் கருத்துகள் இக்கட்டுரைக்கு முதன்மை ஆதாராமக அமைந்துள்ளன.
ஜராவா பழங்குடிகள் எங்கு வசிக்கின்றனர், அவர்களுக்கு கிடைக்கக் கூடிய உள்ளூர் வளங்கள் எவை, அவர்களின் வாழ்வாதாரத்திற்கு மேற்கொள்ளும் நாவடிக்கைகள், அவர்களின் உணவு முறைகள், உணவுப்பொருள்களை எவ்வாறு பதப்படுத்தி சேமித்து வைக்கின்றனர், பருவமாற்றங்களை அவர்கள் எதிர்கொள்ளும் விதம் ஆகியன குறித்து இக்கட்டுரை விளக்குகிறது.
இருவகைப் பழ்ங்குடிகள்:
அந்தமான் தீவில் வசிக்கும் பழங்குடி மக்கள் இரு வகைப்படுவர்.
கடற்கரையில் வசிப்பவர்கள் (அர்-யோட்டோ)
காட்டில் வசிப்பவர்கள் (எரெம்-டகா)
இவற்றுள் இரண்டாவது பிரிவினரான எரெம்-டகா வகையைச் சேர்ந்தவர்களே ஜராவா பழங்குடிகள்.
வாழ்விடங்கள்:
ஜராவா மக்களின் வாழ்விடங்களான காடுகளில் 11 வகைகள் உள்ளதாகக் குறிப்பிடுகின்றனர்.அவை 1. ராட்சத பசுமைக் காடு, 2. வெப்பமண்டல பசுமைக்காடு, 3. தெற்கு மலை உச்சி வெப்பமண்டல பசுமைக்கடு, 4. கரும்பு புற் புதர்கள், 5. மூங்கில் புதற் காடு, 6. அரை பசுங்காடுகள், 7. இலையுதிர்க் காடு, 8.ஈரமான இலையுதிர்க் காடு, 9. கடற்கரைக் காடு, 10. அலை சதுப்புக் காடு, 11. சப்மண்டேன் மலைப் பள்ளத்தாக்கு சதுப்புக் காடு என்பனவாகும்.
ஜராவா மக்கள் பயன்படுத்தும் வளங்கள்:
ஜராவாக்கள் நிலத்தை ஐந்து வகைகளாகப் பிரிக்கின்றனர் அவை
1.பில்லே (கடற்கரைப் பகுதி), 2.தகித் (சதுப்பு நிலப் பகுதி), 3.சன்ஹன்னாப் (வெற்று வன நிலம்), 4.டினான் (மலைக் காடு) 5. வா (ஸ்ட்ரீம்கள், நுழைவாயில்கள்). இந்த ஐவகை நிலங்களும் பல்வேறு வளங்களை மக்களுக்கு வழங்கும் மண்டலங்கள் ஆகும்.
கடற்கரையும் சதுப்பு நிலப்பகுதியும் நீர் வாழ் வளங்களைக் கொண்ட பகுதிகளாகும். தரை மற்றும் மலைக்காடுகள் விலங்குகள், தாவரங்கள், விதைகள், பழங்கள், கிழங்குகள் ஆகிய ஆதாரங்களை வழங்குகின்றன.
ஜராவா பழங்குடிகளின் உணவு முறை:
இம் மக்கள் வாழும் நிலப்பகுதியில் கிடைக்கும் காட்டுப் பன்றி, பல்லி, தேன், தாவரங்களின் வேர்கள், பழங்கள், தளிர்கள் ஆகியவற்றையும் நீர்வாழ் உயிரிகளான மீன், நண்டு, நத்தை, ஆமை, ஆமை முட்டை ஆகியவற்றை உணவுக்குப் பயன்படுத்துகின்றனர்.
பருவ காலங்களுக்கு ஏற்ற உணவுப் பழக்கம் இவர்களிடம் காணப்படுகிறது. இங்கு மூன்று பருவங்கள் உள்ளன. 1. மார்ச் முதல் மே வரை (குறைவாக மழை பெய்யும் காலம்) மிகுதியாகக் கிடைக்கும் பலாப்பழம், தேன் ஆகியவற்றை சேகரித்து வைக்கின்றனர்.
2.ஜூன் முதல் நவம்பர் வரை (தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழைக் காலம்) இந்த மழைக் காலத்தில் பெரும்பாலும் பன்றி வேட்டை மற்றும் சில தாவர விதைகளை சேகரிக்கிறார்கள்.
3.டிசம்பர் முதல் பிப்ரவரி வரை ( பருவ மழை முடிவுறும் காலம்) இந்த பருவத்தில் ஓமின், கினி, ஈமல், டங்கல் போன்ற சில பழங்களை பச்சையாகவும் பதப்படுத்தியும் உண்ணுகின்றனர். இவர்கள் பலாப்பழங்களை அதிகமாக உண்பர்.
உணவுப் பொருள்களைப் பதப்படுத்தும் முறை:
ஒரு பருவத்தில் மிகுதியாகக் கிடைக்கும் உணவுப்பொருள்களை பதப்படுத்தி சேமிக்கும் பழக்கம் இம்மக்களிடம் காணப்படுகிறது. ஆலாவ் எனப்படும் குழி அடுப்பில் சமைக்கும் வழக்கம் இவர்களிடம் உண்டு. சில வகை உணவுகளை சமைத்த உடன் உண்கின்றனர். சில வகை உணவுகளை பதப்படுத்தி சேமித்து வைக்கின்றனர். கோடைக்காலத்தில் அதிக அளவில் கிடைக்கும் பலாப்பழங்களை சமைத்து சாப்பிடுகின்றனர் எஞ்சியுள்ள பலாச்சுளைகளை உலர்த்தியும் பலாக்கொட்டைகளை கூடைகளில் வைத்து மண்ணுக்கு அடியில் இரண்டு வாரங்களுக்கு புதைத்து வைத்து அதன் பின்னர் மேல் தோல் நீக்கப்பட்டு சுட்டு சேமித்து வைத்து மழைக்காலத்தில் உண்பதற்கு பயன்படுத்துகின்றனர். பன்றி இறைச்சியை உலோகப் பாத்திரங்களில் சமைத்து உண்பர். ஒரு சில நேரங்களில் ஆலவ் என்னும் குழி அடுப்பில் சுட்டு உண்பர். பன்றி இறைச்சியை புடம்போட்டு (புகையிலிட்டு) பதப்படுத்தி ஒரு மாதம் வரை வைத்து உண்பதும் உண்டு. பன்றி கொழுப்பும் சேமித்து வைக்கப்படுகிறது.
ஓமின் (சைக்கஸ் ரம்ஃபி) விதைகளின் தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக வெட்டப்பட்டு உப்பு நீரில் இரண்டு வாரங்கள் ஊர வைத்து உலர்த்தி பல மாதங்கள் வரை சேமித்து வைக்கின்றனர். தேவைப்படும்போது அவற்றை வேக வைத்து சேமித்து வைத்துள்ள பன்றி கொழுப்பு கலந்து உண்பர்.
நாடோடி மரபு:
ஜராவா பழங்குடியினர் அடிக்கடி தங்கள் முகாம்களை ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு மாற்றுகிறார்கள். பருவ காலங்களுக்கு ஏற்பவும் உணவுப்பொருள்களின் தேவைக்கேற்பவும் இந்த இடப்பெயர்வுகள் அமையும். மழைக்காலங்களில் கடல் கொந்தளிப்பாக இருக்கும்போது காட்டுப்பகுதிக்கும் காடுகளில் உணவுப்பொருள்கள் அரிதாகும்போது கடற்கரைப் பகுதிக்கும் இடம்பெயர்கின்றனர்.
முடிவுரை:
அழிந்து வரும் ஜரவா பழங்குடி மக்களைப் பாதுக்காக்க அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு சுற்றுலாப் பயணிகள் முழுமையான ஒத்துழைப்பு கொடுத்து அவர்களின் மரபுப் படி வாழவிடுவதன்மூலம் அந்த இனம் காக்கப்பட வேண்டும். அவர்களை எவ்வித இடையூறும் செய்யாமல் காடுகளில் புழங்கிட அவர்களின் வாழ்விடங்களை ஆக்கிரமிக்காமல் விட்டுவைக்கவேண்டும்.
ஆதாரம்: அந்தமான் தீவுகளில் ஜராவா பழங்குடி மக்களின்
பண்பாடு மற்றும் உயிரியல் பன்
முகத்தன்மை, யுனெஸ்கோ, 2010