தகவல் தொடர்பு சாதனங்கள் இன்று பல வகைகளில் பல்கிப் பெருகி உள்ளன. இவற்றுக்கெல்லாம் தாயாக விளங்குவது வானொலி என்றால் அது மிகை இல்லை. 1920 களில் அறிமுகமான வானொலி இன்று கைபேசி செயலிகள் வாயிலாகவும் கேட்கக் கூடிய அளவிற்கு காலத்திற்கு ஏற்ப தன்னை உருமாற்றிக் கொண்டுள்ளது. தொலைக்காட்சி அறிமுகம் ஆவதற்கு முன்பு கிராமங்களில் வானொலி பெட்டிகள் தான் தகவல்களை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் மிகச் சிறந்த சாதனமாக இருந்திருக்கிறது. சிறுவயதில் விடுமுறை நாட்களில் எங்கள் வீட்டு மர்ஃபி ரேடியோவில் பாட்டு கேட்டபடி மாடுகளை மேய்ப்போம். உலகச் செய்திகள் முதல் ஒலிச்சித்திரங்கள் வரை மக்களிடம் கொண்டு சேர்த்த தகவல் சாதனம் வானொலி. பல்வேறு அறிஞர்களின் கருத்துறைகளையும் வானொலியில் கேட்டிருக்கிறோம்.
1970 கள் தொடர்ந்து அண்மைக் காலம் வரை எங்கள் அன்பு மிகு பேராசிரியர் முனைவர் ஆறு ராமநாதன் அவர்கள் வானொலியில் ஆற்றிய அறிவுசார் உரைகளை தொகுத்து சல்லி வேர்கள் என்ற தலைப்பில் நூலாக்கி இருக்கிறார். ஒரு சிறந்த கல்வியாளராக எதையும் நேர்த்தியோடு செய்யக்கூடிய இயல்புடையவர் பேராசிரியர். வானொலி உரைகள் என்றாலும் அவற்றை முறைப்படுத்தி தொகுத்து நூலாக்கி உள்ளார். அறிவு சார்ந்த ஆறு உரைகள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன.
கலை, இலக்கியம், அரசியல் என்று மூன்று களங்களிலும் தனது உரைகளைத் திட்டமிட்டு நிகழ்த்தியுள்ளார். வானொலி உரைகள் பெரும்பாலும் கட்டுரைகளைப் போல் திட்டமிட்டு நிகழ்த்தப்பட வேண்டும். குறித்த நேரத்தில் செரிவான கருத்துக்களை நேயர்கள் நெஞ்சில் பதியும்படியாக கட்டமைக்கப்பட வேண்டும். போகிற போக்கில் மேடைப்பேச்சு போல் எதையாவது பேசி வைக்க முடியாது. எடுத்துக்கொண்ட தலைப்புக்கு ஏற்ற சரியான கருத்துக்களை தொகுத்து தயாரிக்கப்பட்ட உரையாக தான் அவை அமையும். அப்படித்தான் பேராசிரியரின் உரைகளும் ஆய்வு கட்டுரைகளாகவே அமைந்துள்ளன. தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு பக்தி இலக்கியங்கள் மிகுதியாக பங்களிப்பு செய்திருக்கின்றன. ஆனால் அந்த பக்தி இலக்கியங்கள் நாட்டுப்புற இலக்கிய வடிவங்களை எவ்வாறு கையாண்டிருக்கின்றன. குறிப்பாக தாலாட்டுப் பாடல்கள் கும்மி பாடல்கள் போன்ற நாட்டுப்புற பாடல் வடிவங்கள் பக்தி இலக்கியங்களில் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தி உள்ளன என்பதை தனக்கே உரிய பாணியில் ஆய்வு செய்து தனது உரையை வடிவமைத்திருக்கிறார் பேராசிரியர்.
தெருக்கூத்து குறித்த ஆய்வுகளுக்காக பழைய ஒருங்கிணைந்த தென்னார்க்காடு மாவட்டம் முழுவதுமாக பயணம் செய்து தகவல்களை திரட்டியவர். பேராசிரியரின் ஆய்வுக் கட்டுரை வாயிலாகத் தான் கடலூர் மாவட்டம் குரவன்குப்பம் நாடக ஆசிரியர் சடகோபன் அவர்களை நான் அடையாளம் கண்டேன். அவர் 200 ஆண்டுகாலம் பாதுகாத்து வைத்திருந்த சம்பூர்ண ராமாயணம் எனும் கையெழுத்து பிரதியை அண்மையில் வெளியிட்டேன். அந்த தெருக்கூத்து கலைஞர்களோடு பேராசிரியர் வானொலி நிலையத்திற்கு சென்று பதிவு செய்ததை ஒரு தனி கட்டுரையாக எழுதலாம். அந்த அளவுக்கு பல்வேறு அனுபவங்கள். அவற்றையெல்லாம் முன்னுரையில் கோடிட்டு காட்டி உள்ளார். தெருக்கூத்து, மேடை நாடகங்கள் ஆகிய இரண்டு கலைகள் பற்றியும் மண்வாசம் என்ற தலைப்பில் இரண்டு ஆய்வு உரைகள் இந்த நூலில் இணைக்கப்பட்டுள்ளன.
இரவீந்திரநாத் தாகூரின் கல்விச் சிந்தனைகளை கல்வியியல் படித்தவர்கள் அறிவார்கள். அவரது தேசிய சிந்தனைகளை பேராசிரியரின் ஆய்வுரை குறிப்பிடுகிறது. அவரின் பல்வேறு சிந்தனைகள் இன்றைக்கும் பொருந்தக் கூடியதாக இருப்பதை சுட்டிக்காட்டும் பேராசிரியர் தாகூர் வாய்ச்சொல் வீரர் மட்டுமல்ல செயல்பாட்டிலும் தனது கொள்கைகளை எவ்வாறு கடைபிடித்தார் என்பதை எல்லாம் உரையில் இடம் பெறச் செய்துள்ளார். அவர் தேசியவாதி மட்டுமல்ல சர்வதேசவாதி என்பதையும் இந்த உரை நமக்கு உணர்த்துகிறது.
இந்த ஆறு உரைகளில் மிக முக்கியமான உரைகளாக நான் கருதுவது விடுதலைக்கு வீர முழக்கம் என்னும் இரண்டு உரைகள்.
எண்ணற்ற தியாகிகள் விடுதலைக்காக பாடுபட்டு இருந்தாலும் இந்திய அளவில் குறிப்பிட்ட சிலரை மட்டும் நமக்கு வரலாறுகள் சுட்டிக் காட்டுகின்றன. நாடெங்கிலும் பல்லாயிரக்கணக்கான விடுதலைப் போராளிகளின் வரலாறு வெளியில் தெரியாமலே இருந்த நிலை தற்போது மாறி வருகிறது. வரலாற்றின் மீது அக்கறை கொண்ட பல்வேறு அறிஞர்கள் மாவட்ட வாரியாக விடுதலைப் போராளிகளின் வரலாறுகளை தொகுத்து வருகின்றனர். கடலூர் அஞ்சலையம்மாள் குறித்து ஊடகவியலாளர் ராஜா அவர்கள் ஒரு வரலாற்று புதினத்தை வெளியிட்டார். விடுதலைப் போரில் சீர்காழி என்ற நூலை ஜனதா இமயவரம்பன் அவர்கள் அண்மையில் மிகப் பிரம்மாண்டமாக சீர்காழியில் வெளியிட்டுள்ளார். மயிலாடுதுறை காளான் பதிப்பகம் இந்த நூலை வெளியிட்டுள்ளது. பேராசிரியரின் உரையில் அரியலூர், ஜெயங்கொண்டம், திருவாரூர் ஆகிய பகுதிகளில் வாழ்ந்த நாட்டுப்புற மக்கள் பாடிய ஆங்கிலேய எதிர்ப்பு பாடல்களைப் பதிவு செய்துள்ளார். மேலும் அந்தப் பகுதிகளில் விடுதலைக்கு போராடிய பல்வேறு போராளிகளின் விரிவான பட்டியலையும் அளித்துள்ளார். காந்தியின் ஒத்துழையாமை இயக்கம் சத்தியாகிரகம் போன்ற போராட்டங்களில் கலந்து கொண்ட அரியலூர், ஜெயங்கொண்டம், திருவாரூர் பகுதி விடுதலைப் போராளிகளின் பெயர் பட்டியல் மிக முக்கியமான வரலாற்று ஆவணமாகும். இந்தப் பகுதியில் விடுதலைக்கு போராடியவர்கள் யார் என்று தெரிந்தால் தான் அது குறித்து ஆய்வுகளைத் தொடர முடியும். அதற்கான திறவுகோலை இந்த வானொலி உரை நமக்கு வழங்குகிறது.
காற்றில் கலந்த இந்த அறிவு சார் சொற்களை ஏடுகளில் பதித்து நம் கரங்களில் தவழச் செய்துள்ளார் பேராசிரியர். கலை இலக்கியம் அரசியல் என்ற மூன்று துறைகளிலும் ஆய்வு செய்பவர்களுக்கும் சராசரி வாசகர்களுக்கும் பயன்படும் வகையில் இந்த நூல் வந்துள்ளது. கல்வித்துறைக்கும் இலக்கியத் துறைக்கும் வளம் சேர்க்கும் ஒரு வரலாற்று ஆவணமாக இந்த நூல் திகழும் என்பது உறுதி.
21.06.2025
இரத்தின புகழேந்தி
தலைவர்
கானல் வரி கலை இலக்கிய இயக்கம்
4, தங்கம் நகர்,
அண்ணா சாலை,
பெரியார் நகர் தெற்கு,
விருத்தாசலம் -606001.
பேசி:9944852295
No comments:
Post a Comment