தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking

Thursday, October 5, 2017

61016 வாழ்வில் மறக்கமுடியாத நாள்



அப்பா எங்களைவிட்டுப் பிரிந்து ஓராண்டு ஆகிவிட்டது. சென்ற ஆண்டில் மரணம் தன்னை நெருங்கி வருவதை அப்பா உணர்ந்திருக்கிறார். எங்களுக்குத் தெரியாமல் சாவு முதல் என்று ஐம்பதாயிரம் ரூபாயை வங்கியில் வைத்திருந்தார். தனக்கு ஏதேனும் ஆனால் தன் பிள்ளைகள் பணமின்றி தவிக்கக் கூடாது என்பதற்கான ஏற்பாடாம். அம்மா சொல்லித்தான் அறிந்தேன். ஆனால் அந்த தொகை அவரின் மருத்துவ செலவுக்கு ஆனது. மருங்கூரில் கட்டிய புது வீட்டில் நல்ல நிகழ்வு ஏதேனும் நடக்கவேண்டும் என்று எண்ணி என்னிடம் பல முறை பேரக்குழந்தைகளின் பிறந்த நாள் விழாவை புது வீட்டில் நிகழ்த்தலாம் என்றார். நாந்தான் அவரைக் கடிந்துகொண்டேன். அப்படியெல்லாம் ஒன்றும் ஆகாது என்று எண்ணி அவரின் ஆசையை நிறைவேற்றாமல் போனேன்.
சென்ற ஆண்டு அக்டோபர் 4ஆம் தேதி ராமச்சந்திரா மருத்துவ மனையில் காலை 11 மணி இருக்கும் ஆகாரம் வாய் வழியே எடுக்க இயாலமையால் குழாய் வழியே மூக்கினுள் செலுத்தினார்கள். அது முடிந்த சற்று நேரத்தில் அப்பாவிடமிருந்து வினோதமான ஒரு ஒலி மூச்சுத்திணறல் போல் எழுந்தது. உடனே செவிலியரை அழைத்தேன் அவரும் அலட்சியமாக ஒன்றுமில்லை என்றார். எனக்கு பதற்றமாக இருந்தது. ஏதோ வழக்கத்திற்கு மாறாக நடக்கிறது என உள் மந்து கூற மீண்டும் செவிலியரை அழைத்து பல்ஸ் பார்க்கச்சொன்னபோது அந்த கருவி 0 எனக்காட்டியதும்தான் செவிலியர் உஷாரானார். உடன் மருத்துவரை அழைக்க அவர் மார்பை அழுத்திப் பார்த்தார் தூக்கி அமரவைக்க முயற்சித்த்போது தலை நிற்காமல் தொஙியது அதைப்பார்த்த நான் அழத்தொடங்கினேன். என்னை அப்புறப்படுத்திவிட்டு திரையை இழுத்துவிட்டனர். என் கண் முன்னே அப்பாவின் உயிர் அப்போதே பிரிந்துவிட்டது. ஆனாலும் மருத்துவர்கள் ஆக்ஸிஜன் சிலிண்டரைக் கொண்டுவந்து செய்ற்கை சுவாசம் கொடுத்து அவசர சிகிச்சைப் பிரிவுக்கு எடுத்துச்சென்று விட்டனர். எல்லாம் கனவில் நடப்பதுபோல் உணர்ந்தேன். அப்பாவுக்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவர் வந்தார் பொறைஏறினால்தான் இப்படி ஆகும் என்றார் இருந்தாலும் 24 மணி நேரம் காத்திருந்து பார்ப்போம் என்றார். அப்போதிலிருந்தே அவசர சிகிச்சைப்பிரிவின் வாச்லிலேயே கதியாகக் கிடந்தேன். அவ்வப்போது அழைத்து ஒரு சீட்டைக் கொடுத்து அதிலுள்ள மருந்துகளை வாங்கி வரச்சொன்னார்கள். நானும் அனைத்தையும் வாங்கிக் கொடுத்தேன். நள்ளிரவிலும் இது தொடர்ந்தது. ஒரே ஒரு முறை மட்டும் அப்பாவைப்பார்க்க அனுமதித்தார்கள். அப்பா இனி பிழைப்பதற்கான வாய்ப்பு குறைவு என உணர்ந்தேன். மருத்துவருக்கு இதைச்சொல்ல ஒரு நாள் தேவைப்பட்டது.. பிழைப்பது கடினம் ஆனாலும் இந்த நிலையில் அனுப்ப இயலாது. அது மருத்துவ அறமாம். ஒரே வாய்ப்பு மட்டும் உள்ளது வேறு மருத்துவமனைக்கு மாற்றிக்கொள்ளலாம் என்றனர். அப்போது சென்னை மாவட்ட ஆட்சியரான சகோதரி மகேஸ்வரி அவர்களின் உதவியை நாடியபோது பொது மருத்துவ மனையின் தலைமை மருத்துவர் பேசினார் அழைத்து வாருங்கள் என்றார். சிறப்பு ஆம்புலன்சில் ராஜீவ்காந்தி பொது மருத்துவமனைக்குச் சென்றோம். அங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் நோயாளிகள் நிரம்பி வழிந்தனர். ஆக்சிஜன் சிலிண்டரும் இல்லை கையால் பலூனொன்றை அழுத்தி சுவாசம் அளித்தோம். அதன் பின்னர் மருத்துவர் சோதித்துப் பார்த்தார். அப்பாவின் பாதத்தில் கையிலிருந்த சாவியால் கீறினார் என்ன இந்த மனுஷன் இப்படி பண்றாரே என்று எனக்கு எரிச்சலானது. உடன் வந்த அக்காள் மகன் மருத்துவர் சிங்கத்தமிழன் உணர்வு இருக்கிறதா என்பதை சோதிப்பதாகச் சொன்னபோது ஆறுதலடைந்தேன். எவ்வித உணர்வும் இல்லை என்பதை கால் அசையாமையால் பார்த்தபோது கொஞம் நஞ்சம் இருந்த இருந்த நம்பிக்கையை இழந்தேன். வீட்டுக்கு அழைத்துச் செல்லலாம் என்றால் எப்படி செல்வது எனக்குழம்ப்பி ஒரு வழியாக ஆட்சியர் உதவியால் 108 சிறப்பு ஆம்புலன்ஸ் ஆக்சிஜன் சிலிண்டரோடு 5ஆம் தேதி இரவு 10 மணிக்கு புரப்பட்டது. ஊர் செல்லும் வரை ஒன்றும் ஆகிவிடக்கூடாது என மனம் கிடந்து அடித்துக்கொண்டது இரவு முழுவதும்பல்ஸ்மீட்டரையே பார்த்தபடி பயணம் செய்தேன். அவ்வப்போது 0 வுக்கு வரும்போதெல்லாம் திக் திக் என்றது. அதிகாலை 5 மணிக்கு வீடு வந்தோம் 6 மணிக்கு நான் உயிர்த்தண்ணீர் கொடுக்க அப்பாவின் உயிர் பிரிந்தது.
அப்போதுதான் நண்பர் ரமேஷ் பாபு தொலை பெசினார் அவருக்கு பதிலளிக்க இயலாமல் கதறினேன் அவர் உணர்ந்து கொண்டு ஆறுதல் கூறினார்..இன்றோடு ஓராண்டு கடந்துவிட்டது அப்பவின் நினைவுகள் வீட்டிலும் மனத்திலும் சுழன்றுகொண்டிருக்கிறது. நான் சோர்ந்துகிடக்கும்போதெல்லாம் எனக்கு ஆறுதல் மொழி சொல்ல அப்பா இன்றில்லை என நினைக்க கண்ணீர் முட்டுகிறது.

No comments:

Post a Comment